Monday 2 July 2018

ஒரு டிவியின் கதை

நன்றி: விகடன்
சுமார் ஒரு இருபது அல்லது இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் இது. எனக்கு ஒரு ஐந்தோ அல்லது ஆறு வயதிருக்கும். அன்றைய காலக்கட்டத்தில் டி.வி. என்பது நடுத்தர வர்க்கத்தினருக்கு சற்று பெரிய விஷயம். தெருவிற்கு ஏதாவது ஒரு வீட்டில் தான் டி.வி. என்ற ஒன்றை பார்க்கவே முடியும். எங்கள் வீட்டில் அப்போது டி.வி. கிடையாது. அதனால் நான் பக்கத்து வீட்டிற்கு சென்று டி.வி. பார்ப்பேன். சிறுவனான நான் டி.வி.யில் வரும் விளம்பர இடைவேளைகளில் வெளியில் வந்து விடுவேன். பார்த்த விளம்பரங்களை எத்தனை தடவை பார்ப்பது? என்ற ஒரு எண்ணத்தில் வந்தேனோ என்னவோ, தெரியவில்லை. இப்படி அடிக்கடி அடுத்த வீட்டில் இருந்து கரெக்டாக விளம்பர இடைவெளியில் வெளிவந்து, பிறகு விளம்பரம் முடியும் போது போய் ஒட்டிக்கொள்வது அந்த வீட்டுக்காரர்களை கடுப்பேற்றி இருக்கிறது. அதனால் ஒரு நாள் நான் விளம்பர இடைவேளைக்கு அவர்கள் வீட்டை விட்டு வெளியேறியபோது அவர்கள் தங்கள் வீட்டிற்குள் தாழிட்டுக்கொண்டார்கள்.
பிறகு நான் திரும்பி வந்து பார்த்தபோது கதவு மூடியிருந்ததால் நான் திரும்பி வந்து விட்டேன். ஆனால், அவர்கள் நான் போன பிறகு கதவை மூடிக்கொண்டது, நான் ஏமாற்றத்துடன் வீடு திரும்பியது அனைத்தையும் வேலைக்கு போய்விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த என் அப்பா பார்த்து விட்டார். ஒரு சின்ன பையன் என்று கூட யோசிக்காமல் கதவை மூடிக் கொண்டார்களே என்ற கோபத்திலும், தன் குழந்தை எதற்காக வேறொருவர் வீட்டில் சென்று படம் பார்க்க வேண்டும் என்ற வைராக்கியத்தாலும், அடுத்த நாளே என் தந்தை ஒரு 'Second Hand' Dynora டி.வி. ஒன்றை வாங்கி வீட்டில் வைத்தார். 'தன் குழந்தை எதற்காகவும், யாருக்காகவும் அடுத்தவர்களை நம்பி இருக்கக் கூடாது என்ற எண்ணத்தில் 2000 ரூபாய் கடன் வாங்கி அந்த டி.வி.யை வாங்கிக் கொடுத்தார் என் அப்பா.
பொதுவாகவே எனக்கு அன்றிலிருந்து இன்று வரை விளையாட்டு என்பது, என்னை 'விளையாட்டாகக்' கூட கவரவில்லை என்பதே உண்மை. கிரிகெட்டை பற்றி எதுவுமே தெரியாத ஒரு இந்தியன் உண்டென்றால், அது நான் மட்டும் தான். ஊரே 'இந்தியா ஜெயிச்சிடுச்சி' என்ற கொண்டாட்டத்தின் அர்த்தம் என்ன என்பதை புரியாதவன் நான். அதனாலேயே எனக்கு 'Visual Media Entertainment' எனப்படும் சினிமா மீது ஆசை உண்டானது. அந்த ஆசையின் தொடக்கம் இந்த டி.வி.யில் இருந்து தான் எனக்கு ஆரம்பித்தது. வீட்டில் Dynora டி.வி. வந்த பிறகு, எல்லாமே மாறிப்போனது எனக்கு. பல ஞாயிறுகள் மக்கள் கூட்டத்தால் என் வீடு நிரம்பியது. இப்போது நான் 'விளம்பர' இடைவேளையில் வெளியே போய்விட்டு வந்தால், வழிவிட ஒரு கூட்டமே இருந்தது.
