Friday, 6 July 2018

வேதாளமும் வேதியனும்


  வாமனர் இப்படி செய்யலாமா?

 தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத வேதியன் புளிய   மரத்தில்   தொங்கிக் கொண்டிருந்த  பிரேதத்தைக்   கீழேத் தள்ளி அதை எடுத்து தோளில் போட்டுக் கொண்டு நடக்க ஆரம்பித்தான். 

 அப்போது அந்த உடலில் குடியிருந்த வேதாளம் பேச ஆரம்பித்தது. 

வேதியா!  உன் முயற்சியைப் பாராட்டுகிறேன். விடாமுயற்சியே வெற்றியைத் தரும் என்பதை புரிந்து வைத்திருக்கிறாய்.

சரி, எப்போதும் போல் நான் உனக்கு ஒரு கதை சொல்லிக் கொண்டு வருகிறேன்.  வேறுவழியில்லை .. நீ கேட்டுத்தான் ஆகவேண்டும்.  கேட்டுக் கொண்டே வா..

 ஆதி   காலத்தில் இப்பூமியில் காஸ்யப முனிவர் என்ற மகரிஷி வாழ்ந்து வந்தார். அவருக்கு திதி, அதிதி என்ற மனைவிகள்  திதிக்கு பிறந்தவர்கள் அசுரர்களாகவும், அதிதிக்கு பிறந்தவர்கள் தேவர்களாகவும் இருந்தனர்.

சத்யயுகத்தில் திதிக்கு இரு அசுரக்குழந்தைகள் பிறந்தன. ஹிரண்யாக்ஷன், ஹிரண்ய கசிபு என்பவர்களே அவர்கள் . இருவரும் மிகவும் வலிமைபடைத்தவர்களாக திகழ்ந்தார்கள்.

இதில் ஹிரண்யாக்ஷன் பூமியை எடுத்துக் கொண்டு சமுத்திரங்களுக்கடியில் மறைத்து வைத்துவிடுகிறான். மகாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்து   அவனைக் கொன்று , பூமியை மீட்டு வருகிறார்.

ஹிரண்ய கசிபு பிரம்மனை எண்ணித் தவமிருந்து, மனிதர்களாலும், தேவர்களாலும்,  விலங்குகளாலும், கர்ப்பப்பையில் பிறந்த எந்த உயிர்களாலும், ஆயுதங்களாலும், வீட்டிலும், வெளியிலும், இரவிலும் பகலிலும், மண்ணிலோ விண்ணிலோ எனக்கு மரணம் வரக்கூடாது என்று வரம் வாங்கிக் கொள்கிறான். 

மூவுலகங்களையும் தன் ஆட்சியின் கீழ் கொண்டுவருகிறான்.  தன் தம்பியைக் கொன்ற விஷ்ணுவைக் கொன்று பழிதீர்க்க வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாய் இருக்கிறான். 

அவனது மனைவி பெயர் கயது. அவள் விஷ்ணு பக்தை. இவர்களுக்கு பிறக்கும் நான்காவது ஆண் குழந்தையே பிரகலாதன்.  சதா விஷ்ணுவின் நாமத்தையே உச்சரித்துக் கொண்டிருக்கிறான். 

எனவே பிரகலாதனைக் கொல்ல பல முயற்சிகளை மேற்கொண்டு தோற்று போகிறான் ஹிரண்ய கசிபு.  முடிவில்  தூணை பிளந்து கொண்டு மகாவிஷ்ணு மனிதனும் அல்லாது விலங்கும் அல்லாமல் மனித உடலில் சிங்கத் தலையுடன் நரசிம்ம அவதாரம் எடுத்து வருகிறார். 

இரவும்  பகலும் சந்திக்கும் அந்தி வேளையில், வீடும் இல்லாமல் வீதியும் இல்லாமல் வாயிற்படியில் அமர்ந்து, வானும் இல்லாமல் பூமியும் இல்லாமல்,  அவனை தன் துடையில் வைத்து கூரிய நகங்களாலேயே அவன் வயிற்றைக்கிழித்து,  குடலை உருவி  கொன்றொழிக்கிறார்.

