முன்னொரு காலத்தில் எகிப்து நாட்டில் ஒரு சிறுவன் வசித்து வந்தான். அவனுக்கு கணிதம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று நீண்ட நாட்களாக ஒரு ஆசை இருந்து கொண்டே இருந்தது. ஆனால் பொருள் இன்மையாலும், தகுந்த ஆசிரியர் கிட்டாமையாலும் அந்த ஆசை நிறைவேறாமலே இருந்தது. அவனும் கணிதம் கற்றுக் கொள்ளும் தருணத்தை ஆவலுடன் எதிர் பார்த்துக் கொண்டே நாட்களை நகர்த்திக் கொண்டு இருந்தான்.
அந்த சமயத்தில் தான் அவர்களின் ஊருக்கு படித்த அறிஞர்கள் ரோமில் இருந்தும் இந்தியாவில் இருந்தும் வந்து இருக்கும் செய்தியை அவன் கேள்விப்பட்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றான். அவன் மிகவும் எதிர்பார்த்த தரும் இதோ அவன் அருகே வந்து உள்ளது. நிச்சயம் அந்த அறிஞர்களிடம் போனால் அவர்கள் தனக்கு கணிதம் கற்றுத் தருவார்கள் என்று எண்ணி மகிழ்ச்சியுடன் அந்த அறிஞர்களிடம் சென்று தனது ஆசையை சொல்லுகின்றான். அவர்களும் அவனது ஆவலைக் கண்டு அவனுக்கு கற்றுத் தர சரி என்கின்றனர்.
முதலில் ரோம் நாட்டு அறிஞர் தான் கற்றுத் தருவதாக கூறி ஆரம்பிக்கின்றார்.
"முதலில் நாம் எண்களில் இருந்து தொடங்குவோம் சிறுவனே!" என்றுக் கூறி அவரிடம் இருந்த எழுத்துப் பலகையில் எதையோ எழுதிவிட்டு அவனிடம் அதைக் கொடுத்தார்.
"இதோ இந்த பலகையில் முதல் ஐந்து எண்களை எழுதி இருக்கின்றேன். இதை நீ படித்து முடித்த பின்னர் நாம் அடுத்த எண்களுக்கு போகலாம்" என்றார் அந்த ரோம் நாட்டு அறிஞர்.
ஆனால் ஆவலுடன் அந்த எழுத்துப் பலகையை வாங்கிப் பார்த்த சிறுவனுக்கு ஏமாற்றமே மிஞ்சி இருந்தது. அங்கே அவனுக்கு புரியாத மாதிரி சில குறியீடுகள் இடப்பட்டு இருந்தன.
I,II,III,IV,V.
அவன் அவனது நண்பர்களில் கணித புத்தகங்களில் சில எண்களைப் கண்டு இருக்கின்றான். ஆனால் அவன் அந்த பலகையில் கண்ட எதுவுமே அவன் முன்னர் கண்டு இருந்த எண்களைப் போல இல்லை.
அவன் ஏமாற்றத்துடன் "மதிப்பிற்குரிய ஐயா! என்னை மன்னியுங்கள். நான் சில எண்களை ஏற்கனவே படித்து இருக்கின்றேன். ஆனால் அவைகள் எதுவும் நீங்கள் எழுதி இருப்பதை போன்று இல்லை. அவை வேறுத் தோற்றம் உடையவை. தயவு செய்து எனக்கு ஏன் இவைகள் மாறுபடுகின்றன என்று கூறுகின்றீர்களா?" என்று கூறி விட்டு அவரிடம் அந்த பலகையை திருப்பிக் கொடுத்தான்.
அதைக் கேட்ட அந்த ரோம் அறிஞர் மிகுந்த சினமுற்று "உனக்கு எண்கள் தெரியவில்லை. ஏனெனில் உனக்கு படித்த அறிவில்லை" என்று கூறி விட்டு அந்த பலகையை இந்திய அறிஞரிடம் கொடுத்தார்.
இந்திய அறிஞர் அந்த பலகையை கண்ட உடன் சிரித்தார். "சிறுவனே நீ சொல்லுவது சரிதான். இதில் எழுதி இருக்கும் எண்கள் தவறானவை தான். இரு நான் உனக்கு சொல்லித் தருகின்றேன்" என்று கூறி விட்டு அந்த எழுத்துப் பலகையில் இருந்த எண்களை அழித்து விட்டு வேறு எதையோ எழுதி விட்டு அவனிடம் அந்த பலகையை கொடுத்தார்.
"இதோ இவை தான் சரியான எண்கள். இவற்றை நீ படித்த பின்னர் நாம் மற்ற எண்களுக்கு போகலாம்" என்றார்.
