Friday, 22 June 2018

வேற்றுமையில் ஒற்றுமை !

வரலாற்றுப் பாடம் என்றாலே ஒருவித ஒவ்வாமை இருந்தது என்பது உண்மைதான். ஆர்வமின்மையா, அதிக நினைவாற்றல் தேவை என்பதாலா, குமுதினி பெரியசாமி என்ற ஆசிரியரின் கண்டிப்பான வகுப்புகளா எதுவென்று சரியாக நினைவில்லை. தேர்வுக்கு முன்னிரவு அப்பா எப்போதும் கதை போல ஏதோ சொல்லிக் கொடுப்பார், எழுதி தேர்ச்சி மட்டும் அடைந்துவிடுவேன், அவ்வளவுதான். பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு மட்டும் விதிவிலக்கு. கேள்வித்தாள் முறை மாறியதாலும், அதற்கேற்ப அப்போது வெளிவந்த காந்தி கைடாலும், சராசரிக்கும் அதிகமாகவே தேறிவிட்டேன். பதினோறாம் வகுப்பிலிருந்து வரலாறு இல்லை என்பதே எனக்கு பெரிதும் ஊக்கமாயிருந்தது.
கால் நூற்றாண்டு காலச் சுழற்சியில், தோழர்களின் அறிமுகத்தால் படிக்க நேரிட்ட சொற்ப புத்தங்ககளை நினைத்தால் வியப்பாகவே இருக்கிறது. அதுவும் இரண்டு அகராதிகளைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு இரண்டு மாதங்களாக வெறும் இருநூறு பக்கங்கள் கொண்ட MSS பாண்டியனின் (JNU பேராசிரியர்) நூல்களெல்லாம் என் வரலாற்று “ஆர்வத்திற்கு” கொஞ்சம் அதிகம்தான்.
நினைவுபடுத்தி ஒப்பிட்டுப் பார்த்தால் பள்ளியில் படித்ததற்கும் வெளியில் கற்றதற்கும் உள்ள வேறுபாடு மலைக்கும் மடுவுக்குமானது. இதுவெல்லாம் மத்திய அரசு தேர்வாணையத்தின் பாடத் திட்டத்திலேயே கிடையாது என்று சில மாதங்ளுக்கு முன் இந்திய ஆட்சிப் பணிக்குத் பதிவியுயர்வு பெற்ற தோழர் வேதனையுடன் ஒருமுறை பகிர்ந்து கொண்டார். அதனால் இது பள்ளிகளின் தவறோ, ஆசிரியர்களின் குறைபாடோ அல்ல, நமது பாடத்திட்டத்தின் திட்டமிட்ட பிழை என்பதே உண்மை.
சரி பள்ளியில் படித்தது எது? படிக்காதது எது? என்று முதல் பக்கத்திலிருந்தே தொடங்கி ஒரு பருந்துப் பார்வையிடுவோம்....
தீண்டாமை ஒரு குற்றம், ஒரு பாவச் செயல், ஒரு மனிதத்தன்மையற்ற செயல் என்றிருக்கும் ஆனால் அதன் தோற்றுவாய் குறித்தோ, நடைமுறையில் இன்றளவும் எப்படி இருக்கிறது என்றோ, யார் எவர் மீது நிகழ்த்துகிறார்கள் என்றோ அல்லது அதை ஒழிக்க ஆக்கப்பூர்வமான செயல்திட்டம் குறித்தோ ஒன்றும் இருக்காது.
பெரும்பாலும் பாட நூல்களில் இந்திய சுதந்திர போராட்டமும், முகலாய மன்னர்களின் ஆட்சியைப் பற்றியதாக இருக்கும். ஆனால் ஏறத்தாழ 700 ஆண்டுகள் இருந்த முகலாய ஆட்சிக் காலத்தில் தோன்றிராத போராட்டம் இருநூறு ஆண்டுகள் மட்டும் இருந்த ஆங்கிலேயர் காலத்தில் தோன்றிய காரணம் எழாமல் பார்த்துக் கொள்ளப்படும்.
கிழக்கிந்திய கம்பெனி மூலம் உள்ளே நாட்டினுள் வந்து பின்னர் மொத்த நாட்டையும் எடுத்துக் கொண்டு வெள்ளையன் செய்த அடிமைத்தனமும் பொருளாதார சுரண்டலும் இருக்கும். ஆனால் ஆயிரமாண்டுகளாக, சொந்த நாட்டு மக்களிடையே உள்ள ஏற்றத்தாழ்வுகள் குறித்தும் , சாதிரீதியான அடிமைத்தனமும், அதன் பொருட்டு எழுந்த சமூக விடுதலை போராட்டங்களும் அழிக்கப்பட்டிருக்கும்.
ராமர் மீது அதீத நம்பிக்கை கொண்டு அறவழிப் போராட்டம் நடத்திய காந்தியும், கோகலேவும், நேருவும் இருப்பார்கள். அதே சமயம் கடவுள் நம்பிக்கையற்று இடதுசாரி சிந்தனை கொண்டு ஆயுதப்போராட்டம் நடத்திய பகத் சிங்கும், சுக்தேவும் புறக்கணிக்கப்பட்டிருப்பார்கள்.வட்டமேசை மாநாடு குறித்தும் உண்ணாவிரத போராட்டம் பற்றியும் கட்டாயம் இருக்கும். ஆனால் அது ஆங்கிலேயருக்கும் காந்திக்கும் ஏற்பட்ட மோதல் அல்ல, அதில் யாருக்கும் யாருக்கும் சிக்கல் ஏன் நடந்தது எப்படி முடிவடைந்து என்ற முக்கிய தொடர்பு துண்டிக்கப்பட்டிருக்கும்
