Monday, 25 June 2018

அய்யனாரும் ஆக்கரும் !


இடம்: மெப்கோ பொறியியல் கல்லூரி
நேரம்: இரவு 7.37
கிழமை: சனி (அன்று எனக்கு 7 1/2 என்று அறிந்திருக்கவில்லை)
எனது வாழ்வின் மிக முக்கியமான 4 வருடங்கள் . அந்த 4 வருடங்களுக்கு மட்டும் என்னை என் பெற்றோர் ''மெப்கோ'' கல்லூரிக்குத் தாரைவார்த்து கொடுத்தார்கள் , மகன் ஒரு பொறியாளனாய் வெளிவருவான் என்ற நம்பிக்கையில். அங்கு நடந்த சில மறக்க முடியாத நிகழ்வுகளில் ஒன்றை இங்கு பதிவுசெய்கிறேன் .
பொதுவாக எங்கள் கல்லூரி உணவு மிகவும் நன்றாக உள்ளது என்று பல விடுதி மாணவர்கள் சொல்லக்கேட்டுருகிறேன்.ஆனால் எனக்கு உணவு சுத்தமாகப் பிடிக்கவில்லை.சில மாணவர்கள் ''மொக்க'' பொங்கலைக் கூட மூன்று நான்கு முறை வாங்கி அதில் சட்னியையும் சாம்பாரையும் அபிஷேகம் செய்து ஒரு கலை நயத்தோடு ''பொக்கை'' வாயிலிட்டு உண்பார்கள்.
ஏனோ! இந்த நாகர்கோயில் நாக்கிற்கு மட்டும் உணவு பிடிக்கவில்லை .என்றெல்லாம் பிடிக்காத உணவு போடுகிறார்களோ அன்றெல்லாம் எனக்கு காக்கும் தெய்வமாய் நினைவுக்கு வருவது சிவகாசியில் உள்ள விஜயம் மற்றும் அப்பன் மெஸ் தான்.
விலையோ குறைவு ! நல்ல சுவை !! இது போதாதா !
நண்பர்கள் கூட்டத்தோடு சிவகாசி பயணம் தான்.
மேற் குறிப்பிட்ட கிழமை மற்றும் நேரம். நானும் எனது நெருங்கிய நண்பன் மதனும் வெளியே சென்று உணவு உண்ணலாம் என்று முடிவு செய்தோம் .எங்கள் கல்லூரியில் உள்ள விதிமுறைகளுள் ஒன்று மாணவர்கள் அனைவரும் இரவு 8 மணிக்குள் விடுதிக்கு வந்துவிட வேண்டும். நானும் மதனும் கல்லூரியின் வெளியே 1.5 மைல் தொலைவில் உள்ள தெருமுனை ஹோட்டலுக்கு சென்று சாப்பிடலாம் என்று கல்லூரியயை விட்டு கிளம்பினோம் .
அப்போது மணி 8.14 . வெளியே சென்று பார்த்த இருவருக்கும் ஏமாற்றம்.அன்று அந்த இரு ஹோட்டல்களும் ஏதோ ஊர் திருவிழா காரணமாக விடுமுறை .
நான் மதனை நோக்க! மதன் என்னை நோக்க ! இருவரும் எதிரே "சிவகாசி" என்று எழுதப்பட்ட பலகையை நோக்க! ஏறினோம் சிவகாசி பேருந்தில் . பயம் சிறிது என்னை ஆட்கொண்டது .கல்லூரி திரும்ப எப்படியும் 2 மணி நேரம் ஆகும் . இதை மதனிடம் தெரிவிக்க அவன் "விடு மச்சி ! இதெல்லா சப்ப மேட்டர் ! நம்ம final year மாமூ ! இதுக்கெல்லாம் பயப்படலாமா ? என்றான் . ஆகா !! நம்மோடு ஒரு வீரன் இருக்கிறான் என்ற தைரியத்தோடு அப்பன் மெஸ் உணவைப் பற்றி கனா காண ஆரம்பித்தேன் .
