Tuesday, 17 July 2018

மகாபாரதத்தின் 18 பர்வங்கள்

மகாபாரதத்தின் 18 பர்வங்கள் பின்வருமாறு:
1. ஆதி பர்வம்: 19 துணைப் பர்வங்களைக் (1-19) கொண்டது. நைமிசக் காட்டில் முனிவர்களுக்கு சௌதி மகாபாரதத்தைச் சொல்லியது பற்றியும், வைசம்பாயனரால் முன்னர் இக்கதை சனமேசயனுக்குச் சொல்லப்பட்டது பற்றியும் இப் பர்வத்தில் விளக்கப்படுகிறது. பரத இனத்தின் வரலாறு பற்றி விளக்கமாகக் கூறும் இப்பர்வம், பிருகு இனத்தின் வரலாற்றையும் கூறுகிறது. குரு இளவரசர்களின் பிறப்பு, அவர்களது இளமைக்காலம் என்பனவும் இப் பர்வத்தில் எடுத்தாளப்படுகின்றன.
2. சபா பர்வம்: 20 – 28 வரையான 9 துணைப் பர்வங்கள் இதில் உள்ளன. இந்திரப்பிரஸ்தத்தில் மயன் மாளிகை அமைத்தல், அரண்மனை வாழ்க்கை, தருமன் இராஜசூய யாகம் செய்தல் என்பன இப் பர்வத்தில் சொல்லப்படுகின்றன. அத்துடன், தருமன் சூதுவிளையாட்டில் ஈடுபட்டு இறுதியில் நாடிழந்து காட்டில் வாழச் செல்வதும் இப் பர்வத்தில் அடங்குகின்றன.
3. ஆரண்யக பர்வம்: 29 – 44 வரையான 16 துணைப் பர்வங்கள் இதில் அடங்குகின்றன. இது பாண்டவர்களின் 12 ஆண்டுக்காலக் காட்டு வாழ்கை பற்றிய விபரங்களைத் தருகிறது.
4. விராட பர்வம்: 45 – 48 வரையான 4 துணைப் பர்வங்களைக் கொண்ட இப் பர்வம், பாண்டவர்கள், மறைந்து விராட நாட்டில் வாழ்ந்த ஓராண்டு கால நிகழ்வுகளைக் கூறுவது.
5. உத்யோக பர்வம்: 49 – 59 வரையான 11 துணைப் பர்வங்களைக் கொண்டது இது. கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையே அமைதி ஏற்படுத்த எடுத்த முயற்சிகளையும், அம்முயற்சிகள் தோல்வியுற்ற பின்னர் இடம்பெற்ற போருக்கான நடவடிக்கைகள் பற்றியும் எடுத்தாள்கிறது.
6. பீஷ்ம பர்வம்: இது 60 – 64 வரையான 5 துணைப் பர்வங்களைக் கொண்டுள்ளது. பீஷ்மர் கௌரவர்களின் தளபதியாக இருந்து நடத்திய போரின் முதற்பகுதியையும், அவர் அம்புப் படுக்கையில் விழுவதையும் இது விவரிக்கிறது.
7. துரோண பர்வம்: 65 – 72 வரையான 8 துணைப் பர்வங்களில், துரோணரின் தலைமையில் போர் தொடர்வதை இப் பர்வம் விவரிக்கின்றது. போரைப் பொறுத்தவரை இதுவே முக்கியமான பர்வமாகும். இரு பக்கங்களையும் சேர்ந்த பெரிய வீரர்கள் பலர் இப் பர்வத்தின் முடிவில் இறந்துவிடுகின்றனர்.
8. கர்ண பர்வம்: 73 ஆம் துணைப் பர்வத்தை மட்டும் கொண்ட இப் பர்வத்தில் கர்ணனைத் தளபதியாகக் கொண்டு போர் தொடர்வது விவரிக்கப்படுகின்றது.
9. சல்லிய பர்வம்: 74 – 77 வரையான 4 துணைப் பர்வங்களைக் கொண்டுள்ளது. சல்லியனைத் தளபதியாகக் கொண்டு இடம் பெற்ற இறுதிநாள் போர் இப் பர்வத்தில் கூறப்படுகின்றது. இதில் சரஸ்வதி நதிக்கரையில் பலராமனின் யாத்திரையையும், போரில் துரியோதனனுக்கும், வீமனுக்கும் இடையில் நடைபெற்ற இறுதிப் போரும் விளக்கப்படுகின்றது. வீமன் தனது கதாயுதத்தால் துரியோதனனின் தொடையில் அடித்து அவனைக் கொன்றான்.
