Saturday, 30 June 2018

கருப்புப்பணம்

“What kind of society isn’t structured on greed? The problem of social organization is how to set up an arrangement under which greed will do the least harm; capitalism is that kind of a system”
– Milton Friedman
கருப்புப்பணம்
+++++++++++++
செல்லானுக்கு (Bank Chellan) பின்னிருக்கும் கள்ளன்
வங்கிகள்.
பெரும் கருப்புப்பணம் வங்கிகளின் வழியே தான் போகிறது என்று சொன்னால் ஆச்சர்யப்படுவீர்கள் இல்லையா? ஆனால் அது தான் உண்மை. இரண்டாம் உலகப் போருக்கு பின்னான காலகட்டத்தில் இது ஆரம்பிக்கிறது. இந்த ’சேவையை’ ஆரம்பித்து வைத்த புண்ணியம் அமெரிக்க சிஐஏ வையும், அப்போதைய சோவியத் ரஷ்யாவின் கேஜிபியையும் சாரும்.
இருவரும் போட்டிப் போட்டுக் கொண்டு குட்டி நாடுகளை, சர்வாதிகாரிகளை, மன்னர்களை ஆண்ட காலம். அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய இந்த குட்டி பூர்ஷ்வாக்களுக்கு படியளக்க வேண்டியிருந்தது. அந்த படியளத்தலை செய்ய வங்கிகளை பயன்படுத்த ஆரம்பித்தார்கள். எந்த கேள்வியும் கேட்காமல், எவ்விதமான வழிமுறைகளுமில்லாமல் அவர்கள் ஆரம்பித்து வைத்த விஷயம் தான், பின்னாளில் பல்கி பெருகி, பெரும்பாலான வங்கிகள் வழியாகவே கள்ளப் பணம் நல்ல பணமாக மாறி/”மாற்றி” ...மாற்றப்பட்டு? ...பொது சமூகத்தில் புரள செய்து, வெளியேறி எல்லாவிதமான “நல்ல” காரியங்களுக்கும் பயன்பட ஆரம்பித்தது.
ஏன் வங்கிகள் இதனை ஆதரிக்க வேண்டும்?
வங்கிகளுக்கு வியாபார ரீதியாகப் பார்த்தால், இந்த மாதிரியான கருப்புப் பணத்தினைப் போடுபவர்கள் தான் முக்கியமான வாடிக்கையாளர்கள். ஏனெனில் அவர்கள் மிக “நல்லவர்கள்”. வங்கி எவ்வளவு சேவைக் கட்டணம் கேட்டாலும் அதை தாராளமாக தருவார்கள். பெரும்பாலும், பெருந்தொகையை உள்ளேயும், வெளியேயுமாக எடுப்பவர்கள். எல்லாவற்றையும் கேஷாக தர/எடுக்க நினைப்பவர்கள். எல்லா கரன்சிகளிலும், ஊர்களிலும் கிளை வைத்திருப்பவர்கள்.
ஆக, பணம் வைத்திருந்தால் வங்கிக்கு லாபம். பணம் பரிவர்த்தனை செய்யும் போதும் லாபம். பணத்தினை பாதுகாக்க வரும் சேவைக் கட்டணம் லாபம். பல கரன்சிகளுக்கு மாற்றும்போது, கரன்சிகளுக்கான சந்தையில் வரும் பைசா விகிதங்களில் லாபம். ஒரு வேளை அரசு பிரஷர் போட்டு, இந்த “வாடிக்கையாளர்களை” பிடிக்க சொன்னால், அப்போதும், கணக்கினை காலவரையின்றி தடைசெய்கிறேன் பேர்வழி என்கிற பெயரில் பணமும் வெளியே போகாது. ஆக, உலகமெங்கும் கருப்புப் பணத்தினை புழங்க செய்வதில், வங்கிகளின் பணி இன்றியமையாதது.
