Saturday, 30 June 2018

கருப்புப்பணம்

“What kind of society isn’t structured on greed? The problem of social organization is how to set up an arrangement under which greed will do the least harm; capitalism is that kind of a system”
– Milton Friedman
கருப்புப்பணம்
+++++++++++++
செல்லானுக்கு (Bank Chellan) பின்னிருக்கும் கள்ளன்
வங்கிகள்.
பெரும் கருப்புப்பணம் வங்கிகளின் வழியே தான் போகிறது என்று சொன்னால் ஆச்சர்யப்படுவீர்கள் இல்லையா? ஆனால் அது தான் உண்மை. இரண்டாம் உலகப் போருக்கு பின்னான காலகட்டத்தில் இது ஆரம்பிக்கிறது. இந்த ’சேவையை’ ஆரம்பித்து வைத்த புண்ணியம் அமெரிக்க சிஐஏ வையும், அப்போதைய சோவியத் ரஷ்யாவின் கேஜிபியையும் சாரும்.
இருவரும் போட்டிப் போட்டுக் கொண்டு குட்டி நாடுகளை, சர்வாதிகாரிகளை, மன்னர்களை ஆண்ட காலம். அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய இந்த குட்டி பூர்ஷ்வாக்களுக்கு படியளக்க வேண்டியிருந்தது. அந்த படியளத்தலை செய்ய வங்கிகளை பயன்படுத்த ஆரம்பித்தார்கள். எந்த கேள்வியும் கேட்காமல், எவ்விதமான வழிமுறைகளுமில்லாமல் அவர்கள் ஆரம்பித்து வைத்த விஷயம் தான், பின்னாளில் பல்கி பெருகி, பெரும்பாலான வங்கிகள் வழியாகவே கள்ளப் பணம் நல்ல பணமாக மாறி/”மாற்றி” ...மாற்றப்பட்டு? ...பொது சமூகத்தில் புரள செய்து, வெளியேறி எல்லாவிதமான “நல்ல” காரியங்களுக்கும் பயன்பட ஆரம்பித்தது.
ஏன் வங்கிகள் இதனை ஆதரிக்க வேண்டும்?
வங்கிகளுக்கு வியாபார ரீதியாகப் பார்த்தால், இந்த மாதிரியான கருப்புப் பணத்தினைப் போடுபவர்கள் தான் முக்கியமான வாடிக்கையாளர்கள். ஏனெனில் அவர்கள் மிக “நல்லவர்கள்”. வங்கி எவ்வளவு சேவைக் கட்டணம் கேட்டாலும் அதை தாராளமாக தருவார்கள். பெரும்பாலும், பெருந்தொகையை உள்ளேயும், வெளியேயுமாக எடுப்பவர்கள். எல்லாவற்றையும் கேஷாக தர/எடுக்க நினைப்பவர்கள். எல்லா கரன்சிகளிலும், ஊர்களிலும் கிளை வைத்திருப்பவர்கள்.
ஆக, பணம் வைத்திருந்தால் வங்கிக்கு லாபம். பணம் பரிவர்த்தனை செய்யும் போதும் லாபம். பணத்தினை பாதுகாக்க வரும் சேவைக் கட்டணம் லாபம். பல கரன்சிகளுக்கு மாற்றும்போது, கரன்சிகளுக்கான சந்தையில் வரும் பைசா விகிதங்களில் லாபம். ஒரு வேளை அரசு பிரஷர் போட்டு, இந்த “வாடிக்கையாளர்களை” பிடிக்க சொன்னால், அப்போதும், கணக்கினை காலவரையின்றி தடைசெய்கிறேன் பேர்வழி என்கிற பெயரில் பணமும் வெளியே போகாது. ஆக, உலகமெங்கும் கருப்புப் பணத்தினை புழங்க செய்வதில், வங்கிகளின் பணி இன்றியமையாதது.
இன்னும் சொல்லப் போனால், 2008இல் அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி (Financial Crisis) வந்திருந்தப் போது, இந்த கருப்புப் பணம் தான் பல வங்கிகளை காபாற்றியது என்று ஐ.நாவின் போதைப் பொருள் மற்றும் குற்றங்களுக்கான அலுவலகம் ஆதாரபூர்வமாக சொல்கிறது. ஆக, தனிநபர்களின் கைவரிசையில் தான் கருப்புப் பணம் வந்தாலும், அதன் உலகளாவிய பயன்பாடு, முக்கியமாக வங்கிகளுக்கான லிக்விடிடி’யில் (liquidity) பெரும்பங்கு வகிக்கிறது என்பது தான் கசப்பான உண்மை.
ஒரு வருடத்திற்கு அமெரிக்க, ஐரோப்பிய வங்கிகள் மட்டுமே $500 பில்லியனிலிருந்து (ரூ.2250000,00,00,000) ஒரு டிரில்லியன் (ரூ.4500000,00,00,000) வரைக்குமான கருப்புப் பணத்தினை சட்டரீதியான வங்கி நடைமுறைகளில் கைமாற்றுகின்றன என்று ஒரு கணக்கு சொல்கிறது. 1990ல் ஆரம்பித்து இன்று வரையிலான 20 வருடங்களில் மூன்றாம் உலக நாடுகள், போதைப் பொருள் விற்பவர்கள், கார்ப்பரேட் பிராடுகள், சர்வாதிகாரிகள், பெட்ரோல் தேசங்கள், கம்யுனிச சர்வாதிகார அதிகாரிகளின் பணம் என கிட்டத்திட்ட $3 – 3.5 டிரில்லியன் டாலர்கள் வரைக்குமான பணம் அமெரிக்கா வங்கிகளை மட்டுமே நம்பி சென்றிருக்கின்றன என்பது தான் அதிர்ச்சி தகவல். இதன் காரணங்கள் சுலபமானவை.
அமெரிக்காவில் ஒரு நாளைக்கு வங்கிகளுக்குள்ளேயான பரிவர்த்தனைகள் மட்டுமே $1 டிரில்லியன் டாலர்கள் (ஆதாரம்: CHIPs) அப்படிப் பார்த்தால், லீவு நாட்களை விடுத்து, கிட்டத்திட்ட 300 நாட்கள் என்றுக் கொண்டால் கூட $300 டிரில்லியன் டாலர்கள் வங்கிகள் பரிவர்த்தனைகளாக செய்கின்றன. இதில் $1 டிரில்லியன் கள்ளப்பணத்தினை உள்நுழைப்பது என்பதும், அந்த ஒரு டிரில்லியன் டாலரை அரசு தேடுவது என்பதும் கடற்கரையில் ஊசித் தொலைத்த கதை.
பெரும் வங்கிகளில் இந்த மாதிரியான பெரும் பணத்தினை பராமரித்து பாதுகாத்து குட்டிப் போட்டு பெருக்கி சேவை செய்வதற்காகவே “தனிப்பட்ட வங்கி” சேவைகள் (Private Banking) உண்டு. சிட்டி வங்கியை எடுத்துக் கொள்வோம். பொருளாதார நெருக்கடியில் நாயடிப் பட்டு, ஒரு இந்தியர் உட்கார்ந்து, அபுதாபியின் அரசோடு கெஞ்சி, கூத்தாடி காசு வாங்கி உள்ளேப் போட்டு, ஒரு வழியாய் பிழைத்த உலகின் பெரிய வங்கி. அமெரிக்க அரசின் சில செனட்டர்கள், சிட்டி வங்கியை உலகின் மிகப்பெரிய கருப்புப் பண வங்கி என்றே அழைக்கிறார்கள்.
180,000 பணியாளர்கள். 100 நாடுகளில் கிளைகள். $700 பில்லியன் நேரடியாகவும், $100 பில்லியன் தனிப்பட்ட வங்கி சேவையிலும் வைத்திருக்கும் வங்கி. 30 நாடுகளில் தனிப்பட்ட வங்கி சேவைக்கென்றே கிளைகளை திறந்திருக்கும் வங்கி. இது தான் சிட்டி வங்கியின் உலகளாவிய அடையாளம். தனிப்பட்ட வங்கி சேவைகள் என்பவை $1 மில்லியனுக்கு மேல் வைப்பு போடமுடியும் என்பவர்களுக்காக அமைக்கப்பட்டவை. அந்த பணம் எந்த நிறத்திலும் இருக்கலாம். சிட்டி வங்கியே எல்லா சேவைகளையும் “பேக்கேஜாக” செய்யும். பணத்தினை நிர்வகித்தல், வரிகளற்ற சொர்க்கத்தில் கணக்குகளை துவங்குதல், டூபாக்கூர் ஷெல் நிறுவனங்களை அமைத்தல், அதை சிக்கலான நிர்வாகத்தின் கீழ் கொண்டுவருதல், பணத்தினை ஒரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு நேரடியாக மாற்றாமல் பல டம்மி நிறுவன கணக்குகளின் வழியே ரூட் செய்தல் இன்னபிற நற்காரியங்களை “சேவையாக” செய்வார்கள். மொத்ததில் இது ரஷ்ய மேட்ரியோஷ்கா பொம்மைகளுக்கு (Matryoshka dolls) சமானம்.
சிட்டி வங்கியின் “சேவைக்கான” உதாரணம்: ரொவுல் சலீனா, மெக்சிகோவின் முன்னாள் ஜனாதிபதியின் தம்பி: $80 -100 மில்லியன்; அஸிப் அலி சர்தாரி (பாகிஸ்தான் – பெனாசீர் பூட்டோவின் கணவர்): $40 மில்லியன்+; எல் ஹட்ஜ் ஒமர் போங்கோ (கபான் என்கிற மத்திய ஆப்ரிக்காவில் இருக்கிற ஸ்டாம்ப் சைஸ் நாட்டின் சர்வாதிகாரி: $130 மில்லியன்; முன்னாள் நைஜீரிய சர்வாதிகாரி அபாச்சாவின் மகன்களுக்காக: $110 மில்லியன்
சிட்டி வங்கி என்பது ஒரு வங்கி. அமெரிக்க, ஐரோப்பிய பிரதான வங்கிகள் அத்தனையிலும் இந்த மாதிரியான சேவைகளும், கருப்புப் பண நதி,ரிஷி மூல அழிப்புகளும், விஸ்தரிப்புகளும் ’ப்ளேபாயின்’ நங்கைகள் போல ஏராள தாராளமாய் உண்டு. இது தான் பெரும் கருப்புப் பண வங்கி ரீதியான மூலம். இந்த ஷெல் கம்பெனிகள் போடுவது, பணத்தினை பல்வேறு கணக்குகள் மூலமாக மாற்றுவது என்பது ஒரு தனி அத்தியாயம். அதை வரிகளற்ற சொர்க்க தேசங்களில், தீவுகளில் இருக்கும் ஒட்டைகளையும் உலகமெங்கிலும் கிளை பரப்பியிருக்கும் வங்கிகள், வங்கிகளுக்கு இணையான சேவைகள் வழங்கும் தரகு நிறுவனங்கள் (கோல்ட்மென் சாக்ஸ், மெரில் லின்ச்) வழியாக விரிவாக ஆராயலாம்.
சரி. இதெல்லாம் மில்லியன், பில்லியன் கணக்கில் கைமாறும் பணம். குட்டி சாம்ராஜ்ங்கள் நடத்துபவர்கள், போதைப் பொருள் கடத்துபவர்கள், அரசியல்வாதிகளின் பணம், இன்னபிற சட்டத்துக்கு புறமான ஆட்கள் சேர்க்கும் பணம் எப்படி வங்கி வழியே போய், இருந்து, திரும்பி எப்படி மீட்டெடுப்பது? அதற்கும் வெவ்வேறு வழிகள் இருக்கிறது.
உணவு விடுதிகள். ஹவாலா. தங்கம், வைர வியாபாரம். ரியல் எஸ்டேட். பங்குச் சந்தை. இவை ஒவ்வொன்றிலும் எப்படி பணம் உள்ளேப் போய், இடம் மாறி, உருமாறி, தடம் மாறி வெளியே வருகிறது என்பதை பின் வரும் அத்தியாங்களில் விரிவாகப் பார்க்கலாம்.
சுலபமாக சொன்னால், எங்கெங்கெல்லாம் பொருள்/சேவையின் விலையினை நிர்ணயிப்பது கடினமோ, அங்கெல்லாம் கருப்புப் பணம் அதிகமாய் உலாவும். ரியல் எஸ்டேட் ஒரு சிறந்த உதாரணம். நீங்கள் 4 கோடி போகும் என்று சொன்னால், என்னால் அதை ரூ.40 இலட்சத்திற்கு கூட தேறாது என்று சொல்லமுடியும். இந்த மாதிரியான வியாபாரங்களில் புகுந்து விளையாடமுடியும்.
காப்பீடு – இந்தியாவில் காப்பீடு தனியார் மயமாகி வெறும் பத்துவருடங்கள் இருக்கலாம். அதற்குள்ளாகவே, எக்கச்சக்கமான பணம் புரள ஆரம்பித்திருக்கிறத் துறையாய் மாறிப் போனது.
உ.தா – எண்டோன்மெண்ட் திட்டம் எனப்படும் காப்பீடு. ஒரு குறிப்பிட்டக் காலத்திற்கு பிறகு நீங்கள் கட்டிய ப்ரீமியம் + வளர்ச்சி விகிதம் பார்த்து தொகையினை பாலிசிதாரர்களுக்கு கொடுக்கும் ஒரு திட்டம். இது தான் ஆரம்பம். 10 லட்ச ரூபாய் கேஷாக இருக்கிறது. இதை லீகலாக மாற்ற வேண்டுமென்றால், எண்டோன்மெண்ட் சுலபமான வழி.
உங்கள் மாமன், மச்சான் என எல்லார் பேரிலும் ஒரு இலட்சம் போட்டு மூன்று வருடங்கள் கழித்து வரும் தொகையை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம் என்கிற நாமினேஷனோடு எடுத்துக் கொள்ளலாம். வங்கியிலேயே ரூ.49,000 மேல் பேன் கார்ட் காட்டவேண்டுமென்கிற விதிமுறை இருக்கிறது. ஆனால் தனியார் காப்பீடு நிறுவன விற்பனையாளர்களுக்கு டார்கெட் முடிப்பது முக்கியம். அதனால் எவ்வளவு பணமாய் கொடுத்தாலும் வாங்கிக் கொள்வார்கள். சராசரியாக இம்மாதிரியான திட்டங்கள் 8.5 – 13% வரைக்குமான வளர்ச்சியை தரும். உங்கள் வைப்பு நிதியை விட அதிகம். முக்கியமான இன்னொரு பலன், இந்தியாவில் காப்பீட்டின் மூலம் வரும் பணத்திற்கு வரி கிடையாது. மூன்றே வருடங்கள், எந்த கேள்வியும் இல்லாமல் பணத்தினை வட்டியோடு திருப்பி தந்து அதற்கு வரியும் கட்டாமல், வெள்ளையாகிவிடும். எந்த கேள்வியும் கிடையாது.
வங்கிகளின் வழியே மேற்சொன்ன தொழில்களில் தான் இது சாத்தியமென்றில்லை. கருப்புப் பணத்தினை அதிகமாகப் பயன்படுத்தும் இன்னொரு சானல் – விளையாட்டு.
இந்திய கிரிக்கெட்டின் அசிங்கங்கள், மேட்ச் பிக்ஸிங், பெட்டிங் என்று நீளும் ஏரியாக்களிலும், இப்போது மாட்டி முழித்துக் கொண்டிருக்கும் ஃபீஃபா (FIFA) கால்பந்து சம்மேளனமும், இன்னபிற விளையாட்டுக்களும், கருப்புப்பண விளையாட்டில் ஒரு அங்கம். எப்படி?

