Saturday 21 July 2018

கிருஷ்ண பக்தி

அக்பருடைய ஆட்சி காலம். ராஜபுத்திரர்கள் எல்லோரும் அக்பருக்கு அடிபணிந்து விட்டனர். அடிபணியாது சிலர் கப்பம் கட்ட மறுத்து தனியாக ஆண்டு வந்தனர். அவர்கள் மிகவும் பராக்கிரமம் மிக்கவர்களாக இருந்தனர். அவர் களுள் மார்வாடிகளான, ராஜஸ்தானைச் சேர்ந்த சிலர் இருந்தனர். கும்பாஜி ரானா என்று ஒருவன் அவன்கீழ் அநேக ஜமீன்தார்கள் இருந்தனர். பூதாராவ் என்பவருக்கு மீராராவ் என்று ஒரு பெண் இருந்தாள். அவள் சிறுமியாக இருந்தபோதே கிருஷ்ண பக்தி நிறைந்தவளாக இருந்தாள். பிருந்தாவனத்திலிருந்து பல சாதுக்கள் பூதாராவுடைய அரண்மனைக்கு வந்தனர். பஜனைகள் நடத்தினார்கள். அவர்களிடம் இருந்த கோவர்த்தன கிரிதாரி கண்ணனை மீரா தனக்கு வேண்டுமென்று அடம்பிடித்தாள். அவர் கடவுள், அவரைத் தரக்கூடாது என்று தந்தை கூறினார். பஜனை முடிந்ததும் சாதுக்கள் இரவு கண்ணனுக்கு டோலோற்சவம் செய்து அவனை தூங்கச் செய்துவிட்டு தாங்களும் படுக்கச் சென்றுவிட்டனர்.
காலையில் திருப்பள்ளி எழுச்சி செய்து பார்த்தால் கண்ணனைக் காணவில்லை. அதிர்ச்சி அடைந்து தேடினார்கள். தோட்டத்தில் மீரா தன் தோழிகளுடன் அந்த கண்ணனை, வைத்துக்கொண்டு விளையாடிக் கொண்டிருந்தாள். கண்ணனுக்கு மிக அழகாக அலங்காரம் செய்திருந்தாள். மீராவின் கையிலிருந்த கண்ணனை பிடுங்கியதும் அப்படியே மயங்கி கீழே விழுந்தாள். பிருந்தா வனத்திலிருந்து வந்தவர்கள் குழந்தையின் பக்தியைக் கண்டு கோவர்த்தன கண்ணனை அவளிடமே கொடுத்து திரும்பிச் சென்றுவிட்டனர். ஒருநாள் மீராவின் தந்தை, ‘‘மீரா உன்னுடைய தோழிகளுக்கெல்லாம் கல்யாணம் ஆகிவிட்டது. உனக்கு கல்யாணம் செய்வது என்னுடைய கடமை இல்லையா’’ என்றார். ‘‘எனக்குத்தான் கிரிதாரியுடன் கல்யாணம் ஆகிவிட்டதே’’ என்றாள் அவள். ‘‘அவர் பகவான் அம்மா. அவரை நாம் ஆராதிக்கத்தான் முடியும், திருமணம் செய்துகொள்ள முடியாது’’ என்றார்.
இவளுக்கு தகுந்த கிருஷ்ண பக்தியுள்ள வரன் கிடைக்க வேண்டுமே என்று கவலைப்பட்டார். மீராவின் அழகை கேள்விப்பட்ட ரானா கும்பாஜி அவளைத் தான் மணம் செய்துகொள்ளுவதாக சொல்லி அனுப்பினார். அவனுக்கு ஏற்கனவே பல மனைவிகள் இருந்தனர். ஆனாலும், அவனும் கிருஷ்ண பக்தி உள்ளவன் ஆதலாலும் அவனிடம் வேலை செய்வதாலும் பூதாராவ் ஒப்புக்கொண்டு விட்டார். மீராவிடம் உனக்கு கல்யாணம் நிச்சயித்து விட்டேன் என்று தந்தை சொன்னதும் அவள் தன் கண்ணனை தூக்கிக்கொண்டு தன் படுக்கை அறைக்கு வந்த கண்ணனை கட்டிக்கொண்டு அழ ஆரம்பித்தாள். என் மனப்பீடத்தில் உன்னை அமர்த்தியுள்ள நான் மற்றொருவனை எவ்வாறு அங்கு அமர்த்துவேன் என்று அழுதாள். இரவு பகலாக தூக்கம் இல்லை, சாப்பாடு இல்லை. நாளுக்கு நாள் உருகிக்கொண்டிருந்தாள். ஒருநாள் அவளுடைய கனவில் யமுனை கரையில் கண்ணன் தோன்றினான்.
