Wednesday, 27 June 2018

நாகம்

வனுக்கு, இப்போது பஞ்சாலையின் இதயமான `கார்டிங்’ பிரிவின் இயந்திரப் பராமரிப்புத் துறையில் பணி. துறையில் மொத்தம் இரண்டு குழுக்கள். இயந்திரத்தை அக்கு அக்காகக் கழட்டி மாட்டுபவரை பொருத்துநர் எனலாமா? அல்லது... கழட்டி? பெருசுகள்கூட ``ஆ...மா இவுரு பெரிய கழட்டி, போடா மூடிட்டு!’’ என்பார்கள்.

இந்தப் பிரிவின் `கழட்டி’ வின்சென்ட். கழட்டிக்கு ஓர் `எடுபிடி’ ஜெயக்குமார். எடுபிடிக்கு ஓர் `அல்லக்கை’ குமரவேல். ஆக, மூவர் உள்ளிட்ட `பழுதுபார்க்கும் குழு’. இரண்டாவது குழு `சுத்தக்குழு’. இந்தக் குழுவினர் ஓடிக்கொண்டிருக்கும் இயந்திரங்களை முறைவைத்து வாரம் ஒருமுறை நிறுத்தவேண்டும். பிறகு அவற்றின் உடைகளைக் களைந்து, `கம்ப்ரசர்’கொண்டு காற்றில் குளிப்பாட்டவும், இண்டு இடுக்குகளில் சேர்ந்த பஞ்சும் தூசுமான அழுக்குத் திரிகளை நீக்கித் துடைக்கவும் வேண்டும். பற்சக்கரங்களின் பல்லிடுக்குகளில் கெட்டித்து இறுகிப்போய் உயவு நெய்க்கட்டிகள், ஓடி ஓடித் தேய்ந்து உதிர்ந்த உலோகத்துகள்கள், வறண்ட பிசிறுகள் போன்றவற்றை மிகக் கவனமாகக் கிளறி எடுத்துத் துடைத்துவிட்டு, புதிய உயவுக் களிம்பை அதற்கான பிரத்யேகமான துப்பாக்கி வாயிலாக வார்க்க வேண்டும்.

இவன் தலைமையிலான இந்தக் குழுவில் மொத்தம் ஐந்து பேர். இரண்டு பொடியன்கள், இரண்டு பெருசுகள். பெருசுகள் இரண்டும் சுவாரஸ்யக் கேந்திரங்கள். அதிலும் அந்த முருகன் என்கிற அக்கிரமக்காரக் கிழவனின் பேச்சு இருக்கிறதே... பையன்கள், கிழவனின் பேச்சுக்கு போதையாகித் திரிந்தார்கள். பேசுவது எல்லாமே இரட்டை அர்த்தம்தான்.
காலை 7 மணி ஷிஃப்ட்டுக்கு, வீட்டிலிருந்து 6:30 மணிக்கு சைக்கிளை எடுத்திருக்க வேண்டும். 6:30 மணிக்கு சைக்கிளை எடுக்கவேண்டுமென்றால், 6:15 மணிக்குச் சாப்பிட்டிருக்க வேண்டும். 6:15 மணிக்குச் சாப்பிட வேண்டுமென்றால், 6 மணிக்குக் குளித்திருக்க வேண்டும். 6 மணிக்குக் குளிக்க வேண்டுமென்றால், 5:30 மணிக்கு எழுந்திருக்க வேண்டும். இவனுக்கு 5:30  மணிக்கு  எழுவதில் சிரமம் எதுவுமில்லை.

இதற்குமுன் பார்த்த வேலைக்கு அதிகாலை 3:30 மணிக்கு  எழவேண்டும். செய்தித்தாள் போடும் வேலை. கேரளத்திலிருந்து போத்தனூருக்கு 4 அல்லது 4:15 மணிக்கு வரும் ரயிலிலிருந்து `மாத்ருபூமி’ பொட்டலத்தை எடுத்துக்கொண்டு நிலையத்தின் வாசலுக்கு வந்தால், பெட்டிக்கடைக்காரர் ஏற்கெனவே பிரித்து வைத்திருக்கும் தினமணியையும் இந்தியன் எக்ஸ்பிரஸையும் கொடுப்பார். அவற்றையும் வாங்கிக்கொண்டு வந்து ஏதாவது ஒரு கடை வாசலில் உட்கார்ந்து கூடுதல் பக்கங்கள், துண்டுப்பிரசுரங்கள், இணைப்புகளைச் சேர்த்து எண்ணி, தரையோடு ஒரு தட்டு, பக்கவாட்டில் ஒரு தட்டுத் தட்டிச் சேர்த்து, சைக்கிளில் கட்டிக்கொள்ள வேண்டும்.

சைக்கிளை ஓட்டியபடியே கையை நீட்டி உருவினால், தாள் கிழியாமல் வர வேண்டும். ரங்கசாமி அண்ணனெல்லாம் மழைக்காகிதத்தையும் சேர்த்துக் கட்டியிருப்பார். மழை வந்தாலும் நனையாது. உருவினாலும் புதுப்பணம் மாதிரி மணக்க மணக்க வரும். எந்த வீட்டுக்கு தினமணி, எந்த வீட்டுக்கு இந்தியன் எக்ஸ்பிரஸ் என நினைவுவைத்துப் போட வேண்டும். ஆங்கிலப் பள்ளிக்குப் போகும் பையனின் சீருடையைப் பார்த்து இந்தியன் எக்ஸ்பிரஸைப் போட்டுவிட்டு அடுத்த நாள் அந்தப் பையனின் தாத்தாவிடம் இவன் வாங்கிக்கட்டிக்கொண்ட வசவு இருக்கிறதே..! எந்த வீட்டுக்கு உள்ளே போட வேண்டும், எந்தெந்த வீடுகளில் கதவில் செருக வேண்டும், எல்லாவற்றையும் நினைவுவைத்திருக்க வேண்டும். மழை வந்தால் போச்சு, `நனைந்த தாளில் செய்திகளை எப்படிப் படிக்க முடியும்?’ எனக் கேட்டு, காசு தராமல் தவிர்ப்பார்கள். பிறகு நாய்கள் தொல்லை. பழகும்வரைதான். அப்புறம் வாலாட்டும்.

 நல்ல வேலைதான். சின்னச்சின்னப் பிரச்னைகளும் இருக்கத்தான் செய்யும். ஆனால், இவன் அம்மாவைப் பொறுத்தவரை உலகத்திலேயே கௌரவமான தொழில் என்றால், அது பஞ்சாலையில் பணிபுரிவதுதான்.

மோகண்ணன் ``எங்க மில்லுல ஆளெடுக்குறாங்க’’ என்றதும்

``எப்படியாவது இவனை அங்கே சேர்த்துவிட்ரு மோகா’’ என்று சொன்னதோடு மட்டுமல்லாது, ``கூடவே போ’’ என்று அனுப்பியும்விட்டது.