Friday, 29 June 2018

உயிர் நீத்தல்

அன்றுதான் அவர்கள் அங்கு குடிவந்தார்கள், மூவருமே திருமணமாகதவர்கள் என்று அந்த வீட்டை குடக் கூலிக்கு விடும் சொந்தக் காரரிடம் தரகர் கூறியதை நினைவு கூர்ந்த எனக்கு சற்று ஆறுதலாக இருந்தது. பிரம்மச்சாரிகள்  என்றால் சோம்பேறிகள் என்பது என் ஆழமான கருத்து. இருப்பினும் இவர்களிடமும் சற்று எச்சரிக்கையாகத்தான் இருக்க வேண்டும். இவர்களிலும் சிலர்
சுத்தபத்தமாக, சுறுசுறுப்பானவர்களாக, எதையுமே சட்டென்ன முடித்து விடும் ஆர்வமுள்ளவர்களாக இருப்பார்கள். எனவே, கவனம் தேவை என்று என் தாய் அடிக்கடி கூறும் அறிவுரைகள் நினைவுக்கு வந்தன.

சமையலறை ஜன்னல் வழியாக அவர்களை நோட்டமிட்டபடி இருந்தேன். சிறிது நேரம் ஏதோ பேசிகொண்டிருந்த அவர்களில் ஒருவன் கட்டிலில் படுக்கையை விரித்து படுத்துவிட்டான். மற்றொருவன் பெட்டியை திறந்து அவனது உடுப்புக்களை எடுத்துக் கொண்டு குளியலறையில் நுழைந்து கொண்டான். பின்னொருவன் சிறிது நேரம் சுவரை வெறித்து விட்டு ஒரு சோம்பலில் தன்னை விடுவித்து கொண்டு எழுந்தவன் தங்களுடன் கொண்டு வந்த பெரிய அட்டை பெட்டியை திறந்து சில பாத்திரங்களையும், வேறு சில சாமான்களையும் எடுத்து வெளியில் பரப்ப தலைப்பட்டான். இதற்குள் குளித்து வந்தவன் அவனுடன் உதவ இருவரும் அனைத்தையும் எடுத்துக் கொண்டு அடுக்களைக்குள் நுழைந்தனர். நான் சட்டென்று கால்களை மாற்றி சற்று நகர்ந்துகொண்டேன். நல்ல வேளை அவர்கள் என்னை கவனிக்கவில்லை.

நாட்கள் மெல்ல மெல்ல நொண்டியடித்து நகர்ந்து மாதத்தின் கால்களை கவ்வி விட்டது. நானும் வழக்கப்படி அவர்களை கண்காணித்தபடி இருந்தேன். ஆனால் விதி யாரை விட்டது? இறைவன் படைப்பிலும், முடிவிலும் ஒரு புள்ளி பிசகாமல் தன் கடமையை செய்து கொண்டே தான் இருக்கிறான். அதை அவனைத் தவிர பிற உயிர்கள்தான் புரிந்து கொள்ளாமல் தன் பெருமையை நினைத்து தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். இத்தத்துவ விளக்கங்கள் என்னுள் எழக்காரணம், அன்று காலை அம்மூவருள் ஒருவன் பெரிய ஒட்டடை கம்பை எடுத்து வந்து அறையின் மூலையில் நிறுத்தியதுதான். அதைக் கண்டதும் என் அடி வயிறு கலங்கியது. நான் நினைத்தபடி அன்று மாலை என் வேளை நெருங்கி விட்டது. அவன் அடித்த அடியில் நானும் என் உறவினர்களும், நிலத்தில் வீழ்ந்தோம். அடிபட்டவுடன் எழுந்து ஓடக் கூட முடியாத கால்கள் எட்டிருந்தும் என்ன பயன் ? ஒவ்வொன்றும் ஒருபக்கம் இழுக்க என் கடைசி மூச்சை கையில் பிடித்தபடி  ஆண்டவனிடம் "இனி அடுத்த பிறவியென்று ஒன்று இருந்தால் இந்த இரண்டு கால் மனிதர்களுடன் எங்களை ஒன்று சேர்ந்து வாழ விடாதே" என்று பிரார்த்திக்கும் போது என் உயிர் பிரிந்தது.