மீராவை அணைத்துக்கொண்டு, நீ என்னுடையவள், சிறிதுகாலம் அவர்கள் சொற்படி நட என்று ஆறுதல் கூறினான். மீரா தந்தை சொற்படி ரானாவை மணம் செய்துகொண்டாள். அவனுடன் செல்லும் பொழுது தன்னுடைய கிரிதாரி கண்ணனையும் எடுத்துச் சென்றாள். வேறு நகைகள், புடவைகள் பற்றி அவள் கலைப்படவில்லை. ரானா தன்னுடைய மீராவிடம் மிக அன்பாக இருந்தான். அவன் வரும்போதெல்லாம் மீரா பாகவதம் படித்துக் கொண்டிருப்பாள். கண்ணனுக்கு சேவை செய்து கொண்டிருப்பாள். மனம் உருகி வீணையில் பாடிக் கொண்டிருப்பாள். இங்கு வந்தாலே ரானாவும் தன்னுடைய சித்தம் சுத்தி அடைவதாக உணர்ந்தான். மீராவை சகோதரியாகவும் தாயாகவுமே உணர்ந்தான். ஒருநாள் ரானா மீராவிடம், ‘‘மீரா, இதுவரை நீ என்னிடம் உனக்கு வேண்டும் என்று எதுவும் கேட்டதில்லை. நான் எதைக் கொடுத்தாலும் சந்தோஷமாக ஏற்றுக் கொள்கிறாய். உனக்காக ஏதாவது ஒன்றை விரும்பிக்கேள் என்று சொன்னான்.
அதற்கு மீரா பிருந்தாவனம் போகவேண்டுமென்று எனக்கு சிறுவயதிலிருந்தே ஆசை. அதை முடிந்தால் நிறைவேற்றுங்கள் என்று கூறினாள். ரானா சந்தோஷத்துடன் அரசை நிர்வகிக்கும் பொறுப்பை தன் தம்பியான ஜயமனியிடம் ஒப்படைத்தார். மீராவுடன் தானும் பிருந்தாவனத்துக்கு புறப்பட்டான். யானைப்படை, குதிரைப்படைகளுடன் சாப்பாட்டுக்கு வேண்டிய ஏராளமான சாதனங்களுடன் புறப்பட்டனர். வழியில் ஏராளமான சாதுக்கள் பஜனையில் கலந்துகொள்ள பெரிய கூட்டமாக பஜனை பாடிக்கொண்டே நடந்து சென்றனர். பிருந்தாவனத்தில் சிலநாள் தங்கிவிட்டு பிறகு தன் நாட்டிற்கு திரும்பினார்கள். ரானாவினுடைய பாடல்கள் பிரபலமாகி விட்டது. எல்லாரும் அதே பக்தியுடன் பாடினார்கள். அக்பருடைய அவையில் ‘தான்சேன் மீராவின் பாடலை பாடினான். இந்த சாஹித்தியம் யாருடையது? அவர் குரலிலேயே இதைக் கேட்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது என்றார் அக்பர்.
