Tuesday, 5 June 2018

இறை அச்சம்

யூதர்கள் தவ்ராத் வேதத்தைப் பின்பற்றி வந்தார்கள். அவர்கள் சனிக்கிழமையில்  தொழில்செய்யக்கூடாது . கடற்கரையில் யூதர்கள் சிலர் வாழ்ந்து வந்தனர். மீன் பிடிப்பதுதான் அவர்களது தொழில் சனிக்கிழமை மீன் பிடிக்கக்கூடாது என்பது அல்லாஹ்வின் கட்டளை.
அல்லாஹ் அவர்களைச் சோதித்தான். சனிக்கிழமை தினத்தில் பெரும் திரளான மீன்கள் நீரின்மேல் வந்து தலைகாட்டும். இதனால் சிலர் பொருளாதார மோகம் கொண்டனர். ஆண்டவன் கட்டளையை தந்திரம் மூலம் மீற முற்பட்டனர். வெள்ளி இரவு வலை போட்டு, ஞாயிறு காலை வலை இழுத்து மீன் பிடித்தனர். மேலும், வாய்க்கால் வெட்டி சனிக்கிழமை மீன்கள் ஒரு குழியில் வந்து விழுமாறு செய்து ஞாயிற்றுக்கிழமை அதைப் பிடித்தனர். படைத்தவனுக்கு துரோகம் செய்தனர்.
இதைக்கணுற்ற அந்தக் கிராமத்து நல்ல மக்கள், “இப்படிச் செய்யாதீர்கள் . இது கூடாது . அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள். அவனுக்குத் துரோகம் செய்ய முற்படாதீர்கள். இது சட்டத்துடன் விளையாடுவதாகும் . இந்த விளையாட்டு விபரீதத்தை உண்டுபண்ணும்” என்றெல்லாம் எடுத்துச் சொன்னார்கள். ஆனால் அவர்கள் தலையில் அதுவெல்லாம் ஏறவில்லை.
அந்த ஊரில் இன்னொரு மக்கள் பிரிவினர் இருந்தனர். அவர்கள் மீன் பிடிக்கவில்லை . ஆனால் அவர்கள் தவறைத்தடுக்கவும் இல்லை. அவர்கள் இந்த தவறைத் தடுப்பவர்களைப் பார்த்து இப்படிக் கேட்டனர்.
“அவர்களை விட்டுவிடுங்கள். அவர்களை அல்லாஹ் தண்டிப்பான். அல்லது அழிப்பான். அல்லாஹ் சொல்லியே கேட்காதவர்கள் நீங்கள் சொன்னால் கேட்கவா போகிறார்கள்” என்று தவறைத் தடுப்பவர்களைத் தடுத்தார்கள்.
அதற்கு அந்த நல்லவர்கள், “இரண்டு நோக்கங்களுக்காக நாம் தவறைத் தடுக்கின்றோம். ஒன்று தவறு நடக்கும் போது தடுக்காமல் இருப்பது தவறாகும். நாம் அல்லாஹ்விடம், தப்புவதாக இருந்தால் தவறைத் தடுத்துத்தான் ஆக வேண்டும் .அடுத்தது நாம் சொல்வதைக் கேட்டு அவர்கள் சிலவேளை தவறை விடலாம் ” என்றனர்.
ஆம். தவறைக் கண்டால் தடுக்க வேண்டும். இல்லையென்றால் நாமும் தண்டிக்கப்படுவோம். அந்த கிராமத்தில் இருந்த மீனவர்கள் தமது தவறை விடவில்லை. அல்லாஹ்வின் வேதனை வந்தது. ஒருநாள் அவர்கள் உறங்கச் சென்றனர் . காலையில் நல்ல மக்கள் பார்த்தார்கள். மக்களைக் காணவில்லை. அவர்களது வீடுகள் மூடப்பட்டிருந்தன.
எட்டிப் பார்த்தபோது அவர்கள் குரங்குகளாக மாற்றப்பட்டிருந்தனர். குரங்கில் இருந்து மனிதன் வந்ததாக சிலர் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். மனிதர்களில் சிலர் குரங்குகளாக மாற்றப்பட்ட சம்பவம் இது! இந்த சம்பவத்தை திருக்குர்ஆனில் 7:163 – 166 வசனங்களில் நாம் காணலாம்.

No comments:

Post a Comment