Monday, 4 June 2018

டிராகன் இராட்சசன்

மலைக்கிராமத்திலே ஒரு பெண்ணும் அவளுடைய மகளும் இருந்தார்கள். அவர்கள் தங்களுடைய சிறிய நிலத்தில் வேலைகள் செய்வது வழக்கம். விதை தூவுவது, நடுவது, தண்ணீர் பாய்ச்சுவது, அறுவடைக் காலத்தில் அறுப்பது, கதிர் அடிப்பது என்று எல்லா வேலைகளையும் அவர்களே செய்வார்கள். அந்தப் பெண்ணின் மகள் சிவப்பு நிற உடைகளே அணிவாள். அதுவே அவளுக்குப் பிடிக்கும். அதனால் அவளை எல்லோரும் ‘சிவப்புச் சின்னவள்’ என்று அழைத்தார்கள்.
ஒருநாள் அந்தக் கொடுமை நடந்தது. ‘சிவப்புச் சின்னவள்’ தங்கள் கழனியிலே ஏதோ வேலையாக இருக்கும்போது, ராட்சச டிராகன் ஒன்று வானிலே பறந்து வந்தது. அது வந்தபோது அதன் இறக்கைகளின் அசைவிலே காற்று வேகமாக வீசியது. அதனால் மரங்களெல்லாம் ஆடின. மேகங்கள் கூட குலுங்கின. பார்ப்பதற்கு மிகவும் மூர்க்கமான, கோரமான, கடுஞ்சீற்றம் கொண்டதாக இருந்தது. வானிலே பறக்கும் பருந்து திடீரென்று பூமியில் பாய்ந்து கோழிக் குஞ்சை கவ்வுவது போல, சிவப்புச் சின்னவளை அப்படியே தன் கால்களால் அள்ளிக் கொண்டு போய்விட்டது. சிவப்புச் சின்னவளின் அவலக்குரல் அழுதுக்கொண்டே ஒலித்தது. அதைத்தான் அவளுடைய அம்மாவால் கேட்க முடிந்தது.
“அம்மா… என்னருமை அம்மா… பொறுத்திரு… பொறுத்திரு.
சகோதரனே சகோதரனே என்ன வந்து மீட்டு விடு!Ó
பெற்த் தாயின் கண்கள் கலங்கின; அவளின் ஆற்றாமையின் அழுத்தம் அவள் இதயத்தை பிசைந்தது. “பாவம், குழந்தை! அவளைப் போய் அந்த ராட்சசப் பேய் டிராகன் தூக்கிக்கொண்டு போய்விட்டதே! என்ன செய்வேன்? யாரிடத்தில் போய் கேட்பேன்! சிவப்புச் சின்னவளோ “சகோதரனே… சகோதரனே என்னை வந்து காப்பாற்று” என்றாளே… அவளுக்கு ஏது சகோதரன்… எனக்குப் பிறந்தது இவள் மட்டுந்தானே… பயத்திலே அப்படி உளறி இருக்கிறாள் போலும்” என்று நினைத்தாள். இப்படியெல்லாம் நினைத்து, தள்ளாடிக் கொண்டே வீட்டை நோக்கித் திரும்பினாள்.
திரும்பும் வழியிலே பாதி தூரம் வந்தபோது அவளுடைய நரைத்த தலைக் கூந்தலை யாரோ பிடித்து இழுப்பதுப்போல இருந்தது. சாலை ஓரத்தில் இருந்த புன்னை மரக் கிளை அது. காற்றில் ஆடித் தாழும்போது இவள் கூந்தல் மாட்டிக்கொண்டது போலும். வேறு வழியில்லாமல் கூந்தலை அறுத்தெடுத்துக் கொண்டு நடக்கின்ற போது, நன்றாகச் சிவந்த சிவப்பு பெர்லி பழங்களைப் பார்த்தாள். கொஞ்சம் பறித்து எடுத்துக்கொண்டு நடந்தாள். அந்த சிவப்பு பெர்ரியை சுவைத்தாள்.
