Wednesday 18 July 2018

நன்றி : V. வெங்கடேஷ் சிங்கப்பூர்

பஞ்சவர்ணம்
“ஓகே பை..தேங்க்ஸ் பார் கமிங் ” சிரித்த முகத்துடன் வீட்டிற்கு வந்திருந்த தன் இரண்டு தோழியரையும் வழியனுப்பிவிட்டு வந்தாள்,என் மனைவி..ஷ்யாமளா..
நண்பர்களுடன் இரண்டு மணிநேரம் அரட்டை அடித்திருக்கிறாள், குஷி மூடில் இருக்கிறாள் என்று நினைத்தது தப்பாகியிருந்தது..
வாசல் கதவை சாத்தியதுமே வேதாளம் அஜித் போல புன்னகை மாறி ரௌத்திரம் பழக ஆரம்பித்ததை நாங்கள் கவனிக்கவில்லை..நாங்கள் என்றால் நானும் என் 10 வயது ஏக புத்திரன் கார்த்திக்கும் ..ஜாலியாக TV யில் கிரிக்கெட் பார்த்துக்கொண்டிருந்தோம்..
மொத்தென்று முதுகில் ஒன்று விழுந்தது..திடுக்கிட்டு போனேன், கை ஓங்கும் அளவிற்கு வந்துவிட்டதா..
பிள்ளை அலறினான் “ஏம்மா அடிச்சே”..
அடி அவனுக்குத்தான்.. நல்லவேளை நான் தப்பித்தேன்(என்று நினைத்தேன் என்பது பின்னால் தெரிந்தது, அடியே வாங்கியிருக்கலாம்)
“நாளன்னிக்கு மிட் டேர்ம் டெஸ்ட் வெச்சுண்டு கிரிக்கெட் கேக்கறதா கிரிக்கெட் ..உங்கப்பாதான் உருப்படாத போறார்னா, உனக்கு புத்தியில்ல …போடா, உள்ள போய் படி”
நித்ய கண்ட சாப்ட்வேர் உத்யோகம்..ஆனாலும் நாற்பது வயதிற்குள் வீடு வாங்கிவிட்டேன் (கொஞ்சம் ஹௌசிங் லோன் பாக்கி), காரும் இருக்கு.. பிறந்தநாள், வெட்டிங் டே, பொண்ணு பார்க்க வந்த நாள்,அக்ஷய திரிதியை எல்லா நாளுக்கும் நகைகள் வாங்கி கொள்கிறாள்..(போடுவதென்னவோ 300 ருபாய் பிளாஸ்டிக் ஐட்டங்கள்..கேட்கப்படாது..பர்ஸை எடுப்பதோடு நம் கடமை முடிகிறது).. ஆனாலும் உருப்படாதவனா?? ..
பிள்ளை முனகிக்கொண்டே போனான்..
இது போன்ற ஆபத்தான நேரங்களில் நைசாக இடத்தை விட்டு நழுவிவிடவேண்டும் என்று செய்திருக்கும் சங்கல்பம் அந்த நேரம் பார்த்து மறந்து தொலைக்கிறது..
“எதுக்கு அவனை அடிச்சே..பாவம் ஏதோ ஒரு நாள் கிரிக்கெட் பார்த்தா தப்பா, இன்னிக்கி லீவுதானே..எதுக்கு இத்தனை கோபம் ”
எரியும் நெருப்பில் பெட்ரோலை ஊற்றியிருக்கிறேன்..உக்கிரம் கூடிவிட்டது..
“அந்த பேரை சொல்லி வெளியாட்கள் முன்னால, முக்கியமா என் ப்ரெண்ட்ஸ் முன்னாடி கூப்பிடக்கூடாதுன்னு எத்தனை வாட்டி சொல்லிருக்கேன்..”
சுரீரென்று உரைத்தது ..அவளை பஞ்சவர்ணம் என்று எதற்கோ அழைத்திருக்கிறேன்..ரெண்டு மணி நேரத்துக்கு முற்பட்டதை ஞாபகம் வைத்துக்கொள்ளும் பழக்கம் இல்லாதபடியால் மறந்தும் விட்டிருக்கிறேன்..
அவள் அம்மாவோ.. யாராவதோ செல்போனில் கூப்பிட்டு தற்காலிகமாக காப்பாற்றமாட்டார்களா என்று வடபழனியானை துணைக்கு கூப்பிட்டேன்..பாவி, கார்த்திகை தீப பொறி உருண்டை சாப்பிடும் ஜோரின் என்னை மறந்துவிட்டிருந்தான்..
