Tuesday, 19 June 2018

அப்பமும் முதலும்

வயது முதிர்ந்த மூதாட்டி ஒருத்தி உணவு விடுதி நடத்திவந்தாள். காலையில் அவள் விடுதியில் கிடைக்கும் அப்பம் மிகமிகச் சுவையானதாக இருக்கும். அந்த விடுதிக்கு வரும் அனைவரும் அதனை விரும்பிக் கேட்டுவாங்கி உண்பர். அப்பத்துக்குச் சர்க்கரையும் பாலும் துணைப் பொருள்களாக அளிப்பாள்.
ஒரு சமயம் சர்க்கரை விலை சற்றுக் கூடியது. அப்பத்திற்குப் பெறுகிற விலைக்குச் சர்க்கரை கொடுப்பது அம்மூதாட்டிக்குச் சற்றுச் சிறமமாக இருந்தது. அதிகவிலை கொடுத்துச் சர்க்கரை வாங்கினாலும், அப்பத்தின் விலையைக் கூட்ட அவள் விரும்பவில்லை. எனவே, ‘அப்பத்திற்குச் சர்க்கரை இல்லை’ எனக் கூற விரும்பினாள்.
கடைக்கு வழக்கமாக வந்து சாப்பிடும் ஒருவரை அழைத்து. ‘அப்பத்துக்குச் சர்க்கரை இல்லை’ என அறிவிப்பு அட்டை ஒன்றை எழுதிவரச் சொன்னாள். அவர் அதன் அடிப்படையில்
“இன்று முதல் அப்பத்துக்குச் சர்க்கரை இல்லை” என ஓர் அறிவிப்பு அட்டை எழுதி வந்தார். அம்மூதாட்டி அதனைக் கடையில் தொங்கவிட்டாள்.
காலையில் சாப்பிடவந்த ஒருவர் ஓர் அப்பம் வாங்கிச் சாப்பிட்டார். சர்க்கரை இல்லாமலே சாப்பிட்டார். இரண்டாவதாக ஒர் அப்பம் கேட்டார். அவள் இரண்டாவது அப்பம் கொடுத்தாள். அவர் “அம்மா! அப்பத்துக்கு சர்க்கரைக் கொடு” எனக் கேட்டார்.
அம்மூதாட்டி “அறிவிப்புப் பலகையைப் பார்த்தீர்களா?” என்று கேட்டாள். அப்பம் வாங்கியவர் “பார்த்தேன்! படித்தேன்! அதன் பிறகுதான் சர்க்கரை கேட்டேன்” என்று கூறினார்.
“அதைப் படித்துவிட்டுமா கேட்கிறீர்?” என்றாள் அம்மூதாட்டி.
“ஆமாம்... அறிவிப்பு அட்டையில் என்ன எழதி இருக்கிறது? ‘இன்று முதல் அப்பத்துக்குச் சர்க்கரை இல்லை’ என்றுதானே எழுதியிருக்கிறது. இரண்டாவது அப்பத்துக்குத்தானே நான் சர்க்கரை கேட்கிறேன்” என்றார்.
“ஐயா! அப்படியா பொருள் கொள்கிறீர்கள்? சரி! உங்களுக்கு இன்று சர்க்கரை கொடுத்து விடுகிறேன். நாளை அறிவிப்பு அட்டையில் எழுதியிருப்பதை மாற்றி விடுகிறேன்” என்று கூறினாள்.
அறிவிப்பு அட்டை எழுதியவரை அழைத்தாள். ஐயா, அறிவிப்பு அட்டையில் “அப்பத்துக்கு இன்றுமுதல் சர்க்கரை இல்லை” என எழுதிவிடுங்கள் என்றாள். அந்த நாள் முதல் அப்பத்துக்குச் சர்க்கரை இன்றி விற்கத் தொடங்கினாள். காலைச் சிற்றுண்டிச் சிக்கல் இவ்வாறு தீர்ந்தது.

No comments:

Post a Comment