அழகிய பொய்கள்!
"புத்தகத்து மயிலிறகு
குட்டி போடும்!
மழை பெய்யும்
திசை சொல்லும் விட்டில் பூச்சி!
வெள்ளை கொக்கு
கையில் மச்சம் போடும்!
எறும்பின் கண்களுக்கு
நாமெல்லாம் அரக்கர்கள்!
பழவிதையை தின்றால்
வயிற்றில் மரம் முளைக்கும்!
ரயிலேற்றிய
தண்டவாளக்காசு காந்தமாகும்!
பசுஞ்சாணத்தில்
இடி விழுந்தால் தங்கமாகும்!
இரவில் விசில் ஊதினால்
பாம்பு வரும்!
கடவுள் குளிப்பதால்தான்
மழை பெய்கிறது
பனிரெண்டு மணிக்கு
புளியமரத்தில் பேய் வரும்!
சுடுகாட்டு சாம்பல் பூசி
மண்டை ஓட்டுடன் வருவான்
நள்ளிரவு குடுகுடுப்பைகாரன்!
கொடிக்காய் பழவிதைகளை
பழுதின்றி உரித்து
ஜன்னலில் வைத்தால்
வீட்டிற்கு விருந்தாளி வருவார்கள்!
கோவில் சுவற்றில்
தேர்வு எண்னை எழுதினால்
கூடுதல் மதிப்பெண் கிடைக்கும்!
திரைப்படத்தில் வாகனங்கள்
வேகமாக செல்லும் காட்சிகளுக்கு
படச்சுருளை வேகமாக சுற்றுவார்கள்!
விமானத்தில் செல்பவர்கள்
எல்லோரும் வெள்ளைகாரர்கள்!
இரண்டாயிரமாவது ஆண்டில்
உலகம் அழியும்! "என
இப்போது நினைத்தாலும்
அழகாகவே இருக்கின்றன!
குழந்தை பருவத்தின்
குற்றமில்லாத பொய்கள்!
No comments:
Post a Comment