Sunday, 17 June 2018

பல்லுயிர் மேலாண்மை / Bio Diversity Management

நமக்கு மத்தியப் பிரதேசம், கேரளா, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்கள் குறித்தெல்லாம் எவ்வளவு புரிதல் இருக்கிறது என்று தெரியாது. ஆனால், அவர்களிடமிருந்து நாம் கற்க ஒரு பாடம் இருக்கிறது. அது, நம் வாழ்வுக்கான பாடம்; இருப்புக்கான பாடம்; எதிர்காலத்துக்கான பாடம். நம் அரசு தொடர்ந்து அஜாக்கிரதையாக இருக்கும் ஒரு விஷயத்தில், இந்த மாநிலங்கள் மிக அக்கறையாக இருக்கின்றன; சிரத்தையோடு பணி செய்கின்றன. ஆனால், நமது அரசாங்கம் 15 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட ஒரு பல்லுயிர் சட்டத்தை... அதில், கூறப்பட்டுள்ள ஒரு முக்கிய விஷயத்தை இடது கையால் அணுகிக்கொண்டு இருக்கிறது.
“அறிவெனப்படுவது யாதெனில்”
சூழலியல்அறிவெனப்படுவது மேற்கத்திய புத்தகங்களில், ஐரோப்பிய அறிவியலில் மட்டும் இல்லை. அது வீட்டு முற்றத்திலும் இருக்கிறது. நம் எளிய கிராம மக்களிடமும், நம் பழங்குடிகளிடமும் அபரிமிதமாக இருக்கிறது. ஆனால், நம்முடைய முன் முடிவுகள் இவர்களின் அறிவைச் சுவீகரித்துக்கொள்ளத் தடுக்கிறது... இவர்கள் குறித்து ஏளமான ஒரு பிம்பத்தை நமக்குள் கட்டமைக்கிறது. தர்மபுரியில் பணி செய்துகொண்டிருந்தபோது, வாரம் ஒருநாள் ஒரு விவசாய நிலத்தில் தன்னார்வலராக நண்பர்கள் சிலர் பணி செய்வோம். அப்போதுவரை நாங்கள் களைச் செடி என்று நினைத்துக்கொண்டிருந்த ஒரு பயிர் வகையை அந்தக் கிராம மக்கள் அறுத்துச் சமைப்பதைக் கண்டோம். பின், அந்த மக்களிடம் உரையாடியபோதுதான் தெரிந்தது, அது பல மருத்துவக் குணநலன்கள் வாய்ந்த துத்திக் கீரை என்று. அந்த எளிய கிராம மக்களின் உணவுத்தட்டில் துத்திக் கீரையும் பல நூற்றாண்டுகளாக இருக்கிறது என்று. அவர்கள் வெட்டுக் கீரை, குப்பைமேனி, தும்பை எனப் பல மருத்துவக் குணநலன்கள் வாய்ந்த செடிகளை குறித்து அடுக்கிக்கொண்டே போனார்கள். இவை, எதையும் பெரும்பான்மை சமூகம் அறியாதது. அறிவெனப்படுவது இதுவும்தானே... இந்தக் கிராம மக்களிடம் இருக்கும் மருத்துவமும், அறிவியலும் அறிவுதானே...? ஆனால், நாம் அவர்களை, அவர்கள் அறிவை உதாசீனப்படுத்துகிறோம்... புறக்கணிக்கிறோம்.
சரி... இந்தக் கீரை சம்பவத்துக்கும்... பல்லுயிர் மேலாண்மைக் குழுவுக்கும் என்ன சம்பந்தம்...? எதுவும் தொடர்ச்சி இல்லாமல் இருக்கிறது என்கிறீர்களா... இருக்கிறது. சொல்லப்போனால், அந்தக் களையென்று நினைக்கும் அந்தக் கீரையையும், கீரையில் உள்ள மருத்துவக் குணநலன்களை அறிந்துவைத்திருக்கும் அந்தச் சாமான்ய மக்களின் அறிவையும் காக்க, அடுத்த தலைமுறைக்குக் கடத்த இயற்றப்பட்டதுதான் பல்லுயிர் சட்டம் 2002.