ஹிரண்ய கசிபுவிற்கு பிறகு  ஆஹ்லாத் என்ற சகோதரனை அசுரலோகத்திற்கு  அரசனாக இருக்கும்படி கேட்டுக் கொள்கிறான் பிரகலாதன். ஆனால் முடிவில் பிரகலாதன்  அசுரலோகத்தின் அரசனாகிறான். ஒரு நல்ல அரசனாக நேர்மையான தலைவனாக ஆட்சி செய்கிறான். அவனது மனைவி திருதியை என்பவள்.

இவர்களுக்கு பிறக்கும் மகன் வீரோசனன். அசுர குரு சுக்ராச்சாரியாரிடம்  கல்வி கற்கிறான்.  மிகவும் திறமைசாலியாக திகழ்கிறான். கடுமையான தவங்கள் இயற்றி அரிய பல வரங்களைப் பெறுகிறான். 

தன் தந்தை போலன்றி தன் பாட்டனார் ஹிரண்யனைப் போல் அசுர குணமுள்ளவனாக இருக்கிறான்.  சூரியனை எண்ணி தவமிருக்கிறான். அவன் தவத்தின் தீவிரத்திற்கு மகிழ்ந்த சூரியன் வீரோசனனுக்கு தங்கத்திலான கிரீடம் ஒன்றைத் தருகிறார். அந்தக் கீரிடத்தை அணிந்திருக்கும் போது  அவனுக்கு மரணம் என்பது நிகழாது.

ஆனால் கிரீடம் இல்லாதபோது எவரேனும் அவன் தலையில் கைவைத்தால் அக்கணமே அவன் தலைவெடித்து மரணம் சம்பவிக்கும். ஆனால் வேறு எந்தக் காரணத்தினாலும் அவனுக்கு மரணம் சம்பவிக்காது.  எனவே உறங்கும் வேளைத் தவிர அவனது தலையில் கிரீடம் இருந்து கொண்டேயிருந்தது.

(வீரோசனன் விசாலாக்ஷி என்ற தேவாம்பாளை மணம் செய்து கொள்கிறான்.  இவர்களுக்கு பிறக்கும் குழந்தையே மகாபலி.)

பிரகலாதன் தன் மகனை அரசனாக்கி விட்டு சந்நியாஸம் மேற்கொள்கிறார்.

வீரோசனன் தனது வலிமையாலும் , கர்வத்தாலும் அனைவரையும் மிரட்டி அடிபணிய வைக்கிறான். அசுரனின் தலையில் கிரீடம் இல்லாத போது அவன் தலையில் கைவைத்து அவனைக் கொல்லும் தைரியம் எவருக்கும் இல்லை. 

 பரம் பொருளே மோகினிப் பெண்ணாய் வந்து அவனை மோகம் கொள்ள வைத்து,  மதிமயங்கிய வேலையில்,  அவனே அவன் தலையில் கை வைத்து உயிரிழக்க வைக்கிறார். 

அவனுக்கு பிறகு அவனது மகன்  மகாபலி அசுரர்களின் மன்னனாகிறான்.  சோணபுரத்தை சீரும் சிறப்புமாய் ஆட்சிசெய்கிறான்.  மகாபலி தன் பாட்டனாரைப்போல் விஷ்ணுபக்தனாகத் திகழ்கிறான். விஷ்ணுவை வணங்குவதோடு விஷ்ணு பக்தர்களையும் உபசரித்து மகிழ்கிறான். 

அதனால் விஷ்ணுவின் அடியவர்களான அந்தணர்கள் , மகாபலியின் சிறப்புக்காக விஸ்வஜித் என்ற யாகத்தை நடத்துகின்றனர்.   அதன் பலனாக  வானில் பயணம் செய்யும் வண்ணம் தங்கமயமான ரதமும், வெண்ணிறக்குதிரையும், சிம்மக் கொடியும், வில்  மற்றும் அழகான கவசமும்  மகாபலிக்குக் கிடைத்தது. 

மகாபலி வித்யாவதி என்ற குலமகளைத் திருமணம் செய்து கொள்கிறான்.  (அவர்களுக்கு பிறக்கும் மகனுக்கு   பாணாசுரன் என்று பெயர் சூட்டுகின்றனர்.  தந்தையின்  யாகப் பயனால் ஆயிரங்கரங்கள் கரங்கள் கொண்ட வலிமையோடு பிறக்கும் அவனே  பிற்காலத்தில்  சிறந்த சிவ பக்தனாகத் திகழ்கிறான்.)  

