Thursday, 19 July 2018

முடி

” பிம்மாலையில பனி ஜாஸ்தி விழும். தலையில எதையாவது கட்டிக்கோடா கடங்காரா ” என்று பாட்டி அக்கறை கலந்து திட்டும் காலம் தையும் மாசியும். பாட்டி ” பிம்மாலை ” என்பதை இரவைக் குறிப்பிடும்போதும் சொல்வாள். சிற்றஞ்சிறுகாலையைக் குறித்தும் சொல்வாள். நாம்தான் அவள் வார்த்தையின் காலமயக்கப் பிடியிலிருந்து வெளிவந்து அதைத் தரம் பிரித்துப் புரிந்துகொள்ளவேண்டும். ஆனால் இந்தக் காலத்தில் கட்டாயம் சளி பிடித்துவிடும் எனக்கு. காஷ்மீர் பூமி பனிக்கட்டிகளால் உறைந்திருந்திருப்பது போல என் நெஞ்சு முழுக்கப் பாறை பாறையாய்ச் சளி இறுகிக்கொண்டிருக்கும். தலைக்குள் ஒரு ராக்ஷஸ சிலந்தி ஏதோ கனமான திரவக்கூட்டைப் பின்னி என் ஞாபகங்களையும் நினைவுகளையும் சிறைப்படுத்தி என்னை முடக்கிப்போட்டிருக்கும். அமிர்தாஞ்சன் வாசனைகூட அடையாளம் கண்டுபிடிக்க முடியாதவாறு முடமாகியிருக்கும் மூக்கு. ஆனாலும் கூட்டுப் புழுக் காலம் மாதிரி போர்வைக்குள் கண்களைமூடிப் படுத்துக்கொண்டு மண்டைக்குள்ளும் நெஞ்சுக்குள்ளும் ஒரு ஆரஞ்சு நிற ஜீரோ வாட் பல்ப் மட்டும் எரிந்து கொண்டிருப்பதை உள் பார்வையில் ரசிக்கப் பழகிக்கொண்டிருந்ததால் ஜலதோஷம் காட்டும் உலகம் எனக்கு ஒரு அடர்ந்த ரகசியம் பொதிந்ததாகவே இருக்கும்.
ஜலதோஷத்திற்கு முக்கியக் காரணமாகப் பாட்டி சுட்டிக் காட்டுவது , மூன்று மாதத்திற்கு மேலும் வெட்டிக்கொள்ளாமல் ” காடு மாதிரி ” வளர்ந்திருக்கும் தலைமுடிதான். அப்படியும் இப்படியும் படிப்பதுபோல போக்குக் காட்டிவிட்டு, ஹோம் வொர்க் மட்டும் செய்துவிட்டு மாட்டுக் கொட்டகையை சுத்தம் செய்தபின் ( நீ படிக்கிற படிப்புக்கு ஏதாவது தொழில் தெரிஞ்சுண்டே ஆகணும் என்று அவதானித்த பாட்டியின் ஏற்பாடு ) அவசரம் அவசரமாக நாலு சொம்பு தண்ணீரைத் தலைக்குக் கொட்டிகொண்டு சரியாகத் துவட்டாது தேங்காயெண்ணையால் மொழுகிப் படியப் படிய வாரிக்கொண்டுப் பள்ளிக்கூடத்திற்கு ஓடும் ” ரொட்டீனில் ” ஜலதோஷமும் சளியும் உடன்பிறந்ததாகவே இருந்தது எனக்கு. அம்மா சொல்லும் வேலையைச் செய்துவிடும் சிலசமயங்களில் என்னைக் கட்டிக்கொண்டு ஆதுரமாய்த் தலையைக் கோதிவிடும் அம்மா, ” நீ தாண்டா சமத்து ” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே விரல்கள் தலைமுடிக்குள் சிக்கிக்கொள்ள என் தலை முடிக்கு வந்துவிடும் ஆபத்து. ” இந்த ஞாயித்துக்கிழமை போய்த் ‘ தலையை ‘ வெட்டிண்டு வந்துடுடா ” என்று ஆணையிட்டு விடுவாள். உண்மையில் அப்போதெல்லாம் முடிக்குப் பதிலாக அம்மா சொல்வதுபோல ” லிடரலாகவே” தலையை வெட்டிக்கொள்ளலாம் போல்தான் இருக்கும்.
