Wednesday, 25 July 2018

நவரசம் & அறுசுவை தகவல்கள்






 Home / Madras

Madras



 Madras, Coouam river | மெட்ராஸ்... நல்ல மெட்ராஸ் -1 ( புதிய தொடர்) | VIKATAN
மெட்ராஸ்... நல்ல மெட்ராஸ் -1 ( புதிய தொடர்)
தமிழ் மகன்

சென்னை என்றதும் அதன் பிரிக்க முடியாத வாசனையாக கூவம் ஆறும் நினைவுக்கு வரும். துர்நாற்றம் வீசும் சாக்கடை. மூக்கைப் பிடித்துக்கொண்டுக் கடக்கப்பட வேண்டிய கழிவுக் கால்வாய். கறுப்பு ஆறு. இப்படியாகத்தான் இந்த ஆறு இன்றைய மக்கள் மனதில் பதிந்திருக்கிறது. 

ஆனால், ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் அந்த ஆற்றின் வாசம் அது அல்ல; அந்த ஆற்றின் நிறம் அது அல்ல. கங்கை, காவிரி  போல அதுவும் ஓர் ஆறு. அதில் மக்கள் நீர் பிடித்தார்கள். நீர் குடித்தார்கள். குளித்தார்கள். இந்த ஆற்றுக்கும் ஓர் அருமையான கடந்த காலம் இருந்தது.

அது சாக்கடையாகவே தோன்றி சாக்கடையாகவே கடலில் கலக்கும் ஆறு என்று பலரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். நம் நினைவில் தேங்கிவிட்ட இந்த ஆறு, ஒரு நாளில் சென்னை மண்ணுக்கு உயிரூட்டியது. இந்த ஆற்றின் நீரில்தான் சென்னை மக்கள் பயிர் செய்தார்கள். தமிழகத்தின் எல்லா ஆறுகளுக்கும் நேர்ந்த கதி இதற்கும் நேர்ந்தது. மழை நாளில் நீர் ஓடும். பின்னர் வெயில் நாள் முழுதுமே கானல் நீர் ஓடும். 

வி. கல்யாண சுந்தரம் ஒரு கட்டுரையில், 'இன்று கூவத்திலே ஆனந்தமாகக் குளித்துவிட்டு, திருவல்லிக்கேணி கோயிலுக்குச் சென்றேன்' என்று குறிப்பிடுகிறார். பச்சையப்பர் தன் நாட்குறிப்பிலே தினமும் காலையில் கூவம் ஆற்றில் குளித்ததைச் சொல்கிறார். மழை நாள் தவிர மற்ற நாளில் சும்மாத்தானே கிடக்கிறது என்று நினைத்து, அதிலே சென்னையின் கழிவுகளை ஓடவிடலாம் என்று யாரோ நினைத்தார்கள். கழிவுகளைச் சுமப்பதற்கென்றே பிறந்தது போல சென்னையின் அத்தனைப் பகுதிகளையும் சுற்றிச் சுற்றி ஓடியது இந்த நதியின் பிழைதான்.
பூந்தமல்லி, அரும்பாக்கம், அமைந்தகரை வரை நேராக ஓடி வந்த ஆறு சென்னையில் வரையும் கோலம், 'மெட்ராஸைச் சுற்றிப் பார்க்கப் போறேன்' என்பதாக இருக்கும். இது தவிர சென்னையில் அடையாறு ஆறு, ஓட்டேரி நுல்லா ஆகிய ஆறுகளும் ஓடின. சென்னையில் பயணிக்கும் இந்த ஆறுகள் அனைத்தும் திருவள்ளூர் பகுதியில் ஆரம்பித்து ஓடுபவை. கூவம் ஆற்றின் மொத்த நீளமே 72 கிலோ மீட்டர்தான். சிறிய குன்றுகள், மழை ஓடைகள் சேர்ந்து உருவான ஆறுகள் இவை. கூவம் ஆற்றின் ஆதி ஊற்று சட்டரை என்ற ஊரில் தொடங்குவதாகச் சொல்கிறார்கள். 

ஓட்டேரி நுல்லா,  புளியந்தோப்பு, வால்டாக்ஸ் ரோடு வழியாக பேசின் பிரிட்ஜ் என்று பிரயாணிக்கும் கூவம், அமைந்தகரையில் இருந்து இன்றைய ஸ்கை வாக் பின்புறம் நடந்து, பச்சையப்பன் கல்லூரியின் பின் வாசல் வழியாக ஸ்பர்டாங்க் ரோடு, தில்லையாடி வள்ளியம்மை, கிரீம்ஸ் ரோடு, ஆனந்தவிகடன் பின்புறம், காயிதே மில்லத் கல்லூரி,  சிந்தாதிரிப்பேட்டை, எழும்பூர் வழியாக வருகிறது. அங்கே இரண்டாகப் பிரிந்து ஓடுகிறது. இந்த இரண்டு ஆற்றுக்கும் இடைப்பட்ட பகுதி ஒரு தீவாக இருக்கிறது. அதைத்தான் நாம் தீவுத்திடல் என்கிறோம். இந்த அழகிய தீவையும் ஆற்றையும் மனதில் கொண்டுதான் பிரிட்டீஷி இந்திய கம்பெனியின் ஏஜென்ட்டான பிரான்சிஸ் டே சென்னையிலே வர்த்தகம் செய்ய விரும்பினான் என்பார்கள்.
சென்னையில் தீவுத் திடல் அருகே செயின்ட் ஜார்ஜ் கோட்டையைக் கட்டினான். தீவுத்திடல் உருவாக காரணமாக இருந்த இந்த இரண்டு கிளைகளும், மீண்டும் நேப்பியர் பாலம் அருகே அதாவது சென்னை பல்கலைக்கழகத்தின் பக்கவாட்டிலே மெரினா கடற்கரையில் கடலில் சேர்கிறது. நாம் கூவம் ஆற்றை பாலங்கள் குறுக்கிடும் இடத்தில் மட்டுமே பார்த்துவிட்டு, அது நம் வாழ்க்கையில் குறுக்கிடும் ஒரு தடையாகவே நினைக்க ஆரம்பித்துவிட்டோம். சிக்னல் கிடைக்காத எரிச்சலில் இந்த ஆற்றின் குறுகலான பாலத்தையும், நாற்றத்தையும் திட்டித் தீர்க்கிறோம். சென்னை நகரம் முழுக்க எத்தனைப் பாலங்கள்... அவை சென்னையை வழி நடத்தும் பாதைகள். அது மட்டும் நல்ல ஆறாகக் காப்பாற்றப்பட்டிருந்தால் இப்போது மெட்ரோ ரயில் என்ற கோடிகளை விழுங்கும் இந்த குட்டி ரயில் தேவைப்பட்டிருக்காது.
ரோமாபுரி மன்னர்கள் இந்த ஆற்றின் வழியே வர்த்தகம் செய்ததற்கான ஆதாரங்கள் புதை ஆய்வுகளில் கிடைத்துள்ளன. ரோம் தேசத்து வைன் ஜாடிகள், நாணயங்கள் இந்த ஆற்றின் கரையில் கண்டெடுக்கப்பட்டன. இந்த ஆற்றின் கரையில் புகழ் வாய்ந்த பல கோயில்கள் கட்டப்பட்டன. திருவீர்கோலம், வீரபத்ரசாமி கோயில், திருவேற்காடு போன்ற பல கோயில்களும் ஊர்களும் அமைந்துள்ளன. எல்லா ஆற்றங்கரை நாகரிகம் போலவே கூவம் ஆற்றுக்கும் ஒரு நாகரிகம் இருந்தது. ஆறு மாசுபட்டதும் ஆந்த ஆற்றின் கரைகளில் வசிக்கும் மக்கள் மாசுபட்டதும் சேர்ந்தே நடந்தது. இன்று சென்னை கூவம் ஆற்றின் கரையில் வசிக்கும் மக்கள் இந்த மண்ணின் பூர்வகுடிகளாக இருக்கக் கூடும். அவர்கள் பெரும்பாலும் ரிக்‌ஷா ஓட்டுகிறார்கள், படிக்காதவர்களாக இருக்கிறார்கள், நிரந்தரம் இல்லாத கூலி வேலைகளைச் செய்கிறார்கள், ஒரு சாண் வயிற்றுக்காக சமூகம், 'வேலை' என்று ஏற்றுக்கொள்ளாத வேலைகளைக்கூடச் செய்யத் துணிகிறார்கள். ஆற்றின் தூய்மையும், அவர்களின் தூய்மையையும் காப்பாற்ற வேண்டியது நல்ல அரசு செய்ய வேண்டிய கடமை. நட்ட நடு நகரம் இப்படி இருக்கவே கூடாது.

இந்த ஆற்றைக் காப்பாற்ற வேண்டும் என்று அண்ணா ஆட்சிக் கட்டிலில் அமர்ந்ததும் 1967-ல் திட்டம் வகுத்தார். ஆற்றைத் தூய்மைப்படுத்த வேண்டும். அதிலே போக்குவரத்து நடைபெற வேண்டும் என்பது அவர் கண்ட கனவு. அப்போது கருணாநிதி பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்தார். பின்னர் கருணாநிதி முதலமைச்சர் ஆனபோது திட்டம் விரைவுபடுத்தப்பட்டது. 

குமணன் துறை, குகன் துறை, பாரி துறை என்ற பெயரில் எல்லாம் கூவம் ஆற்றிலே படகுத் துறைகள் அமைக்கப்பட்டன. ஆற்றில் படகுகள் ஓடின. அதில் நானும் பயணம் செய்தேன்.

அதைப் பற்றி அடுத்து பார்ப்போம்....

chennai, Madras, coouvam river | மெட்ராஸ்... நல்ல மெட்ராஸ் -2 ( புதிய தொடர்) | VIKATAN

ன்னுடைய பதின்ம வயதின் தொடக்கத்தில் சென்னையில் பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்றாக சென்னை மின் வாரியக் கட்டடம் இருந்தது. அதற்கு ஒரே ஒரு காரணம்தான். அதில் என் அப்பா வேலை பார்த்தார். என் தந்தை பாலகிருஷ்ணன் அப்போது மின்வாரியத்தின் சென்னை செயலகத்தில் நல்ல பொறுப்பில் இருந்தார். இப்போதிருக்கும் 10 மாடி மின்வாரியக் கட்டடம் அப்போது இல்லை. அதற்கு அருகே ஒரு நான்கு மாடிக் கட்டடம் மட்டும். அதில்தான் மின்வாரிய செயலகம் செயல்பட்டது. அப்படி அவரைப் பார்க்கச் சென்றபோது எனக்கு அந்தக் கூவம் படகுப் பயணம் வாய்த்தது. 

அது 1975-ம் வருடம். சீருடை அணிந்த படகோட்டிகள் படகில் இருந்தனர். நான், 'படகில் போகலாம்பா...!' என்று அப்பாவிடம் அடம்பிடித்தேன். அவர் படகையும், என்னையும், கூவத்தையும் மாறி மாறிப் பார்த்தார். ஒரு முடிவுக்கு வந்தவராகப் படகுத் துறையை நோக்கி நடந்தார். டிக்கெட் வாங்கிக்கொண்டு படகில் ஏறினோம். அந்தப் படகோட்டியும் என்னைப் போலவே சந்தோஷப்பட்டதை என்னால் மறக்கவே முடியாது. இருவரையும் ஏற்றிக்கொண்டு அந்தத் துடுப்புப் படகு, மெல்ல அசைந்து அசைந்து அந்த கரிய நீரில் மிதந்தது. படகில் ஏறியதும் எல்லோரையும்போல தண்ணீரில் கையைவைக்க நினைத்தேன். அப்பா,  'தண்ணீரைத் தொட்டுவிடாதே...!' என்று தடை உத்தரவு போட்டார். தண்ணீரைத் தீண்டாமல் எப்படி பயணிப்பது? கைகளைக கட்டிவிட்டு நீந்தச் சொல்வது, ஹாண்டில் பாரைத் தொடாமல் பைக் ஓட்டுவது போன்ற சிரமம்தான் நீரில் கைபடாமல் படகில் பயணிப்பது. கூடவே அதிர்ச்சிகரமான முடிவை அப்பா எடுத்தார். 'அடுத்த நிறுத்தத்திலேயே இறங்கிவிடலாம்!' என்றார். 

மின்வாரியத்துக்குப் பின்னால் படகில் ஏறி, கெயிட்டி திரையரங்கு அருகில் இறங்கிவிட்டதாக நினைவு. அவ்வளவு சிறிய பயணத்தை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. ஆனாலும் அப்பா போதும் என்று சொல்லிவிட்டார். 

கலைஞர் கொண்டு வந்த திட்டம் என்பதாலேயே, கூவத்தின் சகிக்க முடியாத வாசனையைப் பொறுத்துக்கொண்டு அதில் அப்பா பயணித்தார் என்பதை வெகு நாட்களுக்குப் பிறகுதான் புரிந்துகொள்ள முடிந்தது. என்னைப் பொறுத்தவரை படகில் பயணிக்க சந்தோஷம் மட்டும்தான். அரசியல் பாசமோ, வாசமோ எதுவும் அப்போது தெரியவில்லை. அப்பாவுக்கு தி.மு.க மீது இருந்த பாசத்தையும் மீறி, படகில் ஏறிய அடுத்த நிறுத்தத்திலேயே இறங்க வைத்துவிட்டது கூவத்தின் நாற்றம். அது மட்டும் அல்ல; கூவம் படகுப் பயணத்துக்கு மக்களிடையே வரவேற்பு இல்லை. படகில் ஏறிச் செல்பவர்களையும் பலரும் விநோதமாகப் பார்த்தனர் என்றே இப்போது உணர்கிறேன்.
அந்தப் படகுத் துறைகள் ஸ்பெர்டாங்க் ரோடு, கிரீம்ஸ் ரோடு, காயிதே மில்லத் கல்லூரி, கெயிட்டி தியேட்டர் என நான்கு அல்லது ஐந்து இடங்களில் சிலகாலம் இயங்கியது. கூவத்துக்கு வரும் கழிவுகளைக் கட்டுப்படுத்துவதில் பெருத்த சிரமம் இருந்ததால் படகுப் பயணங்கள் நிறுத்தப்பட்டன. சீருடை அணிந்த படகோட்டிகள் என்ன ஆனார்கள், அந்தப் படகுகள் எங்கே... ஒரு மாபெரும் முயற்சியின் அத்தாட்சியாக அந்தப் படகுத் துறைகளின் சிதலங்கள் இப்போதும் இருக்கின்றன. மீண்டும் கூவத்தைக் குளிப்பாட்ட அடிக்கடி ஆயிரம் கோடி ஒதுக்கப்படுவதாக அறிவிப்பு வரும்போதெல்லாம் இந்த ஆற்றின் அழுக்காற்றை சீர்படுத்தி அழுக்காறு (பொறாமைகொள்ளுதல்) ஏற்படுத்துவார்களா? என என் நெஞ்சம் பதைக்கும்.
இந்தத் தொடரை வரவேற்று பலரும் கடிதம் எழுதியிருந்தார்கள். அதில் குமார் என்பவரின் கடிதம் எனக்கும் கூவத்தில் மீன் பிடிக்கச் சென்ற நினைவுகளை ஏற்படுத்தியது. மழை நாளில் அமைந்தகரைக்கு (ஆற்றங்கரையில் அமைந்த அந்த ஊருக்கு என்ன அழகான பெயர்?) அந்தப் பக்கத்தில், கூவத்தில் நல்ல நீர் ஓடும். துணி சலவை செய்பவர்களுக்கு அதுதான் இடம். இல்லாவிட்டால் சைதாப்பேட்டை ஆற்றில் தோய்ப்பார்கள். அமைந்தகரை ஆற்றின் ஓரத்தில் சுரப்பு நீர் எடுத்துக் குடிக்கவும் பயன்படுத்துவார்கள். மழை நாட்களில் மீன்கள் எதிர் திசையில் துள்ளும். என் வயது பையன்களோடு வந்து மீன்பிடிக்கும் பெரியவர்களை பார்த்துக்கொண்டிருப்போம். மீன் சிக்கிவிட்டால் எங்களுக்கே கிடைத்துவிட்டது மாதிரி திருப்தி. இன்னொரு வாசகர் கூவம் உருவாகும் இடத்தில் அதன் பெயர் கூபம் என்று தெரிவித்திருந்தார். உண்மைதான். கூபம் என்றால் ஆழமான நீர்நிலை என்று அர்த்தம். 