மூவுலகமும் வியக்கும் வண்ணம் மகாபாலியின் ஆட்சி திகழ்ந்தது. மாதம் மும்மாரி பொழிந்தது. முப்போகம் விளைந்தது. மக்கள் செல்வாக்காய்  வாழ்ந்தனர். நீதியும் நேர்மையும் மிக்க மன்னனின் ஆட்சியில் கள்ளர்கள் பயமின்றி மக்கள் மகிழ்வுடன் வாழ்ந்தனர். 

வெளியில் செல்லும் போதும் யாரும் தங்கள் கதவுகளைக் கூடப் பூட்டிவிட்டுச் செல்வதில்லை. காரணம் திருடருக்கு அந்நாட்டில் வேலையில்லை. நாடு செல்வச் செழிப்பாக விளங்கியது. அனைத்து மக்களுக்கும் பலியின் ஆட்சி பொற்காலமாக அமைகிறது. வறுமையில்லை. நோய்நொடியில்லை. அமைதியும் சந்தோஷமும் எங்கும் நிலவுகிறது.  

அசுரகுரு சுக்ராச்சாரியாரின் ஆலோசனைப்படியும்,  மந்திரிகளின் ஆலோசனைப்படியும் , பாதாள உலகம் , தேவலோகத்தையும் கைப்பற்றுகிறான் மகாபலி. இந்திரன் தேவர்களோடு தேவலோகத்தை விட்டு ஓடி ஒளிகிறான்.

சுக்ராச்சாரியார்  மகாபலியிடம் ஆசைவார்த்தைக்   கூறி,  நீயே இனி இந்திரப் பதவியில் அமரத் தகுதியானவன் ,  அஸ்வமேத யாகம் செய்வோம் என்று கூறுகிறார்.  நர்மதைக் கரையில் 99 யாகம் வெற்றிகரமாக முடிகிறது. தேவலோகத்தில்  நூறாவது யாகம் வெற்றிகரமாக முடிந்தால் மகாபலியை எவராலும் வெல்ல முடியாது. இந்திரப் பதவியிலிருந்து அவனை யாராலும் அகற்றமுடியாது. நூறாவது யாகம் நடைபெறுகிறது.

காஸ்யப முனிவரின் மனைவியும், இந்திரன் மற்றும் தேவர்களுக்கெல்லாம் தாயான , அதிதி கவலையுறுகிறாள். தன் பிள்ளைகளும் அவர்களின் குழந்தைகளும் காட்டிலும் மேட்டிலும் ஒளிந்து அவதிப்படுவதைப் பார்த்து அவள் மனம் கலங்குகிறது.

மகாபலியின் யாகம் நிறைவேறினால் அவன் இப்போது பெற்ற வெற்றியும் தேவலோகவாசமும் நிரந்தரமாகிவிடுமே, பிறகு தேவர்களின் கதி? 

தவத்திலிருந்த காஸ்யபர் , குடிலுக்கு திரும்பி வருகிறார். மனைவியின் கவலைப்படர்ந்த முகத்தை பார்த்து காரணத்தை உணர்ந்து கொள்கிறார். 

தேவர்களும் அவரின் பிள்ளைகளே , அசுரர்களும் அவரின் பிள்ளைகளே!  அவர் யாருக்கு ஆதரவாக பேசுவது.

அதிதி! கவலையைப் போக்க ஒரு வழியிருக்கிறது. பிரமன் எனக்கு உபதேசித்த பயோவிரதத்தை கடைபிடி, அற்புதமான விரதம்.  யாகங்கள் செய்வதற்கு இணையான விரதம். இதை கடைபிடித்தால் உன் எண்ணம் நிறைவேறும். நல்லவையே நிகழும் என்கிறார்.

விரதம் பற்றி மனைவிக்கு விளக்குகிறார்.

பங்குனிமாதம் வளர்பிறை பிரதமை நாளில் ஆரம்பித்து திரயோதசி வரை பனிரெண்டு நாட்கள் கடைபிடிக்க வேண்டும். விரத காலத்தில்  அதிகாலையில் தினமும் நீராடி, நித்யகர்மாக்களை முடித்து, சூரியன், அக்னி ,பூமி , பரிசுத்தமான தீர்த்தம் இவற்றில் ஏதேனும் ஒன்றில் இறைவனை ஆவாஹனம் செய்து பக்தியுடன் துதிக்க வேண்டும். 

