Monday, 18 June 2018

திருவிளையாடல்

கதை ராமகிருஷ்ணர் ; திரைக்கதை வசனம் அடியேன்
-------------------------------------------------------------------------------
பரமசிவனும் பார்வதியும் லஞ்ச் முடித்து விட்டு ரிலாக்ஸ் செய்து கொண்டிருந்தார்கள்.
காவலுக்கு இருந்த பூத கணங்கள் “சாரி, நோ விசிட்டர்ஸ்” என்று யாரையும் உள்ளே அனுப்பவில்லை.
“வர வர எனக்கு பூலோகத்தில் ஒண்ணும் வேலையே இல்லை” என்று அலுத்துக் கொண்டார் பரமசிவன்.
அலுத்துக் கொண்ட சில வினாடிகளுக்குள் பூலோகத்தில் நடக்கும் ஒரு விஷயம் அவர்களது மானிட்டரில் தெரிந்தது.
“வால்யூம் வை” என்றார் பரம்ஸ். பார்வதி வால்யூமை ஜாஸ்தி செய்தார்.
இரண்டு பேர் சேர்ந்து கொண்டு ஒரு ஆளை அடித்துக் கொண்டிருக்க அவன் சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தான்.
“வேலையே இல்லைன்னு அலுத்துகிட்டீங்களே. வேலை வந்தாச்சு, கிளம்புங்க”
பரமசிவன் சூலாயுதத்தை எடுத்துக் கொண்டு புறப்பட்டார். போய் சில வினாடிகளுக்குள் திரும்பி விட்டார்.
“என்னாச்சு, அதுக்குள்ள வந்துட்டீங்க?”
“அவனே திருப்பி அடிக்க ஆரம்பிச்சிட்டான். எனக்கு வேலையில்லை. சரணாகதி அடைஞ்சவனைத்தான் நான் காப்பாத்த முடியும்”
இரண்டு பேரை சமாளிக்க முடியாமல் அவன் அடிபட்டு மயங்கிக் கீழே விழுந்தான்.
“உங்களால முடிஞ்சது இவ்வளவுதான். சரி, நான் மானிட்டரை கொஞ்ச நேரம் ஆஃப் பண்ணிடறேன். நிம்மதியா இருக்கும்” என்று பார்வதி ஆஃப் பண்ணப் போகும் போது இன்னொரு காட்சி.
காட்டு வழியாக இரண்டு நண்பர்கள் போய்க் கொண்டிருந்தார்கள். எதிரில் ஒரு புலி வந்து கொண்டிருந்தது. ஒருவன் துள்ளிக் குதித்து ஓடி மரத்தில் ஏறிக் கொண்டான். நண்பனையும் ‘வாடா’ என்று அழைத்தான்.
ஆனால் அவனோ, ‘நான் கும்பிடுகிற சிவன் என்னைக் கைவிட மாட்டார்’ என்று சொல்லி விட்டு அங்கேயே நின்று கண்மூடி பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தான்.
“இப்பவாவது போங்களேன். அவந்தான் எந்த முயற்சியும் பண்ணல்லையே?”
“சேன்ஸே இல்லை. அவனும் ஓடிப் போய் மரத்தில் ஏறிக்கலாமே, அதை விட்டுட்டு என்னைக் கூப்பிட்டு என்ன புண்ணியம்?”
இதைப் பரமசிவன் சொல்லிக் கொண்டிருந்த போதே புலி அவனை அடித்துச் சாப்பிட்டு விட்டது.
“நீங்க பண்ற எதுவுமே சரியில்லை. ஒருத்தன் தப்பிக்க முயற்சி பண்ணான். அவன் அடிபட்டே செத்துப் போய்ட்டான். கேட்டா சரணாகதி அடையல்லை. அவனே திருப்பி அடிக்க ஆரம்பிச்சிட்டான்னு கோபம். இன்னொருத்தன் சரணாகதி அடைஞ்சான். அவன் முயற்சியே பண்ணல்லைன்னு கோபம். என்னதான் நினைச்சிகிட்டு இருக்கீங்க? யு ஹேவ் ஒன்லி ரீஸன்ஸ் ஃபார் நாட் டூயிங் யுவர் ட்யூட்டி” என்று சீதாப் பாட்டி அப்புசாமியை மிரட்டுவது போல மிரட்டினார் பார்வதி.
“உனக்குப் புரியாது”
“சொல்லுங்களேன், புரிஞ்சிக்க முயற்சி பண்றேன்”
“தன்னாலே முடியாத ஒரு விஷயத்தை, இது என்னாலே முடியாதுன்னு புரிஞ்சிக்கிறதும் அதை ஒப்புக்கிறதும், அதற்குப் பிறகு என்னைக் கூப்பிடறதும்தான் சரணாகதி. அப்படி சரணாகதி அடையும் போது மமதை விலகுகிறது. மமதை இல்லாத இடத்துக்குத்தான் என்னால் போக முடியும். முடியாத ஒண்ணை இது என்னாலே முடியும்ன்னு நினைக்கிற பிடிவாதம் என்னை விலக்கி வெச்சிடும்.”
”ரொம்ப சரி; ஆனா எதிர்ல புலி வரும் போது அந்த ஆள் சரணாகதிதானே அடைஞ்சான், அங்கே எந்த மமதையும் இல்லையே?”
“அந்த இடத்தில் புலி கிட்டயிருந்து தப்பிக்கிறது இயலாத விஷயம் இல்லை. பக்கத்திலிருந்த அவனுடைய நண்பன் தப்பிச்சிப் போய் மரத்தில் ஏறிக்கல்லையா? தன்னால முடிஞ்ச விஷயங்களுக்கு என்னை உதவிக்கு எதிர்பார்க்கிறதை நான் எப்பவுமே ஆதரிக்கிறதில்லை.”
“அதுக்காக அவனை சாகடிக்கணுமா?”
“புலியையும் நாந்தானே படைச்சேன்? அதுக்கு உணவு குடுத்தாகணுமே, புலியை எப்படிப் பட்டினி போடுவேன்?”
“இந்த நியாயம் எனக்குப் புரியல்லை”
“இதைப் படிக்கிறவங்க வேறு நியாயங்கள் வெச்சிருக்காங்களான்னு பார்ப்போமே?”

No comments:

Post a Comment