"அண்ணே! அன்னைக்கு பேய் கதை சொல்றேன்னு சொல்லி ஏமாத்திடீங்க. இன்னைக்காவது ஒழுங்கா ஒரு கதை சொல்லுங்க"
"கோவிச்சுகாதேடா. அன்னைக்கு ஏதோ ஒரு ஜாலி மூட்ல உன்னை கலாய்ச்சுட்டேன். இன்னைக்கு நான் உண்மையாவே பேயை பார்த்த கதைய சொல்றேன். ஒரு நாள் ராத்திரி முழுக்க நான் பேயால தூங்காம இருந்திருக்கேன் தெரியுமா?"
"அப்பிடியா? அந்த கதைய எனக்கு சொல்லுங்கண்ணே ப்ளீஸ்"
"அப்போ எனக்கு 14 வயசு. எங்க மாமா புதுசா ஒரு வீடு கட்டி இருந்தாரு. ஒரு சனிக்கிழமை அன்னைக்கு அவரை பாக்குறதுக்கு அவரோட வீட்டுக்கு . போய் இருந்தேன். அன்னைக்கு பாத்து சரியான மழை. வீட்ல மாமா மட்டும்தான் இருந்தார். மத்தவங்க எல்லாம் ஊருக்கு போய் இருந்தாங்க."
"சரி!"
"அன்னைக்கு ராத்திரி மாமாவுக்கு ஒரு போன் வந்துச்சு. ஆபீஸ்ல அவசர வேலை இருக்குன்னு அவரை வர சொல்லிட்டாங்க. எங்க மாமா என்னை வீட்டை பாத்துக்க சொல்லிட்டு கொட்டுற மழைல ஆபீஸ் கெளம்பிட்டார். எங்க மாமா வீடு தவிர அந்த எரியால வேற வீடே கிடையாது. ஒரு 100 அடி தள்ளி ஒரு வீடு கட்டிக்கிட்டு இருந்தாங்க. அவ்ளோதான். அதனால எனக்கு அந்த வீட்ல தனியா இருக்க ரொம்ப பயம். என்னோட வீட்டுக்கு போகலாமுன்னாலும் அந்த ராத்திரி நேரம் பஸ் கெடைக்காது"
"உங்க மாமா கிட்ட சொல்லி இருக்கலாமுல்ல."
"சொல்லாம இருப்பேனா? தனியா இருக்க எனக்கு ரொம்ப பயமுன்னு சொன்னேன். அவரு நீ பயப்படாதடா. உனக்கு ஒரு ஏற்பாடு பண்றேன்னு சொன்னாரு. என்னை கூட்டிகிட்டு என்னை புதுசா கட்டிக்கிட்டு இருக்குற அந்த வீட்டுக்கு கூட்டிட்டு போனாரு"
"கட்டிக்கிட்டு இருக்குற வீட்ல யாரு இருப்பா?"
"நானும் அதைத்தான் யோசிச்சிகிட்டே அவர் கூட போனேன். அந்த வீட்ல யாரு இருந்தா தெரியுமா"
"சொன்னாதான தெரியும்"
"அங்க ஒரு கிழவர். 65 வயசு இருக்கும். ஒரு கயித்து கட்டில்ல படுத்துக்கிட்டு இருந்தார். அவரோட கண்ணு ரெண்டும் பாதி மூடுன மாதிரி இருந்துச்சு. சட்டை போடாம வேட்டி மட்டும் கட்டிக்கிட்டு இருந்தார் . அவர் கிட்ட ஒரு நாய் வேற படுத்து இருந்துச்சு . நல்ல கறுப்பு கலர்ல. அதோடே கண்ணு ரெண்டும் ரத்த சிகப்பா மின்னிகிட்டு. என்னை பார்த்ததும் பல்லை காட்டிகிட்டு ஒரு மாதிரி உறும ஆரம்பிச்சிடிச்சு.அந்த இடத்துல நிக்கவே எனக்கு ரொம்ப பயமா இருந்துச்சு."
'அய்யய்யோ! அவர் கூட உங்களை தங்க சொல்லிட்டாரா மாமா?"
"இல்லை. அவர் அந்த கிழவர் கிட்ட போய், 'சுடலை! நான் அவசர வேலையா வெளிய போறேன். இந்த தம்பி இன்னைக்கு எங்க வீட்டுல தங்கி இருப்பான். அடிக்கடி போய் பாத்துக்கோன்னுட்டார் '"
"ஓ! உங்களுக்கு செக்யூரிட்டி மாதிரி"
"ஆமா! கிழவர் அந்த வீட்டு வாட்ச்மேன். வேற ஆளுங்களே இல்லாத ஏரியால மாமாக்கு பழக்கம் அவர் மட்டும்தான். அவர்கிட்ட சொன்னதும் தன் கடமை முடிஞ்சது மாதிரி மாமா கிளம்பிட்டார்"
"அப்புறம் என்ன ஆச்சு"
"வேற வழி? வீட்ல தனியா இருக்கலாம்னு போய்ட்டேன். லைட் எல்லாத்தையும் போட்டுட்டு கட்டில்ல படுத்துகிட்டேன் "
"ம்"
"ஆனா எனக்கு தூக்கமே வரல. சொல்ல போனா தூங்க இஷ்டம் இல்லை. எப்படியாச்சும் ராத்திரி முழுசும் தூங்காமயே இருந்திடலாம்னு என்னோட திட்டம்."