பிறகு துதிப்பாடல்களால் பகவானை வழிபட்டு, அர்க்யம், பாத்யம் ஆகியவற்றால் பூஜித்து, பால் அபிஷேகம் செய்து  ,வஸ்திரம் சந்தனம், புஷ்பம், அட்சதை தூப தீபங்களால் உபசாரங்கள் செய்து, துவாதசாக்ஷர மந்திரத்தை அர்ச்சித்து வழிபட வேண்டும். பால் அன்னம் நிவேதனம் செய்வது சிறப்பு. 

விரதகாலத்தில் மகாவிஷ்ணுவை மூல மந்தரம் ஜபித்து வழிபடுவதும், ஏழைகளுக்கு உணவளிப்பதும் சிறப்பு. மூன்றுவேளை நீராடி பாலை மட்டும் ஆகாரமாகக் கொண்டு, வாசுதேவனையே தியானித்து வரவேண்டும். 

இப்படி தினமும் வழிபட்டு கடைசி நாளில் பகவானுக்கு பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து, பாலில் கலந்த அன்னம் சமர்ப்பித்து பூஜையை முடிக்க வேண்டும் , தேவி, சகல யாகங்களும் செய்த பலனைத் தரும் இது. நீ முறைப்படி கடைபிடித்து பகவானை வழிபடு. நல்லது நடக்கும் என்கிறார்.

மிகுந்த பக்தியுடன் முறைப்படி பயோ விரதத்தை கடைபிடிக்கிறாள் அதிதி.   அதற்கான பலன் அவளுக்கு கிடைத்தது. அவளது வயிற்றில்  ஒரு அவதாரம்  அவதரித்தது.

தேவர்களின் குரு பிரகஸ்பதி, ஸ்ரீவைகுண்டத்தில் ஸ்ரீமந்நாராயணனின் முன் நின்றுகொண்டிருக்கிறார். தேவகுருவின் கண்களில் தெரிந்த கலக்கத்தைக் கண்டு பகவான் புன்முறுவல் பூக்கிறார்.

தேவ குருவே! மகாபலி பக்திமான்! தன் குலம் பொருட்டு  ஒரு தலைவனாக அவனது கடமைகளைச் செய்கிறான். அவன் செயல்களில் என்னால் குற்றம் காணமுடியவில்லை. 

பிரகலாதனின் வம்சம் அவன். பிரகலாதனிடம் நான் ஒரு வரம் கொடுத்திருக்கிறேன். அவன் வம்சத்தில் வந்த எவரையும் நான் அழிப்பதில்லையென்று. ஆனாலும் அவன் புண்ணிய பலன்களை முடிவுறும் காலம் நெருங்குகிறது.  

இந்த உலகம் முறைப்படி இயங்கிட, நான் அவதாரம் செய்ய வேண்டிய காலமும் நெருங்குகிறது. நீங்கள் செல்லுங்கள். இனி நடப்பது தேவர்களுக்கு நன்மையைத் தரும் என்கிறார்.  நிம்மதியான மனதுடன் தேவகுரு செல்கிறார்.

காஸ்யபருக்கும் அதிதிக்கும் ஒரு ஆண்  குழந்தை பிறக்கிறது.  பிறந்த குழந்தை உடனே  வாமனனாய் குள்ள உருவில் பிரம்மச்சாரியாய் மாறி  நிற்கிறது. 

 ஒரு ஓலைக் குடையுடன் இன்னொரு கையில் சிறிய கமண்டலத்தை ஏந்திய வண்ணம் , மகாபலி யாகம் செய்யும் யாகசாலையை நோக்கிச் செல்கிறார் வாமனனாய் அவதாரம் எடுத்த விஷ்ணு பெருமான்.

யாகம் இறுதிக் கட்டத்தை நெருங்கிய தறுவாயில் , யாக சாலையை நோக்கி நடந்து வரும் அந்தணச் சிறுவனைப் பார்த்து மகாபலிக்கு வியப்பேற்படுகிறது.  குள்ளனாய் இருந்தாலும் அவன் முகத்தில் தெரியும் ஒளி  மகாபலியை ஆச்சரியப்படுத்துகிறது.

