Tuesday, 19 June 2018

திலம்

வாதுக்கு வந்த பண்டிதர்.
பெயர் பெற்ற ஒரிய நாட்டுப் பண்டிதர் ஒருநாள் “திடுதிடுப்” பென்று விஜயநகரம் வந்து சேர்ந்தார். நேரே அரண்மனைக்குச் சென்றார். அரண்மனை முன்வாசலில் கட்டியிருந்த அந்தப் பெரிய வெண்கல மணியை அடிக்கத் தொடங்கினார். விஜயநகரப் பேரரசின் பண்டிதர்களை வாதுக்கு இழுக்கும் அறிகுறி அல்லவா அது!
அந்த மணி ஓசை கேட்டு அரசர் கிருஷ்ணதேவராயர் திடுக்கிட்டார். உடனே ஒரிய நாட்டுப் பண்டிதரை வாதுக்கு இழுக்க ஏற்பாடு செய்ய வேண்டும்! அப்பொழுது அரண்மனைப் பண்டிதர்களுக்கு ஆள் அனுப்பினார். அவர்களை உடனே அந்த ஒரியப் பண்டிதருடன் வாதிடத் தயாரகச் சொன்னார்.
ஆனால், பண்டிதர்களின் தலைவரான பெத்தண்ணாவோ கைகளைப் பிசைந்துகொண்டு நின்றார்.
“ஏன்? என்ன தயக்கம்?” என்றார் அரசர் கிருஷ்ணதேவராயர்.
“அரசே! அவர் மகா பண்டிதர். வட நாட்டிலே அநேக பெரிய பீடங்களிலேயே வாதம் செய்து பரிசுகள் பெற்றவர். அவரிடம் வாதிட யாராலாகும்?” என்றார், பெத்தண்ணா.
“என்ன! நீங்களா... இப்படி பேசுகிறீர்கள்! ஏன்? தாங்கள்தானே மனு சரித்திரம் எழுதி என்னிடம் பரிசு வாங்கினீர்கள்!”
“ஆம், ஆரசே! உண்மைதான். அதை நான் மக்கள் விரும்புமாறு எழுதினேன். இதர மொழிகளுக்கும் அதில் இடம் கொடுத்துள்ளேன். ஆனால், இவர் சுத்த சமஸ்கிருத முறையைக் கடைப்பிடிப்பவராயிற்றே!” என்று தலைகுனிந்து நின்றார் பெத்தண்ணா. மற்ற பண்டிதற்களும் தங்கள் தலைவரையே பின்பற்றி நின்றதை அரசர் கிருஷ்ணதேவராயர் கண்டார்.
“உம்! இதற்குத்தானா உங்களுக்கு இத்தனை விருதுகள் அளித்துக் காப்பாற்றி வருகிறேன்!” என்று சலித்தவராய் மற்ற பண்டிதர்களை ஏறிட்டுப் பார்த்தார் அரசர்.
தலைவரே அதைரியப்படும்பொழுது மற்றவர்களால் என்ன செய்ய இயலும்? வாய் திறவாது எல்லாரும் தலைகுனிந்து நின்றார்கள்.
“அப்படியென்றாள் அந்த ஒரியப் பண்டிதரிடம் நம் தோல்வியை ஒத்துக்கொள்ள வேண்டியதுதானா?” என்று பெருமூச்சுவிட்டார் கிருஷ்ணதேவராயர். அவர் குரலில் கோபமும் விசனமும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருந்தன.
அதுவரை அங்கு வாய் திறவாது நின்றிருந்த தெனாலிராமன், “ஏன் அப்படி? கூடாது! நான் இங்கு இருக்கும்வரை அப்படிச் செய்ய விடமாட்டேன்” என்று வீராவேசமாய்ப் பேசினான்.
“என்ன! தெனாலிராமா, உன்னால் அந்தப் பண்டிதரை எதிர்க்க முடியுமா?” என்று ஆச்சிரியத்துடன் கேட்டார் கிருஷ்ணதேவராயர்.
“சரிதான்! என் அறிவையும் ஆற்றலையும் திறமையையும் தாங்களே இன்னும் சரியாய்ப் புரிந்துகொள்ளவில்லைபோலும், நான் லிங்க புராணம், பாண்டுரங்க மகாத்மியம் முதலிய நூல்களையெல்லாம் எழுதினவன்” என்று மார்தட்டினான் தெனாலிராமன்.
“ஓகோ! அப்படியென்றால் அந்த ஒரியப் பண்டிதரை இப்பொழுதே வாதத்தில் கலந்துகொள்ளத் தருவிக்கட்டுமா!” என்றார் அரசர்.