சில ஒளிபரப்பு நிகழ்ச்சிகள் எனக்கு இன்றும் நினைவில் உண்டு. அதிலும் தூர்தர்ஷன் நிகழ்ச்சிகள் நிறையவே எனக்கு நினைவில் இருக்கிறது. நிறைய பேருக்கு 'Junoon' சீரியல் ஞாபகம் இருக்கும், ஒளியும் ஒலியும் ஞாபகம் இருக்கும். இந்த சமயத்தில் என்னுடைய ஞாபக சக்தியையும் சோதித்துப் பார்த்துக் கொள்கிறேன். 'Gaint Robot' என்ற ஆங்கில சீரியல் நினைவிருக்கிறதா? நிறைய பேர் மறந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். ஒரு கையை வானத்தை நோக்கித் தூக்கி பறக்க ஆரம்பிக்கும் எந்திர மனிதன் அவன். எனக்கு முதன்முதலில் எந்திர மனிதன் என்ற ஒன்று இருந்ததை காட்டியது அந்த ரோபாட் தான். இந்திய தேசிய ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் அடிக்கடி தூர்தர்ஷன் ஒளிபரப்பும் பாடல், 'மிலே சுரு மேரா துமாரா' என்ற பாடல். கமல்ஹாசன், கே.ஆர்.விஜயா, பாலமுரளி கிருஷ்ணா, அமிதாப் பச்சன் இன்னும் பலரை இந்த பாடலை ஒரு சேர பார்க்கலாம். உண்மையில் ஏ.ஆர். ரகுமானின் 'வந்தே மாதரம்' பாடலை விட, இந்த பாடல் தேசிய உணர்வை தட்டி எழுப்பக்கூடிய உத்வேகமான பாடல் என்பதை மறுப்பதற்கில்லை.
அன்றைக்கே எவ்வளவு விளம்பரங்கள் தூர்தர்ஷனில்? நிர்மா வாஷிங் பவுடர் மற்றும் லியோ காபி விளம்பரம், ஒனிடா டிவியின் விளம்பரத்தில் வரும் கொம்பு வைத்த மனிதன், Cadbury Dairy Milk விளம்பரத்தில் வரும் 'என்ன விசேஷமே... வாழ்விலே' என்ற பாடல், மீரா சியக்காய் பவுடர் விளம்பரம் என்று பல. நிகழ்ச்சிகள் என்று பார்த்தால் குழந்தைகளுக்காகவே நிறைய இருந்தது தூர்தர்ஷனில். சக்திமான், Giant Robot, Super Human Samurai போன்றவை குழந்தைகளுக்கானவை. முக்கியமாக ஞாயிறுகளில் காலை 8.30 அல்லது 9 மணிக்கு 'மோக்லி - The Jungle Book' என்ற கார்ட்டூன் சீரியலை பார்பதற்காகவே விடுமுறை நாட்களில் நான் சீக்கிரம் எழுந்த நாட்கள் அன்று. பெரியவர்களுக்கு என்று பார்த்தால், ஷோபனா ரவி மற்றும் பாத்திமா பாபுவின் செய்தி வாசிப்புகள், Junoon சீரியல், ஒளியும் ஒலியும் பாடல்கள், துப்பறியும் சாம்பு நகைச்சுவை தொடர், ஞாயிறு மாலை திரைப்படம் போன்றவை அவர்களுக்கான மெனுக்கள். ஒவ்வொரு ஞாயிறு இரவும் 8.30 மணிக்கு 'Superhit Mukabula' என்ற நிகழ்ச்சியை ஒளிபரப்புவார்கள். அதில் தமிழ், ஹிந்தி, தெலுங்கு என்று தென்னிந்திய திரைப்படப் புதுப் பாடல்கள் ஒளிபரப்புவார்கள். அன்றைய தூர்தர்ஷனில் இன்னும் பல சுவையான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பானது. ஆனால், அனைத்தும் ஞாபகத்தில் வந்து தொலைக்க மாட்டேன் என்கிறது.
