Sunday, 17 June 2018

திகில் - ஐந்து

காரைக்கால் வந்து விட்டது. இறங்கினோம். "நல்லா தூங்கிட்டேன். நீ தூங்கினியா?" என்றான்.

"இல்லடா. நடந்ததையெல்லாம் நினைச்சுக்கிட்டே வந்தேன். அதுக்குள்ள இங்கே வந்துட்டோம்"

பாரதியார் வீதியில் பேரிஸ் இன்டர்னேசனல் என்று ஒரு டொக்கு ஓட்டலில் தங்கினோம். இரவு சாப்பிடும் போது, "ரகு, எதுக்குடா இத்தனை வருசமா நாகூர் வந்துக்கிட்டிருக்கே? அப்ப நமக்கு சின்ன வயசு, விவரம் தெரியலைனு சொல்லலாம். இன்னுமா அவளை நினைச்சுக்கிட்டிருக்கே? அவ பேர் கூட எனக்கு மறந்துடுச்சு" என்றேன்.

"ஷ்யாமி" என்றான்.

"ரைட். பட் ஒய்? என்ன லாஜிக்குல நீ வருசா வருசம் வந்துக்கிட்டிருக்கே?"

"துரை..நீ மெட்ராஸ் போனப்புறம் நாம நிறைய சந்திக்கலை இல்லியா... என்னைப் பத்தி நீ நிறைய கேள்விப்பட்டிருக்கலாம்" என்று இழுத்தான்.

"அதெல்லாம் எதுக்கு இப்போ? உன்னைப் பார்த்ததுல எனக்கு சந்தோசம் தாண்டா"

"காலேஜ் படிக்கிறப்ப நான் டெல்லி போய் அவளைத் தேடினேன் தெரியுமோ? அம்மாகிட்டே பொய் சொல்லிப் பணம் வாங்கிக்கிட்டு அவளைத் தேடிப் போனேன். ஒண்ணும் கிடைக்கலே" என்றான். "அங்கே இங்கே சுத்தினாலும் அவளை மறக்க முடியலே. அவளோட நினைவா, இல்லை அப்படி என்ன தான் ஆச்சு அன்னிக்கு ராத்திரினு தெரிஞ்சுக்க வேண்டிய உந்துதலா, என்னனு தெரியலடா ஒரு அப்செசனாயிடுச்சு."

மௌனமாக இருந்தேன்.

"நான் இப்போ புத்த மதத்துல சேர்ந்துட்டேன் தெரியுமோ?" என்றான்.

புன்னகைத்தேன். "சிரிக்கிறே?" என்றான்.

"நம்ம குடும்ப வட்டாரத்துல 'கிறுக்கு'னு பேர் வாங்கின முதல் ஆள் நீ தான். சரியாத்தான் இருக்கு. புத்த மதமா? ஏண்டா?"

"சஞ்சலம் அடங்கணும்டா. புத்தர் வழி எனக்குப் பிடிச்சிருக்கு. சாவைப் பத்தி புத்த மதத்துல என்ன சொல்லியிருக்கு தெரியுமா?" என்றான்.

"எனக்கு அதிலெல்லாம் நம்பிக்கை இல்லைடா. செத்தப்புறம் என்ன ஆனா என்ன? சரி, நாகூருக்குக்கும் புத்த மதத்துக்கும் ஏன் முடிச்சு போடறே?"

"நம்ம வாழ்க்கைல நடக்குற எல்லாத்துக்குமே ஒரு அடிப்படை தத்துவம், அடிப்படை சக்தியின் உந்துதல், இருக்குனு நம்புறவன் நான்" என்றான். "பங்க்ளாதேஷ்ல சோமவிகார் புத்தர் கோவில் இருக்கு தெரியுமா?".

"தெரியாது"

"உலகத்துலயே பெரிய புத்த சரணாலயம் அது தான். கல்கத்தாவிலந்து அடிக்கடி போவேன். கொஞ்ச நாள் முன்னாடி அங்கே ஒரு துறவியைச் சந்திச்சேன். எனக்கு துறவியாவணும்னு ஒரு ஆசை இருக்கு. பன்னிரண்டு என்கிற எண்ணுக்குப் பின்னால இருக்குற தத்துவத்தைப் பத்திப் பேசிக்கிட்டிருந்தாரு. அதையும் இதையும் சொல்லிக்கிட்டிருந்தவரு, 'புது நூத்தாண்டு தொடங்கியாச்சு. ஆனா இந்த நூறு வருசத்துல பனிரெண்டு நாள் தான் ரொம்ப சிறப்பு'ன்னாரு. 'என்ன?'னு கேட்டேன். அவரு விளக்கிச் சொன்னதும் எனக்கு பட்டுனு எல்லாமே வெளங்கிடுச்சுடா. ஷ்யாமி மேலே புது நம்பிக்கை வந்துடுச்சு. அதான் நாகூர் வர ஆரம்பிச்சேன்"