அது ஒருக்காலும் நடக்காது. உங்களுடைய பரம விரோதியான ரானாவின் பட்டமகிஷியான மீராவின் பாடல்கள் இவை, என்று கூறினான். எப்படியும் கேட்டே ஆகவேண்டும் என்ற அக்பரிடம், அதற்கு ஒரே வழி சாது வேடத்தில் செல்ல வேண்டும். இருவரும் புறப்பட்டனர். அங்கு ஒரு காட்டில் தங்களுடைய அரச உடைகளை மாற்றி சாதுக்களைப்போல் வேடம் அணிந்தனர். துளியும் பயப்படாமல் அரண்மனையில் காவலாளிகளை தாண்டி கோயிலுக்கு வந்தனர். அங்கு மீரா ஆடிப் பாடி பஜனை செய்து கொண்டிருந்தாள். அங்கிருந்த கூட்டத்துடன் இருவரும் அமர்ந்தனர். கலாரசிகனான அக்பர் தன்னை மறந்து அடிக்கடி ஆஹா... ஆஹா... என்று ரசித்தார். பஜனை முடிந்ததும் எல்லோரும் சென்று விட்டனர். இவர்கள் இருவர் மட்டும் இருந்ததும், மீரா அச்சத்துடன் இவர்களை வணங்கினாள். உங்களுடைய பாட்டு வீணையுடன் இணைந்து மிக ரசிக்கத்தக்கதாக இருந்தது, அதற்கு ஏதாவது வெகுமதி கொடுக்க விரும்புகிறேன்.
தயவுசெய்து இதைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறி ஒரு நவரத்ன மாலையை கொடுத்தார், அக்பர். ஆனால், மீரா நான் யாரிடமிருந்தும் வெகுமதி பெற்றுக்கொள்ள மாட்டேன் என்று கூறியதும், இதை கிரிதாரிக்கு போடுங்களேன் என்றான் அக்பர். அதற்கும் மீரா, ‘‘இது அரண்மனைக்குச் சொந்தமான கோயில். வெளிமனிதர்கள் கொடுப்பதை ஏற்றுக்கொள்ள மாட்டோம், என்றாள். அம்மா! ‘‘நாங்கள் பிருந்தாவனத்திலிருந்து வருகிறோம். இது பிருந்தாவனப் பிரசாதம் என்று கூறியதும் மீரா மிக சந்தோஷத்துடன் அதை பெற்றுக்கொண்டு கிரிதாரியின் கழுத்தில் போட்டாள். தான்சேனும் அக்பரும் திரும்பினார்கள். வழியில் மனித நடமாட்டத்தையும் குதிரைகள் நடமாட்டத்தையும் பார்த்ததும் மிக விரைந்து சென்றனர். இனி பயமில்லை என்ற இடத்துக்கு வந்ததும் இருவரும் தங்கள் உடைகளை மாற்றிக்கொண்டு, குதிரையில் ஏறிச்சென்று விட்டனர். இத்தனையும் மறைந்து பார்த்துக் கொண்டிருந்தான் ஜெயமன்.
வேகமாக ரானாவிடத்தில் வந்தான். அன்று நான் சொன்னதை நீ நம்பவில்லை. அக்பர் வந்து உன் ராணியிடம் ரத்தின மாலை கொடுத்துவிட்டு சென்றிருக்கிறான். நீ என்னை நம்பவில்லை. அதனால் நான் நாட்டை விட்டுப் போகிறேன். உன்னையும், உன் நாட்டையும் காப்பாற்றிக்கொள் என்று சொல்லித் திரும்பி விட்டான். இப்பவும் ரானாவுக்கு மீரா மீது நம்பிக்கை இருந்தது. ஆனாலும், கோயிலுக்கு வந்து மீராவிடம் அக்பர் கொடுத்த மாலை எங்கே என்றான். கிரிதாரி கழுத்தில் மாலையை பார்த்ததும் கோபத்துடன் மீராவை சிறையில் வைத்தான். மீராவுக்கு காரணம் ஒன்றுமே புரியவில்லை. மீராவிடம் பக்தியுள்ள மக்கள் அவளை விடுவிக்க வேண்டுமென்று ரானாவிடம் கேட்டனர். அரச குருவும், ‘மீரா கண்ணன் பக்தை’, அவள் தவறு செய்ய மாட்டாள். அவளை விடுவிக்க வேண்டும் என்றார். இது எங்கள் குடும்ப விஷயம். நீங்கள் தலையிடாதீர்கள் என்று ரானா கூறியதும், குருவுக்கு கோபம் வந்தது.