வரவேற்று அமர வைக்கிறார்.  வந்த நோக்க்ம் குறித்து வினவுகிறார். அரசே தாங்கள் யாகம் செய்வதைக் கேள்விப்பட்டேன் தங்களிடம்  தானம் கேட்க வந்தேன்.

மிக்க மகிழ்ச்சி தங்களுக்கு என்ன வேண்டும்? தாங்கள் எதை விரும்பினாலும் தருகிறேன்.

மன்னா! எனக்கு பேராசை ஒன்றும் இல்லை. என் காலடி அளவில் மூன்றடி நிலம் மட்டுமே தந்தால் போதும், நான் பெரிதும் மகிழ்வேன். வாமனச் சிறுவன் கேட்கும்போதே, 

குரு சுக்ராச்சாரியார் இடைமறித்து மகாபலியைப் பார்த்து சைகை செய்கிறார்.
மன்னிக்கவும், தாங்கள் காத்திருங்கள் இதோ வந்துவிடுகிறேன் என்று வாமனரிடம் கூறிய  மகாபலி குருவினை நெருங்குகிறார்.

மகாபலி, வந்திருக்கும் சிறுவனைப் பார்ததால் சாதாரணமானவனாய் தெரியவில்லை. எனக்கென்னவோ தேவர்களுக்கு உதவவே குள்ள உருவில் மகாவிஷ்ணுவே வந்திருப்பதாகத் தோன்றுகிறது.  அந்த அந்தணச் சிறுவனை நாளை வரச்சொல். நம் யாகம் முதலில் நிறைவேறட்டும்.

மன்னிக்கவும் குருவே!  தானம் தருவதாக வாக்களித்துவிட்டேன். நான் வாக்கு மீற மாட்டேன். வந்தது மகாவிஷ்ணு என்றால் அது எனக்குப் பெருமைதான். பரந்தாமனுக்கே இந்த மகாபலி தானம் வழங்கினான் என்ற சிறப்பு எனக்குச் சேரட்டும்.

பொறு மகாபலி, நான் உன் நல்லதுக்குத்தான் செய்கிறேன். உன்பதவி அந்தஸ்து எல்லாமே பறி போய்விடும். அசுரர்குலத்துக்கே நீ துன்பத்தை ஏற்படுத்தப் போகிறாய். அசுர குரு என்ற முறையில் எச்சரிக்கிறேன்.

என்னைத் தடுக்காதீர்கள் குருவே, என்று கூறி தானம் செய்ய  நீர் வார்க்க, கமண்டல நீரை கையிலெடுக்கிறார் மகாபலி, 

சுக்ராச்சாரியார் வண்டாக மாறி கமண்டலத்தின் நீர் வெளியேறும் குழாயில் உட்புகுந்து நீர் வெளிவராமல் அடைத்துக்கொள்கிறார். 

வாமனச் சிறுவன் ஒரு சிறு குச்சியை எடுத்து குத்துகிறான். வண்டாக இருந்த சுக்ராச்சாரியாரின் கண்ணில் அக்குச்சிப் பட்டு வலியால்  அவசரமாய் வெளியேறுகிறார்.

தானம் வழங்கப்பட்டுவிடுகிறது.  வாமன சிறுவன் விஸ்வரூபம் எடுக்கிறான். மகாவிஷ்ணுவாகக் காட்சியளிக்கிறான்.

தனது ஒரு அடியில் பூலோகத்தையும் இரண்டாவது அடியில் மேலுகங்களையும் அளக்கிறார் விஷ்ணு. ‘ மகாபலி மூன்றாவது அடியை எங்கே அளப்பது?’  கேட்கிறார் நாரயாணன்.

ஸ்ரீமன் நாராயணனை வணங்கிய மகாபலி.  எம்பெருமானே!  தங்கள் திருவடியை என் சிரசிலேயே வைத்துக் கொள்ளுங்கள் என்று மண்டியிட்டு பணிகிறார்.  

மகாபலியின் சிரசில் காலடி வைத்த மகாவிஷ்ணு, அவரை பாதாள உலகம் அனுப்புகிறார்.

 இவ்வாறு மகாவிஷ்ணு தேவர்களை காப்பாற்றி, இந்திரனுக்கு அவன் பதவியை மீட்டுக்கொடுத்தார்.