Thursday, 28 June 2018

மைக்கில்தாஸ்

மைக்கேல் தாஸ் பங்களாவிலிருந்து வெளிவந்தார் ஜேசுராஜன். ‘இங்கேர்ந்து ஆட்டொவுல போணும்னா நாப்பது அம்பது ரூவாயாது ஆவும்’ யோசித்தார்.
“தம்பி ரிக்சா வருமா?”
“எங்க சார்?”
“எக்மோர்.”
“ஸ்டேசனுக்கா?”
“ம்.”
“வாங்க.”
அதுவரை சைக்கிள் ரிக்சாவிலேயே ஏறியதில்லை ஜேசுராஜன். துருபிடித்த பாகங்களில் எண்ணை வைத்து தேய்த்ததில் தீபாவளி காலையில் ஜட்டியுடன் சுற்றும் சிறுவர்களைப் போல ரிக்சா முழுவதும் எண்ணை வழிந்துகொண்டிருந்தது. ரிக்சாவின் இருக்கையில் போடப்பட்டிருந்த ‘மெத்தை’யின் ஓட்டைவழியே தேங்காய் நார்த்தும்புகள் குத்திவிட்டதில் எரிச்சல் அதிகமானது. சில அரசு பேருந்துகளின் இருக்கைகளை நியாபகப் படுத்தியது. பார்க்க மெத்தைபோலத் தெரியும் ஒரு பொருள் இத்தனைத் திடமாக இருப்பது ஏமாற்றமளித்தது.
‘விழாக் கமிட்டிக்காரனுவளுக்கு எவ்ளோ சொன்னாலும் புரியாது. ஆட்டோ செலவுக்கு காசு தந்தா என்னா? டொனேசனக் கொண்டு குடுத்தா மட்டும் வாயப் பொழப்பானுவ’ நொந்துகொண்டார்.
“இன்னா வெயிலு சார்?” ரிக்சாக்காரர் உரையாடலை ஆரம்பித்தார்.
“ஆமாப்பா.”
‘இவனோடு என்ன பேசுவது?’ சலிப்புடன் நினைத்தார் ஜேசுராஜன்.
“எங்க ஊர்ல நல்ல மழ.” ஏதாவது பேசலாமெனத் தொடர்ந்தார்.
“இன்னா ஊரு சார்?”
“தூத்துக்குடி பக்கத்துல…”
“மைக்கேல்தாஸ் ஊரா நீங்கோ?”
“ஆமா. மைக்கேல்தாசத் தெரியுமா?”
“ஆமா சார். அவர் வீட்டாண்டதான் நம்ம குடிச கீது. எம்பொஞ்சாதி மைக்கில்தாஸ் வூட்லதான் வேலைக்குப் போவ்து. ஒரு பத்து வர்சமாத் தெரியும் சார். அல்லாரும் ஒரே கோயில்தானே.”
“நீ க்ரிஸ்டீனா?”
“ஆமா சார்.” கழுத்திலிருந்த செபமாலையை இழுத்துக் காண்பித்தான். அதில் நூல் முழுவதும் அழுக்காயிருந்தது. சில மணிகள் உடைந்திருந்தன. சிலுவையில் பாதியில்லாமல் இருந்தது.”பேரு சிலுவப்பிச்ச. மாதாக் கோயில்ல வெள்ளக்கார சாமியாரிருந்தப்பவே எங்க தாத்தாவெல்லாம் க்ரிஸ்ட்டீனாயிட்டாங்க.”
ஜேசுராஜனுக்கு கொஞ்சம் சலிப்பாயிருந்தது. வெயிலா, சாக்கடை நாற்றமா, வாகனப் புகையா, விழாக்கமிட்டியா அல்லது சிலுவைப்பிச்சையா எனத் தெரியவில்லை, ஏனோ அவருக்கு எரிச்சலாயிருந்தது.
“இன்னும் எவ்ளோ நேரமாவும்பா?”
“ஒரு பாஞ்சு நிமிஷமாகும் சார்.”
‘பதினஞ்சு நிமிஷம்ணா ஆட்டோவுலேயே போயிருக்கலாமே?’ யோசித்தார்.
“மைக்கில் தாச இன்னா விஷ்யமா பாக்காந்த சார்?”
“எங்க ஊர் மாதாவுக்கு தங்கக் கிரீடம் செய்யுறோம். நன்கொடை வாங்கலாம்ணு வந்தேன். மகராசம்பா மைக்கில் அள்ளிக் குடுக்கிறாரே”
மைக்கில் தாசைப் பற்றிய பேச்சு அவருக்கு திடீர் உற்சாகத்தை தந்தது.
“மாதாவுக்கு தங்க கிரீடமா?” பீடியை பற்றவைத்துக்கொண்டு சிறிது இருமினான் சிலுவைப்பிச்சை.
“ஆமா. எங்க ஊர் கோயிலக் கட்டி 30 வருசமாவப்போது. அதுக்குத்தான். ஊருக்குண்ணா அள்ளிக் குடுப்பாரு மைக்கிள்தாஸ். எங்க ஊர்ல அவர மைதாஸ்னுதான் சொல்வோம்.”
“மைதாஸ்னா?”
“மைதாஸ் தெரியாதா?”
“இதெல்லாந் தெரிஞ்சா எதுக்குசார் நானு ரிச்சாவ்ல கெடந்து சாவ்றேன்?”
“மைதாஸ் கதை தெரிஞ்சுட்டா கலெக்டர் வேலையா கெடைக்கும்?”
“சர்தான். கலாஞ்சுட்ட போ”. சப்தமாய் சிரித்தான் சிலுவைப் பிச்சை. பேச்சின் சுவாரஸ்யத்தில் மூலத்தைக் குத்தும் எரிச்சல்கள் மறக்க ஆரம்பித்திருந்தன ஜேசுராஜனுக்கு.
“மைதாஸ்ண்றது ஒரு கதையில வர்ற ஆளு.”
“ஓகோ.”
“அவன் தொட்டதெல்லாம் பொன்னாகும்.”
“எப்டி அது?”
“ஒரு தேவத மைதாசுக்கு என்ன வரம் வேணும்னு கேட்டுச்சாம்.. அவன் தான் தொட்டதெல்லாம் பொன்னாகணும்னு கேட்டானாம். அதுபோல சாதாரண ஒரு ஏழக் குடும்பத்துல பொறந்த மைக்கேல் தாஸ் இண்ணைக்கு இத்தன பிசினஸ், காரு பங்களான்னு கொடிகட்டி பறக்குறாண்ணா அவன் தொட்டதெல்லாம் பொன்னாகுதுண்ணுதானே அர்த்தம். இங்க்லீஸ்ல இத மைதாஸ் டச்னு சொல்வாங்க.”
“நீ வாத்தியாரா சார்.”
“ஹெட்மாஸ்டர்.”
“அதான் சோக்கா கத சொல்ற. அப்பால என்னாச்சு?”
“ம். அப்புறம் என்னாச்சு மைதாஸ் தொட்டதெல்லாம் பொன்னாச்சு.”
“என்ன கத பாத்தியா சார்? கஷ்டப்பட்டு ஒழச்சு சம்பாதிக்கிறமாதிரி எவ்னாவது கத எய்தி வெச்ருக்கானா சார். அல்லாம் ஏதோ மேஜிக்ல ஒசந்துரலாம்ணுதான் கத வெச்ருக்கான் சார்.”
இப்படி ஒரு கோணத்தில் மைதாஸ் கதையை ஜேசுராஜன் நினைத்துப் பார்த்திருக்கவில்லை.
“நான் முழுசா ஒனக்கு கத சொல்லலியே? வரம் வாங்குன மைதாஸ் தோட்டம், வீடுன்னு எல்லாத்தையும் தொட்டான். எல்லாம் தங்கமாயிடுச்சு. இன்னும் இன்னும்ணு என்னவெல்லாம் அவங் கண்ல பட்டுச்சோ எல்லாத்தையுந் தொட்டான் எல்லாமே தங்கமாய்ச்சு. சந்தோசத்துல சாப்ட உக்காந்தான்.”
“புரியுது சார்? சாப்பாட்ட தொடங்காட்டியும் சாப்பாடும் அப்டியே தங்கமாயிருக்கும்.”
“ஆமா. சாப்பாடு தங்கமானா எப்டி சாப்டுறது? பட்டினியாயிருந்தான். அவன் பொண்டாட்டியத் தொட்டான் அவ தங்கச் செலையானா, அவன் மகளத் தொட்டான் அவளும் தங்கமாயிட்டா. அப்புறந்தான் மைதாசுக்கு வாழ்க்கையில எது முக்கியம்ணு தெரிஞ்சுது.”
சென்னையின் சேரியிலிருக்கும் ரிக்சாக்காரனுக்கும் நல்லொழுக்கப் பாடம் சொல்லித் தந்ததில் பெருமிதம் கொண்டார் ஜேசுராஜன்.
கொஞ்ச நேரம் மௌனமானான் சிலுவைப் பிச்சை.
‘ஹ்க்கும் ஹா’ கிண்டலாய் சிரித்தான்.
“என்னப்பா சிரிக்க?”
“நீ சொன்னது சர்தான் சார்.”
“என்னது?”
“மைக்கில்ராஜ் மைதாசேதான்.”
“ஆமா சொன்னேன்ல. அவர் தொட்ட..”
“அதச் சொல்லலா சார். மைக்கில்தாஸ் ஒஃப் தெரியுமா?”
“ப்ரின்ஸ் டீச்சர். நல்லாவேத் தெரியும். அத்தப் பொண்ணத்தான் கட்டிப்பேன்னு கட்டிகிட்டாரு.”
“ம். அந்தம்மா எப்டி செத்துச்சு?”
“தூக்கு போட்டுகிச்சு.”
“எப்டின்னு தெரியுமா?”
அத்தனை விபரமாகத் தெரிந்திருக்கவில்லை ஜேசுராஜனுக்கு.
“பணம் இருந்த சூட்கேஸ் ஒண்ண எடுத்துப் போட்டு அதுக்குமேல ஸ்டூல வெச்சி தூக்கு மாட்டிகிச்சு.”
“அப்டியா?”
“நாந்தான்சார் போலீஸ் வரக்குள்ள அந்தப் போட்டிய தூக்கிவச்சேன்.”
ஊரில் கேள்விப்பட்டிருந்தாலும் சிலுவைப் பிச்சை சொல்வதை முழுவதாக நம்ப இயலவில்லை.
“அப்புறம் அவர் பொண்ண?” சிலுவை கேட்டான்.
“அவளுக்கு என்னாச்சு .”
“அவர் பொண்ண யாருக்கு கட்டிக் குடுத்தாரு தெரியுமா?”
“அற்புதம் டிராவல்ஸ் பையனுக்கு.”
“அந்த நேரத்துல மைக்கில்தாஸ் பிசினஸ் படுத்துட்டதால அந்தப் பையனுக்கு கெட்டி வச்சாரு. காசு சார். காசு. அற்புதத்தோட பையன் ஊதாரி சார். மைக்கில்தாசுக்குந்த் தெரியும் ஆனா அற்புதம் பிசினஸ்ல பைசா போடுறேன்னு சொன்னாங்காட்டியும் கல்லாணம் நடந்துச்சு.”
“ஓகோ.”
“மாதா செல மாறி இருக்கும் சார் அந்தப் பொண்ணு. கல்யாணத்துக்கப்பால ஒரு நாகூட சந்தோசமாயில்ல சார். எம் பொஞ்சாதி எங்கிட்ட வந்து அழும். நீ சொன்னது சர்தான் சார். மைக்கில்தாஸ் மைதாஸ்தான். பணம் சேக்குறதுலேயே குறியா இருந்தான்.. குடும்பத்த முள்சா மறந்துட்டான்.”
அதற்குப்பின் அவனோடு பேச இயலவில்லை ஜேசுராஜனால். சிலுவைப் பிச்சையும் தீவிர சிந்தனையில் மூழ்கியிருந்தான். வாகன இரைச்சலுக்கிடையே அவர்களுக்குள்ளிருந்த மௌனம் தெளிவாகக் கேட்டது.
“சார். ஸ்டேசன் வந்தாச்சு.”
ரிக்சாவிலிருந்து இறங்கினார் ஜேசுராஜன்.
“எவ்வளவுப்பா?”
“வழக்கமா இர்வது ரூபா வாங்குறது. பாஞ்சு ரூபா தாங்க சார். ஒங்க ஊர் மாதாவுக்கு எம் பேர்ல 5 ரூபாய் டொனேசன்.” சிரித்தான்
மைக்கிள்தாசின் ஐம்பதாயிரம் ரூபாய் செக் இருந்த கவர் கைப்பையில் இருக்கிறதா எனப் பார்த்துக்கொண்டார் ஜேசுராஜன். அந்த வெள்ளைக் கவரில் இருந்த அழுக்கு அப்போதுதான் அவர் கண்ணில் பட்டது.

