முப்பரிமாண நகலி – எதிர்காலத்தின் ஊடறுக்கும் தொழில்நுட்பம்
நம்மை
சுற்றிக் காணப்படும் எல்லா பொருட்களும் ஏதோ ஒரு தனி வடிவமைப்பாளரின்
அல்லது வடிவமைப்புக் குழுவின் கற்பனையில்தான் முதலில் உருவாக்கப்பட்டவை.
இயந்திர வழி உற்பத்தியின் காலத்திற்கு முன்னால் வடிவமைப்பாளனே ஒரு பொருளை
உருவாக்கினான். இயந்திர உற்பத்தியின் அறிமுகத்திற்கு பின் வடிவமைப்பாளனின்
பொறுப்பு மாதிரிகளை உருவாக்குவதில்தான் கோரப்பட்டது.
வடிவமைப்புக் குழு, முதலில்
உபயோகிப்போரின் சந்தை பின்னூட்டங்களைக் கொண்டும், தங்களை நுகர்வோராகக்
கற்பனை செய்து கொண்டும் குறிப்பிட்ட பொருளின் வரையறைகளை நிர்ணயம்
செய்வார்கள். பிறகு வரையறைகளுக்கு ஏற்றவாறு ஒரு வடிவ மாதிரியை (prototype)
உருவாக்குவார்கள்.
இந்த வடிவமைப்பு மாதிரி உருவாக்கம் பல
நூற்றாண்டுகளாகவே உபயோகத்தில் உள்ளது. களிமண் மாதிரிகள், மெழுகால்
செய்யப்பட்டவை, மரத் துண்டில் செதுக்கி அமைக்கப்பட்ட மாதிரிகள் என
வார்ப்படம் (mould) பல நூற்றாண்டு வரலாறு உடையது. பிறகு அந்த மாதிரியை
கொண்டு உலோகம் அல்லது மற்ற பொருட்களால் தேவைப்படும் பாகங்களை
உருவாக்கினார்கள்.
கணினியின் வருகைக்கு பிறகு முப்பரிமாண
வடிவமைப்பை மென்பொருள் கொண்டு எண்ணியல் கோப்பாக (digital file) வரைய
ஆரம்பித்தார்கள். அடுத்ததாக, எண்ணியல் கோப்பாக இருக்கும் வடிவத்தை விரைவு
மாதிரி உருவாக்கக் கருவிக்கு (Rapid Prototype Machine) அனுப்பி ப்ளாஸ்டிக்
அல்லது பாலிமரில் அந்த மாதிரிக்கு, உருக் கொடுக்கிறார்கள். மறுபடியும்
உருப் பெற்ற மாதிரியை வைத்து அடுத்த சுற்று விவாதங்களும், வரையறை
மாற்றங்களும் செய்து இன்னொரு மாதிரியை உருவாக்குவார்கள்.
தேவைப்படும் நுகர்வுப் பொருள் இறுதி
வடிவம் அடைவதற்கு முன் மேற்சொன்ன செயல்பாடு பல முறை (இருபது, முப்பது முறை
வரை கூட) தொடரப்படும். பல சமயங்களில் ப்ளாஸ்டிகிற்கு மாற்றாக அப்பொருளின்
இறுதி மூலப் பொருளிலேயே மாதிரிகளை உருவாக்குவதும் உண்டு. இந்த
செயல்பாட்டின் விரைவு மாதிரி உருவாக்கக் கருவியை முப்பரிமாண நகலி அல்லது
முப்பரிமாண வார்ப்பி (3D Printer) என கூறலாம். உபயோகிப்பவர் சுட்டிக் காட்ட
முடியாத ஆனால் உணரக் கூடிய சின்ன மாற்றங்கள் அப்பொருளில் வந்தடைவதற்குப்
பல திருத்தங்களை வேகமாகவும், நேர்த்தியோடும் செய்து கொடுப்பதால் முப்பரிமாண
நகலி வடிவமைப்பு செயல்பாட்டின் முக்கிய கூறாக விளங்குகிறது.
