Saturday, 2 June 2018

பொன்/தங்கம்/ கனகம்/ சொர்ணம்/

உலகிலேயே தங்க நுகர்வோர்கள் அதிகம் கொண்ட நாடும், உலகிலேயே அதிக தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுமான இந்தியா, தங்கத்தால் கிடைக்கிற லாபத்தைவிட இழப்பையே அதிகமாகச் சந்திக்கிறது என்கின்ற பொருளாதார உண்மை பொதுவெளியில் உணரப்படுவதில்லை. இது உண்மை என்று நம்பக்கூட பலருக்கு சிரமமாக இருக்கலாம். தங்கத்தின் தொழில்முறைப் பயனைவிட அதன் ஆபரண அல்லது வசீகரப் பயனே அதற்குச் சந்தையை வழங்குகிறது. மேலும் அதிகரிக்கும் தங்கத்தின் தேவையே தங்கத்தின் விலையை ஏற்றவும் காரணியாகிறது. திரும்பத் திரும்ப வாங்கி திரும்பத் திரும்ப தங்கத்தின் தேவையை அதிகரித்து திரும்ப வாங்கி நாமே சுவரொன்றில் முட்டிக் கொள்கிறோம். அடிப்படையில் தங்கத்தால் விளையும் லாபம் முதலீட்டு லாபம் இல்லை, ஊகம் எனப்படும் பேரம் பேசி அதிகரிக்கப்படும் வெற்று வேட்டு.
தங்கம் என்பது இரும்பு, பாதரசம் போன்ற ஒருவகை தனிமம். ஆனால் மற்ற தனிமத்தைப் போல அதிகமாகத் தொழிற்துறையில் பயன்படுவதில்லை. இருந்தும் அதன் வசீகரக் குணமே அதன் மதிப்பை மற்ற தனிமங்களைவிட அதிகமாக்குகிறது. கொஞ்சம் இரும்பை வெட்டி எடுத்தால், அதன் மூலம் கனரகங்கள், விவசாய உபகரணங்கள், ஆயுதங்கள் எனப்பல விதத்தில் ஒரு நாட்டின் உள்நாட்டு உற்பத்திக்குத் துணைசெய்யும்; ஆனால் அதே அளவு தங்கத்தை வெட்டி எடுத்தால் (கவனிக்க, இதற்கு செலவும் அதிகம்) கொஞ்சம் மருத்துவத்துறையிலும், மின்னணு உற்பத்தியிலும் மட்டுமே பயன்பட்டு நாட்டின் உற்பத்திக்கு உதவும். மீதமுள்ள தங்கம் எல்லாம் ஆபரணங்களாக அல்லது செல்வமாக அடங்கிவிடும். தங்கத்தைப் போல இரும்பை ஆபரணமாக மாட்டி அழகு பார்க்கமுடியாதுதான் ஆனால் இரும்பைப்போல உற்பத்தியைத் தரவல்லதல்ல தங்கம். ஒரு நாட்டின் பார்வையில் தங்கம் என்பது உப்பைப் போல அவசியம் தேவை ஆனால் அளவாகத்தான் தேவை. தங்கத்தில் அதிக முதலீடு என்பது தனிமனிதக் குறுகியப் பார்வையில் வளமானதாக இருக்கலாம், ஆனால் தொலைநோக்குப் பார்வையில் நாட்டின் வளர்ச்சி என்ற விரிந்தபார்வையில் அதுவொரு நட்டமே.
முதலில் நடைமுறை ஆதாரத்தைக் காண்போம். தனிமனிதனாக அனைவரும் தங்கத்தில் முதலீடு செய்தால் தங்கம் முதலில் விலையேறும், மக்களும் மகிழ்ந்து தங்கத்தில் மேலும் முதலீடு செய்வார்கள். தங்கம் விலை குறைவதற்கான வாய்ப்பில்லை என்பதில் ஐயமில்லை. ஆனால் மற்ற பொருட்களின் விலை பன்மடங்கு அதிகரிக்கும். இது தானாக ஏற்படுத்திக் கொண்ட பணவீக்கம். காரணம் ஒரு பசுவை வாங்கி பால் வியாபாரம் செய்பவர், தங்கத்தில் பணத்தைப் போட்டு வியாபாரத்திற்கு முழுக்கு போட்டால் பாலுக்கு என்ன செய்வோம்? விவசாயி அவ்வாறு செய்தால் சோற்றுக்கு என்ன செய்வோம், இதன் மூலம் விலையேற்றம்தான் பரிசாக்கப்படும். ஆரோக்கியமான முதலீடு என்பது உற்பத்தியுடன் லாபத்தைக் கொடுக்க வேண்டும். உற்பத்தி இல்லாமல் லாபம் மட்டும் வருகிறதென்றால் எங்கோ யாரோ நட்டப்படுகிறார் என்பது எளியமொழி. உண்மைதான் 1971ல் 200ரூபாய்க்கு விற்ற தங்கம் 2011ல் 25000ரூபாய்க்கு உயர்ந்துள்ளது என்றால் நாற்பது ஆண்டுகள் 125 மடங்கு லாபம் என்று பொதுபுத்தியில் எட்டலாம். ஆனால் 1981ல் 10000 ரூபாய் முதலீட்டில் ஒரு நிறுவனம் 2011ல் 7 