60 களின் சினிமா ஹீரோயின் போலே புஸ்ஸு புஸ்ஸு என்று மேல் மூச்சு கீழ் மூச்சு விட்டுக்கொண்டு நின்றாள்..
“ஆசையா கூப்பிட்ற பேர்தானேன்னு.. வாய் தவறி..”
“நல்லா தவறும் (நற நற பின்னணியுடன் படிக்கவும்) …எனக்கு எங்கப்பாம்மா பேரே வைக்கலியா..இது என்ன பேரு பஞ்சவர்ணம்னு..எத்தனை வாட்டி சொல்லிருக்கேன் எனக்கு இது பிடிக்கலேன்னு..”
தேன் கூட்டில்.. அதுவும் ராணித்தேனீயின் தலையில் கையை வைத்திருக்கிறேன்..
“எப்படில்லாம் கேலி பண்ணிட்டு போறா தெரியுமா?”..
பிராணாயாமம் பயின்று கொண்டிருந்தேன்..ஓம் ஷாந்தி…இனி வாயை திறப்பேன்..
என் மௌனம் கொஞ்சம் பலன் தந்தது..
“அவாவாளுக்கு வந்தா தான் அந்த கஷ்டம் தெரியும்..இருக்கட்டும் வெச்சுக்கிறேன்..” என்று மலையேறினாள்..
அப்பாடி இந்தவரைக்கும் தப்பிச்சோம்னு பெருமூச்சுவிட்டுகொண்டு ஸ்தலத்தை காலி செய்தேன், அவள் சொன்னதின் உள்ளுறை பொருள் என் மெமரி கார்டில் ஏறவில்லை, ஏதோ வைரஸ்..
டின்னரில் கோபம் மிச்சமிருப்பது தெரிந்தது, வெறும் மோர் சாதம் மட்டும் தான் .. கார்த்திக்கு மட்டும் ரெண்டு தோசை கிடைத்தது..வாய் நம நம என்றது..அதை அப்படியே நம சிவாய என்று மாற்றி ஊறுகாவுடன் மோர் சாதம் சாப்பிட்டு முடித்தேன் ..
ராத்திரி படுக்கும் முன் கார்த்திக் கேட்டான் “ஏன்பா நீ அம்மாவை பஞ்சவர்ணம்னு கூப்பிடறே..”
“அது ஒரு பெரிய கதைடா, இப்போ எதுக்கு..” என்று சொன்னேன்..
“கத தானே, சொல்லுப்பா.. ”
சொல்ல ஆரம்பித்தேன்..
“அது நான் வேலைக்கு சேர்ந்து நாலு வருஷம் ஜாலியா இருந்த நேரம்.. எங்கப்பா அப்போதான் ரிட்டையர் ஆகியிருந்தார்..”
“சரி, அப்புறம்..”
“எங்கப்பாக்கும் அம்மாக்கும் தினம் ஏதாவது ஒரு சண்டை,, தகராறு..”
“சரி, அதனால..”
எங்கப்பாக்கு ஒரு பிரண்டு, சுப்ரமணின்னு பேர். அவர் என்ன பண்ணினார் எங்கப்பாக்கு ஒரு ஐடியா கொடுத்தார் .. ‘இதோ பாரு கணபதி, நீ நிம்மதியா இருக்கணும்னா உன் பிள்ளையை பலிகொடுத்துரு’ அப்படின்னு யோசனை சொன்னாரு..”
“ஐயைய்யோ.”..அலறினான்..
அணைத்து சமாதானபடுத்தினேன் ..”உன் தாத்தாவும் இப்படிதான் பதறினார். சுப்புணி மாமா சிரிச்சுகிட்டே, அவனுக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி வெய்யி, அப்புறம் மருமகளோட மல்லுக்கட்டுவா நீ தப்பிச்சுக்கலாம்னு சொன்னார்.”
முதுகு காட்டிக்கொண்டு படுக்கையில் அவளும் கதை கேட்டுக்கொண்டிருந்தாள்..
“அவரோட அண்ணாவுக்கு ஒரு பொண்ணு இருக்கு..நல்ல அழகா இருக்கும்..நம்ம சிவாவுக்கு பார்க்கலாம்னு எங்கப்பாகிட்ட சொன்னார்..ஜாதகம் வாங்கி பார்த்து, எல்லாம் சேர்ந்திருக்கறதால பொண்ணு பார்க்க போலாம்னு முடிவு பண்ணி போனோம்.. ”
ரெண்டு வருஷத்துக்கு முன்னால் மாமாவுக்கு பெண் பார்க்கப்போனது தெரிந்ததால் விளக்கவேண்டிய அவசியமில்லாமல் போனது ..