செயல்படு முறைகள்:
முப்பரிமாண நகலி செயல்படும் முறையை
கூட்டல்முறைச் செயல்பாடு எனலாம். வார்க்கப்பட வேண்டிய மூலப்பொருளை ஒரு
அடுக்கின் மேல் மற்றொன்றாக வைத்து உருவாக்கும் முறையே கூட்டல் முறைச்
செயல்பாடு. உதாரணமாக, 10 செமீ நீளம் உடைய பக்கத்தைக் கொண்ட கனசதுரம் செய்ய
வேண்டுமென்று வைத்துக் கொள்வோம். முப்பரிமாண வார்ப்பி கனசதுரத்தை மிக
நுணுக்கமாக மேலிருந்து சீவிக் கொண்டே வந்தால் (சில மைக்ரொமீட்டர்
திண்மையில்) கிடைக்கும் வடிவத்தைக் கணக்கிட்டு எண்ணியலாக சேமித்துக்
கொள்ளும். (இது மருத்துவத்தின் CT ஊடு கதிர் போன்றது.) கன சதுரத்திற்கு அது
ஒரே மாதிரியான பல ஆயிரம் 10செ.மீ சதுரங்களின் எண்ணியல் கோப்புகளாக
சேமித்து வைத்திருக்கும். இந்த கணக்கிடல் முடிந்தவுடன், மாதிரியின் மூலப்
பொருளை (ப்ளாஸ்டிக், பாலிமர், அல்லது வேறு ஏதானாலும்) ஒவ்வொரு சதுரத்தின்
திண்மைக்கு ஏற்றவாறு உருக்கி தொடர்ந்து ஒன்றன் மீது ஒன்றாக ஊற்றிக் கொண்டே
அந்த கனசதுரத்தை உயர்த்தும். அல்லது வேறு நகலிகள் மூலப் பொருளைத்
துகள்களாக்கி, ஒவ்வொரு அடுக்காகத் தூவி, ஊடொளி (Laser) மூலம் அவற்றை
உருக்கியும் அதே இறுதி வடிவத்தை அடையலாம்.
கூட்டல்முறைச் செயல்பாட்டின் எதிர்ப்
பதமாக இருப்பது கணினி எண்கட்டுப்பாடு கருவிகளின் (CNC machines)
கழித்தல்முறைச் செயல்பாடு. அந்த கருவிகளில் முதலில் செய்யப்பட வேண்டிய
பொருளின் கொள்ளளவை விட அதிகமான மூலப் பொருளை எண்ணியல் வரைமுறைகளுக்கேற்பச்
செதுக்கி (கழித்து) இறுதி வடிவம் எட்டப்படும்.
நகலியின் பயன்கள்
போட்டியாளரை விட விரைவாக, தனித்துவமுள்ள,
அதே நேரம் நுகர்வோரின் தேவைக்கும், வசதிக்கும் ஏற்ற பொருட்களைத் தொடர்ந்து
உருவாக்குவதன் மூலமே ஒரு நிறுவனம் சந்தையில் நிலவ முடியும் என்ற சூழலில்
முப்பரிமாண நகலி ஒவ்வொரு நிறுவனத்தின் இன்றியமையா முதலீடாக உள்ளது.
முப்பரிமாண நகலியால் பயனடையும் இன்னொரு
துறை மருத்துவம். ஒவ்வொரு மனித உடலும் தனிப்பட்ட வடிவமுடையது.
வெளித்தோற்றம் என்றல்லாது நமது ஒவ்வொரு எலும்பும் தனி விதமானது. செயற்கை
உறுப்பு பொருத்தலில் எத்தனைக்கு தனி நபரின் உடல் வாகுக்கு ஏற்ப ஒரு செயற்கை
உறுப்பு தயாரிக்கப்படுகிறதோ அத்தனைக்கு அதைப் பொருத்துவதில் வெற்றி
கிட்டும். அதன் பயன்பாடும் தொல்லைகளற்று, முழுமையாக இருக்கும். இத்தகைய
கச்சிதமான பொருத்தத்தை அடைய, முப்பரிமாண வார்ப்பி உதவும் என்பது
அறியப்பட்டுள்ளது.
மறுபடியும் இக்கட்டான வடிவங்களை விரைவாகச்
செய்து கொடுக்கும் ஆற்றலுடைய இந்தக் கருவிகளை மருத்துவத் துறை சிதிலமடைந்த
உடல் பாகங்களை மாற்ற உபயோகப்படுத்த ஆரம்பித்திருக்கிறது. மனித உடல்
ஏற்றுக் கொள்ளும் மூலப் பொருட்கள் கண்டுபிடிக்கப்படும்தோறும் இந்த பயன்
இன்னும் பெருகும். மேலும் மருத்துவக் கல்வியில் உள்ளுறுப்புகளைப் போன்ற
இயல்புடைய மாதிரிகளை உருவாக்குவதன் மூலம் கல்வியின் தரத்தை உயர்த்தும்
முயற்சிகளும் நடைபெறுகின்றன. வருங்காலத்தில் உயிருள்ள (இல்லாத) உடம்பு
தேவைப்படாமல் முழு ரத்த ஓட்டத்தையும், செரிப்பு மண்டலத்தையும் நகல்
செய்யும் உறுப்புகளை, தன்னியக்க முறையால், முப்பரிமாண வார்ப்பியின் உதவி
கொண்டு உருவாக்கும் நிலையை மருத்துவம் எட்டலாம். அந்தக் கட்டத்தில்
மருத்துவ ஆராய்ச்சியின் அருந்துணையாகவும், பயனாளியாகவும் முப்பரிமாண நகலி
உபயோகப்படுத்தப்படலாம்.