இன்னும் சொல்லப் போனால், 2008இல் அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி (Financial Crisis) வந்திருந்தப் போது, இந்த கருப்புப் பணம் தான் பல வங்கிகளை காபாற்றியது என்று ஐ.நாவின் போதைப் பொருள் மற்றும் குற்றங்களுக்கான அலுவலகம் ஆதாரபூர்வமாக சொல்கிறது. ஆக, தனிநபர்களின் கைவரிசையில் தான் கருப்புப் பணம் வந்தாலும், அதன் உலகளாவிய பயன்பாடு, முக்கியமாக வங்கிகளுக்கான லிக்விடிடி’யில் (liquidity) பெரும்பங்கு வகிக்கிறது என்பது தான் கசப்பான உண்மை.
ஒரு வருடத்திற்கு அமெரிக்க, ஐரோப்பிய வங்கிகள் மட்டுமே $500 பில்லியனிலிருந்து (ரூ.2250000,00,00,000) ஒரு டிரில்லியன் (ரூ.4500000,00,00,000) வரைக்குமான கருப்புப் பணத்தினை சட்டரீதியான வங்கி நடைமுறைகளில் கைமாற்றுகின்றன என்று ஒரு கணக்கு சொல்கிறது. 1990ல் ஆரம்பித்து இன்று வரையிலான 20 வருடங்களில் மூன்றாம் உலக நாடுகள், போதைப் பொருள் விற்பவர்கள், கார்ப்பரேட் பிராடுகள், சர்வாதிகாரிகள், பெட்ரோல் தேசங்கள், கம்யுனிச சர்வாதிகார அதிகாரிகளின் பணம் என கிட்டத்திட்ட $3 – 3.5 டிரில்லியன் டாலர்கள் வரைக்குமான பணம் அமெரிக்கா வங்கிகளை மட்டுமே நம்பி சென்றிருக்கின்றன என்பது தான் அதிர்ச்சி தகவல். இதன் காரணங்கள் சுலபமானவை.
அமெரிக்காவில் ஒரு நாளைக்கு வங்கிகளுக்குள்ளேயான பரிவர்த்தனைகள் மட்டுமே $1 டிரில்லியன் டாலர்கள் (ஆதாரம்: CHIPs) அப்படிப் பார்த்தால், லீவு நாட்களை விடுத்து, கிட்டத்திட்ட 300 நாட்கள் என்றுக் கொண்டால் கூட $300 டிரில்லியன் டாலர்கள் வங்கிகள் பரிவர்த்தனைகளாக செய்கின்றன. இதில் $1 டிரில்லியன் கள்ளப்பணத்தினை உள்நுழைப்பது என்பதும், அந்த ஒரு டிரில்லியன் டாலரை அரசு தேடுவது என்பதும் கடற்கரையில் ஊசித் தொலைத்த கதை.
பெரும் வங்கிகளில் இந்த மாதிரியான பெரும் பணத்தினை பராமரித்து பாதுகாத்து குட்டிப் போட்டு பெருக்கி சேவை செய்வதற்காகவே “தனிப்பட்ட வங்கி” சேவைகள் (Private Banking) உண்டு. சிட்டி வங்கியை எடுத்துக் கொள்வோம். பொருளாதார நெருக்கடியில் நாயடிப் பட்டு, ஒரு இந்தியர் உட்கார்ந்து, அபுதாபியின் அரசோடு கெஞ்சி, கூத்தாடி காசு வாங்கி உள்ளேப் போட்டு, ஒரு வழியாய் பிழைத்த உலகின் பெரிய வங்கி. அமெரிக்க அரசின் சில செனட்டர்கள், சிட்டி வங்கியை உலகின் மிகப்பெரிய கருப்புப் பண வங்கி என்றே அழைக்கிறார்கள்.
