Saturday, 2 June 2018

4

சார் நீங்க இன்னும் இங்க தான் இருக்கீங்களா?உங்களுக்கு சென்னை ஆபிஸ்ல இருந்து லெட்டர் ஒண்ணு வந்துருக்கு”என்றபடியே அரசாங்க முத்திரை குத்திய ஒரு கவரை நீட்டினான் குணா.

கண்கள் சுருக்கி தீவிரமாய் படிக்க தொடங்கிய கார்த்திக்கை, மற்ற மூவரும் கடிதத்தின் செய்தியை அறிந்துக்கொள்ளும் ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.

கடிதத்திலிருந்து கண்களை விலக்கியவன் சிறிது நேர யோசனைக்குப் பின்,

“ம்ம்..அடுத்த ப்ரொஜெக்ட்டுக்கு தயாராக வேண்டிய நேரம் வந்துடுச்சி.ஏற்கனவே நம்ம சீஃப் ஆர்.டி.தியாகி இதைப்பத்தி என்கிட்டே பேசியிருந்தாரு.இப்ப அங்க போறதுக்கான முன்தயாரிப்புகளை செய்யச் சொல்லி லெட்டர் வந்துருக்கு.கூடிய சீக்கிரம் அங்க எப்ப போகணும்ங்கிறதை பத்தின தகவல் வருமாம்!” என கார்த்திக் சொல்லி முடிக்க,

“வாவ் சூப்பர் சார்,ப்ராஜெக்ட் எங்க” என்றான் லோகு ஆர்வமுடன்!

கார்த்திக் நால்வரையும் பார்த்து  ஒரு மர்ம புன்னகை புரிந்தபடி,அடுத்த நம்ம  ப்ராஜெக்ட்,

களக்காடு!

“அடக்கடவுளே, ஏன் சார் போறது தான் போறோம்,ஒரு நல்ல ஊருக்கு போக்கூடாது..நமக்குன்னே உலக மேப்புலயே கண்டுபுடிக்க முடியாத இடமா பாத்து அனுப்புவாங்களா?” என குணா அலுத்துக்கொள்ள மற்ற இருவரும் கார்த்திக் பார்த்துவிடாத படிக்கு தங்களுக்குள் சிரித்துக்கொண்டனர்.”

கார்த்திக், “அப்பறம் இந்த ப்ராஜெக்ட்ல நம்ம கூட இன்னொரு டீம் மெம்பர் சேந்துக்கப்போறாங்க. மிஸ் யாழினி! யாழினி ஏகாம்பரம்.இன்னும் கொஞ்ச நாள்ல இங்க வருவாங்களாம்”

குணா, “சார் நீங்க இதுவரைக்கும் சொன்னதுலயே இப்ப சொன்னது தான் காதுல தேன் வந்து பாஞ்ச மாதிரி இருக்கு..என்னடா ஆள் நடமாட்டமே இல்லாத ஊர்ல போயி கண்ணு பூத்து கிடக்கப் போறோமேன்னு நினைச்சேன்..நல்லவேளைக்கு ஒரு மிஸ் வந்து என் குறைய போக்கிட்டாங்க. ஆண்டவன் இருக்கான் சார்”

கார்த்திக், “பொண்ணுங்க பேரை கேட்டா போதுமே உடனே நீ டூயட் பாட ஆரம்பிச்சிருவியே? யாழினிகுணா! ஆனா பாரு பேர் பொருத்தமே சரியில்லையேடா..அதோட இல்லாம அந்த பொண்ணு நம்ம சீஃப்க்கு ரொம்ப வேண்டியவங்களாம்.அதனால கண்டதையும் நினைச்சிகிட்டு இருக்காம வாலை சுருட்டிகிட்டு பேசாம இருடா.” என்றான்.

“சார் சொன்னது கேட்டுச்சுல்ல?வாலை” என நரேந்தரும்,லோகுவும் கேலியாய் இடதுக்கையை மார்புக்கு நேரே வைத்து வலதுகை ஆள்காட்டி விரலால் சுருட்டி காண்பித்தனர்.

பெரியவர் அகத்தீயிடம் நிறைய விசயங்களை கேட்க நினைத்தவன் அப்போது சந்தர்ப்பம் சரியில்லாததால் “ரொம்ப நன்றிய்யா..இன்னொரு சந்தர்ப்பத்துல உங்களை மறுபடி சந்திக்கிறேன்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நால்வரும் கிளம்பினர்.

கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் அடுத்த பணிக்கான முன்தயாரிப்புக்களுக்கு தேவைப்பட்டது.கார்த்திக்கும் அவனது குழுவும் களக்காடு பற்றிய மேலதிக விவரங்களை சேகரிக்க தொடங்கினர்.கார்த்திக் பல புத்தகங்களிலிருந்தும் களக்காடு பற்றி தேடித்தேடி படித்துக் கொண்டிருதான்.இந்த வேலைகளுக்கு இடையில் அகத்தீ அய்யாவையும்,ஓலைச் சுவடிகளையும் மறந்தே போயிருந்தனர்.

இப்போது யாழினியையும் சேர்த்து கார்த்திக்கின் குழு ஐவர் குழு ஆகியிருந்தது.யாழினி-ஒற்றை வார்த்தையில் சொல்வதானால் பேரழகி!சற்றே நீட்டி முழக்கி கவிதை நடையில் சொல்லவேண்டுமானால் 'இதுவரை பூமியில் பிறந்த பெண்களில் இவள்போல் அழகி எவருமில்லை!' நல்ல வசதியான இடத்துப் பெண்ணாய் இருந்தாலும் அதன் தாக்கம் அவள் செயல்களில் ஒருபோதும் வெளித்தெரியாது. இன்னும் சொல்லப்போனால் அதை வெளிக்காட்டிகொள்ளவும் அவள் விரும்புவதில்லை. தனக்கான அடையாளம் என்பது  தன்னுடைய திறமை தானே தவிர, பிறரால் சொல்லப்படும் தன்னோடு ஒட்டிகொண்டிருக்கும் விசயங்கள் அல்ல என்பதில் மிகத்தெளிவாய் இருப்பவள்.

அவளின் வரவு  கார்த்திக்கிற்கு பெரும் உதவியாய் இருந்தது.இயல்பிலேயே இந்த துறையில் அவளுக்கு இருந்த ஈடுபாட்டின் காரணமாக நிறைய தகவல்களை அவளால் திரட்டி தர முடிந்தது.அவளின் ஆர்வம் கார்த்திக் உட்பட எல்லோரையும் திகைப்படைய செய்தது.இன்னும் ஒருபடி மேலே போய் கார்த்திக் அவள் மீது காதல் வயப்படவே தொடங்கியிருந்தான்.

No comments:

Post a Comment