முடி வெட்டிக்கொள்ளுதல் என்பது நான் ஹைஸ்கூல் வந்தபின் பெரும் பயத்தைக் கொடுக்கக்கூடியதாக இருந்தது. ஏறக்குறைய மொட்டை என்று சொல்லும் அளவிற்கு முடி வெட்டி இருந்தால்தான் பாட்டி வீட்டிற்கு உள்ளேயே விடுவாள். ஆனால் அப்படி முடி வெட்டிக்கொண்டு என்னால் பள்ளிக்கூட வாசலை மிதிக்கவோ நண்பர்களின் முகத்தைப் பார்க்கவோ முடியாது. நண்பர்கள் மட்டுமல்ல, பக்கத்து வீட்டிலிருக்கும் மூன்று வயது குழந்தைகூட ஒரு இன்ச் நீளத்திற்குவிட்டு முடிவெட்டிக் கொண்டுவரும்போது அறுவடையான வயக்காடு மாதிரியோ, திருவருட் செல்வரில் வரும் சிவாஜி போலவோ அல்லது கறையான் புற்றில் தலையைவிட்டது போலவோ நான் என்னைப்போலவே இல்லாமல் உருமாறி நிற்கும் காட்சியைப் பார்க்கப் பிடிக்காது கண்ணாடியையே உடைத்துவிடலாம்போல் இருக்கும்.
சதுக்கம் சதுக்கமாகப் பிரிந்திருக்கும் ரயில்வே க்வார்டர்ஸில், எங்கள் வீடு தாண்டி இருக்கும் நாயர் கடையோடு வளைந்து செல்லும் ரோட்டில் ஒரு பத்து நிமிடம் நடந்தால் கொஞ்சம் பெரிய கடைவீதி இருப்பதற்கான அடையாளங்கள் தெரிய ஆரம்பிக்கும். முதலில், எழுந்திருக்கும்போதே கெட்டவார்த்தையோடு ஒவ்வொரு நாளையும் தொடங்கும் நடராஜன் சைக்கிள் கடை. பிறகு வெற்றிலை பாக்கு பீடி சிகரட் வைத்திருக்கும் செல்லமுத்து கடை, எனத்தொடங்கி விரியும் தொடர், முடிவில் சந்தையின் கீழ்ப் புறத்தை விளிம்பு கட்டி நிற்கும். இந்தத் தொடர்ச்சியின் மத்தியில்தான் “ஸ்டைலோ” இருக்கும். முன்பக்க ஐந்தடி சுவருக்கு மேல் பல வண்ணங்களில் கண்ணாடி பதிந்திருக்க, மெயின் நிலைக்கதவிற்குப்பின் குளித்துவிட்டுவரும் கவர்ச்சி நடிகை கட்டியிருக்கும் இரண்டடி டவல் அளவிற்கு ஒரு ஸ்பிரிங்க் அமைந்த தள்ளு கதவு பொருந்தியிருக்க, அந்த வழவழப்பானத் தள்ளுகதவின் மேல் ” ஸ்டைலோ ” என்று எழுதி இருக்கும். அப்பா, பெரியண்ணா இவர்களெல்லாம் முடி வெட்டிக்கொள்ளும் சலூன் இதுதான். இப்படி ஒரு சலூனில்தான் முடிவெட்டிக்கொள்வது என்றால் மூன்று மாதத்திற்குமேல் தூங்கு மூஞ்சி மரம் மாதிரி தலை கனத்துத் திரிந்திருக்க வேண்டியதில்லை.