“பல்லுயிர் மேலாண்மைக் குழுவும், மரபறிவும்”
சூழலியல் அறிவுபல்லுயிர் மேலாண்மைச் சட்டம், கிராம, வட்ட, மாவட்ட அளவில் பல்லுயிர் மேலாண்மைக் குழுக்களை அமைக்க வலியுறுத்துகிறது. பல்லுயிர் மேலாண்மைக் குழுவில் அந்தப் பகுதியைச் சேர்ந்த எளிய மக்கள், அரசு மற்றும் மக்கள் பிரதிநிகள் இருப்பார்கள். இந்தக் குழுவின் சார்பாகப் பல்லுயிர் ஆவணத்தைப் பராமரிக்க வேண்டும். அந்த ஆவணத்தில், அந்தப் பகுதியில் இருக்கும் அரிய வகை செடிகள், விலங்குகள், பூச்சிகள் மற்றும் நீர்நிலைகள் குறித்து பதிவுசெய்ய வேண்டும். மேம்போக்காகப் பார்த்தால், ஏதோ சிறுவிஷயமாகத் தோன்றினாலும் இது, நம் பகுதியில் உள்ள வளத்தையும் மக்களின் மரபறிவையும் ஆவணப்படுத்துகிறது... அதுவும் மக்களைக்கொண்டே. இதனால் மக்களிடையே ஓர் அறிவுப் பரிமாற்றம் நிகழ்கிறது. இதையெல்லாம் கடந்து தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் வளர்ச்சியின் பெயரால் ஏதோ அழிவுத் திட்டத்தைக் கொண்டுவந்து, கிராம வளத்தை வரைமுறை இல்லாமல் அழிப்பதை இந்த ஆவணங்களைக் கொண்டு தடுக்க முடியும். இந்தப் பகுதியில் அரியவகை செடிகள் இருக்கின்றன... அரிய வகை விலங்குகள் இருக்கின்றன. அதனால், இந்தப் பகுதிக்குக் கிரானைட் குவாரி வேண்டாம்; பல்லுயிரைச் சிதைக்கும் தொழிற்சாலைகள் வேண்டாம் என்று வாதாட முடியும். சூழலியலைக் கெடுக்கும் குவாரி முதலாளிகளும்... நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களும் ஒருவராக இருப்பதால்தானோ என்னவோ... இந்தப் பல்லுயிர் மேலாண்மைக் குழு தமிழகத்தில் கிராம அளவில் பரவாமல் இருக்கிறது.
கேரளாவில் 1,043 குழுக்களும், கர்நாடகத்தில் 4,636 குழுக்களும், ஆந்திரப் பிரதேசத்தில் 928 குழுக்களும், தெலுங்கானாவில் 710 குழுக்களும், மத்தியப் பிரதேசத்தில் 23,743 குழுக்களும் இருக்கின்றன. ஆனால், 130 சதுர கிலோமீட்டர்கள் பரந்துவிரிந்திருக்கும் தமிழகத்தில் இருப்பது வெறும் 14 குழுக்கள்தான். இது துரதிர்ஷ்டமானது மட்டுமல்ல... அழிவை வேகப்படுத்துவதும் கூடத்தான்.
மத்தியப் பிரதேசத்தில் 23,743 குழுக்கள் இருக்கின்றன என்றால், ஏறத்தாழ 2 லட்சம் மக்கள் அந்தக் குழுக்களில் இருக்கிறார்கள் என்று பொருள். அவர்களிடம் சூழலியல் குறித்து ஓர் அறிவுப் பரிமாற்றம் நிகழ்கிறது என்று அர்த்தம். ஆனால் தமிழ்நாடு அரசு, தமிழக மக்கள் சூழலியல் அறிவு பெற்றுவிடுவார்களோ என்ற அச்சத்தில்தான் என்னவோ... இந்தக் குழுக்களை அமைக்காமல் கவனமாக இருக்கிறது.
