Wednesday, 27 June 2018

தங்கம்

வந்தி நாட்டில் தாத்தாவும் பாட்டியும் வசித்துவந்தனர். தாத்தா காட்டுக்குச் சென்று விறகு வெட்டி, அதை விற்று வரும் வருமானத்தில் குடும்பம் நடத்திவந்தார்.
 
அன்று காலை வழக்கம்போல் தாத்தா வேலைக்குக் கிளம்பினார். பொரி அரிசி மாவு உருண்டை ஒன்றை மதிய உணவுக்காகக் கொடுத்து அனுப்பினார் பாட்டி. பட்டுப் போன மரங்களைத்தான் வெட்டுவார் என்பதால், அதைத் தேடிக் கண்டுபிடிக்க நேரம் ஆகிவிட்டது. அரிசி மாவு உருண்டையை ஒரு புதருக்கு அடியில் வைத்துவிட்டு, வெட்ட ஆரம்பித்தார். சிறிது நேரத்தில் பசி எடுத்தது.
அருகில் இருந்த பொந்தில் உள்ள எலிகளுக்கு அரிசி மாவு உருண்டையின் மணம் கவர்ந்தது. வேகமாக வெளியில் வந்து உருண்டையை எடுத்துச் சென்றன. ஓடையில் கைகளைச் சுத்தம் செய்துவிட்டு, புதருக்கு வந்தார் தாத்தா. அரிசி மாவு உருண்டையைக் காணவில்லை.
பொந்து வாசலில் தன்னுடைய பை இருப்பதைக் கண்டவுடன், அதை மெதுவாக இழுத்தார். துணியைக் கவ்வியபடி ஓர் எலி வெளியே வந்து நின்றது. தாத்தா திகைத்தார்.
“சுவையான உணவை எங்களுக்குத் தந்ததற்கு மிக்க நன்றி” என்ற எலியைப் பார்த்து, ஆச்சரியமானார் தாத்தா.
“எலியே, உருண்டை உங்களுக்குப் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி! வயிறு நிரம்பியதா?” என்று அன்போடு கேட்டார் தாத்தா.
“உங்கள் உணவை அனுமதியின்றி உண்ட எங்களைப் பார்த்துக் கோபப்படாமல், அன்பாக விசாரிக்கிறீர்களே! உங்கள் உயர்ந்த மனம் யாருக்கும் வராது. எங்களுடைய மாளிகைக்கு வந்து சற்று இளைப்பாறிவிட்டுப் போக வேண்டும்” என்று பணிவோடு கூறியது எலி.
“உங்கள் மாளிகைக்குள் நான் எப்படி நுழைய முடியும்?”
“என்னைத் தொடுங்கள்” என்றது எலி. தொட்ட உடன் தாத்தா எலி அளவுக்குச் சிறிதாக மாறினார். மாளிகைக்குள் நுழைந்தார்.
அந்த மாளிகையில் அவருக்குத் தடபுடலான வரவேற்பும் விருந்தும் பரிமாறப்பட்டன. தாத்தா கிளம்பும் நேரம் வந்தது. எலிகள் சுமக்க முடியாமல் ஒரு பெரிய மூட்டையைத் தூக்கி வந்தன. அதைத் தாத்தாவிடம் கொடுத்து, எங்களது அன்புப் பரிசை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றன.
தாத்தா பிரித்துப் பார்த்தார். பை நிறைய தங்க நாணயங்கள் இருந்தன. இவ்வளவு நாணயங்கள் எங்களுக்கு எதுக்கு என்று ஒரே ஒரு நாணயத்தை மட்டும் எடுத்துக்கொண்டார்.
“உங்களை நினைத்தால் பிரமிப்பாக இருக்கிறது. இந்தப் பையில் ஒற்றை நாணயத்தைப் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். இதை நீங்கள் செலவழித்ததும் மீண்டும் ஒரு தங்க நாணயம் தோன்றும். நீங்களும் பாட்டியும் சந்தோஷமாக இருங்கள்” என்று சொல்லி, வழி அனுப்பி வைத்தன எலிகள். பொந்தை விட்டு வெளியே வந்தவுடன் மீண்டும் பழைய உருவத்தை அடைந்தார் தாத்தா.
 
