Saturday, 14 July 2018

உத்தமவில்லன்

கொஞ்சம் தவறியிருந்தால் விழுந்திருப்பேன். மூடப்படாத டிரைனேஜ் அது. யாரோ ஒரு பெரியவர், "தம்பி தம்பி, பாத்து" என்று குரல் கொடுத்திருக்கவில்லையென்றால் உள்ளே விழுந்திருப்பேன். போனில் பேசியபடியே நடந்ததால் வந்த வினை. மூடியைக் காணவில்லை. யாரும் அங்கே நடக்காமலிருக்க மாநகராட்சி ஊழியர்கள் இரண்டு பெரிய கற்களை வைத்து நடுவே ஒரு மரக்கிளையை செருகியிருந்தார்கள். யாரோ விஷமிகள் அவற்றை அகற்றியிருந்தார்கள். வேறு யாராவது விழுவதற்குள் ஒரு பாதுகாப்பு வளையம் ஏற்படுத்த வேண்டும். சுற்றிலும் தேடிப்பார்த்தேன். கல்லோ மரக்கிளையோ எதுவுமின்றி சாலையே சுத்தமாக இருந்தது. பக்கத்தில் எங்கிருந்தாவது எடுத்து வரவேண்டும். இப்போது என் போன் அடிக்கத் தொடங்கியது. நாராயணன்.
அந்தப் பெயரைப் பார்த்ததும் சகலமும் மறந்து ஒரு விரக்தியும் கோபமும் கலந்த நிலைக்குச் சென்றுவிட்டேன். "ஹலோ" என்றேன். "எங்கே இருக்கே, அருண்?" என்றார் நாராயணன். "சார், நான் இப்போ அம்மன் கோவில் தெரு வந்திருக்கேன்" என்றேன். "நம்ம கடை கிட்ட தானே, அங்கேயே இரு. வர்றேன்" என்று தொடர்பை துண்டித்தார். எனக்கு முகம் இருண்டது. அவர் வருவதற்கு ஒரு ஐந்து நிமிடம் ஆகும். அதற்குள் அவரைப்பற்றி உங்களிடம் சொல்லிவிடுகிறேன்.
அலுவலகத்தில் அவர் எனக்கு பாஸ். ஒரு படத்தில் வடிவேலு கேட்பாரே, "அவர் உனக்கு பாஸா இல்ல லூஸா" என்று. யாராவது அவரிடம் ஒரு முறை பேசிவிட்டால் போதும், என்னிடம் இதே வசனத்தை சொல்லிவிட்டுப் போவார்கள். தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று பிடிவாதம் பிடிப்பவர். மனிதத்தன்மை என்பதை கொஞ்சம் கூட அறியாதவர். இப்போது கூட என்னால் காத்திருக்க முடியுமா என்று கூட கேட்கவில்லை. காத்திரு, வருகிறேன் - அதீத அதிகாரம்.
அலுவலகத்தின் வேறு ஒரு பிரிவில் இருந்தேன், அங்கே எனக்கு ஐந்து உயர் அதிகாரிகள். ஐந்து பேரும் ஐந்து விதம். சமாளிக்க முடியவில்லை என்பதால் மாற்றல் கேட்டிருந்தேன். "நாராயணன் சாரோட பி.ஏ. அடுத்த மாசம் ரிட்டையர் ஆகறார், அந்த இடத்துக்குப் போறியா?" என்று எம்.டி. கேட்டபோது சந்தோஷமாக ஒத்துக்கொண்டேன். ஐந்து விதம் விதமான ஆட்களை சமாளிப்பதைவிட ஒரே ஒரு யுனிக் ஆளை சமாளித்துவிடலாம். எப்படிப் பட்டவராயினும் - என்று தான் நினைத்திருந்தேன். ஆனால் நடப்பதோ வேறு மாதிரி.
ஒரு காபி குடிக்கலாம் என்று கிளம்பும்போது தான், "அருண்" என்று குரல் கொடுப்பார். "காபி குடிக்க கிளம்பிட்டியா? பரவாயில்லை, பொறுமையா வந்து பாத்துக்கலாம்" என்பார். "இல்லை, பரவாயில்லை சார், சொல்லுங்க" என்றால் "போயிட்டு பொறுமையா வாப்பா" என்பார். சரி சார் என்று நகர்ந்தால் தொலைபேசியில் "அருண் காபி குடிக்கப் போறானாம், ஒரு அரை மணி நேரம் கழிச்சு பாத்துக்கலாம்" என்று என் காதுகளில் கேட்பது போல் கூறுவார். எனக்கு அப்போது சுர்ரென்று கோபம் தலைக்கேறும். எதுவும் சொல்லாமல் வெளியேறிவிடுவேன்.
