Sunday, 8 July 2018

மாயை

காலை என்பது மலைகளுக்கே உரியது.கோடையிலும் மெல்லிய குளிர் பரவுகிறது.நேற்றிரவு பெய்த கோடை மழை புற்கள் செடிகள் முட்கள் என எல்லாவற்றிலும் பனித்துளிகள் போல ஒளிர்கிறது.
ரோஜாவும்,செவ்வந்தியும், யானைக்காது போன்ற சேம்பிலைகளும் நீர்த்துளிகளுடன் காலை சூரியனில் மின்னுகின்றன.
கையில் தேநீருடன் நின்றேன்.அவள் வருமுன்னே என்னால் உணரமுடிகிறது.பூவும்,பௌடரும் கலந்த மணம்.கணேஷ்ஷ்ஷ் மெல்லிய சீறலாய் அழைக்கிறாள்.நான் திரும்பாமலே ம்ம்.. என்கிறேன்.நீ ஸ்கூலுக்கு போறதுக்கு முன்ன எனக்கு புக் தந்துட்டு போ.
,….
நைட் ரொம்ப நேரம் லைட் எரிஞ்சிச்சு தூக்கம் வர்லயா
படிச்சிட்டிருந்தேன்.சார் இல்லை?
ம்ம் காலையிலயே பீட் பாக்க தொம்பரெட்டி போயாச்சு.நைட் தான் வரும்.உனக்கு இன்னிக்கு சனிக்கிழம ஸ்கூல் அரைவேள தான.சேத்து சமைக்கட்டுமா கண்களில் ஒன்றுமே காண்பிக்காமல் கேட்டாள்.பெண்மையின் தந்திரங்களுக்கு முடிவேயில்லை.ஆண் அதை எளிதில் கடக்க முடியாது.
வேணாம் நான் மத்தியானம் அப்டியே ஊருக்கு போறேன் என்றேன் அவள் கண்களை பார்க்காமலே.
என்னிடமிருந்து தப்பித்து ஓடுகிறாயா.அது உன்னால் முடியுமா என்ற பாவனையுடன் என்னைக் கடந்து சென்றுவிட்டாள்.
ரோசலினின் அசைவுகள் எனக்கு அம்மாவை நினைவூட்டுகின்றனவா? அம்மா மட்டுமே வளர்த்ததால் அவளையே எல்லா பெண்களிடமும் தேடுகிறேனா?அப்பா இருந்திருந்தால் தெளிவாகச் சொல்லித் தந்திருப்பாரா?
அம்மாவின் மரணத்திற்குப் பின் இந்த ஜவ்வாது மலைப்பகுதியில் வேலை கிடைத்து தனியாக வந்த போது வனத்துறை அதிகாரியான ரூபனின் அறிமுகம்.பக்கத்து வீடு.தம்பி தனியா இருக்கீங்க என்ன உதவின்னாலும் கேளுங்க என்றே ரூபன் என்னை வரவேற்றார்.என்ன காரணமோ ரூபனுக்கும் ரோசலினிற்கும் சரியான புரிதல்கள் இல்லை.இவர்கள் நடுவில் அலெக்ஸ் தான் இழுபடுகிறான்.அருமையான குழந்தை.அவனை ஒருநாள் ரோசலின் அடித்த போதுதான் கொழந்தய அடிக்காதிங்க என்று அவளிடம் பேசினேன்.அதன்பின் தனியாக நான் இருப்பதால் எனக்கு அவ்வப்போது சமைப்பதை தர ஆரம்பித்தாள்.புத்தகம்,இலக்கியம் என்று தொடர்ந்த எங்கள் உறவு தற்பொழுது எல்லையை மீறத்துடிக்கிறது.