முப்பரிமாண வார்ப்பியால் பயன்பெறும்
மற்றொரு துறை கட்டடவியல். முதல் கல்லை நடுவதற்கு முன்னரே வீட்டின் இறுதி
வடிவத்தை – அதன் சிறுசிறு நுட்பங்கள் வரை – இதைக் கொண்டு சிறிய வடிவில்
உருவாக்கி பார்த்துவிடலாம். ஒவ்வொரு அறையையும் அதன் சகல உள்ளடக்கத்துடன்
உருவாக்கி விடலாம். மேலும் செலவைப் பற்றி கவலை இல்லையென்றால் தண்ணீர்
குழாயின் கைப்பிடி வரை தனித்துவமாக வடிவமைத்து, நகலி அறையில் பொருத்தி அழகு
பார்த்தும் விடலாம். ஏற்கனவே, வீட்டைக் கட்டி விற்கும் நிறுவனங்கள்
(buiders/ real estate companies), வாடிக்கையாளர்களுக்கு இந்த நகலியின்
மூலம் வார்க்கப்பட்ட சிறு வடிவங்களை காட்டி விற்பனை செய்கிறார்கள். இது
நாள்வரை இவை சில விசேஷத் தயாரிப்பாளர்களால் உருவாக்கப்பட்ட மாதிரி
வடிவுகளாக இருந்தன. இனி முப்பரிமாண நகலிகளின் உதவியால், முழு அளவில் வீடு
கட்டப் போகிறேன் என்று கிளம்பியிருக்கும் ஆசாமிகளும் ஒன்றிரண்டு
இருக்கிறார்கள்.
முப்பரிமாண நகலியால் மிகவும் பயனடைபவர்கள்
எனச் சிறு உற்பத்தியாளர்களைச் சொல்லலாம். குறைவாகவே உற்பத்தி ஆகும்
சாதனங்களின் விலை எப்போதும் அதிகமாகவே இருக்கும். ஒரு நிறுவனம் நேர்த்தியான
பொருளை வடிவமைத்தலும் அதன் உற்பத்திச் செலவு என்பது மொத்த எண்ணிக்கையை
நம்பியே உள்ளது. அதிகமான எண்ணிக்கையில் பொருளை உற்பத்தி செய்யும் பொழுது
ஒரு எண்ணிக்கையின் விற்பனை விலை குறைந்து விடும். அதே நேரத்தில் குறைவான,
தேவையான பொருட்களை உருவாக்க அதற்கான ஆரம்ப நிலை முதலீடு (மூல பொருள்,
இயந்திர வாடகை, இதற்கென்றே உருவாக்கப்படும் இயந்திர பாகங்கள், சேமிப்பு
கிடங்கின் வாடகை போன்றவை) எண்ணிக்கையைக் குறித்து பெரிதாக மாறுபடாது. இதன்
காரணத்தால் கவனத்தை உடனே ஈர்க்கக் கூடிய வகையில் தனிப்பட்ட வடிவமைப்பைக்
கொண்டிருந்தாலும், சிறிய அளவு உற்பத்தியோடு சந்தையில் நுழைந்து,
நுகர்வோரின் வாங்கும் சக்திக்கு ஏற்றவாறு ஒரு பொருளை விற்பது சிறிய
நிறுவனங்களுக்கு கடினமான விஷயமாக இருந்து வந்தது. ஆனால் இந்த நகலியால்
புதியதொரு உற்பத்தி முறை உருவாகி வருகிறது. அது நேரடி எண்ணியல்
உற்பத்திமுறை (Direct Digital Manufacturing) என்று அழைக்கப்படுகிறது.
சரியான மூலப்பொருளை உருக்க முடிந்தால்
எதற்காக ஒரு மாதிரியைச் செய்து விட்டு உற்பத்தித் தொழிற்சாலையின் முன் தவம்
கிடக்க வேண்டும்? வடிவமைக்கும் நிறுவனமே சந்தைக்கான பொருளையும் தன்
சக்திக்கேற்ற எண்ணிக்கையில் செய்து சந்தையில் வெள்ளோட்டம் விட்டுப்
பார்த்து விடலாமே? இந்த வகையான உற்பத்தி முறையில் விதவிதமான கண்ணாடிச்
சட்டம், விளையாட்டுப் பொருட்கள், நகைகள் போன்றவைகளை தயாரிக்கும் சிறு
நிறுவனங்கள் திறக்கப்பட்டுள்ளன.
நேற்றும் இன்றும்:
முப்பரிணாம நகலி 80களிலேயே முதலில்
வடிவமைக்கப்பட்டு விட்டது. கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக, பரவலாக எல்லா
நிறுவனங்களிலும் விரைவு மாதிரி உருவாக்கக் கருவி பயன்படுத்தப் படுகிறது.