மன்னன் மைதாஸ்

தொட்டதெல்லாம் பொன்னான கதை
பிரிஜியா நாட்டின் மன்னரானமைதாஸ் என்பவரைப் பற்றிக் கிரேக்க நாட்டில் தொட்டதெல்லாம் பொன்னான கதை என்ற ஒரு நீதிக் கதை உள்ளது.
டயோனிசஸ் என்ற கடவுள், மைதாஸ் மன்னரிடம் உனக்கு என்ன வரம் வேண்டும் கேள், தருகிறேன்' என்று கூறினார்; உடனே மைதாஸ், நான் தொட்ட தெல்லாம் பொன்னாக வேண்டும் என்று கேட்கவே, சரி என்று டயோனிசஸ் தெய்வமும் சிரித்துக் கொண்டே வழங்கி விட்டது.
மன்னன் மைதாஸ் உடனே தமது மகளை அன்புடன் தொடவே, அவள் பொற்சிலை ஆகிவிட்டாள். அடுத்துப் பசிக்குப் புசிக்க உணவைத் தொட்டார்; அதுவும் பொன்னாக மாறிவிட்டது. பசிவாட்டிற்று கோரமாக எடுத்தது தாகம். உடனே மன்னன் மீண்டும் டயோனிசஸ் என்ற கடவுளை வணங்கி தனது நிலையிலே இருந்து தப்பிக்க வழி செய்யுமாறு வேண்டினார். உடனே அந்தத் தெய்வம், திமோலஸ் மலையருகே உள்ள பெக்டோலஸ் ஆற்றிலே நீராடினால் பழையபடி வாழமுடியும் என்றார். அதே போல மன்னன் செய்து முன்பு இருந்த நிலையில் வாழ்ந்தார். தனது மகளையும் அதே நதியில் நீராட வைத்து மீண்டும் பழைய உருவத்தைப் பெறச் செய்தார்.
ஆனால், ஒர் அதிசயம் திடீரென்று நடந்தது. அந்த அரசன் எந்த
ஆற்றில் நீராடினானோ, அந்த ஆற்று மணலெல்லாம் தங்கப் பொடிகளாக, மாறி விட்டது.

Wednesday, 27 June 2018

உயிர்க்கொல்லி

ம்பிக்கூண்டு இருக்கும் லாரி, தெருவுக்குள் இருந்து ஆடி ஆடி வந்து  ஆழ்வார்க்குறிச்சி செல்லும் சாலையில் வளைந்து நின்றது. லாரியின் பின்னால் வந்த வன அதிகாரியின் ஜீப், இப்போது ஓரமாக ஏறி முன்பக்கம் வந்து நின்றது. ஜீப்பில் இருந்த பெண் அதிகாரி இறங்கி, லாரியைச் சுற்றிப் பார்த்தார். டிரைவரிடம், ``எல்லாம் சரியா இருக்குல்லா?’’ என்று கேட்டார். அவன் தலையை ஆட்டினான். வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவர்களில், முன்னால் நின்ற தொரட்டுவிடம் கையைக் காட்டிவிட்டு ஜீப்பில் ஏறிக்கொண்டார்.

ஊர்க்காரர்கள், எக்கி எக்கி லாரிக்குள் இருக்கும் கூண்டைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அது தெரியவில்லை. ஏதோ ரகசியம் பேசுவதுபோல மெதுவாகப் பேசிக்கொண்டார்கள். பக்கத்தில் இருக்கிற தட்டடி வீடுகளிலிருந்து பெண்கள் எட்டிப்  பார்த்தபடி ஆச்சர்யத்தோடு நின்றார்கள். அதில் சில பிள்ளைகள் கைகளைக் காண்பித்து ஏதோ சொல்லிக்கொண்டிருந்தனர். லாரியின் பின்பக்கம் ஓரமாக நின்ற இரண்டு டி.வி.எஸ் 50-களில் ஏறிக்கொண்ட நான்கு வன அலுவலர்கள், லாரியைப் பின்தொடர்ந்தார்கள்.
46p2_1525161419.jpg
8, 8:30 மணிதான் ஆகியிருக்கும். வெயில் வந்துவிட்டாலும் காற்றின் குளிர் இன்னும் மறையவில்லை.

``லாரி எங்க போது தெரியுமில்லா?’’ என்று கேட்டார் தொரட்டு.

``களக்காடு மலைக்குன்னு சொன்னாவோ’’ என்றான் பால்கார இசக்கி.

``ஆமா.’’

``அப்பம், இனும இது இங்க எட்டிப்பார்க்காது, ன்னா?’’

``அதெப்படி சொல்ல முடியும்?’’ என்று பேசிக்கொண்டிருக்கும்போதுதான், 7 மணி பஸ் தாமதமாக வந்து சேர்ந்தது. அது தென்காசியிலிருந்து வரும் பஸ். டிரைவர் இறங்கி, தொரட்டுக் கடையைப் பார்த்தார். கண்டக்டரிடம் ``இங்கயே சாப்ட்ருமா?’’ என்று கேட்டுவிட்டு உள்ளே போனார்கள். தொரட்டு, அவர்களைப் பார்த்தார். அந்தப் பார்வைக்கு `பஸ்ஸு ஏம் லேட்டு?’ என்பதாக அர்த்தம். ``மத்தளம்பாறை பக்கத்துல வீல் பஞ்சராயிட்டு. சரி பண்ணிட்டு வராண்டாமா? அதாம் நேரமாயிட்டு’’ என்று தானாகவே சொல்லிவிட்டுப் போனார் டிரைவர்.

தொரட்டுக் கடையின் முன்தான், வழக்கம்போல பஸ் நிற்கும். அதிலிருந்து இறங்கி வந்த சுப்பையா, கடையின் முன் நின்று சோம்பல் முறித்தபடி கொட்டாவி விட்டார். கையில் சிவப்பு நிற டிராவல் பை இருந்தது. அவரை இப்போதுதான் ஊர்க்காரர்கள் பார்த்தார்கள்.

``ஏண்ணே... எங்க போயி தொலைஞ்செ?’’ என்று கேட்டார் பால்சாமி.

``கேரளாக்குலா. இப்பதாம் வாரென்.’’

``நீரு வாரதுக்குள்ள ஊரே அமளி துமளியாயிட்டே!’’

``என்னடே?’’

``ஒரு லாரி, ஜீப்பு, நாலஞ்சு போலீஸு, ஃபாரஸ்ட் ஆபீஸரு, பக்கத்து ஊர்ல இருந்துலாம் ஆளுவோ. ஊரே ஜேஜேன்னுல்லா இருந்துச்சு செத்த நேரத்துக்கு முன்ன. எதுத்தால பார்த்திருப்பியே?’’

``தூங்கிட்டுலா வந்தேன், பஸ்ஸுல.’’

``நல்லா தூங்குன போ, பத்து, பதினைஞ்சு நிமிஷம் இருக்குமா போயி?’’

``ச்சே… இப்பம்தான் போவுதுங்கென். இன்னா, தொரட்டுட்ட கேளும்…’’ - தொரட்டு டீக்கடையின் முன் உள்ள பெஞ்சில் உட்கார்ந்திருந்தார். அது, டீக்கடை என்று அழைக்கப்பட்டாலும் இட்லி, தோசை, பூரி உள்ளிட்டவற்றை விற்பனை செய்யும் சிறு ஹோட்டலாகவும் இருக்கிறது. தொரட்டு மனைவியின் கைப்பக்குவத்தில் உருவாகும் சாம்பார் மற்றும் பூரிக்கிழங்குக்கு ஒரு கூட்டமே கிறங்கிக் கிடந்தது ஊரில். ``என் வீட்டுக்காரியும்தான் சாம்பாரு வைக்கா, நாக்குல வைக்க முடியுதா? உங்கையில என்னமோ இருக்கத்தான் செய்யுது?’’ என்கிற பாராட்டுகளை வஞ்சகமில்லாமல் உள்ளூர்க்காரர்கள் வழங்கியதன் பொருட்டு, தொரட்டு மனைவி கொஞ்சம் தலைக்கனத்தோடு அலைபவளாக இருக்கிறாள்.

டீயை நன்றாக ஆற்றிய பிறகு ஒவ்வொருவரையாகக் கூப்பிட்டுக் கொடுத்துக்கொண்டிருந்தான் தொரட்டு.

``ஏ... கூறுகெட்டவனே, சீனிய கொறச்சு போட்டிருக்கலாம்லா’’ என்ற சுப்பையா, கடையின் எதிரில் இருந்த கட்டமண் சுவரில், உட்கார்ந்துகொண்டார். அவரைச் சுற்றி நான்கைந்து பேர் தோளில் துண்டு போட்டபடி நின்று டீ குடித்துக்கொண்டிரு ந்தார்கள்.

கீழ்ப்பக்கம் வெள்ளாட்டுக்கு ட்டிகள் இரண்டு, யாரோ பறித்துப் போட்டிருக்கும் கருவைக் காய்களைக் கடித்து அரைத்துக் கொண்ருடிந்தன. அருகில்தான் கடனாநதி அணை என்பதால், காற்று குளிர்ந்து வீசிக்கொ ண்டிரு ந்தது. அணையில் தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து கொண்டிருக்கிறது. வற்றாத ஜீவநதி, இந்தக் கோடையில் வற்றிவிடும் என்பது ஊர்க்காரர்களின் கவலை.

வயலுக்குச் செல்பவர்கள், நான்கைந்து பேராகச் சேர்ந்து போய்க்கொண்டிருந்தார்கள். கையில் அரிவாளோ, குத்தீட்டியோ, பெரும் கம்போ இருக்கிறது. சமீபகாலமாக அவர்களின் நடமாட்டம் இப்படித்தான்.

