Wednesday 4 July 2018

கொள்ளை

பட்டினபுரி நாட்டை, வெங்கி என்ற மன்னன் ஆண்டு வந்தான். வரலாற்றில், தன் பெயர் நிலைக்க வேண்டுமென்று விரும்பினான். அதற்கு என்ன செய்வதென்று யோசித்தான்.
ஒரு மன்னரின் புகழ் நிலைக்க வேண்டுமானால், பலராலும் புகழப்பட வேண்டும்; அதுவும், புலவர்கள் பாமாலை சூட்டினால், பன்னெடுங்காலம் வரலாற்றில், பெயர் நிலைத்து நிற்கும். அதனால், புலவர்களை அழைத்து, புகழ்ந்து பாட சொல்லலாம் என நினைத்தான்.
ஆனால், புலவர்கள் பரிசு கேட்பரே... புகழ்ந்து பாடவும் வேண்டும்; கைப் பொருள் கரையவும் கூடாது; அதற்கு என்ன வழி என்று யோசித்தான் மன்னன்.
அவனுக்கு ஒருவழி தோன்றியது.
முதலில், புலவர்களை புகழ்ந்து பாடச் சொல்லி கேட்பது; அதற்காக, ஏராளாமான பொன்னையும், பொருளையும், கொடையாக அள்ளிக் கொடுப்பது; புலவர்கள், ஊருக்குப் பயணப்படும் போது, வழியில் வீரர்களை அனுப்பி, எல்லாப் பொருட்களையும் பறிப்பது... இதுதான் மன்னனின் திட்டம். இது ஒருவகை வழிப்பறி போன்ற குற்றம் தான்.
'மன்னனை புகழ்ந்து பாடும் புலவருக்கு, ஏராளமாக பரிசளிக்கிறார்' என்ற தகவல் அறிவிக்கப்பட்டது. பல நாட்டு புலவர்கள், அணி அணியாக மன்னனை காண வந்தனர்; ஏராளமான பாடல்களை பாடினர். மன்னனும், பரிசுகளை கொடையாக அள்ளி அள்ளிக் கொடுத்தான். அந்த பரிசுகளோடு, காட்டு வழியில் பயணம் செய்த போது, கொள்ளையர்கள் போல் வேடமிட்ட வீரர்கள், அந்த செல்வங்களை பறித்து வந்து, மீண்டும் மன்னனிடமே கொடுத்தனர்.
விதியை நொந்தபடியே, ஊர் போய் சேர்ந்தனர் புலவர்கள்.
இந்த கொள்ளைகள், மன்னனின் வேலை தான் என்பதை, சோதி என்ற புலவர் அறிந்து, 'துப்பு கெட்ட மன்னனுக்கு நல்ல பாடம் புகட்ட வேண்டும்' என்று நினைத்தார்.
ஒரு நாள்-
புலவர் சோதி, மன்னனை தேடி வந்து, புகழ்ந்து பாடல்களை பாடினார்.
வெங்கி மன்னன், பொன்னும், பொருளும் ஏராளமாக பரிசளித்தான். அவற்றை மூட்டையாக கட்டிக் கொண்ட புலவர், ''மன்னரே... நான் பயணம் செய்ய ஒரு குதிரை வேண்டும்...'' என்றார்.
யோசித்தான் மன்னன்.
'புலவர் குதிரையில் சென்றாலும், வீரர்கள் விரட்டிச் சென்று, செல்வத்தை பறித்து வந்து விடுவர்' என்ற நம்பிக்கையில், குதிரையை பரிசாக கொடுத்தான். தனக்கு கிடைத்த பொன் மூட்டையுடன், குதிரையில் ஏறிய புலவர், வழக்கம் போல் இல்லாது, குதிரையின் வாலை பார்த்தவாறு அமர்ந்தார்.
''புலவரே இது என்ன வித்தை...'' என்றான் மன்னன்.
''அரசே... நான் எடுத்து செல்லும் இந்த பொன் மூட்டையைப் பறிக்க, உன் வீரர்களை கொள்ளையர் போல அனுப்புவாய்! அவர்கள் விரட்டி வரும்போது, கவனிக்க வசதியாக இப்படி அமருகிறேன். அடி வாங்கும் முன், நானே பொன் மூட்டையைக் கொடுத்து விடலாம் அல்லவா... அதனால் தான்...'' என்றார் புலவர்.
மன்னன் தன் செயலுக்காக வெட்கினான். புலவரை மரியாதையுடன் வழியனுப்பி வைத்தான்; அதன்பின், புலவர்களிடம் நேர்மையாக நடந்து கொண்டான். அவர்களுக்கு கொடுத்த பரிசுகளை, கொள்ளையடிப்பதை நிறுத்தினான்.

No comments:

Post a Comment