Sunday, 17 June 2018

திகில் - நான்கு

  ன்று மதியம் ஷ்யாமியின் அம்மா எங்கள் வீட்டுக்கு வந்தார். என் பெரியம்மாவிடம் மன்னிப்பு கேட்டார். "ரகுவுக்கு ஒண்ணும் அடியில்லையே?" என்று விசாரித்தார். பெரியம்மா சமாதானமாக ஏதோ சொல்ல, ஷ்யாமியின் அம்மா அழத்தொடங்கி விட்டார்.

"போலீசுல சொல்ல வேண்டியது தானே?" என்று பெரியம்மா கேட்டார். "நான் வேணா பேங்க் மேனேஜர்ட சொல்லி ஏதாவது பண்ணட்டுமா?"

நானும் ரகுவும் உள்ளிருந்து வந்தோம். அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று கேட்க வேண்டுமே? ரகுவைப் பார்த்ததும் ஷ்யாமியின் அம்மா, "ரகு, உனக்கு ஏன் இந்தக் கஷ்டம்? நீ அடி வாங்கணுமா?" என்று கண் கலங்கினார்.

"விடுங்கோ மாமி.. ஷ்யாமிக்கு எப்படி இருக்கு?"

"ஷ்யாமியைக் காணலியாம்" என்றார் பெரியம்மா.

அதிர்ந்தோம். "என்ன சொல்றேள்?"

ஷ்யாமியின் அம்மா தலையாட்டினார். "ஆமாம். முகத்தில அடிபட்டிருக்கு, டாக்டர்டே கூட்டிண்டு போறதா சொல்லிட்டு கார்த்தால ஷ்யாமியோட போனவர் திரும்பி வரலை. ஷ்யாமியைக் கூட்டிக்கிட்டு ஓடிப்போயிட்டார்னு நினைக்கிறேன்".

"ஷ்யாமி போனாளா?" என்ற ரகுவின் குரல் ஏமாற்றமா, ஏக்கமா, வருத்தமா, ஆத்திரமா என்று அறிய முடியாமல் கதம்பமாகத் தொனித்தது.

"சின்னப் பொண்ணு தானே? அப்பாவாச்சே? சமாதானமாவோ இல்லை கோபமாவோ இல்லை பயமுறுத்தியோ கூட அழைச்சுண்டு போயிருக்கலாம். அவளுக்கும் டெல்லி பிடிக்கும். எனக்குத்தான் இப்போ நாதியில்லாமே போயிடுத்து" என்றார் ஷ்யாமியின் அம்மா.

ரகுவின் குரலில் இப்போது ஆத்திரம் தொனித்தாலும் அவன் வயதுக்கு மீறிய விவேகமும் இருந்தது. "ஷ்யாமி கண்டிப்பா வருவா" என்றபடி உள்ளே சென்று சட்டை மாற்றிக் கொண்டு வந்தான்.

"எங்கேடா போறே?" என்றார் பெரியம்மா.

"ஷ்யாமியைத் தேடி" என்றவன், என்னைப் பார்த்தான். "என்னடா நீ வரியா? இல்லை இங்கே இருக்கப் போறியா?" என்று கேட்டான். விழித்தேன்.

"சும்மா இருடா" என்ற பெரியம்மாவைப் பொருட்படுத்தாமல் ரகு பேசினான். "நீ சும்மா இரும்மா. இந்த மாதிரி ஆட்களாலே தான் எங்க எல்லாருக்குமே கெட்ட பேரு. ஷ்யாமியை அடிச்சுப் போட்டிருந்தா நீங்க ரெண்டு பேரும் என்ன பண்ணுவேள்? அவளுக்கு என்ன ஆச்சுன்னாவது தெரிய வேண்டாமா? இந்த நாகூர்ல எங்கே போயிருக்க முடியும்? பஸ், ட்ரெயின் கூட இப்போ கிடையாது. நான் போய் பாத்துட்டு வரேன்" என்று விர்ரென்று சைக்கிளை எடுத்துக் கொண்டு விரைந்தான். "என்னடா வரியா?" என்றான் திண்ணையிலிருந்து. ஓடினேன்.

நாள் முழுதும் சைக்கிளில் கடைத்தெரு, பஸ் ஸ்டேண்ட், ரயிலடி என்று நாகப்பட்டினம் வரையிலும் தேடினோம். "ஒரு வேளை மாயவரம் போயிருப்பாங்கடா, அங்கே போலாம் வா" என்றான். 