இன்று நாம் உபயோகிக்கும் பொருட்கள் பெரும்பான்மையாக அவற்றின் வழியே
உருவாக்கப்பட்டவைதான் (நீங்கள் உபயோகிக்கும் நாற்காலி முதல், அதி நவீன
கார்கள் வரை). இப்பொழுது என்ன பெரிதாக மாறிவிட்டது?
முப்பரிமாண நகலி எவ்வளவு உபயோகமானதோ அதே
போல மிகவும் விலையுயர்ந்த கருவியாகவே இருந்து வந்தது. சராசரியான தரத்தில்
உள்ள நகலியின் விலை இருபது/முப்பது ஆயிரம் அமெரிக்க டாலர்கள் ஆகும். பெரும்
நிறுவனங்களில் நிறுவப்பட்டிருக்கும் நகலியின் விலை ஒரு லட்சம்
டாலர்களுக்கு மேல் இருக்கும். சிறு நிறுவனங்கள் கடன் தொகை பெறாது நல்ல
தரமுடைய நகலியை வைத்துக் கொள்ள முடியாத நிலை இருந்தது. கணினியில் கடிதமோ,
கட்டுரையோ டைப் செய்து விட்டு அதை கொண்டு போய் கடையில் பிரிண்ட் எடுப்பதைப்
போல, சிறு நிறுவனங்கள் எண்ணியல் மாதிரிகளை வடிவமைத்து விட்டு ‘முப்பரிணாம
நகலி பிரிண்ட்’ கடைகளில் மாதிரியை வடிவுக்குக் கொணர இத்தனை டாலர் என
செலுத்திக் கொண்டிருந்தார்கள் (மாதிரியின் மூலப் பொருளின் செலவும் அவர்களே
கொடுக்க வேண்டும்). அதனால் எல்லா சாதகங்களுடன் நகலி சிறு நிறுவனகளுக்கு
எட்டாக் கனியாகவே இருந்து வந்தது.
அந்த நிலை கடந்த சில வருடங்களாக வெகுவாக
மாறி வருகிறது. தற்கால நுண்-மின்னணு சாதனங்களும், மென்பொருளும் கண்டுள்ள
வளர்ச்சியால் இன்று பல சிறு நிறுவனங்கள் குறைந்த விலையில் முப்பரிணாம
நகலியை உருவாக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஒவ்வொரு வருடமும் தொழில்நுட்ப
வாணிகக் கூட்டங்கள் ஐரொப்பாவிலும், அமெரிக்காவிலும் நமது ஊர் திருவிழா போல
நடை பெறுவதுண்டு. திருவிழா ஸ்டால்களில் மிளகாய் பஜ்ஜியும், பஞ்சு
மிட்டாயும் விற்பது போல இங்கே எல்லா நிறுவனங்களும் தங்களுடைய புது
கண்டுபிடிப்புகளைப் பார்வைக்கு வைத்திருப்பார்கள். பெரும்பாலும் ஒவ்வொரு
வருடமும் ஏதோவொரு மின்னணு சாதனம் பிரபலமாயிருக்கும், அதற்கேற்றாற் போல
எல்லா ஸ்டால்களிலும் அதையே வடிவமைத்துக் காட்டிக் கொண்டிருப்பார்கள்.
உதாரணமாக 2011 இல் ஆப்பிள் ஐ-பேட் வந்தவுடன் அந்த வருடம் நடந்த மின்னணுப்
பொருட்காட்சியில் பெயர் தெரியாத துக்கடா கம்பெனி முதல்எய்ச்.பி(H.P) வரை
அவர்களே வடிமைத்த மின்னணுப் பலகையை விளம்பரப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.
கடந்த இரு வருடங்களாக முப்பரிணாம நகலி அந்தப் பொருட்காட்சிகளில் அதிகம்
தலைகாட்ட ஆரம்பித்துள்ளது. இந்த பொருட்காட்சிகள் எல்லாம் நுகர்வோருக்கான
பொருட்களை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகளாகும். அப்படிப்பட்ட இடத்தில்
இந்த நகலிகள் தாங்களும் ஒரு நுகர்வு சாதனமாக மாறிவிட்டோம் என்று மறைமுகமாக
தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கின்றன.
சமீப காலங்களில் பல தொடக்கநிலை
நிறுவனங்கள் 2000 முதல் 4000 டாலர் விலையில் மிகவும் தரமான முப்பரிமாண
நகலியை வடிவமைக்க ஆரம்பித்து விட்டன. கவனிக்க வேண்டியது என்னவென்றால் அந்த
நகலிகள் யாவும் மேஜை மீது வைத்து கொள்ளகூடிய வகையில் சிறியதாகவும்,
கனமற்றதாகவும் உள்ளன. MIT போன்ற புகழ் பெற்ற பல்கலை கழக ஆராய்ச்சி
கூடங்களும் முப்பரிமாண நகலியை வடிவமைப்பதில் ஆர்வம் காட்டி வெற்றியும்
பெற்று விட்டன.
