தந்தையர் தினம்
அம்மாவைக் கொண்டாடுகிற அளவுக்கு நாம் அப்பாவைக் கொண்டாடுவதில்லை. கண்டிப்பும் கறாருமாக இருக்கும் அப்பாவை பெரும்பாலான பிள்ளைகளுக்குப் பிடிப்பதில்லை. குழந்தைகளுக்கு எப்போதும் செல்லம் கொஞ்சுகிற அம்மா மீதுதான் பிரியம். இதற்கு நானும் விதிவிலக்கல்ல.
அப்பா பள்ளிக்கூட ஆசிரியர். எப்போதும் என்னைப் பிரம்பால்தான் அடிப்பார். சின்னச்சின்ன தவறுகளுக்கெல்லாம் அடி விழும். எதிர்வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்தபடி வெற்றிலை போட்டுக் கொண்டிருக்கும் கிழவர், அப்பா என்னை அடிப்பதைப் பார்த்துவிட்டு "வாத்யாரய்யா நீங்க செய்யறதுதான் சரி. அடிச்சு வளர்க்காத குழந்தையும் ஒடிச்சு வளர்க்காத முருங்கையும் உருப்படாதுன்னு பழமொழியே இருக்கே!' என்பார்.
அப்பாவிடம் அடிவாங்குகிற அன்றைக்கு எனக்கு காராசேவு கிடைக்கும். இப்படி அப்பாவிடமிருந்து அன்பு வெளிப்படுகிற தருணங்கள் அபூர்வமானவை. ஆனால், அந்த அன்பு வெளியே தெரிந்துவிட்டால் எங்கே பயம் விட்டுப்போய் விடுமோ என்று அன்பு தெரியாதபடி பார்த்துக் கொள்வார். உள்ளுக்குள் குழந்தைகளுக்காக கசிந்து உருகும் மனம் இருக்கும்.
வினோபாஜி வாழ்க்கையில் ஒரு சம்பவம். அவர் சின்ன வயதில் அப்பாவிடம் அடிவாங்காத நாளே கிடையாதாம். தினசரி இன்று அப்பா நம்மை கட்டாயம் அடிப்பார் என்று எதிர்பார்ப்பது வினோபா பாவேக்கு வழக்கமாகிவிட்டது. திடீரென்று ஒருநாள் வினோபாஜியின் தந்தை இவரை அடிப்பதை நிறுத்திவிட்டார். என்ன காரணம் என்று புரியவில்லை.
நன்கு யோசித்த பிறகுதான் காரணம் புலப்பட்டதாம். அப்பா இவரை அடிப்பதை நிறுத்திய நாள் இவருக்குப் பதினாறு வயது பூர்த்தியான நாளாக இருந்தது. பதினாரு வயசு பூர்த்தியான மகனை தோழனாக நடத்த வேண்டும் என்று சாஸ்திரங்களில் சொல்லியிருப்பது வினோபாவுக்கு நினைவுக்கு வருகிறது. வினோபாஜி நெகிழ்ந்து போனாராம்.
பெரும்பாலும் ஆண் பிள்ளைகள் அப்பாவிடம் அன்னியப்பட்டும், பெண் குழந்தைகள் அன்யோன்யம் கொண்டும் இருக்கிறார்கள். இதற்கு உளவியல் ரீதியாக காரணங்கள் சொல்லப்பட்டாலும் அப்பா என்கிற ஒரு குடும்ப உடன்வாழ் உறுப்பினரின் பாசமும் தியாகமும் கவனிக்கப்படுவதே இல்லை.
இலக்கியத்தில்கூட தாய்மொழி, தாய்நாடு என்று தாய்க்கு தான் முதலிடம் கொடுக்கிறோம். பாரதி தான் சற்று வித்தியாசமாக, "எங்கள் தந்தையர் நாடெனும் போதினிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே!' என்கிறான்.
தந்தையின் சொல்லுக்கு கட்டுப்பட்டு கானகம் ஏகிய உத்தமகுமாரனும், அப்பாவின் கட்டளைக்கு அடிபணிந்து அன்னையின் சிரம் கொய்த வீரமகன் பற்றி எல்லாம் புராணங்கள் கூறுகின்றன.
அப்பா சொன்னார் என்பதற்காக கப்பலில் அவர் சொன்ன இடத்தில் உட்கார்ந்து கடைசிவரை அவர் வராதபோதும் தீக்கு இரையான உத்தமச்சிறுவன் "காஸாபியாங்கா' பற்றியும் வரலாறு கூறுகிறது. தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்ற முதுமொழியை நாம் அறிவோம். தந்தையை அறிந்தோரில்லை.
சாமுவேல் ஜான்சன் என்ற ஆங்கில அறிஞர் தன் எண்பதாவது வயதில் ஒரு காரியம் செய்தார். பால்யத்தில் அவர் குடியிருந்த ஊருக்குச் சென்றார்.
அது மழைக்காலம், மழை கொட்டோ கொட்டென்று கொட்டிக் கொண்டிருக்கிறது. அவரை ஏற்றிச் சென்ற வண்டிக்காரனிடம் வெகு காலத்திற்கு முன் இந்த ஊரில் ஒரு சந்தை இருந்ததே. அங்கே அழைத்துச் செல்ல முடியுமா என்கிறார்.
சந்தை இருந்த இடம் இப்போது முள்செடிகள் மண்டிய காடாகக் காட்சியளிக்கிறது. அதுமட்டுமல்ல, அங்கு சேறும் சகதியுமாக இருக்குமாதலால் வண்டி போகாது என்கிறான். ஜான்சன் அந்தப் பகுதியின் முகப்பிலேயே இறங்கிக் கொள்கிறார். சேற்றிலும் சகதியிலும் மழையிலும் தள்ளாடிச் செல்கிறார்.
அங்கே எப்படியோ ஓர் இடத்தை அடையாளம் கண்டு அந்த இடத்தில் கொட்டும் மழையில் நடுநிசிவரை நின்றுவிட்டுத் திரும்புகிறார். தனது சீடர் பாஸ்வெல்லிடம் தமது வாழ்க்கைக் குறிப்புகளைக் கூறி வருகையில் இந்த சம்பவத்தைப் பற்றி சொல்கிறார்.
அந்த இடத்தில்தான் என் தந்தை பழைய புத்தகக் கடை வைத்திருந்தார். சிறுவயதில் ஒருநாள் தனக்கு காய்ச்சலாக இருப்பதால் இன்று ஒருநாள் மட்டும் கடையை கவனித்துக் கொள்ள முடியுமா என்று கேட்டார். நான் முடியாது என்று நிர்தாட்சண்யமாக மறுத்துவிட்டேன். இந்த மறுதலிப்பு என் வாழ்நாள் முழுவதும் என்னை உறுத்திக்கொண்டே இருந்தது. அதற்குப் பிராயச்சித்தமாகத்தான் அன்றிரவு மழையில் அதே இடத்தில் பல மணி நேரம் நின்றேன் என்றாராம்.
அப்பா மீது அவர் வாழும் காலத்திலேயே அக்கறை கொள்வோம். சாமுவேல் ஜான்சனைப்போல் பின்னர் வருந்திப் பிரயோஜனமில்லை.

No comments:
Post a Comment