வேதியா! இதுவரை மகாபலி சக்கரவர்த்தியின் கதையைக் கேட்டாய். மகாபலி ஒரு நேர்மையான அரசன் என்பதை அறிந்தோம். அதோடு பக்தி மிக்கவன். முறைபடி யாகங்களைச் செய்கிறான். 

தன் யாகங்களின் மூலம் பெற்ற வலிமையால் மூவுலகங்களையும் வெற்றி பெறுகிறான். ஒரு அரசனாக அவன் செய்த செயல்களில் தவறில்லை. குடிமக்கள் யாரையும் அவன் இம்சிக்கவில்லை. இறுதியில் தன் வாக்குத் தவறாமல் மூன்றடி மண் கேட்ட வாமனனுக்கு குரு சுக்ராச்சாரியாரின்  எச்சரிக்கையையும் மீறி தானமளிக்கிறான்.  

ஆனால் மகாவிஷ்ணு தன் பக்தனையே இப்படி ஏமாற்றலாமா?  வாமன வடிவில் வந்து தானம் பெற்று பின் எல்லாலோகங்களையும் மகாபலியிடமிருந்து நேர்மையற்ற முறையில் அபகரிக்கலாமா?  இது சரியா? தவறா? 

என் கேள்விக்கு சரியானப் பதில் தெரிந்திருந்தும் நீ சொல்லாமல் மௌனம் சாதித்தால் உன் தலை சுக்கல் நூறா£க வெடித்துச் சிதறும்!

‘சரி, சரி பொறு வேதாளமே! உன் கேள்விக்கான பதிலை சொல்ல முயற்சிக்கிறேன்’ என்ற வேதியன் வேதாளத்தின் கேள்விக்கு பதில் கூறத் தொடங்குகிறான்.

“ஹிரண்யகசிபு ஒரு அசுரர் குல மன்னன். அசுரலோகத்தை ஆட்சி செய்கிறான். பிரம்மனை எண்ணி தவமிருந்து பலவரங்களையும் பெறுகிறான். மூவுலகங்களையும் ஆட்சிசெய்கிறான். இந்திரனையும் இந்திராணியையும் சிறைவைக்கிறான். தேவர்களையும் முனிவர்களையும் துன்புறுத்துகிறான்.

பிறகு நானே கடவுள் என்று இறுமாப்பு எழுகிறது அவனுக்கு ,  இரண்யாய நமஹ என்று தன்னை வழிபடும்படி கூறுகிறான்.  அசுரர் தலைவனான அவன் பெற்ற சக்திகள் யாவும் படைக்கும் கடவுளால் வழங்கப்பட்டது. ஆனாலும் எல்லோரையும்விட தானே  சக்திமிக்கவன் என்ற அகங்காரமே அவனுக்கு அதிகமாக இருக்கிறது.  

அவனது மகன் பிரகலாதன் விஷ்ணுவின் மேல் பக்தி பூண்டு திகழ்கிறான். நாராயணாய நமஹ என்றே ஜபித்து¢ வருகிறான். தன்னை வழிபடும்படி  பிரகலாதனை வலியுறுத்துகிறான் இரண்யன்.  

எல்லாம் வல்ல கடவுள் ஸ்ரீமன்நராயணன் ஒருவரே, நீங்களும் அவரை வழிபடுதலே முறை. உங்களின் செயல்பாடுகள் தவறு என்று கூறுகிறான் பிரகலாதன். இதனாலேயே  அவனைக் கொல்ல பல முயற்சிகளை மேற்கொள்கிறான் இரண்யன். தன் மகனையே கொல்லத்துணிந்து தீய குணங்களின்  வடிவாய் நிற்கும் ஹிரண்யனை மகாவிஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுத்துக் கொல்கிறார்.

பிரகலாதனின் பக்தியால் மனம் நெகிழ்ந்து பிரகலாதனுக்கு வரங்கள் பல தருகிறார். அவனது வம்சத்தை இனி வதைக்க மாட்டேன் என்றும் அருளுகிறார். 

