Sunday, 17 June 2018

திகில் - ஒன்று

 ன் அம்மாவின் அறுபதாவது பிறந்த நாளையொட்டி ஊர்ப்பக்கம் சென்றிருந்தேன். சாதாரணக் கோவிலில் கொண்டாடினால் சரியாக இருக்காது என்று, அறுபதாவது பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காகவே ஒரு கோவில் இருப்பதாகச் சொல்லி அங்கே கொண்டாடுவதாக ஏற்பாடு. கடலூர் தாண்டி இருக்கும் அந்த ஊரின் பெயர் நினைவுக்கு வர மறுக்கிறது. அபிராமி அம்மன் கோவில், மார்க்கண்டேயன் கோவில் இருக்குமிடம். ஆ! நினைவுக்கு வந்து விட்டது, திருக்கடையூர். 

போன இடத்தில் கொஞ்சம் கூட எதிர்பாராவிதமாக ரகுவைச் சந்தித்தேன். ரகுவுடன் எனக்கு ஓட ஓட உறவு. (என் அம்மாவோட ..வோட ..னோட மகன்). என்னை விட சில வருடங்கள் முதியவன். என் மாமா வீட்டு வேலையாள் குப்புசாமிக்கு அடுத்தபடியாக, வளரும் பருவ விவகாரங்களை எனக்கு விளக்கிச் சொன்னவன் ரகு. சிறு வயதில் நான் காரைக்காலில் சில வருடங்கள் வளர்ந்தேன். ரகு நாகூரில் வளர்ந்தான். கோடை விடுமுறைகளில் நாகூர் நாகப்பட்டினம் திருநள்ளார் பகுதிகளில் நிறையப் பொறுக்கி இருக்கிறோம். சென்னை வந்த பிறகு அவனை அடிக்கடி சந்திக்கவில்லை என்றாலும், அவனுடன் கழித்த அந்த நாகூர் கோடை விடுமுறையை மறக்கவில்லை. 

அம்மாவின் பிறந்த நாளுக்கு வந்ததற்காக நன்றி சொன்னேன். "உண்மையைச் சொல்லணும்னா, அதுக்காகனு வரலைடா. வழக்கமா இந்தப் பக்கம் வந்தேன், அப்படியே உங்கம்மாவையும் பார்த்த மாதிரி இருக்குமே" என்றான்.

"நீ கல்கத்தால இருக்குறதா சொன்னாங்க, வழக்கமா எதுக்குடா இந்தப் பக்கம் வரே?" என்றேன்.

"நாளன்னிக்கு நாகூர் போகணும்டா. அதான்" என்றான். என்னை உற்றுப் பார்த்தான். 

அவன் பார்வையின் பொருளைப் புரிந்து கொண்டதும் எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. "அடப்பாவி! இன்னுமா அதையெல்லாம் நம்பிக்கிட்டிருக்கே?" என்று அதிர்ந்தேன்.

"ஒக மாட, ஒக பாண. அந்த ரகு மாதிரி தாண்டா, இந்த ரகுவும். கொடுத்த வாக்கைக் காப்பாத்தணும்டா. நீ தான் மறந்துட்டே போல. இவ்வளவு தூரம் வந்திருக்கே, இந்த முறை எங்கூட வாயேன்" என்றான்.

எனக்குக் கடவுள் நம்பிக்கை கிடையாது. அதனால் பேய், பிசாசு, பித்ரு, சாபம், ஆசி, பாவம், புண்ணியம், சொர்க்கம், நரகம், லொட்டு லொசுக்கு இதிலெல்லாமும் நம்பிக்கை கிடையாது. இருந்தாலும் இங்கே ஒன்று சொல்ல வேண்டும். நாங்கள் இருவரும் கடைசியாகக் கழித்த நாகூர் கோடை விடுமுறையின் அந்த இரவில் நடந்த நிகழ்ச்சி, அசம்பாவிதம் தான். அறிவுக்கப்பாற்பட்ட நம்பிக்கைகளின் எல்லையில் நடந்த எசகுபிசகான சம்பவம். சித்திரா பௌர்ணமி இரவில் எலுமிச்சை பழத்தின் மேல் சூடமேற்றி உடுக்கை ஓசையுடன் 'ஹூ' என்று அலறி, விபூதியெறிந்து, நெத்தியிலடிக்கும் சம்பவம். சென்ற நாற்பது வருடங்களின் ஒரு சில இரவுகளில் விழித்தெழுந்து வியர்வை சிந்த வைத்த சம்பவம். 

