Sunday, 29 July 2018

மகாபாரதம்

மகா பாரதம் - காப்ஸ்யூல் வடிவில் :-
================================
குரு வம்சம் ஆண்ட ஹஸ்தினாபுரத்தின் மன்னன் சாந்தனு மகனும் இளவரசனுமான பீஷ்மர் தன் தந்தைக்காக மணவாழ்க்கையையும் அரசுரிமையையும் துறந்தார். அவர் தந்தை தான் விரும்பிய ஒரு மீனவப் பெண்ணை மணந்தார்.
மீனவப் பெண் சத்யவதியின் இரு மகன்களும் குழந்தைகள் இல்லாமலே இறந்து போனார்கள். அவர்களின் இரு விதவை மனைவிகளும் ( அம்பிகை & அம்பாலிகை ) வியாச முனிவர் மூலமாக கருவுற்றார்கள். இரு குழந்தைகள் பிறந்தன.
ஒன்றுக்கு பார்வையில்லை - திருதராஷ்டிரன். மற்றொன்றுக்கு வெளிறிப் போன தோல் - பாண்டு.
பாண்டு மன்னரானார்… இரு மனைவிகள்…குந்தி & மாத்ரி . குழந்தைகள் இல்லை. விதிவசத்தால் ஒரு முனிவரிடம் எந்தப் பெண்ணைத் தொட்டாலும் மரணம் நேரும் என்கிற சாபம் பெற்றிருந்தார். அதனால் துறவறம் பூண்டு கானகம் சென்றார்.
பார்வையற்ற திருதராஷ்டிரர் அரசாட்சிக்கு வந்தார். மனைவி காந்தாரி கணவனுக்குப் பார்வையில்லை என்பதற்காக தானும் கண்களைக் கட்டிக் கொண்டாள்.
பாண்டுவின் முதல் மனைவி குந்தி வரமாய் முனிவர் துர்வாசரிடம் பெற்ற ஒரு மந்திரத்தைப் பயன்படுத்தி, 3 கடவுள்களிடம் 3 மகன்களைப் பெற்றாள். தருமன் ,பீமன் ,அர்ச்சுனன் & அதே மந்திரத்தால் 2வது மனைவி மாதுரி 2 மகன்களைப் பெற்றாள். நகுலன் சகாதேவன்.
குழந்தை பிறக்கும் வரை பொறுமையில்லாத காந்தாரி தன் வயிற்றில் அடித்துக் கொள்ள, ஒரு சதைப் பிண்டம் வெளியே வந்து விழுந்தது. அதை 100 குழந்தைகளாக மாற்றினார் வியாசர்.
திருதராஷ்டிரரின் பிள்ளைகளான 100 கௌரவர்கள் அரண்மனையில் வளர்ந்தனர். பாண்டுவின் 5 பிள்ளைகளான பாண்டவர்கள் வனத்தில் வளர்ந்தனர். தான் பெற்ற சாபம் மறந்து வசந்தகாலப் பொழுதில் காமம் முற்றிய பாண்டு மாதுரியைத் தொட இறந்து போனான். மாதுரியும் தன்னை மாய்த்துக் கொண்டாள்.
ஆதரவற்ற பாண்டவர்களும் குந்தியும் அரண்மனைக்குத் திரும்பினார்கள்…
கௌரவர்களின் கோபத்தை எதிர்கொண்டபடி வளர்ந்தார்கள். பீஷ்மர் அவர்களுக்கு துரோணரை ஆசிரியராக நியமித்தார்.
போர்க்கலை கற்றுக் கொடுத்ததற்கு குருதட்சணையாக, தன் பழைய சபதத்தின் பொருட்டு, பாஞ்சால தேசத்தில் பாதியை தனக்கு வென்று தருமாறு கேட்டார் துரோணர். நிறைவேற்றினார்கள் பாண்டவர்கள்.
பாண்டவர்களின் வெற்றிக்கு அரக்கு மாளிகையைப் பரிசளித்தார் பெரியப்பா. கௌரவர்கள் அதில் தீ வைக்க, மயிரிழையில் உயிர் தப்பி காட்டுக்குள் ஒளிந்தார்கள் பாண்டவர்கள்.
காட்டில் பாண்டவர்களில் பலசாலியான பீமன், அரக்கர்கள் பகாசுரனையும் இடும்பனையும் கொன்றான். இடும்பனின் தங்கை இடும்பியை மணந்தான். அவர்களுக்கு கடோத்கஜன் பிறந்தான்.
தன் ராஜ்ஜியத்தில் பாதியை இழந்த பாஞ்சால மன்னன் துருபதன், தன் மகள் திரௌபதி, மகன்கள் சிகண்டி திருஷ்டத்யும்னன் மூலமாக பழி வாங்க முடிவெடுத்தான்.