பில்லியன் டாலர் மதிப்புடையதாகிறது(இன்ஃபோசிஸ்) என்றால் காரணம் முதலீடு உழைப்பு சார்ந்த, உற்பத்தி சார்ந்த துறையில் அமைந்துள்ளதே காரணம். மாறாக 10000 ரூபாயை 1981ல் தங்கத்தில் முதலீடு செய்திருந்தால் அதிகபட்சம் 3ஆயிரம் டாலர் 2011ல் கிடைத்திருக்கும். அந்த உற்பத்தி மூலம் எத்தனை பேர் வருமானம் ஈட்டியிருப்பார்கள்? அரசுக்கு எத்தகைய லாபம்? என்று யோசித்தால் இது எவ்வளவு பெரிய நட்டம் என்பது புலப்படும். நிலத்தில் அல்லது தங்கத்தில் என்று உற்பத்திக்கு ஒவ்வாத துறைகளில் போடப்படும் முதலீடு தனிமனிதனுக்கு வேண்டுமானால் லாபகரமாக இருக்கலாம், ஆனால் அதுவே மக்கள் வளமிக்க இந்தியா போன்ற நாடுகளில் உழைப்பிற்கு மூலதனமாக அமைந்தால் எப்படி பல்கிப்பெருகும் என்பது யூகிக்ககூடியதே.
இத்தகைய தங்கமயமாக்கலால், தொழில் தொடர்வோருக்கான பணம் முடக்கப்படுகிறது. நாட்டின் சேமிப்பு எல்லாம் மறுமுதலீடு ஆகாமல் ஒடுக்கப்படுகிறது. ஏர் உழாமல் தங்கத்துக்கு அடகு ஆகிறது. முன்பு விளைபொருட்களின் களஞ்சியமாக இருந்த கடை வீதிகள் எல்லாம் தங்க நகை மாளிகைகளாக மாறிவிட்டன. வேலைவாய்ப்புயில்லாமல் நாமோ அடுத்த கடை வீதிகளில் அலைந்து கொண்டிருக்கிறோம்.
தங்கத்தில் போடப்படும் பணம் எல்லாம் தூங்கும் பணமே. அதுவே வேலைவாய்ப்பைத் தரும் தொழிற்துறையில் போட்டால் நாட்டின் வளர்ச்சிக்கு உதவும். தற்போதைய நாட்டின் நடப்புக் கணக்கு பற்றாக்குறை(Current Account Deficit) என்பது மொத்த உள்நாட்டு உற்பத்தியில்(GDP) 5.3% ஆகும். அதாவது நாம் உற்பத்தி செய்வதை விட அதிகமாக உட்கொள்கிறோம். எளிய மொழியில் சொல்வதென்றால் நோகாமல் நோம்பு கும்பிட முயல்கிறோம். இந்த நிதிப்பற்றாக்குறையால் நாடு உற்பத்தி செய்வதைவிட அதிகமாகக் கடன்வாங்கி செலவழித்துள்ளோம் என்று கொள்ளலாம். மற்றொருவிதமாகச் சொல்வதென்றால், ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகமாகச் செய்கிறோம். இந்தச் சமன்நிலை மாற்றத்தில் 30% தங்கத்தின் இறக்குமதியால் விளைந்தது. தங்க இறக்குமதியைக் குறைத்தாலே, பற்றாக்குறை 30% குறையும். மேலும் இப்படி இறக்குமதி செய்யப்படும் பொருள் ஏதாவது ஒருவிதத்தில் நாட்டின் உற்பத்திக்கு உதவாவிட்டால் எப்படி வளர்ச்சியிருக்கும்? இதனைக் கட்டுப்படுத்தவே தங்கத்தின் மீது இறக்குமதி தீர்வை வரியை அதிகரிக்க அரசு ஆலோசிக்கிறது. நாடு தனது கட்டுமானப் பணிகளுக்கு வெளிநாடுகளிடமிருந்து பணத்தை எதிர்பார்ப்பதற்குப் பதில், உள்நாட்டு நிதி சேமிப்பு அந்தத் தேவையைப் பூர்த்தி செய்தால் இந்தப் பற்றாக்குறை களையப்படும். அதனாலேயே தங்கத்தில் போடப்படும் பணத்தை விட வங்கியில் போடப்படும் சேமிப்பே நாட்டிற்கும், எதிர்கால சந்ததிகளுக்கும் நன்மை பயக்கும்.
நடைமுறையில் இது திடீர் சாத்தியமில்லை. காரணம் அத்தகைய முதலீட்டுத் தேவைகள் பற்றி தனிமனிதர்கள் அறிந்திருப்பதில்லை. மேலும் இத்தகைய முதலீடுகள் உடனடியாக பணமாக மாற்றக்கூடியதில்லை மற்றும் பாதுகாப்பும் சற்று குறைவுதான். ஆனால் குறைந்த பட்சம் வங்கிகள், உற்பத்தி நிறுவனப் பங்குகள், தேசிய சேமிப்பு என்று மற்ற முதலீடுகளுக்குத் தந்து உதவலாம். இதன் மூலம் தூங்கிக் கிடக்கும் செல்வம் துள்ளிப் பெருகி, நாட்டின் வளர்ச்சிப் பணிகள் அதிகரித்து, உற்பத்தித் திறனும் படிப்படியாக அதிகரிக்கும்.

No comments:

Post a Comment