Thursday, 7 June 2018

மூன்று அம்புகள்

மகாபாரதப் போரை முழுமையாகப் பார்த்தவன் அவன்!!!!



எல்லாம் மாதவன் செயலே.. ! தெரிந்த புராணம் தெரியாத கதை..!



பஞ்ச பாண்டவர்களில் பீமனுக்கும்,இடும்பிக்கும் பிறந்தவன் கடோத்கஜன்.



கடோத்கஜனுக்கும் கம்கன்கடவிற்கும் பிறந்தவன் பார்பாரிக்கா.



.தாய் கம்கன்கட,மகன் பார்பாரிக்காவிற்கு தானே பயிற்சி அளித்து சிறந்த வீரனாக தயார் செய்திருந்தாள்.



சிவ பெருமான் பார்பாரிக்காவிற்கு மூன்று அம்புகளை பரிசளித்திருந்தார்.



முதல் அம்பு, தான் அழிக்க நினைக்கும் இலக்குகளை குறியிட்டு விடும்.



இரண்டாவது அம்பு,தான் காப்பாற்ற நினைக்கும் இலக்குகளை குறியிட்டு ஒதுக்கிக் காப்பாற்றி விடும்.



மூன்றாவது அம்பு அழிக்கக் குறியிட்ட இலக்குகளை அழித்து விடும்.



மூன்று அம்புகளும் தத்தம் பணிகளைச் செய்து விட்டு பார்பாரிக்காவிடம் திரும்பி விடும்.



இது தவிர அக்னி பகவான் மூவுலகையும் வெல்லக்கூடிய வில் ஒன்றை பார்பாரிக்காவிற்கு பரிசளித்திருந்தார்.இதன் காரணமாக பார்பாரிக்கா மிகவும் பலம் பொருந்தியவனாக விளங்கினான்.



பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் இடையே யுத்தம் துவங்க இருந்ததை அறிந்த பார்பாரிக்கா போரைக் காண ஆவலுற்றான்.



தாயிடம் ஆசிப் பெற்று தன் நீலக் குதிரை மீதி புறப்பட்டான்.



புறப்படும் முன்,போரில் பலவீனமாக இருந்தவர்கள் பக்கம் சேர்ந்து அவர்களை வெற்றி பெறச்செய்வேன் என்று தாயிடம் சூளுரைத்தான்.



பார்பாரிக்காவின் திறமையை அறிந்திருந்த கிருஷ்ணன்,அவன் மனநிலையை நேரில் கண்டறிய விரும்பி ஒரு பிராமண வேடம் பூண்டுஅவனைக் காணச் சென்றார்.



வழியிலேயே அவனைப் பார்த்தும் விட்டார்.அவனைத் தடுத்து நிறுத்தினார்.



ஒரு பிராமணர் தன்னை நிறுத்துவது கண்டு பார்பாரிக்காவும் குதிரையை விட்டு இறங்கினான்.”



என்ன பிராமணரே என்னை ஏன் வழி மறித்தீர் “ என்று கேட்டான் பார்பாரிக்கா.



“ போர் உடையில் நீ வேகமாகச் செல்வது கண்டு ஏன் இந்த பரபரப்பு என்று தெரிந்து கொள்ளும் ஆவல் மிகுதியில் நிறுத்தி விட்டேன் “ என்றான் கிருஷ்ணன்.



“ பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் குருக்ஷேத்திரத்தில் போர் நடக்க உள்ளது,அதில் கலந்து கொள்ளப் போகிறேன்” என்றான் பார்பாரிக்கா.”



யார் பக்கம் சேர்ந்து போரிட போகிறாய் “ என்று வினவினான் கிருஷ்ணன்.”அங்கு போய் பார்ப்பேன்,யார் பக்கம் பலவீனமாக உள்ளதோ அவர்கள் பக்கம் சேர்ந்து அவர்களை ஜெயிக்க வைப்பேன்” என்றான் பார்பாரிக்கா.



” நீ அவ்வளவு பெரிய பராக்கிரமசாலியா” என்ற வினவினான் கிருஷ்ணன்.”



நீங்கள் வேண்டுமானால் என் பராக்கிரமத்தைச்சோதித்து பாருங்களேன்” என்றான் பார்பாரிக்கா.



”இதோ இந்த அரச மரத்தில் உள்ள இலைகளை ஒரே அம்பால் உன்னால் கோர்க்க முடிந்தால் உன்னை பராக்கிரமசாலி என்று ஒப்புக்கொள்கிறேன்” என்றான் கிருஷ்ணன்.



மரத்தின் ஒரு இலையை மட்டும் பிடுங்கி பார்பரிக்காவிற்கு தெரியாமல் தன் காலடியில் போட்டுக் கொண்டான்.



”இதோ ஒரு நொடியில் செய்து விடுகிறேன்” என்று ஒரு மந்திரத்தை உச்சரித்து அம்பை எய்தான் பார்பாரிக்கா.