இந்தக் காலை நேரத்தில் புளிய மற்றும் வேப்பமரங்கள் மூடியிருக்கிற தொரட்டுக் கடையின் முன் இப்படி நின்று, உட்கார்ந்து பேசியபடி டீ குடிப்பது சுகமாகத்தான் இருக்கிறது.

முழுவதும் வெள்ளையாகிப் போன தலைமுடியைக் கட்டையாக வெட்டியும் மீசையைத் திருக்கியும் விட்டிருந்தார் சுப்பையா. ``இவ்வளவு வயசாயியும் இவருக்கு முடிய பார்த்தியா, எவ்வளவு அடர்த்தின்னு. ஒத்தமுடி கொட்டல!’’ என்று அவரைப் பார்த்தால் குறைபட்டுக்கொள்வார் கள், தலையின் முன்பக்கம் முடி இழந்த இளசுகள்.

அவரிடம் மேப்படியான் வந்த விஷயத்தைச் சொன்னதும், ``ச்சே, நான் பார்க்க முடியாமபோச்சே!’’ என்று வருத்தப்பட்டார். மேனி தழுவும் காற்று, திடீரென சத்தம் கொடுத்தபடி செல்கிறது. நீண்ட மேற்குத் தொடர்ச்சி மலையில், இந்த இடத்தில் மட்டும் சிறு இடைவெளி. இதனால் எந்தத் தடையுமின்றி வரும் மேக்காத்து, இங்கு மட்டும் கொஞ்சம் வேகமாக வீசுவதுபோல் தோன்றும். அவரின் முன் நின்றுகொண்டிருந்த பால்சாமி, குளிருக்கு லேசாக உடலை ஒடுக்கி, கைகளைக் கட்டிக்கொண்டு சொன்னார்.

``ஆத்தாடி, என்னம்மா மொறைக்கிங்க. கண்ணுமுழியை கிட்ட நின்னு பார்த்தன்னு வையி, கொலை நடுங்கிபோவும் நடுங்கி. பல்லு ஒவ்வொண்ணும் குத்தீட்டி மாரிலாடா இருக்கு. கடிச்சு ஒரு இழு இழுத்துச்சுன்னா, ஒன்றரை கிலோ கறி வாயிக்குள்ள அல்வா மாதிரி போயிரும்னா பாரு! என்னா நீட்டம். ஆளுவோள கண்டுதுன்னா, உர்ருன்னு ஒரு சத்தம்… கொஞ்சம் பயந்தவம்னா, பேதில போயிருவாம்.’’

``சரிதாம்’’ என்றார் சுப்பையா.

அவர்களுடன் டீ குடித்துக்கொண்டிருந்த பால்கார இசக்கி, அங்கும் இங்கும் பார்த்துவிட்டு மெதுவாக, ``கோபத்தைப் பார்த்தியோ அதுக்கு. அவ்ளவுலா வருது. நம்ம சிலுப்பி மவம் அதைப் பார்த்ததுமே மோண்டுட்டாம்லா’’ என்று சொன்னான் சிரித்தபடி.

பால்சாமி, அவன் முதுகைத் தட்டி, ``உடனே அளக்காதல கதைய. மோண்டானாம், இவம் பார்த்தாம்லா? நானும்தான் கூட நின்னன்’’ என்றார்.

சம்முவம், டீ கிளாஸை வைத்துவிட்டு, ``ச்சே, நீரு என்னய்யா, இப்படி புளுவுதேரு. சிலுப்பி மவம் என்ன பச்சப்புள்ளயா, அதைப் பார்த்து மோளதுக்கு?’’ என்றபடி அவர்களுடன் சேர்ந்துகொண்டான்.

``நான் பார்த்தேன். காலுக்கு கீழே ஒரே தண்ணீ, சளசளன்னு. நீங்க இல்லைன்னு சாதிக்கேளே... அப்பம் அவனே வந்து சொன்னாதாம் நம்புவியோபோலுக்கு’’ என்ற பால்கார இசக்கி, ``அப்படி பொய்யச் சொல்லி எனக்கு என்னவே ஆவப்போவுது?’’ என்று எதிர் கேள்விக் கேட்டான்.
46p1_1525161443.jpg
``இல்லாததைச் சொல்லிச் சிரிக்கப்பிடாதுலா?’’

``நல்லா போச்சுப் போ! இதை, சிரிக்கதுக்கா சொன்னேன். கண்ணால பார்த்தேன்ங்க. நம்ப மாட்டங்கேளே?’’

கடைக்குள் இருந்தபடி தொரட்டு இவர்களின் அவயத்தைக் கேட்டு, ``சுப்பையா மாமா... என்னவே, காலைலயே வந்ததும் வராததுமா ஆளுவோள கூட்டிட்டேரு’’ என்றான் சத்தமாக.

``எல்லாம், நம்ம மேப்படியான் வெவாரம்தாம்’’ என்ற சுப்பையா ஒரு பீடியைப் பற்றவைத்து க்கொண்டார். `மேப்படியான்’ என்று சுப்பையா சொன்னது, சிறுத்தையை.

மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் இருக்கிறது, குருவபத்து. சுமார் நூறு, நூற்றைம்பது வீடுகளைக்கொண்ட கிராமம். வயலும் காடும் என இருக்கிற இவர்களின் சமீபத்திய பயம், சிறுத்தை. முதலில் வயக்காடுகளுக்குள் புகுந்து பயிர்களை துவம்சம் செய்யத் தொடங்கியது, காட்டுப்பன்றிகள்தான். கிழங்கு வகைகள் என்றால், பன்றிகளுக்குக் கொண்டாட்டம். பயிர் முடிந்து அறுவடை நேரத்தில் அழித்து அழிச்சாட்டியம் செய்துகொண்டிருந்த பன்றிகளை, வேட்டுப் போட்டு மிரட்டி க்கொண்டிருந்தார்கள். கருத்தப் பிள்ளையூர் நடேசனிடம் சொன்னால், துப்பாக்கி வேட்டையும் நடக்கும் திருட்டுத்தனமாக. இந்த வேட்டை கறிக்காக. எப்படியோ பன்றிகள், தன் வருகையைக் கொஞ்சம் குறைத்துக்கொண்டன. அவற்றுக்கு வேறு எங்கோ வசமாக இரை கிடைத்துவிடுகிறதுபோல.

பிறகு கரடிகள். இவை வயல்களையும் தோப்புகளையும்தான் கபளீகரம் செய்துவந்தன. இருந்தாலும் பன்றிகளாலோ, கரடிகளாலோ உயிர் பயம் அதிகமில்லை. அப்படியே மோதவேண்டி வந்தால்கூட, சிறு சிறு காயங்களுடன் தப்பிவிட முடியும். ஊரில் அப்படி காட்டுப்பன்றி முட்டி, தொரட்டு மருமகனின் பின்பக்கம் காயமாகி, அவன்பட்ட அவஸ்தை ஊர் அறிந்ததுதான்.  கடந்த சில வருடங்களாக சிறுத்தைகள், ஊருக்குள் விருந்தாளிகள்போல அவ்வப்போது வந்து போய்க்கொண்டிருக்கின்றன. இதுதான் இப்போது பீதியைக் கிளப்பியிருக்கிறது.

சம்முவம் வீட்டுத் தொழுவில்தான் நடந்தது, அந்தச் சம்பவம். அதிகாலை 3:30, 4 மணி இருக்கும். வீட்டுக்குள் தூங்கிக்கொண்டிருந்தது குடும்பம். வெளியே நாய் குரைக்கும் சத்தம். தெருவில் சைக்கிள் அங்கோ, இங்கோ போனால்கூட, நாய் குரைக்கும் என விட்டுவிட்டார் சம்முவம். ஆனால், விடாமல் குரைத்தது நாய். சந்தேகப்பட்டு வெளியில் வந்தவர், லைட்டைப் போட்டார். கையில் டார்ச் லைட். முருங்கைமரத்தின் அருகில் இருந்து, வெருவு ஒன்று விருட்டென பாய்ந்தது. ``இது இங்க என்ன பண்ணுது?’’ என்ற சம்முவம், சுற்றும் முற்றும் பார்த்தார். வெளிச்சம் கண்டதும் ஆட்டுக்குட்டிகள் கத்தத் தொடங்கின.

வீட்டுத் தோட்டத்தைத் தாண்டிப் போய் குரைத்துக்கொண்டிருந்தது நாய். ``இது எதுக்கு அங்க போயி கொலய்க்கு?’’ என்று சத்தம் கொடுத்துக்கொண்டு பின்னாலேயே போனார்.

``ஏம் கனைக்கெ நாயே?’’ என்று அதட்டலைப் போட்டுவிட்டு, நாய் நின்ற இடத்திலிருந்து தூரத்தில் டார்ச்சை அடித்தார். செடி செத்தைகள் அசைந்துகொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது. சம்முவத்தின் சத்தம் கேட்டதும் கீழ் வீட்டிலிருந்து அருணாசலம், ``என்னடே?’’ என்று வெளியே வந்தார்.

``நாயி கொலக்கேய்ன்னு வந்தேன்’’ என்ற சம்முவம் டார்ச்சைத் தூர தூரமாக அங்கும் இங்கும் அடித்துப் பார்த்தார். வெளிச்சம் தூர தூரப் போய் விழுந்தாலும் வேறு ஒன்றும் தெரியவில்லை. அதற்குள் அருணாசலமும் வந்துவிட்டார்.
போன இடத்திலிருந்து ``வா நாயே, ஏம் தொண்டயபோடுதெ?’’ என்று சொல்லிவிட்டுத் திரும்பினார். முகத்தில் எரிச்சல். ஏதோ நடந்திருக்கிறது என்பது அவருக்குப்  புரிந்தது. இல்லை என்றால் நாய், அவ்வளவு தூரம் போய் குரைக்காது. ``ஆடு களவாங்க எவனும் வந்திருப்பானுவளோ?`` என நினைத்தபடியே தொழுவத்தின் அருகில் வந்தார்.

இதற்கு முன் ஆடு திருட வந்தவர்களை இதே நாய் காட்டிக்கொடுத்திருக்கிறது. ஆடுகளை விட்டுவிட்டு இரண்டு பேர் தப்பிவிட்டார்கள். ஆனால், அதில் ஒருவனின் பின் தொடையை நாய் கவ்வியதைப் பார்த்தான் சம்முவம். அந்தக் கடியோடு அவன் ஓடி பைக்கில் பறந்துவிட்டான். விரட்டிப் போயும் ஆள் இன்னாரென்று பிடிபடவில்லை. ஆனால், கீழ ஊரில் இரண்டு பேர் மீது சந்தேகம் இருக்கிறது அவருக்கு.