எந்த ஒரு தொழில்நுட்பமும் வெகுஜனத்தைச்
சென்றடைவதற்கு முன்பாக ஆர்வலர்களாலும், கொந்தர்களாலும் சில காலங்களுக்கு
பயன்படுத்தப்படும். அவர்களே அதில் உள்ள சாத்தியக் கூறுகளை சோதித்து
முதிர்ச்சியடைய செய்வார்கள். அப்படி உருவாகி வந்தவைகளே சகல இடங்களில்
வியாபித்திருக்கும் கணினி தொழில்நுட்பம், இணையம், போன்றவை. தற்பொழுது
ஆர்வலர்களாலும், கொந்தர்களாலும் முன்னெடுக்கப்படுவது முப்பரிமாண நகலி என்று
சொல்லலாம். (அதைத் தவிர பல வருடங்களாக தானியங்கி எந்திரங்கள் (ரொபாட்கள்)
இருந்துவருகின்றன ஆனால் சாமானிய மக்களிடம் அது பெரும் அலையை
உருவாக்கவில்லை). சரிந்து கொண்டிருக்கும் விலையும், கூடிக்கொண்டிருக்கும்
தரமும், அதிகரித்து கொண்டிருக்கும் ஆர்வமும், பயனளிக்க வல்ல பல
சாத்தியகூறுகளும் ஒன்று சேர்ந்து குறிப்பிட்ட அளவைக் கடக்கையில் இந்த
தொழில்நுட்பம் மக்களிடையே பற்றிக் கொள்ள பெரும் வாய்ப்புள்ளது.
ஆய்வறைகளை விட்டு, ஆர்வலர்களைத் தாண்டிப்
பொது வெளியில் அதன் தேவை அதிகரிக்கும் பொழுது பெரு நிறுவனங்கள் அவற்றை
உருவாக்கி விற்க ஆரம்பிக்கும். அதனால் கூடுதல் விலைச் சரிவும், தர
மேம்படுதலும் உருவாகும். அதற்கு முந்தைய நிலையில் முப்பரிமாண நகலி தற்போது
இருக்கிறது என சொல்லலாம்.
துரிதமாக ஒருவர் தன் கற்பனைக்கு உருக்
கொடுத்து உருவாக்கி விட இயலும் என்ற நிலையை இந்த நகலிகள் பொதுமக்கள்
மத்தியில் ஏற்படுத்திவிடும் என்பதே இதனால் ஏற்படக்கூடிய பெரும் மாற்றம்
எனலாம். தொழில் புரட்சியைத் தொடர்ந்து அச்சு இயந்திரங்களும், மின்னணு
வளர்ச்சியால் புகைப்பட கருவிகளும், மலிவு விலை அச்சு கருவிகளும்
உருவாகியும் இன்று வரை சராசரி மனிதனை முப்பரிமாண வடிவமைப்பு தீண்டவில்லை.
சிலை வடிவமைப்பில் தேர்ச்சியுடைய ஒருவனால் மட்டுமே நினைத்ததை வடிவமைத்து
பார்க்க முடியும் என்ற காரணத்தால் முப்பரிணாம வடிவமைப்பு வெகுஜனத்தின்
கற்பனையை தன்னுள் வாங்கிக் கொள்ள இயலவில்லை. ஓவியர்கள் கையில் இருந்த இரு
பரிமாண பட சட்டகங்கள் காமிரா கண்டுபிடிப்பிற்கு பின் சராசரி மனிதனிடமும்
வந்து சேர்ந்தன. படச்சுருள் இல்லாத டிஜிட்டல் கேமராக்கள் வந்தவுடன் மலிவு
விலையில் அவை வீடு தோறும் புழக்கத்தில் வந்துவிட்டன. அந்தக் கலை அடுத்த
கட்டமாக இன்று செல்பேசியில் நுழைந்து உலகையே பெரும் ஒளிப்பட ஓவியமாக
மாற்றிக் கொண்டிருக்கிறது. அதன் அடுத்த நிலையான முப்பரிமாண வடிவமைப்பு
சராசரி மனிதனின் பார்வையில் இன்று வரை வடிவமைப்பாளர்களின் கையில்தான்
உள்ளது. அதன் தாக்கம் சமூகத்தில் அவர்கள் உபயோகிக்கும் பொருட்களின் மூலமாக
மறைமுகவாகவே செலுத்தி வருகிறது. இன்று ஏற்பட்டுக் கொண்டிருக்கும்
முப்பரிமாண நகலியின் வளர்ச்சி சமூகத்தில் ஒரு புகைப்படக் கருவி செய்த
மாற்றத்தைத் தூலப் பொருட்களின் வடிவமைப்பிற்குச் செய்ய வாய்ப்புள்ளது.