ஒரு கடிதம் தட்டச்சு செய்யச்சொல்வார். டிக்டேட் செய்யும்போது சொன்னதை அப்படியே தட்டச்சு செய்து கொடுத்தால் இன்னும் பல வரிகள் சேர்ப்பார், பலவற்றைத் திருத்துவார். இது எல்லா இடத்திலும் இருப்பதுதான் என்கிறீர்களா? குறைந்தபட்சம் பத்து முறையாவது திருத்திக் கொடுத்துவிடுவார். பதினொன்றாவது முறையாக கொண்டுபோய்க் கொடுத்தால் "பான்ட் சைஸை சின்னது பண்ணுப்பா, ரெண்டு பேஜுக்கு லெட்டர் அடிச்சா மினிஸ்டர் எப்படி படிப்பார்?" என்று கேள்வி கேட்பார். இதை எதிர்பார்த்தே சில நேரங்களில் அளவை சுருக்கி ஒற்றைப் பக்கத்தில் தட்டச்சு செய்து கொடுத்தால் "ஏப்பா, உனக்கு அறிவில்ல, இவ்வளவு சின்னதா இருந்தா மினிஸ்டருக்கு எப்படி கண்ணு தெரியும்? நல்லா பெரிசா ரெண்டு பக்கத்துக்கு அடிச்சு எடுத்திட்டு வா" என்பார். "சார், மினிஸ்டருக்கு இங்கிலீஷ் தெரியாது" என்றால், "ஏன், அவரோட பி.ஏ.வுக்குத் தெரியாதா? எல்லாரும் உன்னை மாதிரி மரமண்டையாவா இருப்பாங்க? எதித்துப் பேசறியா, நான்சென்ஸ், சொன்னதை செய்" என்று அடக்கிவிடுவார்.
அவருக்கு என்னை எப்போது அதட்டி, மிரட்டி வேலை வாங்கவேண்டும். ஏதாவது பேசினால் மேலும் மிரட்டி ஜெயிக்கவேண்டும். இவ்வளவு ஏன், இரண்டு நாட்கள் விடுப்பு வேண்டுமானால் கூட அவரது இஷ்டப்படித்தான் எடுக்கவேண்டும். அவரிடம் சேர்ந்த புதிதில் நெருங்கிய நண்பனுடைய திருமணத்துக்கு இரண்டு நாட்கள் விடுப்பு கேட்டதற்கு, "பதினஞ்சாம் தேதியா? அப்போ வேண்டாம், இருபதாம் தேதிக்கு மேல என்னைக்காவது ஒரு நாள் எடுத்துக்கோ" என்றார். யோவ், மனதுக்குள் தமிழில் உள்ள அத்தனை கெட்ட வார்த்தைகளும் ஒரு வினாடி தொண்டை வரை வந்துபோனது. அதிலிருந்து ஏற்கனவே செத்துப்போன தாத்தா பாட்டியை மீண்டும் கொன்றோ அல்லது உயிருடன் இருக்கும் தாத்தா பாட்டியைக் கொன்றோதான் விடுப்பு எடுத்துக் கொண்டிருக்கிறேன். அல்லது திடீரென்று வாந்தி பேதி மயக்கம் என்று பொய் சொல்லிவிடுகிறேன். ஒரு முறை அவருக்கு சந்தேகம் வந்துவிட்டது. "ரெண்டு மாசம் முன்னாடி உங்க பாட்டி செத்துட்டாங்கன்னு சொல்லி லீவ் போட்டியே, அது யாரு?" என்றார். "அது அப்பாவோட அம்மா சார், இப்போ செத்தது அம்மாவோட அம்மா சார்" என்று சொல்லி சமாளித்துவிட்டேன்.
நீங்கள் பாத்ரூமில் அழுதிருக்கிறீர்களா? நான் அழுதிருக்கிறேன். ஒரு முறை இருமுறையல்ல. குறைந்தபட்சம் வாரம் ஒருமுறையாவது அழுதுவிடுவேன். இல்லை இல்லை, அழவைத்துவிடுவார். கலங்கிய கண்களுடன் மீண்டும் நான் வருவதைப் பார்த்ததும், "ஏன்பா, அழுதியா என்ன?" என்பார். இல்லை என்று சொன்னாலும் சரி, ஆமாம் என்று சொன்னாலும் சரி, அவரது வாயோரம் கசியும் ஒரு குரூரப் புன்னகை அவரது மனநிலையை அப்படியே பிரதிபலிக்கும்.