“அம்மாவைதானே பொண்ணு பார்க்க போன..”
“ஆமாம், மேல கேளு. ஸ்வீட் காபி எல்லாம் முடிஞ்சப்புறம், உங்கம்மாவை அழைச்சிண்டு வந்தா..”
“அம்மா, அந்த மாம்பழ கலர் பட்டுப்புடவை வெச்சுருக்கியே, அதை தானே அன்னிக்கு கட்டிண்டிருந்தே..” அம்மாவை கட்டிக்கொண்டு கேட்டான்..”ஆமாம்” என்று பதிலும் வாங்கிவிட்டான்..
“நீ சொல்லுப்பா ..”
“எனக்கு பார்த்ததுமே புடிச்சி போச்சு..”..ரியாக்ஷன் கவனித்தேன்..புற முதுகு காட்டினாலும் புன்னகைத்தது சிறு அசைவின் மூலம் தெரிந்தது..
“அப்புறம்..”
“பொண்ணுக்கு பாட தெரியுமான்னு எங்கம்மா கேட்டா. எனக்கு உதறல், பாட தெரியாட்டி வேண்டாம்னு சொல்லிடப்போறாளோன்னு ஒரு பயம்..”
“அவ்ளோ பிடிச்சுபோச்சப்பா..எங்கம்மான்னா அம்மாதான்”..அவள் கழுத்தை கட்டிக்கொண்டான்..
வடபழநியாண்டவனை தப்பாக நினைத்தது இப்போது புரிந்தது..எப்போ எப்படி அவள் கோபத்தை தணிப்பது என்று தணிகாசலபதியான அவனுக்கா தெரியாது..பிள்ளை வடிவில் ஊடலை தீர்த்துக்கொண்டிருந்தான்..
இனி எதற்கு மறைப்பானேன் என்று திரும்பி தலைக்கு ஒரு கையை வைத்து லேடி ரங்கநாதராய் காட்சி கொடுத்தாள்..முகத்தில் பெருமிதம், புன்னகை..என்னை பார்த்துக்கொண்டே அவனுக்கு ஒரு முத்தம்..
“நீ கதையை நிறுத்தாத சொல்லுப்பா..”
“பாட சொன்னாளா..நான் பயந்துண்டிருந்தேனா..உன் மாமா, அப்போ காலேஜ் பர்ஸ்ட் இயர் படிச்சுண்டிருந்தவன்..உள்ள போயி ஒரு வீணையை தூக்கிண்டு வந்தான்..”
“உனக்கு வீணையும் வாசிக்க தெரியுமாம்மா..”
“ம்ம், அப்போ கத்துண்டிருந்தேன்..”
என் பக்கம் திரும்பி ..”அப்புறம்..”
“டொய்ங் டொய்ங்னு ஆரம்பிச்சு பாட்டு பாட வாய தொறந்தாளா..ம்யூட் ஆன டிவி மாதிரி ஒண்ணும் கேக்கலே..ஏதோ அலை…கண்ணா..நடுவுல நடுவுல கேட்டது..என் தலைல இடி விழுந்த மாதிரி ஆச்சு..”
“ஏன், பாட்டி அம்மாவை பிடிக்கலேன்னு சொல்லிடுவாள்ன்னா..”
“ஆமா, எங்கம்மா மூஞ்சிய சுளிக்க ஆரம்பிச்சா..”
“அது அப்போதான்னு இல்ல, வந்ததிலிருந்தே உங்கம்மா மூஞ்சி வெளக்கண்ணெய் குடிச்ச மாதிரிதான் இருந்தது..” சிக்கிய புல் டாஸ் சிக்சருக்கு பறந்தது..
“சரி, அப்புறம்..”
“உங்க விச்சு தாத்தா இருக்காரே, அவர் உடனே அவளுக்கு ரெண்டு நாளா ஜலதோஷம்..தொண்ட கட்டு..அதனால சரியா பாட முடியலைன்னு சொன்னார்..”
“பாட்டி ஒத்துண்டுட்டாளா..”
