Tuesday 19 June 2018

மரங்களின் மந்தஹாசம்


பின் கொல்லைகள் மிக நீண்டு இருந்தன.மாமரம் ,கொய்யா, வெள்ளை, வாழை, வேம்பு, பன்னீர், முல்லை, மல்லி, கனகாம்பரம், குண்டுமல்லி, பாரிஜாதம், ரோஜாவின் அனைத்து வகைகளும், எட்டு தென்னை மரங்களும், அதில் இரண்டு மிக அருமையான ருசி கொண்ட செவ்விளனீராகவும், பாரிஜாதத்திலே அந்த பகுதியிலேயே மிக மிக நீண்டு வளர்ந்த செடியாகவும், இதன் நடுவே மெல்லிய நீரோடையாய் சுற்றி வரும் இயற்கையாய் அமைந்த வழிநீரும், எல்லாவற்றிற்கும் நடுவினிலே மெல்லியதொரு கயற்றுக் கட்டில், செந்தேக்கு கால்கள், அதற்கு முன்னால் கருங்காலிக் கட்டை பளபளப்பேறிய இரண்டு உயரம் குறைந்த நாற்காலிகள், அதில் படுத்திருப்பவரை பார்க்க எவரேனும் வந்தால் அமருவதற்கு 22 அடிக்கு 22 அடி காரைப் பூச்சு கொண்ட ஒரு சிறிய சொர்க்க லோகம்...
அதற்கு முன்னால் சற்றே உயரம் கூடிய பசுந்தென்னை மரப் பந்தல், உள்ளே எப்போதும் குளிர்ச்சியாய் இருக்கும் அளவு மண் பாத்திரத்தில் சில் என்ற நீரும், வயதானபேர்களுக்கு சற்றே ஆற வைத்து, மிளகு, சீரகம், அதி மதுரம், வெட்டிவேர் என நிழலிலேயே கலந்திடித்த பொடிகளுடன், கொஞ்சமாக ஏலக்காயும், கிராம்புமாக சேர்த்து கலந்த வெந்நீர், தனித் தனி நாற்காலிகளாய் இல்லாமல், சோஃபா மாதிரியான ஆனால் சற்றே பெரிது நீண்ட ஒன்று வருகையாளர்களுக்கும், அதே போல உயரத்தில் ஆனால் ராஜ திண்டுகள் அடுக்கி வைக்கப் பட்ட சிறிய கட்டில், முன்னால் இருக்கும் சிங்கங்களின் கால் அமைப்பைக் கொண்ட உயரம் குறைந்த முக்காலியில் கனமான , நிறம் இன்னது என சரியாக சொல்லமுடியாத படி இருக்கும் எழுதப் படாத தாள்களும், பிடித்தாலே வலிக்கும் அளவில் அடிப்பாகம் அமமந்த பெட்டி மரத்திலாலான ஊற்றுப் பேனா, அதிலே ஊதா நிறத்தில் எழுத எழுத அப்பிக் கொண்டு போகிற சாயம். மூலை ஒன்றின் ஓரத்தில் கனத்த பிள்ளை தாய்ச்சியாக இருக்கும் கருப்பு நிற பலா / சேங்காலி மர தம்புரா, அந்தப் பகுதியில் சற்றே அதிர நடந்தாலே மெல்லிய காந்தாரத்தை பதிலாய் உதிர்க்கும் அது.
இப்படி இப்படி இப்படியாக இன்னும் , எனது தாய் தந்தையர் அனுபவித்து எனது உணர்ந்து கொள்ள முடியாத குழந்தைத் தனத்தின் முற்பகுதிலேயே காலத்துடன் கரைந்து விட்ட அந்த அமராவதிப் பட்டணம் எங்கே போனது ? தோண்டத் தோண்ட மணல் , கற்களுக் கிடையில் கலந்து உருண்டு கொண்டு போகும், கண்ணீர்த் துளிகளில் ஆழமாய் எனது கனவுகள் கூட புதைத்து வைக்கப் பட்டிருக்கிறது ........

No comments:

Post a Comment