இப்போது ஸ்கை வாக் மால் இருக்கும் இடத்தில் அப்போது அருண் ஓட்டல் இருந்தது. அந்த இடத்தில் இருந்து பார்த்தால் வடபழனி கோயில் கோபுரம் நன்றாகத் தெரியும். இடையில் பெரிய அளவில் வீடுகள் இருக்காது. அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும். நெல்சன் மாணிக்கம் சாலையை, லயோலா கல்லூரியோடு இணைக்கும் அந்த அண்டர் கிரவுன்ட் பாலம் அப்போது கட்டப்படவில்லை. ஒரு ரயில்வே கேட் மட்டும் இருக்கும். அதை திறக்கும் சிறிய இடைப்பட்ட நேரத்தில் வாகனங்களும் ஆட்களும் எதிரும் புதிருமாகக் கடப்பார்கள். ஒரு நகரம் வளர்வதற்கு சாலைகளும் பாலங்களும் எத்தனை அவசியம்...? சென்னையில் ரயில்வேக்களுக்குக் குறுக்கே கட்டப்பட்ட பாலங்கள் அத்தனையும் அந்த வளர்ச்சியின் அடையாளங்கள். கூவத்தின் குறுக்கே கட்டப்பட்ட பாலங்களுக்கு அடுத்து ரயில் குறுக்கிடும் இடங்களில் பாலங்கள் கட்டப்பட்டன.
சென்னையில் எழும்பூரில் உள்ள ரயில்வே பாலமும் சென்னை ஈகா தியேட்டருக்கு எதிரே இருக்கும் பாலமும் என் வயதுக்கு மூத்தவை. அதாவது 50 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டவை. பிரிட்டீஷார் காலத்தவை. மற்ற பாலங்கள் பெரும்பாலும் 1970-களுக்குப் பிறகு கட்டப்பட்டவை. அதற்கு முன்னால்? ரயில்வே கேட்டுகள்தான். நேரு பார்க் அண்டர் கிரவுண்ட் பாலம், துரைசாமி பாலம், மாம்பலம் பாலம் எல்லாமே 70-களுக்குப் பிறகு கட்டப்பட்டவைதான். மக்கள் கேட்டுகளுக்குள் புகுந்து ரயில் வருவதற்கு முன் கிராஸ் செய்வார்கள். சைக்கிளை, மூட்டை முடிச்சுகளைத் தூக்கிக்கொண்டு ஓடுவார்கள். கோடம்பாக்கம் பாலம் 1965-ல் கட்டி முடிக்கப்பட்டது. அதுவரை அந்தச் சாலை கேட்டைக் கடந்துதான் எல்லா நடிக, நடிகைகளும் ஸ்டுடியோக்களுக்குச் செல்ல வேண்டியிருக்கும். கேட் திறக்கிற வரை காரில் அவர்கள் அமர்ந்திருப்பார்கள். தங்கள் அபிமான நட்சத்திரங்களை மக்கள் வேடிக்கை பார்ப்பார்கள். 

அதன்பிறகு ஏற்பட்ட மக்கள் நெரிசல் இன்னொரு தேவையை உணர்த்தியது. இரண்டு சாலை சந்திக்கும் இடங்களிலேயே ஒரு பாலம் கட்ட வேண்டிய அவசியத்தை உணர்த்தியது. அப்படி முதன்முதலில் சென்னையில் கட்டப்பட்ட பாலம்தான் ஜெமினி பிரிட்ஜ் (எஸ்.எஸ்.வாசன் அவர்களின் ஜெமினி ஸ்டூடியோவுக்கு அருகில் இருந்ததால் இந்தப் பெயர்). அண்ணா மேம்பாலம் என்று அழைக்கப்படும்
இந்த மேம்பாலம் 1973-ல் கட்டி முடிக்கப்பட்டது. சாலையைக் கடக்க சாலையின் குறுக்கே ஒரு பாலம் கட்டுவது கடந்த 10, 15 ஆண்டுகளில் சென்னையின் அபரிமிதமான வேகத்துக்கு ஈடுகொடுத்தது எனலாம். அண்ணா மேம்பாலத்தைக் கட்டி முடித்து அதை திறந்து வைத்தபோது அன்றைய முதலமைச்சர் இன்னொரு மாற்றத்தையும் கொண்டுவந்தார். அண்ணா மேம்பாலம் திறப்பு விழா 1.7.1973 அன்று மாலை நடைபெற்றது. விழாவுக்கு அமைச்சர் சாதிக்பாட்சா தலைமை தாங்க, அமைச்சர் நெடுஞ்செழியன் முன்னிலை வகித்தார். மேம்பாலத்தை முதல் அமைச்சர் கருணாநிதி திறந்து வைத்தார். விழாவில் அவர் பேசுகையில், சென்னை நகரில் உள்ள எல்லா பாலங்களுக்கும் தலைவர்களின் பெயர்கள் சூட்டப்படும் என்று அறிவித்தார்.

அன்று கலைஞர் பேசியது இது:

''சென்னை மாநகருக்கு புதிய எழில் ஊட்டும் வகையிலும், போக்குவரத்து வசதிக்கான வாய்ப்பைப் பெருக்கும் வகையிலும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையிலும் பேரறிஞர் அண்ணா பெயரால் அமைந்துள்ள மேம்பாலத்தை திறந்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அண்ணா அவர்களுடைய பெயரை இந்தப் பாலத்திற்கு ஏன் வைத்தோம் என்பதற்கான காரணத்தைச் சொல்லத் தேவையில்லை.

ஏனென்றால் அண்ணா அவர்களுடைய பெயரை வைத்த பிறகு, அதை ஏன் வைக்கவேண்டும் என்று கேள்வி கேட்கிற யாரும் தமிழகத்தில் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. இப்படிப்பட்ட பாலங்கள் நம்முடைய தமிழகத்தைச் சேர்ந்த தலைவர்களுடைய பெயரால், நம்முடைய சமுதாயத்திற்குப் புத்துணர்ச்சி ஊட்டியவர்களின் பெயரால், இந்திய நாட்டில் பிறந்த தலைவர்களுடைய பெயரால் வழங்கப்பட வேண்டும் என்பது நம்முடைய எண்ணம்.

அந்த வகையில்தான் இன்று இந்தப் பாலத்திற்கு அறிஞர் அண்ணா பெயரை நாம் வைத்திருக்கிறோம். இந்தச் சாலையின் பெயர் அண்ணாசாலை; இந்தச் சாலையில்தான் அண்ணா சிலை இருக்கிறது. இந்தச் சாலை முடிந்த பிறகு அங்கேயிருந்து சென்றால் அண்ணா அவர்களுடைய கல்லறை இருக்கிறது. "மர்மலாங்" பாலத்தில் இருந்துதான் அண்ணா சாலை ஆரம்பமாகிறது.

மர்மலாங் என்ற பெயர்கூட ஒரு டச்சுக்காரருடைய பெயர் என்று கேள்விப்பட்டேன். மர்மலாங் பாலத்திற்கு அருகாமையில் உள்ள பல்லாவரத்தில்தான் மறைமலை அடிகளார் வாழ்ந்தார். ஆகவே மர்மலாங் பாலம் உச்சரிப்பதற்கு ஏற்ற வகையில் இனிவரும் காலத்தில் "மறைமலை அடிகளார் பாலம்" என்று மாற்றப்படும் என்பதை நான் இங்கே தெரிவித்துக் கொள்கிறேன்.

அடையாறு பாலம் தமிழ்த் தென்றல் திரு.வி.க. பெயரால் அழைக்கப்படும். வாலாஜா பாலத்திற்கு "காயிதே மில்லத்" அவர்களுடைய பெயர் வைக்கப்பட்டு, அந்தப் பாலம் காயிதே மில்லத் பாலம் என்று அழைக்கப்படும். காமராஜருடைய சிலைக்கு அருகாமையிலே இருக்கிற வெலிங்டன் பாலம் பெரியார் அவர்களுடைய பெயரால் அழைக்கப்படும்.

அதைப்போல "ஆமில்டன்" பாலத்திற்கு ஏதேதோ பல பெயர்கள் மாற்றப்பட்டதெல்லாம் உங்களுக்குத் தெரியும். (இன்றும் சிலர் அதை அமட்டன் வாராவதி என்பார்கள்) அந்தப்பாலம் அம்பேத்கார் பாலம் என்று அழைக்கப்படும். பெயரில் என்ன இருக்கிறது என்று சொல்வார்கள். பெயரில் தமிழ் இருக்கிறது; தமிழ் உணர்வு இருக்கிறது; சமுதாய எழுச்சி இருக்கிறது'' என்று பெருத்த கரகோஷங்களுக்கு இடையே பேசி முடித்தார்.

ஒரு பாலம் அன்று பல தலைவர்களின் பெயர்களில் புதிய பாலங்கள் பிறக்க வழி செய்தது. சரியாக 60 ஆண்டுகளுக்கு முன் சென்னையில் ட்ராம் ஓடிய காலம் ஒன்று இருந்தது. நிதானமாக தண்டவாளத்தில் ஓடிய ஒரு பேருந்து அது. டிங் டின் என மணி அடித்துக்கொண்டு அது சென்னை சாலைகளில் போகும். பத்தடி தூரத்தில் வரும்போதும் மக்கள் அதை அலட்சியமாகக் குறுக்கில் கடந்து போவார்கள். 

என் அப்பா சொல்லுவார். ட்ராம் வண்டி முடிவுக்கு வந்த நேரத்தில், தந்தை பெரியார் ஒரு முடிவெடுத்தார்.  அது அடுத்த அத்தியாயத்தில்...

Madras... Good Madras | மெட்ராஸ்... நல்ல மெட்ராஸ் -3 | VIKATAN

சென்னையில் ஓடிய ட்ராம் வண்டிகள் பற்றியும் அதை நடத்திய மெட்ராஸ் எலெட்க்ரிசிட்டி சிஸ்டம் (எம்.ஈ.எஸ்) என்ற கம்பெனி  பற்றியும் பலரும் கேள்விப்பட்டிருப்பார்கள். மக்கள் நடக்கும் வேகத்துக்கு சற்றே அதிக வேகத்தில் அது பயணிக்கும். மணிக்கு 7 கிலோ மீட்டர் வேகம். முயற்சி செய்தால் மக்கள் அதை முந்திச் செல்ல முடியும். 1895 முதல் 1953 வரை சென்னையில் ட்ராம் ஓடியது. தங்கசாலை, பீச் சாலை, பாரிஸ் கார்னர், மவுன்ட் ரோடு, பூந்தமல்லி நெடுஞ்சாலைகளில் இந்த இயந்திய நத்தைகள் ஊர்ந்த காலம் இன்றைய அவசர உலகத்துக்கு வேடிக்கையாக இருக்கலாம். சுமார் 100 ட்ராம் வண்டிகள் வரை சென்னையில் ஓடின. சாலைகளில் அமைக்கப்பட்ட மின்சார ஒயர்களைத் தொட்டுக்கொண்டு நடை போட்ட அவை, இன்றைய மின்சார ரயில்களின் மூதாதைகள். பெருத்த நஷ்டம் காரணமாக அந்த நிறுவனம் மூடப்பட்டது.

அந்த ட்ராம் வண்டிகளின் ஷெட் இருந்த இடத்தில்தான் இப்போது தினத்தந்தி அலுவலகமும் பெரியார் திடலும் இருக்கிறது என்று படித்திருந்தாலும் அதைப் பற்றிய நினைவுகளை எனக்குச் சொன்னவர் முதுபெரும் பத்திரிகையாளர் ஜே.வி.கண்ணன் அவர்கள். 
தினமணியின் முதல் ஆசிரியரான டி.எஸ்.சொக்கலிங்கம் நடத்திய தமிழன் நாளிதழில் பணியாற்றியவர். பெரியார், அண்ணா ஆகியோரிடம் நெருங்கிப் பழகியவர். வரலாறு எப்படி நூல்பிடித்தாற்போல இன்னொரு தலைமுறைக்குக் கடத்தப்படுகிறது என்பதற்கு ஜே.வி.கே. போன்றவர்கள் முக்கியமான உதாரணம். பெரியாரும் அண்ணாவும் பிரிந்திருந்த நேரத்தில் இருவரிடத்திலும் ஒரு பத்திரிகையாளராகத் தொடர்பில் இருந்தவர் ஜே.வி.கே.

பெரியார் என்ன சொல்கிறார் என்று அண்ணா ஆவலோடு விசாரித்த அதே நேரத்தில் அண்ணாவைப் பற்றி பெரியார் ஆவலே இல்லாமல் விசாரித்ததை அவர் என்னிடம் சொன்னார். இதை அவர் விவரிக்கும்போது பெரியாருக்கு அண்ணாவுக்கும் நடுவே நானே உட்கார்ந்திருப்பது போன்ற ஓர் அனுபவம் எனக்கு ஏற்பட்டது. ட்ராம் இயக்கியவர்களில் பெரும்பாலானவர்கள் தெலுங்கு மொழி பேசுபவர்களாக இருந்தார்கள். அவர்கள் நாமம் போட்டிருந்தார்கள் என்ற தகவல்களை அவர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
பெரியார் வார்த்தைகளில் சொல்வது என்றால் 'கண்ணீர் துளி பசங்கள் எல்லாம் பிரிந்துபோன' நேரத்தில் அவர் அந்த பெரிய முயற்சியில் இறங்கினார். சென்னையில் திராவிடர் கழகத்துக்கு பெரிய இடம் தேடி வந்தார். அப்போது பெரியாரின் சென்னை அலுவலகம் சிந்தாதிரிப் பேட்டையில் இருந்தது. சற்றே பெரிய வசதியான இடத்தைத் தேடிக்கொண்டிருந்தவருக்கு, ட்ராம் வண்டிகள் நிறுத்துமிடமாக இருந்த அந்த இடம் ஏலத்துக்கு வருவதாகத் தெரியவந்தது. உடனே ஏலம் எடுக்க விண்ணப்பித்தார்.

பெரியார், தினத்தந்தி சி.பா.ஆதித்தனார் ஆகியோருடன் இன்னொருவரும் ஏலத்துக்கு விண்ணப்பித்தனர். அவர் கோவையைச் சேர்ந்த விஞ்ஞானி ஜி.டி.நாயுடு. மூன்று பேருக்கான பகுதிகளாக இருந்த அந்த இடத்தை, பின்னர் ஜி.டி. நாயுடு விலகிக்கொள்ளவே பெரியாரும் ஆதித்தனாரும் அந்த இடத்தைப் பிரித்துக்கொண்டனர். மெட்ராஸின் முகம் இந்த அளவுக்கு மாறியதற்கு திராவிடர் கழகமும் தினத்தந்தியும் முக்கியக் காரணம் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஏனென்றால் தமிழகத்துக்கு என ஒரு கருத்தை உருவாக்கியதில் அந்த நாளிதழுக்கும் அந்த இயக்கத்துக்கும் பங்கு இருப்பதுதான் காரணம். சென்னை மக்களை நத்தை வேகத்தில் நடத்திய ட்ராம் வண்டிகள் இருந்த இடத்தில் இருந்துதான், பின்னர் அசுர வேகத்தில் மாற்றங்கள் நிகழ்ந்தன என்பது ஒரு நகை முரண்.

இன்னொரு ஆச்ச்ர்யமான செய்தி... தனியாக காரோ, பஸ்ஸோ வைத்திருந்தவர்களைப் பார்த்திருப்பீர்கள். தனியாக ரயில் வைத்திருந்தவர் ஒருவர் சென்னையில் இருந்தார். சென்னையிலுள்ள பல பிரசித்தி பெற்ற, சிவப்பு நிறத்திலுள்ள பல கட்டடங்களை உருவாக்கிய கட்டட மேதை, 'தாட்டிகொண்ட நம்பெருமாள்' செட்டியார். பாரிமுனையில் உள்ள உயர் நீதிமன்றம், சட்டக்கல்லூரி, எழும்பூரில் உள்ள சிற்பக் கலை கல்லூரி, மியூசியம், கன்னிமாரா நூலகம் போன்றவை இவரால் கட்டப்பட்டவை. 18-ம் நூற்றாண்டின் மத்தியில் ஆங்கிலேயர்களுக்கு கிடைத்த பில்டிங் கான்ட்ராக்டர் இவர். இவர் வாழ்ந்த வீடு,  'வெள்ளை மாளிகை' என்ற பெயருடன், சேத்துப்பட்டு மேம்பாலம் அருகில், டாக்டர் மேத்தா மருத்துவமனையின் பின் உள்ளது. இதில், மூன்று மாடிகள், 30 அறைகள் உள்ளன. இது அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது. சீனா, ஜப்பான், இத்தாலி, இங்கிலாந்து போன்ற நாடுகளில், பீங்கானில் செய்யப்பட்ட அரிய கலைப் பொருட்கள் அங்கு வைக்கப்பட்டுள்ளன. எழும்பூர் பாந்தியன் சாலையிலிருந்து, ஹாரிங்டன் சாலை வரை  உள்ள நிலப்பரப்பு அவருக்குச் சொந்தமாக இருந்தது. அதனால் அது 'செட்டியார் பேட்டை' என அழைக்கப்பட்டது. நாளடைவில், "செட்டிபேட்டை' என மருவி, இன்று, "செட்பெட்' என மாறிவிட்டது. ஆங்கிலேயர் பலருக்கு வீடு கட்டித் தந்தவர் அவர்.

