Wednesday, 6 June 2018

சேவல் எங்கே ?

சே
வல் தனக்கும் தன் குடும்பத்துக்கும் இரை தேடிக் கிளம்பியது. அழகான குஞ்சுகளை எழுப்பி, தானியங்களைச் சாப்பிடக் கொடுத்தது கோழி. கதை சொன்னது. விளையாடக் கற்றுக் கொடுத்தது. மாலை நேரம் சேவலுக்காகவும் உணவுக்காகவும் கோழியும் குஞ்சுகளும் காத்திருந்தன.
நேரம் கடந்தது. சேவலைக் காணவில்லை. குஞ்சுகளை அழைத்துக்கொண்டு, சேவலைத் தேடிச் சென்றது கோழி. நீண்ட நேரத் தேடலுக்குப் பிறகு, சேவலை நரி தூக்கிச் சென்ற விஷயம் தெரிந்தது. இதை அந்தக் கோழியால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.
“நான் நம்ப மாட்டேன். என் கணவர் உயிருடன்தான் இருப்பார். எப்படியாவது அவரை மீண்டும் கொண்டு வந்துவிடுவேன்” என்று குஞ்சுகளுக்கு ஆறுதல் கூறியது கோழி.
சேவலைத் தேடிக் குஞ்சுகளுடன் கிளம்பியது கோழி. சரியாகச் சாப்பிடாமல், ஓய்வெடுக்காமல் வருத்தத்துடன் அலைந்த கோழியையும் குஞ்சுகளையும் கண்ட தேவதைக்குக் கவலையாகிவிட்டது. உடனே கோழிக்கு எதிரில் தோன்றியது.
“கோழியே, ஏன் நீயும் உன் குஞ்சுகளும் இவ்வளவு மெலிந்து இருக்கிறீர்கள்?”
“என் கணவரைத் தேடுவதால், நாங்கள் சரியாக உண்பதில்லை, உறங்குவதில்லை. அவர் இருந்திருந்தால் எங்களுக்கு நல்ல உணவு கிடைத்திருக்கும்” என்றது கோழி.
“உன் கணவர் இருக்கும் இடத்தை நான் சொல்கிறேன். பதிலுக்கு நீ ஒரு விஷயம் செய்ய வேண்டும்.”
“கணவர் கிடைத்தால் போதும். என்ன வேண்டுமானாலும் செய்கிறோம்” என்று முகம் மலர்ந்தது கோழி.
”நான் பறந்து செல்லும்போது ஒரு மந்திர மோதிரம் கீழே விழுந்துவிட்டது. அதைத் தேடித் தந்தால், உன் கணவர் இருக்கும் இடத்தைச் சொல்கிறேன்” என்றது தேவதை.
கோழியும் குஞ்சுகளும் மோதிரத்தைத் தேடித் தருவதாக ஒப்புக்கொண்டன. செல்லும் இடங்களில் எல்லாம் மண்ணை நகங்களாலும் அலகாலும் கிளறி கிளறிப் பார்த்தன. மோதிரம் கிடைக்கவில்லை. ஆனால் பூச்சி, புழுக்கள் நிறைய கிடைத்தன. அவற்றை உண்டு கொண்டே, மோதிரத்தைத் தேடியதால் விரைவில் உடல்நிலை தேறின.
நாட்கள் சென்றன. கோழி முதுமையடைந்தது. ஒருநாள் குஞ்சுகளை அழைத்து, “குழந்தைகளே, என் ஆயுள் முடியப் போகிறது. உங்களுக்கு அப்பா வேண்டுமல்லவா? அதற்காகத் தேவதையின் மோதிரத்தைக் கண்டுபிடித்து கொடுத்துவிடுங்கள். இது என் இறுதி ஆசை” என்றது.
அம்மாவின் பேச்சைத் தட்டாத மகன் சேவல், தினமும் 5 மணிக்கு எழுந்து ‘கொக்கரகோ’ என்று கூவி, உடன் பிறந்தவர்களை எழுப்பியது. எல்லாம் ஒன்றாகச் சென்று மோதிரத்தைத் தேடின. இன்றுவரை கோழிகளும் சேவல்களும் குஞ்சுகளும் மோதிரத்தைத் தேடுவதை நிறுத்தவில்லை!’

No comments:

Post a Comment