வாரத்தின் ஏழு நாட்களுக்கு மட்டும் சுத்த அசைவம் சாப்பிடும் பழக்கம கொண்ட நாங்கள் இருவரும் உணவை பேருந்திலேயே தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தோம் . இறுதியில் அடைந்தோம் அப்பன்சை ! உண்டோம் "சுத்த அசைவம் " ! அடைந்தோம் "பரவச நிலை ". கல்லூரிக்குத் திரும்புகையில் பயம் மீண்டும் என்னைப் பற்றிக் கொண்டது .ஒவ்வொரு மைல் கல்லை பார்க்கும்போதும் பயம் வேகமாக முன்னேறிக்கொண்டு இருந்தது . கல்லூரி நிறுத்தத்தில் இறங்கியதும் "நீ இன்னைக்கு தர்ம அடி வாங்க போரே !” என்று ஒரு அசிரிரீ எனக்குள் .
கல்லூரி வாயிலை அடைந்தோம் . காவலர் "என்னப்பா!! பத்து நிமிஷத்துல வந்துருவோம்ன்னு சொல்லிட்டு போனீங்க . இப்ப மணி என்னை தெரியும்ல ? " என்றார் . மதன் "மணி பத்து! " என்றான் . "நீங்கல்லாம் ஆஸ்டேல் ல போடுற சாப்பாட்டை சாப்ட மாட்டீங்களா " என்றார் காவலர் சிறிது காட்டமாக !
நான் பதிலேதும் பேசாமல் நின்றேன் .உடனே மதனின் உள்ளிருந்த சிவகங்கை சிங்கம் என்ற வீரன் எம்பிக்குதித்து வெளியே வந்து "ஆஸ்டேல் ல போடுற சாப்பாடு நல்லா இருந்தாக்கா நாங்க ஏன் வெளியே போய் சாப்புடுறோம்!" என்றான் .
எனக்கு சின்ன அதிர்ச்சி .காவலர் இந்த பதிலை எதிர்பார்க்கவில்லை. சிறிது கோபமுற்றார். "ஒஹோ! மூணு வருஷமா இந்த சாப்பாட்ட தான சாப்டீங்க ! நாலாவது வருஷம் மட்டும் பிடிக்காமா போச்சா ! எல்லாம் final year கிற திமிரு " என்றார் .
வார்டன் கிட்ட சொன்ன என்ன ஆகும் தெரியும் ல !" என்று உறுமினார் . ஒன்றும் பேசவில்லை இருவரும் .register ரில் கையொப்பம் இட்டுவிட்டு ஆஸ்டேல்லை நோக்கி விரைந்தோம் .
மதன் என்னைப் பார்த்து "டேய் ! மச்சி ! இந்த watchman ல நம்மள HOD மாதிரி கேள்வி கேக்குறான் பாரு !! எல்லாத்தையும் போட்டு தள்ளனும் டா ! " என்றான் . நான் அவனை ஆமோதிக்கும் வகையில் "விடு ! மாப்ள ! சில்ற பசங்க " என்றேன் ." இல்ல மச்சி ! இந்த வார்டன் பயலுக்கு ஒரு நாள் மண்டையில நாலு ஆக்கர் போட்ட தான் சரிபட்டுவருவான் டா " என்றான் மிகுந்த ஜெர்கோடு. இருவரும் பலமாக சிரித்தோம் .
ஆஸ்டேல் வாசலை அடைந்த இருவருக்கும் அதிர்ச்சி . வாயிலில் அய்யனாரையும் ,பிள்ளையாரையும் கலந்து செய்த கலவையாக Deputy வார்டன் ஆஜானுபாகுவாய் நின்று கொண்டிருந்தார் .
"என்ன பா ! இவளோ நேரம் எங்க போயிருந்தீங்க ! மணி பத்து ஆச்சு ! " என்று கேட்டார் . இருவருக்கும் வாரத்தை வரவில்லை . "சொல்லுங்க பா ! வாயில என்ன கொழுக்கட்டயா ?" என்று மிரட்டினார்.