வீட்டுக்கு வந்து சேர்ந்தாள். வீட்டீக்கு வந்தவுடனே அவளுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அவள் சாப்பிட்டச் சிவப்பு பெர்ரிப் பழம் அவளைக் கருக்கொள்ள வைத்தது. ஒரு நாளின் சில மணிகளிலே அவள் கர்ப்பம் முதிர்ந்து குழந்தையும் பெற்றெடுத்தாள். அது ஓர் ஆண்குழந்தை அதற்கு “சின்ன பேபரி” என்று பெயரும் சூட்டினாள். குழந்தையும் வட்டமான தலையுடனும் சிவந்த கன்னங்களுடன் பேபரி போலவே இருந்தான்.
சின்ன பேபரி பிறந்த சில நாட்களுக்குள்ளேயே வளர்ந்து ஓர் இளைஞனாக ஆகிவிட்டான். பதினான்கு அல்லது பதினைந்து வயதுக்காரனைப் போல தோற்றம் தந்தான். அவனைப் பார்க்கும்போதெல்லாம்அவனுடைய தாய்க்கு ராட்சச டிராகன் தூக்கிக் சென்ற அவளின் மகள் சொன்ன வாக்கியங்கள் தான் நினைவுக்கு வந்தது.
“சகோதரனே சகோதரனே என்னை மீட்பாயாக”
பெற்றவளோ அதை அவளிடம் சொல்லத் தயங்கினாள். சொல்வதற்கு வாய் வரும். ஆனால் மனம் தடுத்துவிடும். இவனுக்கு ஏதாவது விபரீதம் நேரிட்டால் என்ன செய்வது? இதனால் தான் அவள் வாய் மௌனிக்கும், கண்களோ கலங்கும்!
ஒரு நாள் ஒரு காகம் அவள் வீட்டின் கூரையில் அமர்ந்து, பின் அங்கிருந்து இறங்கி, கூரை இறக்கத்தில் இருந்துக் கொண்டு, “உனது தமக்கை துன்பத்தில் கிடக்கிறாள்; அவளை துன்பத்திலிருந்து மீட்டு வருவாயாக! டிராகன் பூதத்தின் குகையில் மடிகிறாள். வெற்றுக் கைகளால் குகையை சுரண்டி சுரண்டி தவிக்கிறான். அதனால் அவளது உடைகளிலும் ரத்தக் கறைகள் இருக்கிறது. உடனே சகோதரனே, உன் சகோதரியை மீட்டு வா”
இதைக் கேட்டவுடன் சின்ன பேபரிக்கு ஆச்சர்யமாக இருந்தது. “அம்மா… எனக்கு அக்கா இருக்கிறாளா? எங்கேப் போனாள்? ஏன் என்னிடம் மறைத்து விட்டாய்?” என்று கேட்டாள்.
“ஆமாம் மகனே… உன் அக்காவை ராட்சச டிராகன் தூக்கிக் கொண்டு போய்விட்டது. அந்த டிராகன் பலரைத் தூக்கிக் கொண்டு போய் சாப்பிட்டு விட்டது!” என்றாள்.
பேபரி உடனே ஒரு பெரிய உலக்கைப் போன்ற ஒரு தடியை எடுத்துக் கொண்டாள், “அம்மா… இதோ இப்பொழுதே போய் என் தமக்கையை மீட்டெடுக்கப் போகிறேன்… ராட்சச டிராகனை இந்தத் தடியால் அடித்து கொன்று விடுவேன்… இனிமேல் அவன் யாருக்கும் தீங்கு செய்யமுடியாத அளவுக்கு செய்துவிட்டு வருகிறேன்.” என்று சொல்லி புறப்பட்டான்.
அவனது தாய் கண்ணீரில் மறைத்த பார்வையோடு, கதவின் இடைவெளியிலே அவன் போவதைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் உள்ளத்தில் மகிழ்ச்சியும் அச்சமும் ஒருங்கே எழுந்தன.
