Friday 22 June 2018

ஏன் குற்ற உணர்ச்சி ஏற்படுகிறது?


குறைந்த அளவு குற்ற உணர்வு இருப்பது நல்லதுதான். அந்தச் சிறிய அளவு குற்ற உணர்வு நீங்கள் அதே தவறை மீண்டும் செய்து விடாமல் தடுக்கும். குற்ற உணர்வு என்பது என்ன? ஒரு செயல் தவறு என்று அறிவு பூர்வமாக அறிந்தாலும், தூண்டுதலால்.அதைச் செய்து விடுகிறீர்கள். ஏனெனில் அது ஏதோ ஓர் இன்பத்தினை அளிக்கிறது. உங்கள் இதயம் விரும்புவதை உங்கள் அறிவு தவறு என்று தடுக்கிறது. அறிவு மற்றும் இதயத்திற்கிடையே இதயம் பெரும்பாலும் வெற்றி பெறுகிறது. இங்குதான் குற்ற உணர்வு தோன்றுகிறது. சிறிதளவு குற்ற உணர்வு மேலும் தடம் புரளாமல் உங்களைத் தடுக்கும், ஆனால் அதுவே அளவிற்கதிகமாக இருக்கக் கூடாது. இதை எவ்வாறு கடந்து வருவது? மிக எளிதானது. அஷ்டவக்கிரகீதை அல்லது யோகவசிஷ்டா போன்ற ஞான நூல்களைப் படியுங்கள். பிராணாயாமம் மற்றும் தியானம் ஆகியவையும் குற்ற உணர்வைத் தாண்டி வர சிறந்த வழிகளாகும்.
நீங்கள் பிராணாயாமம் செய்யும் போது, அது குற்றங்களை நீக்கி விடுகிறது. ஆற்றலை மேம்படுத்தி உருவுள்ள நிலையில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றது. இது எவ்வாறெனில், நீங்கள் பாத்திரங்களைத் துலக்கும் போது, சிறிதளவு அமிலம் கலந்து துலக்கிக் கழுவினால் பாத்திரங்கள் பளிச்சிடும். ஆனால் அமிலம் அதிகமாகி விட்டால் அது பாத்திரத்தையே அரித்துத் தின்று விடும். ஆகவே சிறிதளவு குற்ற உணர்வு சரி, ஆனால் அதுவே அதிகமானால் உங்களை இருட்டில் தள்ளி விடும்.
கிறிஸ்தவ சமயத்தில், பாவ மன்னிப்பு என்பதற்கு அதிக அளவு முக்கியத்துவம் அளிக்கப் படுகிறது. நீங்கள் பாதிரியாரிடம் உங்கள் குற்றங்களை ஒப்புக் கொள்கிறீர்கள். அவ்வாறு உங்கள் தவறுகள் அனைத்தையும் ஒப்புக் கொடுக்கும்போது, நீங்கள் அவற்றினை இறைமையிடம் சமர்ப்பித்து விடுகிறீர்கள்.
ஹிந்து மற்றும் புத்த பாரம்பரியத்தின்படி, மக்கள் "க்ஷமா பிரார்த்தனா" அதாவது கடவுளிடம் மன்னிப்பு வேண்டுதல் செய்கின்றனர்."தெரிந்தோ தெரியாமலோ நான் தவறு செய்து விட்டேன்.தயவு செய்து மன்னித்து விடுங்கள் என்று கூறுவதேயாகும். மன்னிப்பு வேண்டுதல் உங்களை குற்ற உணர்விலிருந்து வெளியேற்றி விடும். ஜைன பாரம்பரியத்தில், செப்டம்பர் மாதத்தில் ஒரு நாள் ஒருவருக்கொருவர் மன்னிப்பு வேண்டுவர். அவர்கள், "தெரிந்தோ தெரியாமலோ நான் உன்னைப் புண்படுத்தியிருக்கலாம். என்னால் ஏதேனும் தீங்கு ஏற்பட்டிருந்தால் தயவு செய்து என்னை மன்னித்து விடு" என்று கேட்டுக் கொள்வார்கள். இது ஓர் மிக அழகான கருத்து.
தான் எனும் அகந்தை உங்களை மன்னிப்புக் கேட்கவிடாது. "நான் செய்தது சரியே. இதையே தான் தொடர்ந்து செய்வேன்"என்று கூறும். உலகில் அனைத்துப் போர்களும் பிரச்சினைகளும் இதனால் தான் துவங்கின. - தெரிந்தோ தெரியாமலோ புரிந்த பிழைகளுக்கு மன்னிப்புக் கேட்கும் - ஓர் செயலை மக்கள் புரிந்துகொண்டால் உலகில் அற்புதமான நல்லிணக்கம் உருவாகும். அல்லவா? உங்களை எளிய மற்றும் மனிதநேயம் கொண்ட மனிதனாகக்கும். ஒவ்வொருவருடனும் ஓர் தொடர்பு உணர்வினையும் ஏற்படுத்தும். தூர விலகியிருத்தல் தான் எனும் அகந்தையை ஏற்படுத்தும், அகந்தை தூர விலகலை உருவாக்கும்.

No comments:

Post a Comment