பிரகலாதனுக்கு பின் அவனது மகன் வீரோசனன் அசுரர்குல அரசனாகிறான். இவனும் பிரம்மனையும், சூரியனையும் வழிபட்டு வரம்பல பெற்று, தன் பாட்டனாரைப்போல் அகங்காரம் கொண்டு அலைகிறான். தேவர்களை சிறைப் பிடிக்கிறான். தேவஅசுரப் போர்க்காலத்தில்  நாராயணனின் தந்திரத்தால் தானே தனக்கு கொள்ளி வைத்துக் கொள்கிறான்.

அவனது மகன் மகாபலி விஷ்ணு பக்தி கொண்டு திகழ்கிறான். ஆனாலும் அசுரர் குல குரு சுக்ராச்சாரியார் மற்றும் தன் மந்திரிகளின் ஆலோசனைகளால் மூவுலகங்களையும் வென்றெடுக்கிறான். 

நாடிழந்த தேவர்கள் அல்லல் படுகிறார்கள்.  மகாபலி தன் நாட்டைமட்டும் நல்லபடி ஆளவேண்டும் என்ற நிலையிலிருந்து மாறி மூவுலகங்களையும் வென்றது, அவன் உள்ளத்தின் பேராசையையும், சுயஅறிவின்றி மற்றவரின் தூண்டுதல்களின் பேரில் அவன் செயல்படுவதாகவும் இங்கே தெரிய வருகிறது. 

மகாபலி விஷ்ணுவின்  மேல் கொண்ட பக்தியின் காரணமாகவே அவனுக்கு புண்ய பலன்கள் பல கிட்டுகிறது. அவனது ஆட்சி நேர்மையாய் நடக்கிறது.  மகாவிஷ்ணுவே அவனது பக்தியை மெச்சி இந்திரப்பதவியை அவனிடம் அளித்ததாக புராணமொன்று கூறுகிறது.  

மகாபலி தன் குருவின் ஆலோசனையின் பேரில் செய்யும் யாகம் வெற்றிகரமாக நிறைவேறினால் , தேவர்கள் என்னென்றும் நிரந்தரமாக அல்லல்பட நேரிடும் என்கிற நிலை உருவாகிறது.  

மகாபலி விஷ்ணு பக்தன்தான். நேர்மையான அரசன்தான் ஆனால் அவன் தந்தை வீரோச்சனனும், வீரோச்சனனின் பாட்டனார் ஹிரண்யனும்   தேவர்களையும் , முனிவர்களையும் கொடுமைப்படுத்தியவர்களாகவே இருந்தார்கள்.  

மகாபலியின் யாகம் மூலம் மூவுலகமும் அசுரர்குல ஆதிக்கத்தின் கீழ்நிரந்தரமாய் வந்து விட்டால், எதிர்காலத்தில் வரும் அசுரகுல மன்னன் மகாபலி போல் சிறந்த அரசனாக இருப்பான் என்பதற்கு நிச்சயத் தன்மை எதுவும் இல்லை.

அனைத்தும் அறிந்த பரந்தாமன் எதிர்காலத்தில் நடப்பதையும் அறிந்திருக்கிறார்.  மகாபலியின் மகனான பாணாசுரன் தன் தந்தையின் குணம் கொண்டவனல்ல , அசுரர்களின் முரட்டுத் தனம் அவனிடம் அதிகமாய் இருக்கிறது. 

அவனால் தேவர்களும் , முனிவர்களும் , மகக்ளும் துன்பப்படுவார்கள்  என்பதையும் அவர் அறிகிறார். எனவே மகாபலியின் யாகம் நிறைவேறாமல் இருக்கச் செய்வதோடு , மூவுலகங்களிலிருந்தும் அவனது ஆட்சியை  அகற்ற முடிவுசெய்கிறார்.  

இந்நிலையில் தேவகுருவின் வேண்டுதலும், அதிதியின் வழிபாடும் நிகழ்கிறது. அவர்களுக்கும்  அருள் செய்ய வேண்டிய கடமை வருகிறது.

விஷ்ணுவின் செய்கை எப்போதும் சரியாக   இருக்கிறது என்பது  இப்போது நமக்கு விளங்குகிறது.