தங்க நாணயப் பையோடு வீட்டுக்கு வந்தார். பாட்டியிடம் நடந்ததைக் கூறினார். இதைக் கேட்ட பக்கத்து வீட்டுக்காரர் முத்துவுக்கு, உடனே எலி மாளிகைக்குச் செல்ல வேண்டும் என்று ஆசை வந்தது. மறுநாள் தாத்தாவிடம், நேற்று எந்த இடத்திலிருந்து விறகு கொண்டு வந்தீர்கள் என்று கேட்டார். தாத்தாவும் புதர்ச் செடியை அடையாளம் சொன்னார். உடனே அரிசி மாவு உருண்டைகளோடு கிளம்பினார் முத்து.
காட்டில் அலைந்து திரிந்து தாத்தா சொன்ன இடத்தைக் கண்டுபிடித்தார். தான் கொண்டு வந்த அரிசி மாவு உருண்டைகளைப் பொந்துக்குள் வீசினார். பிறகு மரத்தடியில் படுத்து உறங்கினார். மாலையில் கண் விழித்தார். அரிசி மாவு உருண்டைகள் அப்படியே இருந்ததைக் கண்டு கோபம் அடைந்தார்.
“எலிகளே, மரியாதையாக வெளியே வாருங்கள்! என் அரிசி மாவு உருண்டைகளை வைத்துக்கொண்டு, தங்க நாணயங்களைத் தாருங்கள்” என்று கத்தினார் முத்து.
எலி ஒன்று கோபமாக வெளியே வந்தது.
“நீதான் அரிசி உருண்டையைத் தூக்கி வீசியவனா? தாத்தா கொண்டுவந்ததுபோல சுவையாக இல்லையே? போனால் போகட்டும், உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டது அந்த எலி.
“எனக்கு மூட்டை மூட்டையாகத் தங்க நாணயங்கள் வேண்டும்” என்றார் முத்து.
”அவ்வளவுதானே!” என்ற எலி, முத்துவைச் சிறிய உருவமாக மாற்றி, மாளிகைக்குள் அழைத்துச் சென்றது.
தங்க நாணயங்களைக் கண்டவுடன், பெரிய பெரிய பைகளில் போட்டு மூட்டைகளாகக் கட்டினார் முத்து.
”நாணயங்கள் போதுமா? சாப்பிடுகிறாயா?” என்று கேட்டது ஓர் எலி.
”பத்து மூட்டைகள்தான் கட்ட முடிந்தது. இப்போது மூட்டைகளில் கொண்டு செல்லும் எண்ணம் இல்லை. இந்த மாளிகை நாணயங்கள் முழுவதையும் எடுத்துச் செல்ல விரும்புகிறேன். எலிகளே, உங்கள் மீது இந்த மருந்தை அடிக்கப் போகிறேன். நீங்கள் அழிந்து போவீர்கள். பிறகு இந்த மாளிகை முழுவதும் எனக்கே” என்று சொல்லிக்கொண்டே, மருந்தை எடுத்தார் முத்து.
உடனே எலிகள் மாயமாக மறைந்தன. தங்க நாணயங்களும் காணாமல் போயின. பொந்தின் வாயில் அடைத்துக்கொண்டது. மருந்தின் நெடியில் முத்துவும் மயங்கி விழுந்தார். நீண்ட நேரம் கழித்து கண் விழித்தபோது, இருள் சூழ்ந்திருந்தது. பயந்து போனார்.
”எலிகளே, என்னை மன்னித்துவிடுங்கள்! என்னை வெளியே விடுங்கள். எனக்கு நாணயங்கள் வேண்டாம்” என்று கத்தினார் முத்து.
எலிகள் திரும்பி வரவே இல்லை. முத்து ஒரு பெருச்சாளியாக மாறி, எவ்வளவு உணவு கிடைத்தாலும் திருப்தி இல்லாமல் வளைகளைத் தோண்டிக்கொண்டிருக்கிறார்.

No comments:

Post a Comment