Friday 27 July 2018

மலரும் நினைவுகள்

நாஸ்டால்ஜியா (மலரும் நினைவுகள்) என்பது, ஒரு காரணமும் இன்றி, பரணில் என்றோ பத்திரப்படுத்திய தேய்ந்து போன கிராமஃபோன் தகடு போன்றது! அதிலிருந்து வெளிப்படும் குரல் கரகரப்பாக இருப்பினும், அந்த அடிப்படை இசை நினைவுத் தெளிவாக, மனதைக் கவ்வி ரீங்காரமிட வைக்க வல்லது.

விரைவில் விற்கப்படவிருந்த, பல காலமாக காலியாக இருந்த, பள்ளிக்காலத்தில் வாழ்ந்த பழைய வீட்டுக்குள் நுழைகையில் அன்னியோன்னியமான ஒரு அன்னியன் போல் உணர்ந்தேன். மஞ்சள் படிந்த முன்பக்க சுண்ணாம்பு சுவற்றில் நான் நட்டு நீர் ஊற்றி வளர்த்த புளிய மரத்தின் நிழல் நீண்டிருந்தது, சிறுவயது மழைக்கால இரவுகளில் பல கரங்கள் கொண்ட ஒரு கரும்பேய் போல அம்மரம் காட்சியளித்து பயமுறுத்தியது இப்போது ஒரு புன்முறுவலை வரவழைத்தது.

வழக்கமாக வீட்டுக்கு வெள்ளையடித்த மாடசாமி கூட அறியாத சில ரகசிய இடங்களில் இருந்த பழைய கவிதைக் கிறுக்கல்களின் நாயகி நினைவில் நிழலாடினாள். பழைய புத்தகங்கள் இருந்த அறையில் ஏதோ ஒரு புத்தகத்தை எடுத்துப் புரட்டுகையில், கறுப்பு வெள்ளை புகைப்படத்தில், இரட்டைப் பின்னலுடன், மையிட்ட கண்களுடன், கன்னங்குழித்த வெட்கப் புன்னகையுடன் அவளைப் பார்க்கையில், அப்போது காற்றில் தவழ்ந்த மல்லிகை மணமும், கலகல சிரிப்புச் சத்தமும், இப்போது நனவு போலவே!

அம்மண அறைகளில் அலைகையில் அன்று குடும்ப புகைப்படங்கள் தொங்கிய வெற்றுச் சதுரங்கள் இன்று எண்ண வட்டங்களைத் தோற்றுவித்தன. ஓடு வேய்ந்த கூரை ஓட்டைகளின் நடுவில் மரச்சட்டங்கள், வானத்துக்கு எதிரான சவாலில் வென்று ஜுராஸிக் எலும்புகள் போல காட்சியளித்தன. உடைந்த செம்மண் தரையில் ஒற்றை கிளப் ஏஸ் சீட்டு காலை நெருடியபோது வீட்டு ரேழியில் டிரம்ப்ஸ் (Trumps) சீட்டாட்டம் ஆடிய பள்ளி நண்பர்கள் (மொட்டை, குள்ளிபா, ஜொல்லு, சோடா, உசிலை, துலுக்ஸ்) குறித்த பல ஞாபகங்கள் ஒரு சுனாமி போல உணர்வில் மோதின.

குளிர்ச்சியாக இருந்த கூடத்து மரத்தூண்களை கட்டிக்கொண்டு கடைசி முறையாக வாசனை பார்த்தேன். ஆறடி உயர அப்பா உறுதியாக தூணில் கையைப் பதித்திருக்க, அவரது புஜத்தில் தொங்கி ஊஞ்சலாடிய நான்காம் வயது ஞாபகமும், “இன்னொரு காபி குடிக்கறியாடா?” (3 வயதிலேயே பாலுக்கு பதில் காபி குடிக்க ஆரம்பித்து விட்ட முதல் ஆள் நானாகத் தான் இருப்பேன்!) என்ற அம்மாவின் வாஞ்சையான குரலும்,  சுற்றம் சூழ வாழ்ந்த அந்த வீடெங்கும் காலை வேளைகளில் தவழ்ந்த, அம்மாவின் பிரத்யேக காபி மணமும் இப்போது நினைவுக்கு வந்து கண்ணில் நீர் திரையிட்டது. இந்த வீடும் இப்போது இறந்து கொண்டு தான் இருந்தது!

பின் பக்கம் இருந்த சிறிய தோட்டத்தில் செடி கொடிகள் கவனிப்பார் அற்று கண்டபடி வளர்ந்திருந்தன, குப்பைக்கூளமாக இருந்த முற்றத்தின் நடுவில் இருந்த துளசி மாடம் மட்டும் பளிச்சென சுத்தமாக இருந்தது ஆச்சரியத்தை வரவழைத்தது. ஒரு துளசி இலையை வாயிலிட்டு மெல்லுகையில், ஏனோ மனதுக்கு மிக இதமாக இருந்தது. துளசி மாடத்தின் கூண்டிலிருந்த அகல் விளக்கு எண்ணெய்ப் பசை யாரோ விளக்கேற்றியதற்கும், மாடத்தின் சமீபத்திய தூய்மைக்கும் அத்தாட்சியாக இருந்தது.

சட்டைப்பையில் ஐஃபோன் கிணுகிணுத்தது. வீட்டை விலைக்கு வாங்கவிருந்த பில்டரின் அழைப்பு. நான் பதிலளிக்கவில்லை!

No comments:

Post a Comment