ணித மேதை ராமானுஜம் தம் இறுதி நாட்களை செட்டியார் வீட்டில் கழித்தார். இங்கிலாந்திலிருந்து திரும்பிய ராமானுஜருக்கு, காசநோய் பாதிப்பு அதிகமாகிவிட்டதால், அவரது உறவினர்கள் பயந்துபோய், திருவல்லிக்கேணியில் இருந்த அவர்களது வீட்டில் வைத்துக் கொள்ளவில்லை.அப்போது, நம்பெருமாள் செட்டியார் அவரை அழைத்து வந்து, தனி அறை, தனி சமையல், சிறப்பு வைத்தியம் முதலிய ஏற்பாடுகள் செய்து, அவரைக் காப்பாற்ற எல்லா முயற்சிகளையும் செய்தார். ஆனால், ராமானுஜம் முட்டை முதலியவற்றை சாப்பிட மறுத்ததால், காசநோய்க்கு இளம் வயதில் மறைந்தார். அவர், கடல் கடந்து வெளிநாடு சென்றதால், அவரது உடலைக் கூட ஏற்றுக்கொள்ள உறவினர்கள் மறுத்தனர். ஆதலால், நம்பெருமாள் செட்டி அவர்களே அவரது ஈமச் சடங்குகளை செய்தார். ராமானுஜத்தின் மரணச் சான்றிதழ், இன்றும் செட்டியார் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

சென்னை பல்கலைக்கழகத்தில் பி.ஏ., பட்டம் பெற்றவர் நம்பெருமாள். முன்னாள் இம்பீரியல் வங்கி (தற்போது எஸ்.பி.ஐ.,) நியமனம் செய்த முதல் இந்திய டைரக்டர். சென்னை மாகாணத்தின் மேல் சட்டசபைக்கு நியமிக்கப்பட்ட முதல் இந்தியர். முதன் முதலாக வெளிநாட்டு கார் (பிரெஞ்ச் டிட்கன்) வாங்கிய முதல் இந்தியர். தற்போது இந்த கார் யுனைடெட் கம்பெனி சேர்மன் விஜய் மல்லையாவிடம் உள்ளது. தன் வின்டேஜ் கலெக்‌ஷன் கார்களில் ஒன்றாக அதை வைத்திருக்கிறார்.
தான் ஈட்டிய பணத்தில் பெரும் பகுதியை, சமஸ்கிருத வளர்ச்சி, வைணவ கோயில்களின் திருப்பணி, ஏழைகளின் கல்வி, மருத்துவம் போன்றவற்றிற்கு கொடுத்து உதவினார். வடசென்னையில் பல பள்ளிகளும் சேத்துப்பட்டிலுள்ள சேவா சதனம் வளாகத்தில், தாட்டிகொண்ட நாச்சாரம்மா மருத்துவமனையும் இவருடை அறக்கட்டளை சார்பில் நடைபெறுகின்றன. சென்னையின் வளர்ச்சியில் இவரது சேவை சிறப்பானது.

இந்த நம்பெருமாள் செட்டியார்தான் தன் சொந்த உபயோகத்துக்காக, நான்கு பெட்டிகள் கொண்ட தனி ரயில் வண்டி வைத்திருந்தார். தம் குடும்பத்தினரோடு திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலுக்குச் சென்று வர இந்த ரயிலை உபயோகித்தார்.  மற்ற நேரங்களில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில்தான் இவருடைய ரயில் நிறுத்திவைக்கப்பட்டது. சென்னை ரயில் நிலையம் அருகே ஒரு உயிர்க்காட்சி சாலை இருந்தது. அந்த உயிர்க்காட்சி சாலையில்தான் எம்.ஜி.ஆர் வளர்த்த சிங்கம் அடைத்து வைக்கப்பட்டிருந்தது... அதற்கு பெயர் உண்டு. மக்கள் எல்லாம் அதை பெயர் சொல்லி அழைப்பார்கள். எனக்கு அந்த சிங்கத்தைப் போய் பார்த்துவிட்டு வருவது சிறுவயதில் பிடித்தமான பொழுதுபோக்காக இருந்தது.

Madras good Madras | மெட்ராஸ்... நல்ல மெட்ராஸ் -4 | VIKATAN

உயிர் காலேஜும் செத்த காலேஜும்

எம்.ஜி.ஆர் வளர்த்த சிங்கம் சென்னை சென்ட்ரலுக்குப் பின்னால் இருந்த மை லேடீஸ் பூங்காவின் அருகில் அமைக்கப்பட்ட மிருகக் காட்சிச்சாலையில் வைக்கப்பட்டிருந்தது. இப்போது வண்டலூரில் இருக்கும் மிருகக் காட்சிச்சாலையைவிட பன் மடங்கு சிறிய அழகான மிருகக் காட்சிச்சாலை அது. அதை சென்னை மாநகராட்சி நிர்வகித்து வந்தது. இந்த மிருகக் காட்சிச் சாலைக்கும் முன்னால் ஒரு மிருகக் காட்சிச் சாலை சென்னையில் இருந்தது.

அது எட்வர்டு கிரீன் பால்ஃபர் சென்னை மியூஸியத்தின் அதிகாரியாக இருந்தபோது, உயிரிழந்த விலங்குகளைப் பாடம் பண்ணி வைக்கப்பட்ட அருங்காட்சியத்தின்(படம்) அருகே உயிருள்ள விலங்குகளையும் கொண்டு வந்து வைத்தால் மக்களிடம் பெரும் வரவேற்பு கிடைக்கும் என எண்ணினார்.  சுமார் 300 உயிரினங்கள் அங்கே கூண்டுகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்ததாகச் சொல்லப்பட்டது. புலி, சிறுத்தை, பறவை இனங்கள் எல்லாம் அங்கு இருந்தன. ஒரே இடத்தில் உயிருள்ள ஜீவன்களும் பாடம் செய்துவைத்த விலங்குகளின் உடல்களும் அங்கே இருந்தன. இறந்த உயிரினங்களைப் பதப்படுத்தி வைத்திருப்பதால் இது செத்த காலேஜ். உயிரோடு விலங்குகள் இருந்த இடத்தை உயிர்காலேஜ் என்பர். செத்த உயிரினமோ, உயிரோடு இருப்பவையோ... ஒரு கைடு அவற்றைப் பற்றி மக்களுக்கு விளக்கிச் சொல்வதால் (பாடம் நடத்துவதால்) மக்கள் அவற்றை காலேஜ் என்று சொல்லப் பழகியிருக்கலாம் என நினைக்கிறேன்.
 
இப்போதும் சென்னை சேத்துப்பட்டில் பால்ஃபர் சாலை இருப்பதைப் பார்க்கலாம். அவர் அங்குதான் வசித்தார். 1854-ல் உருவாக்கப்பட்ட இந்த மிருகக் காட்சி சாலை அடுத்த பத்தாண்டுகளில் ரிப்பன் பில்டிங் பின்புறம் இருக்கும் பியூப்பில்ஸ் பார்க் அருகே மாற்றப்பட்டது. செத்த காலேஜ் வளாகத்தில் இருந்த அந்த உயிர் காலேஜ், இடப்பற்றாக்குறை காரணமாக இங்கே வந்தது. சுமார் 116 ஏக்கர் நிலப்பரப்பு மிருகக்காட்சி சாலைக்கு இருந்தது. அன்றைய தேதியில் தெரு நாய்களை விலங்குகளுக்கு கறியாகப் பயன்படுத்தப்படும் வழக்கம் இருந்தது. தெரு நாய்களைப் பிடிக்க வண்டிகள் வரும்போதெல்லாம் மக்கள் இந்த விஷயத்தைச் சொல்லுவார்கள். 1970 வரையே தெரு நாய்கள் இதற்குப் பயன்படுத்தப்பட்டது. பிறகு விலங்குப் பிரியர்களின் போராட்டத்துக்குச் செவிசாய்த்து நாய்கள் தப்பித்தன.

1963 முதல் 1984 வரை இந்த இடத்தில்தான் உயிர் காலேஜ் இருந்தது. மூன்றாம் வகுப்பு படிக்கும்போது பள்ளியில் அழைத்துச் செல்லப்பட்ட இன்பச் சுற்றுலாவின்போதுதான் முதன்முதலாக அந்த மிருகக் காட்சிச்சாலைக்குச் சென்றேன். (படம்) அல்லது அதற்கு முன் சென்றது நினைவில்லை. அப்போது முதல் வீட்டுக்கு மிக அருகில் இருந்த அந்த மிருகக் காட்சிசாலைமீது ஒரு இனம்புரியாத ஈர்ப்பு ஏற்பட்டுவிட்டது.
ஊரில் இருந்து யாராவது வந்தால், நண்பர்கள் கையில் ஒரு ரூபாய் முழுதாக இருந்தால் உடனே ஜூவுக்குச் செல்வது வழக்கமாகிவிட்டது. அங்குதான் எம்.ஜி.ஆர் வளர்த்த சிங்கத்தைப் பார்ப்போம். புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் நன்கொடையாக வழங்கியது என்ற போர்டு ஒன்று இருக்கும். அதன் பெயர் ராஜா.
ராஜா என்றால் திரும்பிப் பார்க்கும். மக்கள் அடிக்கடி அந்தப் பெயரைச் சொல்லி அழைத்து அதற்கு மிகுந்த வெறுப்படைய செய்த காலகட்டத்தில் அது திரும்பிப் பார்ப்பதை நிறுத்திவிட்டது. சிலர் எம்.ஜி.ஆர் குரலில் அழைத்து கவர்வதற்கு முயற்சி செய்வார்கள். 'அடிமைப்பெண்' படத்தில் எம்.ஜி.ஆர். கட்டி உருளும் சிங்கத்தைப் பார்த்திருப்பீர்கள். அந்தச் சிங்கம்தான் அது. எம்.ஜி.ஆரின் வீட்டில் அவருடைய அரவணைப்பில் வளர்க்கப்பட்ட சிங்கம் தன் கடைசி காலத்தில் இப்படி நிராதரவாக விடப்பட்டது எனக்குள் மிக வேதனையான சித்திரமாகப் படிந்துவிட்டது. 80-களில் ஒருநாள் எம்.ஜி.ஆர் அதை ஜூவுக்கு வந்து பார்த்துவிட்டுப் போனார். அதன் பிறகு எம்.ஜி.ஆர் வளர்த்த சிங்கம் மறைந்தது என்று செய்தியாகப் பார்த்தேன். எம்.ஜி.ஆர் மீது இருந்த ஏக்கத்தினாலேயே அது இறந்துவிட்டதாக அப்போது பேசிக்கொண்டார்கள். அதன் பாடம் செய்யப்பட்ட உருவம் இப்போது எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்தில் உள்ளது (படம்).

அந்த ஜூவை இப்போது பார்க்க வேண்டுமானால் ஒரே ஒரு வழி இருக்கிறது. எஸ்.எஸ்.ஆர்- விஜயகுமாரி நடித்த 'காக்கும் கரங்கள்' படத்தைப் பாருங்கள். அதில் இடம்பெறும் அல்லித்தண்டுகாலெடுத்து அடிமேல் அடி எடுத்து' பாடல் முழுக்க முழுக்க அங்கு படமாக்கப்பட்டதுதான். சிறியவர்களுக்கு 15 காசு, பெரியவர்களு 25 காசு என்று போர்டு போட்டிருக்கும். பல ஜூக்களிலும் நுழைந்ததும் முதலில் மனிதக் குரங்கைத்தான் வைத்திருக்கிறார்கள். நான் பார்த்த பெங்களூர், திருவனந்தபுரம், மைசூர், சென்னையின் ஜூக்களில் இவைதான் முதன்மை வகிக்கின்றன.

ரயில்நிலையம் விஸ்தரிப்பு வேண்டி இந்த உயிர்காலேஜ் வண்டலூருக்கு மாற்றப்பட்டது. புறநகர்  ரயில் நிலையம் அமைக்கப்பட்டபோது இந்த மிருகக்காட்சி சாலையும் மூர் மார்க்கெட்டும் சென்னையின் அடையாளத்தில் இருந்து ஓய்வு பெற்றன. ராட்சஷ இரும்பு வாகனங்கள் இந்த இரண்டின் சமாதியின் மீதுதான் இப்போது தடதடக்கின்றன. ரயில் நிலையத்தின் தேவைக்காக இவை இரண்டும் இடிக்கப்பட்டன.
மூர்மார்க்கெட்... அங்கே விற்காத பொருள் இல்லை... அம்மா, அப்பாவைத் தவிர எல்லாவற்றையும் அங்கே வாங்கலாம் என்று சொல்வார்கள். குரங்கு, பச்சைக்கிளி, ஸ்கௌட் ட்ரஸ், வண்ண மீன்கள், அரிய பழைய புத்தகங்கள், நான்கு பேண்டு ரேடியோ, பூதக் கண்ணாடி, ரெக்கார்டு பிளேயர் எல்லாமே அங்கு விற்கும். மேலே சொன்னதில் குரங்கு, நான்கு பேண்டு ரேடியோ தவிர மற்றவை எல்லாவற்றையும் நான் வாங்கியிருக்கிறேன்.

சிலர் கூவி விற்பார்கள்...

வட இந்தியாவில் இருந்து வந்து கடைவிரிப்பார் இருந்தனர். அவர்களின் விற்பனை வினோதமானது.  அது...

moormarket, Madras | மெட்ராஸ்...நல்ல மெட்ராஸ் -5 | VIKATAN

ஏழைகளின் ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் மூர்மார்க்கெட் 
'ஊரு கெட்டு போனதற்கு மூரு மாருகெட்டு அடையாளம்...
பேரு கெட்டு போனதற்கு மெட்ராஸு நாகரிகம் அடையாளம்'
-என்று ஒரு சினிமா பாடல். 

இந்தத் தொடரின் தலைப்பே அந்தப்பாடலின் முதல் வரியில் இருந்து எடுக்கப்பட்டதுதான். அந்தப் பாடல் வெளிவந்த நாளில் இந்த மேற்படி வரிகளை நீக்கச் சொல்லி போராட்டம் வெடித்தது. ஒரு ஊரைக் கொச்சைப்படுத்துவது அங்கு வாழும் மக்களை, அப்பகுதியின் பூர்வ குடியினரைக் கொச்சைப்படுத்துவதாக அர்த்தம் என்று கொந்தளித்தனர். வழக்கும் தொடுக்கப்பட்டது. ஆனால், இது நான் எழுதிய கதை எனத் தொடரப்படும் பல சினிமா வழக்குகளைப் போல, அதுவும் பிசுபிசுத்துப் போனது. 

மெட்ராஸ் என்பது இந்தியாவின் பல மொழியினர், பல இனத்தவர், பல சாதியினர் பிழைப்புக்காக வந்து குவிந்த பகுதி. இதில் மசால் வடை ருசியாக இல்லை என்றாலும் கூட ''ஊரா இது?" என்று துப்புகிறார்கள். மசால் வடை போட்டவர் மார்த்தாண்டத்துக்காரராக இருப்பார்... டீக்கடை முதலாளி எர்ணாக்குளத்துக்காரராக இருப்பார். துப்பப்பட்ட எச்சில் இந்த மண்ணின் பூர்வ குடியினர் மீது விழுவதுதான் வேதனை. அந்தத் தவற்றைச் சுட்டிக்காட்டத்தான் வழக்கு போடப்பட்டதாக நினைக்கிறேன்.

அந்தப் பாடல் வரியில் இடம் பெற்ற மூர் மார்க்கெட் ஒரு குட்டி இந்தியாவாக இருந்தது. அங்கே பல மொழியினர், பல மதத்தினர் இருந்தனர். உண்மையில் மெட்ராஸை பூர்வீகமாகக் கொண்டவர்களைவிட மற்றவர்கள் அதிகமாக இருந்தனர். அங்கே பல பொருட்கள் விற்கப்படும். குரங்கு, கிளி வண்ணமீன், புத்தகங்கள், ஆட்டுக்கறி, அடுப்புக்கரி... சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், ஏழைகளின் ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் அது. அங்கே ஒரு மூலிகைத் தைலம் விற்கும் காட்சியை அன்றைய பத்திரிகையில் இப்படி எழுதியிருந்தார்கள்...
ஒரு வட இந்திய சந்நியாசி மூலிகையை விற்கிறார். அவருடைய தாடி, ஜோடனை எல்லாம் பாதையில் போகிறவர்களை வசீகரிக்கக் கூடியதாக இருக்கிறது. அவரைத் தன் குருநாதர் என்று அறிமுகப்படுத்திக்கொள்கிறார் ஒருவர். குருநாதர் ஹிந்துஸ்தானி மட்டுமே தெரிந்தவர். அவர் பேசுவதை தமிழில் தாம் மொழி பெயர்க்கப் போவதாகச் சொல்கிறார்.

குருநாதர்: ஜனக் ஜனக் பாயல் பஜே
சீடர்: மகா ஜனங்களே

குரு: ஆஷிக்... ஆஷிக்.
சீடர்: வாருங்கள்... வாருங்கள்.

குரு: ஹூ கௌந்தீ?
சீடர்: இது என்ன?

குரு: சோடி பஹன்
சீடர்: சின்ன பாட்டில்.

குரு: ஜிஷ் தேஷ் மேகங்கா பக்தீஹை.
சீடர்: இதற்குள் என்ன இருக்கிறது?

குரு: ஆவோ பியார் கரேன்
சீடர்: அவுத்திக் கீரை தைலம்.

குரு: ஜான்கர்.
சீடர்: ஜலதோஷம்.

குரு: மம்தா.
சீடர்: மார்வலி.

குரு: ஜப் ஜப் பூல் கிலே.
சீடர்: அப்பப்போ உடம்பு வலி.

குரு: ஆவாரா.
சீடர்: ஆகியவற்றை.