“இருவாச்சிப் பறவையும்... மனிதமயச் சிந்தையும்”
சிறுசிறு விஷயங்களை எல்லாம் பதிவுசெய்து ஆவணப்படுத்திக்கொண்டிருக்க வேண்டுமா...? இதையெல்லாம் செய்துகொண்டிருந்தால், இருவாசி பறவைமனித உழைப்பும் நேரமும்தான் விரயம் ஆகும். அதற்குப் பதில், ஏதாவது வளர்ச்சித் திட்டங்களில் நேரத்தைச் செலவிடலாம்... என யோசிப்பீர்கள் என்றால், கொஞ்சம் இருவாச்சிப் பறவையின் கதையையும் படித்துவிடுங்கள்.
ஆங்கிலத்தில், ‘Anthropocentric’ என்ற பதம் உண்டு. அதன் பொருள் எல்லாவற்றையும் மனிதமயமாக மட்டுமே யோசிப்பது. எல்லாம் மனிதனுக்குத்தான். மனிதனின் வளர்ச்சிக்கும்... பொருளாதார முன்னேற்றத்துக்கும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். எதையும் அழித்து முன்னேறிச் செல்லாம் என்று நினைப்பது. ஆனால், உண்மையில் இது பரிதாபகரமானச் சிந்தனை... தன்னைத்தானே அழித்துக்கொள்ளும் சிந்தனை. இங்கு எதுவும் தனியது கிடையாது.
ஒன்று அழிந்தால்.... அதன் தொடர்ச்சியாக எல்லாம் அழியும். இறுதியில், மனிதனும் அழிவான். உதாரணமாக, நமது நீலகிரியில் உள்ள இருவாச்சிப் பறவை (Horn bill)கள் அழிந்தால், ஏறத்தாழ 10 வகை மரங்களும் அழியும். காரணம், இருவாச்சி உட்கொண்டு வெளியேற்றும் விதைகளே உயிர்ப்புத் தரமிக்கதாக உள்ளன. அதிலிருந்து வெடித்துக் கிளம்புபவைதான் இந்த மரங்கள். இப்படியாக மட்டுமே அம்மரங்கள் பரவும். இதை நாம் எல்லாவற்றுக்குமே பொருத்திப் பார்க்கலாம். நமது பகுதியில் உள்ள ஒரு சிறுபூச்சி வகைக்கும் நம் வாழ்வுக்கும்கூடச் சம்பந்தம் இருக்கும். தேனீக்கள் அழிந்தால், மனிதகுலமே அழியும் என்பது அறிவியல். நாம் சிறிதாக நினைக்கும் ஒரு செயல், அதன் தொடர்ச்சியான சம்பவங்களால், நாம் எதிர்பார்க்கவே முடியாத மாபெரும் விளைவைத் தோற்றுவிக்கலாம் என்கிறது கேயாஸ் தியரி. அதனால், எதையும் உதாசீனப்படுத்த முடியாது.
அதனால், நம் பகுதியின் வளத்தையும், மக்களின் மரபறிவையும் ஆவணப்படுத்த வேண்டும். அதை, அடுத்த தலைமுறைக்குக் கடத்த வேண்டும். அதற்கு முதற்கட்டமாக நம் பகுதியில் பல்லுயிர் மேலாண்மைக் குழு அமைக்க அரசுக்கு அழுத்தம் தர வேண்டும்.
வேண்டுமானால், கொஞ்சம் மனிதமயமாகச் சிந்தியுங்கள்... நாம் பார்த்த நீர்நிலைகளை... நாம் பார்த்த பூச்சி வகைகளை... நாம் உண்ட உணவை நம் பிள்ளைகளும் அனுபவிக்க வேண்டும் என்று விரும்புவோம்தானே...? அதற்காகவாவது இதைச் செய்வோம்!

No comments:

Post a Comment