குழந்தை பெற்ற பெண்களுக்கே உரிய முதிர் இளமையே என்னை ஈர்த்திருக்கிறது.திமிர்,அலட்சியம்,அழுந்தும் சிகப்பு,தோள்கள்,ஓடை மணலில் நீரோடிய வரிகள், பிரசவ முத்திரைகள்,கனிவு,கோபம்,தாய்மை,மென்மை,என்னை என்ன செய்வாய் என்ற வசீகரிக்கும் பார்வைகள்,சிணுங்கலான ரகசிய குரல்,கூர்மை,ஆணின் பலவீனங்களை அறிந்த மதர்ப்பு…..நாக்கு ஒட்ட வைத்த மீன் குழம்பு,இன்னும் கொஞ்சம் என்று சாதம் வைக்கும் கரிசனம்,…..
என் பார்வைகளிலேயே என்னை அறிந்து கொண்டாள்.அவளும் தனக்கு வாய்க்காத ஆளுமையை என்னிடத்தில் கண்டிருக்கலாம்.என்னிடம் அதிக உரிமைகளை எடுக்கிறாள்.
நான் கற்ற தத்துவங்களும்.அறங்களும்,புத்தகங்களும் அவளைக் கண்ட கணத்தில் செயலற்றுவிடுகின்றன.காலங்காலமாய் இயற்கை உண்டாக்கிய யுத்தம் தொடர்கிறது.பூமிக்கும்,வானுக்கும்,இருளுக்கும் ஒளிக்கும்,நிலைத்தலுக்கும் மாயைக்கும்,வேருக்கும்,நீருக்கும்,ரௌத்ரத்திற்கும்,கனிவிற்கும்,அறிந்தவைக்கும்,அறியாமைக்கும் சத்தியத்திற்கும் அநீதிக்கும் இப்பிரபஞ்சத்தில் நடக்கும் போராட்டத்தின் முடிவு என்ன?ஆணும் பெண்ணும் இணைய முடியுமா .நீயும் நானும் மறைந்து ஒன்றாகிவிட முடியுமா?….,
என் எல்லா சிந்தனைகளையும் உடைக்கிறாள்.இது சரியா?பிறனில் விழையாமை,பேராண்மை என்னில் இல்லையா?அம்மா இருந்திருந்தால் இந்த குழப்பங்கள் இருந்திருக்காதோ.சாளரத்தின் வழியே ரோசியின் நடமாட்டம் தெரிகிறது.அவளின் நளின அசைவுகளே என்னை விழ வைத்தன.எனக்கும் அவளுக்கும் இடையில் இந்த ஒரு சுவர் மட்டுமே.பெண் எனும் மாயப்பிசாசு! எத்தனை உண்மை,இக்கணம் என்னையே நான் வெறுக்கிறேன்.அம்மாவின் மடியினில் புதைந்து சிறுவனாகி விட மனம் துடிக்கிறது
அம்மா கம்பீரமான எளிய பேரன்பு.
முட்டச் சிறகினில் வைத்தென்னை சீராட்டியவள். உனக்குத்தான்டா என்று அவள் சமைத்த கீரையும்,மல்லித் துவையலும்…..எனக்காகவேதுடித்த அன்பு உயிர் எங்கே?அவள் கற்பித்த மரபு என்னை காக்குமா.கணேசா எப்பவும் புள்ளயார நெனச்சிக்கோடா.அவர் பேரு தான் உனக்கு.எந்தக்குறையும் வராது அம்மாவின் குரல்..
வேழ முகமும்
விளங்கு சிந்தூரமும்
அஞ்சு கரமும்
அங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட
நீலமேனியும்…
அவள் கூறும் துதி…
அம்மா ஏன் நீ என்னுடனில்லை.ஏன் என்னைத் தனியனாக்கினாய்?? நீ கற்பித்த இறை என்னைக்காக்குமா?
தாயாய் எனக்குத்
தானெழுந் தருளி
மாயாப் பிறவி
மயக்கம் அறுத்து…,.
வேழ முகத்தோன் என்னைக் காப்பானா?,…என் மயக்கம் சரியா??