"என்னடா பேச்சே காணோம்?" என்றான் ரகு. தெளிந்தேன்.

சற்று யோசித்து விட்டு சம்மதித்தேன். பிறந்த நாள் கொண்டாட்டம் முடிந்ததும், நானும் அவனும் இன்னொரு பஸ் பிடித்துக் காரைக்கால் போனோம். அன்றிரவு காரைக்காலில் தங்கிவிட்டு, மறு நாள் அங்கிருந்து நாகூர் போவதாகத் திட்டம். தரங்கம்பாடி வருவதற்குள் ரகு தூங்கி விட்டான். பஸ்ஸில் கூட்டமே இல்லை. வழக்கமாக பஸ் கிளம்பிய பத்து நிமிடங்களுக்கெல்லாம் அயர்ந்து தூங்கிவிடும் எனக்கு, அன்று தூக்கம் வரவில்லை. எதிரில் அமர்ந்திருந்தவர் புகை பிடிப்பதில் கருத்தாக இருந்தார். அவர் துப்பிய புகையைப் பொறுத்திருந்த எனக்கு, நாகூர் நினைவுகள் புகை வளையங்களாய்த் தோன்றி மறைந்தன.

    றுபத்தெட்டோ ஒன்பதோ வருடம் சரியாக நினைவில்லை. கோடை விடுமுறை. நாகூரில் என் அம்மாவின் மாமா (மாமா தாத்தா?) வீட்டிற்குப் போயிருந்தேன். ரகு அந்த வருடம் பத்தாவது முடித்திருந்தான். 'டேய் ரகு... எஸ்எல்சி வந்தாச்சுடா, ஒழுங்கா படிக்கணும்டா.. லீவ்னாலும் எதாவது கணக்குப் புஸ்தகத்தை எடுத்து படிடா' என்ற வழக்கமான நச்சரிப்பை ஒதுக்கி விட்டு பெரியம்மா ரகுவிடம், 'டேய், பக்கத்து வீட்டுல டெல்லிலேந்து வந்திருக்காடா' என்றார். 

அந்த நாளில் நாகூர் மிகச் சிறிய கிராமம். எங்கள் மாமா தாத்தா இருந்த தெருவின் கோடியில் ஒரு சிவன் கோவில். சிவன் கோவிலை ஒட்டிக் குறுக்காக இரண்டு தெருக்கள். கொஞ்சம் தள்ளி தர்கா. ஒரு அரசினர் பள்ளிக் கூடம். ஒரு மாட்டாஸ்பத்திரி. அதைத் தாண்டி TAFE நிறுவனத்தாரின் ஒரு கிடங்கு. நாகூர் அம்புட்டுதேன். பெரியம்மா பேச்சைக் கேட்டதும் எங்கள் இரண்டு பேருக்குமே சிலிர்ப்பு. டெல்லிலேந்தா? செவ்வாய் சந்திரனிலிருந்து யாரோ வந்திருப்பது போல் வியந்தோம். உடனே பக்கத்து வீட்டுக்கு ஓடினோம்.

அந்த நாள் நாகூர் அக்ரகாரத் தெருவில் வீடுகள் ஒன்றை ஒன்று ஒட்டியிருக்கும். எங்கள் தாத்தா வீட்டிற்கும் பக்கத்து வீட்டிற்கும் நடுவில் பொதுவாகக் கிணறு. இரண்டு வீடுகளிலும் கிணற்றை ஒட்டி முற்றம், தாழ்வாரம். இரவில் மட்டும் கிணற்றையும் தாழ்வாரத்தையும் மூட ஒரு மூங்கில் தட்டிக் கதவு. காலையில் நாலு ஐந்து மணிக்கெல்லாம் யாராவது எழுந்து தாழ்வாரக் கதவையும் கிணற்றுக் கதவையும் திறந்து விடுவார்கள். இல்லையென்றால் பால் தயிர் பூ காய்கறி என்று ஏதோ ஒரு காரி காரன் வந்து திறந்து விடுவார்கள். எங்கள் வீட்டிலிருந்து பக்கத்து வீட்டிற்குக் கிணற்றைச் சுற்றித் தாழ்வாரம் வழியாகத் தாவி ஓடுவோம். அன்றைக்கும் அப்படித் தான்.