இதெல்லாம் போகட்டும் விடுங்கள். ஒரு முறை எம்.டி.யிடமே என்னைப் பற்றி குறை சொல்லியிருக்கிறார். சில நாட்களுக்கு முன் எம்.டி.யைக் கண்டு பேசியபோது அவரே இதைச் சொன்னார். "அருண், நாராயணன் உன் மேல பெரிய அபிப்ராயம் வச்சிருக்கலை போல, என்ன சார் எனக்கு பி.ஏ. கொடுத்தீங்கன்னு கொஞ்சம் புலம்பினார். ஆனா அவரைப் பத்தி எனக்குத் தெரியும், ஐ தின்க் யு ஆர் டூயிங் வெல், கம்ப்ளையன்ட் வராம பாத்துக்கோ" என்றார். எம்.டி.க்கு என்னைப்பற்றித் தெரியும், இருந்தாலும் அவரே இப்படிச் சொல்கிறாரே எனும்போது கொஞ்சம் சுருக்கென்று குத்தியது. சரிதான், நான் இல்லையென்றால் நிறுவனத்தில் எந்தப் பிரச்சனையும் இல்லை, ஆனால் இந்த நாராயணன், அதான் எனக்கு பாஸாக வந்து வாய்த்திருக்கும் லூசு இல்லையென்றால் எம்.டி,க்கு கை ஒடிந்தது போலாகிவிடும். என் தலையெழுத்து - வேறு நிறுவனத்துக்கு முயற்சி செய்யலாம் என்றால் மார்க்கெட் நிலைமை வேறு சரியில்லை. நான் பார்க்கும் இதே வேலையை என்னைவிட குறைந்த சம்பளத்தில் வேலை செய்ய பலரும் காத்திருக்கிறார்கள். எல்லாவற்றையும் விட குடும்பத்துக்காக வேலையைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டிய சூழல்.
அதோ, அவர் வந்துகொண்டிருக்கிறார். தூரத்தில் வெள்ளை நிற டி ஷர்ட்டும் கருப்பு நிற டிராக்சும் அணிந்து காதில் ஹெட்போன் மாட்டிக்கொண்டு நடந்து வருகிறார். நான் பார்க்கிறேன் என்பதை அவரும் கவனித்துவிட்டார். தினமும் மாலை வேளைகளில் வருவார், நான்கைந்து தெருக்களை ஜிக்ஜாக் வடிவில் நடந்து கடந்து செல்வார். வரும் வழியில் நான் குடியிருக்கும் தெருவில் அவர் ஒரு தம் அடிப்பார். இதோ, கடையை நோக்கி வந்துகொண்டிருந்தார். நானும் கடையை நோக்கிச் சென்றேன். திடீரென்று இருட்டிக்கொண்டு வந்தது. சோவென்று மழையும் கொட்டத் தொடங்கியது. துளித்துளியாகத் தொடங்கி சிறு நீரோட்டமாக மாறி பெருவெள்ளமாகப் பெருகிய தண்ணீர் ஓடி அந்த டிரைனேஜில் விழத்தொடங்கியது.
நாங்கள் கடையின் ஓரமாக ஒதுங்கிக்கொண்டோம். சிகரெட் ஒன்றைப் பற்றவைத்துவிட்டு, "அருண், அடுத்த வாரம் மும்பை போகணும், நாளைக்கு காலைல ஆபிஸ் போனதும் டிக்கட் புக் பண்ணிடு, அப்புறம் அந்த கவர்மென்ட் டிப்பார்ட்மெண்டுக்கு ஒரு லெட்டர் அனுப்பனும்னு சொன்னேனே, அனுப்பவே இல்லையே" என்றார். எந்த இடத்தில் என்ன பேசுகிறார், சே. இங்கு வந்தும் அலுவலக விஷயங்களைப் பேசுகிறார் என்றுதான் ஆரம்பத்தில் சில நாட்கள் மாலை நேரங்களில் இங்கு வருவதைத் தவிர்த்துவந்தேன். அனால் இதை மனதில் வைத்துக்கொண்டு அடுத்தநாள் அலுவலகத்தில் அவர் என்னைப் படுத்திய பாடு இருக்கிறதே, அதற்கு இதுவே மேல் என்று சகித்துக்கொண்டிருக்கிறேன். அரை மணி நேரம் சென்றிருக்கும், நன்றாக இருட்டியிருந்தது. பெரும் மழை சிறு தூறலாக மாறியிருந்தது. சாலையில் ஓடிக்கொண்டிருக்கும் தண்ணீர் மட்டும் வடியவில்லை.
"ஓகே, பாக்கலாம். நாளைக்கு காலைல வந்ததும் மறக்காம செஞ்சிடு" என்று ஆணையிட்டுவிட்டுப் புறப்பட்டார். "சார், மழை நிக்கலையே" என்றேன். "பரவாயில்லை அருண், லேசா நனைஞ்சாலும் என்னோட வாக்கிங் எக்ஸர்சைஸ் நிறுத்தவேண்டாம்னு பாக்கறேன் என்று கூறிவிட்டுக் கிளம்பினார். அந்த டிரைனேஜை நோக்கித்தான் சென்றுகொண்டிருந்தார். நான் அவரிடம் அங்கே மூடப்படாத டிரைனேஜ் இருக்கிறதென்று சொல்லவில்லை.

No comments:

Post a Comment