Sunday, 24 June 2018

ஆக்கம்: கவியரசர் கண்ணதாசன்


எண்ணற்ற தமிழர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பவர் கவியரசர் கண்ணதாசன்.
அறிமுகம் தேவையில்லாத தமிழர்களில் அவரும் ஒருவர்!
அவரைத் தெரியாது என்று சொல்பவன் தமிழனே அல்ல!
தான் படித்ததையெல்லாம் பாட்டாக்கியவர் அவர்
தன் அனுபவத்தையெல்லாம் எழுத்தாக்கியவர் அவர்!
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு, ஒரு கோல மயில் என் துணையிருப்பு என்று தன்னைப் பற்றிய உண்மைகளை வெளிப்படையாகச் சொன்னவர் அவர்
என்னைப்போல் வாழாதீர்கள். என் எழுத்துக்களைப்போல் வாழுங்கள் என்று தன்மையாகச் சொல்லிவிட்டுப் போனவர் அவர்!
உலகம் பிறந்தது எனக்காக, ஓடும் நதிகளும் எனக்காக' என்று சொல்லி உற்சாகப் படுத்திவிட்டுப்போனவர் அவர்!
சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு, தென்றலே உனக்கேது சொந்தவீடு' என்று சுதந்திர உணர்வை உண்டாக்கியவர் அவர்!
ஆலயமணியின் ஓசையைக் கேட்க வைத்தவர் அவர்!
வண்ண வண்ணப் பூவில் காயை வைத்தவனைக் காட்டியவர் அவர்!
ஆறுவது சினம் கூறுவது தமிழ் அறியாத முருகனா நீ' என்று ஆண்டியின் கதைக்குப் பாட்டெழுதி அசரவைத்தவர் அவர்.
ஆறு மனமே ஆறு, அந்த ஆண்டவன் கட்டளை ஆறு என்று ஆண்டவனின் கட்டளையைச் சொன்னவர் அவர்!
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது, வல்லவன் வகுத்ததடா' என்று சொல்லி விட்டுச் சென்றவர் அவர்.
அவனைக் கண்டால் வரச் சொல்லடி, அன்றைக்குத் தந்ததைத் தரச் சொல்லடி' என்று கண்ணனை நம் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தியவர் அவர்!
ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நானறிவேன்' என்று காதலுக்கு பொருள் சொல்லி விட்டுப் போனவர் அவர்!
மண்பார்த்து விளைவதில்லை, மரம் பார்த்துப் படர்வதில்லை என்று கன்னியரைப் பூங்கொடிகளுக்கு உவமையாகச் சொன்னவர் அவர்.
சொல்லலெல்லாம் தூய தமிழ்ச் சொல்லாகுமா? சுவையெல்லாம் இதழ் சிந்தும் சுவையாகுமா என்று மங்கையரின் மேன்மையைச் சொன்னவர் அவர்!
பெண்ணாகப் பிறந்து விட்டால் கண்ணுறக்கம் இரண்டு முறை' என்று பெண்களின் துயரத்தை விளங்க வைத்தவர் அவர்
மனிதன் மாறிவிட்டான், மதத்தில் ஏறிவிட்டான், என்று இன்றைய மனிதனின் நிலைப்பாட்டைச் சொல்லி விட்டுப் போனவர் அவர்!
சின்ன மனிதன், பெரிய மனிதனின் செயலைப் பார்த்து சிரித்துவிட்டுப் போனவர் அவர்!
ஒன்று எங்கள் ஜாதியே, ஒன்று எங்கள் நீதியே, உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களேயென்று உழைப்பை மேன்மைப் படுத்தியவர் அவர்!
மாபெரும் சபையினில் நீ நடந்தால் மாலைகள் விழ வேண்டும், ஒரு மாற்றுக் குறையாத மன்னவன் இவனென்று பலர் போற்றிப் புகழ வேண்டும் என்று தனிமனித உயர்விற்கும் நேர்மையான வாழ்விற்கும் வழி சொல்லிவிட்டுப்போனவர் அவர்.
வீடுவரை உறவு, வீதிவரை மனைவி' என்று நிலையாமைத் தத்துவத்தைச் சொன்னவர் அவர்.
போனால் போகட்டும் போடா, இந்தப் பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா என்று வாழ்க்கையை வரிகளாக்கியவர் அவர்!
"இது நமக்காக எழுதிய பாடல்" என்று பலரையும் மகிழ்வு கொள்ளும்படி அல்லது உருகிப்போகும்படி எண்ணற்ற அற்புதமான பாடல்களை எழுதியவர் அவர்!
அவருடைய புகழ் வாழ்க! அவரைப்பற்றிய நினைவுகள் வளர்க!