வழக்கமாக நாங்கள் அப்படி குறுக்கும் நெடுக்கும் ஓடும் போது கிணற்றடியில் யாராவது இருப்பார்கள். நாங்களும் கவனிக்க மாட்டோம் அவர்களும் கவனிக்க மாட்டார்கள். அன்றைக்குக் கிணற்றைச் சுற்றிப் பக்கத்து வீட்டு முற்றத்தில் அடி வைத்தபோது, 'ஊஒ' என்ற கூச்சலைக் கேட்டு இரண்டு பேருமே திடுக்கிட்டு நின்றோம். கிணற்றடியில் பதினாலு பதினைந்து வயதில் அழகான பெண். ஒரு பாவாடையைச் சுற்றிக் கொண்டு முக்காலியில் உட்கார்ந்திருந்த பெண்ணின் அருகே இருந்த ஒரு பெரிய தொட்டியில் நீரை எடுத்து நிறைத்துக் கொண்டிருந்தாள் ஒரு வேலைக்காரி. குளிக்கத் தொடங்கியிருந்ததால், அந்தப் பெண் அணிந்திருந்த பாவாடை தண்ணீர் பட்டு அரை குறையாக நனைந்திருந்தது. அவளையே பார்த்தபடி ரகு சிலை போல் நின்றான். அவனையே பார்த்துக் கொண்டிருந்த பெண், திடீரென்று கூவினாள். 'பெரீமா.. சோர்.. கசம் சே...தோ பத்மாஷ் சோக்ரே கஹான் சே குசரே...' என்று எங்களுக்குப் புரியாத மொழியில் அலறத் தொடங்கினாள். கூக்குரல் கேட்டு ஓடி வந்த பக்கத்து வீட்டு மாமி எங்களைப் பார்த்து விட்டுச் சிரித்தாள். "என்னடா ரகு, பேயடிச்சாப்ல நிக்கறே?". வேலைக்காரி கூட ரகுவைப் பார்த்துச் சிரித்தாள். 

"இவ என் தங்கை பொண்ணு. ஷ்யாமளா. டெல்லிலேந்து வந்திருக்கா. வா, வா" என்றார். பிறகு அந்தப் பெண்ணைப் பார்த்து, "ஷ்யாமி, இவன் பேரு ரகு. பக்கத்து வீடுதான். அவன் கூட இருக்குறது யாரு?" என்றவர், என்னைப் பார்த்து "யாருடா? இந்திரா பையனா? நீ எப்படா வந்தே?" என்றார். நான் பதில் சொல்லாமல் தலையாட்டினேன். 

எங்களை உள்ளே தள்ளிக் கொண்டு போனார். "டெல்லியோன்னோ... நஹி பிஹின்னு வாயத்தொறந்தா இந்தி தான் முத்தா உதுறது" என்றார். அதற்குள் அவருடைய தங்கையும் வந்து விட்டார், "என்ன இங்கே கொள்ளை அமர்க்களம்? எதுக்குக் கத்தறா பிடாரி?" என்று தன் பெண்ணைப் பற்றி கனிவுடன் விசாரித்தபடி.

ரகுவும் நானும் பேருக்குக் கொஞ்ச நேரம் நின்று கொண்டிருந்து விட்டு, வெளிவாசல் வழியாக வெளியேறினோம். அந்தத் தருணத்தில் நாங்கள் இருவருமே வளர்ச்சியின் அடுத்தத் தட்டுக்குத் தாவினோம் என்று நினைக்கிறேன்.

