Sunday, 8 July 2018

நிஷாகந்திப் பூ


நிலவு வந்ததும் மலர் மலர்ந்ததா
மலர் மலர்ந்ததால் நிலவு வந்ததா -
நீல இரவிலே தோன்றும் நிலவைப் போலவே,
நிஷாகந்தி மலர்கள் மலர்வது அழகு
மொட்டு மலர்வது அழகு மலர்ந்த பின்னோ அழகோ அழகு
ஒவ்வொரு மலரும் ஒவ்வொரு அழகு
இரவிலும் மின்னிடும் நிஷாகந்தி மலர் - கேரளா, ஊட்டி, கோவை போன்ற குளிர் பிரதேசங்களில் மட்டுமே வளரும் தன்மை கொண்ட நிஷாகந்தி செடிகளில் ஆண்டுக்கு ஒரு முறை பூக்கள் பூக்கிறது.
வெண்மை நிறத்தில் அதிக வாசனையுடன் இரவில் மட்டுமே
பூக்கும் மலர்களை, "அனந்த சயனப் பூ" என்று அழைக்கின்றனர்.
நிஷாகந்தி பூக்கள் இரவு சுமார் 9 மணிக்கு மேல் பூத்து
அதிகாலை 4 மணிக்குள் வாடி விடுகின்றன.
பூக்களில் விஷ்ணு பாம்பு படுக்கை சயனத்திருப்பது போன்ற தோற்றம் இருப்பதால், அனந்த சயனப் பூ என அழைப்படுகின்றது.
செடியில் உள்ள இலைகளில் இருந்து பூக்கள் மலர்கின்றன.
இரவின் நறுமணம் எனப் பொருள்படும் நிஷாகந்தி மலர் மலையாள இலக்கியங்களில் மிகவும் குறிப்பிடத்தக்க இடம் பெற்றுள்ளது.
நிஷாகந்தி மலரை பெரும்பாலும் யாருமே பார்த்திருக்க முடியாது. ஏனென்றால் இதன் ஆயுள் மிகக் குறுகியது. இதன் மொட்டு சூரியன் மறைந்த பிறகு விரியத்தொடங்கி மறுநாள் சூரியன் உதிப்பதற்குள் வாடிவிடும். இது முழுமையாக விரிந்திருப்பது நள்ளிரவில் மட்டுமே.
ஆண்டுக்கு ஓரிருமுறை மழைக்காலத்தில் மட்டும் மொட்டு உருவாகி இரு வாரங்களில் முழுமை அடைகிறது.
ஒரு மாலை வேளையில் அது விரியத் தொடங்குகிறது.
நள்ளிரவில் அது சுமார் ஒரு அடிக்குமேல் விட்டமுள்ள அழகிய மலராக மலர்ந்து மணம் வீசுகிறது.
விடிவதற்குள் வாடித் தலை சாய்ந்து விடுகிறது.
மணமான அன்றே விதவையான பெண்ணுக்கு உருவகமாக இந்தமலரை மலையாள இலக்கியங்கள் கூறுவதுண்டு. விரகதாபத்தின் சோகமலராக இந்த அழகிய மலரை மலையாளக் கவிதைகள் வர்ணிக்கின்றன.
நிலாவின்றே நாட்டிலே நிஷாகந்தி பூத்தல்லோ
மானச மைனே வரூ.. மதுரம் நுள்ளி தரூ..
நின் அரும பூ வாடியில் நீ தேடுவதாரே ஆரே..
என்ற மலையாளப் பாடல் மதுரமாய் ரீங்கரிக்கும்.
இது கள்ளிச்செடி வகையைச் சேர்ந்தது. பெரும்பாலான கள்ளிச் செடிகளைப் போலவே இதுவும் இலைகளை நட்டாலே அதிலிருந்து துளிர்விட்டு வளரக்கூடியது.
செடி எளிதாக வளரும் என்றாலும் சில வகை மண்ணில் இது பூப்பது அரிது. சில இடங்களில் பூப்பதற்கு பல ஆண்டுகள் ஆகலாம். பொருத்தமான மண்வகையும் காலநிலையும் அமைந்தால் ஓரிரு ஆண்டுகளில் பூக்க ஆரம்பிக்கும். மழைக்காலங்களில் மட்டுமே மொட்டுவிடும். ஆண்டுக்கு ஒருமுறையோ இருமுறையோ பூக்கலாம்.
நிஷாகந்தி வாசனையும் அழகும் நள்ளிரவில் காண்பது
அற்புதமான அனுபவம்.
தமிழ்ப் புலவர் கபிலர் கூறும் ’நள்ளிருள் நாறி’ (Selenicereus) இரவில் மணம் வீசும்நிஷாகந்தி மலராகும்..‘இருள் வாசி’ எனப்படும் இருவாட்சி மலர் என்றுகூறுவோரும் உண்டு.
என் மகன் சிறு வயதில் விவசாயக்கண்காட்சி பார்க்க தன் தந்தையுடன் சென்றிருந்தார்.
மழலை மொழியில் அம்மாவுக்குச் செடி என்றால் பிடிக்கும் இந்தச் செடியை வாங்கித் தாருங்கள் என்று கேட்டு ஒரு செடி வாங்கிவந்து என்னிடம் கொடுக்க, குழந்தை ஆசையாக வாங்கி வந்திருக்கிறதே என்று வீட்டுத்தோட்டத்தில் நட்டேன்.
சமீபத்தில் மொட்டு விட்ட அதன் தோற்றம் வித்தியாசமாக இருக்கவே வலையில் தேடிப் பார்த்து அதன் பெயர் அபூர்வமான நிஷாகந்திப் பூ என்று அறிந்து கொண்டேன்.
No automatic alt text available.
Image may contain: plant, flower and nature

No comments:

Post a Comment