எல்லா தொழில்நுட்பங்களைப் போல இதுவும்
பெரும்பாலான நேரங்களில் பயனற்ற விஷயங்களைச் செய்யவே உபயோகப்படுத்தப் படும்
(உதாரணம்: காமிரா, செல்பேசி, இணையம், கணினி, யூட்யூப்..) அதே நேரத்தில்
அந்தப் பெருவாரியான உபயோகத்தின் உள்ளேயிருந்து இதுவரை காணாத சாத்தியங்களும்
வெளிவரக் கூடும் (உதாரணம்: காமிரா, செல்பேசி, இணையம், கணினி, யூட்யூப்..)
ஒரு குடும்பத்தில் மேஜையின் மீது கணினியுடன் அச்சு இயந்திரத்தின் தேவையை
விட முப்பரிமாண இயந்திரத்தின் தேவை அதிகம் உள்ளது என மக்கள் சீக்கிரம்
புரிந்து கொள்வார்கள் என தோன்றுகிறது.
வருங்காலம் குறித்த சில யூகங்கள்:
வீடு தோறும் முப்பரிமாண நகலி என்ற நிலையை
அதன் மலிவான விலை மட்டுமே ஏற்படுத்தாது. முன்னரே உருவாகியிருக்கும் கணினித்
தொழில் நுட்பமும், இணைய குழுமங்களின் வளர்ச்சியும், மென்பொருள் மேம்பாடும்
ஒன்று சேர்ந்து அதை சாத்தியமாக்கும் எனப்படுகிறது. இன்று, இணையத்தில்
கிடைக்காத தகவல் என்று ஒன்றில்லை. மிகவும் பாதுகாக்கப்பட்ட அதி நவீன
மென்பொருள்களையும் சிரத்தையோடு தேடினால் ஒரு வாரத்தில் நமது கணினியில்
தரவிறக்கம் செய்து விடலாம். அதைப் போலவே அறிவியல், தொழில் நுட்பம்,
இலக்கியம், சமூகவியல் இன்ன பிற என யூகிக்கும் எல்லாத் துறையையும்
அடிப்படையாகக் கொண்ட குழுமங்கள் ஒவ்வொன்றிற்கும் பல நூறு உண்டு. அங்கு
வெட்டி அரட்டையில் தொடங்கி மிக ஆழமான விவாதங்களும், தகவல் பறிமாற்றங்களும்
நடந்த வண்ணம் உள்ளன.
இந்த இணையக் கட்டமைப்பே நகலியின்
உள்ளாற்றலைப் பெருமடங்கு இயங்குசக்தியாக வெகு குறைவான காலத்தில் சமூகத்தின்
மத்தியில் மாற்றிவிடும். முன்னரே குறிப்பிட்டது போல பொருளை உருவாக்கும்
செயல்திட்டம் என்பது நகலியை பொருத்தவரை ஒரு எண்ணியல் கோப்பு மட்டுமே
(Digital File). இந்த நிலையில் நகலியின் பயன்பாடு அதிகரிக்கும் தோறும் அவை
உருவாக்கவல்ல பொருட்களின் வடிவமைப்பு கோப்புகளை பகிர்ந்து, விவாதிக்கும்
குழுமங்களும் எழுந்து வரும். நாம் வாசிக்க விரும்பும் புத்தகம் 5
நிமிடத்தில் பிடிஎஃப் வடிவத்தில் நமக்கு கிடைக்கிறதே அது போல நான் செய்ய
விரும்பும் பொருளின் எண்ணியல் வரைபடம் 5 நிமிடத்தில் உலகில்
எங்கிருந்தாலும் என்னை அடையும் என்ற நிலை முப்பரிமாண நகலியை மக்கள்
மத்தியில் மேலும் கொண்டு சேர்க்கும் என யூகிக்கலாம்.
இன்று இரு பரிமாண படங்களில் இருந்து
முப்பரிமாணத்தை சரியாகக் கணக்கிடும் மென் பொருள்கள் உருவாகி வருகின்றன.
ஒப்பு நோக்கையில் அவை விலை மிக்கவையாகும். இதற்கு காரணம் அதை உபயோகிப்பவர்
மிக சொற்பமானவர்களே (அகழ்வாராய்ச்சி, வானவியல் இன்ன பிற). முப்பரிமாண நகலி
செல்வாக்கு அடையும் போது இந்த மென்பொருட்களின் தேவையும் மிக அதிகமாகி
விடும். “ உன் தலைவனுக்கு மட்டும் தான் சிலை வைப்பியா? உன் அப்பன பெத்து
வளத்த என் முகத்த மட்டுமாவது செஞ்சு வருஷா வருஷம் பூஜை பண்ணு” என்று தாத்தா
கனவில் சொல்லிவிட்டுப் போய்விடலாம். பேரனிடம் வெளிறிப் போன கருப்பு வெள்ளை
புகைப்படம் மட்டும் தான் இருக்கிறதென்றால், அதே தாத்தா அடுத்த நாள் கனவில்
இந்த மென்பொருட்களின் பெயரையும் சொல்லிப் போகலாம். அந்த நிலையில் அவற்றின்
பயன்பாடு கூடி, விலையும் சரியலாம்.