சேர்ந்த புதிதில் 11 மணிக்கு மதியச் சாப்பாட்டு நேரத்தில் வெள்ளியங்கிரியண்ணன், ``ஏனப்பா, உன்ற சோத்துமூட்டை எங்கியப்பா? எடுத்தா போ’’ என்றார், அவருடைய ஐந்து அடுக்குகளைப் பிரித்தவாறு.

இவன், வாரச்சீட்டு வசூல்செய்பவர் வைத்திருப்பது போன்ற கிச்சுப்பைக்குள்ளிருந்து சின்ன டிபன்பாக்ஸை எடுக்கவும், சிரித்தார்.

``தம்பி... வூட்ல என்ன இருந்தாலும் சரி,  பழைய சோறும் பச்சமொளகாயானாலும் அடுக்குல கொண்ட்டு வரணும் தெரியுமா?”

இவன் பதில் ஒன்றும் சொல்லாமல் சாப்பிட ஆயத்தமானான். வெள்ளை உப்புமா. ஆங்காங்கே கடுகு தெரிய அழகாக இருந்தது. அதைப் பார்த்ததும் கோபித்துக்கொண்டார்.

``அடே... ஆர்றாவன் திருவாத்தானாட்டாம்.’’

“தம்பி... மில்லுக்கு வேலைக்குச் சேந்தாச்சுன்னா பஞ்ச நாம திங்கற மாதிரியிருக்கணும். பஞ்சு நம்பள தின்னுறக் கூடாது, புரியுதா?’’

ஒரு கிண்ணத்துச் சாப்பாட்டில் குழம்பை ஊற்றி, இவன் பக்கமாகத் தள்ளி ``ரெண்டையும் தின்னோணும் சரியா?’’ என்று ஏறக்குறைய மிரட்டினார்.

நூற்றுக்கு நூறு சரி. `மில்லுக்காரன் சாப்பிடுற மாதிரி’ என்றொரு வழக்குண்டு. அப்படிச் சாப்பிட்டால்தான் மாடு மாதிரி பாடுபட முடியும். மாதிரியெல்லாம் இல்லை மாடேதான்! படுத்த அடுத்த நிமிடத்தில் தூங்கிப்போவதும் இந்த உழைப்பு தரும் வரம்தான். அசதியென்றால் மெஷினை இறக்கி மாட்டும் வாரத்தில் வரும் அசதிபோலிருக்க வேண்டும். தோளும் நெஞ்சுப்பட்டையும் கெண்டைக்காலும் விரல்களும் தினவுக்குத் தகுந்த வேலை செய்து விடைத்திருக்க, குளிர்ந்த நீரில் குளித்துவிட்டு வந்தால் அம்மாவோ அக்காளோ புதுப்பொண்டாட்டியோ துண்டை எடுத்துத் தர, முழுவதும் ஈரம் உலராத உடலோடு ஆவி பறக்கும் சோற்றில் கையை வைப்பதொரு சுகமென்றால், வெயிலில் சுக்காய்க் காய்ந்த பனியனும் வேட்டியும் தரும் மிதவெப்பத்தோடு குளிர்ந்த வெறுந்தரையில் தலையணையை இட்டு படுப்பது ஒரு சுகம். அப்போதுதான் அவள் கேட்டாள். இவன்தான் தொடங்கினான்...

``ஏதாச்சும் கேளுபுள்ள வாங்கித்தர்றேன்.’’

``ஒண்ணும்வேண்டா!’’

``அட கிறுக்கீ... கேள்றீன்றேன்!’’

``ம்ம்... வேண்டான்னா சும்மாயிரேன்.’’

``ஓ... ரொம்பத்தான் பண்ணுவா!’’

``அய்யே, ஆமா... பண்றாங்க அஞ்சாறு.’’

``பின்னென்ன, ப்ச், ஏய்... கம்மல் குத்துதுடீ!’’

``அய்யிய்யோ வலிக்குதா? ம்ம்... சரி, நான் ஒண்ணு கேப்பேன். மாட்டேங்காமக் கொண்டாரணும்.’’

``ஏய், சொல்றீ!’’

``நீயி மில்லுக்குள்ளாற பாம்பு புடிப்பியாமா?’’

சின்னப்பையனாக இருக்கும்போது விளையாட பொம்மைகள் கிடையாது. அப்புறம் எப்படி விளையாடுவது? பூச்சி, புழு, கோழி, ஆடு, அணில், ஓணான், குருவி இவற்றோடுதான். அணில், ஓணான், குருவியெல்லாம் இவன் கைக்கு எப்படிச் சிக்கும்? வேடிக்கை பார்க்கத்தான் முடியும். கட்டி வைத்திருக்கும் ஆட்டைத் தொட்டுப்பார்க்கலாம். அடித்துக்கூடப் பார்க்கலாம். அது குதிரை மாதிரி முன்னங்கால் இரண்டையும் தூக்கி முட்டினால், கீழே விழுந்து அலறலாம். தொரத்தொரவென ஊற்றும் அதன் மூத்திரத்தில் கையை நனைத்துச் சிரிக்கலாம். புழுக்கைகளைச் சேகரித்து விளையாடலாம். யாராவது சேவக்கோழியைப் பிடித்து, கொண்டுவந்து காட்டினால், அதன் சொரசொரப்பான செங்கொண்டையைப் பிடித்துத் திருகலாம்.

நெஞ்சில் சேகரித்து வைத்திருக்கும் தானியப் பொதியை அழுத்தி `அரிசீ...’ என்று கண்ணை விரித்துக் கத்தலாம். அவ்வளவுதான். மேயும்போது பிடிக்கப்போனால், பொக் பொக்கெனக் கத்திக்கொண்டே கொத்த வரும். அதனால் பூச்சிகள்தான் பொம்மைகளைவிடவும் சுவாரஸ்யம். சாவி கொடுக்காமலேயே சுருளும் ரயில் பூச்சி! கறுப்பும் மஞ்சளுமான ரயில் பூச்சியைத் தொட்டால் சுருள்வதும் கொஞ்ச நேரம் கழித்து விரிந்து ஊர்வதும் எவ்வளவு ஆச்சர்யம்! சாகும் வரையிலும் சாதுவாகவே இருக்கும் பிள்ளைப்பூச்சி, தொட்டால் தீக்குச்சியை உரசினாற்போல் துளி நெருப்பைச் சிந்தும் தீப்பூச்சி, கருவண்டு, சிவப்புத்தலை பொன்வண்டு, பச்சைப் பொன்வண்ணச் சிறுவண்டு, சிவப்பில் கறுப்புப் பொட்டுள்ள வண்டு, மயில் நிறத்துக் குளவி, சிவப்புத் தலையும் கோடுபோட்ட றெக்கைகளும் உடைய பெரிய ஈ, மஞ்சள் பட்டாம்பூச்சி, ராணி பட்டாம்பூச்சி, மணல் பட்டாம்பூச்சி, உலர்ந்த இலை நிறத்திலும், தளிர்ப்பச்சை நிறத்திலும் தயிர் கடையும் முக்கோணத் தலைப்பூச்சி, தும்பி, வெட்டுக்கிளி, சிறுபாம்பு... சிறு பாம்போடு விளையாடினால் உடம்பெல்லாம் வரிவரியாய்த் தடித்துவிடும். அப்புறம் பொட்டப்புள்ள மூத்திரத்தில் அடுப்புச் சாம்பலைக் கரைத்து அம்மணமாய் நிற்கவைத்துப் பூசிவிடுவார்கள். மறுநாள் சரியாகிவிடும். பாதிப்பு அவள்களுக்கென்றால், நம்முடைய மூத்திரம் கொட்டாங்குச்சியில் குறிபார்த்து அடிக்கும்போது கூச்சமும் மகிழ்ச்சியுமான கலவையால் சிரிப்பு வந்துவிடும்.