"சைக்கிள்ள அவ்ளோ தூரம்லாம் போக முடியாதுடா. பெரியம்மா கவலைப் படுவா. ஒரு வேளை ஷ்யாமி வீட்டுக்கு வந்திருந்தாலும் வந்திருப்பா" என்று அவனைச் சமாதானப்படுத்தி வீட்டுக்கு வரும் போது இரவு ஒன்பது மணியாவது இருக்கும். 

பெரியம்மாவிடம் திட்டு வாங்கிக் கொண்டே ஆறிப்போன சாப்பாட்டையும் மாவடுவையும் ஒரு கை பார்த்தோம். "இனிமே அந்தப் பக்கம் போகாதீங்கடா. உங்களுக்கு எதுக்கு இந்த கஷ்டம்? அவ வீட்டுல ஏதோ போறாத வேளை, எப்படியோ போயிட்டு போறான்னு விடு. உனக்கு வயசாச்சு. எஸ்எல்சி வேறே. படிச்சுட்டு உருப்படற வேலையைப் பாரு" என்ற பெரியம்மாவிடம், காலையில் குடுகுடுப்பை சொன்னதைச் சொன்னான் ரகு. "இந்த வீட்டுல இனிமே நிம்மதி இல்லனு சொன்னாம்மா. அவன் ஏதோ பண்ணியிருக்கான்" என்றான்.

"நாளன்னிக்கு நாலாம் பிறையாச்சே?" என்று ஒரு கணம் தயங்கிய பெரியம்மா, "நாலாம்பிறையாவது பலி கேக்கறதாவது? ஏண்டா, ஒரு வேளை அந்தக் குடுகுடுப்பையும் ஷ்யாமியோட அப்பாவும் கூட்டா இருப்பாளோ?" என்றார். "எதுக்கும் நீங்க இனிமே அந்தப் பக்கம் போக வேண்டாம், சொல்லிட்டேன்". நான் தயிர்சாதம் மாவடு மோர்மிளகாயில் கருத்தாக இருந்தேன். 

சாப்பிட்டுவிட்டு மொட்டை மாடிக்கு வந்து படுத்தோம். அயர்ந்து தூங்கி விட்டோம். நள்ளிரவுக்கு மேலிருக்கும். "ரகு ரகு" என்ற குரல் கேட்டு விழித்தோம். 

ஷ்யாமி தான். சந்தேகமில்லை. ஊஞ்சல் பலகை மேல் நின்று கொண்டிருந்தாள். ரகு எழுந்தான். "இருடா" என்று அவனைத் தடுத்தேன். கேட்காமல் "ஷ்யாமி, கவனம். கீழே விழுந்துடப் போறே" என்றபடித் தொடர்ந்தவனைத் தொடர்ந்தேன். மாடி விளக்கை இயக்கி விட்டு அவர்களருகே சென்றேன்.

வயலெட் கலரில் சட்டை போட்டிருந்தாள். சட்டையெல்லாம் கசங்கியிருந்தது. திட்டுத் திட்டாய் ரத்தக்கறை. அவளை உட்காரச் சொன்னான். அவள் முகமெல்லாம் அடி பட்டு வீங்கியிருந்தது. ரகு அவளைத் தொட முயன்ற போது விலகினாள். "வேண்டாம், எனக்கு உடம்பெல்லாம் வலிக்குது" என்றாள். "ஏன் இப்படி இருக்கே?" என்ற ரகுவின் குரலில் ஆற்றாமை. "உங்கப்பாவை என்ன பண்றேன் பாரு" என்றான்.

"எங்கப்பாவை உன்னால ஒண்ணும் பண்ண முடியாது" என்றாள். "ரகு" என்றாள் மெதுவாக. "ஆமாம் என்னைக் கட்டிப்பேன்னு சொன்னியே? கல்யாணம் பண்ணிப்பியா?"

"நிச்சயமா. எஸ்எல்சி முடியட்டும். அது வரைக்கும் பொறுமையா காத்துண்டிருப்பியா?" என்றான். 'அடேய்' என்றேன் மனதுள்.

"நானும்" என்றாள். "உனக்கு அறுவது வயசானாலும் பொறுமையா இருப்பேன். நீ காத்துண்டிருப்பியா?"