180,000 பணியாளர்கள். 100 நாடுகளில் கிளைகள். $700 பில்லியன் நேரடியாகவும், $100 பில்லியன் தனிப்பட்ட வங்கி சேவையிலும் வைத்திருக்கும் வங்கி. 30 நாடுகளில் தனிப்பட்ட வங்கி சேவைக்கென்றே கிளைகளை திறந்திருக்கும் வங்கி. இது தான் சிட்டி வங்கியின் உலகளாவிய அடையாளம். தனிப்பட்ட வங்கி சேவைகள் என்பவை $1 மில்லியனுக்கு மேல் வைப்பு போடமுடியும் என்பவர்களுக்காக அமைக்கப்பட்டவை. அந்த பணம் எந்த நிறத்திலும் இருக்கலாம். சிட்டி வங்கியே எல்லா சேவைகளையும் “பேக்கேஜாக” செய்யும். பணத்தினை நிர்வகித்தல், வரிகளற்ற சொர்க்கத்தில் கணக்குகளை துவங்குதல், டூபாக்கூர் ஷெல் நிறுவனங்களை அமைத்தல், அதை சிக்கலான நிர்வாகத்தின் கீழ் கொண்டுவருதல், பணத்தினை ஒரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு நேரடியாக மாற்றாமல் பல டம்மி நிறுவன கணக்குகளின் வழியே ரூட் செய்தல் இன்னபிற நற்காரியங்களை “சேவையாக” செய்வார்கள். மொத்ததில் இது ரஷ்ய மேட்ரியோஷ்கா பொம்மைகளுக்கு (Matryoshka dolls) சமானம்.
சிட்டி வங்கியின் “சேவைக்கான” உதாரணம்: ரொவுல் சலீனா, மெக்சிகோவின் முன்னாள் ஜனாதிபதியின் தம்பி: $80 -100 மில்லியன்; அஸிப் அலி சர்தாரி (பாகிஸ்தான் – பெனாசீர் பூட்டோவின் கணவர்): $40 மில்லியன்+; எல் ஹட்ஜ் ஒமர் போங்கோ (கபான் என்கிற மத்திய ஆப்ரிக்காவில் இருக்கிற ஸ்டாம்ப் சைஸ் நாட்டின் சர்வாதிகாரி: $130 மில்லியன்; முன்னாள் நைஜீரிய சர்வாதிகாரி அபாச்சாவின் மகன்களுக்காக: $110 மில்லியன்
சிட்டி வங்கி என்பது ஒரு வங்கி. அமெரிக்க, ஐரோப்பிய பிரதான வங்கிகள் அத்தனையிலும் இந்த மாதிரியான சேவைகளும், கருப்புப் பண நதி,ரிஷி மூல அழிப்புகளும், விஸ்தரிப்புகளும் ’ப்ளேபாயின்’ நங்கைகள் போல ஏராள தாராளமாய் உண்டு. இது தான் பெரும் கருப்புப் பண வங்கி ரீதியான மூலம். இந்த ஷெல் கம்பெனிகள் போடுவது, பணத்தினை பல்வேறு கணக்குகள் மூலமாக மாற்றுவது என்பது ஒரு தனி அத்தியாயம். அதை வரிகளற்ற சொர்க்க தேசங்களில், தீவுகளில் இருக்கும் ஒட்டைகளையும் உலகமெங்கிலும் கிளை பரப்பியிருக்கும் வங்கிகள், வங்கிகளுக்கு இணையான சேவைகள் வழங்கும் தரகு நிறுவனங்கள் (கோல்ட்மென் சாக்ஸ், மெரில் லின்ச்) வழியாக விரிவாக ஆராயலாம்.
சரி. இதெல்லாம் மில்லியன், பில்லியன் கணக்கில் கைமாறும் பணம். குட்டி சாம்ராஜ்ங்கள் நடத்துபவர்கள், போதைப் பொருள் கடத்துபவர்கள், அரசியல்வாதிகளின் பணம், இன்னபிற சட்டத்துக்கு புறமான ஆட்கள் சேர்க்கும் பணம் எப்படி வங்கி வழியே போய், இருந்து, திரும்பி எப்படி மீட்டெடுப்பது? அதற்கும் வெவ்வேறு வழிகள் இருக்கிறது.