அன்றைக்கு மாலை. ரகு கொல்லைப்புறத்தில் பனை நொங்கு எடுத்து வரப் போயிருந்தான். வாரா வாரம் நடைபெறும் நிகழ்ச்சி. வேலைக்காரன் பனை மரமேறி குலையோடு நொங்கை வெட்டிப் பொட, ரகு அதைப் பொறுக்கி எடுத்து எண்ணி ஒரு பெரிய முறத்தில் அள்ளிப் போடுவான். பிறகு இன்னொரு வேலைக்காரன் அவற்றைக் கழுவி சுத்தம் செய்து மூட்டை கட்டி வைப்பான். ரகு நாலைந்து நொங்கை எடுத்துக் கொண்டதும், வேலைக்காரன் மூட்டையை ரயிலடி பக்கம் மரைக்காயர் கடையில் போட்டு வருவான். 

நான் தாழ்வாரத்தில் இரும்புக்கை மாயாவி காமிக் படித்துக் கொண்டிருந்தேன். பக்கத்து வீட்டிலிருந்து அவளே வந்து விட்டாள். நேராக என்னிடம் வந்தாள். "ஏய், உன் பேர் என்ன?" என்றாள் தமிழில்.

சொன்னேன்.

அவளுடைய அடுத்த கேள்வி எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. "நீ பெரியவனாயிட்டியா?"

"என்ன கேக்கறே நீ?"

"நான் கேக்கறது புரியலைனா நீ பெரியவனாகலேனு அர்த்தம்" என்ற அவள் என்னைப் பார்த்த பார்வையில் நிச்சயமாக ஏளனம் இருந்தது. தலை குனிந்தேன். "நீ ஆயிட்டியா?" என்றேன் கடுப்புடன்.

"நான் பெரியவதான். கசம் சே. பாரு, மாரெல்லாம் வளர ஆரம்பிச்சாச்சு. பெரியவா குளிக்கற எடத்துக்கெல்லாம் நீயெல்லாம் வரக்கூடாது. டெல்லியா இருந்தா உங்க ரெண்டு பேரையும் பின்னியிருப்பேன்..கசம் சே" என்றாள்.

"நாங்க எப்பவுமே..." என்று நெளிந்தேன். "ஆமாம், உனக்கு இந்தி மட்டும் தான் தெரியும்னு சொன்னாங்க மாமி?"

"எனக்குத் தமிழ் நல்லா தெரியும், கசம் சே.. ஆனா சட்டுன்னு இந்தி வந்துடும்"

"அதான் வரிக்கு வரி கசமுசாங்கிறியா?"

"கசமுசா இல்லே. கசம் சே. ட்ரூலி...சத்தியமானு அர்த்தம். உனக்கு இந்தி கொஞ்சம் கூடத் தெரியாதா?" என்று சிரித்தாள். நான் முதல் முதலாகக் கேட்ட கவிதை. 

"எங்கே ரகு?" என்றாள். 

"மரைக்காயர் கடைக்குப் போயிருப்பான். போலாம் வரியா?" என்றேன். ரகுவின் சைக்கிளை எடுத்தேன். எனக்கு சைக்கிள் ஓட்டத் தெரியாது, இருந்தாலும் காட்டிக் கொள்ள விரும்பவில்லை. நான் சைக்கிளைப் பிடித்த விதமோ என்னவோ தெரியாது, ஷ்யாமி உடனே கேட்டு விட்டாள். "கசம் சே.. சைக்கிள் ஓட்டுவியா?".

"இப்பத்தான் கத்துக்கிட்டிருக்கேன். தனியா இருந்தா ஓட்டுவேன்..." என்று இழுத்தேன். 

"சரி, வா. கடை எங்கே இருக்கு சொல்லு" என்று சைக்கிளை எடுத்து அசால்டாக ஏறி உட்கார்ந்தாள். அப்படியே ஓட்டிக் கொண்டு வெளிவாசலுக்குப் போய் படிகளின் நடுவில் இருந்த சறுக்கில் இறங்கித் தெருவில் பிரேக் போட்டு நின்றாள். நான் வாயைப் பிளந்தபடி தொடர்ந்தேன். "இங்கே உட்காரு" என்று என்னை ஹேன்டில் பாருக்கும் சீட்டுக்கும் குறுக்கே இருக்கும் 'ஆம்பிளை' பாரில் உட்கார வைத்து ஓட்டத் தொடங்கினாள். பேசாமல் பாவாடை சட்டை போட்டுக் கொள்ளலாமா என்று தோன்றிவிட்டது எனக்கு.