"புதிர் போடாதடா"

"இல்லடா. புது நூத்தாண்டுல, முதல் பனிரெண்டு வருசங்கள்ல தான் நாள், மாசம், வருசம் எல்லாம் ஒண்ணா வரும். நூறு வருசத்துல பனிரெண்டு நாள் மட்டும் தான் இப்படி ஸ்பெஷல். குடுகுடுப்பை என்ன சொன்னான் ஞாபகமிருக்கா?"

தலையாட்டினேன். "ஒரே நாள்ல ஒரே மாசத்துல ஒரே வருசத்துல துஷ்டப் பொண்ணு வருவா"

"ரைட். ஜனவரி ஒண்ணு இரண்டாயிரத்தொண்ணிலிருந்து டிசம்பர் பனிரெண்டு இரண்டாயிரத்துப் பனிரெண்டு வரை... இந்தப் பனிரெண்டு நாள்ல ஒரு நாள் அவ வருவாடா. எனக்கு நம்பிக்கை இருக்குடா. அதான் வருசா வருசம் வரேன்" என்றான்.

மறுநாள் ஜூன் ஆறாம் தேதி. 06.06.06. அவனை உதைப்பதா, கேலி செய்வதா, இல்லை அவன் மேல் பரிதாபப்படுவதா என்று புரியாமல் விழித்தேன். "டேய், அப்படியே வந்தாலும் இத்தனை வருஷமாச்சேடா? நாகூர்ல தான் வருவானு என்ன நிச்சயம்? வந்தாலும் நீ என்ன பண்ணப் போறே?" என்றேன் பொறுமையாக.

"ஒரு முடிவு, அவ்வளவு தான். ஐ நீட் எ க்லோஷர்" என்றான்.

    மறுநாள் நாகூர் வந்தோம். நாகூர் அவ்வளவாக மாறவில்லை. இணைய யுகத்தின் பாதிப்பு தெரிந்தது. 'சிகாகோ பீட்சா' என்று ஒரு கடையில் பீட்சா விற்றுக் கொண்டிருந்தார்கள். மொய்தீன் பிள்ளைத் தெரு, ரயிலடி எல்லாம் நிறைய மாறுதல். நாகூரிலிருந்து சென்னைக்கு பிராட்கேஜ் ரயில் வருவதாக ஒரு ஓரமாக அறிவிப்பு தொங்கியது. தர்கா இப்போது பகலிலேயே பளபளத்தது. அங்கே இங்கே நடந்து ஒரு வழியாக சிவன் கோவில் தெருவுக்கு வந்தோம். பழைய தெருவே இல்லை. வீடுகள் மாறியிருந்தன. ஒட்டு வீடு எல்லாம் போய் இப்போது தனி வீடுகள். ரகுவின் குடும்பத்தில் யாரும் இங்கே இல்லையென்றாலும், ஷ்யாமியின் பெரியம்மா குடும்ப வழியில் வந்தவர்கள் இன்னும் நாகூரில் அதே வீட்டில் இருப்பதாகச் சொன்னான்.

அங்கே போனோம். வீடு அடையாளம் தெரியாமல் மாறி இருந்தது. வாசல் திண்ணையைக் காணோம். நாங்கள் வந்ததும் வீட்டுக்காரர் வரவேற்றார். ரகு அவரிடம் என்னை அறிமுகப் படுத்தினான். அவர் என்னைப் பார்த்த பார்வையில், 'குடும்பமே லூசுக் குடும்பம் போல' என்ற செய்தி இருந்தது. "அதனால் என்ன சார், வருசா வருசம் வரீங்களே? கொஞ்ச நேரம் தானே, பாத்துட்டுப் போங்க" என்றார்.

ரகு நன்றி சொல்லிவிட்டு வீட்டைச் சுற்றி நடந்தான். பக்கத்து வீட்டை இணைத்த கிணற்றை இடித்து மூடி விட்டிருந்தார்கள். குறுக்கே சுவர் கட்டியிருந்தாலும் கிணறு இருந்த இடத்தில் மழை நீர் வடிகால் போல் இரும்பினால் வட்டமாக மூடியிருந்தார்கள். மற்றபடி கிணற்றுக்கான அறிகுறி ஒன்றும் தெரியவில்லை. அவன் இரும்புத்தட்டுக்கு அப்பால் பூமிக்குள் பார்த்துக் கொண்டிருந்தான். வீட்டுக்காரரும் சற்று தள்ளி ஒதுங்கி நின்று கொண்டிருந்தார். நான் மெள்ள நகர்ந்து அவருடன் பேசப் போனேன்.

