Monday, 2 July 2018

தமிழ் சினிமா

தற்கொலைப் பாதையில் தமிழ் சினிமா?
தயாரிப்பாளர் ஜூ.வி. தற்கொலை செய்துக் கொண்டார்.
ஏவி.எம். ஏன் அமைதியாக இருக்கிறது?
தொண்ணூறுகளின் பிரம்மாண்ட தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் எங்கு போனார்?
அசைக்க முடியாத ஆள் என்று பெயரெடுத்த ஆஸ்கர் மூவிஸ் ரவிச்சந்திரனை வங்கிகள் ஏன் மிரட்டுகின்றன?
சூர்யா மூவிஸ் ஏ.எம்.ரத்னம் ரத்தக்கண்ணீர் வடித்த கதையெல்லாம் தெரியுமா?
லஷ்மீ மூவி மேக்கர்ஸ் என்ன ஆயிற்று?
ரோஜா கம்பைன்ஸ் இப்போது எங்கிருக்கிறது?
சத்யஜோதி ஃபிலிம்ஸ் எங்கே?
பிரமிட் சாய்மீரா என்ன ஆனது?
செவன்த் சேனல் மாணிக்கம் நாராயணன்?
அழகன் தமிழ்மணி?
ராஜ் பிலிம்ஸ் ராமநாதன்? கோவைத்தம்பி?
‘வின்னர்’ படத்தை தயாரித்த தயாரிப்பாளர், இப்போது துணை நடிகராக துண்டு துக்கடா வேடங்களில் நடிப்பது ஏன்?
யோசித்துக் கொண்டே போனால் இந்த பட்டியல் செஞ்சுரி அடிக்கும். வடபழனியில் மொட்டை போட்டுக்கொண்டு, வெயிலுக்கு தலையில் துண்டு போட்டுக் கொண்டு கோடம்பாக்கம் தெருக்களில் ஹவாய் செருப்பு தேய நடந்துக் கொண்டிருப்பவர்கள் யாரென்று நினைக்கிறீர்கள்? நம்ம தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள்தான்.
உழுதவன் கணக்கு பார்த்தால் உழக்காவது மிஞ்சும். சினிமா தொழிலில் அதுகூட கிடைக்காது. ஊரை சுற்றி வட்டிக்கு வாங்கிய கடன்தான் கழுத்தை நெறிக்கும்.
இன்னும் நாலு ஹிட் கூட கொடுக்காத இளம் ஹீரோ ஒருவர் பத்து கோடி சம்பளம் கேட்பதாக சொல்கிறார்கள். இத்தனைக்கும் அவர் நடித்த கடைசி இரண்டு படங்கள் அட்டர் ஃப்ளாப். ஹீரோவின் கவுரவத்தை காக்க தியேட்டரில் ஆள் வைத்து ஈ ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழ் சினிமாவின் வசூல் வரலாற்றில் மறக்க முடியாத படங்களான ‘முரட்டுக்காளை’யும், ‘சகலகலா வல்லவ’னும் ரிலீஸ் ஆனபிறகும் ரஜினியும், கமலும் எவ்வளவு சம்பளம் வாங்கினார்கள் என்று யாராவது ‘இந்த’ புதிய ஸ்டார்களுக்கு எடுத்துச் சொன்னால் தேவலை.
சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது.
பொள்ளாச்சிக்கு அருகில் அந்த படத்தின் ஷூட்டிங். தயாரிப்பது பாரம்பரியமான நிறுவனம். நம் படத்தின் வேலைகள் எப்படி போய்க் கொண்டிருப்பது என்று பார்க்க சென்னையிலிருந்து தயாரிப்பாளர் கிளம்பிப் போகிறார்.
தயாரிப்பாளரை ஸ்பாட்டில் கண்டதுமே இயக்குநர் பதறிவிட்டாராம். “நீங்க எதுக்கு சார் இங்கே வந்தீங்க? ஹீரோ கோச்சிக்கப் போறாரு!” என்று விரட்ட ஆரம்பித்தாராம்.
“என்னங்க அநியாயமா இருக்கு. பணத்தை போட்டு படமெடுக்குறது நாங்க. ஒழுங்கா எடுக்கறீங்களான்னு பார்க்க வந்தா ஹீரோ எதுக்குங்க கோச்சிக்கணும்? அவங்க அப்பாவையே வெச்சி படமெடுத்தவங்க நாங்க தெரியுமில்லே” என்று தயாரிப்பாளர் அமைதியாக சொல்லியிருக்கிறார்.