" இல்ல சார் ! சிவகாசிக்கு சாப்ட போனோம் !" என்றேன் ."ஒஹோ! துரைங்க இங்க சாப்ட மாடீங்க . அமைதி ஆட்கொண்டது இருவரிடமும் ."
"என்ன சாப்டீங்க " என்றார் .
"பட்டர் சிக்கன் , பரோட்டா !" என்றான் மதன்
"எவ்ளோ பில் ? " என்றார்.
" 112 ரூவா " என்றேன் .
நீங்க பணத்திமிருல மெஸ்ல சாப்பிட மாட்டீங்க " என்று இல்லாத ஒன்றை இருப்பதாக சொன்னார் ."
ஆமா ! place ஆகிடீங்களா ? " என்றார் . உடனே மதன் "அவன் place ஆகிட்டான் . நான் இன்னும் ஆகல " என்றான் மிக பவ்யமாக (பம்மலாக) .
"எந்த கம்பெனி ?" என்றார்.
"HCL" என்றேன் .
" உங்க ரெண்டு பேர்ல "இங்க போடுற சாப்பாடு எல்லாம் மனுஷன் சாப்டுவானா ? " என்று watchman கிட்ட சொன்னது " என்றார் .
"ஆகா ! watchman வேலைய காட்டிவிட்டார் " என்று இருவரும் மனதில் நினைத்துக் கொண்டோம் .
வார்டன் இருவரையும் சற்று உற்று நோக்கினார் . "எனக்கு "நீ தான் அப்படி சொல்லிருப்பேன்னு தோணுது " என்று என்னை நோக்கி கைநீட்டினார் . எனக்கு பெரும் அதிர்ச்சி .உடனே மதனை நோக்கினேன் . அவனோ பூனை போல முகத்தை பாவமாக வைத்துக் கொண்டான் .
"எந்த ஊரு நீ? " என்னிடம் .
"நாகர்கோயில் " என்றேன் .
"அது தான பாத்தேன் ! அந்த ஊருக்குள்ள திமிரு உன்கிட்ட இருக்கு " என்று சொல்லி என் ஊரையும் கேவல படுத்தினார். " நீயெல்லாம் வாழ்நாள்ல சாப்பாடுக்கு கஷ்டப்பட போரே பாரு ! போ போ ! " என்றார்.
"இது கலி காலம் சார் ! பத்தினி சாபமே பலிக்காது ! உன்ன மாதிரி பன்னியின் சாபமா பலிக்க போகிறது போடா ! " என்று உறுமினேன் மனதிற்குள் .
இருவரும் எங்களது அறையை நோக்கி சென்று கொண்டிருந்தோம் சிறிது கவலையோடு .
உடனே மதன் "விடு மச்சி ! அவன் ஒரு டிஞ்சர் வாயன் ! இதுக்கு மேல ஒரு வார்த்த பேசிருந்தான் அவன் மண்டையில ஒரு ஆக்கர போட்ருப்பேன் " என்றான் .
"அட பாவி ! நாப்பது நிமிஷம் நம்மகிட்ட ரம்பம் போட்டான் ! . நீ ஒரு வார்த்த கூட பேசல ! வெளியிலே ஜெர்க்கா பேசிட்டு ! உள்ள செம பம்மு பம்மிட்டு ! இப்போ மறுபடியும் ஜெர்க்கா?!!! " என்றேன் .
" விடு மச்சி ! சப்ப மேட்டர் ! ப்ரீயா விடு !ப்ரீயா விடு" என்றான் . மீண்டும் பலத்த சிரிப்புடன் அவரவர் அறையை அடைந்தோம்

1 comment:

  1. இது புனைவா ? அல்லது உங்கள் வாழ்க்கையில் நடந்த சம்பவமா ?

    ReplyDelete