மகாபலி, விஷ்ணுவின் தீவிர பக்தன். அவனுக்கு தன் விஸ்வரூபத்தை காட்டியருள விருப்பம் கொள்கிறார்.  ஒரு பக்தன் பெறுகின்ற மிகப்பெரிய பேறு இது. மகாவிஷ்ணு தன் விஸ்வரூபத்தை முதன் முறையாக மகாபலிக்கே காட்டியருள்கிறார். (பின்னர் எடுக்கும் கிருஷ்ண அவதாரத்தில் அர்ச்சுனனும், கர்ணனும் அவரது விஸ்வரூபத்தை கண்டுமகிழ்கிறார்கள்.)

மகாபலி தீவிர ஹரிபக்தன், அவனை அழித்து யாகத்தை தடுத்த நிறுத்த விஷ்ணுபிரான் விரும்பவில்லை. அதோடு மகாபலியின் பாட்டனாரான, தன் பக்தன் பிரகலாதனிடமும் ஏற்கனவே அவனது வம்சத்தை அழிக்க மாட்டேன் என்ற வரத்தையும் கொடுத்திருக்கிறார். எனவே மாற்றுருவில் அவதாரம் எடுத்து மகாபலியிடம் வருகிறார்.

அதோடு சுயரூபத்தில் விஷ்ணுபிரான் வந்திருந்தால்,  தான் வழிபடும் தெய்வத்திற்கே தானம் அளிப்பதை மகாபலி விரும்ப மாட்டான். 

அனைத்தையும் அவர்காலடியில் சமர்ப்பித்துவிடுவான். எனவே விஷ்ணு தன் பக்தனின் சிரசில் திருவடி பதித்து அவனுக்கு   அருள்புரியும் நோக்கில் வாமன அவதாரத்தில் வந்து மூன்றடி மண் கேட்கிறார்.   பிறகு விஸ்வரூபதரிசனம் காட்டுகிறார். மூவுலகையும் மகாபலியிடமிருந்து மீட்டெடுக்கிறார்.  பிறகு அவனது சிரசில் காலடி வைத்து அருள்புரிகிறார். 

பரம்பொருளுடன் இணைவதே  ஆன்மா பிறவியெடுத்ததன் நோக்கம். மகாபலியின் தூய ஆன்மா பகவானின் காலடி பட்டு தன்னையுணர்கிறது. அதன் பின்   மோட்சத்தை  எய்துகிறது என்பதை புராணம் வழிநாம் அறிய முடிகிறது. 

மகாபலிக்கு மோட்சத்தை அளித்த பரம்பொருள், நிரந்தரமாய் பாதாள உலகத்தை ஆளும் வரத்தையும், வருடம் ஒருமுறை தன் நாட்டிற்கு சென்று தன் குடிமக்களை காண்டு வரும் வரத்தையும் அருளுகிறார். 

அந்நாளையே கேரள மக்கள் திருஓணம் பண்டிகையாக கொண்டாடி மகிழ்கிறார்கள். பாதாள உலகத்தை ஆளும் போது மகாபலி ராஜயோகத்தில் ஈடுபட்டு ஆத்மநிவேதன பூஜையின் மூலம் இறைவனோடு ஒன்றுவதாகவும் புராணமொன்று கூறுகிறது.

பரம்பொருளான மகாவிஷ்ணுவின் செயல்பாடுகள் எதுவானாலும் அது எல்லா உயிர்களுக்கும் நன்மைகளை செய்வதற்காகவும், தீயவர்களை அழித்து, நல்லவர்களை காப்பதற்காகவும்தான் என்பதை நாம் உணரமுடிகிறது. 

அவரது செயல்களில்  சரி எது, தவறு எது? என்று ஆராய்ந்து பார்க்கும் சக்தி நம் சிற்றறிவுக்கு இல்லை, அப்படி ஆராய்வதும் மடமை. அவர் எது செய்தாலும் அது சரியாகவே இருக்கும் என்பதே நான் முடிவாய் கூறும் பதிலாகும்.”  வேதியன் கூறி முடிக்கிறான். 

வேதாளத்தின் கேள்விக்கு சரியான பதிலை சொல்லியதன்  மூலம் வேதியனின் மௌனம் கலைந்ததால்  வேதாளம் அவனிடமிருந்து விடுபட்டு மீண்டு¢¢ம் புளிய மரத்திற்குச்  சென்று,   கிளையொன்றைப் பற்றிக்கொண்டு   தலைகீழாக தொங்க ஆரம்பித்தது.

No comments:

Post a Comment