அரச வம்சத்தைச் சேர்ந்தவன் இல்லை என்பதாலும், தேரோட்டியின் வளர்ப்பு மகன் என்பதாலும் திறமைசாலியான கர்ணன் பாஞ்சாலத்தில் நடைபெற்ற வில் வித்தைப்போட்டியில் கலந்து கொள்ளும் தகுதியை இழந்தான்.துரியோதனன் அவனை அங்கதேச அரசனாக்கி கௌரவித்து அவனை தனக்கு செஞ்சோற்று கடனாளி ஆக்கினான்.
பாஞ்சாலத்தில் திரௌபதி சுயம்வரம் ...
அந்தணராக மாறுவேடம் பூண்டிருந்த பாண்டவர்களில் ஒருவனான அர்ஜுனன் போட்டியில் வென்று திரௌபதியை பரிசாகப் பெற்றான். குந்தியின் ஆணைப்படி அவள் ஐவருக்கும் மனைவியானாள்.
பாஞ்சாலத்தில் தங்கள் மைத்துனன் கிருஷ்ணனை சந்தித்த பாண்டவர்கள் அவனுடன் நட்புறவு கொண்டார்கள். மாறுவேடத்திலிருந்து தங்களை வெளிப்படுத்தி அவன் ஆதரவையும் பெற்றார்கள். கிருஷ்ணன், மாமனார் துருபதன் துணையுடன் தைரியமாக ஹஸ்தினாபுரத்துக்குத் திரும்பினார்கள் பாண்டவர்கள். தங்களுக்குரிய அரசுரிமையை வேண்டினார்கள்.
ராஜ்ஜியம் பிரிக்கப்பட்டது.
பாண்டவர்கள் காண்டவ வனத்தைப் பெற்றார்கள். அதை எரித்து, அழித்து இந்திரபிரஸ்தம் என்கிற அழகிய நகரத்தை உருவாக்கினார்கள்.
திரௌபதியின் தனிமைக்கு பங்கம் விளைவித்த காரணத்தால் அர்ஜுனன் குறிப்பிட்ட காலத்துக்கு நாடு கடத்தப்பட்டான். அந்தப் பயணத்தில் உலூபி, சித்ராங்கதா, கிருஷ்ணனின் தங்கை சுபத்ரா ஆகியோரை சந்தித்து மணம் செய்து கொண்டான்.
கிருஷ்ணனின் உதவியோடு ஜராசந்தனைக் கொன்றான் பீமன். பாண்டவர்களின் புகழால் ஈர்க்கப்பட்டு யுதிஷ்டிரரின் முடிசூட்டு விழாவில் எல்லா அரசர்களும் கலந்து கொண்டனர்.
பொறாமையுற்ற கௌரவர்களில் மூத்த துரியோதனன் மாமன் சகுனியின் தூண்டுதலால் பாண்டவர்களை சூதுக்கு அழைத்தான். அதில் ராஜ்ஜியத்தையும் தன்னையும் திரௌபதியையும் பணயம் வைத்து இழந்தான் யுதிஷ்டிரன்.
பாண்டவர்களை அவமதிக்க திரௌபதியின் துகிலை உரிந்தான் கௌரவர்களில் ஒருவனான துச்சாதனன். கிருஷ்ணனின் அற்புதத்தால் திரௌபதியின் மானம் காப்பாற்றப்பட்டது.
துச்சாதனனின் ரத்தத்தால் குளித்த பிறகே கூந்தலை முடிவேன் என சபதமேற்றாள் திரௌபதி. பதட்டமடைந்த கௌரவர்கள், பாண்டவர்கள் அரசைத் திரும்பப் பெற வேண்டுமெனில் மீண்டும் விளையாடி ஜெயிக்கச் சொன்னார்கள்.
பாண்டவர்கள் மீண்டும் தோற்றனர். 13 ஆண்டுகள் வனவாசம் அனுபவிக்க உத்தரவிடப்பட்டது.
கடைசி வருடம் தாங்கள் யார் என்று பிறர் அறியாமல் வாழ வேண்டும் என்றும் ஆணையிடப்பட்டது.
வனவாசம் முடிந்தது. பாண்டவர்களின் பங்கைக் கொடுக்க கௌரவர்கள் மறுத்தார்கள். கிருஷ்ணனின் தூதும் பலன் தரவில்லை. 7 அக்ரோணி படைகளுடன் பாண்டவர்கள் போருக்குத் தயாரானார்கள். கௌரவர்களிடம் இருந்தது 11 அக்ரோணி படைகள்.