அன்னா கரினினாவை ரோசியிடம் கொடுத்துவிட்டு நான் திங்கள் காலையில நேரா ஸ்கூலுக்கு வந்திடுவேன் என்றேன்.
நீ இந்த வாரம் இருப்பன்னு பாத்தேன்.நாளைக்கு கறி கொழம்பு வைக்கலாம்னு நெனைச்சேன் என்றவள் சட்டென என் கண்களை உற்றுப்பார்த்தாள்.இருவரும் அறிந்து கொண்டோம்.எனக்கு அப்படியே அவளை…..
வேகமாக பள்ளிக்கு சென்று விட்டேன்.
பீஞ்ச மந்தை தான் இன்னிக்கு காம்ப் என்ன பன்னீர் எல்லாம் இருக்குமா ரூபன் கேட்டார்.ரெடி சார்.
என்றான்.
கணேஷ் இன்னிக்கி காட்டுல ரெண்டு சந்தன மரங்களுக்கு எலக்ட்ரிக் வேலி போடப்போறோம்.
எனக்கு பள்ளி விடுமுறையாகையால் இவர்களுடன் இணைந்து கொண்டேன்.
நான் ட்ரெய்னியா இங்க வந்தப்போ ஜவ்வாது மலை முழுக்க சந்தன மரம் தான்.ரோடோரத்துல சாதாரணமா பாக்கலாம்.இப்ப….இருக்கற ஒன்றிரண்டு மரங்களுக்கு மெஷின் கன் பாதுகாப்பதுத் தர வேண்டிய நிலம ரூபன் சாரின் அங்கலாய்ப்பு.
காட்ல வெறகு ஓடைக்க சொல்ல சந்தன குச்சி சேந்து வந்துடும் சார்.அடுப்பெரியும்போது வாசனை வரும் அதல்லாம் அப்ப சார் பன்னீர் சொன்னான்.
காட்டில் மரங்களும் புதர்களும் அடர்ந்திருந்தன.இதுக்கு மேல நடந்து தான் போகனும்.
இது எட்டி மரம்.கோடையில தான் பூக்கும்.லவங்கம் போன்ற பசியநிற பூக்கள் பாதையெங்கும் .பார்க்கும்போதே அந்தப்பசுமை மனம் முமுக்க பரவுகிறது.காஞ்சிர மரம்னு இலக்கியத்துல சொல்வாங்க என்றேன.
ரூபன் சிரித்தவாறே உங்களுக்கு இலக்கியத்துல ஆர்வம் .எனக்கு காடு தான் பிடிக்கும்.உயர்ந்த நெல்லி மரங்களும்,மஞ்சள் மலர்களுடன் காட்டு வாகை மரங்களும்,புங்க மரங்களும்,பசுமையான வேங்கை மரங்களும்,தேக்கு மரங்களும் பரவி ,பல கொடிகளும் ,மூங்கில் புதர்களுமாய் காடு உயிர்ப்புடன் இருந்தது.நேற்றிரவு பெய்த கோடை மழையினால் மரங்களிலிருந்து சிதறிய நீர்த்துளிகள் எங்களை நனைத்தன.கீரி ஒன்று குறுக்கே ஓடியது.ஓணான்கள் தலையை ஆட்டின.பல பூச்சிகளும் தேனீக்களும் மரங்களின மீது பறவைகளின் சிறகடிப்புகளும் எனக்கு வேறு உலகத்தை காண்பித்தன.ஊரின் எந்த இரைச்சலும் இன்றி காடு எத்தனை இயல்பாய் இருக்கிறது.
சார் அங்க பாருங்க பன்னீர் காண்பித்த இடத்தில் யானைப்பிண்டம்.
நேத்து ராத்திரி யானைக்கூட்டம் இங்க இருந்திருக்கு.ஒரு கொம்பனும் மூனு பெண் யானைகளும் ரெண்டு குட்டிகளும் இருக்குங்க.தண்ணி தேடி செண்பகத்தோப்பு டேமுக்கு வந்திருக்கனும் ரூபன் சார் சொல்லச்சொல்ல எனக்கு அவற்றைக் காண ஆவலாயிற்று.