கேரவனிலிருந்து ஹீரோ இறங்கினாராம். தயாரிப்பாளர் அவருக்கு வணக்கம் வைத்திருக்கிறார். தயாரிப்பாளரை பார்த்ததுமே ஹீரோவுக்கு கோபம் (!) வந்து, ‘பேக்கப்’ சொல்லிவிட்டு மீண்டும் கேரவனுக்குள் போய்விட்டாராம். தயாரிப்பாளர் முன்னிலையில் ஹீரோவுக்கு ஹீரோயினுடன் ‘கெமிஸ்ட்ரி’ ஒர்க்கவுட் ஆகாதாம்.
அதிர்ச்சியடைந்துப் போன தயாரிப்பாளர் தலையில் அடித்துக் கொண்டு, “இந்த தமிழ் சினிமா நாசமாதாண்டா போகப் போவுது” என்று மண்ணைத் தூற்றி அப்படியே சென்னைக்கு பஸ் ஏறினார். தியேட்டர்களுக்கு ஒழுங்காக லாபம் வரக்கூடிய படங்களாக வருடா வருடம் மூன்று, நான்கு படங்களை தயாரித்துக் கொண்டிருந்த அந்நிறுவனம் அதன் பிறகு படத் தயாரிப்பையே நிறுத்திக் கொண்டது.
இப்படிதான் தமிழ் திரையுலகம் சீரழிந்து கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் இருப்பதே தோராயமாக 1300 திரையரங்குகள்தான். என்னதான் அப்பாடக்கர் படமாக இருந்தாலும் 700 முதல் 800 தியேட்டர்களில் ரிலீஸாவதே பெரிய விஷயம். எந்திரனோ / தசாவதாரமோ பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் வரும்.
FMS ஏரியா என்று சொல்லக்கூடிய அயல்நாடுகளில் ஒட்டுமொத்தமாக ஐம்பது, அறுபது தியேட்டர்களில் ஒரு தமிழ் படத்தை ரிலீஸ் செய்ய முடிந்தாலே அதிசயம். தெலுங்கில் மார்க்கெட் / இந்தியில் ஃபேமஸ் என்பதெல்லாம் டுபாக்கூர். ஷாருக்கான், அமீர்கானை எல்லாம் கூடதான் தமிழ்நாட்டில் எல்லாருக்கும் தெரியும். அவர்கள் படங்கள் இங்கே ரிலீஸ் ஆனால் கோடி கோடியாகவா வசூல் ஆகிறது?
ஒரு பக்கா கமர்ஷியல் ஹிட் என்பது இங்கே ரூ.50 கோடிதான் வசூலிக்கும். இது, முன் பின் மாறலாம். நகரங்களில் அதிகபட்சமாக (மல்ட்டிப்ளக்ஸ் அரங்குகளில்) ரூ.120 டிக்கெட் கட்டணம், சாதாரண அரங்குகளில் 50, 60 ரூபாய். சிறுநகரங்களில், போஸ்டரிலேயே இரண்டாவது வாரத்திலிருந்து ரூ.20 கட்டணம் என்று கூவிக்கூவி தியேட்டருக்கு அழைக்க வேண்டியிருக்கிறது.
தயாரிப்பு, விளம்பரம், வினியோகம், தியேட்டர் வாடகை, க்யூப்/யூஎஃப்ஓ கட்டணம் என்றெல்லாம் இதர செலவுகள் போக மிஞ்சுவதுதான் ஒரு படம் கொடுக்கக்கூடிய லாபம்.
உண்மை இப்படியிருக்க, ரூ.40 - 50 கோடியில் ஒரு தமிழ் படத்தை எடுத்தால் எப்படி லாபம் கிடைக்கும்? அட, முதலாவது தேறுமா?
பத்து, இருபது, முப்பது, நாற்பது என்று நட்சத்திரங்களுக்கு கோடிகளை தூக்கி கொட்டிவிட்டு வினியோகஸ்தர்களுக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும், ரசிகர்களுக்கும், கடைசியாக தனக்கு தானேவும் கூட நாமம் போட்டுக் கொள்கிறார்கள் நம் தயாரிப்பாளர்கள்.
இதுவரை சோலோவாக ஒரே ஒரு ஹிட்டு கூட கொடுக்காத ஒரு ஹீரோ கேட்கும் சம்பளம் நாலு கோடியாம். மூன்று வருடங்களாக ஒரு ஹீரோவுக்கு படமே இல்லை. ஆனால், ‘அடுத்த சூப்பர் ஸ்டார் நான்தான்’ என்று சொல்லிக் கொண்டு சம்பளமாக பத்து விரல்களையும் விரித்துக் காட்டுகிறாராம்.
எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் ஒரு வெற்றிப்படத் தயாரிப்பாளர் அடுத்து நான்கு படங்களாவது தயாரிக்கக்கூடிய தெம்பில் இருப்பார். இன்றோ ஒரு தயாரிப்பாளர் தன் வாழ்நாளில் மூன்று படங்களை தயாரித்து விட்டாலே அது சாதனைதான்.