குருஷேத்ரத்தில் படைகள் மோதத் தயாராயின. போர்க்களத்தில் அர்ஜுனன் மனோபலம் அற்று நம்பிக்கையிழக்க, கிருஷ்ணர் அவனுக்கு கீதோபதேசம் செய்தார். 18 நாள் போர் ஆரம்பமானது.
தான் இறக்கும் வினாடியை நிர்ணயிக்கும் சக்தி படைத்தவர் பீஷ்மர்… அவர் வெற்றிக்குத் தடையாக நின்றார். திருநங்கை சிகண்டி எதிரே வர தன் வில்லைத் தாழ்த்தினார். அந்த கணத்தில் அர்ஜுனனின் அம்புகளுக்கு வீழ்ந்தார்.
அடுத்த படைத்தளபதியானார் துரோணர். இரக்கமின்றி எல்லா போர் விதிகளும் மீறப்பட்டன. இரவில் போர்… அபிமன்யுவும் கடோத்கஜனும் கொல்லப்பட்டனர்.
அஸ்வத்தாமன் என்கிற யானை இறந்த செய்தி தவறாக பரப்பப்பட, தன் மகன்தான் என்று நினைத்து வில்லை கீழே போட்டார் துரோணர். திருஷ்ட்த்யும்ன்ன் அவர் தலையைக் கொய்தான்.
குந்திக்குப் பிறந்து, கைவிடப்பட்ட முதல் குழந்தை தான் என்பதை அறிந்திருந்தும் கர்ணன் கௌரவர் படைக்குத் தளபதி ஆனான். இதை அறியாத பாண்டவர்கள் கர்ணனின் தாழ்ந்த நிலையை கேலி செய்தார்கள்.
மண்ணில் புதையுண்ட தேர்ச் சக்கரத்தை தூக்க முயற்சித்த, நிராயுதபாணி கர்ணனை கிருஷ்ணனின் ஆலோசனையின் பேரில் அர்ஜுனன் யுத்த தர்ம விரோதமாக கொன்றான். பின்னால் அதற்காக குற்றவுணர்ச்சி அடைந்தான்.
எல்லா கௌரவர்களையும் பீமன் கொன்றான். துச்சாதனனின் ரத்தத்தைக் குடித்து, திரௌபதியின் கூந்தலையும் கழுவி முடியச் செய்தான். துரியோதனனின் துடையைப் பிளந்து கொன்றான்.
பாண்டவர்கள் வெற்றியைக் கொண்டாடினார்கள். இரவில், ஓய்வாக எல்லோருமே உறங்கிக்கொண்டிருந்த பாசறை கூடாரத்துக்கு அஸ்வத்தாமன் தீ வைத்தான். அதில் பாண்டவ வாரிசுகளான திரௌபதியின் மக்கள் இறந்து போனார்கள்.
யுதிஷ்டிரர் மன்னராக முடிசூட்டிக் கொண்டார். போரில் உயிர் பிழைத்த ஒரே வாரிசு அபிமன்யுவின் மகன் பரிக்‌ஷித்… தாய் உத்தரையின் கருவிலிருந்தது.
குந்தி, திருதராஷ்டிர, காந்தாரி அனைவரும் இறுதி மூச்சை விட வனத்துக்குச் சென்றார்கள்.
வெற்றிகரமான நீண்ட கால ஆட்சிக்குப் பிறகு, கிருஷ்ணரின் மரணத்தையும் யாதவ குல நாசத்தையும் தூது மூலம் கேட்டு அறிந்த யுதிஷ்டிரர் மனம் உடைந்து ராஜ்ஜியத்தை துறந்தார்.
பாண்டவர்களும் திரௌபதியும் தேச சஞ்சாரம் செய்து இறுதியாக இமயமலை செல்கிறார்கள். மலையில் ஒவ்வொருவராக இறந்து போகிறார்கள். யுதிஷ்டிரருக்கு மட்டும் சரீரத்தோடு செல்ல சொர்க்க வாசல் திறக்கிறது.
சொர்க்கத்தில் முதலில் கௌரவர்களை காண்கிறார் யுதிஷ்டிரர். முதலில் கடுங் கோபமடைந்தார்… பிறகு, நீண்ட நெடுங்காலமாக பழி வாங்கும் உணர்ச்சியோடு தான் இருந்ததால் சொர்க்கம் ஒருபோதும் அவருக்கு கிடைக்காது என்பதை உணர்ந்து கொண்டார்.
மானிட குளம் வாழ ஒரு கையேடு போல பயன்படும் மகாபாரதம் படிப்போம். முக்தி பெற்று பேரின்பம் பெறுவோம்.
குரு வம்சம் தலைமுறை அட்டவணை -
காண்க படம்

No comments:

Post a Comment