யானைங்க மனுசங்கள ஏன் சார் தாக்குது.
ரூபன் சொன்னார் இல்ல கணேஷ் எந்த விலங்கும் அதுங்களோட எல்லைக்கு போனா மட்டுமே நம்மளத் தாக்கும்.கானகம் எல்லா உயிர்களுக்குமான இடம்.மனுஷந்தான் அங்க போயி இயற்கை சமநிலையை அழிக்கிறான். .யானைங்க பொதுவாக கூட்டங்கூட்டமா இடம் பெயரும் இயல்புடையவை.காலங்காலமா அவை காட்டில் மலையில் குறிப்பிட்ட வழித்தடங்கள வச்சிருக்கும்.நாம அந்த வழியை ஆக்ரமிச்சா குழம்பிப் போயி எதிர்த்து தாக்கும்.
கொஞ்ச தூரத்தில் ஒரு பெரிய மாமரம் .ஒரு பெரிய வீடளவு இடத்தில் பரவியிருந்தது. தூரத்திலேயே மாம்பழ வாசனை.மரத்தில் ஏராளமான குரங்குகள்,அணில்கள்,பறவைகள்,…கீச் காச்சென்று சத்தம்.அது ஆத்து மாங்கா சார் வெறும் நாரு.பன்னீர் தந்த மாம்பழம் நாராகத்தான் இருந்தது.ஆனாலும் அது காட்டின் ருசி.
அங்கே எங்களுடன் மேலும் சிலர் சேர்ந்து கொள்ள கருமையான தண்டுகளும்,நல்ல பச்சை வணண இலைகளுமுடைய சந்தன மரங்களுக்கு மின் வேலி அமைத்தனர்.சந்தன மரமே ஒரு காடு போன்ற ஈர்க்கும் அழகுடனிருந்தது.சிறிய முட்டை வடிவ இலைகள் மரத்தின் கிளைகளே தெரியாவண்ணம் செழித்திருந்தன.குட்டி நட்சத்திர பொட்டுகளாய் மங்கிய மண் வண்ண மலர்கள்.சின்ன பம்பர வடிவ பச்சை காய்கள்.அந்த மரத்தின் பசுமையே ஒரு தனி ஒளியாய் காட்டில் ஒளிர்ந்தது.கீழே கிடந்த காய்ந்த காய்களை பொறுக்கிய போது பன்னீர் சொன்னான் அந்த கொட்டய ஒடச்சி துன்னா கிறுகிறுன்னு வரும் சார்.
ரூபன் சிரித்தவாறேஅது ஆயிலி சீட்.விதையில இருக்கற எண்ணெய் தல சுத்த வைக்கும்.சந்தன மரம் ஒரு ரூட் பேரசைட்.அதால தனிச்சு வாழ முடியாது.மத்த மரங்களோட வேர்களில் இருந்து இதோட வேர் தண்ணிய உரிஞ்சுக்கும்.எட்டி,புங்கன்,நெல்லி ,மகா கனி மலை வேம்பு போன்றமரங்களின் பக்கத்துல தான் இவை வளரும்….என்றார். காடு எனக்கு பல தகவல்களை தந்து கொண்டே இருந்தது.
காட்டில் தீ மூட்டி அங்கேயே பிடுங்கிய குச்சிக்கிழங்குகளைச் சுட்டு பன்னீர் தந்தான்.இயற்கையின் மணமும் ருசியும் என்னுள்.
காட்டோடை நீரை கொதிக்க வைத்து போட்ட பாலில்லா தேநீரின் சுவையை நான் ஊரில் என்றுமே அறிந்ததில்லை.