எனக்கு நினைவு தெரிந்து முதன்முதலில் முடி வெட்டிக்கொள்ள, பழைய சட்டைகளுக்குள்ளேயே ஒரு மூத்த பழைய சட்டையை அணிந்து ( !) தயார் நிலையில் இருந்தபோது அப்பாதான் என்னைக் கூட்டிக்கொண்டு போகக் கிளம்பினார். என்னைப் பள்ளிக்கூடத்தில் சேர்ப்பதற்குக் கூட வராத அப்பா, ” நானே அழைச்சுண்டு போறேன் ” என்று இதற்குக் கிளம்பியது அவர் சலூனுக்குக் கொஞ்சம் தள்ளியிருக்கும் ” க்ருஷ்ணா காபிக் கபே ” யில் டிஃபன் சாப்பிடத்தான் என்பது அப்போது எனக்குத் தெரியாது. என்னை வேடிக்கை பார்க்கக்கூட விடாமல் ஏதோ பரீட்சைக்கு நேரமாகிவிட்டாற்போலத் தரதரவென்று இழுத்துக்கொண்டு போனது எனக்கு என்னவோ நல்ல சகுனமாகப் படவில்லை. நான் ஏதோ ஓட்டப்பந்தயத்திற்குத் தயாராவதுபோல அவர் பின்னால் மூச்சிரைக்க ஓடிக்கொண்டிருந்தேன். நான் இழக்கப் போகும் தலைமுடிக் கற்றைக்குள்ளிருந்து வியர்வை பெருக நான் அவரைத் தொடர்ந்து கொண்டிருந்தபோது அவர் ஸ்டைலோவைத் தாண்டிப் போய்விட்டார். நான் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க ” அப்பா ” என்று ஸ்டைலோ பக்கத்தில் நின்றுகொண்டு கத்த அப்பாவோ க்ருஷ்ணாவிற்குள் நுழைந்துவிட்டார். காலை எட்டரை மணிக்குள் தீர்ந்துபோய்விடும் ” நெய் ரோஸ்ட்டிற்கு ” ஆர்டர் கொடுத்துவிட்டு, அதுவரை காட்டிக்கொண்டிருந்த அவசரத்தைத் துடைத்தெறிந்த உடல்மொழியோடு பழைய அப்பாவாக வெண்ணையாகத்
திரும்பிவந்தார்.
திரும்பி வந்தவரோ நான் எதிர்பார்த்திருந்த மாதிரி இல்லாது என்னை ஸ்டைலோவிற்குள் கூட்டிக்கொண்டு போகாமல், க்ருஷ்ணா கபேயைத்தாண்டிப் போகும் ஒரு குறுகிய சந்து தாண்டி எட்டுக்கு எட்டில் போட்டிருந்த ஒரு ஷெட்டிற்குள் இழுத்து வந்து , ” சம்மர் கட் அடிச்சுவிடுப்பா ” என்று ஏதோ நாடார் கடையில் ஒரு மளிகை சாமானுக்கு ஆர்டர் கொடுப்பதுபோலச் சொல்லிவிட்டு நெய் ரோஸ்ட் சாப்பிடப் போய்விட்டார். எட்டுக்கு எட்டு கடைஎன்பது “சாமி” என்று எல்லோரும் கூப்பிடும் அழுக்கு சாமியின் கடை. சாமி வயதானவர்களுக்கு, அவரைவிட ஒரு அழுக்கான சைக்கிளில் துரு ஏறியிருக்கும் பெட்டியுடன் வீட்டிற்கே