உன்னை வளர்த்து அரசன் ஆக்கியதே நான்தான். இப்பொழுது இதைச் சொல்ல எனக்கு உரிமை இல்லையா என்று கோபித்துக் கொண்டு அவர் சென்று விட்டார். ரானாவுக்கு போர் புரிய உதவுபவன் ஜெயமன், அரசகுரு. இருவரும் விட்டுச் சென்று விட்டனர். மக்களும் மீராவை விடுவிக்க வேண்டுமென்று கேட்கிறார்கள். அதனால் மீராவை கொன்றுவிட நிச்சயித்தான் ரானா. மீரா சிறையில் இருந்தபோதிலும் என் கிரிதாரியை என்னிடம் கொடுத்துவிட வேண்டும் என்று மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தாள். ஒரு கூடையில் பாம்பை வைத்து சாளகிராமம் இருப்பதாக அனுப்பினான் ரானா. மீரா உண்மை என்று நினைத்து பக்தியுடன் கூடையை திறந்தாள். சாளகிராமம்தான் இருந்தது. பகவானுக்கு அபிஷேகம் செய்ய பால் என்று சொல்லி கொடிய விஷம் கலந்த பாலை அனுப்பினான். அந்த பாலும் மீராவை ஒன்றும் செய்யவில்லை. காட்டில் தனியான ஒரு வீட்டில் மீராவை வைத்து வாசல் கதவை பூட்டிக்கொண்டு வந்துவிட்டான் ரானா.
மீராவுக்கு கண்ணனுடைய நாமமே உணவாக இருந்தது. அவள் கண்களை மூடிக்கொண்டு வீணையை மீட்டிக்கொண்டு இரவு பகலாக பாடிக்கொண்டிருந்தாள்.
ஒருநாள் சில சாதுக்கள் பஜனை செய்துகொண்டே அந்த வழியாக பிருந்தாவனத்திற்கு சென்றார்கள். இரவு வெகு நேரம் ஆகிவிட்டதால், மரத்தடியில் கொஞ்ச நேரம் ஓய்வு எடுத்துக்கொண்டு புறப்படலாம் என்று அமர்ந்தனர். அப்பொழுது எங்கிருந்தோ ஒரு இனிமையான பாட்டு காதில் விழுந்தது. அந்த பாட்டினால் கவரப்பட்டு அந்த திசை நோக்கி நடந்தனர். ஒரு வீடு பூட்டி இருப்பதையும், அதற்குள் இருந்து பாடல் வருவதை கேட்டு பூட்டை உடைத்தனர். அங்கு மீரா பாடுவதை கேட்டதும் எல்லோரும் அமர்ந்து பாட்டை ரசித்தனர். நாங்கள் எல்லோரும் பிருந்தாவனம் போகிறோம். நீங்களும் எங்களுடன் வாருங்கள் என்று மீராவிடம் கூறினார்கள்.
பகவான் என்னை ஒருவருடன் சேர்த்து வைத்திருக்கிறான், அந்த ஒருவருடைய உத்தரவு இல்லாமல் நான் எங்கும் வரக்கூடாது என்று மீரா கூறியதும் அவளை அங்கு தனியாக விட்டுப்போக மனமில்லாமல் எல்லோரும் அங்கேயே இருந்து நாம சங்கீர்த் தனம் செய்தனர். ஒற்றர்கள் மூலம் இதைக்கேள்விப்பட்ட ரானா மீராவை அரண்மனைக்கு அழைத்துச் சென்றான். அவளை பஜனைக்கு இடம் கொடுக்காமல் கேளிக்கைகளுக்குகூட அழைத்துச் செல்லத் தொடங்கினான் ரானா. மீரா அதற்கும் மறுப்பு கூறாமல் வருவாள். விஜயதசமி அன்று ரானா, மீராவை வரும்படி கூறிவிட்டு தான் சபைக்கு முன்னால் சென்றான். தன்னை அலங்கரித்துக் கொண்டாள் மீரா. அப்பொழுது அவளுக்கு தான் ஒரு கோபிகை கண்ணனை பார்க்கப் போகிறோம் என்ற எண்ணம் தோன்றிவிட்டது. அவள் காலின் சலங்கை ஒலி கண்ணனின் ஒலியாக அவளுக்கு தோன்றியது. தன்னை அறியாமல் கோயிலுக்கு வந்துவிட்டாள் அவள். அங்கு வந்து பாடத்தொடங்கியதும் சாதுக்களும் கூடிவிட்டனர்.