அசைபோட்டபடி படுத்துக்கிடந்த எருமைகளில் இரண்டு, வெளிச்சம் கண்டதும் எழுந்து நின்று மிரட்சியாகப் பார்த்துக்கொண்டிருந்தன. இதற்கு கொஞ்சம் கீழ்ப்பக்கம்தான் ஆட்டுக்கிடை. வட்டவடிவ வேலி மாதிரி பட்டி கட்டி, பத்து, பதினைந்து குட்டிகளை உள்ளே விட்டிருந்தார். போன மாசம்தான் ஏழெட்டுக் குட்டிகளைப் பொட்டல்புதூர் கந்திரிக்காக விற்றிருந்தார். இல்லையென்றால், பட்டிக்குள் ஆட்டுச்சத்தம் அதிகமாகக் கேட்டிருக்கும். அவற்றில் சில கத்திக்கொண்டிருந்தன. ஆட்டுப்புழுக்கை வாசம் கப்பென முகத்தில் வந்து அடித்தது.

அருணாசலம், ``ராத்திரிபோல நாயி அவயம் போடுதுன்னா… காரணமில்லாம இருக்குமா?’’ என்றார் சம்முவத்திடம்.

``அதாம் என்னன்னு பார்க்கேன்’’ என்ற சம்முவம் டார்ச்சை அடித்தபடியே தொழுவைச் சுற்றிப் பார்த்தார். அவருக்கு ஒன்றும் பிடிபடவில்லை. என்னமோ நடந்திருக்கிறது, என்ன வென்றுதான் தெரியவில்லை. குழப்பத்துடன், கோழிக்கூட்டுக்கு மேலே டார்ச்சை அடித்தவருக்கு அதிர்ச்சியாக இருந்தது. அதில் ரத்தக்கறைகள். ஏழெட்டுப் புள்ளிகளாக சிறிய குன்னிமுத்து மாதிரி சொட்டுச் சொட்டாகக் கிடந்தன. இன்னும் சரியாகக்கூட காயவில்லை. இப்போதுதான் நடந்திருக்கும். `என்னவாக இருக்கும்?’ என யோசிக்கும்போதே, ஆட்டுக்குட்டிகளை எண்ணினார். அடிவயிற்றில் வெள்ளை விழுந்திருக்கும் குட்டியைக் காணவில்லை.

அருணாசலம் டார்ச்சை வாங்கித் தரையில் அடித்தார். கொஞ்ச தூரம் நூல் கோடுபோன்று சிதறியிருந்தது ரத்தம். சம்முவத்துக்குப் பயமாகிவிட்டது.

``யாரு வேலையா இருக்கும்?’’ எனக் கேட்டான். பிறகு மாடுகளின் மூத்திரம் நனைத்திருந்த மண்ணில் பதிந்திருந்த தடங்களை லைட்டை அடித்துப் பார்த்தார். புரிந்தது. `இது, அதன் வேலையாகத்தான் இருக்கும்’ என நினைத்தார்.
46p4_1525161630.jpg
``நெனச்சேன். இன்னா, வந்து வேலைய காட்டிட்டெ.’’

``என்ன சொல்லுத?’’

``நாலு நாளைக்கு முன்னாலதான் தோப்புக்குள்ள, மேப்படியான் நடமாட்டத்தைப் பார்த்திருக்காம் நம்ம முத்து. இன்னிக்கு ஊருக்குள்ள வந்துட்டே?’’ என்றார் அருணாசலம்.

``இத, சிறுத்தைன்னு எப்படிச் சொல்லுதெ?’’

``அதாம் ஊருக்குள்ள நடமாடிருக்குல்லா, அதவெச்சுதாம்!’’

``ச்சே… நல்ல குட்டில்லா? வம்பாபோச்சே… எங்கெ தூக்கிட்டுப் போயிருக்கும்னு தெரியலயே?’’

``இன்னுமா உயிரோட வெச்சிருக்கும்?’’

``மலையைவிட்டு இவ்வளவு தூரம் வந்து குட்டியத் தூக்கிட்டுப் போவுதுன்னா, முன்னபின்ன வந்து நோட்டம் போட்டிருக்குமோ?’’ கேட்டான் சம்முவம்.

``ஒரு எழவும் தெரியலயே!’’

``ச்சே.. நேத்துதாம் என் சின்ன மவன், `இந்தக் குட்டி எனக்கு’ன்னு சொல்லி விளையாடிட்டிருந்தாம். இப்படியாவிபோச்சே?’’

``ம்ம்…’’

``நேத்து எம்முதுவுக்குப் பின்னால நின்னு, ம்மேன்னு போட்ட சத்தம்கூட காதுக்குள்ள இன்னும் கேக்கு.’’

``ஆளுவோ ஒத்த செத்தையில நின்னா என்னத்துக்காவும்?’’ என்று பேசிக்கொண்டிருந்தார்கள்.

கிழக்கே இருந்து ``என்னடே சத்தம்?’’ என்று அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் வந்தார்கள். விடியும் முன்பே பரபரப்பாகிவிட்டது ஊர்.

சம்முவமும் அருணாசலமும் ரத்தக்கறை சிந்திய வழித்தடம் பார்த்து அது போயிருக்கும் பாதையைக் கண்டுபிடிக்க முயன்றனர். அந்தப் பாதை, தொரட்டுக் கடையைத் தாண்டி கேரளாக்காரன் தோட்டத்து வழியாக மலைபாதை நோக்கிச் சென்றது.

அருணாசலம் சொன்னார், ``பார்த்தா, தொரட்டுக் கடைக்கு மேக்கத்தான் மேப்படியான் நடமாட்டம் அதிகமா இருக்குபோலுக்கு. `அவங்கிட்ட ஜாக்கிரதையா இரு’ன்னு சொல்லிவைக்கணும்.’’

காலை 10 மணி வாக்கில் மலையடிவாரத்தில் இருந்த கேரளாக்காரன் தோட்டத்துக்கு அருகில், வயிற்றுப்பகுதி சிதைந்த வெள்ளாட்டுக்குட்டி ஒன்று செத்துக் கிடப்பதாகத் தகவல் வந்தது. அது சம்முவம் ஆடு என்பதும், அதைத் தூக்கிச் சென்றது சிறுத்தைதான் என்பதும் உறுதியானது. ஏனென்றால், சிறுத்தை மட்டும்தான் குடல், குந்தாணியைத் தவிர வேறு எதையும் தொடாது.

பிறகு ஊரே கூடி சிவசைலம் வன அலுவலகத்தில் போய் நின்றார்கள். ``புள்ளைக்குட்டியோ அலையுத இடம். நாலஞ்சு நாளுக்கு முன்னால அதுவோ நடமாட்டம் தோப்புக்காட்டுக்குள்ள தெரிஞ்சுது. இப்பம், ஊருக்குள்ளயே வந்துட்டு. என்ன செய்யன்னு தெரியல. ஒரே பயம். சின்னபிள்ளைல வெச்சுட்டு எப்படிப் புழங்கன்னு தெரியல. ஒண்ணுகெடக்க ஒண்ணு ஆச்சுன்னா, யாரு என்ன பண்ண முடியும்? ஏதாவது செய்யுங்க’’ என்றதும் கூண்டு வைத்தார்கள். மூன்று நாள்களாக, கறுப்பில் வெள்ளைப் புள்ளிகொண்ட தெருநாயுடன் சம்முவம் வீட்டுத்தொழுவில் காத்திருந்தது, கொப்பும் குலைகளையும் போட்டு மூடியிருந்த பெரிய இரும்புக்கூண்டு. நாய் தினமும் உள்ளே கிடந்து கத்திக்கொண்டிருந்தது. சிறுத்தை கூண்டுக்குள் நுழைந்தால், நாய்க்கான கதவு தன்னால் வந்து மூடிக்கொள்ளுமாறு அமைக்கப்பட்ட கூண்டு அது.

அருகில் இருக்கிற பெத்தான்பிள்ளைக் குடியிருப்பு, பங்களா குடியிருப்பு, கிராமத்து ஆள்கள் எல்லாம் தினமும் காலையில் வந்து கூண்டை எட்டிப்பார்த்துவிட்டு, ``இன்னைக்குச் சிக்கலயோ?’’ என விசாரித்துவிட்டுப் போனார்கள். கூண்டு வைக்கப்பட்ட மூன்றாவது நாள் சிக்கியது அந்த வழுவழுப்பான மஞ்சள் நிறத்தில் கருநிறப் புள்ளிகளைக்கொண்ட ஆக்ரோஷச் சிறுத்தை.

முதலில் சம்முவம்தான், சத்தம் கேட்டு வந்து லைட்டைப் போட்டுப் பார்த்தான். கூண்டுக்குள் நின்றுகொண்டு உர்ரென முறைத்தது. அருணாசலமும் வந்துவிட்டார். இருவரும் சேர்ந்து வன அதிகாரிக்குக் காலையிலேயே போனைப் போட்டார்கள். அதற்குள் விஷயம் ஊருக்குள் பரவி, எல்லோரும் சம்முவம் வீட்டின் முன் கூடிவிட்டார்கள். வேடிக்கை பார்த்துக்கொண்டே பேசிக்கொண்டிருந்தார்கள். ஒரு பயல், கருவைக் கம்பைக் கூண்டுக்குள் விட்டு சிறுத்தையின் முதுகில் குத்தப்போனான். திரும்பிப் பார்த்து உர்ரென பாய்ந்து முன் கால்களைக் கம்பிக்கு வெளியே நீட்டியது. அதன் ஆக்ரோஷத்தைப் பார்த்ததுமே ஓடிவிட்டார்கள், அந்த இளவட்டப் பயல்கள்.
46p6_1525161469.jpg
கீழத்தெரு மாரிமுத்து, ``எடுல அந்த அருவாள, அறுத்துருவோம்’’ என்றான்  வீறாப்பாக.

``அறுக்கப் போற மூஞ்சை காமி. அந்தானி கிழிச்சிருவல நீ? கேரளாக்காரன் தோட்டத்து நாயிக்கே ஒனக்குப் பதிலு சொல்ல முடியாது. இதை என்ன பண்ணிருவெ?’’

``அதுக்கு, இப்படியா வந்து பண்ணும்?’’

``வாயிலயே, அருவாளைப் போடணும்.’’