குரு: கும்நாம்.
சீடர்: குணப்படுத்தும்.

குரு: இந்தக்ஹாம்
சீடர்: இந்த பாட்டில்.

குரு: ஏக் பூல் தோ மாலி.
சீடர்: ஒரு ரூபா பத்துக் காசு.

குரு: ராம் அவுர் ஷியாம்.
சீடர்: காலையிலும் மாலையிலும்

குரு: பர்சாத்... பர்சாத்.
சீடர்: பருகுங்கள்... பருகுங்கள்.

குரு: பூல் அவுர் பந்தர்.
சீடர்: பூலோகமெலாம் தேடினாலும்.

குரு: அம்ராபாலி... அம்ராபாலி.
சீடர்: அகப்படாது... அகப்படாது.

அவர்கள் விற்பது ஒரு மூலிகைத் தைலம். இமயமலைச் சாரலில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாக ஏழை மக்கள் அதை வாங்குவார்கள். ஆனால், குரு சொன்ன இந்தி வாக்கியங்கள் எல்லாம் பழைய இந்தி படங்களின் பெயர்கள். அதற்குத் தோதாக மொழி பெயர்த்த மாதிரி வாக்கியங்களை அமைத்ததுதான் சீடனாக நடிப்பவரின் சாமர்த்தியம். 

இந்த மாதிரி கூட்டம் சேர்ந்து மூடியிருக்கிற இடங்களில் ஜேப்படி திருடர்கள் இருப்பார்கள். வியாபாரம் செய்கிறவர்களும் மோசமான பொருளை அதிக விலைக்கு விற்பார்கள் என பெரியவர்கள் எச்சரிப்பர். மோடி மஸ்தான்கள் கீரியையும், பாம்பையும் சண்டை விடப் போவதாக காலையில் இருந்து இரவு வரை போக்கு காட்டிக் கொண்டிருப்பார்கள். பாதியில் போனால் ரத்தம் கக்கிச் செத்துவிடுவாய் என மிரட்டுவார்கள். 

அங்கே திரும்பின பக்கம் எல்லாம் காசைக் குறி வைத்து மக்கள் உலவிக் கொண்டிருப்பார்கள். 'கஞ்சா பொட்லம் வேணுமா? பொண்ணு வேணுமா?' எனச் சுற்றும் ஒரு கோஷ்டி.
பாஸ்வெல் எழுதின ப்ரிஃபேஸ் டு சாமுவல் ஜான்சன் புத்தகம் வேணுமா சார்... ஒரிஜனல் எடிஷன் என்பார் இங்கிலீஷை கரைத்த குடித்த மாதிரி ஒருவர். ஏமாற விரும்புகிறவர்களுக்கு அதைவிட ஏற்ற இடம் இருக்க முடியாது. அந்த மூர் மார்க்கெட் சென்னையில் இருந்ததாலேயே அது சென்னையின் அயோக்கியர்களின் கூடாரம் என்ற சித்திரம் உருவாகிவிட்டது.
சென்னை புறநகர் ரயில் நிலையத்துக்கான 10 மாடிக் கட்டடம் கட்டுவதற்காக, அங்கு கடை நடத்தியவர்களை அப்புறப்படுத்தும் முயற்சி வெகு நாட்களாக தோல்வியில் முடிந்தது.
வாயற்ற ஜீவன்களான வனவிலங்குகளை அப்புறப்படுத்தியது போல இவர்களை சுலபமாக அகற்ற முடியவில்லை. மூர்மார்க்கெட்டுக்குப் பின்னால்தான் மாநகராட்சி நடத்திய அந்த ஜூ இருந்தது. அதை அப்புறப்படுத்தி வண்டலூர் ஜூவுக்குக் கொண்டு போய்விட்டனர். இவர்கள் காலி செய்யாமல் அடம்பிடித்த வேளையில்தான் ஒருநாள் இரவு அந்த மூர் மார்க்கெட் எரிந்தது. கட்டடம் தவிர, அங்கிருந்த ஒரு பொருளும் மிஞ்சவில்லை. 

1900 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த மார்க்கெட், அன்றைய மெட்ராஸ் கார்பரேஷன் பிரிசிடென்ட்டான சர் ஜார்ஜ் மூர் என்பவரால் அடிக்கல் நாட்டப்பட்டது. 1985 ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த நேரத்தில், மர்மான முறையில் அரசு கைப்பற்றியது. எம்.ஜி.ஆர் உடல் நலத்தோடு இருந்திருந்தால் இந்த நிலைமைக்கு நம்மை விட்டிருக்க மாட்டார் என்று மூர் மார்க்கெட்டை நம்பி வாழ்ந்த மக்கள் பேசியதை கேட்டிருக்கிறேன்.

அந்த மூர் மார்க்கெட்டுக்கும் ஜூவுக்கும் இடையில் இன்னொரு வரலாற்றுத் தடம் இருந்தது. அது நேரு விளையாட்டு அரங்கம். அந்த நாளில் அங்குதான் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடக்கும். ஊழல் இல்லாத சுத்தமான கிரிக்கெட் போட்டி அது. கைக்கு அடக்கமான ட்ரான்சிஸ்டரை காதருகே வைத்துக்கொண்டு நடப்பார்கள். வழக்கமாகக் கிரிக்கெட் போட்டி நடக்கும் அந்த இடத்தில் ஒரு பொங்கல் தினத்தில் ஜல்லிக்கட்டு நடந்தது எத்தனை பேருக்கு நினைவில் இருக்கும்? அது...


Madras, cinema studio, madras | மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் -7 | VIKATAN


                                                                     ஸ்டுடியோக்களின் பொற்காலம்

சென்னையில் சினிமாவுக்கான ஸ்டுடியோ, உலகின் முதல் சினிமா வந்த சில ஆண்டுகளிலேயே உருவாகிவிட்டது என்பது ஓர் ஆச்சர்யமான உண்மை.

1900-ல் லூமியர் சகோதரரும், எடிசனும், இன்னும் சிலரும் சினிமாவைக் கண்டுபிடித்ததற்காக உரிமை கொண்டாடிய நேரத்தில், 1916-ல் சென்னை வேப்பேரியில் நடராஜ முதலியார் ஒரு ஸ்டுடியோ கட்டி, தமிழின் முதல் பேசா படத்தை எடுத்தார். 'கீசக வதம்' என்று படத்துக்குப் பெயர். அது பேசாத படம் என்பதால் தமிழ்ப்படம் என்பதைவிட உலகப் படம் என்பதுதான் சரியாக இருக்கும். அடுத்த சில ஆண்டுகளில் புரசைவாக்கத்தில் 'சீனிவாசா சினிடோன்' என்ற ஸ்டுடியோவைக் கட்டி, சீதா கல்யாணம் என்ற படத்தை எடுத்தார் நாராயணன் என்பவர். அவருடைய மனைவி மீனா அந்தப் படத்துக்கு சவுண்டு என்ஜினீயர். சினிமா வளர்ந்தது. சென்னையில் ஸ்டுடியோக்கள் அப்படித்தான் பெருகின.
ஒரு காலத்தில் சென்னையில் 16 சினிமா ஸ்டுடியோக்கள் இருந்தன. நான் சொல்லும் 'ஒரு காலத்தில்' என்பது சுமார் 40 ஆண்டுகளுக்கு முன். ஜெமினி, ஏவி.எம்., விஜயா வாகினி, பிரசாத், அருணாசலம், மோகன், செந்தில், ஏ.ஆர்.எஸ். கார்டன், கற்பகம், பரணி, கோல்டன், வீனஸ், சத்யா ஸ்டூடியோ, டி.ஆர். கார்டன் நிறைய நினைவில் நிற்கின்றன. நான் ஷூட்டிங் ஸ்பாட் சென்று எழுதிய படப்பிடிப்புத் தளங்களே இன்று பல செயல்பாட்டில் இல்லை. மேலே சொன்ன ஸ்டுடியோக்களில் ஜெமினி ஸ்டுடியோவுக்குள் மட்டும் நான் ரிப்போர்ட்டிங் செய்தது இல்லை. அப்போது அது அபார்ட்மென்டாக மாறியிருந்தது. ஜெமினி கலர் லேப் மட்டும் வெகு நாட்களுக்கு இயங்கியது.
மற்றபடி பெரும்பாலான ஸ்டுடியோக்கள் இப்போது இல்லை என்று சொல்லிவிடலாம். அல்லது எஸ்.ஜே. சூர்யா பாணியில் 'இருக்கு ஆனா இல்லை'. ஏவி.எம்., பிரசாத் இரண்டும் மட்டும் பெரும்பாலும் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளுக்காக இயங்குகின்றன. 

80-களின் இறுதியில் அல்லது 90-களின் தொடக்கத்தில் படப்பிடிப்புத் தளங்களுக்குச் சென்றால், ரஜினி, கமல் தவிர மற்ற யாரையும் சுலபமாகப் பார்த்துப் பேசலாம். விஜயகாந்த், சத்யராஜ், சரத்குமார், கார்த்திக், பிரபு, அர்ஜுன் போன்றவர்கள் எங்களுக்கு விஷயதானம் செய்பவர்கள். 'கோபி செட்டிபாளையம் போயிருந்தோம். ஒரே மழை.. ரெண்டு சீன் கூட எடுக்க முடியலை' என்று ஒரு நடிகர் வாயை விட்டால் அது எங்களுக்கு பிட் செய்தி.

நடிக்கும் படங்கள், சொந்த விஷயம், படப்பிடிப்பில் நடந்த சம்பவம் என்று பேசிக்கொண்டே போனால் அது பேட்டி. பிரசாந்த், அஜீத், விஜய் என புதிதாக நடிக்க வந்தவர்கள் ஒரு பக்கம். கவுண்டமணி, செந்தில், வடிவேலு தொடங்கி தாமு, சாப்ளின் பாலு வரை யாராவது கண்ணில் சிக்குவார்கள். நடிகைகளில் ராதிகா, குஷ்பு, கௌதமி, கஸ்தூரி, மீனாட்சி, மௌனிகா, வினோதினி என்பது எங்கள் நடிகைகளின் பட்டியல். 

ஸ்டுயோக்களில் நுழைந்தால் இரண்டு பேட்டிகள், 10 பிட்டுகள் இல்லாமல் வெளியே வரமாட்டோம். அவ்வளவு படப்பிடிப்புகள் நடக்கும்.

இது தவிர, வீடு போன்ற அமைப்புகளில் இருந்த குஷால்தாஸ் கார்டன் (நாட்டாமை, சந்திரமுகி பேலஸ் அங்குதான் இருந்தது), மணி மகால், இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டடம், வாசன் ஹவுஸ், அப்பு ஹவுஸ், ரோகிணி கார்டன், ஃபிலிம் சிட்டி என பல இடங்களில் படப்பிடிப்பு நடக்கும்.

திரும்பிய பக்கம் எல்லாம் நடிகர்கள் என இருந்த காலம். இப்போது சென்னையில் படப்பிடிப்பு என்பதே அபூர்வம். கோடம்பாக்கம் ஏரியா என்றாலே அது சினிமாக்காரர்களின் இடம் என மாறியது. கோடம்பாக்கம் தமிழ் சினிமாவின் பிரிக்கமுடியாத அங்கம். இப்போது சாலிகிராமம், வளசரவாக்கம், போரூர் என்று போய்க்கொண்டிருக்கிறது.
சில ஸ்டுடியோ குறிப்புகள்...

ஏ.வி.எம் ஸ்டுடியோ

காரைக்குடி அருகே தேவக்கோட்டை ரஸ்தாவில்தான் ஏவி.எம். ஸ்டுடியோ பிறந்தது. அல்லி அர்ஜுனா, நாம் இருவர், வேதாள உலகம் போன்றவை அங்கு தயாரிக்கப்பட்டவைதான். வடபழனி ஏரியாவில் பல ஸ்டுடியோக்கள் ஒரே இடத்தில் இருந்ததால் நடிகர்களுக்க்கு வசதியாக இருக்க்கும் பொருட்டு ஏவி.எம் இங்கே மாற்றிக்கொண்டு வந்தார்.

பட்சிராஜா ஸ்டுடியோ

கோவையில் இயங்கிய இந்த ஸ்டுடியோ மிக பழமையான ஸ்டுடியோ கடைசியாக இங்கு எடுக்கப்பட்ட படம் நடிகர் திலகம் நடித்த, நான் பெற்ற செல்வம்,  ஸ்ரீவள்ளி போன்ற புகழ்பெற்ற திரைப்படங்கள் இங்குதான் எடுக்கப்பட்டன. கோவையில் இந்த ஸ்டுடியோ உள்ளது.

மாடர்ன் தியேட்டர்ஸ்

சேலம் ஏற்காடு சாலையில் ஒரு காலத்தில் கம்பீரமாக காட்சியளித்த (இன்று ஆர்ச் மட்டுமே அதனை நினைவூட்டிக்கொண்டிருக்கிறது) இந்த ஸ்டுடியோவை உருவாக்கியவர் மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம். 99 திரைப்படங்களை அந்த ஸ்டுடியோவில் தயாரித்தார் என்றால் சாதாரண விஷயம் இல்லை.

தமிழின் முதல் வண்ணத் திரைப்படமான அலிபாபாவும் 40 திருடர்களும் இவர் தயாரித்ததுதான்


Madras, Chennai studio | மெட்ராஸ்... நல்ல மெட்ராஸ் - 8 | VIKATAN

                                          இப்போ எப்படி இருக்கிறது சென்னை ஸ்டுடியோக்கள்?
- தமிழ்மகன்
கனவுத் தொழிற்சாலையின் ராஜபாட்டையாக இருந்தது சென்னை கோடம்பாக்கம் சாலை. வடபழனிக்கு மேற்கே சினிமா ஸ்டுடியோக்களும் லேப்களும் ரெக்கார்டிங் தியேட்டர்களும்தான். அதை சார்ந்த சங்கங்கள், அதைச் சார்ந்த தொழிலாளர்கள் வீடுகள், நடிகர்களின் வீடுகள் என்றே இருக்கிறது இப்போது. 80-கள் வரை வளசரவாக்கம். சாலிகிராமம் என்பதெல்லாம் வனாந்திரமான பகுதிதான். நிறைய மாந்தோப்புகளும் தென்னந்தோப்புகளும் அங்கே இருக்கும். பெரிய கட்சி மாநாடுகள் எல்லாம் வளசரவாக்கத்தில் பந்தல் போட்டு நடத்தப்பட்டன.

கடந்த இதழில் எம் தமிழர் சினிமா செய்த இடங்களை எல்லாம் சொல்லியிருந்தேன். அவை எங்கே இருந்தன... இப்போது என்னவாக இருக்கின்றன என ராமச்சந்திரன் என்பவர் கேட்டிருந்தார். பலர் போனிலும் கேட்டனர். அதற்காக இந்த அத்தியாயத்தில் அதை விவரித்துவிடுகிறேன்.

செந்தில், மோகன் ஸ்டுடியோக்கள்: இவை ஒன்றன் பின் ஒன்றாக இருந்தன. இங்குதான் விஜய் நடித்த 'திருமலை', 'மதுர' படங்கள் கடைசி கடைசியாகப் படமாக்கப்பட்டன. கமல்ஹாசன் நடித்த 'மகராசன்', 'தெனாலி' போன்ற பல படங்கள் அங்கே எடுக்கப்பட்டன. பெரும்பாலும் மார்க்கெட், சந்தை போன்ற காட்சிகள் அங்கே தயாராகும். இது வடபழனியில் இருந்து பிரசாத் ஸ்டூடியோ செல்லும் சாலையின் ஆரம்பத்தில் இடது புறம் இருந்தது. இப்போது சாஸ்திரத்துக்கு ஒரு அரங்கம் மட்டும் இருப்பதாகத் தகவல். மீதி இடங்களில் அப்பார்ட்மென்ட்.

பரணி ஸ்டுடியோ: நடிகை பானுமதி அவர்களின் ஸ்டூடியோ. இது சத்யாகார்டன் அருகே உள்ளது.

கற்பகம் ஸ்டுடியோ: பரணி ஸ்டூடியோவைக் கடந்து சிறிது தூரத்தில் எதிர் புறத்தில் உள்ளது. இயக்குநர் கே.எஸ். கோபாலகிருஷ்ணன் அவர்களின் ஸ்டூடியோ. இதில் பழைமையான ஓட்டு வீட்டு டைப்பில் வீடுகள் இருக்கும். கஸ்தூரி ராஜா இயக்கத்தில் சிவாஜி கணேசன் பாரம்பர்ய கலைஞராக நடித்த என் ஆச ராசாவே படம் அங்கே படமானதுதான்.