அம்பு மரத்தில் இருந்த இலைகளையெல்லாம் கோர்த்துக் கொண்டு கடைசியாக கிருஷ்ணனின் பாதத்தை நோக்கிப் பாய்ந்தது.



”இது என்ன விபரீதம் அம்பு என் பாதத்தைத் துலைக்க முற்படுகிறதே” என்றான் கிருஷ்ணன்



”பிராமணரே உன் காலடியில் ஒரு இலை இருக்கும் என்று நினைக்கிறேன்,உடனே பாதத்தை எடுத்து விடும்” என்றான் பார்பாரிக்கா.



கிருஷ்ணர் பாதத்தை எடுத்தவுடன் பார்பாரிக்காவின் அம்பறாத்தூணியில் இருந்து புறப்பட்ட அம்பு ஒன்று எல்லா இலைகளையும் ஒன்றாகக் கோர்த்தது.



இந்த இடத்தில் ஒரு குட்டி கிளைக் கதை ஒன்று உள்ளது.



துருவாச முனிவர் கிருஷ்ணருக்கு ஒரு வரம் அளித்திருந்தார்.



கிருஷ்ணரின் பாதம் தவிர்த்த ஏனைய இடங்களில் எந்த ஆயுதத்தாலும் பாதிப்பு எற்படாது என்பதே அந்த வரம்.



மெளசால பர்வத்தில் ஜாரா என்னும் வேடன், மான் என்று எண்ணி கிருஷ்ணரின் பாதத்தில் அம்பு எய்து கிருஷ்ணரின் மரணத்திற்கு காரணமானதிற்கு முன் பார்பாரிக்காவின் அம்பு கிருஷ்ணரின் பாதத்தை பதம் பார்த்து பலவீனப்படுத்தியது, குறியிட்டு விட்டது முக்கிய காரணம் என்கிறது புராணம்.



ராமாவதாரத்தின் போது வாலியை   மறைந்திருந்து  தாக்கியதற்குவேதனையடைந்தவாலியிடம்,”கிருஷ்ணாவதாரத்தின் போது ஜரா என்னும் வேடனாக நீ பிறந்து நான் மரத்திலே மறைவாக அமர்ந்திருக்கும் போது உன்னால் கொல்லப்படுவேன்” என்று கூறியதாக புராணம் தெரிவிக்கிறது.



பார்ப்பாரிக்காவின் பராக்கிரமத்தை உணர்ந்து கொண்ட கிருஷ்ணர் பஞ்ச பாண்டவர்களை ஒளித்து வைத்தாலும் பார்பாரிக்காவின் அம்பு தேடிக் கண்டு பிடித்துக் கொன்று விடும் என்று உணர்ந்தார்.



”உன்னிடம் எனக்கு ஒரு யாசகம் வேண்டுமே” என்றான் கிருஷ்ணன்.



”எது வேண்டுமானாலும் தயங்காமல் கேளும் பிராமணரே !” என்றான் பார்பாரிக்கா.



”உன் தலையை கொய்து விட வேண்டும் என்று விரும்புகிறேன்” என்றான் கிருஷ்ணன்.



சற்றே திகைத்து விட்ட பார்பாரிக்கா,



” நீர் யார்,உண்மையை சொல்லும், நீங்கள் சாதாரண பிராமணரே அல்ல” என்றான்.



பகவான் கிருஷ்ணர் தன் சுய உருவத்தில் திவ்ய சொரூபனாகக் காட்சித் தந்தார்.”



கேசவா,நாராயணா,மாதவா,கோவிந்தா, மதுசூதனா...என்று பல்வேறு நாமங்களால் கிருஷ்ணரை துதித்தான்.



” பார்பாரிக்கா,நீ மாவீரன். உன் தாயிடம் நீ மேற்கொண்ட பிரத்திக்ஞையின் விளைவுகளை நீ அறியவில்லை. நீ பாண்டவர்களுக்கு 7 அக்ஷொனி படைகளும்,கெளரவர்களுக்கு 11 அக்ஷொனி படைகளும் இருப்பதைப் பார்த்து பாண்டவர்கள் பக்கம் சேர்வாய் ;உன் பராக்கிரமத்தால் கெளரவ படை தோற்கத் துவங்கும்.

 அது பலவீனமாவதை உணர்ந்து,உன் தாய்க்கு செய்து கொடுத்த சத்தியத்தின் காரணமாக நீ கெளரவர்கள் பக்கம் சேர்வாய்.



பாண்டவர்கள் தோற்க துவங்குவார்கள்.முடிவில் பாண்டவ,கெளரவ சேனைகள் முற்றிலும் அழிந்து நீ மட்டுமே மிஞ்சுவாய்.



இது தர்மத்திற்கு நல்லதல்ல.ஆகவே நீ போரில் பங்கேற்கக் கூடாது.