"நிச்சயமா" என்றான். "சரி, உள்ளே போ. உங்கம்மா உன்னைத் தேடப் போறா"

"நான் இங்கே வந்தது யாருக்கும் தெரியாது" என்றாள். பிறகு, "ரகு.. எங்கம்மாவை நம்பாதே" என்றாள். கண அமைதிக்குப் பிறகு, "எனக்குப் பசிக்குது" என்றாள்.

எனக்குப் பொறுக்கவில்லை. "என்னடா இது ராத்திரிலே இப்படி? கீழே போலாம் வாங்க. பெரீம்மா பெரீம்மா" என்று ரகுவைப் பொருட்படுத்தாமல் கீழே ஓடினேன். "இருடா டேய்" என்று ரகு தொடர்ந்து வந்தான். பெரியம்மாவை எழுப்பி விவரம் சொன்னேன். அவருக்கு ஒரே கோபம். வேகமாக மாடியேறி எங்களுடன் வந்தார்.

ஷ்யாமியைக் காணோம். "இங்கதான் இருந்தாம்மா" என்றான் ரகு. 

விளக்கைப் போட்டு பக்கத்து வீட்டிற்குத் தாவி மாடிக் கதவைத் தட்டினோம். ஷ்யாமியின் பெரியம்மா ஓடி வந்தார். விவரம் சொன்னோம். "அதெப்படி சாத்தியம்? அவ அப்பா இழுத்துண்டு போறச்சே ஷ்யாமி அவன் பிடியை உதறிட்டு ஓடி வந்தாளாம். எதிரே வந்த பஸ்லே மோதி அடிபட்டு விழுந்துட்டாளாம். ரத்தம் ரத்தமா கொட்றதுன்னுட்டு அங்கயே டாக்சி போட்டு மாயவரம் பெரியாஸ்பத்திரிக்கு அழைச்சுண்டு போயிருக்கா. தையல் போட்டு கண் முழிக்கலையாம். இங்கே எப்படி வருவா?" என்றார்.

ரகுவும் நானும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டோம். "இல்லே.. இங்கே தான் இருந்தா. நாங்க ரெண்டு பேரும் பாத்தோம். என்னடா?" என்றான், என்னிடம்.

"ஆமாம், நானும் பார்த்தேன்" என்றேன்.

"மகமாயி, துர்க்கா பரமேஸ்வரி" என்று பெரியம்மா உடனே கீழே இறங்கி ஓடினார்.

"ஷ்யாமியோட அம்மா எங்கே?" என்றான் ரகு.

"மாப்பிள்ளை இங்கே வந்து விவரம் சொன்னதும், அவளும் கூடப் போயிருக்கா" என்றார் ஷ்யாமியின் பெரியம்மா. மாயவரம் ஆஸ்பத்திரியின் விலாசம் சொன்னார்.

    மறுநாள் பெரியம்மாவிடம் மாயவரம் போகவேண்டுமென்று அடம் பிடித்துப் பணம் வாங்கிக் கொண்டான் ரகு. பணம் கொடுத்த பெரியம்மா என்னிடம், "டேய்.. நீ வயசுல சின்னவன்னாலும் இந்திராவோட புத்திசாலித்தனமும் பொறுமையும் உங்கிட்டே இருக்கு. இந்த விடலையைக் கொஞ்சம் பாத்துக்கோடா. கூடப் போ. அவன் ஏதாவது பைத்தியக்காரத்தனமா பண்ணிடாம பாத்துக்கோ" என்றார். நள்ளிரவில் கண்ணால் பார்த்த ஷ்யாமிக்கு என்ன ஆச்சு என்று அறிந்துகொள்ள எனக்கும் ஆவல் - இருந்தாலும் புத்திசாலி என்று பட்டம் கொடுத்து விட்டதால் நான் எல்லாம் புரிந்தது போல் தலையாட்டினேன். "நான் பாத்துக்கறேன் பெரீமா. போயிட்டு உடனே வந்துடறோம்".

மாயவரம் போய் ஒன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை. ரகுவுக்கு மீசை அரும்பியிருந்தது என்றாலும் எங்களைப் பார்த்தால் பொடிப் பயல்கள் என்று நினைத்து ஒருவருமே சரியாகப் பதில் சொல்லவில்லை. சும்மா ஏவிசி காலேஜ், அரசாங்க ஆஸ்பத்திரி, சினிமா தியேடர், தனியார் மருத்துவமனை அங்கே இங்கே என்று அலைந்து விட்டு ஓய்ந்து போய்த் திரும்பினோம். "ஆஸ்பத்திரில அப்படி யாருமே வரலைனு சொல்லிட்டா" என்றோம்.

