Sunday, 17 June 2018

அமெரிக்க சோடாக் கம்பெனிகள்

இரண்டு அமெரிக்க சோடாக் கம்பெனிகள் உலகை ஆக்ரமித்த வரலாறு!
1886- ஆம் ஆண்டு, அமெரிக்காவின் அட்லாண்டா மாநிலத்தில் ஜான் ஸ்டித் எனும் மருந்தாளுநர் கோக்கின் சோடா இனிப்பு கரைசலை உருவாக்கினார். அன்று நாளொன்றுக்கு 9 பாட்டில்கள் தலா 2 ரூபாய்க்கு விற்கப்பட்ட கோக், 2000ஆம் ஆண்டின் முதல் 4 மாத இலாபமாக மட்டும் 5000 கோடி ரூபாயை அள்ளியிருக்கிறது. மேலும் இன்று தனது சோடாக் கரைசலையும் கோக், கிளாசிக் கோக், காஃபின் இல்லாத கோக், டயட் கோக், செர்ரி கோக், ஃபேண்டா, ஸ்பிரிட், மிஸ்டர் பிப், மெல்லோ யெல்லோ என 25 வகைகளாய் பெருக்கியிருக்கிறது. இன்று அதன் சொத்து மதிப்பு சுமார் 85 ஆயிரம் கோடி ரூபாய்.
1898ஆம் ஆண்டு பெப்சியின் சோடாக் கரைசலை கால்ப் ப்ராதம் என்ற மருந்தாளுநர் உருவாக்கினார். குளிர்பானம், நொறுக்குத் தீனி, உணவகங்கள் என்று பெப்சியின் பேரரசு 150 நாடுகளில் 4,80,000 ஊழியர்களுடன் நடந்து வருகிறது. சொத்துமதிப்பு சுமார் ஒரு இலட்சம் கோடி ரூபாய்.
உலக குளிர்பான சந்தையில் 46 சதம் வருவாய் கோக்கிற்கும், 21 சதம் பெப்சிக்கும் போய்ச் சேருகிறது. இப்படி இரண்டு நிறுவனங்ளும் உலகின் தாகம் தீர்க்கும் தேவன்களாக, பல்லாயிரம் கோடி ரூபாயை ஆண்டுதோறும் சுருட்டி வருவது எப்படி சாத்தியமானது? நம்மூரில் தயாரிக்கப்படும் கலர் கோலி சோடாவின் கரைசலை விட பெப்சி – கோக்கின் கரைசல் அப்படி ஒன்றும் உயர்ந்ததல்ல. கார்பன் வாயு, இனிப்பு, வண்ணம், நீர் கொண்டு கலக்கப்படும் இக்கரைசல் தயாரிப்பதற்கு எளிதானதே. அதி உயர் தொழில்நுட்பமோ, ரகசியமோ எதுவும் கிடையாது. அதே சமயம் இந்தக் கோலாக்களில் இருக்கும் மற்ற வேதிப்பொருட்கள், போதை போல அடிமைப்படுத்தும் பொருட்கள் எதுவும் மற்றவர்களுக்குத் தெரியாது. இவற்றை கண்டுபிடிப்பு இரகசியம் என்ற பெயரில் அந்த நிறுவனங்கள் வெளியிட மறுக்கின்றன.
ஆனாலும் உலகெங்கும் சாதாரணத் தொழிலாக நடத்தி வந்த இத்தகைய சிறு குளிர்பான உற்பத்தியாளர்களை இரண்டு அமெரிக்க நிறுவனங்கள் ஒரு நூற்றாண்டாய் ஒழித்து விட்டன. இந்த இரண்டு கோலாக்களும் ஏதோ சொர்க்கத்தில் தயாரித்து அளிக்கப்படும் அழகான, தரமான அமுது என்ற சித்திரத்தையும் தமது வஞ்சகமான பிரச்சாரத்தால் ஏற்படுத்தி விடட்ன.

No comments:

Post a Comment