Friday, 27 July 2018

யானைத் தலை

குறும்பு, லீலைகள் என்பவையெல்லாம் மனிதர்களுக்கு கற்றுக்கொடுத்ததே தெய்வங்கள்தானோ என நினைக்கும் அளவுக்கு பகவத் சிலுவிஷமங்கள் புராணங்களில் நிறைந்து கிடக்கின்றன
சரி... சிவன் இங்கு என்ன செய்கிறார்? பார்வதி தேவி தண்ணீர் கொட்டிக் கொட்டி குளித்துக் கொண்டிருக்கிறாள். சிவனுக்கு ஒரு நப்பாசை. நம் தேவி எப்படி குளிக்கிறாள் என்பதை அவள் அறியாமல் பார்க்கவேண்டும். அதாவது... ஒருபெண் குளிப்பதை அவளுக்குத் தெரியாமல் இன்னொரு ஆண் (கணவனே என்றாலும் தெரியாமல் பார்க்கிறானல்லவா?) பார்த்தால் எப்படி இருக்கும் என்பதை பரீட்சித்துப் பார்க்க ஆசைப்பட்டார் சிவன்.
அதுபோலவே பார்வதி தேவி ஜலக்கிரீடை செய்யும்போது மறைந்து மறைந்து நின்று தேவியின் தரிசனத்தை அவருக்கே தெரியாமல் பெற்றுக் கொண்டிருந்தான் பரமசிவன்.
‘சகல லோகங்களையும் கண்காணிக்கும் சக்தி பெற்ற’ பராசக்திக்கு தான் குளிப்பதை இரண்டு கண்கள் திருட்டுத்தனமாக பார்ப்பது தெரிந்திருக்காதா என்ன?உணர்ந்தாள்.
தான் தன்னந்தனியாக குளித்துக் கொண்டிருப்பதை யாரோ ரசம் சொட்ட பார்த்துக் கொண்டிருப்பதை தன் சக்தியால் தெரிந்துகொண்ட பார்வதி திடுக்கிட்டாள். பெண் தெய்வம் என்றாலும் பெண் தானே?
உடனே... அவசரமாக தனது கச்சைகளையும், வஸ்திரங்களையும் பதறியபடியே உடுத்திக்கொண்ட பார்வதி, தன்னைப் பார்த்தவனை தேடினாள். டேய்... யாரங்கே? பராசக்தியின் ஸ்நானத்தை ஒளிந்து பார்க்கும் அளவுக்கு துணிச்சல்காரன் யார்?
என கோபத்தில் பார்வதிதேவி சத்தம்போட... பட்டென்று வெளியே வந்த சிவன்... ‘தேவி... யாம்தான் ஒரு சின்ன திருவிளையாடல்... அதற்குப் போய் ஏன் இப்படி கோபப்படுகிறாய்? சாந்தம்... சாந்தம்...’ என்கிறார்.
எது ஸ்வாமி திருவிளையாடல் ஒரு பெண் குளிப்பதை இன்னொரு ஆண் மறைந்து நின்று கண்களால் சுகிப்பது உங்கள் திருவிளையாடல் என்றால்... என் திருவிளையாடலையும் கொஞ்சம் பாருங்கள்.
சக்தியும் தன் திருவிளையாடலை அரங்கேற்றினாள். “மனைவியென்றும் ‘பாராமல்’ நான் குளித்ததைப் பார்த்த நீர்... யானைத் தலையனாகவும், மனித உடம்பாகவும் மாறக் கடவுவது...” என கோபத்தால் சாபமிட்டாள்.
அந்த க்ஷணத்திலேயே பரமசிவன் அவ்வாறே ஆனார். அதாவது யானை முகத்துடனும் மனித உடம்பாகவும் புது வடிவம் பெற்றார். அதாவது... விநாயகன் வேறு யாரும் அல்ல. பரமசிவன்தான் என்கிறது இக்கதை.
இன்றும் ஆற்றங்கரை, குளத்தங்கரைகளில் எல்லாம் விநாயகர்கள் நிறைந்திருப்பதை பார்த்திருப்பீர்கள்.அது எதற்கு என்றால்...?
‘டேய்... குளிப்பது உன் பத்தினியாக இருந்தாலும் எட்டிப் பார்க்காதே. பார்த்தால் என் கதிதான் உனக்கும்’ என்று பரமசிவன் ஆண்களிடம் சொல்வதற்குத்தான். இது கதை.

No comments:

Post a Comment