அன்றைக்கு சீமைக்கருவேல மரத்திலிருந்து மாட்டுக்கொம்புப் பூச்சிகளைப் பிடித்துவந்து திண்ணையின் வழுவழுப்பான தரையில் தலைகீழாய் நிறுத்திச் சுழலவிட்டுப் பார்த்துக்கொண்டிருந்தபோது, வாசலில் வந்து நின்ற பெண்ணைப் பார்த்தான். அவள் தோளில் தொட்டில் மாதிரி ஒரு மூட்டை. கையில் இருந்த தட்டில் படமெடுத்த நிலையில் ஒரு பாம்பு. ஆர்வம் பொங்க ஓடிப்போய்ப் பார்த்தான். சந்தனக் குங்குமப் பொட்டுடன் பளபளத்து மின்னிய பித்தளை நாகம். அழகோ அழகு! `அப்படியே ஊர்ந்து கீழிறங்கி, இவனது கையில் ஏறிக்கொள்ளாதா?’ என்று ஏக்கமாக இருந்தது. ஆனால், அரளிப்பூவையும் துளசியையும் விளக்கையும் தாண்டி அது நகரவேயில்லை.
84p2_1528793155.jpg
``யம்மா... தாயீ... வாழத்தோட்டய்யங்கோயிலுக்குக் காணிக்க போடம்மா மகராசி!’’

அம்மா குருணையரிசியைக் கொண்டுவந்து அவள் தோளிலிருந்த தொட்டில் பையில் கொட்டும்போது, இவன் கையை நீட்டி நாகத்தைத் தொட்டுப்பார்த்தான். வெயிலிலும் சில்லென்றிருந்தது. இவனுடல் அனிச்சையாகச் சிலிர்ப்பில் உதறிக்கொண்டது.

வனது பள்ளிக்கு ஒருமுறை `பாம்பு மன்னன்’ பார்த்தசாரதி வந்தார். அத்தனை பேரையும் மைதானத்தில் அமரவைத்தார்கள். விதவிதமான பாம்புகளைக் காட்டி. “சாரைப்பாம்புக்கும் தண்ணீர்ப்பாம்புக்கும் விஷமில்லை. பாம்புகளுக்குக் காதுகள் கிடையாது. அவற்றுக்குப் பழிவாங்கத் தெரியாது” என்றெல்லாம் விளக்கிக்கொண்டிருந்தவர், ``யாராவது ஒருத்தர் வாங்க’’ என்றபோது இவன் போனான்.

இவன் கழுத்தைச் சுற்றி மாலையாக ஒரு மலைப்பாம்பை அணிவித்தார். நல்ல பாரமாக இருந்தது. ஒருவித நெடியும். ``ஒண்ணும் செய்யாது தைரியமாப் புடி’’ என்றார். படபடவென பையன்கள் கைகளைத் தட்ட இவன் கண்ணும் நெஞ்சும் விரியச் சிரித்தான். பாம்பு, அம்மாவின் பைபிளில் கெட்டதாகவும் அப்பாவின் சாமிப்படங்களில் நல்லதாகவும் இருந்தது. முருகன் காலடியில் நின்று, இல்லாத கைகளைக் குவித்து வணங்குகிறதே! ஆனால், இந்த மயில் ஏன் அதை மிதித்துக்கொண்டிருக்கிறது? யார் மேலாவது தெரியாமல் கால் பட்டாலே தொட்டுக் கும்பிட வேண்டும் என்கிறார்கள். முருகனும் சிரித்தபடி அதைக் கண்டுகொள்ளாமல் இருப்பது குழப்பமாய் இருக்கிறது. உண்மையில் பாம்பு என்னவாக இருக்கிறதென்று தெரிந்துகொள்ள ஆர்வமாக இருந்தான்.

``சொல்லு... நீயி மில்லுக்குள்ளாற பாம்பு  புடிப்பியா?’’

``ஆரு சொன்னா?’’

``தெரியி!’’

``ஹே... சொல்றீ! ஆரு சொன்னா?’’

``அய்யோ  கத்தாத... அம்மாதான் சொல்லுச்சு. நீ கேட்றாத!’’

``ஓஹோ!’’

`` ‘அவன் ஸ்கூலுக்குப் போயிட்டு வர்றப்ப அணிலு, நாய்க்குட்டி, மைனா, பொரிக்குயிலுன்னு எதையாச்சும் புடிச்சுட்டு வந்திருவான். இப்போ மில்லுக்குள்ள சும்மா இருக்காம பாம்பைப் பிடிக்கிறானாட்டம் தெரியுது பாப்பா. இனிமேலும் சின்னப்பையனாட்டம் அதையெல்லாம் செய்யக் கூடாதுன்னு கட்டன்ரைட்டா சொல்லிரு சாமீ. ஒரு நேரம் மாதிரி ஒரு நேரமிருக்காது’ன்னுச்சு’’

``அதுக்கென்ன இப்போ?’’

``பிடிச்சா கொண்ட்டுவர்றியா... தொட்டுப் பார்க்கணும்.’’

``வளத்தறியா!’’

``அய்யெ ச்சீ!’’

``அது என்னடி, எல்லாப் பொம்பளைங்களும் ஒரே மாதிரி இருக்கீங்க? தொட்டுப் பார்க்கோணும். ஆனா, வளத்தறதுக்கு மனசில்ல.’’

``பயமாவும் இருக்கு. கொஞ்சூண்டு ஆசையாவும் இருக்கு. ஆனா, பிரியமெல்லாம் கெடையாது.’’

இந்தக் கொஞ்சூண்டு ஆசையில்தான் எல்லாமே தொடங்குகின்றன.