“அவ்ளோ சீக்கிரம் ஒத்துப்பாளா, அது எதிர்கால மாமியாருக்கு அழகா..அதனால, என் நாத்தனார் சேலத்துல ஒரு வரன் இருக்குன்னு சொல்லியிருக்கா, அந்த பொண்ணையும் பார்த்துட்டு அப்புறமா சொல்றோம்னு கிளம்ப பார்த்தா..”
“நீ என்ன பண்ணினே..உங்கம்மாகிட்டே.. ப்ளீஸ் ப்ளீஸ் எனக்கு இந்த பொண்ணு ரொம்ப புடிச்சிருக்கும்மா..வேற பொண்ணெல்லாம் வேண்டாம்னு சொன்னியா..”
அவனை இறுக்க கட்டிக்கொண்டாள்..”உங்க பிள்ளையை பார்த்து கத்துக்கோங்க..அம்மாகிட்ட ஒரு வார்த்தை எதிர்த்து பேச துப்பில்ல..”
நான் ஏதும் சொல்வதற்குள் அவன் முந்திக்கொண்டான்..”நான் வேணா எனக்கு கல்யாணத்துக்கு பொண்ணு பார்க்கிறபோது ..அம்மா அம்மா எனக்கு இந்த பொண்ணுதான் பிடிச்சிருக்கு ..நீ என்ன சொன்னாலும் இவளையே கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்றேன்..”
அவளுக்கு பேரதிர்ச்சி, இந்த பூமராங்கை எதிர்பார்க்கவில்லை…எனக்கு ஆனந்த அதிர்ச்சி..முருகன் இன்றைக்கு புல் பார்மில் என்னை ரக்ஷித்துக்கொண்டிருந்தான்..
மாமியார் ஆவதற்கு 15 வருடத்திற்கு முன்னரே, எதிர்கால மருமகளின் மீது அசூயை வந்துவிட்டது..”அப்பனுக்கு பிள்ளை தப்பாம பொறந்திருக்கு..” உடனடியாக எனக்கு சர்டிபிகேட் வழங்கப்பட்டது..
“சரிப்பா, உன் கதைக்கு வா..பாட்டி வேற பொண்ண பாக்க போலாம்னு சொன்னபோது நீ என்ன சொன்னே..”
” எனக்கு கையும் ஓடலே காலும் ஓடலே..என்ன செய்யறதுன்னு தெரியாம இவளையே பார்த்துண்டிருந்தேன்..இவளும் என்னையேதான் பார்த்துண்டிருந்தா..”
“பொய், நம்பாதே…நான் பார்க்கவேயில்லை.. போனா போகட்டும்னு தான் நெனச்சேன்..”
“ஆமாம்.. அதனாலதான் தம்பிய நைசா கூப்பிட்டு TV ப்ரோக்ராம் வீடியோ கேசட்டை போட்டு காட்ட சொன்னியாக்கும்..” குட்டை உடைத்தேன்..
“ஆனைக்கும் அடி சறுக்கும்..என் போதாதகாலம் அன்னிக்கின்னு பார்த்து அப்படி தோணித்து..” இல்லாத மீசையில் மண் ஒட்டவில்லை..
“சரி அப்புறம் மாமா வீடியோ போட்டு காட்டினதும் பாட்டி உடனே ஓகே சொல்லிட்டாளா..”
ஆமாம் என்று சொல்ல நான் வாய் திறப்பதற்குள் “கிழிச்சா..அது நிஜமா TV ல வந்த ப்ரோக்ராம்தானான்னு பார்த்துட்டு சொல்றோம்னு கிளம்பிட்டா..நாலு நாள் கழிச்சி எங்கப்பாகிட்ட பொண்ணு பிடிச்சிருக்குன்னு போன் பண்ணி சொன்னா..பெரிய ஜேம்ஸ் பாண்டுன்னு நினைப்பு, எப்படி TV ல தான் வந்ததுன்னு கண்டுபிடிச்சா..”
“நான் தான் ஒன்னையும் நோண்டாதே, நல்ல பொண்ணா இருக்கு எனக்கு போறும்ன்னு சொன்னேன்..”
“இந்த கதையெல்லாம் வேண்டாம்..TV ஸ்டேஷனுக்கு உங்கம்மா போன் பண்ணி யார்கிட்ட கேக்கறதுன்னு தெரியாம டெலிபோன் ஆபரேட்டரை கேட்டு அவ கன்னாபின்னான்னு திட்டலே..எனக்கொண்ணும் தெரியாதுன்னு நினைக்கவேண்டாம்..”