"எல்லாம் கெட்ட நேரம். நாளைக்கு மந்திரிக்கச் சொல்லி மரைக்காயர் வாஞ்சூர் கூட்டிட்டுப் போறதா சொல்லியிருக்கார். போயிட்டு வந்துடுங்கோ ரெண்டு பேரும்" என்றார் பெரியம்மா.

"வேறே வேலை இல்லேம்மா" என்றான் ரகு. எனக்கு மந்திரித்துக் கொள்ளலாம் போலிருந்தது. ஷ்யாமியைக் கண்ணால் பார்த்தேனே? "பசிக்குது" என்றாளே?

அன்றிரவு ஏதேதோ பேசியபடி மொட்டை மாடியில் விழித்திருந்தோம். ஒரு வேளை ஷ்யாமி வருவாளா? எப்போது தூங்கினோம் என்று தெரியாது. பெரியம்மா வந்து எழுப்பிய போது நன்றாக விடிந்து விட்டிருந்தது. "ரகு, காபி சாப்பிட்டு மரைக்காயர் கடைக்குப் போ. சொல்றதக் கேளு. மந்திரிக்கச் சொல்லி விபூதி வாங்கிண்டு வா. எனக்காக பண்ணு போ. வரும்போது இளசா ரெண்டு வாழைக்காய் வாங்கிண்டு வா. இந்தா. சாப்பிட வந்துடுங்கோ ரெண்டு பேரும். துரை சாயந்திரம் பஸ் பிடிச்சு திரும்ப காரைக்கால் போகணும் மறந்துடாதே" என்றார்.

பெரியம்மா கொடுத்த இரண்டு ரூபாயை வாங்கிக் கொண்டு ரகு வெளியேற, நான் அவனைத் தொடர்ந்தேன். பக்கத்து வீட்டுத் திண்ணையைக் கடக்கும் போது, "இன்னிக்கு நாலாம் பிறை இல்லே?" என்றான்.

"அதை ஏண்டா ஞாபகப் படுத்துறே?" என்றவன் திடுக்கென்று ரகுவிடம் "டேய், அங்கே பாருடா" என்றேன். 

திண்ணைக்குக் கீழே வாசல்படியில் முதல் நாளிருந்த கபாலத்தையும் காணோம். ரத்தத் திட்டையும் காணோம். கறுப்புப் பொட்டையும் காணோம். சுத்தமாக இருந்தது.

ரகு சிலையாக நின்றான். "அதெப்படிரா?" என்றான்.

"டேய், வாடா மந்திரிச்சுக்கலாம்டா" என்றேன்.

"இருடா. என்னடா இது பித்தலாட்டமா இருக்கு? ஷ்யாமியை நீயும் தானே பாத்தே?" என்றான். "இங்கே வா பாக்கலாம்" என்று இரண்டு வீடுகளுக்குமிடையே இருந்த கிணற்றின் வெளிச்சுவர் பக்கம் போனான். ஆமோதித்தபடி அவனைத் தொடர்ந்தேன். கீழேயிருந்து பார்தத போது ஊஞ்சல் பலகை வானத்தை மறைத்தது. "இந்த ஓரமா தானேடா நின்னுண்டிருந்தா?" என்றான். மேலேயும் கீழேயும் கிணற்றைச் சுற்றி வந்தபோது கவனித்தேன். அவனும் கவனித்திருக்க வேண்டும். தரையில் கபாலம். கபால நெற்றியில் நான்கு பொட்டுகள். கபால வாயில் கறுகறுவென்று தலைமுடிக் கற்றை. கபாலத்தின் இரண்டு பக்கமும் கூழாங்கற்கள். திடுக்கிட்டுப் பின் வாங்கினோம். மெள்ள நகர்ந்து கிணற்றுள் எட்டிப் பார்த்தோம். கீழே கீழே கீழே பம்புசெட்டு மோட்டார் இருந்த கிணற்றுச் சுவர் உள்ளடுக்கில் பளபளவென்று பட்டுப் புடவை. ஷ்யாமியின் அம்மா தரையிலெறிந்த புடவை கிழிக்கப்பட்டு பம்புக் குழாய், மோட்டார் என்று படர்ந்திருந்தது. பக்கத்தில் வயலெட் கலரில் சட்டை ஊஞ்சல் போல் ஆடிக்கொண்டிருந்தது.