``நீங்க எல்லாரும் சூரப்புலி யோதாம். அது கொஞ்சம் உர்ருன்னு தொண்டைய போட்டா, ஏழு கிலோமீட்டருக்கு ஓடிருத பயலுவோதானல நீங்க… பெருசா வீறாப்புப் பேச வந்துட்டியோ?’’

``இது அந்தானி, வாரதை இனும நிறுத்திரும்னு நெனக்கியோ?’’

``பெறவு?’’

``கிழிச்சுது. இனும பாரு என்னென்ன நடக்குன்னு?’’

``ஏல, வாயெ பொத்துங்கல. அஞ்சாறு தெரிஞ்ச மாரிதான் ஆளாளுக்குப் பேசுதானுவோ?’’ என்றார் தொரட்டு.

பிறகு காலையில் 7, 7:30 மணிவாக்கில் வனத்துறையினர் அதைப் பத்திரமாகக் கூண்டோடு லாரியில் கொண்டுபோனார்கள். களக்காடுக் காட்டுக்குள் விட்ட தாகச் சொன்னார்கள். களக்காடுக்கும் இதற்கும் பல மைல் தூரம். அங்கிருந்து அந்தச் சிறுத்தை இனி, இங்கு இறங்க வாய்ப்பில்லை என நம்பிக்கையோடு இருந்தார்கள் ஊர்க்காரர்கள். இருந்தாலும் ஓரத்தில் பயம் நடமாடி க்கொண்டுதான் இருந்தது.

அப்போது சுப்பையா ஊரில் இல்லை. மச்சினன் ஊரான வள்ளியூர் சிறுமளஞ்சியில் சுடலைமாடன் கொடை பார்க்கச் சென்றிருந்தார். ஊர்க்காரர்கள், தாங்கள் கண்ட சிறுத்தையின் அருமை பெருமைகளை அப்படி இப்படி என்று வர்ணிக்கும்போது புகைப்படங்களிலும் திரைப்ப டங்களிலும் மட்டுமே பார்த்திருக்கிற அதை, தன்னால் நேரில் பார்க்க முடியவில்லையே என்கிற வருத்தம் அவருக்கு ஏற்பட்டது.

``ஏம்யா கவலைப்படுதீரு. போருமே காட்டுக்குள்ள. மேக்கப் பார்த்து நடந்தீர்னா, சிறுத்தை என்ன, சிங்கம், புலி, யானைன்னு எல்லாத்தையும் பார்த்து நலம் விசாரிச்சுட்டு வரலாம். ஏம்... குடித்தனம்கூட பண்ணும்’’ என்று அவர் மனைவிதான் எக்காளம் பண்ணிக்கொண்டிருந்தாள்.

``ஏ கோட்டிக்காரி, ஒனக்கென்ன தெரியும் அதெல்லாம்? வாயைப் பொத்துடி’’ என்று அடக்கினார் மனைவியை.

இந்தச் சம்பவம் நடந்த மூன்றாவது மாதம், செல்லையா தோட்டத்தில்  அவர் வீட்டு வேட்டைநாயைக் குதறிப்போட்டுச் சென்றிருந்தது சிறுத்தை.

ராத்திரி திடீரென வேகமாக நாய் குரைத்ததைக் கண்டு விழித்தார் செல்லையா. `ஏம் அவயம் போடுது?’ என்று கதவுக்குப் பின்னால் தொங்கப் போட்டிருக்கும் குடைக்கம்புபோல் இருக்கும் வாளை எடுத்துக்கொண்டு வெளியில் வந்தார். அதற்குள் நாயின் `லொள்’ என்கிற சத்தத்தின் அளவு குறைந்து நின்றது, அவருக்குக் கேட்டது. அது, நாயின் கடைசி அவயம் என்பது அவருக்குத் தெரியவில்லை. அவர் வெளியில் வந்து பார்த்தபோது அமைதியாக இருந்தது. லைட்டைப் போட்டார். ``நாய்ச் சத்தத்தைக் காணலையே…’’ என்று வீட்டின் பின்பக்கம் பார்த்தார். வெளிச்சத்தில், புதிதாக வெள்ளையடி க்கப்பட்டிருந்த காம்பவுண்ட் சுவரில், அந்தக் காலடித்தடங்கள் இருந்ததைக் கண்டார்.

பிறகும் இதேபோல ஊர் கூடி, வன அலுவலகத்தில் போய் நின்றது. ஓர் ஆட்டுக்குட்டியைப் போட்டு கூண்டு வைத்தார்கள். கத்திக்கொண்டிருந்தது குட்டி. நான்காவது நாள் வந்து சிக்கிக்கொண்டது சிறுத்தை. மூன்று மாதத்துக்கு முன் வந்த அதே சிறுத்தைதான் அது என்று அடித்துச்சொன்னான் டீக்கடை தொரட்டு.

``ச்சே… அந்தக் கண்ணைப் பார்த்ததுமே தெரிஞ்சுபோச்சே. அதாம்னு.’’ என்றான்.

``எல்லா சிறுத்தைக்கும் கண்ணு அப்படிதாம்ல இருக்கும்.’’

``இங்கரு, நாம்லாம் ஒரு தடவை பார்த்தம்னா, அப்டியே பதிஞ்சிரும் பார்த்துக்கெ. எனக்குத் தெரியாதோல… இது அந்தச் சிறுத்தைதாம்’’ என்றான் தொரட்டு.

``காட்டுல வேற சிறுத்தையே இல்லைன்னு நெனக்கியோ?’’

``அது தெரியுண்டே. ஆனா, சிக்கினது பழசுதான்.’’

``எப்படிச் சொல்லுத?’’

``இதை எப்படிச் சொல்லுவாவோ? பழைய ருசி… அதாம் தேடி வந்திருக்கு.’’

``ச்சீ, மொதல்ல வந்த சிறுத்தைக்குக் கண்ணுக்கு மேல கீறலா கெடந்துச்சு. இதுக்கு அப்படிலாம் இல்லையே’’ என்றான் பால்கார இசக்கி.

``அப்பம் அதும் இதும் வேறயா?’’

``பெறவு? அதுக்கு கடுவா பல்லும் சரியான நீட்டமாங்கும்’’ என்று  சொன்னான் இசக்கி.

``போங்கல பொசக்கெட்டவனுவளா, நான் சொல்லுதத கேளுங்க. இது பழைய மேப்படியாம்தான்’’ என்று கோபமாகச் சொன்னார்.

இதற்குமேல் பேசினால் அவர் கடையில் இருக்க முடியாது என்பதால், அமைதியானான் இசக்கி.

சம்முவம் விடவில்லை.

``தொரட்டு... சொன்னதையே சொல்லிட்டு இருக்காதீரும். ஒரு மட்டம் கூண்டுல சிக்குன்னா, இன்னொரு மட்டம் வருமாவே?’’ என்றார்.

``ஏம் வராது?’’

``இன்னொரு மட்டம் இந்த எடவாடுக்கே வராது அது’’ என்று அழுத்தமாகச் சொன்னார் பீடியை இழுத்துவிட்டு.

``ஆமா, இவரு கண்டாருல்லா? நான் சொல்லுதேன், அதை இல்ல, இல்லன்னு சொல்லிட்டிருக்கேளே?’’ என்ற தொரட்டுக்கு, கோபம் ஏறியது.

பிறகு,  ``அண்ணாச்சி சொன்னா சரியாதாம்ல இருக்கும்’’ என்றார்கள். தொடர்ந்து சிலபல வாக்குவாதங்களுக்குப் பிறகு, வந்தது பழைய சிறுத்தைதான் என்பதை ஏற்றுக்கொண்டார்கள், சம்முவத்தைத் தவிர.

முன்புபோல சிறுத்தையைப் பார்க்க இப்போதும் ஏகப்பட்ட கூட்டம். பெருங்கூட்டத்தோடு வழியனுப்பிவைத்தார்கள் அந்த ஆவேச சிறுத்தையை.

அப்போதும் ஊரில் இல்லை சுப்பையா. மகனுக்கு ஆய்க்குடியில் குழந்தை பிறந்த செய்தி கேட்டுப் பேரனைப் பார்க்கப் போய்விட்டார். நான்கைந்து நாள் டேரா போட்டுவிட்டு ஊருக்கு வரும் நாளில் தற்செயலாக பேப்பரைப் பார்த்தார். ஊரில், மேப்படியான் பிடிபட்ட செய்தி புகைப்படத்துடன் வந்திருந்தது. அந்தப் புகைப்படத்தில், கூண்டுக்குள் வாயைக் காட்டி உறுமியபடி நின்றிருந்தது சிறுத்தை. சுப்பையா, ஊருக்கு வந்ததும் கேட்டார்.

``அதென்னல எனக்கு மட்டும் வாய்க்காமபோவுது?’’

``இங்கரு எல்லாம் நல்லதுக்குன்னு நெனச்சுக்கிடும். நம்ம நீலு வாத்தியாரு இருக்கா ருல்லா. அவரு வீட்டையும் தோட்டத்தையும் சுத்திச் சுத்தி ஏகப்பட்ட பாம்புவோ நடமாடுது. நான், எப்பம்லாம் அந்தப் பக்கம் போறனோ, அப்பம்லாம் ஒண்ணு ரெண்டு பாம்புவோல பார்த்திருந்தேன். ஆனா, அவருட்ட கேளும், `இத்தனை வருஷத்துல ஒரு பாம்பைக் கண்டதில்ல’ம்பாரு’’ என்றார் சம்முவம்.

``அப்டியா?’’

``செல பேருக்கு அப்படியொரு ராசியாங்கும்.’’

``இதென்ன அதிசயமா இருக்கு. காட்டுக்குள்ள இருந்துக்கிட்டு பாம்பு, பல்லிய கண்ணுல காணாம இருக்க முடியுமா?’’

``நான் என்ன சும்மாவா சொல்லுதம், நீரு வேணா வாத்தியார்கிட்ட கேளும்?’’

``இப்படியெல்லாமா இருக்கும்?’’

``அதெல்லாம் கொடுப்பினை பார்த்துக்கிடும். அதுபோலதாம் ஒமக்கும். சிறுத்தைக்கும் ஒமக்கும் அப்படியொரு ராசி.’’

``இருக்குமோ அப்படி?’’

``இல்லாம எப்படி?’’

நம்பினார் சுப்பையா.