சென்று முடி வெட்டுதல், மொட்டை அடித்தலோடு க்ஷவரமும் செய்துவிடுபவர். துக்க வீடுகளுக்கும் ஆள் வந்து சொன்னால் கை வேலையை அப்படியே விட்டுவிட்டு ” கொஞ்சம் இரு தம்பி; இதோ வந்திடறேன் ” என்று உடனே கிளம்பிவிடுபவர். அப்படிப் போகவேண்டியிராத சமயங்களில் எங்களைப் போன்ற சின்னப்பசங்களுக்குச் சிகை அலங்காரம் ( ! ) செய்வதுவிடுவதில் ஆனந்தம் அடைபவர். அவரது ஆனந்தம் எங்கள் பாட்டியின் திருப்தியைப் பொறுத்தது. ஆனால் பாட்டியின் திருப்தியோ நாங்கள் எவ்வளவு மொட்டையாக வருகிறோம் என்பதைப் பொறுத்தது. அப்பா ஸ்டைலோவை நிராகரித்து இன்று இங்கு என்னைக் கூட்டிக்கொண்டு வந்தது ” காஸ்ட் கட்டிங்க் ” செய்து க்ருஷ்ணா கபே கணக்கைக் கொஞ்சம் சரிசெய்வதற்காக என்பது நாங்கள் வீடு திரும்பிய பின் அம்மா மோவாயைத் தோள்பட்டையில் இடித்துச் சொன்ன வார்த்தைகளிருந்து தெரிந்தது.
சாமியின் கடை ஸ்டைலோவின் வழவழப்புகளெல்லாம் அற்று ஒரு வாசல் மற்றும் அரை ஜன்னல் கொண்டிருக்கும். ஈசான்ய மூலையில் புட்டபர்த்தி சாய் பாபா பம்மென்று அடர்ந்து திரண்ட அதிகப்படியான தலைமுடியுடன் அந்தக் கடைக்குக் கொஞ்சம்கூடச் சம்பந்தமில்லாது படத்தில் ஒருகை உயர்த்தி ஆசிர்வதித்துக்கொண்டிருப்பார். ஒரு பெரிய நாற்காலியின் ஒரு கால் ஃப்ராக்ச்சராகியிருக்க புத்தூர் கட்டு போடப்பட்டிருக்கும். எதிர்த்தாற்போல் இருந்த ரசம் போன கண்ணாடியில் சின்னப் பசங்களின் முகம் முழுதாகத் தெரியாமல் பார்ட் பார்ட்டாகத்தான் தெரியும். அதுவும் நாற்காலியின் ” ஹேண்ட் ரெஸ்ட்டின் ” மேல் கட்டை போட்டு எங்களை உட்கார வைத்தால்தான் தெரியும். ஒரு பெரிய லெதர் பெல்ட்டும் ஷேவ் செய்தபின் மழித்த சோப்பை இடது கையின் ஓரத்தில் வாங்கிப் பின் வழித்துப் போடுவதற்கென நிறைய பேப்பர் துண்டுகளும் எப்போது வாங்கப்பட்டது எனத் தெரியாத பவுடர் டப்பாவும் சேர்ந்து கடைக்குள் அடிக்கும் வாசனை நம்மை இனம் புரியாத ஒரு உலகத்திற்குள் தள்ளிவிடும். எப்போது முடிவெட்டிக்கொள்ளக் கடைக்குப் போனாலும், ” தம்பி என்ன படிக்குது? ” என்று கரகரத்தக் குரலில் கேட்டபடியே