மரைக்காயர் கடையிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்த ரகுவுக்கு எங்களைப் பார்த்ததும் ஒரே சங்கடம். என்னை மட்டும் பார்த்து, "எங்கேடா என்னோட சைக்கிளை எடுத்துக்கிட்டு வந்திருக்கே?" என்றான். 

"நான் தான் அவனை வரச்சொன்னேன். கசம் சே" என்றாள். "என் பெயர் ஷ்யாமி".

தலையாட்டினான். "தெரியும். உங்க பெரியம்மா சொன்னா" என்றான்.

"அவ குளிக்குறப்போ நாம போனது அவளுக்குப் பிடிக்கலே. அதான் இந்திலே திட்டினா" என்றேன். ஏதாவது சொல்ல வேண்டுமே?

"கசம் சே" என்றாள்.

"அப்படினா சத்தியமானு அர்த்தம்" என்றேன் பெருமையுடன்.

"எல்லாம் தெரியும்டா, குடாக்கு" என்று என்னை அடக்கினான். அவளைப் பார்த்து "சாரி.. நீ கிணத்தடிலே குளிக்குறது எனக்குத் தெரியாது" என்றான்.

"கிணத்தடிலே குளிக்காம வீட்டு வாசல்லயா குளிப்பாங்க? அஜீப் பாத் ஹை?" என்று சிரித்தாள். அன்றைக்கு என்னவோ அது நாகேஷ் காமெடி போல் தோன்ற, மூன்று பேரும் வயிறு வெடிக்கச் சிரித்தோம். அந்தக் கணத்தில் நண்பர்களானோம்.

"சரி, வாங்க" என்று ரகு எங்கள் இருவரையும் சைக்கிளில் முன்னும் பின்னும் உட்கார வைத்து வீட்டுக்கு ஓட்டிச் சென்றான். என்னைத் தள்ளி விட்டு ஷ்யாமி முன்புறத்தில் உட்கார்ந்து கொண்டாள். வீட்டுக்குப் போனதும் பின்கட்டிற்குச் சென்றோம். அங்கே பதுக்கி வைத்திருந்த நாலைந்து பனை நுங்குகளைச் சீவிக் கொடுத்தான் ரகு. எங்களுக்கு ஒரு நுங்கு கூட விட்டு வைக்காமல் எல்லாவற்றையும் தீர்த்துக் கட்டினாள் ஷ்யாமி. நுங்கைத் தலை சீவி, கட்டை விரலை அதன் கண்களில் நுழைத்து, கனியை வெளியெடுத்த ரகுவின் திறமையைக் கண்களை அகல விரித்துப் பார்த்தபடி ரசித்தாள். "எவ்ளோ நல்லா இருக்கு!" என்று குதுகலித்தாள். ஒவ்வொரு நுங்காக அவன் எடுத்துக் கொடுக்க, என்னருகே நின்று கொண்டிருந்தவள் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து ரகு பக்கம் சென்றாள். எனக்கு ஒன்று புரியத் தொடங்கியது. இவள் ஊருக்குப் போகும் வரை ரகு என்னைக் கவனிக்கப் போவதில்லை.

"நீ எப்போ ஊருக்குத் திரும்பிப் போறே?" என்றேன், சட்டென்று.

"நான் இங்கே தான் இருக்கப் போறேன். எங்க அம்மாவுக்கும் அப்பாவுக்கும் சண்டை. அது முடியற வரைக்கும் இங்கே தான் இருக்கப் போறேன். எங்கம்மா இனிமே டெல்லி போக போறதில்லனு சொல்றா. ஆனா நான் திரும்பிப் போயிடுவேன்"

"ஏன், நாகூர் பிடிக்கலியா?" என்றான் ரகு. அவன் கேட்டது நாகூரைப் பற்றி இல்லை என்பது எனக்குக் கூடப் புரிந்தது.