---------------------------------------------------------------
பிறந்த நாளிற்கு வந்தவர்களை சும்மா அனுப்பலாமா? இனிப்பைப் பாட்டாகக் கொடுத்திருக்கிறேன். பாடல் வரிகள்
ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது
இந்த உலகம் பாடும் பாடல் ஓசை காதில் விழுகிறது
(ஒளிமயமான)
நால்வகை மதமும் நாற்பது கோடி மாந்தரும் வருகின்றார் - அந்த
நாயகன் தானும் வானிலிருந்தே பூமழை பொழிகின்றார்
நால்வகை மதமும் நாற்பது கோடி மாந்தரும் வருகின்றார் - அந்த
நாயகன் தானும் வானிலிருந்தே பூமழை பொழிகின்றார்
மாலை சூடி எங்கள் செல்வி ஊர்வலம் வருகின்றால்
வாழ்க வாழ்க கலைமகள் வாழ்க என்றவர் பாடுகின்றார்
(ஒளிமயமான)
குங்குமச் சிலையே குடும்பத்து விளக்கே குலமகளே வருக - எங்கள்
கோவிலில் வாழும் காவல் தெய்வம் கண்ணகியே வருக
குங்குமச் சிலையே குடும்பத்து விளக்கே குலமகளே வருக - எங்கள்
கோவிலில் வாழும் காவல் தெய்வம் கண்ணகியே வருக
மங்கலச் செல்வி அங்கயர்க்கண்ணி திருமகளே வருக
வாழும் நாடும் வளரும் வீடும் மணம்பெறவே வருக
(ஒளிமயமான)
====================================================================
2
நாத்திகம், பகுத்தறிவு பற்றி கவிஞர் கண்ணதாசன்.
ஈ வே ரா சேலத்தில் நடத்தியது போல் சென்னையிலும் ஒரு ஆபாச ஊர்வலம் நடத்த முயன்ற போது கண்ணதாசன் அவர்களால்
எழுதப்பட்ட கட்டுரை இது. இதைத் தொடர்ந்து அந்த ஆபாச ஊர்வலம் கைவிடப்பட்டது.
(கவிஞர் கண்ணதாசனின் எண்ணங்கள் ஆயிரம் என்ற நூலிலிருந்து!)
நான் ஒரு இந்து. இந்து என்பதில் நான் பெருமைப்படுகிறேன்.
நான் எல்லா மதத்தினரையும் மனமார நேசிக்கிறேன்; ஆனால் இந்துவாகவே வாழ விரும்புகிறேன்.
நான் கடவுளை நம்புகிறேன்; அவனைக் காட்டியவனைப் போற்றுகிறேன்;
அந்தக் கடவுளைக் கல்லிலும், கருத்திலும் கண்டு வணங்குகிறேன்.
ஆன்மா இறைவனோடு ஒன்றிவிடும்போது, அமைதி இருதயத்தை ஆட்சி செய்கிறது.
நாணயம், சத்தியம், தர்மம் இவற்றின் மீது நம்பிக்கை பிறக்கிறது.
நேரான வாழ்க்கையை இருதயம் அவாவுகிறது. பாதகங்களை, பாவங்களை கண்டு அஞ்சுகிறது.
குறிப்பாக ஒரு இந்துவுக்குத் தன் மத அமைப்பின் மூலம் கிடைக்கும் நிம்மதி, வேறு யாருக்கும் கிடைப்பதில்லை.
கடைசி நாத்திகனையும், அது ஆத்திகன் என்றே அரவணைத்துக் கொள்கிறது.
என்னை திட்டுகிறவன்தான் அடிக்கடி நினைத்துக் கொள்கிறான்; ஆகவே அவன்தான் முதல் பக்தன்” என்பது இறைவனின் வாக்கு.
இந்து மதத்தைப்போல் சகிப்புத்தன்மை வாய்ந்த மதம் உலகில் வேறு எதுவும் இல்லை .
நீ பிள்ளையாரை உடைக்கலாம்;
பெருமாள் நாமத்தை அழிக்கலாம்;
மதச்சின்னங்களை கேலி செய்யலாம்;
எதைச் செய்தாலும் இந்து சகித்துக் கொள்கிறான்.
ஏதோ பரம்பரையாகவே பகுத்தறிவாளனாகப் பிறந்தது போல் எண்ணிக் கொண்டு, பாத்திரத்தை நிரப்புவதற்காகவே சாஸ்திரத்தைக் கேலி செய்யும் பகுத்தறிவுத் தந்தைகள் இஸ்லாத்தின் மீதோ, கிறிஸ்துவத்தின் மீதோ கை வைக்கட்டும் பார்க்கலாம்.