என்னை அலேக்காகத் தூக்கிக் கட்டைமேல் உட்கார வைத்து ஏதோ அபரகாரியச் சடங்குபோல ஒரு அழுக்கான வெள்ளைத் துணியைப் போர்த்தி அதன்பின் பிஸ்டன் வைத்த பாட்டிலால் தலைக்குப் பூந்தூறலாய்த் தண்ணீர் அடித்துத் தலையைக் கலைத்து விடுவார். பின்னர் கத்தரிக்கோலைக்கொண்டு முடி வெட்ட ஆரம்பிக்கும் முன் எழுப்பும் சப்தத்தில் என்ன வசியம் தடவியிருக்குமோ தெரியாது. உடனேயே தூக்கம் வந்துவிடும். மீண்டும் மீண்டும் சாய்ந்துவிழும் தலையை நேர்நிறுத்தி ஒரு சாகச வித்தை போலத்தான் அவர் முடி திருத்த வேண்டியிருக்கும். தூங்காத சில சமயங்களிலோ மூக்கின்மீதோ அல்லது நெற்றிப்பொட்டின் மீதோ உட்கார்ந்து தொந்தரவு செய்யும் ஈயை விரட்டிவிடக் கையை எடுக்கமுடியாதவாறு வெள்ளைத்துணி, வாக்கு கொடுத்துவிட்ட வேலு நாயக்கர்போல என்னைக் கட்டுப்படுத்தியிருக்கும். தவக்களை போன்ற ஒரு மெஷின் கொண்டு பின் மண்டையை சாமி வறண்டிக்கொண்டிருக்கும் அந்தச் சமயங்களில் தலையை அசைத்து ஈயை விரட்டவும் பயமாயிருக்கும். எல்லாம் முடிந்து, துணிச் சிறையிலிருந்து விடுவித்து சாமி தலையைச் சுற்றி ஏதோ எறும்பு வராதிருக்க மருந்துபோடுவதுபோலப் போடும் போரிங்க் பவுடர் மூக்கிற்குள் சென்று செய்யும் ரசாயன மாற்றத்தில் எழும் பேரிடி போன்ற தும்மலில் ஒட்டிக்கொண்டிருக்கும் ஒன்றிரண்டு முடிகளும் விழுந்துவிட ட்ரௌசர் போட்ட சின்னவயது வாரியார்போல எட்டுக்கு எட்டு கடையைவிட்டு வெளியே வரும்போது , நெய் ரோஸ்ட் மயக்கத்தில் தினத்தந்தி படித்துக்கொண்டிருந்த அப்பா அதைக் கடாசிவிட்டு என்னை மிகவும் மெதுவாக நடத்தி அழைத்து வந்தார். வீட்டு வாசலிலேயே பாட்டி என்னை மடக்கி ‘சலங்கை ஒலி’ கமல் ஜெயப்ரதாவைச் சுற்றி வருவதுபோல வந்து சந்தோஷ அப்ரூவல் கொடுத்ததிலிருந்து சாமி கடை மட்டுமே ” “அப்ரூவ்ட் லிஸ்ட்டில் ” இருந்தது. பாட்டி ‘ போன ‘ பின் ( அப்பவும் சாமிதான் வந்தார் ) நானும் பத்தாம் க்ளாஸ் மிதித்ததில் கொஞ்சம் சுதந்திரம் கிடைத்து முடி வெட்டிக் கொள்ளுதல் என்பது மாறி ஸ்டைலோவிற்குஸ் சென்று சிகை அலங்காரம் செய்துகொள்ள வாய்ப்பு வந்தது.