ரக்கு ஊர்தியிலிருந்து டன் கணக்கிலான எடையில் இருக்கும் இயந்திரத்தை, செயின் பிளாக் உபயோகித்து இறக்கி, ஆலையில் அதிகாரிகள் குறிப்பிடுகிற இடத்தில் சேர்க்க வேண்டும். காலை 7:30 மணிக்கு எட்டுப் பத்து பையன்களை இவன் வசம் ஒப்படைத்துவிட்டால், மதியம் சாப்பாட்டுக்குக் கைகழுவும்போது சொன்ன இடத்தில் இயந்திரம் உட்கார்ந்திருக்கும் என்பதால், மேற்பார்வை அலுவலர் `கங்காணி’ சம்பத்தும், பராமரிப்புத் துறை அதிகாரி ராஜ்குமாரும் இவனையே சிக்கவைப்பார்கள்.

இவனுக்கும் அது பிடித்திருந்தது. அவ்வளவு பெரிய இயந்திரத்தின் மீது பத்துப் பேரின் புஜபலங்களும் நெம்புக்கோல் போட்டு `ஐலசா’ பாட, அது `க்க்ர்ர்க்க்க்’ என அனத்தி, ஓர் அங்குல தூரம் நகரும். நெம்புகோல் என்பது நீங்கள் நினைப்பதுபோல் கடப்பாரைகள் அல்ல. தடிச்சிகளின் கெண்டைக்கால் அளவுள்ள இரும்புக்குழாய்கள். முந்தைய வாரத்திலேயே பட்டறையில் ஆறுமுகம் சம்மட்டி கொண்டு பட்டை தட்டிய நுனியைக்கொண்ட ஆறடி நீளக்குழாய்கள். பையன்கள் பெரும்பாலும் உடையாம்பாளையத்து கோதாப்பட்டிகளைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். நல்ல பீமராயன்கள்போல் இருக்கும் பையன்கள் அருகில் வந்து பேசும்போதுதான் சிறு வயதுடையவர்கள் என்பதே  தெரியும்.

``நீங்க போத்தனூரா அண்ணா? அங்கே ஒரு பாய் கடை இருக்காமா... நிறைய கறியும் எலும்புமா ருசியா இருக்கும்னு பசங்க சொல்வானுக. ஒருநாள் வரணும்ணா’’ என்பான் மணி.

``வாடா... வந்து நல்லா மலைப்பாம்பு மாதிரி முழுங்கு’’ என்பான் இவன்.

இவர்களைத் தவிர சசி, செந்தில்பிரபு என்கிற இருவர் எப்போதும் இவனுடனே இருப்பவர்கள். `வைண்டிங்’ பிரிவில் பாம்பு புகுந்துவிட்டதாக குணசேகரன் வந்து கூப்பிட்டபோது, அதிர்ந்து இவனைப் பார்த்த சசியும் செந்திலும் ஒருவிதமான பரபரப்போடு கூடவே வந்தார்கள். பெண்கள் மட்டும் வேலைசெய்யும் பிரிவில் ராஜமரியாதையோடு போக யாருக்குக் கசக்கும்? பாம்பையும் பெண்களையும் பார்க்கும் ஆவல், குறுகுறுப்பு எல்லாம் சேர்ந்து சசிக்குச் சிரிப்போ சிரிப்பு!

``அவன் சிரித்துச் சிரித்து பயத்தை மறைக்கிறான்’’ என்று செந்தில் கிண்டல்செய்தான். அங்கே பாம்புக்கு பயந்து பெண்கள் கதவுக்கு வெளியே நிற்க, பெண்களுக்கு பயந்து, தண்ணீர் வெளியேறுவதற்காகப் பதித்திருந்த சிமென்ட் குழாய்க்குள் பதுங்கிச் சுருண்டிருந்தது கண்ணாடிவிரியன். பொன்னிறத்தில் சாம்பல் கலந்தது போன்ற பின்னணியில் கடுங்காப்பி வண்ணத்தில் நெளி நெளியான கோலங்களுடன் பாக்யராஜின் மஃப்ளர்போல் இருந்தது. அம்பு மாதிரி இருந்த தலையின் பக்கவாட்டில், குறுமிளகை பாலீஷ் செய்து வைத்ததுபோல் இரண்டு கண்கள்.

``பெட்ரோல் வேணும்’’ என்றான் இவன்.

கண்ணெடுக்காமல் ``சசி’’ என்றார் கங்காணி.

``கம்புக்குச்சி ஒண்ணை எடுத்துட்டு வாடா தம்பி’’ என்று செந்திலையும் அனுப்பினான். குடுவையில் பெட்ரோலோடு வந்தான் சசி. பெண்கள் இவனைப் பரிகாரம் செய்யும் சாமியாரைப் பார்க்கிற மாதிரி பயபக்தியோடு பார்த்தார்கள். அவர்களில் மையிட்ட பெரிய கண்களுடன் இருந்த ஒருத்தியும் இருந்ததைப் பார்த்தான்.

``எதுக்குடா இவ்வளவு?’’

``வேணும்கிறதை எடுத்துட்டுக் குடுண்ணா.’’

கலர் பென்சிலின் சுற்றளவில் இருந்த நீளமான ஏர் ஹோஸ் குழாயை எடுத்து செந்திலிடம் கொடுத்து, பாம்பு சுருண்டிருந்த சிமென்ட் குழாயின் பின்பக்கமிருந்து நுழைக்கச் சொன்னான். அவன் விரியனின் உடம்பில் முட்டும் வரை குழாயின் முனையைச் செலுத்தி மறுமுனையைக் கொண்டுவந்தான். இப்போது விரியனை நேருக்குநேர் பார்த்தபடி இவனும் பின்பக்கமாக செந்திலும், பெட்ரோல் குடுவையை வாங்கியபடி பெண்களிடம் சொல்வதாக மைக்காரியைப் பார்த்தபடி சொன்னான்.
``பாம்பு வெளியே வேகமா வரும். சத்தம் போட்டு பசங்களை பயமுறுத்திடாதீங்க.”

வாயில் கொஞ்சமே கொஞ்சம் பெட்ரோலைக் கவிழ்த்துக்கொண்டு, குடுவையை மூடி சசியிடம் கொடுத்துவிட்டு, குழாயில் வாயை வைத்து வேகமாய் ஊதினான். பெட்ரோலுக்கு, பாம்பு நெருப்புக்கீடாக பயப்படும். பெட்ரோல் கலந்த காற்று அதன்மேல் படவும் எதிர்பார்த்ததுபோலவே விரியன் படுவேகமாய்க் குழாயிலிருந்து வெளியேறி இவன் பக்கமாய் வந்தது. எதிர்பார்த்ததுபோலவே பெண்கள் அலறினார்கள். எதிர்பாராதவிதமாய் ``ஐயோ பாத்து!’’ என்றாள் மைக்காரி.  தலையை வாகாகப் பிடித்ததும் அழுத்தியிருந்த கம்பை எடுத்துவிட்டு விரியனோடு நடந்தான். பெண்கள், குரலிசைக் கலைஞர்கள்போல ஒரே சுரத்தில் `ஆ’வென்றார்கள். இவனுக்கு மிதப்பாயிருந்தது.