பேபரி, வெகு தொலைவுகள் நடந்தான். நடந்து, நடந்து எப்படியோ ஊர்க் கோடியிலுள்ள ஒரு மலைச் சாலையின் முடிவுக்கு வந்து விட்டான். அதன் பிறகு சாலையின் தொடர்ச்சி இல்லை. ஆனால் மிகப்பெரிய பாறாங்கல் ஒன்று பாதையை அடைத்தது போல் நின்றிருந்தது.
இந்தப் பாதையை கடந்து போக வேண்டுமானால் அந்தப் பாறையைத் தாண்டிக் குதிக்க வேண்டும். அப்படி குதித்தால் ஒரு காலடி தவறினால் கூட மலைக்கு கீழே அதள பாதாளத்துக்குள் போய் விழ வேண்டும். யாரும் அவ்வளவு பெரிய முயற்சி எடுப்பதில்லை. ஆனால் பேபரி அந்த பாறாங்கல்லை நகர்த்தி விட்டால் போதுமென்று நினைத்தான்.
பேபரி தான் எடுத்து வந்த கோலை அந்த பாறாங்கல்லின் அடியில் நுழைத்து, தன் பலங்கொண்ட மட்டும் அந்த கல்லை உயர்த்திடப் பார்த்தான். அவன் கொண்டு வந்த தடி இரண்டாக உடைந்தது. என்ன செய்வது? உடனே தன் இரு கைகளையும் பாறாங்கல்லின் அடியில் கொடுத்து அதை உருட்டப் பார்த்தான். எங்கிருந்துதான் அவனுக்கு அந்த பலம் வந்ததோ, ஆம் பாறாங்கல் அசைந்து கொடுத்தது, அவன் தன் பலத்தால் இயன்ற அளவு உயர்த்திக் கொண்டு அப்படியே பின்னால் தள்ளினான். பாறாங்கல் உருண்டு ஓடி பள்ளத்தாக்கில் போய் விழுந்தது.
அதே நேரம் அந்தப் பாறாங்கல் இருந்த இடத்திலே தகதகத்துக் கொண்டிருக்கும் தங்க புல்லாங்குழல் ஒன்று இருந்தது. பேபரி அதை கையிலெடுத்தாள். அதை துடைத்து விட்டு குழலில் காற்றை ஊதினான். அதில் ஓசை எழுந்தது. அதை மீண்டும் ஊதினான். அவ்வளவுதான் அந்த மலையிலே, மலைச்சாலையிலே உள்ள புழு பூச்சிகளும் தவளைகளும், பல்லிகளும் நாட்டியமாடத் தொடங்கின. புல்லாங்குழலை வேகமாக ஊதினால் வேகமாக ஆடின. “ஓ…. இது போதும், இதை வைத்தே அந்த ராட்சச டிராகனை ஒரு கை பார்த்து விடலாம்” என்று நெஞ்சத் துணியோடு நிமிர்ந்து நடந்தான்.
கொஞ்ச தூரம் நடந்து போனதும், பெரிய மலைப்பாறை தெரிந்தது. அவன் கஷ்டப்பட்டு அந்தப் பாறையின் மேல் ஏறிக்கொண்டான். அங்கிருந்து பார்த்தால் ஒரு குகையின் வழியை முழுதும் அடைத்துக்கொண்டு அந்த ராட்சச டிராகன் அமர்ந்திருந்தது. டிராகனைச் சுற்றிலும் எலும்புகள் குலியலாகக் கிடந்தன. எல்லாமே மனிதர்களைச் சாப்பிட்டுவிட்டுப் போட்ட எலும்புகளே.
