Thursday, 19 July 2018

பக்கி - ஜக்கி - ச்சக்கி

Image may contain: one or more people
இந்த மூவருடைய தற்போது எடுத்த புகைப்படம் :
 ---------------------------------------------------
பக்கியின் முழுபெயர் பக்கிரிசாமி. லொள்ளின் மொத்த உருவம். (அடுத்தவர்)வாழ்க்கையை சர்வசாதாரணமாக எடுத்துச் செல்லும் பேர்விழி. இவனுக்கு ஒரு நண்பன். அவன் பெயர் ச்சக்கி. முழுபெயர் சக்கரபாணி. சக்கரை அவ்வளவு லொள்ளு பிடித்தவன் கிடையாது ஆனால் கொஞ்சம் ஜொள்ளு. சில சமயங்களில் இவன் விட்ட ஜொள்ளை வைத்து அவர்கள் சொந்த ஊரில் பயிருக்கு நீர் பாய்ச்சுவதும் கூட உண்டு என்று ஜக்கி சொன்னான்.
பக்கி-ச்சக்கி, இவர்களின் நட்பு இந்த லொள்ளு ஜொள்ளைவிட மிகப்பெரியது. ஒட்டிப் பிறந்த இரட்டைகளை கூட பிரித்து பார்க்கலாம் ஆனால் இவர்களை பிரித்துப் பார்க்கவே முடியாது. அந்தளவிற்கு பாசக்காரர்கள் இருவரும். இவ்விருவரின் முக்கிய மற்றும் ஒரே வேலை மற்றவர்களை கலாய்ப்பதும், சதாய்ப்பதும்.
அவ்வப்போது பார்க்கும் மற்றொரு வேலை வம்பு பேசுவது, பேசுவது வம்பென்றாலும், அவர்கள் பேசும் விஷயங்கள் ஆண்டிப்பட்டியில் ஆரம்பித்து அண்டார்ட்டிகா வரை, இட்லியில் ஆரம்பித்து இடாலியன் பிஸ்ஸா வரை, நம்மூர் அரசியல் ஆரம்பித்து அமெரிக்கா செனெட் வரை என்று இந்த பூவுலகத்தின் நடந்த நடக்கும் (ஆடு, மாடு, மனிதன் மட்டுமல்ல) அனைத்தையும் பற்றி இருக்கும். பக்கியும் ச்சக்கியும் ஒரே நிறுவனத்தில் கம்ப்யூட்டர் என்ஜினியராக பணிபுரிகிறார்கள்.
இவர்கள் இருவருக்கும் பொதுவான நண்பன் ஜக்கி. ஜகதீஷ் என்ற முழுபெயரை மாற்றியதற்காக இன்றளவிலும் பக்கியிடமும் ச்சக்கியிடமும் அவ்வப்போது சண்டை போட்டுக்க்கொண்டிருக்கிறான். ஜக்கி சொந்தமாக ஒரு சிறிய நிறுவனம் வைத்துக் கொண்டு பல்வேறு மார்க்கெட்டிங் செய்து கொண்டிருக்கிறான். கல்யாணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தந்தை. மணல்கயிறு ஆசிரியர் ஜக்கியின் நண்பர் என்பதால், பக்கிக்கும் ச்சக்கிக்கும் தனக்கும் இடையே நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்களையும் சம்பாஷனைகளையும் பகிர்வது வழக்கம்.
அப்படிப்பட்ட பல நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, லொள்ளுத்தனமான, பொதுநல நோக்குடன் விவாதிக்கப்பட்ட சம்பவங்களையும் சம்பாஷனைகளையும் உங்களுக்காக தொடராக அளிக்கப் போவதில் மணல்கயிறு பெருமை கொள்கிறது. அப்படி ஒரு எண்ணம் நமக்கிருப்பதை ஜக்கி மூலம் பக்கி-ச்சக்கியிடம் தெரிவித்து அவர்களின் அனுமதியை கோறியபோது
பக்கியின் பதில்:
”ஏண்டா உன் ஃப்ரெண்டுக்கு வேற வேலை எதுவும் இல்லியா? நாங்க பேசறதே டைம்பாசு, இதவெச்சு அவரு டைம்பாஸ் பண்ணப்போறாராமா? பொழப்பப் பார்க்க சொல்லுடா. நானும் அவரோட மணல்கயிறை பார்த்தேன். விசு படம் எவ்வளவோ பரவாயில்லடா சாமி. மனுஷன் கத்தியும் கையுமா அலையறாப்ல கேப்பே விடமா அந்த ப்ளேட் போடறாரே. சீரியஸ் மேட்டரும் எழுதியிருக்காரு. நமக்கு ஒத்துவராது. இருந்தாலும் உனக்காக பர்மிசன் தர்றேன்..ஆனா வந்து ஓட்டுப் போடுன்னுட்டு வீட்டு வாசல்ல வந்து நிக்கக்கூடாதுன்னு கட் அண்ட் ரைட்டா சொல்லிடு”
இப்போ புரியுதா நம்ம பக்கி அண்ணனைப் பற்றி. கீழே ச்சக்கியின் கமெண்ட்டை பாருங்க:
“மச்சி, எனக்கு பிடிச்சிருக்குடா அவர் மணல்கயிறு. எனக்கு ஓ.கே. நம்மை ஒரு ஜந்துவா பார்க்கற இந்த பாழாப்போன அழகான பொண்ணுங்களுக்கு மத்தியில நாங்க பேசறதையெல்லாம் வெச்சு பதிவு போடறத பாராட்டியே தீரணும். ஆனா அவர்கிட்ட ஒரு ரிக்வெஸ்ட் என் சார்பில் குடு. நம்ம நமீதாவை பத்தி ஒரு பதிவு புகைப்படங்களோட போடச்சொல்லு. அடிக்கடி ”அஞ்சரைக்குள்ள வண்டி” மாதிரி ஏதாவது கசமுசா கதைகளை எழுதச் சொல்லுடா”
இந்த ஜொள்ளு போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா? பக்கி எவ்வளவோ பரவாயில்லைதானே?
ஜக்கிய லேசா நினைச்சிக்காதிங்க. அவன் நக்கல் யாருக்கும் வராதுங்கோவ்வ்வ்வ். என்ன, வெளிப்படையா சொல்லாம மறைமுகமா வார்த்தையில் விளையாடுவான். இந்த வஞ்சப் புகழ்ச்சி அணியை ஒருத்தன் சிறப்பா கையாள்றான்னா அது நம்ம ஜக்கிதான். நான் எப்பக் கேட்டாலும் “போன வாரம் நீ போட்ட பதிவு சூப்பரா இருந்துச்சு. படிச்சு சிரிச்சு வயிறு வலிதான் மிச்சம்” என்பான். நான் போன வாரம் போட்டது டோட்டல் சீரியஸ் பதிவுன்னு அவன்கிட்ட கேட்கிறதெல்லாம் வேஸ்ட். கேட்டால், “ஆமாம், கரெக்ட்டு. அது போன வாரதுக்கு போன வாரம் இல்லை” என்று மறுபடியும் ஒரு வ.பு. சரி பொய் சொன்னாலும் பாராட்டுகிறானே என்று விட்டுவிடுவேன். அவ்வப்போது உண்மையாகவே பதிவுகளை படித்து என்னிடம் கலந்துரையாடுவான். கலந்துரையாடலின் போது கலந்தடித்துவிட்டு பேசுவதால் அவன் சொல்வதுதான் புரியாது.
இவர்களின் உரையாடல்களை பதிவு செய்வதற்கு பல காரணங்களில் முக்கியமான ஒன்று உரையாடும் விஷயத்தில் தங்களையே அதில் வைத்துப் பார்ப்பதும், பாரபட்சமின்றி நடுநிலையாக இருப்பதும்,
இது போன்ற நக்கல், நையாண்டி, கேலி, கிண்டல், பொய் பேர்விழிகள் என்றாலும், இவர்கள் மூவருமே மனதளவில் நல்லவர்களே. அந்த ஒரே காரணத்திற்காக சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தனாகவே மாறி அவர்களின் உரையாடல்களை உங்களுக்காக தொடராக தர இருக்கிறேன். சிரிக்கவும் சிந்திக்கவும் இந்தத் தொடர். ஆட்டோ அனுப்பவோ அல்லது உருட்டுக்கட்டை பார்சல் அனுப்ப அல்ல. இதை நீங்கள் படித்து ரசித்து குறை நிறைகளை சுட்டிக்காட்டி, எனக்கு ஊக்கம் அளிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
பக்கி, ச்சக்கி, ஜக்கி மூவரும் கூடும் இடம் பக்கியின் வீட்டு வாசலில்தான். இதுதவிர பக்கியும் ச்சக்கியும் ஒரே நிறுவனத்தில் வேலைப்பார்ப்பதால், இருவரும் போவதும் வருவதும் ஒரே பஸ்ஸில்.
தினமும் இரவுகளில் சாப்பிட்டு முடித்து அரைட்ட அடிக்கவில்லையென்றால் மூவருக்குமே அன்று தூக்கம் வராது. அதுதவிர சனி ஞாயிறுகளில் அரட்டை நெடுநேரம் நீடிக்கும். பட்டிமனறத்தில் பேச்சை முடித்துக்கொள்ள அடிக்கப்படும் மணிகூட மூன்று முறைதான்.இவர்கள் வீட்டிலிருந்து குறைந்தது 8ஆவது அலைபேசி அழைப்புக்குத்தான் அவரவர் வீட்டுக்கு நகர்வார்கள்.பக்கிக்கு நேரடி அழைப்புகள்.
சில சமயம் பக்கியின் அப்பாவிடம் ச்சக்கியும் ஜக்கியும் சிக்கி சின்னாபின்னமாகிப் போ்வது வழக்கம். நம்ம நண்பனோட அப்பாதானே என்று ச்சக்கியின் இந்தக்காதில் வாங்கி ஜக்கியின் அந்தக்காதில் விட்டுவிடுவது இவர்களின் பழக்கம்.
இனி வரும் காலங்களில் சரித்திர புகழ்பெற்ற, கல்வெட்டுக்களில் பதிவு செய்யப்பட வேண்டிய இவர்களுடைய சம்பாஷனைகளை நாம் நம் மணல்கயிறில் பதிவு செய்வோம்.

No comments:

Post a Comment