பிழை புரிதல்கள், தடங்கல்கள்:
புதிய தொழில்நுட்பம் மேலெழுந்து வரும்
பொழுது (கருத்தியல், அரசியல், என்று எதுவாக இருந்தாலும்…) அதை எல்லாம் வல்ல
உலக ரட்சகனின் வருகையாகக் கனவு காணும் கூட்டம் உள்ளது. முப்பரிமாண
நகலிக்கும் அப்படி ஒரு ரசிகப் படை உருவாகி வருகிறது. இணையத்தில்
முக்கால்வாசி பேர் அதைச் செவ்வனே செய்து வருகிறார்கள். அவைகளில் முக்கியமான
ஒன்று – முப்பரிமாண நகலி தொழிற்சாலைகளில் தற்பொழுது உள்ள தானியங்கி பொருள்
உற்பத்திக்கு (automated manufacturing) மாற்றாக வந்து விடும் என்பதாகும்.
இது ஊதிப் பெருக்கப்பட்ட பிழை புரிதல் எனலாம்.
முன்பே குறிப்பிட்டது போல முப்பரிமாண நகலி
சிறுகச் சிறுக மூலப் பொருளை அடுக்குவதன் மூலம் ஒரு பொருளை உருவாக்குகிறது.
மிகச் சிக்கலான வடிவமைப்புகளை உருவாக்கையில் இந்தச் செயல்முறை மிக
துரிதமானதாக இருக்கும். ஆனால் ஒரு மணி நேரத்தில் பல லட்சம் எளிமையான உதிரி
பாகங்களை உற்பத்தி செய்து வெளியே துப்பும் தொழிற்சாலைகளின் கனரகத்
தானியங்கி கருவிகளின் வேகத்திற்கு முப்பரிமாண நகலியால் போட்டியிட இயலாது.
சாதாரண திருகாணி முதல் கார் எஞ்சின் வரை சகலமும் இதில் அடங்கும்.
சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் முப்பரிமாண நகலியின் செய்வீதம் பெரு
நிறுவனங்களை நஷ்டத்தில் தான் கொண்டு செல்லும்.
அடுத்ததாக முப்பரிமாண நகலி ப்ளாஸ்டிக்,
ரப்பர் போன்ற பொருட்களில் வடிவமைப்பதற்கு சிறந்த கருவியாகும். உறுதியான
உலோகம் மற்றும் உலோகக் கலவையை அவற்றைக் கொண்டு சிறப்பாக வடிவமைக்க இயலாது.
ஒரு சில முன்னேற்றங்கள் அதில் ஏற்பட்டிருந்தாலும் அவை யாவும் சோதனை
அளவிலேயே உள்ளன. அதனால் உலோகம் சார்ந்த பொருட்களை உருவாக்குவதில்
முப்பரிமாண நகலி கொஞ்சமும் பங்களிப்பதில்லை.
முப்பரிமாண நகலி மக்களிடையே அதிகப்
புழக்கத்தில் வருகையில் உருவாகக் கூடிய இன்னொரு தடை – செய்யப்படும் அல்லது
நகல் எடுக்கப்படும் பொருளின் அசல் காப்புரிமை (copyright), பிரதியுரிமை
சான்றிதழ் (patent) மற்றும் வர்த்தக சின்னம் (trademark) குறித்த
பிரச்சினைகள் என்று தோன்றுகிறது. நிறுவனங்கள் பல வருட உழைப்பைக்
கொள்முதலாக்கி, மிக ரகசியமாக உருவாக்கிய சாதனங்களை குடிசைத் தொழில் போல
எல்லோரும் பிரதியெடுக்க சுலபத்தில் விட மாட்டார்கள். அந்த வடிவமைப்புகளை
வைத்து மற்ற சிறு நிறுவனங்கள் காசு பார்க்க ஆரம்பித்து விட்டால்
பிரச்சினையை நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றுவிடுவார்கள். இந்த நிலையில்
குறிப்பிட்ட மூலப் பொருட்களை கொண்டு வடிவமைக்கும் நகலிகளை தங்களுடைய
காப்புரிமையை பாதுகாத்துக் கொள்ள நீதிமன்றம் வழியாக சந்தையில் நிறுத்தி
வைக்க முடியும்.
அழகான, நுண்ணிய வேலைப்பாடுகள் கொண்ட
பொருட்களோடு சேர்த்து இந்த நகலி துப்பாக்கி பாகங்களையும் செய்ய
உபயோகிக்கலாம். இது ஒரு வருங்கால சாத்தியம் அல்ல. இப்போதே சில
வடிவமைப்பாளர்கள் அசல் துப்பாக்கியை செய்து காண்பித்திருக்கிறார்கள்.