``ணா... எப்படிண்ணா இவ்ளோ தைரியமா புடிக்கிற? யார்ணா சொல்லிக்குடுத்தா?’’ விரியனை வெறித்த கண்களுடனே கேட்டான் சசி.

``அது ரொம்ப ஈஸிடா! தலைய மட்டும் புடிச்சுட்டா போதும், ஏண்ணா?’’ என்ற செந்திலை

``எங்க நீ புடி பாக்கலாம். ணா, அவன்கிட்ட குடுண்ணா’’ என்க, செந்தில் ``குடுண்ணா’’ என்றான் கையை நீட்டாமல்.

``பேசாம வாங்கடா’’ என்று அதட்டி நடக்க, கூட்டம் கூடிவிட்டது.

வித்தை காட்டுகிறவன் பின்னால் பொடியன்கள் நடப்பது மாதிரி நடக்கிறார்கள். இவன் பிடியிலிருந்து விரியன் முடிந்தவரை உடலை முறுக்குகிறான். மில்லின் பின்பகுதிக்கு வந்ததும், சசியின் நண்பர்கள் கற்களையும் கம்புகளையும் எடுத்துக்கொள்ள...

கங்காணி சம்பத் ``சட்டுன்னு கொன்னுட்டு வாங்கய்யா. ரெண்டு மெஷினு லத்தேடாயி நிக்குது’’ என்றார்.

சசியின் நண்பர்களைக் காட்டி ``சார், இவனுங்களைக் கூப்பிடுங்க’’ என்றான் இவன்.

அவரும் ``சசி, நீ ப்ளூ ரூம் போயிடு... டேய் செந்தில், அந்த மெஷினை ஓட்டிவிடு’’ என்க.

செந்தில் இவனைப் பரிதாபமாய்ப் பார்த்து ``ணா... சொல்ணா’’ என்றான்.

இவனோ இரக்கமின்றி ``போடா... போயி மெஷினை ஓட்டிவிடு’’ என்றான்.

``ணா கொன்ன உடனே போயிறலாம்... நீ போயிக் கை கழுவு. நான் போய் மெஷின ஓட்டிவிட்டுட்டு வர்றேன்.’’

``இப்போ இதைக் கீழ விடுண்ணா. ஓடவிட்டு அடிக்கலாம்’’ என்றவனை முறைத்து

``போடான்னா...?’’ என்று துரத்தினான்.

கையில் இருந்த கல்லை செந்தில் வீசியெறிந்ததில் இவன் மேலிருந்த கோபம் தெரிந்தது.

ப்போதெல்லாம் இவன் வ.உ.சி பூங்காவுக்குப் போவதில்லை. போகவும் பிடிக்கவில்லை. முன்பெல்லாம் அடிக்கடி போவான். போனால் மிருகக்காட்சி சாலையில் புறா, வாத்துக் கூண்டுகளைத் தாண்டி, வண்ணமயில், வெள்ளை மயில்களைக் கடந்தால் இடதுபுறம் வட்டமடித்துக்கொண்டே இருக்கும் குள்ளநரி, உள்ளே கிடக்கும் மாமிசத்துண்டு, அடுத்த கூண்டில் வெள்ளெலிகள், அதற்கடுத்ததில் பச்சைக்கிளிகள், ஆப்பிரிக்கக் காதல் கிளிகள் அப்புறம் ஆமைகள், முயல்கள் இவற்றையெல்லாம் தாண்டினால் கழுகுகளும் ஒட்டகங்களும் இருக்கும் இடத்துக்கு முன்பாகக் கண்ணாடித்தடுப்புக்கு அந்தப் பக்கம் ஏராளமான சாரைகள், நாகங்கள், மலைப்பாம்புகூட இருக்கிறது. கண்ணாடி விரியன்கள் பெருங்குடும்பமாய் பின்னிக்கொண்டு சுருண்டபடியும் ஊர்ந்தபடியும் இருக்க, இவன் அவற்றை வெறித்துப் பார்ப்பான்.

``அட என்ன யோசனை? புடிச்சுட்டு வந்து காட்டுவியா?’’

``ம்ம் கொண்டாறேன்.”

``என்னத்த கொண்டுவருவ... நாகத்தைக் கொண்டாருவியா?”

``நாகமா?”

``என்ன மாமா யோசிக்கிற?”

``....”

``அட என்ன?”

``ப்ச் ஒண்ணுமில்ல.”

ஞ்சாலையில் உள்ள தொழிலாளர்களின் கழிவறை, புதிதாகப் பார்ப்பவர்களைக் குழப்பும். வரிசையாக இருக்கும் பத்துப்பதினைந்து கழிவறைகளில் முன்னால் உள்ள நான்கைந்து கழிவறைகள் மட்டும் உபயோகத்துக்கு! மற்ற கோப்பைகளில் மணலை நிறைத்து அடைத்திருப்பார்கள். புதுக்கருக்கு மாறாதிருக்கும் அவை, ஓய்வறைகளாகவும் பயன்படும். அங்குதான் எந்நாளும் தீராத பெண்ணுடல் குறித்த சந்தேகங்கள், (வயித்துக்குள்ளாற இன்னொரு வயிறு இருக்கும் தெரியுமா?) திரையுலகம், அரசியல் பற்றிய விவாதங்கள், மேஸ்திரிகள், அதிகாரிகளின் மண்டையைப் பிளப்பது குறித்த ஆலோசனைகள் உள்ளிட்டவை இடம்பெறும்.

அன்றைக்கு அங்கே தூக்கில் தொங்கிக்கொண்டிருந்த சில்க்ஸ்மிதாவின் உடலை `பட்டறைக்கார’ ஆறுமுகமும் `கொண்டை வண்டி’ சுப்பிரமணியும் சேர்ந்து இறக்கி வைத்தார்கள். கழிவறைக்குப் பின்புறமிருந்து நாய் குரைக்கும் சத்தம் கேட்டது. எலெக்ட்ரீஷியன் சுந்தரம், பனியென்றும் பாராமல் சத்யராஜ் திராட்சைக் கொத்தோடு போட்டோ பிடிக்க வந்திருப்பதைச் சொன்னதும் சட்டென சிலுக்கு உயிர்த்து போஸ் கொடுக்கத் துவங்க `சிம்ப்ளக்ஸ்’ செல்வம், ராணுவச் சிப்பாய் சீருடையோடு பிரபு ஊருக்குள் வந்துகொண்டிருப்பதைச் சொன்னதும், `அந்தப் புள்ள’ அரை நொடியில் அரைப்பாவாடைக்கு மாறி, கொட்டாங்குச்சி வயலினை வாசிக்கத் தொடங்கியது. `தம்பி ராமகிருஷ்ணா’ என்று கக்கூஸிலிருந்து யாரோ முக்கலோடு சத்தம் கொடுத்தார்கள். கூளயனாகத்தான் இருக்கும்! அவனுக்கு ஏத்தம் ஜாஸ்தி! இரண்டு மூன்று நாய்கள் தொடர்ந்து குரைக்கவே சலித்துக்கொண்ட மாதேஸ்வரன் மூத்திரக் கோப்பையில் கால் வைத்து சூரிய வெளிச்சத்துக்கான சாளரத்து வழியே வெளியே பார்த்துவிட்டு

``ஒண்ணுமில்ல நாயிக சண்டைபோடுது’’ என்று சொல்லிவிட்டுக் கீழிறங்கி ஸ்மிதாவின் தாவணியை எட்டிப்பிடிக்கப் பார்த்தான்.