90'களின் மத்தியில் சாட்டிலைட் சேனல்களின் அறிமுகங்கள் ஆரம்பமாகி அவை தொலைகாட்சிகளை மொத்தமாக ஆக்ரமித்தபோது தூர்தர்ஷனின் தேவைகளும் நமக்கு தேவையில்லாமல் போனது என்னவோ உண்மை. ஆனால் 'அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு' என்பது போல இன்று பல சேனல்கள் நிகழ்ச்சிகள் என்ற பெயரில் நம் வரவேற்பறைக்கு வந்து நம்மை வாட்டியெடுக்கின்றன. ஒரே மாதிரியான நிகழ்ச்சிகள் எல்லா சேனல்களிலும் போடுவதை பார்க்கும்போது தான் இன்றைய டி.வி. சேனல்களின் Creativity Level எந்த அளவுக்கு சுருங்கிப் போயிருக்கிறது என்பதை வெளிப்படையாக காட்டுகிறது. அன்றைக்கு அந்த பழைய டயனோரா டி.வி.யின் சேனலை மாற்றுவதற்கு எனக்கு பதிமூன்று வயதுக்கு மேல் ஆன பிறகு தான் அது முடிந்தது. ஆனால், என் மகளுக்கு முழுசாக இரண்டு வயது கூட ஆகவில்லை. ரிமோட்டை எடுத்து கரெக்டாக டி.வி.யை நோக்கிக் காட்டி சேனல் மாற்றுகிறாள். அன்றைக்கு ஒரு டி.வி. வாங்கினால் கூடவே Stabilizer, Antenna என்று பல இத்யாதி பொருட்களை வாங்கி சரியாக பொருத்தினால் தான் டி.வி. ஒழுங்காக எடுக்கும். இன்று நிலைமையோ தலைகிழ். டி.வி. தேவையோ இல்லையோ, கண்டிப்பாக கம்ப்யூட்டர் ஒரு அவசியமான வஸ்துவாகி விட்டது வீட்டிற்கு. இப்பொழுதெல்லாம் எனக்கு டி.வி. பார்க்கும் வழக்கம் சுத்தமாக குறைந்து விட்டது. அது வயதின் காரணமா, இல்லை புதிதாக எதுவும் இல்லை என்ற வெறுப்பின் காரணமா என்று தெரியவில்லை. ஆனால், அந்த கதவு வைத்த Black & White டி.வி. ஏற்படுத்திய நிறைவான சந்தோஷம், இப்போதுள்ள LCD கலர் டி.வி.கள் கொடுக்கவே இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.
பைனல் கிக்:
'ஏதாவது பார்க்காத 80's படங்கள் பார்க்கலாமே? என்று மனைவி சொல்ல, அப்படி ஏதாவது நல்ல படம் கிடைக்குமா என்று You tubeல் துழாவிக் கொண்டிருந்தேன். சட்டென ஒரு ஞாபகம். எப்போதோ சிறுவயதில் சுஹாசினி படம் ஒன்றை கொஞ்சம் பார்த்திருக்கிறேன். அந்த படத்தை தேடலாமே என்று தேடியபோது கிடைத்தது இந்த 'கல்யாண காலம்'. கதை ரொம்ப சிம்பிள். ஒரு ஞாயிறு விடுமுறையில் காலை பொழுது புலர்ந்ததில் இருந்து முதல் மாலை சூரியன் அஸ்தமனமாகும் வரை ஒரு குடும்பத்தில் நடக்கும் சம்பவங்கள் தான் படத்தின் காட்சிகள். அன்றாட வீடுகளில் நடக்கும் அண்ணன் தம்பி, அக்கா தங்கைகளின் செல்ல சண்டைகள், பாச உறவுகள், பெண் பார்க்கும் படலம், அதனால் வரும் மனவருத்தங்கள் என்று ஒரு அழகான நாவலை படித்த உணர்வை தந்தது இந்த படம். 1982களிலேயே என்ன ஒரு வித்தியாசமான முயற்சி? படத்தை இயக்கியது ராபர்ட் - ராஜசேகர். படத்தில் நடித்த சுஹாசினி, தியாகு, ஜனகராஜ் மற்றும் பலர் மிக அழகாக நடித்திருக்கிறார்கள். படத்தை பற்றி கூகுளில் தேடியபோது ஒரு தகவல்களும் இல்லை. இது போன்ற நல்ல படங்களை நாமே குழி தோண்டி புதைத்து, மறைத்து விடுகிறோம் என்பதே கசப்பான உண்மையும் கூட.

No comments:

Post a Comment