"சப்..சுப்" என்று சுளித்தாள். "பேகார்.. பேகார். அப்பா மட்டும் அம்மாவை முண்டச்சின்னு திட்டலைனா நாங்க இங்கே வந்திருக்கவே மாட்டோம். எங்கப்பா அம்மா சண்டைனால தான் கசம் சே.." என்று அவள் சொல்லிக்கொண்டிருக்க பக்கத்து வீட்டிலிருந்து அவளுடைய அம்மா வந்துவிட்டார். "என்னடி ஷ்யாமி, இங்கே என்ன பண்றே? பெரியம்மா சிவன் கோவிலுக்குப் போறா, நாமளும் போலாம் வா" என்றார். 

"நீயும் வரியா?" என்றாள் ஷ்யாமி ரகுவிடம். ரகு தயாராக இருந்தவன் போல், "ரெடி. என் கூட சைக்கிள்ல வரியா?" என்றான்.

என்னை எவரும் அழைக்கவுமில்லை. நான் போகவுமில்லை. உள்ளே சென்று ஒரு குப்பி நிறைய திரட்டுப்பால் கேட்டு வாங்கிக்கொண்டு தாழ்வாரத்திற்குச் சென்று இரும்புக்கை மாயாவியுடன் உட்கார்ந்தேன்.

அடுத்த இரண்டு மூன்று நாட்களில் இன்னும் இரண்டு இ.கை.மா புத்தகங்களைப் படித்து முடித்தேன். ரகு ஷ்யாமி தொல்லை தாங்க முடியவில்லை. எதற்கெடுத்தாலும் ஒன்றாக வந்து விடுவார்கள். என்னைக் கிண்டல் வேறு செய்வார்கள். "சின்னப் பையன்" என்று ரகு சொல்லும் போது எனக்கு உடம்பெல்லாம் எரியும். நான்காவது நாள் ஷ்யாமியைக் காணோம். என்னவென்று ரகு சென்று விசாரித்த போது அவள் மூன்று நாட்களுக்கு 'வர முடியாது' என்று சொல்லி விட்டாள். அந்த மூன்று நாட்களில் நானும் ரகுவும் நிறைய சுற்றினோம் என்றாலும் ரகு முன் போல் இல்லாதது எனக்குப் புரிந்தது. மூன்றாம் நாளிரவு மொட்டை மாடியில் படுத்துக் கொண்டிருந்தோம். எங்கள் வீட்டு மாடிக்கும் பக்கத்து வீட்டு மாடிக்கும் இடையே இருந்த சிறிய இடைவெளியை மறைத்து, இரண்டடி அகல எட்டடி நீள பழைய கல்யாண ஊஞ்சல் பலகை ஒன்றைப் போட்டிருப்பார்கள். பகலில் அதன் மேல் ப்ளாஸ்டிக் கித்தான் விரித்து அரிசி, கத்தரிக்காய், பாகற்காய், தக்காளி, ஜவ்வரிசி என்று பலவகை வடாம் இட்டுக் காய வைப்பார்கள். எலுமிச்சை பிழிந்த அரிசி வடாம் இடும் போது அதை அரைகுறையாகக் காய்ந்த நிலையில் எடுத்து ருசித்தது நினைவுக்கு வருகிறது. ம்ம்ம். இரவில் பலகை அங்கேயே தான் இருக்கும். நான் திடீரென்று விழித்துப் புரண்ட போது அருகே ரகுவைக் காணோம். கலகலவென்று சிரிப்பும் பேச்சும் அடக்கி வாசித்த தொனியில் கேட்டது. எழுந்திருக்காமல் மறுபுறம் புரண்டு பார்த்தால் இரண்டு மாடிக்குமிடையே பலகை மேல், நடுவில் தலைவைத்து, கை கோர்த்து, இந்தப் பக்கம் கால்கள் தொங்க ரகுவும் அந்தப் பக்கம் கால்கள் தொங்க ஷ்யாமியும் படுத்துக் கொண்டிருந்தார்கள். என்னவோ அரேபியத் தந்திரக் கம்பளத்தில் படுத்திருப்பது போல் வானத்தைப் பார்த்தபடி கவலையில்லாமல் அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள். எழுந்து போய் சேர்ந்து கொள்ளலாமா என்று தோன்றினாலும் பயமாக இருந்தது. பலகையின் நேர் கீழே கிணறு. ஒரே ஒரு முறை அந்தப் பலகையில் ஏறி நின்ற போது கை காலெல்லாம் நடுங்கிக் கீழே விழப் போனவனை ரகு தான் தாங்கி பிடித்தான். ரகு மட்டும் தனியாகப் பலகையின் விளிம்பில் நின்று கைகளை அகல விரித்து ஆட்டித் தலை குனிந்தபடி 'மனிதப் பறவை' என்பான். எழுந்திருக்காமல் அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். பத்து நிமிடமிருக்கும், பக்கத்து வீட்டிலிருந்து ஷ்யாமியின் அம்மா மேலே வந்து லைட் அடித்து விட்டார். ரகுவையும் ஷ்யாமியையும் பார்த்து விட்டு ஓடி வந்தார். ஷ்யாமி உடனே எழுந்து மாமியுடன் போனாள்.