எமகாதகி..எல்லாம் தெரிந்து வைத்திருக்கிறாள்..
“சரிப்பா..நீ இத்தனை நேரம் சொன்ன கதைக்கும் அம்மாவை பஞ்சவர்ணம்னு கூப்பிட்றதுக்கும் என்ன சம்பந்தம்..”
“அப்படி கேள்றா..நானும் எத்தனையோ வாட்டி கேட்டாச்சி.. இன்னும் ஒழுங்கா பதில் சொல்லல்லே..”
“சொன்னதை நம்பியிருக்கணும்..”
“எதை? இப்போ உங்க பிள்ளைக்கு சொல்ல போற கதையையா..அத நம்ப வேற ஆளை பாருங்க..”
“நீ நம்பினாலும் நம்பாட்டியும் அதுதான் காரணம்..” பிள்ளையிடம் திரும்பினேன்..
“அது கொஞ்சம் தமாஷா இருக்கும்..அது என்னன்னா..தேவர் மகன்னு ஒரு படம்…அதுல கமலும், ரேவதியும் பாடறமாதிரி ஒரு பாட்டு வரும்..இரு வரேன்..”
யு டியூபில் இஞ்சி இடுப்பழகி பாட்டை போட்டு காண்பித்தேன்..பழைய பாட்டல்லவா, அசிரத்தையாக பார்த்தான்..எனக்கு அவன் பார்க்கும் விஜய் பாட்டுக்கள் அலர்ஜி..என்ன செய்ய ஜெனெரேஷன் கேப்..
“சரி, இதுக்கென்ன..” என் தப்பு, ஐந்தாம் வகுப்பில் படிப்பவனிடம் நுண்ணறிவை எதிர்பார்த்தது..இன்னும் குழந்தைதானே..
“இல்லடா, இந்த பாட்டுல உங்கம்மா அன்னிக்கி பாடின மாதிரி திக்கி திக்கி பாடுறாளா..அந்த படத்துல அவ பேரு பஞ்சவர்ணம், அதனால அம்மாவை நான் அப்படி கூப்பிடுறேன்..”
“நம்பற மாதிரி இல்லையேப்பா..சரி சரி எனக்கு தூக்கம் வருது”..என்று சொல்லிவிட்டு படுத்துக்கொண்டான்..
“உங்க பிள்ளையே நம்ப முடியலன்னு சொல்லிட்டான்..இதுக்கு என்ன சொல்றீங்க..எனக்கு இந்த சந்தேகம் போகவே போகாது..”
“சரி சரி இனிமே அந்த பேர சொல்லி கூப்பிட்றதில்ல, போதுமா..”..
“ம்கூம்.. ” திரும்பி படுத்துகொண்டாள்..
பஞ்சவர்ணம் – இந்த பேரை தெரியாமல் வைத்துவிட்டு நான் படும் பாடு சிவனே, அந்த நவிலும் பஞ்சு கூட படாது..
இந்த பனிரெண்டு வருட திருமண வாழ்க்கையின் இதர highlights
ஒரு நாள் அட்டாலி மேலே ஏறி என்னத்தையோ குடைந்துகொண்டிருந்தாள்..கேட்டால் தேன்குழல் பிழிய அச்சை தேடுவதாக சொன்னாள்..உண்மையில் தேடப்பட்டது என்னை பிழிய, யார் அந்த பஞ்சவர்ணம் என்று தேடப்பட்டுக்கொண்டிருந்தது..என் காலேஜ் புக்ஸ், ரெகார்ட் நோட்டுகள் புரட்டப்பட்டன ..எங்கேயாவது அந்த பெயரை எழுதி வைத்திருக்கிறேனா என்று தேடினாள்..ஒன்றும் அகப்படவில்லை..அப்போதும் நம்பவில்லை..நான் சாமர்த்தியமாக எங்கேயோ ஏழு கடல் தாண்டி அந்த நோட்டுக்களை மறைத்து வைத்திருப்பதாக நம்பினாள்..
என் பள்ளிக்கூட, காலேஜ் வாட்ஸாப்ப் குரூப்புகளில் அடிக்கடி ஆடிட் நடக்கும்.. போனை கையில் எடுத்தாலே முதலில் அடிப்பது SEARCH பஞ்சவர்ணம் (என் போனுக்கு வாயிருந்தால் கதறியிருக்கும்..)
