Saturday, 2 June 2018

1

லைநகரில் விண்ணை முட்டும் கம்பீரத்துடன்,உயர்ந்து நின்ற அந்த கட்டிடத்தின் ஆறாவது மாடியில் இருந்த பிரம்மாண்ட அரங்கில் இந்தியாவின்  தலைச்சிறந்த விஞ்ஞானிகள்,அரசு அதிகாரிகள்,சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என பலதரப்பட்டோரும் கூடியிருந்தனர்.அது இந்திய அரசின் சுற்றுசூழல்,வனங்கள் மற்றும் காலநிலைமாற்றம் அமைச்சகத்தின்(MOEF) சார்பில் ஏற்பாடு செய்ப்பட்டிருந்த கலந்தாய்வு கூட்டம்.இப்போது இந்தியாவின் பொக்கிஷம்,இளம் விஞ்ஞானி விவேக்ராமனுஜம் அவர்கள் தன் உரையை தொடங்குவார் என ஒலிபெருக்கியில் ஆங்கலத்தில் அறிவிப்பு செய்யப்பட்டது. தன் கையிலிருந்த கோப்புகளை ஒரு முறை சரிபார்த்தவாறே,மூக்கு கண்ணாடியை நடுவிரலால் மேலேற்றியப்படி விவேக் பேச ஆரம்பிக்க,ஒட்டுமொத்த அரங்கமும் ஒற்றை நொடியில் நிசப்தத்திற்குள் புகுந்து அவர் சொல்வதை கூர்ந்து கவனிக்க தொடங்கியது.
 
அவர் பேசியதின் முக்கிய சாராம்சம்,இன்னும் பத்து ஆண்டுகளில் இந்தியா சந்திக்கப்போகும் மிகப்பெரிய பிரச்சனையை பற்றித்தான்.அது தண்ணீர்த்தட்டுப்பாடு!
“இனி வரும் காலங்களில் எத்தனை அடிக்கு ஆழ்துளை கிணறுகள் தோண்டினாலும் தண்ணீர் மட்டும் கிடைக்காது.இருக்கின்ற நதிகளிலும் மண்வளம் அனுதினம் சுரண்டப்படுவதால் நதிகள் எல்லாம் பாலைவனமாகிவிடும்..ஒரு லிட்டர் நல்ல குடிநீரின் விலை பெட்ரோலின் விலையை தாண்டி விற்கக்கூடும்.நம் பேராசையின் கொடூரத்தையும்,அலட்சியத்தின் விளைவையும் வரப்போகும் நம் சந்ததியினர் அறுவடை செய்யப்போகிறார்கள் என்பதுதான் கசப்பான உண்மை. மிக முக்கியமான ஒன்று மூன்றாவது உலகப்போர் என்ற ஒன்று உருவாகுமென்றால் அதற்கான முக்கிய காரணமாய் குடிநீர் தட்டுப்பாடுதான் இருக்கும்”என்று,விவேக் ராமனுஜம் இதன் தீவிரத்தை பற்றி விளக்கி சொல்லசொல்ல அங்கு கூடியிருந்த அத்தனை பேரின் முகத்திலும் கவலைரேகைகள் படர ஆரம்பித்திருந்தது.

**************************************************
யார் சொல்லியும் நிற்பதில்லை துப்பாக்கியில் இருந்துப் புறப்பட்ட தோட்டாக்கள்!
அந்த மென்மையான விரல்கள் துப்பாக்கியின் ட்ரிக்கரை அழுத்த,மறுநொடி அதிலிருந்து சீறிப்பாய்ந்த தோட்டா..மிகச்சரியாய் நரேந்தரின் தாடைக்கும்,மார்புக்கும் இடையே தொண்டைக்குழிக்குள் புகுந்து வெளியேறியது.நரேந்தரின் உயிர் கண்கள் வழியே சன்னமாய் வெளியேற தொடங்க..கார்த்திக்கிடம் ஏதோ சொல்ல வந்து,அது முடியாதவனாய் கார்த்திக்கின் கண்களை வெறித்தபடியே தரையில் சரிந்தான்.

நேற்றுவரை ரத்தமும் சதையுமாய் சிரித்து பேசியவன் இனி ஒருபோதும் கண் விழிக்க போவதில்லை.கண்முன்னே நண்பனை கொன்று விட்டார்கள்.ஆனாலும் காப்பாற்ற முடியவில்லை,கூப்பிடும் தூரம் தான்..ஆனாலும் குரல் எழுப்பமுடியவில்லை கார்த்திக்கினால்! அரைமயக்க நிலை..கால்கள் எழ மறுத்தன அவனுக்கு.மண்டியிட்ட நிலையில் கார்த்திக்கின் கைகள் இரண்டும் பின்னால் கட்டப்பட்டு இருந்தன. பின்னந்தலையில் இரும்பு கம்பியால் அடித்ததிருக்கிறார்கள்.வலது தோள்பக்கமாய் சாய்ந்திருந்த தலையில் கன்னம் வழி இறங்கிய ரத்தம் அவன் சட்டை நனைத்து உடலெங்கும் பரவியது.!

நரேந்தருக்கு ஏற்பட்ட கதிதான் தனக்கும் நேரும்..அவர்களுக்கு தேவையானது கிடைத்ததும் இப்போது மிச்சம் விட்டிருக்கும் இந்த உயிரும் தன்னிடம் இருக்காது என்பதை கார்த்திக் நன்றாகவே உணர்ந்திருந்தான்.துரோகம் என்ற ஒற்றை வார்த்தையின் வீரியம் எத்தனை வலிமிக்கது என்பதை கார்த்திக் முதல் முறை உணர்ந்த தருணம் அது.

“தம்பி,நதி மூலம் ரிஷி மூலம் ஆராயக்கூடதுன்னு பெரியவா சொல்லுவாங்க..இது ஏதோ சித்தர்கள் சம்மந்தப்பட்ட விசயமா மனசுக்கு பட்றது..சில இரகசியங்கள் இரகசியங்களாகவே இருக்கதுதான் எல்லாருக்கும் நல்லது கார்த்திக்..அதையெல்லாம் தெரிஞ்சிக்க நினைக்கிறது மனித சக்தியால் ஆகாத காரியம்டா!சமயத்துல அது விபரீதத்தில கூட போயி முடியலாம்” என அப்பா சொன்னது கார்த்திக்கின் மனதில் நிழலாய் தோன்ற..அவன் மெல்ல மெல்ல நினைவிழக்க ஆரம்பித்திருந்தான்.

No comments:

Post a Comment