Wednesday, 4 July 2018

மனக்குறளி

அச்சம்பாக்கம் என்ற ஊரில், பிரேமன் என்பவன் வசித்து வந்தான். அவன் முட்டாள்; சோம்பேறியாக வாழ்ந்தான்; எந்த வேலைக்கும் செல்ல மாட்டான்; யாராவது இரக்கப்பட்டு உணவு கொடுத்தால் தின்பான்; இல்லையென்றால், பட்டினி கிடப்பான்.
தினமும், ஒருவேளை உணவாவது கிடைத்து விடும். ஆனால், ஒரு வாரமாக ஒருவேளை உணவு கூட சரிவரக் கிடைக்கவில்லை.
என்ன செய்யலாம் என்று யோசித்தவன், 'வெளியூருக்குச் சென்றால் பிழைத்துக் கொள்ளலாம்' என, முடிவு செய்து, காட்டு வழியாக நடந்தான்; களைப்பாக இருந்தததால், ஒரு மரத்தின் நிழலில் அமர்ந்து யோசனையில் ஆழ்ந்தான்.
அந்த மரம் கேட்பதையெல்லாம் கொடுக்கும், 'கற்பக விருட்சம்' என்பது அவனுக்கு தெரியாது.
'சாப்பிட்டு, ஒரு வாரம் ஆச்சு, நல்ல உணவு கிடைத்தால் எப்படி இருக்கும்' என்று, நினைத்தான், பிரேமன். என்ன ஆச்சரியம்! அடுத்த நொடியே, அவன் முன் அறுசுவை உணவுகள் வந்தன. 
'இந்த உணவு எப்படி வந்தது' என்று அவன் சிந்திக்கவில்லை; உணவை, அள்ளி அள்ளி சாப்பிட்டான். சற்று நேரத்தில், எல்லாவற்றையும் காலி செய்து விட்டான்.
உண்ட மயக்கம் கண்களைத் தழுவியது.
'கட்டில், மெத்தை இங்கே இருந்தால் நன்றாக துாங்கலாமே...' என்று நினைத்தான்.
அடுத்த நொடியே, மெத்தை அங்கே இருந்தது; அதில் படுத்தவன், 'ஆஹா... ஆஹா... கால், கைகளை பிடித்து விட, பணியாளர்கள் இருந்தால் எப்படி இருக்கும்' என்று நினைத்தான்.
பணியாளர்கள் தோன்றி, அவன், கை, கால்களை அமுக்கி விட்டனர். நன்றாக உறங்கி விட்டான்.
சற்று நேரத்தில், கண் விழித்தவனுக்கு, நடந்ததெல்லாம் வியப்பாக தெரிந்தது. 
'நினைப்பதெல்லாம் நடக்கிறதே... ஒருவேளை, இந்த மரத்தில் பூதம் இருக்குமோ... அது என்னைக் கொன்று தின்று விட்டால்...' என்று நினைத்தான்.
மறுநொடியே, ஒரு பூதம் தோன்றி, அவனை அடித்துக் கொன்றது; முட்டாள் தனத்தால், அவன், மாண்டு போனான். 
குட்டீஸ்... நினைத்ததெல்லாம் கிடைக்கும் போதே, 'உஷார்' ஆகியிருக்க வேண்டும்; சிந்திக்காததால் வந்த விளைவு தான் இது! எப்போதும் நல்லவற்றையே நினையுங்கள்.

No comments:

Post a Comment