பொடியன் சசிதான் எட்டிப்பார்த்துவிட்டு, ``அய்யோ..! ணா, இங்கே வந்து பாரு! எவ்ளோ பெரிய நாகம்!’’ என்றான்.

``நாகமா, எங்க?’’

இவன் தவ்வி ஏறிப்பார்த்தபோது இடைவிடாது குரைத்தபடி இருந்த நாய்கள் மட்டும் தெரிந்தன. சசியைத் தள்ளியிருக்கச் சொல்லி, அங்கிருந்து பார்த்தால் தலை மட்டும் தெரிந்தது. கறுத்த கோதுமைப் பழுப்பில் பாதாணி இலை அளவு படத்தை விரித்து சீறிக்கொண்டிருந்தது. உறுமி உறுமிக் குரைக்கும் இந்த ஆறேழு நாய்களும் வீட்டுநாய்களுமல்ல, தெரு நாய்களுமல்ல. காட்டு நாய்கள்! ஆலையையொட்டி இருக்கும் காடு மாதிரியான பகுதியில் பிறந்து வளர்ந்த நாய்கள். குப்பை நிறத்திலும் கறுப்பு, செம்மண் கலந்த நிறத்திலும் இருந்தன. அவை வெறியோடு குரைத்தபடியே இருக்க, நாகம் சுவரோடு ஒண்டிக்கொள்வது குறித்து இவனுக்கு சந்தேகமாக இருந்தது. சசியும் அவனோடு சிலரும் கற்களை அள்ளிக்கொண்டதைப் பார்த்ததும் இவனுக்குக் கோபம் வந்தது.

``டேய் கேன, கல்லைக் கீழ போடுறா’’ என்றான்.

``சசிணா, உயிரோடு புடிக்கிறியாண்ணா? இது பெருசுண்ணா!’’ என்று சொல்லிவிட்டு ``ஹோய்... ஓடுங்கடா!’’ என்றபடி கையில் இருந்த பிரம்பை நாய்கள் மீது வீசினான். அவை கொஞ்சம் விலகி நின்று மீண்டும் குரைத்தன. இவன் கழிவறையின் பின்பக்கம் வந்து ஆமணக்குச் செடியின் நட்சத்திர இலைகளைக் கிளையோடு வளைத்துப்பார்த்த கணத்தில் `திக்’கென்றது.

``இல்லேங்காம ஏழடி இருக்கும்.’’

வால் நுனியைத் தேடினான். இதயம் கோம்பர் மெஷினைப்போல `திப்புடுதக் திப்புடுதக்’ என்று சத்தமிட்டது. இந்தச் சத்தம் `கோதுமை’க்குத் தெரிந்துவிடப்போகிறது என்று மறைப்பதைப்போல சட்டைக்காலரை மூடிவிட்டுக்கொண்டான். கோதுமை, வாயைத் திறந்து மூடியது. இதென்ன `ஒரு நொடிக் கொட்டாவி’யா அல்லது கத்துகிறதா?

தசை முறுக்குள்ள நல்ல வலுவான பாம்பு. உடலெங்கும் சாய் சதுர, இணைகரக் கண்ணாடிகள், வளைந்திருந்த இடத்திலெல்லாம் மின்னின. விரிந்த படத்தின் மத்தியில் வெள்ளையும் கறுப்புமாய் அந்தச் சின்னம். ரொம்பச் சின்னதான ஒரு வாளியின் கைப்பிடிக் கம்பியைக் கழட்டி தலைகீழாய் நெஞ்சில் பதித்துக்கொண்டது  மாதிரி, ஆங்கில `யூ’ மாதிரி, மேனேஜர் மகேந்திரன் நெற்றி நாமம் மாதிரி, அது என்ன சுழியத்திலிருந்து சுழியம் வரை... வாழ்க்கையின் தத்துவமா? ஒன்றுமில்லாமையிலிருந்து ஒன்றுமில்லாமைக்கு! அவற்றின் மொழியில் அதனதன் பெயரா? இல்லை கூட்டத்தின் பெயரா? சாதியோ? சிலதுக்கு ஒரேயொரு வட்டம் இருக்கும். இவன் பார்த்திருக்கிறான்.

சத்தமின்றி முன்னேறி வந்த செவலை நாயை விரட்டியபோது நாகம் இவன் பக்கம் திரும்பியது. உடல் உதற பயந்தான். அந்தக் கண்கள்...! இதுவரையில் அவன் பார்த்த மற்ற பாம்புகளுக்கெல்லாம் கறுத்த கண்களாயிருக்கும். இதற்குப் பச்சையாயிருந்தன. பச்சையில்லை.ஒருவிதமான பச்சை. நீலப்பச்சை... இல்லை சமுத்திரப்பச்சை! ம்ஹூம், இது வெளுத்த பச்சை. ஆமாம்! மொச்சைப்பயற்றைப் பதித்தாற்போல் வெளிர்ப்பச்சை! நிர்மலக் கண்கள். ஒருவேளை குருடோ? இதயம் இப்போது `திக்குரு திக்குரு’வுக்கு மாறி ஓடுகிறது. அதிர்கிற தன் நெஞ்சைத் தானே ஓங்கி அறைந்தான். தைரியத்துக்கு இரண்டொரு வசவுகளைச் சிதறவிட்டான். ரெண்டடி எடுத்து வைத்தான். இயந்திரத்திலிருந்து காற்றுக்குழாய் பிய்த்துக்கொண்டதுபோல் `ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்க்’கென சீறிப் பின்வாங்கியது.