அன்று மாலை தான் திரும்பினோம்.எனக்கு மனிதர்கள் வாழும் இடங்கள் எத்தனை அற்பமானவை எனத் தெரிந்தது.காடு எத்தனை அற்புதமான வாழ்விடம்.எத்தனை உயிர்கள் சின்னஞ்சிறு புழுவிலிருந்து மாபெரும் யானை வரை…..
ரோசி என்னைப்பார்த்ததும் முகத்தை திருப்பிக்கொண்டாள்.கொஞ்ச நேரங்கழித்
து காப்பியுடன் என் அறைக்கு வந்தவள் நீயும் காடு சுத்த கத்துக்காத.இன்னிக்கு லீவு தான இங்கயே இருக்க வேண்டியது தான அடிக்குரலில் சீறினாள்.
என்ன சீப்பா நெனைக்கறயா கணேஷ்.அவளின் விசும்பல் என்னை பதற வைத்தது.
இல்ல ரோசி ப்ளீஸ் அழாத.குழந்தை போன்ற கண்கள்.இவளையா மாயப்பிசாசு என்றேன்.இவள் இடம் மாறி விழுந்த தேவதை.என் மனம் தாள இயலா உணர்வில் பொங்கியது.காட்டில் பார்த்த சந்தன மரம் போலவே அவளும் ஒளிர்ந்தாள்.
இன்னிக்கு ஊருக்கு போயிட்டு ,ரெண்டு நாள்ல
வறேன் .உனக்கு வேற புக்ஸ் வாங்கிட்டு வறேன்.நீ அழாத என்னால தாங்க முடியல என்றேன்.
சட்டென என் கைகளைப் பற்றியவள் என்னைப் பார்த்து கலங்கிய கண்களுடன் சிரித்தாள்.சரி நீ எப்ப வருவேன்னு பாத்துட்டே இருப்பேன் என்று கூறி சென்றுவிட்டாள்.அம்மாவின் கண்கள் எல்லா பக்கத்திலிருந்தும் என்னை நோக்குவது போலிருந்தது.
இரண்டு நாட்்களில் வேலூரின் புழுக்கம் என்னை மூச்சு திணற வைத்தது.தூசியும்,சாக்கடைகளும் இரைச்சலும்..,மலையை மனம் நாடியது.பனியும் குளிரும் ரோசலினும்……
ஆலங்காயத்தில் கடைசி பஸ்ஸைஇரவு ஒன்பது மணிக்குப் பிடித்தேன்.கோடையின் உக்கிரம் புழுங்கி அனைவரையும் கச கசத்தது.நாய்க்கனூர் வளைவு தாண்டும்போதே மலைக்காற்றின் குளிர்ச்சியை உடல் உணர்ந்தது. டானா கேட்டில் சொன்னார்கள்,யானை கழுதைக்கட்டி மேட்டில் இருக்கிறது என்று….
கண்டக்டர் வண்டியை நிறத்தி லைட்டை ஆப் பண்ணிட்டா அது போயிடும் என்று அனுபவ அறிவில் சொன்னார்.பத்து மணிக்கு காவலூர் அப்சர்வேட்டரியை பஸ் தாண்டியது.எனக்கு தூக்க மயக்கத்தில் கண்கள் சுழன்றன…
அய்யோ யான!!!!! !!!சத்தங்கள் வண்டி நின்றதில் முன்னோக்கி விழுந்தேன்.டிரைவர் எல்லா லைட்டையும் ஆஃப் பண்ணிவிட்டார் .யாரும் சத்தமே குடுக்காதீங்க கண்டக்டரின் மெல்லிய குரல்.