அவனுக்கு அடுத்து ஒரு பெண் கண்ணீரோடு அமர்ந்திருப்பது தெரிந்தது. டிராகன் தன் நீண்ட கூரிய நகங்களால் அவளின் முதுகை கீறிக் கீறி கொடுமைப்படுத்திக் கொண்டிருந்தது. “அட நன்றிக்கெட்ட சிவப்புப் பெண்ணே! நீ என்னோடு இருக்கும் வரைக்கும் யாரும் உன்னைத் தொடமுடியாது. திருமணம் செய்துகொள்ளமுடியாது. எத்தனை நாளானாலும் சரி, எத்தனை குன்றுகளைத் தாண்டி வந்தாலும் யாரும் உன்னை என்னிடமிருந்து கைப்பற்ற முடியாது. அப்படி வந்தால் உன்னை சாகடித்து மண்ணுக்குள் போட்டிடுவேன்” என்று கூறிக் கொண்டிருந்தான்.
பேபரிக்கு அவள்தான் தன்னுடைய உடன் பிறந்தவள் என்று தெரிந்துவிட்டது. உடனே தானிருந்த இடத்திலிருந்து குரல் கொடுத்தான்.. “அடே கெட்ட புத்தி ராட்சசனே! என் அக்காவைக் கொடுமைப்படுத்தியதற்கு தண்டனைக் கொடுக்க நான் வந்துவிட்டேன். இந்தப் புல்லாங்குழலை ஊதி வாசித்தே உன்னை ஒரு வழி பண்ணப் போகிறேன்… உன் கதை முடிந்தது. உன் உயிர் இப்பொழுது என் கையில்” என்று சொல்லிவிட்டு புல்லாங்குழலை ஊதினான். வேக வேகமாக ஊதினான்.
அவன் புல்லாங்குழலை ஊத ஊத தனது பெருத்த உடலைத் தூக்கிக் கொண்டு ராட்சச டிராகன் ஆட ஆரம்பித்துவிட்டது. தன்னை மீறிய ஆட்டம். எது நடந்தாலும் என்ன செய்தாலும் உணர முடியாத ஆட்டம்!
இதுதான் தக்க தருணமென்று ‘சிவப்புச் சின்னவள்’ மெல்ல குகையை விட்டு வெளியே வந்தாள். வெளியில் நின்று ராட்சச டிராகன் போடும் ஆட்டத்தைப் பார்த்தாள். அதன் கண்கள் செருகி இருந்தது. தன்னை மறந்த நிலையில் அது ஆடிக் கொண்டிருந்தது. அதன் கண்களிலிருந்து நெருப்பு ஜீவாலை வீசியது. மூச்சுக் காற்றாக கொதிக்கின்ற ஆவி வெளிவந்தது. வாயைத் திறந்து திறந்து மூடி மூச்சு வாங்கியது. தன் தம்பியிடம் பேச சிவப்புச் சின்னவள் முயன்றாள். பேபெரி கையால் சாடைக் காட்டினாள். அவன் புல்லாங்குழல் வாசிப்பதை நிறுத்தினால், அவனையும் அவளையும் அவன் உயிரோடு கொன்று சாப்பிட்டுவிடுவான். எனவே அவன் புல்லாங்குழலை ஊதிக்கொண்டே இருக்க டிராகன் மூச்சு வாங்க ஆடியது, அதனால் இப்பொழுது முடியவில்லை. பெரிய வயிற்றை தூக்கிக் கொண்டு ஆட ஆட அதற்கு அது ஏதோ வேதனையாக இருந்தது. எனவே பேபரியிடம் கெஞ்சத் தொடங்கியது.
“தம்பி… புல்லாங்குழல் வாசிப்பதை கொஞ்சம் நிறுத்து.. நீ ஆற்றல் வாய்ந்தவன் என்பதை ஒப்புக்கொள்கிறேன். இனிமேலும் என்னால் தாங்க முடியாது. ஐயோ, இந்த இம்சையைப் பொறுக்கமுடியவில்லை. புல்லாங்குழல் ஓசையைக் கேட்டு ஆடாமல் இருக்க முடியாது. அதுப்போல ஆடிக் கொண்டே இருக்கவும் முடியாது. கொஞ்சம் இரக்கம் காட்டு, உன் சகோதரியை விட்டு விடுகிறேன்.” என்றது டிராகன்.