வழக்கம் போல் இரண்டு வீட்டு பெரியம்மாக்களையும் அழைத்து வந்தேன். "இது யாரோ வேணுமென்னே பண்ணியிருக்கா" என்ற பக்கத்து வீட்டுப் பெரியம்மா வேலைக்காரிகளை விட்டு இடத்தைச் சுத்தம் செய்யச் சொன்னார். "நேத்திக்கு மத்தியான சண்டையிலே புடவையைக் கிழிச்சுப் போட்டுட்டா. இங்கே தான் விழுந்திருக்கா புடவை?" என்றார் சாதாரணமாக.

மாயவரம் போய் வந்ததைப் பற்றிச் சொன்னான் ரகு. "அங்கே ஆஸ்பத்திரிலே யாருமே வரலைன்னா மாமி"

ஷ்யாமியின் பெரியம்மா தலையிலடித்துக் கொண்டார். "என்ன கூத்தோ போ. இவாளைக் கூட்டிண்டு போகணும்னு இப்படி ஏதாவது திட்டம் போட்டானோ என்னவோ? என்ன பண்றது சொல்லு? எங்காத்து மாப்பிள்ளை அப்படி. அப்பா இருக்கும் போதே சொன்னார், உன்னை நன்னா வச்சுக்கலைனா வந்துடுனு. அப்போல்லாம் குழந்தை குழந்தைன்னுட்டு இப்போ ஓடி வந்துட்டா. அப்பாவும் இல்லாம புருஷனும் போய் ஒண்டிக்கட்டையா நான் எப்படி அவளை வச்சுக்க முடியும்? அதான் அடிச்சாலும் புடிச்சாலும் உனக்குப் புருஷந்தாண்டினு அவளை அவனோடயே துரத்தி அனுப்பிச்சுட்டேன். அப்போ ஷ்யாமிக்கு அடிகிடி படலையா? இவளை அழைச்சுண்டு போகப் பிளானா? எல்லாரும் டெல்லி ஓடிட்டாளோ என்னவோ? இந்த மாதிரி திராபையெல்லாம் கல்யாணம் பண்ணிண்டா இதான். ரகு இதெல்லாம் நீ ஒண்ணும் பட்டுக்காதேப்பா. நீயுண்டு படிப்புண்டுன்னு ஒப்பேறு" என்றபடி உள்ளே சென்று விட்டார். 

எனக்கே இடி விழுந்த மாதிரி இருந்தது. ரகு நிலைகுலைந்திருந்தான். என்ன குடும்பம் இது?

    மரைக்காயரைப் பார்த்துவிட்டு வரும்போது, மொய்தீன் பிள்ளைத் தெருவில் குடுகுடுப்பையைப் பார்த்தோம். ரகு ஓடிச் சென்று அவன் கைகளைப் பிடித்து விட்டான். குடுகுடுப்பை அவனை உதறி விட்டு, "கையை விளங்காமே பண்ணிடுவேன், உஷார்" என்றான்.

ரகு விடாமல், "நீ தானே கிணத்தடியில வரைஞ்சுட்டு போனே? உனக்கு நாங்க என்ன கெடுதல் செஞ்சோம்? உன்னால் இப்போ ஒரு சின்னப் பொண்ணு என்ன ஆச்சோ ஏது ஆச்சோனு தெரியாம இருக்கா. நல்லா இருப்பியா? தூ!" என்றான்.

குடுகுடுப்பை ஒதுங்கிக் கொண்டு, "பவானி" என்றான். பிறகு ரகுவை உற்றுப் பார்த்தான். தன்னுடைய மேற்சட்டைப் பையிலிருந்து விபூதி போல ஏதோ எடுத்து ரகுவின் முகத்தருகே ஊதினான். "சரி தான், போயா" என்று விலகிய ரகுவைக் கையைப் பிடித்து நிறுத்தினான். "பவானி சொல்றா. ஒரே நாளு ஒரே மாசம் ஒரே வருசத்துலத் தேடி வருவா துஷ்டப் பொண்ணு" என்றான். ரகு அவனைப் பொருட்படுத்தாமல் என்னுடன் நடந்தான்.

காய்கறிக்கடையில் வாழைக்காய் எடுத்துக் கொண்டு பணம் கொடுக்கச் சட்டைப் பையில் கை விட்டு, "டேய், அம்மா கொடுத்த ரெண்டு ரூபாயைக் காணோம்டா" என்றான்.

"குடுகுடுப்பை" என்றேன்.

No comments:

Post a Comment