"நீங்க எங்கிருக்கீங்க?" என்றார் தயங்கியபடி.

"சிகாகோல இருக்கேன் சார்.. இந்த வருசம் எங்கம்மா பிறந்த நாளுக்காக வந்தேன். சின்ன வயசுல நாகூர் நாகப்பட்டினம் எல்லாம் சுத்தியிருக்கேன். கொஞ்சம் கொஞ்சம் மாறி இருக்கு" என்றேன்.

"ஆமாங்க" என்றார். "செல் போன் எல்லாம் வரும்னு எதிர்பார்த்தீங்களா?" என்றார்.

"டேய், இங்கே வாடா" என்று கூவினான் ரகு. இரண்டு பேரும் விரைந்தோம். "அங்கே பாருடா" என்று கீழே சுட்டிக் காட்டினான்.

"என்னடா?"

"பட்டுப் புடவைடா. வயலெட் சட்டை அங்கே பார். நல்லா கவனிச்சுப் பாரு" என்றான்.

"எனக்கு ஒண்ணும் தெரியலையேடா?"

"டேய், விளையாடாதடா. சரியாப் பாரு. சார், நீங்க பாருங்க. நீங்களே சொல்லுங்க"

அவர் கூர்ந்து பார்த்தார். "என்னவோ துணி போலத்தான் தெரியுதுங்க" என்று ஒதுங்கிக் கொண்டார். ஏதோ சொல்ல வேண்டுமென்பதற்காகச் சொல்கிறார் என்பது எனக்குப் புரிந்தது. 'பாயைப் பிராண்டும் குடும்பம்' என்று எங்களைப் பற்றி நினைத்திருக்க வேண்டும். "வீட்டுல கூப்பிடுறாங்க. நீங்க பாத்துட்டு உள்ளாற வந்து ஒரு கப் காபி சாப்பிட்டுப் போவணும்" என்று கழன்று கொண்டார்.

"டேய், பாருடா" என்றான் ரகு மறுபடியும்.

"என்னை மன்னிச்சுருடா. என் கண்ணுக்கு ஒண்ணும் தெரியலை" என்றேன்.

"இங்கே தெரியுதுடா" என்று நெஞ்சைத் தொட்டுக் காட்டினான். "வா, போகலாம்".

    அங்கிருந்து வெளியேறி நாகூர் பஸ் ஸ்டேண்டில் நின்றோம். டீக்கடையில் ஆளுக்கொரு டீ வாங்கிக் கொண்டோம். "டேய், நான் மாயவரம் போய் அங்கிருந்து கோவிந்தபுரம் போறேன். எங்கம்மாவோட ரெண்டு நாள் இருந்துட்டு ஊரைப் பாக்கப் போகணும்" என்றேன்.

"ஷ்யாமி எப்ப வருவான்னு எனக்குத் தெரிஞ்சு போச்சு. கிணத்துல தெரிஞ்ச செய்தி" என்றான்.

நான் ஒன்றும் சொல்லவில்லை.

"ஷ்யாமி டிசம்பர் பனிரெண்டாம் தேதி கண்டிப்பா வருவா. 12.12.12. அன்னிக்குத் தான் உச்சமான சிறப்பு நாள். அதான். இப்போ புரிஞ்சு போச்சு"

"அப்படியா?" என்றேன்.

"நல்லா யோசிச்சுப் பாருடா" என்றான். அவன் குரலில் உற்சாகமும் வேகமும் கலந்திருந்தன. "ஷ்யாமி என்ன சொன்னா? காத்திருக்கேனு சொன்னா இல்லியா? எனக்கு அறுவது வயசானாலும் காத்திருக்கேன்னு சொன்னா இல்லியா? இரண்டாயிரத்துப் பனிரெண்டுல எனக்கு அறுவது வயசுடா" என்றான்.

எனக்கு மாயவரம் பஸ் இன்னும் வரவில்லையே என்றிருந்தது.

"அறுவதோட மகத்துவம் தெரியுமா? அஞ்சு பனிரெண்டு அறுவதுடா. மனுஷனுக்கு அஞ்சு பிராயம். அறுவது வருசம் ஒரு கால வட்டம். அறுவதுக்கு அப்புறம் ஒண்ணு என்கிறது கால சித்தாந்தம். அறுவது வருஷத்துக்கொரு தடவை வருச சக்கரம் புதுப்பிக்குது. நாம தமிழ் வருசம்னாலும், மூலம் அது தாண்டா. அறுவது வருசத்துக்கு அப்புறம் புதுசா தொடங்கப் போறோம்டா நானும் ஷ்யாமியும்" என்றான்.