ஸ்டைலோவிற்கு நான் முதன்முதலில் சென்றது சங்கரனோடுதான். சங்கரன் என்னைவிட இரண்டு மடங்கு உயரமானவன். பத்தாம் க்ளாஸ் படிக்கும்போதே ஷேவிங்கிற்குத் தயாராகிவிட்டவன். முடி திருத்திக்கொண்டபின் பெரியவர்கள் போல அக்குள் ” க்ளீனிங்கிற்காக ” ரயில் போவதற்கு உத்தரவு கொடுக்கும் பழைய கால ஒற்றைக் கைகாட்டி போல அவன் சட்டையைக் கழற்றிக் கையைத்தூக்கியபோது சுற்றிக்கொண்டிருந்த ஃபேன் அடித்து ரத்தம் வந்துவிட்டது. அதிலிருந்து அவனுக்குக் குட்டையான சேர் போட்டுத்தான் ” ஹேர் ட்ரெஸ்ஸிங்க்” நடக்கும். ரேடியோ சிலோனில் பொங்கும்பூம்புனல் பெருகிக்கொண்டிருக்க ஸ்டைலோவின் ஃபோட்டோவில் உறைந்திருந்த அரைகுறை நாயகிகளைக் கண்களால் பருகிக்கொண்டிருந்த சங்கரனுக்கு அந்தமுறை என்னவோ ‘ ஸ்டெப் கட்டிங்க்’ செய்துகொள்ளும் ஆசை வந்துவிட்டது. அவனுக்கு ரெகுலராக ” கட்டிங்க் ” பண்ணிவிடும் மாணிக்கத்திடம் அவனது ஆசையைச் சொன்னவுடன், மாணிக்கம் ” அதுக்கென்ன சங்கரா, பண்ணிடலாம். என்ன கொஞ்சம் டயம் ஆவும்; காசும் கூட ஆவும். ஒண்ணு பண்ணுவோம், நீ என்ன பண்றே , சாயந்தரம் ஏளு மணி போல இந்தத் தம்பியையும் கூட்டிக்கிட்டு வந்துடு. ரெண்டு பேருக்கும் சுமாரா பதினோரு மணிக்கெல்லாம் முடிச்சுடலாம் ” என்றான். ” எனக்கெதுக்குடா ” என்று நான் அலற ஆரம்பிக்கு முன்னமே சங்கரன் என் வாயைப் பொத்தியதில் மூக்கும் அவன் அகலக் கைக்குள் மாட்டிக்கொள்ள, ” சரி மாணிக்கம், வந்துடறோம் ” என்று வெளியே என்னைத் தள்ளிக்கொண்டு வந்துவிட்டான்.
ஸ்டைலோவிற்குள் முதல் முறை நுழைந்த உடனேயே ஏற்பட்ட ப்ரச்சனையில் என் வயிறு கலங்கிவிட்டது. சங்கரன் கோபக்காரன். எங்கள் ஸ்கூலின் நிரந்தரத் தலைவன் ஷம்சுதீனீன் மிரட்டலைச் சமாளிக்க சங்கரனின் உதவி எனக்கு அவ்வப்போது தேவைப்படும். அவனை முறைத்துக்கொள்ளவும் முடியாது. ” சங்கரா, ப்ளீஸ் என்னை விட்டுடு ! எனக்கு ஸ்டெப் கட்டிங்கெல்லாம் வேணாம். எங்க குடும்பத்தில அதெல்லாம் ஒத்துக்க மாட்டாங்க. எங்க வீட்டுல ராத்திரிக்கெல்லாம் முடி வெட்டிக்க விடமாட்டாங்க. அதைத் தவிர அதுக்கெல்லாம் என்னிடம் காசும் இல்லை ” என்று கதறியதை எல்லாம் அவன் காதிலேயே போட்டுக் கொள்ளாது, ” ஆறு மணிக்கெல்லாம் உங்க வீட்டுக்கு வந்துடறேன், காசை நாம்பாத்துக்கறேன் ” என்று நாலே எட்டில் தெருக்கோடிக்குப் போய்விட்டான். நான் இதயம் நல்லெண்ணை விளம்பரம் மாதிரி வீட்டுக்கும் போகமுடியாது, ரோட்டிலேயும் நிக்க முடியாது தவித்துக்கொண்டிருந்தேன். பேசாமல் சாமியின் எட்டுக்கு எட்டு ஷெட்டிற்கே போய் சம்மர் கட் அடித்துக்கொண்டிருக்கலாம். சங்கரனோடு போனதே தப்பு என்று என் விதியை நொந்து கொண்டு வீட்டில் ” கடையில ரொம்ப கும்பல்; சாயந்தரம் வரச் சொல்றான்” எனப் பாதிப் பொய்யும் பாதி உண்மையும் சொன்னதை அம்மா சரியாகக் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. சாயந்தரம் வராமலே போய்விடட்டும் என்று மடத்தனமாய் வேண்டிக்கொண்டிருந்தேன். ஆறு மணிக்கு ஜுரம் வந்தாற்போல் படுத்துக்கொண்டால், சங்கரனிடமிருந்து தப்பித்துவிடலாம் எனக் கணக்குப் போட்டு, வீட்டுப் பாடங்களையெல்லாம் ஐந்தரை மணிக்குள் முடித்துகொண்டிருக்கும்போதே சங்கரன் வந்துவிட்டான். ” போலாமா ” என்று கேட்டுக்கொண்டே வந்தவனிடம் அம்மா ” எங்கேடா கிளம்பிட்டீங்க ” எனக் கேட்டு முடிக்கும்போதே ” மலக்கோயிலுக்கும்மா” என இன்னொரு பொய்யை ஏன் சொன்னேன் என்று தெரியவில்லை. பக்கத்துவீட்டுப் பெண்ணோடு ஓடிப்போவதுபோல ஏன் இவ்வளவு படபடப்பு என்றும் தெரியவில்லை.