அருணாசலம் ஸ்டுடியோ: இதன் நடுவே ஒரு பஞ்சாயத்து திண்டு இருந்தது. நடுவே அரசமரம் ஒன்று உண்டு. நிறைய பஞ்சாயத்து காட்சிகளும் சண்டைக் காட்சிகளும் அங்கே உருவாக்குவார்கள். பெரும்பாலும் கிராமத்து பேட்ச் ஒர்க் காட்சிகளுக்கு அருணாச்சலம் ஸ்டூடியோ பயன்பட்டு வந்தது. இயக்குநர் வி.சேகர் படங்கள் இங்கே எடுக்கப்பட்டவைதான். வடிவேலு ஒரு படத்தில் ஒரு பெண்ணை கைது செய்ய சென்று, ஒட்டுத் துணி இல்லாமல் கிடக்கும் காட்சி இங்கே எடுக்கப்பட்டதுதான். பிரசாத் ஸ்டூடியோவுக்கும் பிரசாத் லேபுக்கும் இடையில் இந்த ஸ்டூடியோ இருந்தது. இப்போது அங்கே அபார்ட்மென்ட் கட்டப்பட்டு இருக்கிறது.

விஜய வாகினி ஸ்டுடியோ: இப்போது கல்யாண மண்டபங்களாகவும் ஷாப்பிங் காம்ப்ளெக்ஸாகவும்மருத்துவமனையாகவும் பலருக்குத் தெரிந்திருக்கும். வடபழனி பேருந்து நிலையம் தொடங்கி, 100 அடி சாலை வரை வியாபித்திருந்தது அந்த ஸ்டூடியோ. எம்.ஜி.ஆர் நடித்த எங்க வீட்டுப் பிள்ளை முதல் ரஜினி நடித்த 'பாட்ஷா', 'உழைப்பாளி' வரை அங்கே உருவானவைதான். பாட்ஷாவுக்காக அங்கே செயற்கையாக ஒரு காலனியை உருவாக்கியிருந்தனர். (மாணிக்கம்) ரஜினியின் ஆட்டோ ஸ்டாண்டு, வீடு எல்லாம் அங்கே அமைக்கப்பட்டிருந்தன. ரஜினியை தூர இருந்து பார்க்கலாம். மற்றபடி சுரேஷ் கிருஷ்ணா, யுவராணி, ஆன்ந்த்ராஜ் போன்றவர்களிடம் பேச முடியும். ஓராயிரம் சினிமாக்களை உருவாக்கிய அந்த இடம் இன்று கடித்துக் குதறப்பட்ட கந்தல் ஆடை போல மாறிவிட்டது.

கமல்ஹாசன் நடித்த 'நம்மவர்', 'மகளிர் மட்டும்' படங்களின் படப்பிடிப்புகள் அங்கே நடந்தன. அதனுள்ளே நாகிரெட்டியாரின் பிரமாண்டமான பங்களா ஒன்று இருக்கும். உழைப்பாளி படப்பிடிப்பின் போது ஓரிரு முறை அவரை பார்த்திருக்கிறேன்.


பிரசாத் ஸ்டுடியோ:  இன்றும் நவநாகரிகமாக தன்னை தயார் படுத்திக்கொண்டே இருக்கிறது. எல்.வி. பிரசாத் அவர்களால் தொடங்கப்பட்ட அந்த நிறுவனம் ஷங்கர், மணிரத்னம் போன்றவர்களுக்கு மிகவும் பிடித்தமான செட்டும் கூட. தம் படத்துக்கான ஏதாவது ஒரு பாடலை அங்கு எடுக்கிறார்கள். மாயாபஜார் போன்ற படங்கள் ஆப்டிகல் எபெக்டுக்காக அங்கே எடுக்கப்பட்டன. இப்போதும் அங்கே 'கல்யாண சமையல் சாதம் காய்கறிகளும் பிரமாதம் என ரங்காராவ் பாடும்போது தட்டு தட்டாக லட்டும் சாப்பாடும் நகர்ந்து செல்லும் காட்சியை எடுத்த அந்த ஆப்டிகல் கேமிரா கேட்பாரற்றுக் கிடக்கிறது. அதை ஆபரேட் செய்யத்தெரிந்த ஒரே ஒரு நபர் இப்போதும் அங்கே இருக்கிறார். அவர் பெயர் அன்வர் என நினைவு. இந்த 3டி கிராபிக்ஸ் காலத்தில், முடிந்துபோன ஒரு காலத்தின் தடயமாக அவரும் அந்த எந்திரமும் அங்கே.

ஏ.ஆர்.எஸ். கார்டன்:  அம்பிகா, ராதா ஆகியோருக்குச் சொந்தமானது. மாந்தோப்பு, போலீஸ் ஸ்டேஷன், சிறிய குடியிருப்பு போன்றவை இருந்தன. இது போரூரில் இருக்கிறது. ஷூட்டிங் நடக்கிறதா எனத் தெரியவில்லை.


டி.ஆர். கார்டன்: டி.ராஜேந்திருக்கு சொந்தமான இதில் டி.ஆர் நிறைய படங்கள் எடுத்தார். ஒரு நடுத்தரக் குடும்பத்து தெரு அங்கே உருவாக்கப்பட்டிருந்தது.


சிவாஜி கார்டன்: இது எம்.ஜி.ஆர். வசித்த ராமாவரம் தோட்ட வீட்டுக்கு எதிரே இருந்தது.  இரண்டுபுரமும் தென்னை மரங்கள் நடப்பட்ட காடு போன்ற சாலை இங்கே பிரதானம். சீவல பேரி பாண்டி படத்தின் பேட்ச் ஒர்க் காட்சிகள் பல இங்கு எடுக்கப்பட்டன. கிராமம், காட்டுப்பாதைகளின் விடுபட்டுப்போன காட்சிகளை எடுப்பதற்கு மட்டுமின்றி நிஜமாகவே காடுகளை எடுக்கவும்கூட இங்கே வருவது உண்டு. அது இப்போது கான்கிரீட் வனமாக மாறிவிட்டது. முழுவதும் அப்பார்ட்மென்ட் கட்டப்பட்டுவிட்டது.

கோல்டன் ஸ்டுடீயோ:  இப்போது கிட்டங்கியாக உள்ளது. சாலிகிராமம் மெகா மார்ட் அருகே அந்த கிட்டங்கியைப் பார்க்கலாம்.


Chennai Theatres converting as mall | காணாமல் போன தியேட்டர்கள் (மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்-9) | VIKATAN

காணாமல் போன தியேட்டர்கள் (மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்-9)
                                                                      காணாமல்போன தியேட்டர்கள் 
-தமிழ்மகன்


சென்னையில் அன்றைய காலகட்டத்தில் பிரபலமாயிருந்த திரையரங்குகள், காமதேனு, கிருஷ்ணவேணி, சித்ரா, கெயிட்டி, காசினோ, பிளாசா, பைலட், அலங்கார், மினர்வா, ஸ்ரீகிருஷ்ணா, செலக்ட், க்ரவுன், புவனேஸ்வரி, பாரத், பிரபாத், பிராட்வே, எலிகண்ட், நட்ராஜ், பத்மனாபா, வெலிங்டன், மகாலஷ்மி, சரஸ்வதி, முருகன் டாக்கீஸ், ராக்ஸி, வீனஸ், சயானி, மேகலா, உமா ராக்ஸி, சரவணா, பாலாஜி, சரஸ்வதி, லட்சுமி, அலங்கார், சபையர், ஆனந்த் போன்றவை.

எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெயசங்கர், ரவிசந்திரன், கமல், ரஜினியின் ஆரம்ப காலங்கள் வரை இந்தத் திரையரங்குகள் படு பிஸியாக இருந்தவைதான். இதில் மேகலா, சரவணா, சித்ரா, வெலிங்டன், பிராட்வே திரையரங்குகள் எம்.ஜி.ஆர் படங்களை ரிலீஸ் செய்யும். சாந்தி, கிரௌன், புவனேஸ்வரி தியேட்டர்கள் எப்போதும் சிவாஜி திரைப்படங்களை வெளியிடும். வெகு சில நேரங்களில் மட்டும்தான் இது மாறும்.இதில் பெரும்பாலான தியேட்டர்கள் இப்போது ஷாப்பிங்க் காம்ப்ளெக்ஸாகவோ, அல்லது குடோனாகவோ, பூட்டியோ கிடக்கின்றன. 

நாங்கள் அப்போது ஓட்டேரி பகுதியில் குடியிருந்தோம். எங்கள் வீட்டைச் சுற்றி தியேட்டர்கள்தான். சரஸ்வதி (இ), மகாலட்சுமி, புவனேஸ்வரி (இ), வசந்தி (இ), ராக்ஸி (இ), மேகலா (இ), உமா (இ). இ என குறிப்பிடப்பட்டவை எதுவும் இப்போது இல்லை. அத்தனை இல்லைகள். பலவும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் ஆகிவிட்டன. அயனாவரத்தில் இருந்த சயானி திரையரங்கும் அடுக்குமாடி குடியிருப்பாகிவிட்டது.

சென்னையை அலங்கரித்த இந்த கலைக் கூடங்களில் இப்போது 90 சதவிகித தியேட்டர்கள் உயிருடன் இல்லை. அவற்றுக்கு உயிர் இருந்தது என்று ரசிகன் நம்பினான். சென்னை புரசைவாக்கத்தில் இருந்த ராக்ஸி இப்போது சரவணா ஸ்டோர்ஸ் துணிக்கடை ஆகிவிட்டது. கே. பாலசந்தர் இயக்கிய படங்கள் அங்கே ரிலீஸ் ஆகும். மகேந்திரனின் முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள் என எல்லா படங்களும் அங்கே வெளியாகின. பாக்யராஜ், டி.ராஜேந்தர் படங்கள் கடைசியாக சக்கை போடு போட்டன. ஏனோ அது இயக்குநர்களுக்கு முக்கியத்துவம் தந்த திரையரங்காகவே என்னுள் பதிந்திருக்கிறது.
அண்ணா மேம்பாலத்தில் இருந்து அண்ணா சிலைக்குச் செல்வதற்குள் நாம் கடக்கும் திரையரங்குகள்... சபையர், புளூ டைமண்ட், எமரால்டு, ஆனந்த், லிட்டில் ஆனந்த், அலங்கார், வெலிங்க்டன், தேவி பாரடைஸ், சித்ரா, கெயிட்டி, காசினோ, பாரகன்... இந்த தியேட்டர்களில் எஞ்சி நிற்பது தேவி காம்ப்ளக்ஸ், காசினோ மட்டும்தான். சாந்தி தியேட்டருக்கும் நாள் குறித்துவிட்டார்கள்.

ப்ளூ டைமண்ட் தியேட்டரில் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் படத்தில் சென்று அமரலாம் என்ற சிஸ்டம் இருந்தது. படம் முடிய பத்து நிமிடம் இருக்கும்போதுகூட போய் அமரலாம். அடுத்த காட்சி ஆரம்பிக்கும்போது அப்படியே தொடர்ந்து அமர்ந்திருக்கலாம். டால்ஸ்டாயின் அன்னா கரீனினா போன்ற படங்கள் அதில் எந்த நேரமும் ஓடிக்கொண்டே இருக்கும். முதல் காட்சியில் உள்ளே போய் இரவுக் காட்சி முடிந்து வெளியே வருபவர்களும் உண்டு. அது ஒரு வித்தியாசமான சிஸ்டம்.

கெயிட்டி, சென்னையின் பழைய திரையரங்கம். 1930-களில் இருந்து இருக்கும் தியேட்டர். அந்த தியேட்டருக்கு என விசேஷமான ரசிகக் கூட்டம் உண்டு. கடைசி கால கட்டத்தில் செக்ஸ் பட தியேட்டர் ஆகி, அஞ்சரைக்குள்ள வண்டி, சாரி டீச்சர் போன்ற படங்களை வெளியிட்டு, ரகசிய ரசிகர்களை நம்பி காலத்தை ஓட்டினார்கள்.

ராயப்பேட்டையில் ஒடியன், உட்லண்ட்ஸ், லியோ, பைலட் தியேட்டர்களில் இப்போது ஊசலாட்டத்தில் ஒட்டிக் கொண்டிருப்பது உட்லண்ட்ஸ் தியேட்டர். மற்றவை மூடப்பட்டுவிட்டன. மயிலாப்பூரில் காமதேனு தியேட்டர் இருந்தது. தி.நகரில் ராஜகுமாரி, கிருஷ்ணவேணி திரையரங்குகள். நடிகை டி.ஆர். ராஜகுமாரியின் இந்த திரையரங்கம் இப்போது மெகா மார்ட் கடையாகிவிட்டது. நாகேஷ் திரையரங்கம் கல்யாண மண்டபமாகிவிட்டது. 

வட சென்னை பகுதியில், மின்ட் பகுதியில் இருந்து திருவொற்றியூர் வரை வரிசையாக 15 திரையரங்குகளுக்கு மேல் இருந்தன. ஶ்ரீ கிருஷ்ணா, கிரௌன் இரண்டும் மின்ட் பஸ் ஸ்டாண்டு அருகில் இருந்தன. சற்று தள்ளி முருகன் திரையரங்கம் இருந்தது. இதில் தியாகராஜ பாகவதர் படங்கள் எல்லாம் திரையிடப்பட்டன. இவை மூன்றும் இப்போது இல்லை. பாண்டியன், அகஸ்தியா, மகாராணி, தமிழ்நாடு, பத்மநாபா தியேட்டர்களில் பாதி இப்போது இல்லை. இந்தத் தியேட்டர்கள் எல்லாமே கடந்த 15 ஆண்டுகளுக்குள் காணாமல் போனவை.

15 ஆண்டுகளுக்குள் திரையரங்குகளுக்கு என்ன ஆனது? டி.வி-யின் வருகை பாதித்திருக்கலாம். திருட்டு விசிடி ஆபத்து நெருக்கி இருக்கலாம். சினிமாவின் வர்த்தகத்தில் ஏற்பட்ட ஏதோ ஒரு ஆபத்து அதற்குக் காரணமாகியிருக்கலாம்.
இது பின் குறிப்பு அல்ல... முன் குறிப்பு!
----------------------------------------------
இந்தத் திரையரங்குகளுக்கு எல்லாம் முன் சென்னையில் கட்டப்பட்ட திரையரங்கு எலெக்ட்ரிக் தியேட்டர். அந்த தியேட்டர் எங்கே இருக்கிறது தெரியுமா? சாந்தி தியேட்டர் எதிரில். சாந்தி தியேட்டர் எதிரில் இருக்கும் பழைய போஸ்ட் ஆபிஸ்தான். அந்த எலெக்ட்ரிக் தியேட்டர். திரையரங்கு இருந்ததற்கான அடையாளமாக இப்போதும் அங்கே ஒரு கவுன்டர் மட்டும் சாட்சியாக இருக்கிறது.


madras nalla madras -series 10 | பின்னி மில்லின் கதை (மெட்ராஸ்... நல்ல மெட்ராஸ்-10) | VIKATAN

பின்னி மில்லின் கதை (மெட்ராஸ்... நல்ல மெட்ராஸ்-10)
பின்னி மில்லின் கதை
-தமிழ்மகன்
டந்த அத்தியாயத்துக்கு வந்த கடிதங்களில் ஒன்று,  'தொடர்ந்து சினிமா சம்பந்தப்பட்ட செய்திகளே இடம்பெறாமல் மெட்ராஸ் பற்றிய வேறு தகவல்களைத் தரலாமே' எனக் குறிப்பிட்டிருந்தது. 

சென்னை மாகாண முதல்வராக சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் இருந்த காலம் தொட்டே ஆட்சியா ளருக்கும் சினிமாவுக்குமான சம்பந்தம் இருக்கத்தான் செய்தது. தீரர் சத்யமூர்த்தி சினிமாவோடு தொடர்பில் இருந்தார். அதன்பிறகு அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, விஜயகாந்த் என தமிழக அரசியல் இன்றுவரை சினிமாவால் நிரப்பப்பட்டதாகவே இருக்கிறது. எதாவது ஒரு விதத்தில் சினிமாவைத் தொட்டுச் செல்லாமல் தமிழகத்தின் சரித்திரத்தைச் சொல்ல முடிவதில்லை. அதிலும் குறிப்பாக சென்னையின் சரித்திரம்.
வாசகர் விருப்பம் கருதி, சினிமா உருவாகாத அந்தக் காலத்தை நோக்கி கொஞ்சம் முன்னோக்கிப் பயணித் தேன். இது சென்னை மக்களின் உறவோடும் உதிரத்தோடும் சம்பந்தப்பட்ட ஒரு மில்லின் சரித்திரம். சென் னையின் வரலாற்றில் பி அண்டு சி மில் என அழைக்கப்பட்ட பக்கிங்காம் அண்டு கர்னாடிக் மில் என்ற பின்னி மில்...
1900-களில் சுமார் 20,000 தொழிலாளர்களைக் கொண்டு இயங்கிய மாபெரும் வாழ்வாதாரமாக விளங்கியது. பிரிட்டிஷ்காரரான பின்னி என்பவர் தொடங்கிய ஆலை இது.

சுமார் ஒரு லட்சம் குடும்ப உறுப்பினர்கள் அந்த ஒரு மில்லை நம்பி இருந்தனர். அன்றைய சென்னையின் ஜனத்தொகையில் அது கணிசமானது. வட சென்னை மக்களின் மாபெரும் பழக்க வழக்கக் காரணியாகவும் அந்த மில் இருந்தது.