அந்தச் சிறுவனும் ஆவலுடன் அந்தப் பலகையை வாங்கிப் பார்த்தான். ஆனால் இம்முறையும் அவனுக்கு ஏமாற்றமே மிஞ்சி இருந்தது. இம்முறையும் அந்த குறியீடுகள் அவன் முன்னர் கண்டு இராதவாறே இருந்தன.
1,2,3,4,5.
"ஐயா! மீண்டும் என்னை மன்னியுங்கள். இந்த குறியீடுகளையும் நான் இதற்கு முன் என் நாட்டினில் நான் கண்டதில்லை. வேறு ஏதாவது எண்கள் இருக்கின்றனவா?" என்று கூறி அவரிடம் அந்த பலகையை திருப்பிக் கொடுத்தான்.
அதைக் கேட்ட அந்த இந்திய அறிஞரும் கோபம் அடைந்து "உனக்கு கணக்கு தெரியவில்லை. நான் எழுதி இருப்பதே உண்மையான கணக்கு! கற்க வேண்டும் என்றால் இவற்றைக் கற்றுக் கொள்" என்றார்.
அப்பொழுது அந்த ரோம் நாட்டு அறிஞர் " அவனுக்கு கணக்கு தெரியவில்லை என்பதை நான் ஒப்புக் கொள்ளுகின்றேன். ஆனால் உமது கணக்கு தான் சரியான கணக்கு என்பதை நான் ஒரு காலும் ஒப்புக் கொள்ள முடியாது. நீரும் அந்த சிறுவனைப் போலவே தவறான கணக்கை கற்று வைத்து உள்ளீர். எனது கணக்கே சரியான கணக்கு" என்று இந்திய நாட்டு அறிஞருடன் வாக்குவாதத்தை ஆரம்பித்தார்.
மிகு விரைவில் அவர்கள் இருவரும் காரசாரமாக சண்டை இட்டுக் கொள்ள ஆரம்பித்தனர். அதை கண்டு என்ன செய்வது என்று தெரியாமலும் தான் இது வரை கற்று இருந்த கணக்கு தவறானதோ என்ற எண்ணத்தாலும் மனம் உடைந்து போய் அந்தச் சிறுவன் ஒரு ஓரமாய் நின்று அவர்களை சோகமாய் கண்டு கொண்டு இருந்தான்.
அந்தச் சமயம் தான் அந்த சாது அங்கு வந்து சேர்ந்தார். இரு அறிஞர்கள் சண்டை இட்டுக் கொண்டு இருக்கின்றனர். ஒரு சிறுவனோ சோகமாய் நின்றுக் கொண்டு இருக்கின்றான். ஏதோ பிரச்சனை என்பதை அறிந்த அவர்
"ஏன் குழந்தாய் சோகமாய் நின்றுக் கொண்டு இருக்கின்றாய். என்ன நடந்தது" என்று பாசத்துடன் அந்த சிறுவனிடம் விசாரித்தார்.
நடந்த அனைத்தையும் அவன் அவரிடம் எடுத்து உரைக்க அவர் சிரித்தார்.
பின்னர் " அறிஞர்களே சண்டை இட்டது போதும். தீர்வுக் காணும் நேரம் வந்து விட்டது" என்றுக் கூறியவாறே அவர்களை நோக்கிச் செல்ல ஆரம்பித்தார்.
அவர்கள் அந்த சாதுவைக் கண்டு சண்டை இடுவதை நிறுத்தி விட்டு அவரின் அருகே வந்த உடன் தொலைவில் ஒரு கூடையில் ஆறு ஆப்பிள்களை வைத்து விட்டு அவர் அவர்களை நோக்கி " அறிஞர்களே அதோ அந்த கூடையில் உள்ள பழங்களில் இருந்து ஒவ்வொருவரும் இரண்டு பழங்களைக் எடுத்து வாருங்கள்" என்றார்.
அவர்களும் அவர் சொன்ன மாதிரியே சென்று இரண்டுப் பழங்களை எடுத்து வந்தனர்.
அப்புறம் அவர் அந்த சிறுவனை நோக்கி" சிறுவனே! நீயும் போய் அந்த கூடையில் இருந்து இரண்டு பழங்களை எடுத்து வா பார்போம்" என்றார்.
அவனும் அவர் சொன்ன மாதிரியே இரண்டு பழங்களை எடுத்து வந்தான்.
சாது சிரித்தார்.
"அறிஞர்களே!!! சற்று நேரம் வரை தனது கணக்குத் தான் சரியானது. அடுத்தவரின் கணக்கு தவறானது என்று சண்டை இட்டுக் கொண்டு இருந்தீர்கள். ஆனால் இப்பொழுது நான் இரண்டு பழங்கள் என்று கூறிய பொழுது அனைவரும் சரியாக இரண்டு பழங்களையே எடுத்துக் கொண்டு வந்து இருக்கின்றீர். இப்பொழுது சொல்லுங்கள், யார் கணக்கு சரியானது?" என்றார்.