"என்னடி இது, குளிரப் போறதுனு போர்வை கொண்டு வந்தா நீ ஆம்பிளப் பசங்களோட ஊஞ்சல்ல, அதுவும் தூர நாள்ல?" என்று அவர் ஏதோ சொல்லிக் கொண்டு போக, ஷ்யாமி பதிலுக்கு ஏதோ 'கசம் சே' என்று சொல்லியபடி கீழே இறங்கினாள். ரகு இறங்கி வந்து என்னருகே படுத்துக் கொண்டான். நான் மெதுவாக, "தாத்தா கிட்டே அவ அம்மா எதாவது சொல்லுவானு பயமா இருக்கா?" என்றேன்.

"முழிச்சிக்கிட்டுத் தான் இருக்கியா?" என்றவன், "ப்ச்" என்றான். "சொன்னா என்ன? ஷ்யாமி என்னைக் கல்யாணம் செஞ்சுக்குறதா சொல்லியிருக்கா. நானும் அவளைக் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்" என்றான்.

நான் எழுந்து உட்கார்ந்தேன். "என்னடா நீ? இன்னும் ஸ்கூல் கூட முடிக்கலை. ஸ்கூல் முடிச்சு, காலேஜ் முடிச்சு, வேலைக்குப் போய்.. அதுக்குள்ள கல்யாணம் பண்ணிக்கறதா?" என்றேன். "இதென்ன, பால்ய விவாகமா?"

"உனக்குத் தெரியாதுடா. நீ இன்னும் வயசுக்கு வரலை" என்றான்.

"டேய், உனக்கு மட்டும் என்னடா வயசாயிடுச்சு?"

"இது காதல்டா. பதினாறு வயசுல காதலிக்கலாம், தப்பில்லே. உனக்கு இப்போ புரியாது. அவ இங்கே தான் இருக்கப் போறா, அவளோட அம்மா சொன்னாளாம். ஸ்கூல் திறந்ததும் இங்கே தான் நாகப்பட்டினத்துல நேசனல் ஸ்கூல்ல படிக்கப் போறாளாம். நாங்க எஸ்எல்சி முடிச்சதும் கல்யாணம் பண்ணிக்கிட்டு டெல்லி போயிடறதா இருக்கோம். அவ அப்பா அவளுக்கு கவர்ன்மென்டு வேலை வாங்கித் தரதா சொல்லியிருக்காராம். எனக்கும் அங்கே வேலை கிடைக்கும்" என்றான்.

நான் பிரமித்தேன். "சரி தான், இவ்ளோ திட்டம் போட்டு வச்சிருக்கீங்களா? சரி, நாளைக்குக் காலையிலே பெரியம்மா உதைக்க வந்தா அதுக்கு என்ன செய்யறதா திட்டம்?"

மறுபடியும் "ப்ச்" என்றான். மறுநாள் காலை இவன் உதை வாங்கப் போகிறான் என்ற தீர்மானத்துடனும் இவனுடன் சேர்ந்த குற்றத்திற்கு நானும் உதை வாங்க நேரிடும் என்ற பயத்துடனும் தூங்கி விட்டேன்.

நினைத்தபடி காலையில் நடக்கவில்லை. ஆறு மணி கூட இருக்காது. கீழே பக்கத்து வீட்டில் கூச்சல். அவசரமாக எழுந்து கீழே போனோம், விபரீதத் தொடர்ச்சியின் துவக்கம் என்பது புரியாமல்.

No comments:

Post a Comment