எனக்கு 70-களின் தொடக்கத்தில் இருந்து அந்த மில் பழக்கம். அந்த ஆலையில் ஒலிக்கும் சங்கின் ஓசை யைக் கேட்டு வளர்ந்தவன். மூன்று ஷிப்டுகள். ஆலைச் சங்கு தினமும் ஆறு முறை முழங்கும். ஓட்டேரி, குசப்பேட்டை, பட்டாளம், புளியந்தோப்பு, வியாசர்பாடி, பெரம்பூர் பகுதிகளில் அந்த மில்லின் தொழிலாளர் கள் வசித்தனர். மில் இடைவேளையின் போது, சாப்பாடு எடுத்துச் செல்லும் மனைவிமார்கள், குழந்தைகள் பதற்றமாக மில்லை நோக்கி ஓடுவதைப் பார்ப்பேன்.
தொழிலாளர்களின் வீடுகளில் வாடியா, திரு.வி.க. புகைப்படங்கள் மாட்டப்பட்டிருக்கும். காரணம் இந்த மில்லின் ஆரம்பகால தொழிற்சங்கத் தலைவர்கள் அவர்கள்தான். இந்தியாவின் முதல் தொழிற் சங்கம் பின்னி மில் தொழிற் சங்கம்தான் என்பது இங்கு பதியப்பட வேண்டிய செய்தி . எப்போதும் அவர்கள் குடும் பங்களில் மில்லைப் பற்றிய பேச்சு இருக்கும். 

சம்பள உயர்வு பேச்சு வார்த்தை, வேலை நிறுத்தம், மில்லில் நடக்கும் கெடுபிடி, அங்கு நடந்த சுவாரஸ்யம் தான் அவர்களிம் பேச்சில் முக்கியப் பங்கு வகிக்கும். ஷிப்டு, சாப்பாடு, தொழிற் சங்கத் தலைவர் குசேலர், சுப்பு இப்படித்தான் பேச்சு இருக்கும். அந்த மில்... அந்தத் தொழிலாளர்களின் வாழ்வின் அங்கம், கலாசாரமாக மாறியிருந்தது.

1921-ல் நடந்த தொழிற் சங்கப் போராட்டம் சாதிப் போராட்டமாக மாறியது, உலக வரலாற்றில் இந்திய சாதி அமைப்பு எப்படி இருக்கிறது என்பதற்கு ஒரு அடையாளமாக இருக்கிறது. அதில் தாழ்த்தப்பட்ட மக்கள் ஒரு பிரிவாகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் ஒரு அணியாகவும் மாறினர். பிற்படுத்தப்பட்ட மக்கள் வேலை நிறுத்தத்தை ஆதரித்தனர். தலித் மக்கள் வேலைக்குச் செல்ல முடிவெடுத்தனர். அது தொழிலாளர்கள் மத்தியில் பெரும் பிளவை ஏற்படுத்தியது. இந்தியாவின் முதல் தொழில் சங்கத்தில் இப்படித்தான் வேலைநிறுத்தப் போராட்டம் நடந்தது.
அப்போது திரு.வி.க. இரு தரப்பு மக்களுக்கும் பாலமாக இருந்து அந்தப் பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வந்தார். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு பிரிட்டிஷ் நிர்வாகம் இந்திய முதலாளிகள் கைக்கு மாறியது. பிரதா னமாக ராணுவத்துக்கான துணிகளை நெய்தது அந்த நிறுவனம். பிறகு ராணுவத்திலேயே குளோத்திங் ஃபேக்டரிகள் உருவானதாலோ, என்னவோ பெரும் சந்தை வாய்ப்பை இழந்தது.  பின்னி போர்வைகள் பெரும் மவுசுடன் விற்பனை ஆகின. மலையூர் மம்பட்டியான் படத்தில் நடிகர் தியாகராஜன் போர்த்தியிருக் கும் போர்வை பின்னி போர்வைதான்.

பின்னி நிறுவனம் தனியாக துணிக்கடைகள் நடத்தியது. அங்கு பணியாற்றும் தொழிலாளர்களுக்கு சலுகை விலையில் துணிகள் விற்பனை செய்தது. நான் 70-களில் அதன் தேய்மானக் காலத்தில்தான் அந்த மில்லை பெரும்பாலும் பார்த்தேன். சொல்லி வைத்ததுபோல ஒரு பெரு மழையில் அந்த மில்லில் வெள்ளம் புகுந்து துணிகள் எல்லாம் பாழாகின. இயந்திரங்கள் பழுதாகின. மில்லை மூடுவதைத் தவிர வேறு வழி இல்லை என்ற முடிவு எடுக்கப்பட்டது. 

பிரதமர் இந்திரா, அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர்., தொழிற் சங்கத் தலைவர்கள் எல்லோரும் அந்தத் தொழி லாளர்கள் பிரச்னையைத் தீர்க்க ஆலோசித்தனர். அது கொடுமையான காலகட்டம். பல தொழிலாளர்கள் வீட்டு வாடகை கொடுக்க முடியாமல், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாமல் தவித்தனர். பலர் தற் காலிக வேலைகளுக்குச் சென்று பசியாறினர். அதன்பிறகு மில்லை திறப்பதும் மூடுவதும் ஆட்களைக் குறைப்பதும் என பல்வேறு சோதனைகளூடே லட்சக்கணக்கானோர் உழன்றனர்.
சுமார் இரண்டு கிலோ மீட்டர் நீளமும் ஒரு கிலோ மீட்டர் அகலமும் கொண்ட அந்த மில், அதைச் சுற்றி யிருந்த அவர்களுக்கான குடியிருப்புப் பகுதிகள் அனைத்தும் நகரத்தின் மாபெரும் அடையாளமாக இருந் தது.  

அதனுள்ளே பகிங்காம் கால்வாய் ஒன்று செல்லும் அதில் படகுகள் மூலம் சரக்குகள் வருவதும் போவது மாக இருக்கும். மில்லுக்குள் சரக்குகளை ஏற்றி வரவும் நிலக்கரிகளை இறக்கிவிட்டுச் செல்லவும் ரயில் உள்ளே செல்லும். ரயில், படகு, லாரிகள் என அந்த மில் பரபரப்பாக இருந்த காட்சிகள் நினைவில் மிச்சம் இருக்கின்றது.
ஷங்கர் இயக்கத்தில் வெளியான சிவாஜி படத்தில் ரஜினியும் ஸ்ரேயாவும் 'பில்லா ரங்கா பாட்ஷாதான்... என் பிரிஸ்டல் பேசும் பேஷாதா' என்று சுட்டு சுட்டு வீழ்த்திக் காதல் பாட்டுப் பாடும் பாடல் அந்த மில்லில் தான் படமாக்கப்பட்டது. பிரம்மாண்டமான கோட்டை, ஜெயில், பாழடைந்த மாளிகை போன்ற லொகேஷன் களுக்கு சினிமா எடுப்பதற்கு அங்கு செல்கிறார்கள். (சினிமா இல்லாமல் சென்னை இல்லை) சென்னையில் ஒரு நூற்றாண்டு சரித்திரம் அந்த மில்லுக்குச் சொந்தமானது. 

அந்தத் தொழிலாளர்களின் ரத்தம், வியர்வை, மகிழ்ச்சி, கண்ணீர், மூச்சு, வாழ்வு எல்லாமே அங்கு இருக் கிறது. காலப் போக்கில் அங்கேயும் அடுக்கு மாடிக் குடியிருப்புகள் உருவாகி, இந்தியாவின் முதல் தொழிற் சங்கம் உருவாகக் காரணமாக இருந்த இடம் அதற்கு சம்பந்தமே இல்லாத வேறு அவதாரம் எடுக்கலாம்.

madras nalla madras -series no.11 | பஞ்சத்தால் உருவான பக்கிங்ஹாம் கால்வாய் (மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் -11 ) | VIKATAN

பஞ்சத்தால் உருவான பக்கிங்ஹாம் கால்வாய் (மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் -11 )
- தமிழ்மகன்  
                                          பஞ்சத்தால் உருவான  பக்கிங்ஹாம் கால்வாய்


சுனாமி வந்த நேரத்தில் பக்கிங்ஹாம் கால்வாய் பற்றி பேச்சு  வந்தது. பல இடங்களில் சுனாமியின் தாக்கத்தை இந்த பகிங்காம் கால்வாய்தான் குறைத்தது  என்று பெருமைப்பட்டனர். பக்கிங்ஹாம் கால்வாய் என்பது செயற்கையாக உருவாக்கப்பட்டது. 1806 -ல் சென்னை எண்ணூரில் இருந்து பழவேற்காடு வரை தோண்டப்பட்டு,   பின்னர் விஜயவாடாவில் கிருஷ்ணா நதிவரை இணைக்கப்பட்டது.

1886ம் ஆண்டில் சென்னையில் கோரத்தாண்டவம் ஆடிய பஞ்சத்தை எதிர்கொள்வதற்காக மக்களுக்கு வேலை கொடுத்து, கூலியும் கொடுக்க வேண்டிய நிர்பந்தத்தின் பேரில் அந்தக் கால்வாயை மேலும் நீட்டிக்கத் திட்டமிட்டனர்.
எண்ணூரில் இருந்து அடையாறு வரை தோண்டப்பட்டது அந்தப் பஞ்சக் காலத்தில்தான். பின்னர் அது விழுப்புரம் வரை நீட்டிக்கப்பட்டு நீர்வழி வர்த்தகத்துக்குப் பயன்படுத்தப்பட்டது. வெள்ளையர்கள் அவர்கள் வசதிக்காக உருவாக்கிய திட்டமே எனினும் ரயில் போக்குவரத்து, அஞ்சல் அலுவலகம் எல்லாம் மக்களின் வாழ்க்கையில் ஏற்படுத்திய மாற்றத்துக்கு நிகரானது இந்தக் கால்வாய் திட்டம். வெள்ளையர்கள் இருந்தது வரை மிகச் சிறப்பாகப் பராமரிக்கப்பட்ட இது, அவர்கள் நாட்டைவிட்டுச் சென்ற இருபது முப்பது ஆண்டு களில் வீணாகிப்போனது.

கடலை ஒட்டியே கடலில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் இடைவெளியில் அந்தக் கால்வாய் வெட்டப் பட்டது. கால்வாய்க்கு நீர்? கடலின் உவர் நீரே அந்தக் கால்வாயில் நிறைந்தது. அதனால் நீர் பஞ்சம் இல்லை. விசாகப்பட்டினத்தில் இருந்து விழுப்புரம் வரை வெட்டப்பட்ட இந்த 800 கிலோ மீட்டர் கால்வாய் அந்த நாளிலே படகுப் போக்குவரத்துக்குப் பெரிதும் பயன்பட்டது. அரிசி, பருத்தி, மீன், கருவாடு எல்லாமே அந்தப் படகுகளில் பயணப்பட்டன.

சென்னையில் மூலக்கொத்தளம் என்ற இடத்தைப் பலரும் பார்த் திருப்பர். அங்கே கருவாட்டு மண்டி பிரபலம். ஆந்திர பகுதிகளில் இருந்து வரும் கருவாடுகள் மூலக்கொத்தளம் அருகே இருக்கும் படகுத்துறையில் வந்து இறங்கும். 1960-70 வரைகூட அங்கே கரு வாடு இறக்குவதற்கான படகுத்துறை நல்ல நிலையிலே இருந் தது. இப்போதும்கூட சிதிலமான நிலையிலே அங்கே படகுத் துறை இருப்பதைப் பார்க்க முடியும். 

மதராசப்பட்டணம் படத்தில் சென்ட்ரலுக்கு எதிரே காட்டப்படும் படகு சவாரிக்காட்சிகள் பக்கிங்ஹாம் கர்னாடிக் கால்வாய்தான். 

அந்தக் கால்வாய்க்கு மேலே ரயில்பாதையும் அதற்கு மேலே பேருந்து செல்லும் சாலையும் அமைக்கப்பட்டது. உலகிலேயே ஒரே இடத்தில் நீர்வழி, நிலவழி, ரயில்வழிப் பாதை அமைக்கப் பட்ட இடம் அதுதான் என்று அந்த நாளிலே ஒரு குறிப்பு வெளி யானது. 

ஒரு வேளை அது உண்மையாகவும் இருக்கலாம். நீர் வழிப்பாதைக்கான இந்தக் கால்வாய் மூலம், பின்னி மில்லுக்கு பருத்தி, தயாரான துணிகள் என சரக்குகள் போய்க்கொண்டும் வந்துகொண்டும் இருக்கும். 

உப்பு நீர் பாதையாக இருந்த இந்தக் கால்வாய், பின்னர் சாக்கடைகளைக் கலக்கும் பாதையாகவும் மாறிப் போனது. கூவத்துக்கு ஏற்பட்ட அதே கதி. 800 கிலோ மீட்டர் கால்வாயின் குறுக்கே சில இடங்களில் ஆக்கிரமிப்புகள் நடந்துள்ளன. சில இடங்களில் இயற்கையான சேதாரங்களால் கால்வாய் மூடப்பட்டுக் கிடக்கிறது. 

இந்தக் கால்வாயை மீண்டும் செப்பனிட வேண்டும் என நமது அமைச்சர்கள் ஆர்வம் காட்டுவார்கள். கைது நடவடிக்கை, ஊழல் குற்றச்சாட்டு போன்ற அவர்களின் பிரத்யேக பிரச்னைகளின் முன் இந்தக் கால்வாயின் மகத்துவம் அடிபட்டுப் போகும். 

கடந்த 2011-ல் சென்னையில் இருந்து முட்டுக்காடு வரை இந்தக் கால்வாயை முதல்கட்டமாக  சீர மைக்க முடிவு செய்தனர். அமைச்சர்கள், அதிகாரி கள் தீவிரமாகப் பார்வையிட்டனர்.  மீண்டும் கால் வாயில் போட்ட கல்லாக இருக்கி றது சீரமைக்கும் திட்டம். 

சுமார் 100 மீட்டர் வரை அகலப் படுத்தி, 10 மீட்டர் வரை ஆழப்படுத்தினால் அழகான நீர்வழிப்பாதை தயாராகும். சுற்றுலாத் தலமாகப் பயன் படுத்தலாம். ஆந்திரா முதல் மரக்காணம் வரை சரக்குகள் அனுப்பலாம்.

மாசடைவது குறையும். சுனாமி வந்தால் பாதிப்பு இருக்காது என எண்ணற்ற நன்மைகளைப் பட்டி யல் போட்டுக் காட்டிவிட்டார்கள். இருந் தாலும் இந்த 100 வருடக் கால்வாய் மரணப்படுக்கையில் கிடக்கிறது. இந்தப் பெரிய கால்வாயின் மீது கொஞ்சம் பெரிய மனசு வைக்க வேண்டும். 


The horse pond Chennai (Madras better Madras -13) | சென்னையின் குதிரைக் குளம்பு குளம் (மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்-13) | VIKATAN

சென்னையின் குதிரைக் குளம்பு குளம் (மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்-13)
-தமிழ்மகன்

நண்பர் ஒருவர் திருமண அழைப்பிதழ் கொடுத்தார். ஓர் இடத்தில் சின்ன இடறல். திருமண மண்டப முகவரியில், இறங்க வேண்டிய இடம் என்ற இடத்தில் 'ஏரிக்கரை பஸ் ஸ்டாப்' என்று போட்டிருந்தது.

'அந்த இடத்தில் ஏரி எங்கே இருக்கிறது' என எங்கள் இருவருக்குமே தெரியவில்லை. மாரியம்மன் நகர், மகாலட்சுமி நகர் என்று அங்குள்ள நகர்கள்தான், அந்த நாளைய ஏரி என்பது தெரியவந்தது. இப்படி குளக்கரை ஸ்டாப்பிங், குளத்தூர் பஸ் ஸ்டாண்டு, ஆத்தூர் மார்க்கெட் என்ற பெயர் உள்ள இடங்களில் பெயருக்கு காரணங்கள் மிஸ் ஆகியிருக்கும். நீர் ஆதாரங்களை ஆதாரம் இல்லாமல் அழிப்பது அதிகாரத்தில் இருப்பவர்களின் சிரமம் இல்லாத அழிச்சாட்டியமாக இருக்கிறது.