நான் துடித்தேன். பஸ், எங்கே பஸ், எங்கே பஸ்?

"நல்லா யோசிச்சுப் பாரு. இந்த வருசம் நான் இங்கே வந்து உன்னைச் சந்திச்சேன். உங்கம்மாவுக்கு ஷஷ்டியப்தம். அறுபது வயசு முடியுது. திஸ் இஸ் எ சைன். உனக்கும் இது க்ளோசர் மாதிரி. உன்னை இங்கே வரவழச்சிருக்கா பாரு. கண்டிப்பா வருவா பாரு. இரண்டாயிரத்துப் பனிரெண்டுல" என்றான்.

மாயவரம் பஸ் வரவில்லை. சிதம்பரத்துக்கு ஒரு பஸ் வந்தது. விட்டால் போதும் என்று கிளம்பினேன். தயங்கித் திரும்பி வந்து, ரகுவை அணைத்தேன். "டேய், ரகு. டேக் கேர்" என்று அவன் தோளைத் தட்டி சிதம்பரம் பஸ்சில் ஏறினேன்.

பஸ்சில் நிற்கும் இடம் தான் இருந்தது. தொற்றிக் கொண்டேன். பஸ் கிளம்பியதும் ரகு எங்கே வந்துவிடுவானோ என்று பயந்து கொண்டே பார்த்தேன். அவன் வரவில்லை. அங்கேயே நின்று கொண்டிருந்தான். என்னைப் பார்த்து கட்டை விரலை உயர்த்திக் கையசைத்தான். மெள்ள மறைந்தான்.

"சுவாமிமலைக்கு ஒரு டிகெட் குடுங்க" என்றேன்.

"இது பாயின்டுபாயின்ட் சார். சிதம்பரம் தான்" என்றார் ரஜனிகாந்த் தோழர்.

சிதம்பரத்துக்கு டிகெட் வாங்கிக் கொண்டேன். ரகுவைப் பற்றி நினைக்காமல் இருக்க முடியவில்லை.


ஒவ்வொரு குடும்பத்திலும் ரகுக்கள் உண்டு. இதுவரை சொன்னது எங்கள் குடும்ப ரகுவின் கதை.

நாகூர் கோடை விடுமுறையில் என்ன தான் நடந்திருக்கும்? ஷ்யாமி என்ன ஆனாள்? என் கண்ணெதிரே நடந்தவற்றை எப்படி இல்லையென்று நம்புவது? அறிவுக்குட்பட்ட விடைகளைத் தேடித் தேடி சலித்திருக்கிறேன். பின்னாளில் உளவியல் வகுப்பில் 'relationships among paranormal beliefs, locus of control and psychiatric symptomatology' என்ற தலைப்பில் வெளிவந்த ஒரு உளவியல் பரிசோதனை முயற்சியின் முடிவுகளைப் படித்த போது, நாகூர் நிகழ்ச்சிகளைப் பற்றி ஓரளவுக்கு அறிந்து கொள்ள முடிந்தது. ரகுவைப் பற்றிய கணிப்பும் அந்த வகையில் தோன்றியது தான். 

சுவைக்காகக் கொஞ்சம் கற்பனை சேர்த்திருக்கிறேன் என்றாலும் இவை அறிவுக்கப்பாற்பட்ட எல்லையில் நடந்த சம்பவங்கள். எனக்கு இவற்றிலெல்லாம் நம்பிக்கை இல்லை. யதேச்சையான நிகழ்வுக்கான அடிப்படை உண்மைகளைத் தேடித் தோல்வியுற்றிருந்தாலும் கைவிடவில்லை. பகுத்தறிவுக்குட்பட்ட யதேச்சையான நிகழ்வுதான் என்று நம்புகிறேன்.

உண்மையறிய முயன்ற என்னுடைய தேடல்களிலிருந்தும், நான் எடுத்துக் கொண்ட உளவியல் ஆலோசனைகளிலிருந்தும், நாகூர் கோடை விடுமுறையின் பாதிப்பைப் பற்றி எழுத வேண்டுமென்று சில வருடங்களாய் நினைத்திருந்தேன். இப்போது வாய்ப்பு கிடைத்தது. இதைப் பற்றிய என் ஆய்வையும் எழுத எண்ணியிருக்கிறேன்.

No comments:

Post a Comment