Wednesday, 13 June 2018

நதியா

அவர் கனவுக் கன்னியுமல்ல. அன்றைக்கு எந்த இளைஞனும் நதியாவின் படத்தை தன் அறையில் ஒட்டி வைத்துக் கொள்ளவில்லை. ஆனாலும் எல்லோருக்குமே நதியாவைப் பிடிக்கும். ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் பிடிக்கும் என்பதுதான் சிறப்பு. இது போன்ற ஒரு இமேஜ், மிக அபூர்வமாக சில நடிகைகளுக்கே அமையும். அதில் நதியா முக்கியமானவர்.
80, 90களில் நதியா கொண்டை, நதியா வளையம், நதியா வளையல், நதியா சேலை, நதியா சுடிதார் என்று அவர் பெயர் வைக்காத பொருளே இல்லை என்கிற அளவிற்கு அன்றைக்கு நதியா சந்தை மதிப்பில் உயர்ந்த இடத்தில் இருந்தார். இ்ப்போது மற்ற பொருட்கள் மறந்து விட்டாலும் மேலே சற்று தூக்கியவாறு போடப்படும் கொண்டைக்கு இன்றைக்கும் நதியா கொண்டை என்பதுதான் பெயர்.
நதியாவின் பெரிய பலமே சினிமாவின் பலத்தையும், பலவீனத்தையும் அறிந்து வைத்திருந்ததுதான். ‘பூவே பூச்சூடவா’ முடிந்திருந்த நேரம். ஒரு தமிழ் ஹீரோவுக்கு நதியாவை மிகவும் பிடித்திருந்தது. அவருடன் நடிக்க விரும்பினார். இதனை தனக்கு நெருக்கமான தயாரிப்பாளரிடம் கூறினார் ஹீரோ. அந்த தயாரிப்பாளர் பணக்கட்டுகளுடன் மறுநாள் நதியாவை சந்தித்தார்.
‘இந்த ஹீரோவுக்கு ஜோடி நீங்கதான்’ என்றார். ‘அப்படியா! பெரிய நடிகராச்சே? அவருடன் நடிக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்’ என்றார். ‘இவ்வளவு சம்பளம்’ என்றார். ‘இரண்டாவது படத்திலேயே இவ்வளவு பெரிய சம்பளமா?’ என்று வியந்தார் நதியா. ‘டைரக்டரை வந்து கதை சொல்ல சொல்லுங்க, அப்புறமாக அட்வான்ஸ் வாங்கிக்கிறேன்’ என்றார். ‘கதை இனிமேதான் ரெடி பண்ணணும். ஹீரோவுக்கு உங்களை பிடிச்சிருக்கு. அதான் புக் பண்ணலாமுன்னு வந்தேன். கதை, டைரக்டரெல்லாம் சீக்கிரமே ரெடி பண்ணிடுவோம். அவருடனேயே நீங்க நாலஞ்சு படத்துல நடிக்கலாம்’ என்றார்.
அவ்வளவுதான், மூக்கு சிவந்தது நதியாவுக்கு. “உங்க ஹீரோக்கு என்னை பிடிச்சிருந்தா நான் அவருடன் நடிக்கணுமா? நான் கதைக்குத்தான் நடிப்பேன், ஹீரோவுக்கு நடிக்க மாட்டேன். இதை அவர்கிட்ட போய் சொல்லுங்க” என்றார். வந்த தயாரிப்பாளர் ஏமாற்றத்துடன் திரும்பினார். அதுதான் நதியா. இரண்டாவது படம், பெரிய நடிகர், பெரிய சம்பளத்தை தூக்கி எறிகிற துணிச் சல் அன்று நதியாவுக்கு இருந்தது.
தனது முதல் படம் முதல் கடைசி படம் வரை கண்ணியம் குறையாமல் நடித்த நடிகைகளில் நதியாவும் ஒருவர். ரஜினி, சிவாஜி, பிரபு மாதிரி பெரிய ஹீரோக்களுடனும் நடித்தார். சுரேஷ் என்ற புதுமுகத்துடன் அதிகம் நடித்தார். காரணம், அவர் ஹீரோக்களை பார்க்கவில்லை, கதையைத்தான் பார்த்தார்.
புகழின் உச்சியி–்ல் இருக்கும்போதே திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டிலானார். அதற்குப் பிறகு வந்த அத்தனை அழைப்புகளையும் நிராகரித்தார். பிள்ளைகள் வளர்ந்து ஆளானபிறகு இப்போது தன் வயதுக்கேற்ற கேரக்டர்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். சினிமாவை ஒரு தொழிலாக மட்டும் கருதி வாழ்க்கையை பிரதானமாகக் கொண்டு வாழும் நேர்மையான நடிகைகளில் நதியாவும் ஒருவர்.

No comments:

Post a Comment