ஆனால் அவன் நிறுத்துவதாக இல்லை. தன் அக்கா சொல்லியபடி இதே இடத்திலே இவனை விட்டு வைக்கக் கூடாது, அப்படி விட்டு வைத்தால் மறுபடி மனிதர்களைத் தூக்கிக்கொண்டுபோய் கொன்று தின்பான். இவனிடம் இரக்கம் காட்டக்கூடாது என்று நினைத்து, பேபரி மெல்ல நடந்துகொண்டே புல்லாங்குழலை வாசித்தான். அவள் தமக்கை அவனோடு சேர்ந்து நடந்தாள். பின்னாடியே, ராட்சச டிராகன் ஆடிக்கொண்டே வந்தது. அதுவும் இவன் வேகமாக வாசிக்க வாசிக்க அது நிலைக்கொள்ளாமல் ஆடிக்கொண்டே வந்தது. வழியில் ஒரு பெரிய குளம் இருந்தது. ராட்சச டிராகன் ஒன்றும் முடியாமல் நேராக குளத்தில் போய் விழுந்து ஆசுவாசப்படுத்திக்கொண்டது. குளத்தில் அது விழுந்தவுடன் பல அடி தூரத்துக்கு நீர் மேலேழுந்து அடித்தது. குளமே கொந்தளித்து வழிந்தது. அதே நேரம் ராட்சச டிராகனின் கண்களிலிருந்து நெருப்பு ஜுவாலை வீசியது, மூக்கிலிருந்து சுவாசக் காற்றாக கொதிக்கும் நீராவி வந்தது. வாயிலிருந்து மூச்சு சீறி சீறி எழுந்தது.
அது பேபரியிடம் கெஞ்சியது; “ஐயா, பெருமகனே… இதோடு வாசிப்பை நிறுத்தி விடுங்கள். இதே இடத்திலே நான் கிடந்து விடுகிறேன்…” என்றது.
“சரி… நீ யாருக்கும் துன்பம் இழைக்கக்கூடாது. கேடு புரியக்கூடாது. அப்படியானால் வாசிப்பை நிறுத்துவேன்” என்றான் பேபரி.
ராட்சச டிராகன் அதற்கு ஒத்துக்கொண்டது. அக்காவும் தம்பியும் வீடு திரும்பினார்கள். தாய் மகிழ்ச்சியில் தத்தளித்தாள்.
சில நாடள்களுக்குப் பின்னர் ராட்சச டிராகன் இருக்கின்ற குளத்திலே குளிக்கப் போனவர்கள் காணாமல் போனார்கள். அடி ஆழத்திலிருந்து மேலெழுந்து வந்து டிராகன் குளிக்க வருகிறவர்களை துன்புறுத்தலானது. சிலரை தூக்கிக் கொண்டு அடி ஆழத்துக்குச் சென்றது.
இதைக் கேள்விப்பட்டவுடன் பேபரி மறுபடியும் குழலுடன் குளத்தருகே வந்தான். குழலை வேக வேகமாக வாசித்தான். இப்படி ஏழு நாட்கள் வரை செய்தான். தண்ணீருக்குள் ராட்சச டிராகன் தண்டாமாலை ஆடியது. ஆடி, ஆடி, களைத்து வீழ்ந்தது. கடைசியில் செத்தும் போனது.
தமக்கையும் தம்பியும் மனநிறைவோடு வீடு திரும்பினார்கள். டிராகனின் மேல் தோலை எடுத்து வீடு கட்டிக் கொண்டனர். டிராகனின் எலும்புகளை தூண்களாகவும் கூரையைத் தாங்கும் வாரைகளாகவும் அமைத்துக் கொண்டனர். டிராகனுடைய கொம்பை வெட்டி எடுத்து அதை நிலத்தில் உழவுக்குப் பயன்படுத்திக்கொண்டனர்.
இவ்வாறு அக்காவும் தம்பியுமாக டிராகனின் உடலிலிருந்து. பலவகையில் பயன் பெற்றனர்.

No comments:

Post a Comment