சங்கரன் ஸ்டெப் கட்டிங்க் கனவிலிருந்தான். தன் கோரைப் புல் தலைமுடியை சீப்பால் பின் பக்கம் கொண்டுபோய் வழிய விட்டுத் தனக்கு ஒரு புதிய ” லுக் ” கிடைக்கப்போகும் ஆனந்தத்தில் இருந்தான். ஸ்டைலோ கடைக்குள் போகும்போதுதான் மாணிக்கம் பகல் வேலையை முடித்துவிட்டுச் சாப்பிடக் கிளம்பிக்கொண்டிருந்தான். ” சரி நாளைக்குப் பாத்துக்கலாமா ” என்று நான் கேட்க ” கொஞ்சம் இருங்க, கால் அவர்ல அள்ளிப்போட்டுட்டு வந்துடறேன் ” என்று தப்பிக்க முடியாமல் மாணிக்கம் செய்துவிட்டான். அன்று என்னமோ நேரமே சரியல்லை என்று ஆகிவிட்டது. சரி நடப்பது நடக்கட்டும் என்று முடிவை மாரியம்மனிடம் விட்டுவிட்டேன். இரண்டு சுவர்களிலும் அடித்திருந்த நீண்ட பெல்ஜியம் கண்ணாடியில் என் சோக முகம் முன்னாலும் பின்னாலும் அடுக்கடுக்காய் பிரதிபலித்துக்கொண்டிருக்க சங்கரன் அங்கிருந்த படங்களைக் கடையில் யாருமே இல்லாதிருந்ததால் கூச்சமில்லாமல் பார்த்துக்கொண்டிருந்தான். சொன்னாற்போல் சரியாகக் கால்மணி நேரத்தில் மாணிக்கம் வந்து ” வா சங்கரா! படமெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம். ஸ்டெப் கட்டிங்க் அடிச்சதுக்கபுறம் பார், படத்தில இருக்கறதெல்லாம் நேர்லயே உங்கிட்ட வந்து கெஞ்சும் ” என்று அவனை உசுப்பேத்தி விட்டான் . சங்கரனை ஒரு பிரம்மாண்ட சுழல் நாற்காலியில் உட்கார வைத்து பூப்போட்ட பிஸ்டன் பாட்டிலில் இருந்து வாசனையான திரவத்தைத் தலையில் அடிக்கும்போதே சங்கரன் சிலிர்த்துக்கொண்டிருந்தான். அவன் கோரை முடியை ஸ்பீட் ப்ரேக்கர் அமைப்பதுபோல் மடித்து பின் நிறைய க்ளிப்புகளை எடுத்து அந்த மடிப்புகளின்மேல் ஒவ்வொன்றாக இறுகப்பிடிக்குமாறு வைத்துக்கொண்டே மாணிக்கம் சங்கரனிடம் பேசிய சினிமா கிசுகிசுக்களை இங்கே பதிவு செய்ய முடியாது. அந்தக் க்ளிப்புகள் கொண்ட தலையில் சங்கரன் ஏதோ ஒரு ஆப்பிரிக்கப் பழங்குடி இனத் தலைவன்போலக் காட்சி அளித்தான். அந்தத் தலையோடு சுமார் இரண்டு மணி நேரம் இருக்கவேண்டும் என்று சொன்ன மாணிக்கம் , “கொஞ்சம் இரு ஒரு தம் அடிச்சுட்டு வாறேன் ” என்று கிளம்பியபோது, என்னவோ ஒரு உற்சாகத்தில்” நானும் தம்மடிக்கிறேன் ” என்று சங்கரனும் கிளம்பிவிட்டான். நானும் வெளியே சென்றால் யார் கண்ணிலாவதுபட்டு மாட்டிக்கொண்டுவிடுவேன் என்பதால் உள்ளேயே உட்கார்ந்துவிட்டேன்.