மீரா வராததால் கோபம் அடைந்த ரானா, அவள் கோயிலுக்கு சென்று இருக்கிறாள் என்று கேட்டதும் ஆத்திரம் அடைந்தான். கோபத்தில் தன் நிலை மறந்தான். கோயிலை இடிக்கும்படி உத்தரவிட்டான். முகமதிய அரசர்கள் கோயிலை இடிக்கிறார்களே என்று அவர்களுக்கு எதிராக வாளை எடுத்த ரானாவே இப்பொழுது ஆத்திரத்தில் கோயிலை தகர்க்க உத்தரவிட்டான். சாதுக்கள் எல்லாம் ஓடிவிட்டனர். எப்படியோ உயிர் தப்பிய மீரா தன்னுடைய கிரிதாரியை மட்டும் எடுத்துக் கொண்டு புறப்பட்டு விட்டாள். ரானாவை பொறுத்தவரை நான் இறந்துவிட்டேன். இப்பொழுது இருப்பது புது மீரா. அதனால் நான் ரானாவின் மனைவி இல்லை. அவன் உத்தரவை கேட்க வேண்டிய தேவையும் இல்லை என்று நடக்கத் தொடங்கினாள். திசை தெரியாமல் வந்துகொண்டிருந்த மீரா யமுனா நதியில் மயங்கி விழுந்தாள்.
யமுனையின் அலைகள் அவளை பிருந்தாவனத்தில் சேர்த்தது. யாரோ பெண் ஒதுங்கி இருக்கிறாளே என்று அவளை எடுத்து கரையில் போட்ட சாதுக்களில் ஒருவர் இது பார்த்த முகமாக இருக்கிறதே என்று கூறினார். அவள் தலைப்பில் கட்டிக்கொண்டிருந்த கிரிதாரி கண்ணனை எடுத்தும் இவள் பூதாராவினுடைய மகள், மீரா என்று தெரிந்துகொண்டார். இவள் பிரேம சமாதியில் இருக்கிறாள். எல்லோருமாக சேர்ந்து கண்ணன் திருநாமத்தை பாடினால் எழுந்துவிடுவாள் என்று பஜனை செய்யத் தொடங்கினார்கள். கண் விழித்த மீரா தான் பிருந்தாவனம் வந்து சேர்ந்துவிட்டதை அறிந்து சந்தோஷம் அடைந்தாள். தன்னுடைய நகைகளை எல்லாம் அங்கு கோயிலில் உள்ள கண்ணனுக்கு சமர்ப்பித்தாள். தன்னுடைய கிரிதர கோபாலனையும் கோயிலில் எழுந்தருளச் செய்தாள்.
ஒருநாள் யாத்ரீகர்களாக வந்த சில சாதுக்கள் துவாரகையில் பகவான் ஸ்ரீகிருஷ்ணன் யாதவர்கள் எல்லோரையும் ஒருவருக்கு ஒருவர் அழித்துக் கொள்ளச் செய்து தேவ லோகத்துக்கு அனுப்பினான். துவாரகையையும் சமுத்திர நீரினில் மூழ்கடித்து தன்னுலகிற்கு திரும்பினான். துவாரகை கோயில் மட்டும் அழியவில்லை. அந்த கோயில் பூட்டு இன்றுவரை திறக்கப்படவே இல்லை. மீரா வந்து பாடினால் அது திறந்துகொள்ளும் என்று சொன்னார்கள். அதனால் நீங்கள் வரவேண்டும் என்று மீராவை பிரார்த்தித்தனர். மீரா அவர்களுடன் துவாரகைக்கு வந்தாள். அவள் பாடியதும் துவாரகாதீசனின் கதவு தானாகவே திறந்தது. ப்ரபோ! என்று அலறிக்கொண்டு மீரா உள்ளே ஓடினாள். பகவானுடன் ஐக்கியம் ஆகிவிட்டாள். எல்லாரும் இந்தக் காட்சியை ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.
மீரா கோவர்த்தன கிரிதாரி கண்ணனை தவிர வேறு யாருக்கும் தன் மனதில் இடம் கொடுக்கவில்லை. அவளுடைய பாடல்களில் கிரிதாரி என்றே முத்திரை இருக்கும்.

No comments:

Post a Comment