மெல்லிய நிலவொளியில கரிய நிழல் சாலை வளைவில் தெரிந்தது.நிதானமாக நடந்து வந்த கொம்பனின் அசைவுகள் பேருந்தில் உயிர் பயத்தை அதிகரித்தது.எத்தனை பெரிய உருவம்…கருமை,.. பேருந்தின் பக்கத்தில் வந்தது.என்னால் அதன் காதுகளை தந்தத்தை பார்க்கமுடிகிறது.நிலவில் கருமை பளபளக்கிறது. ஆலமரத்தின் அடிப்பாகம் போன்ற கோடுகளுடன அதன் மத்தகம் சிலிர்ப்பது தெரிகிறது.திடீரென அதன் தும்பிக்கை சன்னல் வழியாக உள்ளே நீள்கிறது.சிறிய கரிய விழியை அருகில் பார்க்கிறேன்.ஆழமான சோகமான உக்கிரமான கருணையான நீர்ததும்பும விழிகள்.இதன் கண்களில் என்ன ? என்னை பார்த்து என்ன சொல்கிறது. உருண்ட தும்பிக்கை என் மீது உரசுகிறது. சொரசொரப்பு..,எனக்கு அவ்வேளையிலும் சிறு வயதில்அப்பாவின் ஷேவ் செயெ்த தாடை ஸ்பரிச ஞாபகம்…
தும்பிக்கையை வெளியே இழுத்த கொம்பன் அப்படியே மேலே உயர்த்தி ப்ப்பாம்ம்…என பிளிறியது.பஸ்ஸில் மூச்சு விடும் சத்தம் கூட இல்லை.அப்படியே பேருந்தின் முன் புறம் சென்று சாலையை கடப்பது போல நின்றது.இப்பொழுது அது வந்த வளைவிலிருந்து மற்றோரு யானை வருவது தெரிகிறது.இதை விட உயரம் குறைவான யானை அதன் பின்னே ஒரு குட்டி வரிசையாக வருகின்றன.கொம்பன் முன்னே கம்பீரமாய் நடக்க அதன் பின் ஒரு பெண் யானை பிறகு இரண்டு குட்டிகள் அவற்றின் பின் இன்னும் இரண்டு பெண் யானைகள் …குட்டிகளை நடுவில் விட்டு பாதுகாப்பாக நகர்கின்றன.ஊர்வலம் கொஞ்சம் கொஞ்சமாய் மறைகிறது.சாலையின் மறுபக்க மூங்கில்களில் அசைவுகள்.ஏறத்தாழ ஒரு மணி நேரமாகியிருந்தது. இரவு பன்னிரண்டு மணிக்கு ஜமுனாமரத்தூர் வந்து சேர்ந்தோம்.
நம் எல்லையைத் தாண்டினாத்தான் யானைத் தாக்கும் ரூபன் சார் சொன்னாரே.எல்லையை மீறாதே என்று எனக்கு எச்சரிக்கத்தான் கொம்பன் வந்ததா?
யார் நீ என் தகப்பனா? முழுமுதல் கடவுளா?விக்னேஸ்வரனா? ரெஜினாவிற்கும் எனக்குமான எல்லை இந்த சுவர் தானே இதை நான் மீறினால் என்ன ஆகும்.
கனவில் யானை வந்தது.யானையே அம்மாவாய்தெரிந்தது யானை தும்பிக்கை என்னைத் தடவியது அம்மாவின் கை போன்ற மென்மை…..
என்ன கணேஷ் ரொம்ப நேரமா கதவ தட்டறேன்.பஸ்ஸ யானை மறிச்சதாமே.பயந்துட்டீங்களா?அது ஒண்ணும் பண்ணாது.எங்கிட்ட வராதிங்கன்னு ஒரு எச்சரிக்கை அவ்ளோதான்.ரோசலின் உங்களுக்கு இட்லி எடுத்துட்டு வரட்டுமான்னு கேட்டா…..
இல்ல சார் அதெல்லாம் வேணாம்.எனக்கு இங்க இருந்து ஸ்கூல் தூரமா இருக்கு .அங்கயே பக்கத்துல ரூம் கெடச்சிடுச்சி.நான் வீட்ட காலி பண்றேன்.
ஜன்னல்களைத் திறக்கவே இல்லை.ரோசலினைப் பார்க்காமலேயே கிளம்பி விட்டேன்….

No comments:

Post a Comment