சென்னை கிராமம், செங்கல்பட்டு மாவட்டத்தின் ஓர் அங்கம். செங்கல்பட்டு மாவட்டத்தில் காவிரி, தாமிரபரணி, வைகை ஆறுகளைப் போல் ஜீவ ஆறுகள் எதுவும் இல்லை. எல்லாமே மழை நீர் வடிகால் ஆறுகள். மலையில் இருந்து புறப்படுபவை அல்ல. அதனால் இங்கே ஏரிகள் அதிகம் உருவாக்கப்பட்டன. வீரநாராயணர் (வீராணம்) ஏரி, மதுராந்தகம் ஏரி, பூண்டி ஏரி, புழல் ஏரி, சோழவரம் ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி, வியாசர்பாடி ஏரி, பொன்னேரி போன்ற பெரிய ஏரிகள் என்று சென்னையைச் சுற்றி உள்ளன. அது தவிர ஒவ்வொரு ஊருக்கும் ஒன்றிரண்டு சிறிய ஏரிகள் இருக்கும். செங்கல்பட்டுக்கு ஏரி மாவட்டம் என்று ஒரு பெயரும் உண்டு.
சென்னையில் நுங்கம்பாக்கம் ஏரி, தேனாம்பேட்டை ஏரி, வியாசர்பாடி ஏரி, முகப்பேர் ஏரி, திருவேற்காடு ஏரி, ஓட்டேரி, மேடவாக்கம் ஏரி, பள்ளிக்கரணை ஏரி, போரூர் ஏரி, ஆவடி ஏரி, கொளத்தூர் ஏரி இரட்டை ஏரி, வேளச்சேரி ஏரி, பெரும்பாக்கம் ஏரி, பெருங்களத்தூர், கல்லு குட்டை ஏரி, வில்லிவாக்கம் ஏரி, பாடிய நல்லூர் ஏரி, வேம்பாக்கம் ஏரி, பிச்சாட்டூர் ஏரி, திருநின்றவூர் ஏரி, பாக்கம் ஏரி, விச்சூர் ஏரி, முடிச்சூர் ஏரி, சேத்துப்பாடு ஏரி (ஸ்பர் டாங்க் - ஸ்பர்டாங்க் ரோடு), செம்பாக்கம் ஏரி, சிட்லபாக்கம் ஏரி என்று பெரிய ஏரிகளின் பட்டியலே முப்பதை நெருங்கும். சிற்சில சிறிய எரிகளும், குளங்களும், குட்டைகளும் நீர் ஆதாரங்களாக இருந்தன.
காணாமல் போன ஏரிகள்
70 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த பல ஏரிகள் இப்போது இல்லை. நகரம் வளர வளர அதற்கு ஏற்ப நீர் நிலையும் வளர வேண்டும் என்பதுதான் நேர்மையான விகிதம். ஆனால், தற்போது சென்னையில் இருக்கும் ஏரிகளை விரல் விட்டு எண்ணி விடலாம்.

நெரிசல் மிகுந்த போரூர் சிக்னலைக் கடந்து ராமசந்திரா மருத்துவமனைக்குச் செல்பவர்கள் கண்களில் பெரிய ஏரியொன்று தென்படும். 200 ஏக்கர் பரப்பளவில் 46 மில்லியன் சதுர அடி நீர் கொள்ளளவுடன் இருக்கும் இந்த ஏரியைப் போரூர் ஏரி என்று அழைக்கிறார்கள். சென்னைக்கு மிக அருகே இந்த ஏரி தப்பிப் பிழைத்திருப்பது மாபெரும் சவால்தான்.
ஏரியின் முன்பு உள்ள ‘ஆதி குபேர ஜலகண்டேஸ்வர'ருக்குப் பயந்து விட்டுவிட்டார்களோ?

ஆக்கிரமிப்புகளின் காரணமாக ஏரிகள் சுருங்க ஆரம்பித்தன. கான்கிரீட் காடுகள் சென்னைக் காடுகளை துவம்சம் செய்தன.

பள்ளிக்கரணை ஏரி இந்தியாவின் சதுப்பு நில ஏரிகளில் ஒன்று. பல ஆயிரம் ஏக்கர் பரப்பில் அமைந்திருந்த இந்த ஏரிக்காகவே பல வெளிநாட்டுப் பறவைகள் வரும் போகும். சாக்கடை, வேதிப் பொருள் கலப்பினால் இப்போது பறவைகள் வரவு குறைந்துவிட்டதாக, அவ்வப்போது பறவை ஆர்வலர்கள் வருத்தப்படுவதோடு சரி. அரசாங்கம் பெரிதாக அக்கறை காட்டவில்லை.

ஏரிகள் என்பன ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை. ஒரு ஏரியில் நீர் நிரம்பினால் அது அடுத்த ஏரிக்கு நீரை வார்க்கும். மயிலாப்பூர் கோயில் குளம் 90-களில் பல ஆண்டுகளாக வற்றிக் கிடந்தது. கவாஸ்கர் ஆகும் ஆசையில் நிறைய பேர் அங்கங்கே ஸ்டம்ப் நட்டு வசதியாக கிரிக்கெட் ஆடிக்கொண்டிருந்தார்கள். அப்போது அந்தக் குளம் திடீரென்று வற்றிப்போனதற்கு ராஜ அண்ணாமலைபுரத்தில் இருந்த ஒரு குட்டையைத் தூர்த்துவிட்டதுதான் காரணம் என்று அப்போது சர்ச்சை ஓடியது. தூர்த்த குட்டையை மீண்டும் தூர் வாரினார்கள் என்பது என் நினைவு. அதன் பிறகுதான் மயிலாப்பூர் குளத்தில் நீர் நிரம்பியது.

சென்னையில் ஸ்பர் டாங்க் ரோடு பலருக்கும் தெரிந்திருக்கும். அது குளத்தின் பெயரால் வந்த பெயர்தான். அங்கிருந்த ஒரு குளம் குதிரையின் குளம்புபோல இருந்தது. ஆங்கிலத்தில் ஸ்பர் என்றால் குதிரை என்று ஒரு அர்த்தம். குதிரைக்குளம்பு குளம் சாலை என்பதுதான் ஸ்பர்டாங்க் ரோடு...

நண்பர் திருமண அழைப்பிதழில் சொன்ன ஏரிக்கரை சாலை போல இந்த குதிரைக் குளம்பு குளமும் இப்போது ஈகா தியேட்டருக்கு எதிரே இளைத்துப்போய் கிடக்கிறது.


Madras...Madras | குறுகலான பிராட்வே-வும் எம்.ஜி.ஆர் வசித்த ஒத்தவாடையும்! (மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்-14 ) | VIKATAN

குறுகலான பிராட்வே-வும் எம்.ஜி.ஆர் வசித்த ஒத்தவாடையும்! (மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்-14 )
-தமிழ்மகன்
சென்னையின் மிகக் குறுகலான சாலை ஒன்றுக்கு பிராட்வே (அகன்ற சாலை) என்று பெயர். இந்த முரண்சுவைக்குப் பின்னால் ஒரு சுவாரஸ்யமான சரித்திரம் உண்டு.
சென்னையின் மீனவக்குப்பத்தை ஒட்டியிருந்த அந்த வெட்டவெளி இடம் ஒருநாளில் கடல் மட்டத்துக்கு நிகராக இருந்தது. அடிக்கடி கடல் அதுவரை வந்து அலைவீசும். செயின்ட் ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்ட பிறகு, அதற்கு அருகே இருந்த நரி மேடு, கோட்டையின்  பாதுகாப்புக்கு உகந்ததாக இல்லை என்று முடிவு செய்யப்பட்டது. அந்தச் சிறிய குன்று தகர்க்கப்பட்டு அந்த மண் கொண்டுவந்து கொட்டப்பட்ட இடம்தான் மண்ணடி என பெயர் பெற்றது என முன்னரே பார்த்தோம். அந்த நரிமேட்டு மணல் மிச்சம்தான் இந்த பிராட்வே.
இன்று பிராட்வே எனவும், பிரகாசம் சாலை என்றும் விவரிக்கப்படும் அந்த இடத்தில் ஓர் ஓடை இருந்தது. பெரிய நீர் ஓட்டம் எல்லாம் இல்லை. சாக்கடை ஓடை.
அந்த ஓடையின் அருகே இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் இருந்த ஸ்டீபன் போபம் அவர்கள் வீடு இருந்தது. வீட்டின் முன்னால் இப்படி ஒரு சாக்கடை  ஓடை இருந்ததால்,  அந்த நரிமேட்டு மண்ணை வைத்து சரி செய்துகொள்ள விரும்பி, மண்ணுக்கு விண்ணப்பித்தவரும் அவர்தான். மேலும் சென்னையில் காவல் துறையை ஏற்படுத்த முழு முதல் காரணமாக இருந்தவர்ரும் அவர்தான் என்பதெல்லாம் 18-ம் நூற்றாண்டின் கதை.
அந்த ஓடை சுமார் 12 அடி உயரம் வரை உயர்த்தப்பட்டு சாலை ஆக்கப்பட்டது.
அந்த சாலையை ஒட்டி ஏராளமான உணவகங்கள் உருவாகின. அன்றைய வெள்ளையர்களின் பிரதான சாயங்கால வேலை கூடல் இடமாக இருந்தது வெங்கடாசலம் என்பவர் நடத்திவந்த மிளகு ரசம் கடை.
மிளகுக்காக இந்தியாவைத் தேடி வந்தவர்கள்தானே ஆங்கிலேயர்கள். இன்னொரு முக்கியமான ஓட்டலும் அங்கே வெள்ளையர்களால் ஆரம்பிக்கப்பட்டது. ஹாரிசன் ஓட்டல் என்று பெயர். இன்றும் நுங்கம்பாக்கம் ஸ்பர்டாங்க் சாலையை ஒட்டிய பாலத்துக்கு அருகே ஒரு ஹாரிசன் ஓட்டல் உள்ளது.
நிறைய ஓட்டல்கள் முளைத்தது போலவே பின்னாளில் அங்கு நிறைய பதிப்பகங்கள் தோன்றின. சைவ ரத்ன நாயகர் அண்டு சன்ஸ் பிரசுரம், சித்தாந்த நூல் பதிப்புக் கழகம், மறைமலை அடிகள் நூலகம், பூம்புகார் பிரசுரம், பாரி நிலையம், யுனிவர்சல் பப்ளிகேஷன்ஸ் என எண்ணற்ற நூல் வெளியீட்டு நிறுவனங்கள் அங்கே தோன்றின.
நம் மெட்ராஸ் நல்ல மெட்ராஸில் அடிக்கடி வெள்ளைக்காரர்கள் கிராஸ் ஆகிறார்கள். வெள்ளைக்காரர்கள் ஏன் சென்னைக்கு வந்தார்கள்? என்பதை இலேசாக ஒரு ரவுண்டு பார்த்துவிட்டால் நல்லது.
ஐரோப்பியர்களுக்கு மிளகு என்பது போர்த்துகீசியர்கள், டச்சுக்காரர்கள் மூலமாகத்தான் கிடைத்துக்கொண்டிருந்தது. ஒரு கிறிஸ்துமஸ் தினத்தில் போர்த்துக்கீசியர்கள் மிளகின் விலையை இரண்டுமடங்காக உயர்த்தினர். இங்கிலாந்து வர்த்தகர்கள் அந்த விலை கொடுத்து மிளகை வாங்குவதாக இல்லை என அறிவித்தனர். பேரம் படியாமல் மிளகு வியாபாரம் நின்று போனது. அதனால் அந்த ஆண்டு கிறிஸ்துமஸ்ஸுக்கு அவர்களால் சூப் குடிக்க முடியாமல் போனது. கிறிஸ்துமஸ் பொலிவிழந்தது.
வெகுண்டு எழுந்த இங்கிலாந்து வர்த்தகர்கள் (பிரிட்டீஷ் கம்பெனியினர்) 'அந்த மிளகு எங்கு விளைகிறது' என்று அறிந்து இந்தியாவின் மேற்கு கடற்கரைக்கு வந்து இறங்கினர். மிளகை வாங்கிக்கொண்டு கிளம்பியவர்களுக்கு, இந்தியா அருமையான பிரம்மாண்ட சந்தையாகத் தெரிந்தது.
விஞ்ஞானி நியூட்டன் காலத்துக்குப் பிறகு உருவான அன்றைய இயந்திரப் புரட்சியால் எக்கச்சக்கமாக துணிகளை உருவாக்கிவிட்டு அதை எங்கே கொண்டுபோய் விற்பது என்று தவித்துக்கொண்டிருந்த பிரிட்டீஷார், துணிமணிகளை விற்றுவிட்டு மிளகையும் முத்தையும் வாங்கிச் சென்றனர். ஆரம்பத்தில் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. ஒரு பக்கம் டச்சுக்காரர்கள், இன்னொரு பக்கம் ப்ரெஞ்சுக்காரர்கள் இந்தியாவை சூழ்ந்திருந்தனர். இதற்கு இடையே பிரிட்டீஷ் வர்த்தகர்களுக்கு நிலையாக ஓர் இடம் இல்லை.
இந்தியாவில் கொஞ்சம் இடம் வாங்கிவிட்டால் என்ன என்ற எண்ணத்தில் செயின்ட் ஜார்ஜ் கோட்டை கட்டுவதற்கான இடத்தை, விஜய நகரத்தின் குறுநில மன்னராக இருந்த வேங்கடப்ப நாயக்கரிடம் இருந்து வாங்கினர். கடற்கரையை ஒட்டியிருந்த கொஞ்சம் நிலத்தை வாங்கி, தங்கள் பாதுகாப்புக்கு அந்தக் கோட்டையைக் கட்டினர். (இப்போது கோட்டை உள்ள அந்த இடத்தில் மலையப்பன் என்பவரின் வாழைத்தோப்பு இருந்ததாக மா.சு.சம்பந்தன் அவர்கள் எழுதியிருக்கிறார்.).
பிறகு, ஜார்ஜ் டவுனையும் தொடர்ந்து புரசைவாக்கம், வேப்பேரி போன்ற பகுதிகளையும் வாங்கினர். அதன் பிறகு, ஆயுதங்களைக்காட்டி அடித்தே பிடுங்கிக்கொள்ள ஆரம்பித்ததெல்லாம்.... இந்திய பிரிட்டீஷ்  ஆட்சிக்காலத்தின் மைக்ரோ வரலாறு.
அந்த வரலாற்றில் இருந்தது நாம் இன்றைய சென்னையில் உள்ள வினோதமான சில இடங்களுக்கான பெயர்க்காரணங்களைப் பார்க்கப் போகிறோம்.
சென்னையில் யானைக்கவுனி என்று ஓர் இடம் உண்டு. அது என்ன யானைக்கவுனி?
மறுபடியும் கொஞ்சம் காலத்துக்கு உள்ளே பிரயாணிக்க வேண்டியிருக்கும். 1700-களில் சென்னையை பிரிட்டீஷாரும் பிரெஞ்சுகாரர்களும் மாறி மாறி கற்... மன்னிக்கவும்... ஆண்டனர். அப்படி ஆண்ட நாட்களில் இரண்டாவது முறையாக சென்னையை கைப்பற்றிய ஆங்கிலேயர்கள், இந்த முறை பிளாக் சிட்டியான முத்தியால் பேட்டை, ஏழுகிணறு, பெத்தநாயக்கன் பேட்டை, எண்ணூர், திருவொற்றியூர் பகுதிகளைக் கைப்பற்ற, அந்தப் பகுதிகளில் யாரும் நுழைந்துவிடாத படிக்கு ஒரு நீண்ட சுவரை (wall) எழுப்பினர். அது இன்றைய சென்ட்ரல் ஸ்டேஷன் வரை இருந்தது. அதைக் கட்டுவதற்காக சென்னை மக்களிடம் நுழைவு வரி வசூலிக்கப்பட்டது. அந்தச் சுவரை ஒட்டி உருவாக்கப்பட்ட நீண்ட சாலை, வால்டாக்ஸ் ரோடு (சுவர் வரிச் சாலை) எனப்பட்டது.
அந்த நீண்ட சுவரில் ஆங்காங்கே மக்கள், வாகனங்கள் வரிகட்டி வந்து செல்வதற்கான நுழைவாயில்கள் இருந்தன. திருவெற்றியூர் கேட், எண்ணூர் கேட், தண்டையார் பேட்டை டோல்கேட், எலிபென்ட் கேட் போன்றவை இருந்தன. இன்றும் மிச்சம் இருப்பது தண்டையார் பேட்டை டோல்கேட் மற்றும் எலிபென்ட் கேட்டுகள்.
அது என்ன எலிபென்ட் கேட்?
அது யானைகள் நிறுத்திவைக்கப்பட்டு கம்பீரமாகக் கண்காணிக்கப்பட்ட, கவனிக்கப்பட்ட இடம்.... அதனால் அது யானை கவனி என்றும் அழைக்கப்பட்டு இப்போது யானைகவுனியாகியிருக்கிறது. (யானைகவுனி என்ற அந்த இடத்துக்கும் திருப்பதிக்கும் ஒரு சம்பந்தம் உண்டு... அதை பிரிதொரு அத்தியாயத்தில் பார்ப்போம்)
ஒரு பக்கம் சுவரால் எழுப்பப்பட்ட அந்த இடத்தை ஒத்தைவாடை என்றும் மக்கள் இன்றும் சொல்லி வருகிறார்கள். அந்த ஒத்தவாடை அருகே இருந்த நாடகக் கொட்டகையில் எம்.ஜி.ஆரும் சக்கரபாணியும் நடித்தனர். அவர்களுடைய வீடும் அப்போது அங்கே இருந்தது என்பதெல்லாம் நம்மை நெருங்கி நிகழ்ந்த வரலாறுகள்.
எம்.ஜி.ஆர் வசித்த வீடு யானை கவுனி பகுதியில் வெகுகாலம் வரை அப்படியே இருந்தது. பிறகு அதை ஒரு குஜராத்திக்காரர் வாங்கிவிட்டதாக நடிகர் ராஜேஷ் தெரிவித்தார். எம்.ஜி.ஆரின் பழைய வீட்டைத் தேடிக்கண்டுபிடித்து அது சிதலமாகிக்கிடந்த நாளில் அவர் அதைப் புகைப்படம் எடுத்திருந்தார்.
எல்லா நாட்களிலும் எம்.ஜி.ஆர் சகோதரர்களுக்கு நாடகத்தில் நடிக்க வேடம் கிடைக்காது. வீட்டில் வறுமை தாண்டவம் ஆடும். சாப்பிட வழி இல்லாமல் இருந்தபோது, பக்கத்து வீட்டில் இருந்த இன்னொரு ஏழை பெண்மணி சிறிதளவு நொய்யைக் கொடுத்ததாகவும், அதைக்கொண்டு தன் தாய் கஞ்சி காய்ச்சிக் கொடுத்ததாகவும் எம்.ஜி.ஆர் ஒரு சமயம் மேடையில் பேசினார்.
வேலை இல்லாத அந்த நாட்களில் சால்ட் கோட்ரஸ் பாலத்தின் மீது சரக்குகளை தள்ளிச் செல்லும் வண்டிக்காரர்களுக்கு உதவுவதுதான் எம்.ஜி.ஆர்., சக்கரபாணி ஆகியோருக்கு வேலை. சில வண்டிக்காரர்கள் காலணா, தம்படி என்று தந்துவிட்டுச் செல்வார்கள் என்றும் அவர் சொல்லியிருக்கிறார்.
வண்டி தள்ளிய ஒருவர் முன்னணி நடிகராகவும், முதல்வராகவும் ஆக உதவியிருக்கிறது சென்னை.

