உலோகங்களில் உயர்ந்ததான தங்கத்திற்கு உலகத்தைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற ஆசை உண்டானது. ஒவ்வொரு இடமாகப் பார்த்துக் கொண்டே வந்தது. ஒரு இடத்தில் யாரோ பெருமூச்சு விட்டு அழும் குரல் கேட்டது. யார் அழுகிறார் என்று பார்க்கும் நோக்கத்துடன் அழுகுரல் வந்த திசையை நோக்கிச் சென்றது. அங்கே கொல்லனுடைய உலைக்களம் இருந்தது. அங்கு இரும்புத் துண்டு ஒன்றை சம்மட்டியால் அடித்துக் கொண்டிருந்தார்கள். வேதனை தாங்க முடியாமல் அந்த இரும்புத் துண்டு அழுது புலம்பிக் கொண்டிருந்தது. அதை அன்புடன் பார்த்த தங்கம்,
“ இரும்பே அனைத்து உலோகங்களும் உன்னைப் போல் அடிபடப் பிறந்தவைகள்தான். இப்படி அழுது புலம்புவதால் என்ன பயன்? நானும் உன்னைப் போல் அடி வாங்குகிறேன். எனவே வேதனையைப் பொறுத்துக் கொள். அழாமல் இருக்கப் பழகிக் கொள்” என்றது.
அதைக் கேட்ட இரும்பு,
“தங்கமே, உனக்குக் கிடைக்கும் தண்டனை வேறு, எனக்குக் கிடைக்கும் தண்டனை வேறு. நீ பொறுத்துக் கொண்டு அமைதியாக இருக்கலாம். என்னால் அப்படி இருக்க முடியாது” என்றது.
உடனே தங்கம் “நானும் உன்னைப் போல்தான் அடி வாங்குகிறேன். இருவர் தண்டனையும் வேறு என்று எப்படிச் சொல்கிறாய்?” என்று கேட்டது.
“தங்கமே, உன்னை, உன்னைப் போன்ற தங்கமா அடித்துத்து துன்புறுத்துகிறது? நமக்கு வேண்டாதவர்கள், பகைவர்கள் துன்புறுத்தும் போது தாங்கிக் கொள்ளலாம். என் நிலையைப் பார். என்னைப் போன்று இன்னொரு இரும்பு அல்லவா என்னைத் துன்புறுத்துகிறது. இதை என்னால் எப்படித் தாங்கிக் கொள்ள முடியும்?” என்றபடி மீண்டும் கண்ணீர்விட்டது.
No comments:
Post a Comment