“சற்றுப் பொறுங்கள்! அந்த ஒரியப் நாட்டுப் பண்டிதருடன் நான் வாதம் செய்யும்பொழுது இந்தப் பெத்தண்ணா எனக்குச் சுவடி தூக்கும் ஆளாக இருக்க வேண்டும்!” என்றான் தெனாலிராமன்.
“ஆகா! அதற்கென்ன! நம் அரண்மனைப் பண்டிதர்கள் அனைவரையுமே உனக்குக் குற்றேவல் புரியச் சொல்கிறேன்” என்றார் அரசர்.
உடனே தெனாலிராமன், “சரி இதோ வந்துவிடுகிறேன்” என்று உள்ளே சென்றான். சீக்கிரத்தில் தன்னைப் பட்டுப் பீதாம்பரங்களில் சிறப்பாக அலங்கரித்துக்கொண்டு வெளியே வந்தான். முன்கையில் தங்கத்தோடா சுழன்றது. விரல்களிலோ விலை உயர்ந்த மோதிரங்கள் மின்னிக் கண்களைப் பறித்தன. கையில் சரிகைத் துப்பட்டாவினால் மூடப்பட்ட ஓலைச் சுவடியொன்றும் இருந்தது.
அச்சுவடியை வணக்கமாகப் பெத்தண்ணா தம் கைகளில் வாங்கிக்கொள்ள, மற்ற பண்டிதர்கள் கை கட்டிப் பின்னால் தொடர்ந்துவர, கம்பீரமான ராஜ பார்வையுடன், சிம்ம நடைப் போட்டு, விவாத மண்டபத்துக்குப் புறப்பட்டான் தெனாலிராமன்.
அந்தச் சமயத்தில் தெனாலிராமனுடைய நடை உடை பாவனையைப் பார்த்துவிட்டு, அரசரே ஆச்சிரியத்தில் அமிழ்ந்து போனார்.
சிறிது நேரத்தில் அந்த ஒரிய நாட்டுப் பண்டிதர் சபைக்கு அழைத்துவரப்பட்டார். இருவரும் ஒருவருக்கொருவர் குசலம் விசாரித்துக்கொண்டு அமர்ந்தார்கள்.
அந்தச் சுழ்நிலையையும், தெனாலிராமனுடைய முக விதானத்தில் வழிந்தோடிய கம்பீரத்தையும் கண்டதுமே அவன்பால் மிக்க மரியாதை ஏற்பட்டுவிட்டது. அந்த வெளிநாட்டுப் பண்டிதருக்கு!
அப்பொழுது அந்தப் பண்டிதருடைய திக்விஜயங்களைப் பற்றி விசாரித்தான் தெனாலிராமன். உடனே அப்பண்டிதர், தாம் காசியிலிருந்து காஷ்மீரம்வரை திக்விஜயம் செய்தது பற்றியும், ஆங்காங்கு விருதுகள் பெற்றதையும் மிகுந்த கற்பனை மெருகுடன் விவரமாகச் சொல்லிக்கொண்டே போனார். அத்தனையையும் செவி மடுத்துக் கேட்டுவிட்டு “ப்பு...! இவ்வளவுதானா?” என்ற வெகு அலட்சியமாகச் சொன்னான் தெனாலிராமன்.
அப்பொழுது அந்தப் பண்டிதருடைய பார்வை, அங்கு மிகுந்த பயபக்தியோடு பெத்தண்ணா சுமந்துகொண்டிருந்த ஓலைச் சுவடியின்மீது பாய்ந்தது. “அது என்ன சுவடியா?” என்று கேட்டார்.
“ஓ! அதுவா? அது ‘திலகாஷ்ட மகிஷ பந்தனம்’! சொல்லடுக்குகள், சிலேடைக் கவிகளைப் பற்றி புது வியாக்கியானம்!” என்றான் தெனாலிராமன்.
அதைக் கேட்ட ஒரியப் பண்டிதரின் விழிகள் வியப்பால் விரிந்தன. அனைத்தையும் படித்துக் கரைத்துக் குடித்த அவர், அதுவரை அச்சுவடியைப்பற்றிக் கேள்விப்பட்டதே இல்லையே!
அப்பொழுது ஏற்பட்ட அவருடைய முகத் தோற்றத்தைப் பார்க்காமல் பார்த்துத் தெரிந்துகொண்டான் தெனாலிராமன். “இப்பொழுது, பொழுது சாய்ந்து விட்டதல்லவா! இந்தச் சுவடியைக் கொண்டுதான் நாளைக்கு உங்களிடம் வாது செய்யப்போகிறேன்!” என்றான்.
“சரி, நாளை வருகிறேன்” என்று கூறி விடைபெற்றுச் சென்றார் அந்தப் பண்டிதர்.