"நல்ல திட்டம்தான்'
"அப்படியே கொஞ்ச நேரம் போச்சு. நான் சாமியை மனசுல நெனச்சுகிட்டு படுத்துகிட்டு இருக்கேன். அப்போ திடீர்னு கரண்ட் போயிடிச்சு. காத்து வேற வேகமா வீச ஆரம்பிச்சது. நான் ரொம்ப பயந்துட்டேன். போர்வைய இழுத்து போர்த்தி முகத்தை மூடி கிட்டேன்."
"அப்புறம்"
"அப்போதான் அந்த சத்தம் கேட்க ஆரம்பிச்சது. அது ஒரு சலங்கை சத்தம். சத்தம் நெருங்கிட்டே வரது எனக்கு நல்லா தெரியுது. எனக்கு இதயம் வேகமா துடிக்க ஆரம்பிச்சிடுச்சு. கிட்ட இருக்குற ஜன்னலை எழுந்து மூடலாம்னு நெனக்கிறேன். ஆனா தைரியம் வரல "
"அச்சச்சோ அப்புறம்"
"எனக்கு வேர்க்க ஆரம்பிக்கிது. மனசுல கந்த சஷ்டி கவசத்தை சொல்லிகிறேன். இப்போ அந்த சலங்கை சத்தம் விலகி போற மாதிரி தெரியுது"
"எழுந்து பாத்தீங்களா?"
"இல்லை. மூச்சு கூட விடாம இழுத்து பிடிச்சுகிட்டு படுத்துகிட்டே இருந்தேன். கொஞ்ச நேரம் அப்படியே போச்சு. அப்புறம் திரும்பவும் அதே சலங்கை சத்தம். நான் திரும்பவும் கந்த சஷ்டி கவசம் சொல்ல ஆரம்பிச்சேன். இப்போ அந்த சத்தம் திரும்ப போற மாதிரி இல்ல. இப்போ நான் சஷ்டி கவசம் திரும்ப ரொம்ப சத்தமா சொல்ல ஆரம்பிச்சேன். இப்போ சத்தம் விலகி போறது தெரிஞ்சது. இப்போ எனக்கு கொஞ்சமா தைரியம் வந்தது. போர்வைய விலக்கி பார்த்ததும் பயந்துட்டேன்"
"ஏன்? என்ன பார்த்தீங்க?"
"வீட்டு சுவர்ல ஒரு நிழல் தெரியுது. கொஞ்ச கொஞ்சமா அந்த நிழல் சிறுசாகிட்டே போகுது. திரும்ப முகத்தை மூடிகிட்டேன் "
"அப்புறம்?"
" ஒரு வழியா கொஞ்ச நேரத்தில விடிஞ்சிடிச்சு. எந்திரிச்சு முகம் கூட கழுவாம வெளிய வந்து கதவை சாத்துனேன். சாவிய அந்த கிழவர் கிட்ட குடுத்துட்டு ஊருக்கு பஸ் ஏறிடலாமுன்னு கிழவர் இருக்குற வீட்டுக்கு போனேன்"
"அங்க அந்த கிழவர் இருந்தாரா?"
"ஆமா! அந்த கிழவரை பாத்தேன். என்னை பார்த்ததும் 'என்ன தம்பி! நேத்து நல்லா தூங்குனயா? நான் நேத்து ராத்திரி ரெண்டு தரம் வந்து பாத்துட்டு போனேன்' அப்பிடின்னார். அப்போ அந்த வீட்டுல நான் ராத்திரி கேட்ட அதே சலங்கை சத்தம். என்னனு பாத்தா அந்த கிழவர் வளக்குற நாய் வெளிய இருந்து வீட்டுக்குள்ள ஓடி வருது. கழுத்துல ஒரு சலங்கை "
"ஹா ஹா ஹா! அப்போ கிழவர் நிழலை பாத்து பயந்து இருக்கீங்க. இதுல அந்த நாய் கழுத்துல இருந்த சலங்கை வேற உங்களை ரொம்ப பயமுறுத்தி இருக்கு"
"ஆமா"
"கதை நல்லாதான் இருந்துச்சு. ஆனா நீங்க சொன்ன மாதிரி பேய் எதுவும் வரலியே?"
"ஏன் வரல. என் மனசுல இருந்த பயம் இருந்துச்சு பாத்தியா. அதான் பேய்"
"அதுவும் சரிதான்!"
"சரி தம்பி. நேரமாச்சு நான் வரேன்"
No comments:
Post a Comment