இயக்குநர்களின் ரப்ஸர் இன்னொரு கதை. டபுக்கு டபான் டான்ஸ் ஆடுவதற்கு எதற்கு நியூஸிலாந்து லொகேஷன்? சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைக்கு போயும் கூட ஹீரோயினின் மத்தியப் பிரதேசத்தை ஹீரோ முகரும் காட்சிகளைதானே படம் பிடித்து வருகிறார்கள். இதை ஊட்டியிலோ, கொடைக்கானலிலோ எடுத்துத் தொலைத்தால் என்ன?
ஒரு கதைக்கு எது தேவையோ, அதை தவிர்த்து அத்தனை செலவையும் தயாரிப்பாளர்களுக்கு வைக்கிறார்கள். கேட்ட சம்பளத்தைவிட கெஞ்சிப்பேசி கொஞ்சம் குறைத்து ஒப்புக்கொள்ள வைத்த தயாரிப்பாளரிடம் ‘ஒரு மலை முழுக்க சிகப்பு பெயிண்ட் அடிக்கணும்’ என்று சாங் ஷூட்டிங்குக்கு ஓர் இயக்குநர் டிமாண்ட் செய்தாராம். அவ்வளவு பெயிண்டுக்கு எங்கே போவது என்று மண்டைகாய்ந்து, கடைசியில் ஒரு பெயிண்ட் கம்பெனியிடம் பெரிய அமவுண்டுக்கு காண்ட்ராக்ட் பேசி (அந்த கம்பெனியில் இருந்து டைரக்டருக்கு கமிஷனாம்) தயாரிப்பாளர் மாதக்கணக்கில் அலைந்துத் திரிந்து, நொந்து நூடுல்ஸ் ஆகிவிட்டிருக்கிறார். கடைசியில் சுற்றுச்சூழலை காரணம் காட்டி அனுமதி கிடைக்காததால் தயாரிப்பாளரின் கல்லாப்பெட்டிக்கு அவ்வளவு சேதாரமில்லை.
இதன் பிறகு நடந்ததுதான் பகீர். “நான் கேட்கிறதை எல்லாம் நீங்க செஞ்சிக் கொடுக்க முடியலை. பிராடக்ட் சுமாராதான் வரும்” என்று கைவிரித்து அழவைத்திருக்கிறார் இயக்குநர்.
இதையெல்லாம் கேட்க நல்லாவா இருக்கு?
பதினைந்து ரூபாய் திருட்டு டிவிடிக்கு மக்கள் அடிமையாகிக் கொண்டிருக்கிறார்கள். தியேட்டர்களை இழுத்து மூடி திருமண மண்டபங்களாகவும், ஷாப்பிங் காம்ப்ளக்ஸுகளாகவும் மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் வருடா வருடம் நூற்றுக்கணக்கான கோடிகளை கொட்டி மோசமான தரத்தில் மொக்கைப் படங்களை எடுத்து வெளியிடுவதால் யாருக்கும் எந்த பயனும் இல்லை. எல்லாப் பிரச்னைகளையும் தற்காலிகமாவது மூட்டை கட்டிவிட்டு தயாரிப்பாளர்களும், படைப்பாளிகளும், கலைஞர்களும் ஒன்று சேர்ந்து தாங்கள் கற்றுக் கொண்ட மொத்த வித்தையையும் இறக்கி சினிமாவை காப்பாற்ற வேண்டிய நேரமிது. இல்லாவிட்டால் கோவணமும் மிஞ்சாது.
பெரும் அழிவிலிருந்து ஊரையோ / உலகையோ சினிமாவில் ஒரு ஹீரோ காப்பாற்றுவான்.
இது கற்பனைதான். ஆனால், இதேதான் நிஜத்திலும் இப்போது நடந்தாக வேண்டும். அப்போதுதான் திரையுலகம் பிழைக்கும்.
யெஸ், ஹீரோக்கள் தங்கள் சம்பளத்தை குறைத்துக் கொள்ள முன்வர வேண்டும். அல்லது தயாரிப்பில் பங்கேற்று லாபத்தையோ நஷ்டத்தையோ எது வந்தாலும் சரிசமமாக பகிர்ந்து கொள்ள வேண்டும்.
இது ஒன்றும் புதிய யோசனை அல்ல. தெலுங்கு, இந்தியில் தொடங்கி ஹாலிவுட் வரை இப்படித்தான் நடக்கிறது. நம்புங்கள், இந்திக்கு அடுத்தபடி அதிக லாபக் கணக்கு காட்டும் தெலுங்கில், முன்னணி ஹீரோக்களாக இருக்கும் நால்வரின் சம்பளம் படம் ஒன்றுக்கு எவ்வளவு தெரியுமா? ரூ.14 கோடிக்குள்தான்.
தமிழிலும் இந்த நடைமுறை வந்தால்தான் இண்டஸ்டிரி பிழைக்கும்.

No comments:

Post a Comment