அன்றிரவு மழுவதும் அவருக்குத் தூக்கமே வரவில்லை. ‘பெரிய பண்டிதர் பெத்தண்ணா உள்பட அரண்மனைப் பண்டிதர் அனைவரும் இவருக்குப் பணிவிடை செய்கிறார்களே! இவர் யாராயிருக்கும்!” என்றெல்லாம் மனத்தைக் குடைந்து கொண்டிருந்தார். அதோடு இதுவரை நாம் பார்த்திராத ஓர் சுவிடியை வைத்துக்கொண்டு, அதன் அடிப்படையல்தான் நம்மிடம் வாதுப்போர் நிகழ்த்தப் போவதாகச் சொல்கிறார்’ என்றெல்லாம் ஓடியது அவரது சிந்தனை.
இதுவரை எங்கும் தோல்வியே கண்டிராதவர் அல்லவா அவர்?
‘சரி சரி, தேவை இல்லாமல் இதில் கலந்துகொண்டு நம் பெயரைக் கெடுத்துக்கொள்ளக் கூடாது’ என்று அவர் ஒரு முடிவுக்கு வந்த நேரத்தில் மூன்றாம் சாமம் முடியும் தருவாயில் இருந்தது.
எழுந்து வெளியே வந்து எட்டிப் பார்த்தார். தேய்நலவு எங்கும் மங்கிய ஒளியை பரப்பிக் கொண்டிருந்தது. இதுதான் சமயமென்று. தம் சால்வையால் முக்காடிட்டு, உடல் முழுவதும் போர்த்துக்கொண்டு விஜயநகரத்தின் எல்லையை விட்டு வெளியே நடக்கத் தொடங்கினார்.
விடிந்தும் விடியாத வேளையிலேயே ஒரியப் பண்டிதர் ஓடிவிட்ட செய்தி தெரிந்துவிட்டது. அனைவருக்கும் அளவில்லாத மகிழ்ச்சி. “எல்லாம் உன் சுவடியின் மகிமைதான், தெனாலிராமா! அதன் பெயர்கூட என்னமோ சொன்னாயே! எனக்கு நினைவில்லை. என்ன அது?” என்றார் கிருஷ்ணதேவராயர்.
“அதுதான் திலகாஷ்ட மகிஷ பந்தனம்!” என்றான் தெனாலிராமன்.
“நான்கூட இதுவரை கேள்விப்பட்ட தில்லையே! அதைக் கொண்டுவா இப்படி, பார்ப்போம்” என்றார் அரசர்.
விலையுர்ந்த சரிகைத் துப்பட்டாவினால் சுற்றப்பட்டிருந்த அந்த ஓலைச் சுவடியைத் தானே எடுத்துச்சென்று, அரசருடைய முன்னிலையில் வைத்தான் தெனாலிராமன்.
உடனே அனைவரும் அங்குச் சூழந்துகொண்டார்கள். கிருஷ்ணதேவராயரே அதை எடுத்து ஆவலாய் பிரித்தார். பிரித்த சரிகைத் துப்பட்டாவிற்கு உள்ளே, உலர்ந்துபோன சில எள்ளுச் செடித் தண்டுகள், எருமை மாட்டைக் கட்டும் கயிற்றால் சுற்றி வைக்கப்பட்டிருந்தன.
அதைப் பார்த்துவிட்டு அனைவரும் “பலே! பலே!” என்றார்கள்.
“என்ன தெனாலிராமா, இப்படி ஒரு பொய்யைப் புளுகியிருக்கிறாயே!” என்று தம் மூக்கின்மீது விரலை வைத்தார் கிருஷ்ணதேவராயர்.
“யார் பொய் சொன்னது? திலகாஷ்ட மகிஷ பந்தனம் என்னவாம்? ‘உலர்ந்துபோன சில எள்ளுச் செடி தண்டுகள், எருமை மாட்டைக் கட்டும் கயிற்றில் சுற்றப்பட்டுள்ளன’ என்பதுதானே பொருள். இது பொய் யாகுமா? நீங்களே சொல்லுங்கள்! அந்தப் பண்டிதர் அதைச் சரியாய்ப் புரிந்துகொள்ளாவிட்டால், அதற்கு நான் என்ன செய்வது?” என்று மிகவும் பெருமிதமாய்ப் பேசினான் தெனாலிராமன்.
அதைக்கேட்ட கிருஷ்ணதேவராயர் வாய்விட்டு சிரித்தார். “பலே பண்டிதர்தான் நீர்” என்று அப்பொழுதே ஒரு பை நிறையப் பொன்னைத் தூக்கிச் சன்மானமாகக் கொடுத்தார்.

No comments:

Post a Comment