எட்டு மணிவரை வீட்டிற்கு நான் சாப்பிட வராதது கண்டு என் தட்டில் எல்லாவற்றையும் ஒன்றாகப் போட்டு பிசைந்து வைத்துவிடுவார்கள் என்றாலும் எனக்குப் பதினோரு மணிவரை வெளியில் சுத்த ” பர்மிஷன் ” கிடையாது. அதுவும் நான் சங்கரனோடு போனது நிறைய தப்பான அனுமானங்களுக்கு இடம் கொடுத்துவிடும். என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே வெளியில் ஏதோ பெரிய சண்டைபோல் சத்தம் கேட்டது. தயங்கித் தயங்கி கதவைத் திறந்து பார்த்த போது சங்கரனின் அப்பா மாணிக்கத்திடம் கத்திக்கொண்டிருந்தது கேட்டது. ஷாப்பில் ஓவர் டைம் முடித்துவிட்டு எதேச்சையாக அந்தப் பக்கம் வந்த சங்கரனின் அப்பா சங்கரன் ஜாடையில் யாரோ கிரீடமெல்லாம் வைத்துக்கொண்டு புகைமூட்டத்திற்கு நடுவில் நிற்பதைக் கண்டு ” யார்தான் அது ” என்று பார்த்துவிடலாம் எனப் பக்கத்தில் வந்து உற்று நோக்கியதில் அது சங்கரன்தான் என்று உறுதியானதில் அவனை அடிக்கத் தயாராகும் முன்னரே அவன் பறந்துவிட்டிருந்தான். மாட்டின மாணிக்கத்தைத்தான் அவர் விளாசிக்கொண்டிருந்தார். இதுதான் சமயம் என்று நான் அந்த அமளியில் பின்னங்கால் பிடறியிலடிபட வீட்டிற்கு ஓடி வருமுன் மாரியம்மன் கோவிலை ஒரு பிரதக்ஷிணம் செய்து நன்றி செலுத்திவிட்டேன்.
இப்போதெல்லாம் நான் எப்படி முடி வெட்டிக்கொள்ளவேண்டும் என்று நிர்ணயிக்க யாருமில்லாததோடு வெட்டிக்கொள்ள முடியும் இல்லாது போய்விட்டது. சாமியின் எட்டுக்கு எட்டு ஷெட் இருந்த இடத்திலெல்லாம் கருவேல முள் மரங்கள் காடு போல வளர்ந்து கிடக்கின்றன. ஸ்டைலோ பழைய மிடுக்கெல்லாம் இழந்து என் தலைபோல் சுருள் சுருளாய்முடி இருந்தவெறும் ஞாபகங்கள் மட்டும் தாங்கி நிற்க கவர்ச்சி நடிகைகள் மத்தியில் மாணிக்கம் ஃபோட்டோவாய் கண்ணிமைக்காது நிற்கிறான்.

No comments:

Post a Comment