Friday, 29 June 2018

உயிர் நீத்தல்

அன்றுதான் அவர்கள் அங்கு குடிவந்தார்கள், மூவருமே திருமணமாகதவர்கள் என்று அந்த வீட்டை குடக் கூலிக்கு விடும் சொந்தக் காரரிடம் தரகர் கூறியதை நினைவு கூர்ந்த எனக்கு சற்று ஆறுதலாக இருந்தது. பிரம்மச்சாரிகள்  என்றால் சோம்பேறிகள் என்பது என் ஆழமான கருத்து. இருப்பினும் இவர்களிடமும் சற்று எச்சரிக்கையாகத்தான் இருக்க வேண்டும். இவர்களிலும் சிலர்
சுத்தபத்தமாக, சுறுசுறுப்பானவர்களாக, எதையுமே சட்டென்ன முடித்து விடும் ஆர்வமுள்ளவர்களாக இருப்பார்கள். எனவே, கவனம் தேவை என்று என் தாய் அடிக்கடி கூறும் அறிவுரைகள் நினைவுக்கு வந்தன.

சமையலறை ஜன்னல் வழியாக அவர்களை நோட்டமிட்டபடி இருந்தேன். சிறிது நேரம் ஏதோ பேசிகொண்டிருந்த அவர்களில் ஒருவன் கட்டிலில் படுக்கையை விரித்து படுத்துவிட்டான். மற்றொருவன் பெட்டியை திறந்து அவனது உடுப்புக்களை எடுத்துக் கொண்டு குளியலறையில் நுழைந்து கொண்டான். பின்னொருவன் சிறிது நேரம் சுவரை வெறித்து விட்டு ஒரு சோம்பலில் தன்னை விடுவித்து கொண்டு எழுந்தவன் தங்களுடன் கொண்டு வந்த பெரிய அட்டை பெட்டியை திறந்து சில பாத்திரங்களையும், வேறு சில சாமான்களையும் எடுத்து வெளியில் பரப்ப தலைப்பட்டான். இதற்குள் குளித்து வந்தவன் அவனுடன் உதவ இருவரும் அனைத்தையும் எடுத்துக் கொண்டு அடுக்களைக்குள் நுழைந்தனர். நான் சட்டென்று கால்களை மாற்றி சற்று நகர்ந்துகொண்டேன். நல்ல வேளை அவர்கள் என்னை கவனிக்கவில்லை.

நாட்கள் மெல்ல மெல்ல நொண்டியடித்து நகர்ந்து மாதத்தின் கால்களை கவ்வி விட்டது. நானும் வழக்கப்படி அவர்களை கண்காணித்தபடி இருந்தேன். ஆனால் விதி யாரை விட்டது? இறைவன் படைப்பிலும், முடிவிலும் ஒரு புள்ளி பிசகாமல் தன் கடமையை செய்து கொண்டே தான் இருக்கிறான். அதை அவனைத் தவிர பிற உயிர்கள்தான் புரிந்து கொள்ளாமல் தன் பெருமையை நினைத்து தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். இத்தத்துவ விளக்கங்கள் என்னுள் எழக்காரணம், அன்று காலை அம்மூவருள் ஒருவன் பெரிய ஒட்டடை கம்பை எடுத்து வந்து அறையின் மூலையில் நிறுத்தியதுதான். அதைக் கண்டதும் என் அடி வயிறு கலங்கியது. நான் நினைத்தபடி அன்று மாலை என் வேளை நெருங்கி விட்டது. அவன் அடித்த அடியில் நானும் என் உறவினர்களும், நிலத்தில் வீழ்ந்தோம். அடிபட்டவுடன் எழுந்து ஓடக் கூட முடியாத கால்கள் எட்டிருந்தும் என்ன பயன் ? ஒவ்வொன்றும் ஒருபக்கம் இழுக்க என் கடைசி மூச்சை கையில் பிடித்தபடி  ஆண்டவனிடம் "இனி அடுத்த பிறவியென்று ஒன்று இருந்தால் இந்த இரண்டு கால் மனிதர்களுடன் எங்களை ஒன்று சேர்ந்து வாழ விடாதே" என்று பிரார்த்திக்கும் போது என் உயிர் பிரிந்தது.

No comments:

Post a Comment