Monday 2 July 2018

கா தா க

முழுநீள நகைச்சுவைத் திரைப்படங்களை அவ்வளவு எளிதில் நம்மால் மறக்க முடியாது. 1972 ஆண்டு வெளிவந்த "காசேதான் கடவுளடா". எத்தனை தடவை பார்த்தாலும் அலுக்காத படம். பெரிய நடிகர்கள் இல்லாமல் நகைச்சுவையை மட்டும் பிரதானமாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட "காசேதான் கடவுளடா' படத்துக்கு ரசிகர்களின் பேராதரவு கிட்டத் தவறவில்லை. இப்போது பார்த்தாலும் தொய்வு இன்றி ரசித்து சிரிக்கவைக்கும் படம்.
AVM நிறுவனம் தயாரித்த ஒரு முழு நீள நகைச்சுவையுடன் ஒரு நல்ல மெசேஜைத் தந்த படம் "காசேதான் கடவுளடா'. இதில் "நவரசத்திலகம்" முத்துராமன், லக்ஷ்மி, "தேங்காய்" சீனிவாசன், சுருளிராஜன், "ஆச்சி" மனோரமா, "வெண்ணிற ஆடை" மூர்த்தி, எம்.ஆர்.ஆர்.வாசு, ஸ்ரீகாந்த், "டைபிஸ்ட்" கோபு, "பக்கோடா" காதர் மற்றும் பலர்.
கதை வசனத்தை எழுதிய கோபு, டைரக்ஷன் பொறுப்பையும் ஏற்றிருந்தார். இசையமைப்பு மெல்லிசைமன்னர்" M.S.விஸ்வநாதன் அவர்கள்.
படத்தோட கதை என்னனா ...
பணம் சேர்ப்பது ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு, அதைப் பாதுகாப்பதிலேயே கவனமாக இருந்தால்,சொந்தக்காரர்களே அதை அபகரிக்க முயலுவார்கள் என்ற கருத்தை சொல்வது தான் இந்த படத்தின் கதை.
படத்தில் என்னை கவர்ந்த சில நட்சத்திரங்கள்
படத்துக்கு கதை வசனம் எழுதி துவக்கம் முதல் இறுதி வரை வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் விதமாக இயக்கி இருந்தார் கோபு.
யாரையும் நம்பாத பணக்காரப் பெண்மணியாக மனோரமா, அவரது கணவராக வெண்ணிற ஆடை மூர்த்தி.
மனோரமா கணவரின் மூத்த தாரத்து மகனாக முத்துராமன், அவரது உறவினராக ஸ்ரீகாந்த்.
அந்த வீட்டுக்கு வேலை தேடி வரும் பெண்ணாக லட்சுமி, முத்துராமனுக்கு தனது பைத்தியக்காரப் பெண்ணை மணமுடிக்க வந்து வீட்டில் டேரா அடிக்கும் எம்.ஆர்.ஆர்.வாசு, அவரது பைத்தியக்காரப் பெண்ணாக ரமாபிரபா ஆகியோர் சிறப்பாக நடித்திருந்தனர்.
ஹை லைட் காமெடி
கோடி, கோடியாகப் பணம் இருந்தும் மூக்குப் பொடிக்காக கண்டவர்களிடமும் 25 பைசா கேட்கும் பாத்திரத்தில் மூர்த்தியும், பணம் கிடைக்காத காரணத்தால் பாதாள அறையில் இருக்கும் பணத்தை அபகரிக்க முத்துராமனும், ஸ்ரீகாந்தும் போடும் திட்டங்களும், அதை நிறைவேற்ற டீக்கடைக்காரர் தேங்காய் சீனிவாசனை சாமியார் வேடத்தில் வீட்டுக்கு வரவழைத்து அவர்கள் அடிக்கும் லூட்டியும் சிரித்து, சிரித்து வயிற்றை வலிக்கச் செய்யும் நகைச்சுவையாகும்.
தேங்காய் சீனிவாசன்
தேங்காய் சீனிவாசனை எடுத்துக்கொண்டால் உடனே ஞாபகம் வருவது காசேதான் கடவுளடா படம்தான். முத்துராமனுடன் இவர் சாமியார் கெட்டப்பில் அடிக்கும் லூட்டிகள் அருமையானவை. 'அதே.. அதே..' என இவர் ஒவ்வொரு காட்சிக்கு சொல்வதும் அதிரடி சிரிப்பு.
மெட்ராஸ் பாஷை பேசும் தேங்காய் சீனிவாசன், சாமியார் பாஷை பேசத் திணறுவதும், முத்துராமனும், ஸ்ரீகாந்தும் அதை எடுத்துக் கொடுப்பதும் சிறந்த காமெடி.
தேங்காய் ரோலுக்கு முன் ஹீரோ முத்துராமன் ரோல் சிறியதுதான்.
படத்தில் லட்சுமி ரொம்பவும் வெள்ளந்தியாகச் சொன்ன ஜோக்.
தே.சீனிவாசன்: "மங்களம்! மங்களம்!"
லட்சுமி: "சுவாமி ஏன் அடிக்கடி 'மங்களம் மங்களம்' என்று சொல்கிறார்?"
வெ.ஆ.மூர்த்தி & முத்துராமன்:"அதாவது மங்களம் உண்டாகட்டும் என்று சுவாமி சொல்கிறார்".
லட்சுமி: "அடுத்தவீட்டு மங்களம் ஏற்கனவே உண்டாகிட்டதாச் சொன்னாங்களே?"
வெ.ஆ.மூர்த்தி & முத்துராமன்: ????
புகழ்பெற்ற பாடல்கள்
நடனமாட வைக்கும் பாடல்களைக் கவிஞர் கண்ணதாசன் & வாலி எழுத, மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவற்றுக்கு இனிமையான, அருமையான இசையை வடித்தார்.
"மெல்லப் பேசுங்கள் பிறர் கேட்கக்கூடாது
சொல்லித்தாருங்கள் யாரும் பார்க்கக்கூடாது'
"ஜம்புலிங்கமே ஜடாதரா ஜோதிலிங்கமே அரோகரா
வாயுலிங்கமே மகாதேவா பஞ்சலிங்கமே மகாதேவா'
"இன்று வந்த இந்த மயக்கம் என்னை எங்கெங்கோ கொண்டு போகுதம்மா'
"ஆண்டவன் தொடங்கி ஆண்டிகள் வரையில் காசேதான் கடவுளடா
அடிபட்டு மிதிபட்டு தெரிஞ்சுக் கிட்டேன்டா காசேதான் கடவுளடா'
- ஆகிய இந்த அருமையான பாடல்களைப் படமாக்கியிருந்த விதம் அனைவரையும் கவர்ந்தது.
இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்ற "ஜம்புலிங்கமே ஜடாதரா.." என்ற பாடலைப் எங்கவாது பார்க்க நேரும்போது அடக்க முடியாத சிரிப்பு வந்துவிடும். வாலியின் கவிவண்ணத்தில் பாடல் அவ்வளவு சிரிப்பு.
க்ளைமேக்ஸ் நெருங்க நெருங்க... கலாட்டா அதிகமாகிக்கொண்டே போக, அனைவரும் நகைச்சுவையில் புரட்டி எடுக்கிறார்கள். வயிறுவலிக்க சிரித்துப்பார்த்த படமான இது எப்போதும் என் ஃபேவரைட்.

No comments:

Post a Comment