பொதுவாக குற்றங்களையும், தேவையற்ற அபாயங்களையும் தடுப்பதற்காக அனேக
சமூகங்களில் துப்பாக்கிபோன்ற ஆயுதங்களைக் குறித்த ஆவணங்கள், வாங்குவோரின்
தகுதி பற்றிய விவரங்கள் ஆகியன குறிப்பிட்ட அரசுத் துறைகளால் பாதுகாக்கப்
படும். கள்ளத் துப்பாக்கிகளையும், கருப்புச் சந்தையில் வாங்கப்படும்
துப்பாக்கிகளையும் பற்றிய விவரங்கள் இல்லாத நிலையில் ஏற்கனவே பல நாடுகளில்
வன்முறை துப்பாக்கிகள் மூலம் நடப்பதைக் கட்டுப்படுத்த முடியாமல்
அரசாங்கங்கள் தவிக்கின்றன. இந்ந்த இந்லையில் குடிசைத் தொழில் போல மிக
நுட்பமாகவும் தீவிரமாகவும் செயல்படும் துப்பாக்கிகளைத் தயாரிக்க முடிந்தால்
அரசாங்கம் அந்த ஆயுதங்கள் மீது எந்தக் கட்டுப்பாடும் இல்லாது சமூக
வன்முறையைக் கட்டுக்குள் கொண்டு வருவதையே கை விட வேண்டி வரும்.
இன்றளவில் குற்றச் செயலில் துப்பாக்கி
ஒன்று பிடிபட்டால் அதன் எண்ணைக் கொண்டு அதன் ஜாதகத்தை பிரித்தறிந்து
விடலாம். அதைப் போல ஒரு குற்றத்தில் உபயோகப்பட்ட துப்பாக்கி இன்னொரு
இடத்திலும் உபயோகப்படுத்தப் பட்டதா என்பதை தோட்டாவில் ஏற்பட்டிருக்கும்
தனித்துவமான உராய்வுகளைக் கொண்டு கண்டுவிடித்து விடலாம். இவை எல்லாம் ஒரு
துப்பாக்கியின் ஊற்று முகத்தை அறிந்து கொள்ள முடியும் என்ற நிலையிலிருந்து
தான் உருவானவை. மேலும் இத்தகைய ஆயுதங்கள் வாங்குவதற்கு பல தடைகளும்,
வாங்குபவரின் பின்னணி தகவல்களை சரி பார்த்தல் என்ற விதிமுறைகளாலும் இந்தியா
போன்ற நாடுகளில் ஒப்பு நோக்கையில் துப்பாக்கியின் புழக்கம் மிக குறைவாகவே
உள்ளது. ஆனால் முப்பரிமாண நகலியால் அவற்றை உருவாக்க முடியும் என்ற நிலை
ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்ட அனைத்தையும் அதை கொண்டு ஒருவர் எளிதாக
தாண்டி விட முடியும் – ஆவணப் படுத்தப்படாத ஆயுதம், தொடற்புறுத்த முடியாத
தோட்டாக்கள், விதிமுறைகளை பின்பற்ற தேவை இல்லாமல் உருவாகும் துப்பாக்கி.
அது சமூகப் பாதுகாப்பிற்கு பெரும் பின்னடைவையே உருவாக்கும்.
மொத்தத்தில்:
முப்பரிமாண நகலி அடுத்த சில வருடங்களில்
மிக பெரிதாக மக்களை சென்றடையக் கூடிய தொழில்நுட்பம் என்றே தெரிகிறது. அது
தொழில் முறை வடிவமைப்பையும், உற்பத்தி முறையையும் பெரிய வகையில் மாற்றிவிட
இயலும் என்று கூறிவிட முடியாது. முப்பரிமாண நகலியால் அதிகபட்ச தாக்கத்தை
(சாதகமாகவும், சிறிது பாதகமாகவும்) அவர்கள் கடந்த 30 வருடமாக அடைந்து
விட்டார்கள். சிறிய தொழில் முறையல்லாத நகலிகளால் ஏற்படப் போகும் தாக்கம்
அது சராசரி மனிதனை சென்றடையும் பொழுதான் ஏற்படும் என தோன்றுகிறது.
கற்பனைக்கு உருவம் கொடுக்க இதுவரை எட்டாத ஊடகம் பரவலாக எல்லோரையும்
சென்றடையும் பொழுது ஏற்படும் தாக்கம் பரந்துபட்டதாக இருக்க வாய்ப்புண்டு.
பாதகங்களை கணக்கில் கொண்ட பிறகும் இறுதியில் அந்த தாக்கம்
செம்மைப்படுத்துவதாகவே அமையும் என்று தோன்றுகிறது.
No comments:
Post a Comment