10. சௌப்திக பர்வம்: 78 – 80 வரையான 3 துணைப் பர்வங்களை இது அடக்குகிறது. அசுவத்தாமனும், கிருபனும், கிருதவர்மனும், போரில் எஞ்சிய பாண்டவப் படைகளில் பலரை அவர்கள் தூக்கத்தில் இருந்தபோது கொன்றது பற்றி இப் பர்வத்தில் கூறப்பட்டுள்ளது. பாண்டவர் பக்கத்தில் எழுவரும், கௌரவர் பக்கத்தில் மூவரும் மட்டுமே போரின் இறுதியில் எஞ்சினர்.
11. ஸ்திரீ பர்வம்: 81 – 85 வரையான 5 துணைப் பர்வங்கள் இதில் அடங்குகின்றன. இப் பர்வத்தில் காந்தாரி, குந்தி முதலிய குரு மற்றும் பாண்டவர் பக்கங்களைச் சேர்ந்த பெண்கள் துயரப் படுவது கூறப்படுகின்றது.
12. சாந்தி பர்வம்: 86 – 88 வரையான மூன்று துணைப் பர்வங்களை அடக்கியது இப் பர்வம். அஸ்தினாபுரத்தின் அரசனாகத் தருமருக்கு முடிசூட்டுவதும், புதிய அரசனுக்கு சமூகம், பொருளியல், அரசியல் ஆகியவை தொடர்பில் பீஷ்மர் வழங்கிய அறிவுரைகளும் இப் பர்வத்தில் அடங்கியுள்ளன. மகாபாரதத்தின் மிகவும் நீளமான பர்வம் இது.
13. அனுசாசன பர்வம்: 89, 90 ஆகிய இரண்டு துணைப் பர்வங்களை அடக்கியது. பீஷ்மரின் இறுதி அறிவுரைகள்.
14. அசுவமேதிக பர்வம்: தருமர் அசுவமேத யாகம் செய்வதையும், அருச்சுனன் உலகைக் கைப்பற்றுவதையும் இது உள்ளடக்குகிறது. கண்ணனால் அருச்சுனனுக்குச் சொல்லப்பட்ட கீதையும் இதில் அடங்குகிறது.
15. ஆஸ்ரமவாசிக பர்வம்: 93 – 95 வரையான 3 துணைப் பர்வங்கள் இதில் உள்ளன. திருதராட்டிரன், காந்தாரி, குந்தி ஆகியோர் இமயமலையில் ஆச்சிரமத்தில் வாழ்ந்தபோது காட்டுத் தீக்கு இரையானது இப் பர்வத்தில் கூறப்படுகின்றது.
16. மௌசால பர்வம் : 96 ஆவது துணைப் பர்வம். யாதவர்கள் தங்களுக்குள் நிகழ்த்திய சண்டையில் அவர்கள் அழிந்துபோனதை இப் பர்வம் கூறுகிறது.
17. மகாபிரஸ்தானிக பர்வம்: 97 ஆவது பர்வம்: தருமரும் அவரது உடன்பிறந்தோரும் நாடுமுழுதும் பயணம் செய்து இறுதியில் இமயமலைக்குச் சென்றது, அங்கே தருமர் தவிர்ந்த ஏனையோர் இறந்து வீழ்வது ஆகிய நிகழ்ச்சிகள் இப் பர்வத்தில் இடம்பெறுகின்றன.
18. சுவர்க்காரோகண பர்வம்: 98 ஆவது துணைப் பர்வம். தருமரின் இறுதிப் பரீட்சையும், பாண்டவர்கள் சுவர்க்கம் செல்வதும் இதில் சொல்லப்படுகின்றன.
99, 100 ஆகிய துணைப் பர்வங்களை உள்ளடக்கிய அரிவம்ச பர்வம் எனப்படும் பர்வம் முற் கூறிய 18 பர்வங்களுள் அடங்குவதில்லை. இதில் முன் பர்வங்களில் கூறப்படாத, கண்ணனின் வாழ்க்கை நிகழ்வுகள் கூறப்படுகின்றன.

No comments:

Post a Comment