என் பள்ளி, கல்லூரி நண்பர்களிடம் பார்க்கும்போதெல்லாம் ரகசிய விசாரணை நடைபெறும்..ஆள் எப்படி, காலேஜில் எத்தனை பிரெண்ட்ஸ்..பெண்கள் யாரேனும் உண்டா, முக்கியமாக பஞ்சவர்ணம்..
எத்தனையோ எடுத்து சொல்லியாயிற்று ..நான் காலேஜில் படிக்கிறப்ப ஒல்லியா,ஒடிசலா ரொம்ப ரொம்ப சுமாராதான் இருப்பேன்..ஒரு பொண்ணும் என்னை திரும்பிக்கூட பார்த்ததில்லே..அதுவுமில்லாம நான் படிச்ச மெக்கானிக்கல் என்ஜினீயரிங்கில் பெண்களே கிடையாது..கற்பூரம் ஏற்றி அணைக்கவில்லை, மற்றபடி எல்லாம் சொல்லியாயிற்று …சுலபத்தில் நம்பிவிடுவாளா.. காலேஜ் போட்டோக்களை எடுத்து பார்ப்பாள்..எல்லாம் நல்லாதான் இருக்கீங்க, சொல்லப்போனால் அந்த முகரைகளில் (நண்பர்கள் மன்னிக்க) சுமாரா இருக்கிறதே நீங்கதான்..இதை காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்ற அர்த்தத்தில் எடுத்துக்கொள்ளலாம்..
வீட்டு வேலை செய்பவர்கள்தான் பஞ்சவர்ணம் போன்ற பெயர் வைத்திருப்பார்கள் என்று யாரோ கொளுத்திப்போட …அதையும் விடுவானேன் என்று நான் வாலிப வயதிலிருந்த ஏரியா முழுதும் ரகசியமாய் அலசப்பட்டது..பஞ்சவர்ணம் என்று பெயர் உள்ளவர்களுக்கு புடவை வாங்கி கொடுப்பதாக முண்டககன்னி அம்மனுக்கு வேண்டுதல் என்று சாக்கு சொல்லி தேடியதில் இரண்டு 90 வயது பஞ்சவர்ணங்கள் அகப்பட்டன..என் ரசனை அத்தனை மோசமில்லை என்று புடவைகளை மட்டும் கொடுத்துவிட்டு மேற்படி விசாரணையை முடித்துக்கொண்டாள்..
கல்யாணமான முதல் இரண்டு வருடங்களுக்கு இது பிரச்சனையாகவே இல்லாதது ஆச்சர்யமானது..இன்னும் சொல்லப்போனால் அந்த பெயரை சொல்லி நான் அழைப்பதை மிகவும் ரசித்தாள்..
ராமாயண கூனி போலே அவளுக்கு ஒரு பெரியம்மா பெண், ஏதோ வேலையாக சென்னைக்கு வந்தவள் தங்கையுடன் ஒரு வாரம் இருக்க நேர்ந்தது..போவதற்குள் பஞ்சவர்ணத்தை பஞ்சராக்கிவிட்டு போய்விட்டாள்..அன்று முதல் அனர்த்தம் ஆரம்பம்..இல்லாத பஞ்சவர்ணத்தை தேட தொடங்கினாள் ..
சரி,,கதையை முடிக்கவேண்டாமா..
மேற்படி சம்பவம் நடந்து இரண்டு வாரங்கள் கழித்து எனக்கு ஆபிசில் ஒரு அமெரிக்க ப்ரொஜெக்ட்டுக்கு ப்ரோபோசல் முடிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டது..இதை மட்டும் செய்துவிட்டால், அடுத்தும் ஐந்து வருஷத்துக்கு வேலை பற்றி கவலை இல்லாமல் இருக்கலாம் என்று கொஞ்ச காலத்துக்கு வாட்ஸாப்ப், பேஸ்புக் எல்லாவற்றையும் ஓரம் கட்டிவிட்டு நல்ல பிள்ளையாக வேலை செய்துகொண்டிருந்தேன்..
வேறு ஏதோ ஒரு கான்பிரென்சில் கலந்து கொள்ள க்ளையண்ட்ஸ் இரண்டு நாளில் சென்னை வருவதால் அவர்கள் தங்கியிருக்கும் சோழா ஹோட்டலிலேயே முதல் பிரசென்ட்டேஷன் வைத்துக்கொள்ள முடிவு செய்து என் ஆபிசில் தஞ்சாவூர் ஹாலை புக் செய்துவிட்டார்கள்..
குமார் தீயாய் வேலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டான்..