அது என்ன சால்ட் கோட்ரஸ்? அதன் சுவாரஸ்ய பின்னணியை அடுத்து பார்ப்போம்.


Tirupati umbrella procession, elephant kavuni! (Madras Good Madras -16) | திருப்பதி குடை ஊர்வலமும், யானை கவுனியும்! (மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்-16) | VIKATAN

திருப்பதி குடை ஊர்வலமும், யானை கவுனியும்! (மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்-16)
-தமிழ்மகன்

இந்தியாவில் வேறு எங்கும் நடக்காத ஒரு வைபவம் சென்னையில் நடந்து வருகிறது. வட சென்னையின் பிரதானமான விழா அது. தமிழ்நாட்டின் நாட்காட்டிகளை கிழிப்பவர்கள், செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் 'திருப்பதி குடை ஊர்வலம்' என்று படித்திருக்கக் கூடும்.

திருப்பதி மலையில் உள்ள வெங்கடேசப் பெருமாள் கோயில் பிரம்மோத்சவத்தின் போது கோயில் உற்சவரை ஊர்வலமாக அழைத்துச் செல்வார்கள். அப்போது உற்சவருக்கு முன்னும், பின்னும் அலங்கரிக்கப்பட்ட குடைகள் எடுத்துச் செல்வார்கள்.

பட்டுத் துணி, மூங்கில், ஜரிகை, மின்னும் பொருட்கள் போன்றவற்றால், நகாசு வேலைப்பாடுகளுடன் சுமார் ஏழு அடி விட்டம், ஏழு அடி உயரத்துடனும் ஐந்து அல்லது ஆறு குடைகள் தயாரிப்பார்கள். சென்ன கேசவ பெருமாள் கோயிலில் இந்தப் பணி நடைபெறும்.

இவற்றை திருமலை ‌திரு‌ப்ப‌தி‌ வெங்கடேச பெருமாளுக்கு சமர்ப்‌பி‌க்க, சென்னையில் இருந்து சாலைகள் வழியே எடுத்துச் செல்லும் வைபவத்துக்குத்தான் திருப்பதி திருக்குடை ஊர்வலம் என்று பெயர்.

பிரம்மோத்சவத்துக்கு முந்தைய மாதங்களில் ஒரு குறிப்பிட்ட நட்சத்திர நாளின் காலை, சென்னை தேவராஜ் முதலி தெருவில் உள்ள சென்ன கேசவ பெருமாள் கோயிலில் இருந்து குடை ஊர்வலம் தொடங்கும். வழக்கமாக பூக்கடை என்.எஸ்.சி. போஸ் சாலை கோவிந்தப்ப நாயகன் தெரு சந்திப்பு, பைராகி மடம், வால்டாக்ஸ் சாலை வழியாக வந்து சுமார் 4 மணியளவில் குடைகள் கவுனி தாண்டும்.

நிற்க.

திருப்பதி குடை, யானை கவுனியைத் தாண்டுவது ஒரு பரபரப்பு செய்தி.

சென்ன கேசவ பெருமாள் கோயிலில் இருந்து திருப்பதி குடை புறப்பட்டதுமே, 'குடை யானை கவுனி தாண்டிடுச்சா' என ஓட்டேரி, அயனாவரம் முதல் திருப்பதி வரைக்குமே பெரிய செய்தியாகப் பேசுகிறார்கள்.
செய்தித்தாள்களும் மாலை 4.30 மணிக்கு குடைகள் யானை கவுனியைக் கடந்தன என்று குறிப்பிட்டு எழுதுகின்றன. சிறுவயதில் இருந்தே குடை ஓட்டேரியை தாண்டிவிட்டதோ, அயனாவரத்தைத் தாண்டுவதோ முக்கியம் இல்லையா என்று கேட்பேன். யாரும் எனக்கு பதில் சொன்னது இல்லை. எல்லோருமே யானை கவுனி தாண்டிவிட்டதா என்று சம்பிரதாயமாகக் கேட்டுவிட்டு திருப்தியாக இருப்பார்கள். அந்தக் கேள்விக்கு பதில் கூட தேவையிருக்காது.

இதற்கான பதிலை இன்னும் மூன்று பாராவுக்குப் பிறகு சொல்கிறேன்.

திருப்பதி குடை யானை கவுனியில் இருந்து எந்த வழியாகச் செல்லும் என்பதைப் பார்ப்போம். நடராஜா திரையரங்கம், செயிண்ட் தாமஸ் சாலை, சூளை நெடுஞ்சாலை, அவதான பாப்பையா சாலை, பெரம்பூர் பேரக்ஸ் சாலை, ஸ்டேஹான்ஸ் சாலை, கொன்னூர் நெடுஞ்சாலை, தாக்கர் சத்திரம் வழியாக காசி விஸ்வநாதர் கோயிலை சென்றடையும்.

இரவு கோ‌யி‌லி‌ல் த‌ங்‌கி‌வி‌ட்டு அ‌திகாலை‌யி‌ல் புற‌ப்படு‌ம் குடை, மறுநாள் ஐ.சி.எஃப்., வில்லிவாக்கம், பாடி, அம்பத்தூர் எஸ்டேட், ஆவடி, பட்டாபிராம், மணவாளன் நகர் வழியாக திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோயிலை அடையும். அதற்கு அடுத்த நாள் திருப்பதியை சென்றடைகிறது. ‌‌திரு‌ப்ப‌தி ‌திரு‌க்குடை ஊ‌ர்வல‌த்‌தி‌‌ன்போது மே‌ற்கூ‌றிய சாலைக‌ளி‌ல் போ‌க்குவர‌த்து மா‌ற்ற‌ம் செ‌ய்ய‌ப்படு‌ம். ‌சில சாலைக‌ளி‌ல் போ‌க்குவர‌த்து ‌நிறு‌த்த‌ப்படு‌ம். குடைகள் கடக்கும் இடமெல்லாம் சிறப்பான வழிபாடு நடைபெறும். இந்தக் குடை பயணம் செய்யும் இடங்களில் எல்லாம் நைவேத்தியம், அன்னதானம், நீர் மோர், சர்க்கரைப் பொங்கல், சுண்டல் என அமர்க்களப்படும்.

வழியெங்கும் சாலை ஓரங்களில் திருப்பதி மலையின் தோற்றத்தை சேறு, கற்கள் கொண்டு உருவாக்கி வைத்திருப்பார்கள். அதற்கான டெகரேஷன்களில் தோட்டாதரணி தோற்பார். விதம்விதமாக மலைகளை மினியேச்சர் செய்து வைத்திருப்பார்கள். காடு, அதனுள்ளே காட்டு விலங்குகள், அதை வேட்டையாடும் மனிதர்கள், திருப்பதி கோயில் எல்லாமே 'சுருக்கமாக' இருக்கும். எத்தனையோ விதமாக மலை செய்த அனுபவம் எனக்கும் இருந்தது.
சரி, இப்போது பதில்...

ஒரு காலத்தில் ஏழுமலையான் கவுனியில் யாரிடமோ கல்யாணத்துக்காகக் கடன் வாங்கியிருந்தாராம். அதனால் அந்தப் பகுதி வரும்போது நிற்காமல் குடையை தூக்கிக்கொண்டு ஓடி வந்துவிடுவார்களாம். இது 100 வருடங்களாக நடந்து வரும் சம்பிரதாயம் என்கிறார்கள். திருப்பதி ஏழுமலையான் தன் கல்யாணத்துக்காக குபேரனிடம் கடன் வாங்கி அதை இன்னமும் அடைத்து வருகிறார் என்பது எல்லோருக்கும் தெரிந்த கதை. அவர் யானை கவுனியில் கடன்பட்டது இந்தப் பகுதி வாழ் மக்களுக்கு மட்டுமே தெரிந்த கதை. யானை கவுனி சௌகார் பேட்டையில் இப்போது வட்டிக்குப் பணம் கொடுக்கும் ஏராளமான மார்வாடி குடும்பத்தினர் வசிப்பது கோ இன்சிடென்ஸ் என்றுதான் சொல்ல வேண்டும்.

நாம் இதற்கு முந்தைய கட்டுரை ஒன்றில் வால் டாக்ஸ் ரோடு பற்றி பார்த்தோம். யானை கவுனியில் இருந்த வாயில் வழியாகத்தான் வரி செலுத்திவிட்டு வாகனங்கள் பிரயாணிக்கும் என்று படித்தோம். திருப்பதி குடைகள் செல்லும்போது அந்த வாயில் அருகே ஏதோ பிரச்னை இருந்திருக்கிறது. அதைக் கடப்பது ஏதோ ஒரு வகையில் சிரமமானதாக இருந்திருக்கும். அதனால்தான் இன்னமும் மக்கள் குடை யானை கவுனியைக் கடந்துவிட்டதா என்று விசாரித்துக்கொண்டிருக்கிறார்கள். அல்லது வரி கொடுக்காமல் ஒவ்வொரு தடவையும் அந்த இடத்தைக் கடக்கும்போது அதற்கு வரி வசூலிப்பதா, வேண்டாமா என்பதில் சிக்கல் இருந்திருக்கலாம். குடைகளுடன் மக்கள் கூட்டமாக, வேகமாக அதைக் கடப்பதை வழக்கமாக்கியிருக்கலாம்... இது என்னுடைய யூகம் மட்டுமே.

யாத்திரை கொண்டு செல்லும் குடைகளில் இரண்டு மட்டுமே திருப்பதியில் சமர்ப்பிக்கப்படும். மற்றவை செல்லும் வழியில் உள்ள பைராகி மடத்திலும், திருவள்ளூர் கோயிலுக்கும் அளிக்கப்படும்.
இந்தத் திருப்பதி குடை யாத்திரை ஏன் தொடங்கப்பட்டது என்பது கூட ஓர் சுவாரஸ்யமான ஆராய்ச்சியாக இருக்கலாம். ஏனென்றால் சென்னையை அடுத்த திருத்தணி கோயிலுக்கு அப்படி ஒரு கதை உண்டு.


Madras Nalla Madras -17 | திருத்தணி படி உற்சவமும்... துரை முருகனும்! (மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்-17) | VIKATAN

திருத்தணி படி உற்சவமும்... துரை முருகனும்! (மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்-17)

'இந்தத் திருப்பதி குடை யாத்திரை ஏன் தொடங்கப்பட்டது என்பது கூட ஓர் சுவாரஸ்யமான ஆராய்ச்சியாக இருக்கலாம். ஏனென்றால் சென்னையை அடுத்த திருத்தணி கோயிலுக்கு அப்படி ஒரு கதை உண்டு' என்று கடந்த வாரத்தின் கடைசி பாரா முடிந்திருந்தது.

திருத்தணி கோயில் படிக்கட்டுகளுக்கும், சென்னைக்கும் ஒரு சம்பந்தம் உண்டு. அது ஆங்கில ஏகாதிபத்தியத்தோடு சற்றே தொடர்புடையது.

அதைத் தெரிந்துகொள்வதற்கு முன் துரை என்று தமிழில் ஒரு பெயர் உண்டு. அந்தப் பெயர் சங்க இலக்கியத்திலோ, பக்தி இலக்கியத்திலோ... வேறு தமிழ் கல்வெட்டுகளிலோ காணப்படாதது. அது வெள்ளையர்கள் இந்தியாவுக்கு வந்த பிறகு தோன்றிய பெயர் என்பது தெளிவு.

'ஐயா தொரைமாரே... !' என இன்றும் பதவியில் உயர்ந்தவர்களை அழைப்பதை சில முதியோர் பென்ஷன் வழங்கும் மையம் போன்ற இடங்களில் தள்ளாதவர்கள் வாயில் இருந்து கேட்க முடிகிறது.

சொல்லப்போனால் அது ப்ரெஞ்சுக்காரர்களின் பிரயோகம். டூயூரர் என்றால் 'கடைசி' என்று பொருள். லத்தின் மொழியிலும் கிட்டத்தட்ட இதே உச்சரிப்புடன் இதே அர்த்தம் வழங்கப்படுகிறது. பிரெஞ்சுக்காரர்கள், ஜெர்மானியர்கள் டூயூரர் என்பதைப் பெயராகவும் வைத்திருந்தார்கள்.
ஆல்பெர்ட் டூயூரர் என்று பெரிய ஓவியர் ஒருவர் ஜெர்மனியில் இருந்தார். குடும்பத்தில் கடைசி பையனை அப்படி அழைப்பார்களோ... செல்லப்  பெயரோ தெரியவில்லை. இந்த மானுடவியல் ஆய்வுகளை சற்றே தள்ளி வைத்துவிட்டு, டூயூரர் என்பது டுயூரை ஆகி, தமிழில் துரை என்று ஆனதை ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.
அப்படி அழைப்பது தமிழர்களுக்குப் பிடித்தது, அப்படி அழைக்கப்படுவது ஐரோப்பியர்களுக்கும் பிடித்தது.

தமிழில் மட்டும் அண்ணாதுரை, துரைசாமி, வெள்ளைத்துரை, சாமிதுரை, துரை தயாநிதி, துரை மாணிக்கம் என இவ்வளவு பெயர்கள் வைத்திருக்க மாட்டோம். இப்படி துரை என்று முதலில் தமிழோடு இணைக்கப்பட்ட பெயர் துரைமுருகன் என்ற பெயர்தான் என்கிறது ஒரு சரித்திரக் குறிப்பு.

முதன் முதலில் திருத்தணி முருகனை துரையோடு இணைத்த சம்பவம்தான் திருத்தணி படிஉற்சவம் விழா. அது ஆங்கிலப் புத்தாண்டுக்கு முந்தைய இரவு திருத்தணிப் படிக்கட்டுகளில் நடைபெறும். ஆங்கிலப் புத்தாண்டு அன்று, முருகன் கோயில் படி உற்சவம் நடப்பது ஏன் என்ற கேள்வி எழலாம்.

சோளிங்கரை அடுத்த வள்ளிமலை முருகன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்ப் புத்தாண்டுக்கு முந்தைய இரவு, படி உற்சவம் நடக்கும். ஒவ்வொரு படிக்கட்டுக்கும் மஞ்சள் குங்குமம் வைத்து பூஜை செய்து படியில் ஏறிச் செல்வார்கள்.

வள்ளிமலை சுவாமிகள் என்ற ஓதுவார் இதை செவ்வனே நடத்தி வந்தார். அவர் திருத்தணி முருகன் கோயிலுக்கு ஒருமுறை வந்திருந்தபோது கோயிலில் பக்தர் கூட்டம் குறைவாக இருப்பதைப் பார்த்தார். என்ன காரணம் என விசாரித்தபோது, 'இன்று ஆங்கிலப் புத்தாண்டு தினம் மக்கள் எல்லாம் துரைமார்களுக்கு சலாம் வைத்து அவர்களின் காலில் விழுந்து ஆசி பெறுகிற நாள். அதனால் புத்தாண்டு அன்று தமிழர்கள் யாரும் வருவது இல்லை' என்று கூறியிருக்கிறார்கள்.
வள்ளிமலை சுவாமிகள் யோசித்தார். 'துரைகளுக்கெல்லாம் பெரிய துரையான துரை முருகன் இருக்கும் இடத்துக்கு வாருங்கள்... இனி ஒவ்வொரு ஆங்கிலப் புத்தாண்டு அன்றும் திருத்தணியில் படி உற்சவம் நடக்கட்டும்' என்று அழைப்பு விடுத்தார்.

1917-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி முதல் திருத்தணி முருகன் துரைமுருகன் ஆனார். அன்று முதல் படி உற்சவம் ஆரம்பமானது. வெள்ளையர்கள் வீட்டுமுன் சலாம் போட்டு நிற்பது நின்றது... என்கிறது அந்தக் கதை.

திருத்தணி முருகனுக்கு 'ஹாப்பி நியூ இயர்' சொல்ல வைத்த வள்ளிமலை சுவாமிகளின் திட்டம் சூப்பர்தான் இல்லையா?













Post a comment
Your Name or E-mail ID (mandatory)




 RSS of this page




No comments:

Post a Comment