மேற்கண்ட இரண்டு சம்பவங்களை அடுத்து, இது மூன்றாவது.
ஊரில் இதற்கு முன்னால் எந்தெந்த விலங்குகள் வந்து மிரட்டிவிட்டுச் சென்றன என்ற கதைகளை ஆளாளுக்குச் சொன்னார்கள். ஒரு கோடையில் யானைகள் மொத்தமாக இறங்கி, தோப்புகளில் இருந்த தென்னை மரங்களைச் சின்னா பின்னமாக்கி விட்டுப் போன கதையை விளக்கி க்கொண்டிரு ந்தான் இசக்கி. சுப்பையா, தான் சிறுவயதில் கண்ட கதையைச் சொன்னார். அவர் வீட்டுக்கு மேல்பக்கத்தில் வசித்துவந்த, குழந்தைகளுக்குத் தொக்கம் எடுக்கும் ரஹீம் பாயை, சிறுத்தை ஒன்று கொன்றுவிட்டு போன கதையைச் சொல்லத் தொடங்கினார்.

``அப்பம் நான் சின்னப் பையன். ஜில்லா பூராவும் இதைத்தாம் பேசிட்டிருந்தாவோ. பாயி, ஆளும் சும்மா திண்ணுன்னு இருப்பாரு. அப்பம்லாம் அணை கட்டலை. மொட்டை மலை இருக்கு பாரு, அதுக்குக் கீழ, ஓடை ஓரத்துல ரத்த வெள்ளத்துல கெடந்தாரு பாயி. ஒடம்புல பாதிய காணலை. ஊரே போயி வேடிக்கை பார்த்தது. என்னைய மாதிரி சின்னப் பயலுவோளலாம் அந்தப் பக்கம் விடலை. துணியைப் போட்டு மூடி, தூக்கிட்டு வந்தாவோ. எப்பவும் தனியா ஒத்த செத்தயில காட்டுப்பக்கம் போவாத பாயி, அன்னிக்கு தொணைக்கு ஆள் இல்லாம போயிருக்காரு, கோங்கு கம்பு வெட்ட. அப்பம்தான் பதுங்கியிருந்த சிறுத்தை அவரைச் சிதைச்சுட்டு போயிட்டு. அந்தச் சம்பவத்துக்குப் பிறகு பாயோட, அண்ணன் தம்பியோ எல்லாரும், இந்த ஊர்ல இனும இருக்க மாட்டம்னு, கல்யாணிபுரத்துக்குப் போயிட்டாவோ. அங்க மருந்துக்கடை வெச்சிருக்காருல்லா, அது யாருங்கெ? செத்துபோன பாயிக்கு அண்ணன் மவனாங்கும். அதுக்குப் பிறகு ஊருக்குள்ள எனக்கு வெவரம் தெரிஞ்சு, சிறுத்தை இறங்குனதாக் கேள்விப்படலை. இப்பம்தான் படுதேன்`` என்றார் சுப்பையா.

பிறகு, ``மருமவனே, சீனியக் கொறச்சு இன்னொரு டீய போடும்’’ என்று தொரட்டுவிடம் சொல்லிவிட்டு, பால்கார இசக்கியிடம் கேட்டார். ``இந்தச் சிறுத்தையையும் களக்காடுக் காட்டுலதான் கொண்டுபோயி விட்ருக்காவோ?’’

``பதுவா அங்கதான விடுதாவோ!’’

``அப்பம்... இன்னும் பத்து பதினஞ்சு நாள்ல வந்துரும்னு சொல்லு.’’

``ஏம், பத்து பதினைஞ்சு நாளு? நாளைக்கேகூட வரலாம். ரெண்டு மாசம் கழிச்சு வரலாம், வராமக்கூட போலாம்’’ என்றான்.

``வராமப்போயிருமோ?’’

``அதுக்கு வாய்ப்பில்லதாம். ருசி கண்டது சும்மாயிருக்குமா?’’ என்றான் பால்கார இசக்கி.

``அப்பம்னா சரிதாம்’’ என்ற சுப்பையா, சீனி குறைவாகப் போடப்பட்ட டீயை வாங்கினார். ``இனும சிறுத்தைய கண்ணுல காணாம ஊரைவிட்டுப் போவ மாட்டேன்’’ என்று முடிவுசெய்துகொண்டு வீட்டுக்கு நடந்தார்.

சிறுத்தை பற்றிய பயமும் பேச்சும் மறந்து ஊர் பழையபடி இயங்கத் தொடங்கியிருந்தது. கடந்த சில மாதங்களாக எந்த விலங்கும் ஊருக்குள் இறங்கவில்லை. விவசாய வேலைகள் ஆரம்பித்திருந்தன. சாரலும் காற்றும் என ஊர் ரம்மியமாக இருந்தது. அதிகமானவர்கள், வாழை போட்டிருந்தார்கள். காலையில் வழக்கம்போல வயலுக்குப் போனவர்களில் பால்கார இசக்கிதான், பதற்றத்தோடு ஓடிவந்து தொரட்டுக் கடையில் விஷயத்தைச் சொன்னான்.

கடையில் இருந்த ஏழெட்டு பேர், கேரளாக்காரன் தோட்டத்துக்கு ஓடினார்கள். அதற்குள் ஊர் பூராவும் செய்தி பரவிவிட்டது. அந்தத் தோட்டத்துக் காவலாளியைக் கொன்று சிதைத்திருந்தது சிறுத்தை. காவலாளி, சுப்பையாவின் தாய்மாமா.
பொண்டாட்டி இறந்ததிலிருந்து வீட்டில் மகன்களுக்கு இடைஞ்சலாக இருக்கக் கூடாது என்று காவலாளியாக பெயருக்கு வேலை பார்த்தவர். வயது அதிகம் என்றாலும் திடகாத்திரமான உடல் கட்டு அவருக்கு. தோட்டத்தின் வாயிலுக்குக் கீழ்ப்பக்கம் கட்டப்பட்டிருந்த, சிறு அறை ஒன்றில்தான் படுத்திருப்பார். சமீபகாலமாக கல்யாணிபுரம் டாஸ்மாக்கில் இருந்து சரக்கு வாங்கி குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தியிருந்தார்.

``ராத்திரி அடிக்க குளிருக்கு அது இல்லாம முடியல பாத்துக்கெ’’ என்று சொல்லிக் கொண்டிருந்தார் தொரட்டுக் கடையில். அவரைத்தான் சிறுத்தை கொன்றுவிட்டுச் சென்றிருக்கிறது.

போலீஸ் வந்தது. விசாரணை நடத்தியது. கொன்றது மேப்படியான்தான் என்று உறுதியானதை அடுத்து, அவருக்கு இறுதிச்சடங்கு நடத்திவிட்டு வந்தார்கள்.

அவரது இறப்பை யாராலும் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ``ச்சே... எப்பவும் சிரிச்சுட்டே இருப்பாரே!’’ என்று தொடங்கி அவரது பெருமைகளைச் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

தொரட்டுக் கடைக்கு சும்மா ரவுண்ட்ஸ் வரும் வன அலுவலர்கள், ``ஒத்த செத்தயில காடு கரையில அலையாதீங்க’’ என்று அறிவுரை கூறிவிட்டுச் சென்றார்கள். ஆத்திர அவசரத்துக் கெல்லாம் ஆள்களைக் கூட்டிக்கொண்டு நடக்க முடியுமா?

இதற்குப் பிறகு ஊருக்குள் திடீர் பயம் தொற்றிக்கொண்டது. சும்மா கொப்பு குலை அசைந்தால்கூட பயம். ``ஆடு, மாடுவளை அடிச்சுது பரவாயில்லன்னு இருந்தாச்சு. மனுஷனுவளையும் ருசி பார்க்க ஆரம்பிச்சுட்டே’’ என்று தொரட்டுக் கடை முன்பு கவலையோடு பேசிக்கொண்டார்கள்.
ஊர், சாயங்காலமே முடங்கிவிடத் தொடங்கியது. ராத்திரி நேரத்தில் வழக்கமாகக் கல்யாணிபுரம் டாஸ்மாக்கில் கூடிக் குடித்துவிட்டு வருபவர்கள், இப்போது அந்த முக்கிய வேலையை மாலையே முடித்துக்கொள்கிறார்கள்.  தவிர்க்கவே முடியாத வேலை என்றால் மட்டுமே இரவுகளில் ஆள்கள் நடமாட்டம். ஊரில் அப்படியோர் அமைதி. இப்படியொரு திடீர் மாற்றத்தை ஊர்க்காரர்கள் ஏற்கத் தொடங்கியிருந்தார்கள்.

இப்போதும் கூண்டு வைத்தார்கள். பத்து பதினைந்து நாள்களாக சிறுத்தை வரவில்லை. தினமும் ராத்திரி ஓர் ஆட்டுக்குட்டியைக் கூண்டுக்குள் வைப்பதும் காலையில் அதை அவிழ்த்துக்கொண்டு வருவதையும் வழக்கமாகச் செய்தவந்தார் சம்முவம்.
`இனும வராதுபோலுக்கு’ என்று நினைத்துக்கொண்டார்கள். ஆனால், கொஞ்சம் கொஞ்சமாக மேப்படியான் பற்றிய நினைவை மறந்த ஒரு காலை நேரத்தில் கூண்டில் சிக்கியது சிறுத்தை.

அது, சுப்பையாவின் தாய்மாமாவைக் கொன்ற சிறுத்தைதான் என்று அடித்துச் சொன்னான் தொரட்டு. அவனுடன் வாக்குவாதம் செய்ய யாரும் முன்வரவில்லை. பிறகு, வன அலுவலகத்துக்கு போன் போட்டார்கள். லாரியோடு வந்தார்கள் அவர்கள். கூண்டை ஏற்றினார்கள். வன அலுவலர்கள், அதிகாரிகளின் ஜீப், கார், போலீஸ் வாகனம் என ஊர் பரபரப்பாக இருந்தது.

ஏதோ அதிசயத்தைப் பார்ப்பதுபோல, இந்த முறை இன்னும் இரண்டு மூன்று ஊர்களில் இருந்தெல்லாம் ஆள்கள் கூட்டமாக வந்து வேடிக்கை பார்த்தார்கள். குழந்தைகளைத் தூக்கிவைத்துக்கொண்ட சில அப்பாக்கள், ``லியோபர்டு பாரு, புக்குல போட்டிருந்தாம்லா... இதுதாம் அது’’ என்று எதையோ சாதித்ததைப்போல காண்பித்துக்கொண்டிருந்தார்கள்.

சப்பரத்தில் இருக்கும் சாமி மாதிரி, ஊர்வலக் கொண்டாட்டத்தோடு ஊரே கூடி களக்காடு மலைக்கு அனுப்பிவைத்தது, அந்தக் கொலைகாரச் சிறுத்தையை.

``துடியா துடிச்சேளே, நீங்க போயி பார்க்கலையா?’’ என்றாள் சுப்பையாவின் மனைவி.

ஒன்றும் சொல்லவில்லை அவர்.