70 % முடிக்கப்பட்டிருந்த ப்ரோபோசல் இரண்டே நாட்களில் 100 % முடிக்க வேண்டியிருந்ததால் சோறு தூக்கம் மறந்து வேலை செய்துகொண்டிருந்தேன்..
அடுத்த நாள் பிரசெண்டேஷன் ..முதல் நாள் இரவு 3:30 மணிக்கு ஒருவாறு ப்ரோபோசல் முடித்தேன்..7 மணிக்கு அலாரம் வைத்துவிட்டு படுக்கையில் விழுந்தேன்..காலை 9:30 மணிக்கு சோழாவில் பிரசெண்டேஷன் ..
முகத்தில் ஜில்லென்று குளிர்ச்சி..உலுக்கி எழுப்பினாள் மனைவி.. “இன்னிக்கி பிரசெண்டேஷன்னு சொல்லிட்டு இன்னும் தூங்கிட்டு இருக்கீங்களே…”
“ஐயோ, டைம் என்ன இப்போ…”
“9 மணி”
கிர்ரென்று தலை சுற்றியது..முருகா, பட்ட கஷ்டமெல்லாம் பாழா..
“உடனே கிளம்புங்க.. அரை மணி நேரத்துல போய்டலாம்…”உற்சாக படுத்தினாள்..
என் கல்யாண கோட் அயர்ன் பண்ணி ரெடியாக வைக்கப்பட்டிருந்தது..
பல் தேய்க்கவில்லை, குளிக்கவில்லை…அவசரமாக மூஞ்சி அலம்பிக்கொண்டு கோட் அணிந்துகொண்டேன்..அவளே டை கட்டிவிட்டாள்..லேப்டாப், ப்ராஜெக்ட் டாகுமெண்ட்ஸ் எல்லாம் தயாராக இருந்தது..
அவசரமாக ஷூ மாட்டிக்கொண்டு வாசலுக்கு ஓடினேன்..கார் டயர் பஞ்சர்..இடிந்து போனேன்..எப்போது உபேரில் புக் செய்து எப்போது போவது..
ஆபத்பாந்தவனாக முருகனே வந்தான்…ஆட்டோ ட்ரைவர் ரூபத்தில்..கார்த்திக்கை ஸ்கூலுக்கு விடுபவன், மாத வாடகை வாங்க சரியாக அப்போது வந்தான்..
“எல்லாம் நல்லதுக்குன்னு நினைச்சுக்குங்க ..இந்த அவசரத்துல காரை ஒட்டி ஆக்சிடென்ட் பண்ணகூடாதுன்னே கடவுளே கார் டயரை பஞ்சர் பண்ணிருக்கார்..”
அவனிடம் திரும்பி “முருகா, சாருக்கு அர்ஜண்டா சோழா ஹோட்டலுக்கு போகணும். 09 :30 மணிக்கு அங்கே இருந்தாகணும்.. சீக்கிரம் போய் விட்டுட்டு வா..”
மணி 09 :10 …
புயலென புறப்பட்டான்..வண்டியை ஸ்டார்ட் செய்தான்..
சரேலென ஏறினேன்…”ஒன்னும் பதட்டப்படவேண்டாம் எல்லாம் நல்லபடியா நடக்கும் முருகன் இருக்கான்..” என்று சொல்லிவிட்டு எதிர்பாரா வண்ணம் ஆட்டோக்குள் தலையை நுழைத்து ஒரு முத்தமிட்டாள்…ஆயிரம் யானை பலம் வந்தது..
“ஓகே பை” ஆட்டோ கிளம்பியது..புன்னகையுடன் நின்று டாடா சொன்னாள்..
சும்மா சொல்லக்கூடாது..மந்தவெளியிலிருந்த சந்து பொந்துகளிலெல்லாம் ஆட்டோ புகுந்து புறப்பட்டது..சிக்னல், ஒன்வே எதையும் லட்சியம் செய்யவில்லை..அடிச்சு பிடிச்சு 09 :25 சோழா வாசலில் இறக்கிவிட்டான்..
நூறு ரூபாயை அவன் கையில் அவசரமாக திணித்தேன் ..எதையோ பார்த்தவன் ..சார் கை கை என்பதற்குள் என் பொருட்களையெல்லாம் திரட்டிக்கொண்டு கான்பிரென்ஸ் ரூமை நோக்கி உள்ளே ஓடினேன்..