கடந்த நாற்பது வருசங்களில் ஒரு நாளாவது அதற்கான துணிவு ஏற்பட்டதாக தெரியவில்லையே!
பாவப்பட்ட இந்து மதத்தை மட்டுமே தாக்கித் தாக்கி, அதை நம்புகிற அப்பாவிகளிடம் ‘ரேட்டு ‘ வாங்கிச் சொத்துச் சேர்க்கும் ‘பெரிய ‘ மனிதர்களைத்தான் நான் பார்த்திருக்கிறேன்.
அவர்கள் பேசுகிற நாத்திக வாதம், அவர்கள் ‘குடும்பம் நடத்தும் வியாபாரம்’ என்பதை அறியாமல், வாழ்கையையே இழந்து நிற்கும் பல பேரை நான் அறிவேன்.
பருவ காலத்தில் சருமத்தின் அழகு மினுமினுப்பதைப் போல், ஆரம்ப காலத்தில் இந்த வாதத்தைக் கேட்டு ஏமாந்தவர்களில் நானும் ஒருவன்.
நடிகையின் ‘மேக் அப்’ பைக் கண்டு ஏமாறுகிற சராசரி மனிதனைப்போல், அன்று இந்த வாதத்தைக் கேட்டு ஏமாந்தவர்களில் நானும் ஒருவன்.
அந்த கவர்ச்சி எனக்கு குறுகிய காலக் கவர்ச்சியாகவே இருந்தது இறைவனின் கருணையே!
என்னை அடிமை கொண்ட கண்ணனும், ராமனும் இன்று சந்திர மண்டலத்துக்குப் பயணம் போகும் அமெரிக்காவையே அடிமைக்கொண்டு, ஆன்மீக நெறியில் திளைக்க வைத்திருக்கிறார்கள்.
அமெரிக்காவை விடவா ஈரோடு பகுத்தறிவில் முன்னேறிவிட்டது?
வேண்டுமானால் ‘பணத்தறிவில்' முன்னேறிவிட்டது என்று சொல்லலாம்.
ஆளுங் கட்சியாக எது வந்தாலும் ஆதரித்துக் கொண்டு, தன் கட்சியும் உயிரோடிருப்பதாகக் காட்டிக் கொண்டு, எது கொடுத்தாலும் வாங்கிக் கொண்டு வாழ்கையை சுகமாக நடத்துவதற்கு, இந்த நாத்திக போலிகள் போட்டிருக்கும் திரை, பகுத்தறிவு!
உலகத்தில் நாத்திகம் பேசியவன் தோற்றதாக வரலாறு உண்டே தவிர,வென்றதாக இல்லை.
இதை உலகமெங்கும் இறைவன் நிரூபித்துக் கொண்டு வருகிறான்.
அவர்கள் எப்படியோ போகட்டும்.
இந்த சீசனில் வாழ்ந்து கொண்டிருக்கும் சில மனிதர்கள் கோவில்களுக்கு முன்னால் பகுத்தறிவு விளையாட்டு விளையாடிப் பார்க்கலாம் என்று கருதுகிறார்கள். இதை அனுமதித்தால், விளைவு மோசமாக இருக்கும்.
நம்பிக்கை இல்லாதவன் கோவிலுக்கு போக வேண்டாம். நம்புகிறவனை தடுப்பதற்கு அவன் யார்?
அப்பாவி இந்துக்கள் பேசாமல் இருக்க இருக்கச் சமுதாய வியாபாரிகள் கோவிலுக்கு முன் கடை வைக்க தொடங்குகிறார்கள்
.
வெள்ளைக்காரனின் கால்களை கட்டிப்பிடித்துக் கொண்டு ‘போகாதே போகாதே என் கணவா ‘ என்று பாடியவர்களுக்கு நாட்டுப் பற்று எங்கிருந்து வரும்?
நாட்டு பற்று இல்லாதவர்களுக்கு தெய்வப் பற்று எங்கிருந்து வரும்?
தெய்வப் பற்று இல்லாதவர்களுக்கு நாணயம், நேர்மை இவற்றின் மீது நம்பிக்கை எங்கிருந்து வரும்?
இந்த நாலரை கோடி (அன்று) மக்களில் நீங்கள் சலித்துச் சலித்து எடுத்தாலும், நாலாயிரம் நாத்திகர்களைக் கூட காண முடியாது.
பழைய நாத்திகர்களை எல்லாம் நான் பழனியிலும், திருப்பதியிலும் சந்தித்துக் கொண்டிருக்கிறேன்! ஆகவே இந்த காரியங்களுக்கு யாரும் துணை வர மாட்டார்கள்.ஆனால் இதை அனுமதித்தால் விளைவுகள் மோசமாக இருக்கும்

No comments:

Post a Comment