அறிஞர்கள் முழித்தார்கள்.
"நீங்கள் அனைவரும் கற்றக் கணக்கு சரிதான். உங்கள் ஊருக்கு ஏற்றார்ப் போல் வார்த்தைகளில் கணக்கைக் கற்றுக் கொண்டு இருக்கின்றீர்கள். ஆனால் வார்த்தைகளை மட்டுமே கற்றுக் கொண்டு விட்டது தான் தவறாகி போய் விட்டது. வார்த்தைகளை தாண்டி நிற்கும் பொருளினை நீங்கள் மறந்து விட்டர்கள். எப்பொழுது நீங்கள் பொருளினை மட்டும் பார்க்க ஆரம்பிக்கின்றீர்களோ அப்பொழுது தான் நீங்கள் உண்மையிலையே அறிஞர்கள் ஆவீர்கள். அறிந்து கொள்ளுங்கள் மனிதர்களே... கற்றது கை அளவு .. கல்லாதது உலகளவு!!!" என்று கூறி விட்டு அந்த சிறுவனை நோக்கித் திரும்பினார்.
"சிறுவனே நீ என்னுடன் வா. நான் உனக்கு கற்றுத் தருகின்றேன். இவர்கள் இன்னும் கற்க வேண்டியது நிறைய உள்ளது." என்று கூறி விட்டு அந்த சிறுவனை அழைத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தார்.
"அவர்கள் இன்னும் கற்க வேண்டி இருக்கின்றதா?" என்று ஆச்சர்யத்துடன் ஆரம்பித்தான் அந்த சிறுவன்.
"ஆம்! அவர்கள் ஓரளவு கற்றதுமே அவர்கள் கற்றது தான் எல்லை. அதைத் தாண்டி எதுவுமே இல்லை என்ற அகந்தையுள் மாட்டிக் கொள்ளுகின்றனர். அந்த அகந்தை இருக்கும் வரை அவர்கள் கற்ற உண்மையான பொருளை அவர்கள் அறிய முடியாது. அந்த அகந்தை வட்டத்தை அவர்கள் எப்பொழுது உடைக்க கற்றுக் கொள்ளுகின்றார்களோ அப்பொழுது தான் அவர்கள் பிறருக்கு கற்றுத் தர தயாராவார்கள். இந்த அறிஞர்கள் இன்னும் தயாராக வில்லை." என்று கூறி விட்டு தொடர்ந்து நடக்க ஆரம்பித்தார். அந்த சிறுவனும் அவரைத் தொடர்ந்து மகிழ்ச்சியுடன் நடக்க ஆரம்பித்தான்.
இதைப் போன்றே மதங்களும் சரியாக அறியப்படாமல், என் மதம் பெரியது... என் மதம் தான் கடவுளை அடையும் வழி என்று வெறும் வார்த்தைகளாக அறிந்துக் கொள்ளப் பட்டமையால் பல சண்டைகளுக்கும் பிரச்சனைகளுக்கும் அடிக்கோல் இட்டுக் கொண்டு இருக்கின்றன.
அவனை வார்த்தைகளால் அறிய முயலும் மதங்கள் வெறும் மதங்களாய் தேங்கி நின்று விடுகின்றன. இறைவனை வெறும் வார்த்தைகளால் அறிய முடியாது, உணர மட்டுமே முடியும். உணர்தல் அன்பினாலையே முடியும். அன்பே அவனை அடையும் வழி என்பதினை உணர்த்தும் மதங்கள் அவனை அடையும் வழியின் வாயில்கதவாய் நிற்கின்றன. உலகின் அனைத்து மதங்களையும் ஒழுங்காக புரிந்துக் கொண்டோம் எனில் அனைத்தும் ஒரே வழியைத் தான் காட்டுகின்றன என்பதினை அறிவோம்.
தயவு செய்து வார்த்தைகளில் இறைவனை தேட வேண்டாம். அவன் தென் பட மாட்டான்.
வார்த்தைகளைக் கடந்து பொருள் நிற்பதுப் போல, மதங்களைக் கடந்து இறைவன் நின்று கொண்டு இருக்கின்றான்.
வாழ்வின் பொருளாய்.!!!
பரம் பொருளாய்!!!
அதை உணர்ந்துக் கொள்வோம். அப்படியே அவனையும் அன்பினால் அறிந்து கொள்வோம்!
அன்பே இறைவன்!!!
No comments:
Post a Comment