ரூம் வாசலில் என் மொத்த டீமும், VP ப்ராஜெக்ட்டும் டென்ஷனுடன் நிற்பது தெரிந்தது.. என்னை பார்த்ததும் தான் அவர்களுக்கு உயிரே வந்தது…என்ன ஏது என்று கேட்க அவகாசமில்லாததால்..அவசரமாக உள்ளே நுழைந்தோம்..
என் ஜூனியர் மணிகண்டன் சேவாக் ஸ்பீடில் லேப்டாப்பை உருவி வயர்களை சொருகி ப்ரொஜெக்டரை ஆன் செய்வதற்கும் வெள்ளைக்காரர்களை கூட்டிக்கொண்டு எங்கள் சேர்மன் வருவதற்கும் சரியாக இருந்தது..
அறிமுக படலம் ஆரம்பமாயிற்று..
அவர்கள் தரப்பில் மூவர்..சீனியர் VP மார்க் எரிக்சன், GM சேல்ஸ் ராபர்ட் கிரேய் மற்றும் IT VP ஏஞ்சலினா ஸ்மித் (36 வயது..பார்க்க 24)..சும்மா சொல்லக்கூடாது, பேரழகி..
நாங்கள் வரிசையாக சென்று கை கொடுத்தோம்..
“This is Siva. Your single point contact for this Project” அறிமுகப்படுத்தப்பட்டேன்…ஏஞ்சலினாவுடன் கை குலுக்கினேன்…
“Hi..How do you do Mr.Siva “என்று பேசிக்கொண்டே வந்தவள் சட்டென்று என் கையை பார்த்து ஹை டெசிபெல்லில் ஹா ஹா ஹா என சிரிக்க ஆரம்பித்தாள்..
எல்லாரும் அவளையும் என்னையும் மாறி மாறி பார்த்தார்கள்..அவளால் சிரிப்பை அடக்க முடியாமல் என் கையை சுட்டிக்காட்டி சிரித்த போது எல்லாரும் பார்த்துவிட்டு சேர்ந்து சிரிக்க ஆரம்பித்தார்கள்…
என்னவென்று திரும்பி பார்த்தபோது புரிந்துவிட்டது…”..இருக்கட்டும் வெச்சுக்கிறேன்..” பஞ்சவர்ணம் வெச்சுட்டாள்..
ஐந்து விரல் நகங்களுக்கு ரகத்துக்கு ஒன்றாக பச்சை, ரோஸ், நீலம், ஆரஞ்சு, பிங்க் என்று ஐந்து வித நெயில் பாலீஷை இரு கைகளிலும் அடித்திருப்பது தெரிந்தது.. பஞ்ச வர்ணம்..
என் மானம் விசா வாங்காமலேயே அமெரிக்கா வரை பறந்துகொண்டிருந்தது..
பிறகு மெதுவாக ஆசுவாசப்படுத்திக்கொண்டு ஏஞ்சலினா என்னிடம் பலமுறை மன்னிப்பு கேட்டுக்கொண்டாள்..
“இதை நீயே வைத்துக்கொண்டாயா” என்று கேட்டாள்
தயக்கத்துடன் “மனைவி” என்றதும், என்னை அணைத்துக்கொண்டு “what a lovely couple” என்று பாராட்டு பத்திரம் வாசித்தாள்.. மணிகண்டன் இந்த ஆலிங்கனத்தை ரகசியமாக போட்டோ எடுத்துவிட்டான்..
இந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திக்கொண்டு எங்கள் சேர்மன், என்னுடைய முந்தைய ப்ராஜெக்ட் வீர, தீர, பராக்கிரமங்களை அள்ளிவிட்டுக்கொண்டிருந்தார்..
பிறகு பிரசெண்டேஷன் சுபமாக முடிந்தது..தளர்ந்து சேரில் விழுந்தேன்..போனை எடுத்து பார்த்தேன்..
வாட்சப்பில் இரண்டு மெசேஜ்
Wife: How is Panjavarnam 😂🤣😘😍
இன்னொன்று என் ஜூனியர் மணி..
Mani: Siva, one special gift from the team என்று ஏஞ்சலினாஆலிங்கன போட்டோ அனுப்பியிருந்தான்..
ஆபத்பாந்தவன், அடுத்த அப்ரைசலில் 5 க்கு 8 கொடுக்க தீர்மானித்தேன் …
என் பஞ்சவர்ணத்துக்கு பதில் அனுப்பினேன்..
Me: She is Gorgeous (photo forward)
Wife: 👿😡

No comments:

Post a Comment