உணவு விடுதிகள். ஹவாலா. தங்கம், வைர வியாபாரம். ரியல் எஸ்டேட். பங்குச் சந்தை. இவை ஒவ்வொன்றிலும் எப்படி பணம் உள்ளேப் போய், இடம் மாறி, உருமாறி, தடம் மாறி வெளியே வருகிறது என்பதை பின் வரும் அத்தியாங்களில் விரிவாகப் பார்க்கலாம்.
சுலபமாக சொன்னால், எங்கெங்கெல்லாம் பொருள்/சேவையின் விலையினை நிர்ணயிப்பது கடினமோ, அங்கெல்லாம் கருப்புப் பணம் அதிகமாய் உலாவும். ரியல் எஸ்டேட் ஒரு சிறந்த உதாரணம். நீங்கள் 4 கோடி போகும் என்று சொன்னால், என்னால் அதை ரூ.40 இலட்சத்திற்கு கூட தேறாது என்று சொல்லமுடியும். இந்த மாதிரியான வியாபாரங்களில் புகுந்து விளையாடமுடியும்.
காப்பீடு – இந்தியாவில் காப்பீடு தனியார் மயமாகி வெறும் பத்துவருடங்கள் இருக்கலாம். அதற்குள்ளாகவே, எக்கச்சக்கமான பணம் புரள ஆரம்பித்திருக்கிறத் துறையாய் மாறிப் போனது.
உ.தா – எண்டோன்மெண்ட் திட்டம் எனப்படும் காப்பீடு. ஒரு குறிப்பிட்டக் காலத்திற்கு பிறகு நீங்கள் கட்டிய ப்ரீமியம் + வளர்ச்சி விகிதம் பார்த்து தொகையினை பாலிசிதாரர்களுக்கு கொடுக்கும் ஒரு திட்டம். இது தான் ஆரம்பம். 10 லட்ச ரூபாய் கேஷாக இருக்கிறது. இதை லீகலாக மாற்ற வேண்டுமென்றால், எண்டோன்மெண்ட் சுலபமான வழி.
உங்கள் மாமன், மச்சான் என எல்லார் பேரிலும் ஒரு இலட்சம் போட்டு மூன்று வருடங்கள் கழித்து வரும் தொகையை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம் என்கிற நாமினேஷனோடு எடுத்துக் கொள்ளலாம். வங்கியிலேயே ரூ.49,000 மேல் பேன் கார்ட் காட்டவேண்டுமென்கிற விதிமுறை இருக்கிறது. ஆனால் தனியார் காப்பீடு நிறுவன விற்பனையாளர்களுக்கு டார்கெட் முடிப்பது முக்கியம். அதனால் எவ்வளவு பணமாய் கொடுத்தாலும் வாங்கிக் கொள்வார்கள். சராசரியாக இம்மாதிரியான திட்டங்கள் 8.5 – 13% வரைக்குமான வளர்ச்சியை தரும். உங்கள் வைப்பு நிதியை விட அதிகம். முக்கியமான இன்னொரு பலன், இந்தியாவில் காப்பீட்டின் மூலம் வரும் பணத்திற்கு வரி கிடையாது. மூன்றே வருடங்கள், எந்த கேள்வியும் இல்லாமல் பணத்தினை வட்டியோடு திருப்பி தந்து அதற்கு வரியும் கட்டாமல், வெள்ளையாகிவிடும். எந்த கேள்வியும் கிடையாது.
வங்கிகளின் வழியே மேற்சொன்ன தொழில்களில் தான் இது சாத்தியமென்றில்லை. கருப்புப் பணத்தினை அதிகமாகப் பயன்படுத்தும் இன்னொரு சானல் – விளையாட்டு.
இந்திய கிரிக்கெட்டின் அசிங்கங்கள், மேட்ச் பிக்ஸிங், பெட்டிங் என்று நீளும் ஏரியாக்களிலும், இப்போது மாட்டி முழித்துக் கொண்டிருக்கும் ஃபீஃபா (FIFA) கால்பந்து சம்மேளனமும், இன்னபிற விளையாட்டுக்களும், கருப்புப்பண விளையாட்டில் ஒரு அங்கம். எப்படி?

No comments:

Post a Comment