இவனுக்கு ஒரு சந்தேகம். `நாய்களும் பக்கத்தில் இல்லை. நாலடி தூரத்தில்தான் நாமும் நிற்கிறோம். இந்நேரம் நாகம் காணாமல்போயிருக்க வேண்டுமே! யாருக்கோ காத்திருப்பதுபோல் படம் எடுத்தபடியே நிற்பானேன்?’ என்று. 
குழம்பியவனிடம் செந்தில் லேப்பு கம்பியைக் கொண்டுவந்து நீட்டினான். அது ரெண்டு விரல் தடிமனில் ஐந்தடி நீளமுள்ள இரும்புப் பிரம்பு. ஒரு பக்கம் மட்டும் உள்ளங்கை அகல இரும்பு வட்டோடு இணைக்கப்பட்டிருக்கும். விரல் நுனியில் வட்ட பிஸ்கட்டை வைத்து விஷ்ணுசக்கரம்போல குழந்தைகள் காட்டுமே அதுபோல. அப்படியே அழுத்தினால் கம்பியின் எடைக்கும், வட்டத்தின் அகலத்துக்கும், இவனது வலுவுக்கும் மலைப்பாம்பேயானாலும் தலை நசுங்கிப்போகும்.

``அடிணா!’’ என்றான் செந்தில் வழக்கம்போல.

`வயித்துப்புள்ளத்தாச்சிய வீட்டுல வெச்சுட்டு ஏதாச்சும் பூச்சி கீச்சிய அடிச்சுறாத சாமீ’ நெஞ்சில் கை வைத்தபடி அம்மா சொன்ன வாக்கியம் நெஞ்சுக்குள் பாம்பாய் நெளிய, தயக்கத்தை வெளியே காட்டிக்கொள்ளாமல், ``சசி, குடிக்கத் தண்ணி கொண்டாடா’’ என்றான்.

சசியும் செந்திலும் சிரித்தபடி ஆளுக்கொரு பாட்டிலைக் காட்டினார்கள். ஒன்றில் தண்ணீர், மற்றொன்றில் பெட்ரோல்!

``தெரியும்ணா... இப்படி ஏதாவது சொல்லி எங்களைத் தொரத்துவேன்னு சொல்லித்தான் சூப்பாங்கிட்டயே ஸ்பெசல் பர்மிட் வாங்கிட்டு வன்ட்டன்... அடிணா’’ என்றான் செந்தில்.

``ஏய்... எந்திரிடி!’’

``என்ன?’’

``எந்திரி..!’’

``என்ன மாமா, தண்ணி வேணுமா?’’

``ஷ்ஷ்ஷ்... கத்தாத!’’

``அய்யோ... என்ன சொல்லு!’’

``வெளிய வா.’’

``எதுக்கு?’’

``சத்தம் போடாம எந்திரிச்சு வாடி வெளிய.’’

``ஹூம்... என்னன்னு சொல்ல மாட்டியா? சொல்லு.’’

``ஸ்ஸ்... வெளிய வான்னா..?’’

கதவைத் திறக்கப் போனவளை எட்டிப்பிடித்துத் தடுத்தான்.

பின்கதவைக் காட்டி, கிசுகிசுப்பாக ``இந்தப் பக்கம்... இந்தப் பக்கம்...’’ என்றான்.

திறந்து வெளியே வந்ததும் ``சொல்லு...’’ என்றவளைத் தாண்டி சந்துக்குள் நடந்து சாலைக்குப் போய் நின்றான். இவள் தயங்கித் தயங்கி போய் சந்து நுனியில் ஒண்டிக்கொண்டு ``என்ன... சொல்லித்தொலை’’ என்றாள். கொட்டாவியோடும் கலைந்த முடியோடும் அழகாய்த் தெரிந்தாள். இவன் ``டட்டடொயிங்’’ என்றபடி பனியனுக்குள் கையை விட்டான். அவள் ``பூவா?’’ என்றாள் சுவாரஸ்யம் குறைந்த குரலில். ``இல்ல...’’ திரும்பி விளக்குக் கம்பத்தை நோக்கி நடந்தான். இவள் ரகசியக் குரலிலேயே கத்தினாள்.

``யோவ் நில்லுங்கறேன்!’’

``ப்ச் வாடி...’’

``மணி எவ்வளோ தெரியுமா?’’

``தெரியும்... 12:30!’’

``என்ன, கிறுக்கா புடிச்சிருக்கு? அம்மா பார்த்தா திட்டும்!’’

`நீ சத்தம் போடாம வா!’ என்பதைக் சைகையிலேயே சொன்னான்.

வந்தாள். கையில் இருந்த மழைக் காகிதப்பையைக் காட்டினான்.

``ஹை! கருகுமணியா?’’

முகம் முழுக்கச் சிரித்தாள். கை அருகே நெருங்கியவளை மறுகையால் தடுத்து, பை இருந்த கையை இவளுக்கு எதிர்த்திசையில் விலக்கினான். அவள் அப்போதுதான் பார்த்தாள் கருகுமணி நெளிவதை.

``அய்யூ... மாமா... பாம்பா! அய்யயூ...’’ என்றாள் பயமும் ஆர்வமுமாக. `தூக்கத்திலிருந்து எழுந்ததினாலா? இந்த மஞ்சள் வெளிச்சத்தினாலா? எதனால் இவ்வளவு அழகாயிருக்கிறாள்?’ என அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.

``படமெடுக்க வை... படமெடுக்க வை’’ என்றாள் சிறுமியாக.

``இது விரியன்டி... கட்டுவிரியன்! அதுவும் குட்டி... படமெல்லாம் எடுக்காது.’’

``பரவால்லை... கீழ விடு.’’

``விட்டா போயிரும்.’’

``ம்ம்... போட்டும்... நீ விடு.’’

மழைக் காகிதத்தின் முடிச்சை அவிழ்த்தான்.

``ஏது? எங்க கெடச்சது?’’

``மில்லுக்குள்ளதான்... மழை பேஞ்சது, கேன்ல தண்ணி விழுந்தா எழையெல்லாம் வீணாப்போகுமுன்னு தள்ளிவெச்சிட்டிருந்தேன். கேனுக்கு அடியில கெடந்தது... நானும் புள்ளங்க பாசிதானாக்கும்னு நெனச்சேன்... பார்த்தா நெளியுது... அழகா இருக்குல்ல?’’

கீழே விட்டான். கீழே விழுந்ததும் ஒரு நொடி தயங்கி, பிறகு சுதாரித்து வேகமாய் ஊர்ந்த விரியன் குட்டி. அடர்கறுப்பில் அளவெடுத்த இடைவெளிகளில் வெள்ளைக்கோடுகள்! இளந்தோல் என்பதால் கூடுதல் மினுமினுப்பு! இவனுக்கு, `அவளது மஞ்சள் பூசிய மார்புக்கு இடையில் வைத்துப்பார்த்தால் இந்தக் கறுப்பு எவ்வளவு எடுப்பாயிருக்கும்!’ என்று ஒரு நினைப்பு.

``அழக்க்க்கா இருக்குங்க’’ என்றாள் மகிழ்ந்து.

விளக்கைத் தாண்டி வெளிச்சத்தைத் தாண்டி சாக்கடையோரம் போய் மறைந்தது.

``இப்ப சந்தோஷமா?’’