காந்தி யாரால் எங்கு சுட்டுக்கொல்லப்பட்டார், என்பது இருக்கும். ஆனால் கோட்சே எந்த இயக்கத்தைச் சார்ந்தவர் அது எததனை முறை தடை செய்யப்பட்டது, எத்தனை முறை கொலைக்கு முயற்சித்தார்கள் காந்தியின் எந்த கருத்துக்காக அவர்கள் எதிர்த்த்தார்கள் என்பது விடுபட்டிருக்கும்வ ரைபடத்தில் காஷ்மீர் இருக்கும்...ஆனால் இன்று வரை ஐ.நா அதை சர்ச்சைக்குரிய பகுதியாகத்தான் கொண்டிருக்கிறக்கிறது என்பதோ, 1947-ல் பல நிபந்தனைகளோடே இந்தியா தற்காலிகமாக ஒருங்கிணைத்து கொண்டதோ, நேரு கொடுத்த வாக்குறுதியோ, அது எந்த சிறப்பு அம்சங்கள் கொண்டது என்பது மறைக்கப்பட்டிருக்கும்
வேதாரண்யத்தில் இராஜாஜி காய்ச்சிய உப்பு சத்தியாகிரகம் பற்றி இருக்கும். அவர் பரிந்துரைத்த புதிய கல்விக்கொள்கையோ அதன் உள் நோக்கத்தை சரியாக ஆராய்ந்து அதைக் குலக்கல்வித் திட்டம் என அம்பலப்படுத்தி மக்களிடம் கொண்டு சென்ற தந்தை பெரியார் மறைக்கப்பட்டிருப்பார்
மெக்காலே கல்வித் திட்டம், அது மனப்பாட கல்விமுறையை ஊக்குவித்து குமாஸ்தாக்களை உருவாக்கியது பற்றி இருக்கும். ஆனால் கல்வி மறுக்கப்பட்டு, உடலுழைப்பு மட்டுமே செய்த மக்களை பெருமளவில் சென்றடைந்த அதன் புரட்சிகர எல்லையற்ற விச்சு காணாமல் போயிருக்கும்.
இந்திய தேசிய காங்கிரசின் தோற்றம், சைமன் கமிசன், அந்தக் குழுவில் ஆங்கிலேயர்கள் மட்டுமே இருந்தததால் எதிர்க்கப்பட்டது பற்றி இருக்கும். ஆனால் அது சாதியின் அடிப்படை குறித்து ஆய்வு செய்ய முற்ப்பட்டதையோ அதனால் கணக்கெடுப்பு கூடாது என்பதற்காக எதிர்க்கப்பட்டது என்ற முக்கிய செய்தியைச் சொல்லாது.
விவேகானந்தரின் “Brothers and Sisters of America” சிகாகோ பேச்சு பற்றி பக்கம் பக்கமாக பேசும். ஆனால் இந்து மத அடிப்படையையே உலுக்கும் அம்பேத்கர் பேச இருந்து பின்னர் “Annihilation of Caste” என்ற புத்தகம் வெளிவந்தது பற்றி மவுனமாக இருக்கும்
ஆசிரியராக இருந்து பின்னர் ஜனாதிபதியாக உயர்ந்த ராதாகிருஷ்ணன் பற்றி இருக்கும் ஆனால் எளிய மக்களுக்காக கல்வி கொடுத்த ஜோதிபாய் புலே, தேவதாசி குலத்தில் இருந்து வந்த முதல் டாக்டரான முத்துலட்சுமி அம்மையார் பெருமைகளை சிலாகிக்காது
பெரும்பான்மையான மக்கள் இந்தி பேசுவார்கள், விந்திய மலைக்கு மேலே எல்லாருக்கும் தாய் மொழி அதுதான் என்ற மாய பிம்பத்தைக் காட்டும். ஆனால் அது வெறும் மத்திய அரசின் அலுவல் மொழி என்றோ, 15-20% மக்கள் மட்டும் பேசும் மொழி என்றோ, மற்ற 22 அங்கிகரிக்கப்பட்ட மொழிகள் உள்ளன என்ற அழுத்தமோ இருக்காது
குடியியல்(civics) பகுதியில் அரசமைப்பு, அரசாங்கத்தின் கடமைகள் மற்றும் குடிமக்களின் உரிமைகள் குறித்து இருக்கும். ஆனால் அதை வடிவமைக்கும் போது ஏற்பட்ட சிக்கல்கள் என்ன, செயற்குழுவின் தலைவர் யார் என்பது “பெயருக்கு” கூட இடம்பெறாது.
நிற்க....(அட சும்மா குப்புற படுத்துட்டு கூட படிங்க...)
அமெரிக்காவுக்கு புதிதாக வருபவர்களிடம் “கார் ஓட்டத் தெரியுமா?” என்று கேட்பார்கள். தெரியாது என்றால் மிகவும் நல்லது என்பார்கள். ஏனென்றால் அப்போதுதான் முதலிலேயே சரியான முறையில் கற்க முடியும் என்பதற்காக. இதையெல்லாம் பார்த்தால் பள்ளியில் ஒழுங்காக வரலாறு படிக்காதது கூட நல்லதுக்கே என்ற முடிவுக்கு வரத்தோன்றுகிறது.
இறுதியாக, இதுநாள் வரை மிக முக்கியமாக நம் பள்ளிப்பாடத்தில் இருந்த ஒன்று, படித்து எப்போதும் நினைவில் வைத்திருக்கும் ஒன்று, மிகவும் தேவையான ஒன்று, ஆனால் இனி இருக்கப்போவதில்லை....அது....
வேற்றுமையில் ஒற்றுமை !

No comments:

Post a Comment