உன் தாய்க்குச் செய்து கொடுத்த சத்தியத்தின்ன் காரணமாக இது சாத்தியமல்ல. ஆகவே தர்மத்தின் பொருட்டு நீ உயிர் தியாகம் செய்து விடு”என்றான் கிருஷ்ணன்.



பார்பாரிக்காவும் இசைந்தான்.



பார்பாரிக்கா உண்மையில் நீ ஒரு யக்ஷன்.



முன் ஒரு சமயம்,பூமியில் அதர்ம சக்திகள் அட்டூழியம் நிகழ்த்தி வந்த நேரம்,பிரம்மாதி தேவர்கள் எல்லாம் என்னை வந்து பணிந்து தங்களைக் காபாற்றும்படி வேண்ட,நானும் தர்மத்தைக் காக்க அவதாரம் எடுப்பதாகக் கூறினேன்.



அதற்கு அங்கிருந்த நீ,அதற்கு நான் தேவையில்லை என்றும் நீ ஒருவனே போதும் என்றும் கூறினாய்.



இதை கேட்ட பிரம்மதேவன் கோபமுற்று, நீ பூமியில் மகத்தான சக்திகளுடன் பிறப்பாய் என்றும்,அதர்ம சக்திகளை ஒழிக்க முற்படும் போது நீயே என்னால் கொல்லப்பட்டு முதல் பலி ஆகி விடுவாய் என்றும் உன்னைச் சபித்தார்,அதன் காரணமாகவே, இன்று உனக்கு இந்த நிலை ஏற்பட்டு உள்ளது.



மேலும் போர் துவங்கும் முன் ஒரு மாவீரனை களபலி கொடுக்க வேண்டும்.



உன்னை மிஞ்சிய மாவீரன் இத்தரணியில் இல்லை” என்றான் கிருஷ்ணன்.



கிருஷ்ணனின் சக்ராயுதம் பார்பாரிக்காவின் தலையை கொய்தது.



பரந்தமனின் பரம் பதம் கிடைத்து விட்ட பிறகு வேறென்ன வேண்டும் என்று திருப்தி அடைந்த பார்பாரிக்கா”கிருஷ்ணா நான் போரினைக்காண  மட்டும் மிகவும் ஆவலுடன் இருக்கிறேன்” என்றான்.



பார்பாரிக்காவின் தலையைப் போர் பூமியைப் பார்த்து நின்ற ஒரு குன்றின் மீது வைத்தான் கிருஷ்ணன்.



போர் நடந்து முடிந்தவுடன்,பாண்டவர்களுக்குள் ஒரு வாக்குவாதம்.



தங்களில் யார் பராக்கிரமத்தால் போரில் வென்றோம் என்பதே அது.



கிருஷ்ணரிடம் வந்து “கிருஷ்ணா எங்களில் யார் பராக்கிரமத்தால் இந்த போரில் வென்றோம் என்று கூறு” என்றனர்.”



எனக்கு எப்படி தெரியும்,நானோ அர்ஜுனனின் ரதத்தை ஓட்டிக்கொண்டு அவன் சொன்னபடியெல்லாம் சென்று

கொண்டிருந்தேன். போதாக்குறைக்கு எதிரிகளின் அம்புக்கணைகள் வேறு என் உடம்பை பதம் பார்த்து கொண்டிருந்தன. இந்த நிலையில் என்னால் வேறு எதையும்

பார்க்க தோன்றுமா என்ன” என்றான் கிருஷ்ணன்.



”அப்படியென்றால் வேறு யாரைத்தான் கேட்பது”என்று திகைத்தனர் பாண்டவர்கள்.



”ஒரு ஆள் முழு போரையும் பார்த்திருக்கிறான். அவனை வேண்டுமானால் கேட்கலாம்” என்றான் கிருஷ்ணன்.



”யாரது” என்று வினவிய பாண்டவர்களை பார்பாரிக்காவிடம் அழைத்துச் சென்றார் கிருஷ்ணர்.



”என்ன பார்பாரிக்கா முழு போரையும் பார்த்தாயா?” கேட்டான் கிருஷ்ணன்.



”பார்த்தேன் கிருஷ்ணா”என்றான் பார்பாரிக்கா.



”பாண்டவர்களுக்கு ஒரு சந்தேகம், யார் பராக்கிரமத்தால் இந்த போரில் வென்றோம் என்று” என்று கேட்டான் கிருஷ்ணன்.



”எனக்கு என்ன தெரியும் கிருஷ்ணா,யுத்த பூமியிலே ஒவ்வொரு தலை விழும் போதும் அங்கு உன் சக்ராயுதம்தான் என் கண்ணுக்கு தெரிந்தது”என்றான் பார்பாரிக்கா.



பாண்டவர்கள் வெட்கித் தலை குனிந்தனர்.



!!ஸ்ர்வம் கிருஷ்ணார்ப்பணம்!!

No comments:

Post a Comment