``ம்ம்ம்ம்... ரொம்ப்ப்ப!’’ தலையை ஆட்டினாள்.

``சரி, போய்ப் படு.’’

``ம்ம்ம், நீயும் வா.’’

``நீ போ... நா ஒரு தம்மடிச்சுட்டு வர்றேன்’’ என்று பனியனுக்குள் இருந்து சிகரெட்டை எடுத்து வாயில் வைத்துக்கொண்டு குந்தியமர்ந்து தொட்டியோரத்தில் ஒளித்து வைத்திருந்த தீப்பெட்டியை எடுத்தான்.

``நீ அடி, நான் இங்கே இருக்கேன்.’’

``ப்ச்! போன்னா போ.’’

பொய்யாக முனகிக்கொண்டே போனாள்.

பற்றவைத்து ஆழமாக இழுத்து மெதுவாகப் புகையை விட்டான்.

``என்னணா யோசிக்கிற?’’ என்றான் செந்தில்.

``நா வேணா இழுத்துப் போடட்டுமா?’’ என்றான் சசி ஆர்வமாக.

``எங்க போடு? போடுறா பார்க்கலாம்...” என்று அவனைச் சீண்டினான் செந்தில் ``ணா, நீ சொல்ணா’’ என்றான் சசி.

``இந்தப் பக்கம் இழுத்துப் போடு, அடிச்சுடாத’’ என்றான் இவன்.
சொன்னதுதான் தாமதம். சசி பரபரப்பாய் முன்னேறி கம்பியைக் கோதுமையின் தலைக்கு அருகில் கொண்டுபோய் கீழிறக்கி சரேலென இழுத்துப் போட்டான். இழுத்தவனே ``அய்யோ..!’’ என்று அலறவும் செய்தான்.

நிஜமாகவே ஏழடிதான்! நீளத்தைப் பார்த்துதான் அலறியிருக்கிறான் என நினைத்தால் ``அண்ணா ரத்தம்! காயமாயிருக்கு” என்றான். நாகத்தின் வயிறு கிழிந்து குடல் குந்தாணியெல்லாம் வெளியே சிதறியிருக்கின்றன. மலமும் ரத்தமும் வழிய வாயைத் திறந்து மூடியது. நாய்கள் குதறியிருக்கின்றன. ரொம்ப நேரமாக இந்தப் போராட்டம் நடத்திருக்கிறது. உடல் முழுவதும் காயங்கள். ``சீ. பாவம்ணா’’ என்றான் செந்தில். சசி ஒன்றும் சொல்லாமல் அமைதியாக நாகத்தையே வெறித்துப் பார்த்தான். தலையைத் தரைக்குக் கொண்டுபோய் நெளிவதும் பிறகு உயர்த்துவதுமாக இருந்தது.

வேகம் இல்லை. தளர்வு தெரிந்தது.

``என்னடா பண்றீங்க?’’ என்று கேட்டவாறு சீனிப்புளியங்காயைப் பறித்தவாக்கில் வந்த வெள்ளியங்கிரி அண்ணனும் இவனைப் பார்த்து ``மெஷின ஓட்டி உடோணும். மூணு பேரையும் சம்பத்து வரச்சொன்னாப்ல’’ என்று சொல்லிவிட்டு, திரும்பவும் இரண்டு காய்களைப் பறித்து இடுப்புப் பைக்குள் வைத்துக்கொண்டார். திரும்பி இவன் அருகில் வந்து கீழே கிடந்த இதைப் பார்த்ததும்,

``அடேய்... என்னடா இது? இந்தப் பெருசா இருக்கு! அடிச்சிட்டீங்களா?’’

``இல்லைண்ணா, நாய் கடிச்சுவெச்சிருக்கு’’ என்றான் சசி.

``பெரிய ஜீவனப்பா’’ என்றார். சசி, சம்பத்துக்கு பயந்து இவனிடம் ``ணா நான் முன்னாடி போறேன்... கை கழுவுற இடத்துக்கு வந்துரு” என்று சொல்லிவிட்டு லேப்பு கம்பியைக் கையில் கொடுத்துவிட்டு நகர்ந்தான்.

``ணா, அடிச்சுருணா போலாம். நேரமாச்சு” என்றான் செந்தில். இவனும் ``நட போலாம்!’’ என்க. வெள்ளியங்கிரியண்ணன் திரும்பிப் பார்த்து ``ஏண்டா அடிக்கலையா?’’

``ம்ஹூம்.’’

``அட, ஏன்?’’

``அதைப் போயி என்னனு  அடிக்கிறதுண்ணா?’’

``விட்டியினா... அந்த நாயிக வந்து திரும்பக் கொதறும். இல்லைன்னா எறும்பு அரிச்சே கொன்னுரும். ஏற்கெனவே வலி திங்குது. பாவமுடா. இந்த வேதனைக்கு அதைக் கொன்னுர்றதுதான் நல்லது.’’

``மனசு கேக்க மாட்டேங்குதுண்ணா.’’

``வா’’ என்ற வெள்ளியங்கிரியண்ணன் நாகத்தின் அருகில் போய் வீரமண்டியிட்டு அமர்ந்து இரண்டொரு விநாடி மௌனமாகப் பார்த்தார்.

``யப்பா... நாகராசா! உன்னிய வைத்தியம் பார்த்துப் பொழைக்கவெக்க எங்களுக்குத் தெரியாது. பண்ணாலும் காப்பாத்துறது கஷ்டம் சாமி! இப்பிடியே உட்டுட்டுப்போகவும் மனசு வல்ல’’ என்று சொன்ன கையோடு பாட்டிலைத் திறந்து பாம்பின் தலைமீது தண்ணீரைக் கொஞ்சமாக ஊற்றிவிட்டு எழுந்து இவனைத் தீர்க்கமாகப் பார்த்து,

``தலைய நீட்டிக் காட்டுனா அடி! ஒரே அடியில கொன்னுரு. இல்லைன்னா... விட்டுட்டு வந்துரு.”

சொல்லிவிட்டு நடந்தார். வெள்ளியங்கிரியண்ணனின் குரல் இதுவரை இவன் கேட்காத குரலாயிருந்தது.

``இந்தாளே நாகப்பாம்பு மாதிரிதான் இருக்காப்ல, கருவளையக் கண்ணு... மூக்கு மட்டும் விரிஞ்சு கூமாச்சியா, நடையே ஒரு மாதிரி பின்னிப் பின்னித்தான் போறாப்ல.’’

அவரையே பார்த்துக்கொண்டிருந்தவன் திரும்பிக் கீழே பார்த்தான். இவனுடல் அனிச்சையாகச் சிலிர்ப்பில் உதறிக்கொண்டது. நாகம் தன் படத்தைச் சுருக்காது விரித்தபடியே தலையைத் தரையோடு தாழ்த்தி இவன் காலடியில் வைத்தது.
 

No comments:

Post a Comment